Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2008

பவுத்த சங்கங்களுக்கு ஒரு முறையீடு
பண்டிட் C. அயோத்திதாஸ்:
தமிழாக்கம் : எஸ்.ஆம்ஸ்ட்ராங்,
.

ரீடர் மற்றும் துறைத்தலைவர் (பொ), ஆங்கிலத்துறை, சென்னை பல்கலைக்கழகம்

ஆ.கௌதமன்

வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், சென்னை

5.6.1911 அன்று பண்டிதர் சி.அயோத்திதாசர் அவர்களால் எழுதப்பட்ட இக்கடிதத்தில் பௌத்தத்தின் உயிர்நாடியான எண்வழிப்பாதை, நிப்பானம் போன்றவற்றை விளக்கி யுள்ள விதம் பண்டிதரின் அறிவு விசாலத்தை எடுத்துக் காட்டுகிறது. இந்து மதத்திலுள்ள போலி ஆண் பெண் சிலை வழிபாட்டையும், சமத்துவத்தை நொறுக்கும் கொடூரமான சாதிய அமைப்பையயும், சாஸ்திர, சடங்கை யும் உயிர்ப்பலியிடுதலையும் கண்டித்து மனிதகுலம் உயர்வடைய பௌத்தம் ஒன்றே வழி என்பதை உணர்ந்து அதை பரப்ப மேற்கொண்ட முயற்சிகளை இக்கடிதம் எடுத் துரைக்கின்றது. பௌத்தத்திற்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்பை எடுத்துரைப்பதன் மூலம் பண்டிதர் பகுத் தறிவை எந்தளவுக்கு பயன்படுத்தியுள்ளார் என்பது தெளி வாக விளங்குகிறது. மேலும் அவருடைய அறிவியல் அறிவையும் ஆங்கிலப் புலமையையும் இக்கடிதம் மூலம் நாம் உணரமுடியும்.

பார்ப்பனர்கள் காங்கிரஸ் என்ற அமைப்பிற்குள்ளும் பார்ப்பனரல்லாதார் சைவ சித்தாந்த சமாஜத்துக்குள்ளும் புகுந்திருந்த பொழுது, தொல்தமிழர் என்ற அவர்ணர் களைத் தீண்டாமை என்ற கோரப்பிடியிலிருந்து விடு விக்கப் போராடிய மாமேதை பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் இக்கடிதத்தை மொழிபெயர்த்து வெளியிடு வதிலே மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். இக்கடிதம் திரு.ஞான.அலாய்சியஸ், திரு.அன்பு பொன்னோவியம் அவர்களின் மாபெரும் உதவியுடன் தொகுத்த அயோத்தி தாசர் சிந்தனைகள் (சமயம், இலக்கியம்), தொகுதி வீவீ (நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தூய சவேரியார் கல்லூரி, தன்னாட்சி, பாளையங்கோட்டை, 1999 ) என்ற புத்தகத்தில் பக்கங்கள் 180-185லிருந்து எடுக்கப்பட்டு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

நமோ தஸ்ஸ பகவத்தோ அரஹத்தோ

சம்மா சம்புத்தஸ்ஸ (பாலி)

ஞான பரிபூரண மூர்த்தியான புத்த பகவானுக்கு வணக்கம்

சாக்கிய பௌத்தச் சங்கம், மெட்ராஸ்

பெறுநர்,

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள

பௌத்த சங்கங்கள்.

மெட்ராஸ், இராயப்பேட்டையிலுள்ள சாக்கிய பௌத்த ஆசிரமத்தில் 12-5-1911 அன்று மெட்ராஸைச் சேர்ந்த பௌத்தர்கள் கூடி, பகவான் புத்தரின் பிறந்தநாளான வைசாக பௌர்ணமியை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண் டாடினார்கள். இந்நாள் மறக்கமுடியாத முக்கியநாளாகும். இதுபோன்று ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற விழாவை 14 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ததாகரின்1 புனித சமயமான பௌத்தத்தை அது பிறந்த மண்ணிலே புத்துயிரூட்டு வதற்கு இவ்விழாவானது ஒரு தெளிவான அறிகுறியாகும். மனிதகுலம் உற்பத்திசெய்த மாபெரும் அறிவுஜீவியான ததாகரை உலகம் முழுவதும் இப்பொழுது ஏற்றுக் கொண்டது. தன் வசீகரத் தோற்றத்தாலும் மாபெரும் அறிவினாலும் உண்மையிலேயே இவ்வுலகம் முழுவதை யும் வசப்படுத்தியவர்.

பௌத்தத்தின் உயர்ந்த குறிக் கோளான நிப்பானத்திற்கு2 அழைத்துச் செல்லும் எண் வழிப்பாதையான அஷ்டாங்க மார்க்கத்தைப்3 போதித்து தீமை என்ற அடிமைத்தளையைப் போக்கி லட்சக்கணக் கான அடித்தட்டு மக்களை உயர்வடையச் செய்தவர். அனைத்து செயல்களையும் அழித்தொழிப்பதோ அல்லது பிரபஞ்ச ஆன்மீகத்தில் தனிமனித ஆன்மாவை சேர்ப் பதோ அல்ல நிப்பானம். முழு அறிவை உள்ளடக்கிய நிறைவான உண்மையை அனுபவிக்கிற மனிதநேயத்தின் அனைத்து மிகச்சிறந்த பண்புகளையும் உள்ளடக்கிய முழுமையான மனிதத்தன்மையை உடைய லட்சிய சமூகத்தைத்தான் நிப்பானம் என்கிறோம். அறிவியலின் முன்னேற்றத்துடன் அறிவியல் சமயத்திற்குப் பிறகு பகுத் தறிவின் காலமான4 20ம் நூற்றாண்டில் இயற்கையான வாஞ்சையுடன் பௌத்தம் என்கின்ற அறிவியல் சமயம் புத்துயிர் பெறுவதை மறுக்க முடியாது. தென் இந்தியாவில் மெட்ராஸ் சாக்கிய பௌத்த சங்கத்தின் முக்கியப் பணியாக பௌத்தம் புத்துயிர் பெறுவதை எதிரிகளால்கூட மறுக்க முடியாது.

சங்கம் உருவாக்கி 14 அல்லது 15 ஆண்டுகள் பொதுமக்க ளுக்காக பணியாற்றிய சூழல் கசப்பானதாக இருக்க முடி யாது. பௌத்தத்தின் உண்மையை அறிந்து கொள்வதற்காக பல ஆய்வுகளையும் பல புத்தங்களையும் படித்து 1890 வாக்கில் நான் பௌத்தத்தால் உள்வாங்கப்பட்டேன். 1898ல் மெட்ராஸ் அடையாரிலுள்ள பிரம்மஞான சங்கத்திலிருந்த காலம்சென்ற கர்னல் பி.தி.ஆல்காட் அவர்களை நாடினேன். மெட்ராஸ் மாநகரத்தில் பௌத்த சங்கத்தை உருவாக்கிட அவருடைய அறிவுரைகளும், ஒற்றுமையும் வேண்டி அத்தகைய மாபெரும் நல்ல மனிதரின் தாங்குதலால் சிலோனுக்கு கடற்பயணம் மேற்கொண்டேன். கொழும்பி லுள்ள வித்யோதயா கல்லூரி முதல்வரும் மகானுமான போற்றுதலுக்குரிய உயர்திரு சுபமங்களா மகாநாயகா அவர்களிடமிருந்து மிகப்பெரிய மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் பஞ்சசீலத்தை5 பெற்றுக்கொண்டேன்.

வணக்கத்திற்குரிய மகானான சுபமங்களாவின் வாழ்த்து களுடன் நான் மெட்ராஸ் திரும்பி சாக்கிய பௌத்த சங்கத்தை இராயப்பேட்டையில் தோற்றுவித்தேன். இச்சங் கத்திற்கு தலைவராக இருக்க சிக்காகோவிலுள்ள முனைவர் பால் காரஸ்6 தம் அன்பான ஒப்புதலை தெரிவித்தார். வாரந் தோறும் இச்சங்க அறையில் பௌத்த விரிவுரைகள் நடத்தப் பட்டதோடு சென்னையில் சில இடங்களிலும் அங்குமிங்கு மாக விரிவுரைகள் நடத்தப் பட்டன. பகவான் புத்தனுடைய வாழ்க்கையும் வார்த்தைகளும் மக்களுடைய மனங்களில் மிகப்பெரிய ஆர்வத்தை தூண்டிவிட்டன. இதனால் மிகப் பெரிய அளவில் புத்தபகவானின் மேல் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஓர் இந்தியன் சங்கத்தில் கோலார் பிரிவைச் சார்ந்த திரு.சி. லிங்கையா என்பவரை சங்கத்தால் சிலோனுக்கு அனுப்பி மளக்ககந்தா வித்யோதயா கல்லூரி யில் பாலி மொழியை கற்பதற்கும் ஒரு பிக்கு ஆவதற்கும் அனுப்பப்பட்டதின் பேரில் அவரும் பிக்கு ஆனார்.

புத்த கயா, கல்கத்தா, பெனாரஸ், சிட்டகாங், சிங்கப்பூர், சியாம், சிலோன், பர்மா, ஜப்பான், சீனா, தாய்லாந்து மற்றும் பல இடங்களில் இருந்து ஏறத்தாழ 260 பௌத்த பார்வை யாளர்கள், பிக்குகள் மற்றும் சாதாரண பௌத்த ஆண் பெண் உபாசகர்கள் பலவேளைகளில் இச்சங்கத்திற்கு அழைக்கப் பட்டு அவர்கள் தங்கி இருக்கின்றார்கள்.கோலார் பௌத்த சங்கக் கிளையில் மாரிக்குப்பம், மைசூர் சுரங்கம் போன்ற இடங்களில் வசித்த உடல்நலம் குன்றிய உழைப்பாளர் களின் நிவாரணத்திற்காக ஓர் அறக்கட்டளை நிதியும் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெறுகிறது.

அர்ப்பணிப்பும், ஆர்வமும் ஒருங்கே பெற்ற சிலோனி லுள்ள குணாலங்கரா அவர்களுக்கும், பர்மா பார்வடி யிலுள்ள உத்ததுத்தயா அவர்களுக்கும் பூனாவிலுள்ள தம்மானந்தா அவர்களுக்கும் சிலோனிலுள்ள நந்தராமா அவர்களுக்கும், பர்மாவிலுள்ள யூவிலாசா, வினயலங்கரா மற்றும் யூ தெசாவன்சா அவர்களுக்கும் நன்றி. பௌத்தத் தின் உண்மைகளை பரப்புவதில் அவர்களுக்கு இருந்த தூண்டுதல் கொஞ்சநஞ்சமில்லை. சென்னை சாக்கிய பௌத்த சங்கத்தின் உறுப்பினர் திரு.வி. ராகவர் கோலார் சென்று சில அன்பு நண்பர்களின் உதவியுடன் சாக்கிய பௌத்த சங்கத்தை கோலாரில் தொடங்கினார்.

நான் பௌத்த சொற்பொழிவு ஆற்றுவதற்காக பயணம் மேற் கொண்ட பொழுது அங்கு இருந்திருக்கின்றேன். அதன் பிறகு பெங்களூர் சென்றேன். அங்கு இன்னொரு சாக்கிய பௌத்த சங்கக்கிளையும் நிறுவப்பெற்றது. இதன் தொடர்ச் சியாக அங்கு ஒரு பள்ளியும் ஒரு நூலகமும் தொடங்கப் பெற்றன. அதுபோன்ற இயக்கங்கள் திருப்பத்தூர், செகந் திராபாத், ரங்கூன் மற்றும் பல இடங்களில் தொடங்கப் பட்டன. கிளைச்சங்கங்களின் சமீப அணைப்பாக தென் னாப்பிரிக்காவில் சாக்ய பௌத்த சங்கக் கிளை தொடங்கப் பட்டது. அது நெட்டால் அட்வெர்ட்டைசர் என்ற பத்திரி கையில் செய்தியாக்கப்பட்டது. ஆர்வத்தோடும் கடும் முயற்சியோடும் பௌத்தத்தை பரப்புகின்ற பணிக் கிடையே சமண விசுத்தா சமியை மிகவும் புகழ்ந்து கொண்டிருக்க முடியாது.

சாக்கிய பௌத்த சங்கத்தின் ஆதரவுடன் தொடங்கப்பட்ட பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு நீதிபோதனை கற்பிப்பதில் தனி அக்கறை செலுத்தப்பட்டது. பத்தாண்டு களுக்கு மேலாக சாக்கிய பௌத்த சங்கத்தில் நடைபெற்ற பணிகள் பௌத்த நடவடிக்கை களுக்கு ஒரு மையமாக விளங்கியது. பஞ்சஸ்கந்த பிரிவினை அடைந்த கர்னல் ஆல்காட்டின் இறுதிச்சடங்கிற்கு திருமதி அன்னி பெசன்ட் அம்மையாரின் அழைப்பின் பேரில் ஒரு பௌத்தனாக சென்று பௌத்த சடங்குகளை நிறைவேற்றினேன். இந்த ஆண்டு கொண்டாடப்பட்ட பகவான் மற்றும் பேராசான் புத்தரின் பிறந்த நாள் ஆண்டுவிழா இங்கே ஒரு நிறுவனம் ஆக்கப்பட்டது. இந்த மகிழ்ச்சியான நாளில்தான் பல நூற்றுக்கணக்கான ஏழைகளுக்கு உணவளிக்கப்பட்டது. ஆமாம், ஆயிரக்கணக்கான ஏழைகள் இந்த நாளுக்காக மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் காத்திருக்கிறார்கள்.

உலகின் மூலைமுடுக்கெங்கும் தமிழ்ப் பேசும் மக்களிடத் தில் புத்த தர்மத்தை பரப்பும் விருப்பத்துடன் எந்தவித உதவியும் இல்லாது தனிப்பட்ட முறையில் தமிழன்7 என்ற வார இதழைத் தொடங்கினேன். அன்புள்ளம் படைத்த திருமதி. அன்னிபெசன்ட் அம்மையார் றி.ஜி.ஷி. அடையாறு, சென்னை, அவர்களால் சாக்கிய பௌத்த சங்க கட்டிட வாடகையும், கோலார் கிளையின் நல்ல பௌத்த உள்ளம் கொண்ட மனிதர்களின் அன்பளிப்பால் இயங்குகின்ற ஒரு சிறிய அச்சு இயந்திரமும் தவிர நன்கொடை என்ற பெயரி லுள்ள வேறு எந்த நடைமுறையும் உதவியுமில்லாமல் சென்னையிலுள்ள நம் சாக்கிய பௌத்த சங்கம் பல்வேறு பணிகளை செய்து இருக்கிறது. தற்பொழுதும் செய்து கொண்டிருக்கிறது.

அந்நிய மதத்தின் ரகசியமான மற்றும் தனித்துவமான தீமையான செல்வாக்கால் பொய்யான ஆண் பெண் கடவுள்களை வணங்குகிற சிலை வழிபாட்டையும், கொடுங்கோன்மையான சாதியமைப்பை உரு வாக்குகின்ற விதிகளை கறாராக பின்பற்றுவதையும், அறியாமையில் உள்ளவர்களை தன் சாத்திர சடங்குகள் மூலமாகவும், யாகத்திற்காக மிருகங்களை பலியிடுகின்ற கொடிய வேள்வி போன்றவற்றை திரும்பவும் கொண்டு வருவது ஒரு ஹெர்க்குலியன் செயல். மாபெரும் பேராசான் பகவான் புத்தரால் போதிக்கப்பட்டு வாழ்க்கையிலும் சிந்தனையிலும் பிரதிபலிக்கின்ற மத்தியமிக்கா என்ற மத்தியப் பாதையை உருவாக்கிய மதத்தை- பௌத்தத்தை மறுநிர்மாணம் செய்வதற்காக- மிக நீண்ட காலத்திற்கு முன் மறக்கப்பட்ட பகவான் புத்தரின் போதனையான கருணை யும் அன்பும், மிகவும் மூட நம்பிக்கைகளும் இரக்க மற்றத் தன்மையுமுடைய இலட்சக்கணக்கான மக்களிடையே அமைக்கப்பட்டதுதான் இந்த சாக்கிய பௌத்த சங்கம்.

மிகக்கடினமான இச்செயலை வெற்றிவாகையுடன் எடுத்துச் செல்ல வேண்டுமானால் அதற்கு முக்கியத் தேவை யானது உண்மையும் நாணயமுமான பௌத்தர் களுடைய இரக்கமும் ஒற்றுமையும்தான். அந்தோ! சாதிமயப்பட்ட இந்தியாவில் அத்தகைய நாணயமான மனிதர்களைக் காண்பது அரிது. (பௌத்தர் என்ற ஒருவகையினர்) கபடமற்ற மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக அவர்களுடைய மனதை வென்று வசியம் செய்வதற்கு பணியாற்றுகிறார்கள்.

தம்மையே தலைவர்கள் என அழைத்துக்கொண்டு துரதி ருஷ்டமான தம் சகோதரர்களின் மறுவாழ்விற்காக பணி யாற்றுவதாய் வேஷம் பூண்டு தம் செய்கைகள் மூலம் தம்மைத்தாமே ஏமாற்றி கொள்கிறவர்களால் சந்தேகத்திற் கிடமின்றி தெரிவது என்னவென்றால், சகோதரத்துவத்திற் காகவோ அல்லது நிப்பானத்திற்கான நலனைவிடவோ சாதியின் மேன்மைக்காகவே மிகவும் கவலை கொண்டு அவற்றையே பிரியமுடன் பற்றிக் கொள்கிறார்கள். மேற்கத் திய அறிவியலாளர்களின் ஆய்வுகளை படிப்பதன் மூலமாக ஒருவேளை மிகவும் எளிமையாக விஞ்ஞான அறிவை வளர்த்துக்கொண்டு அதன்மூலம் அறிவியல் சமயத்தை (பௌத்தத்தை) பற்றி நழுவலாக செய்தித்தாள்கள் மற்றும் பொது இடங்களில் பேசலாம். ஆனால், இது அவர்களுக்கு ஒரு ஒழுக்கமான தைரியத்தைக் கொடுக்காது. ஒழுக்க வுணர்ச்சியை ஒருவன் தன் ஒழுக்க தைரியத்தோடு (குற்ற மற்ற) உறுதியோடு பெற்றிருக்க வேண்டும். அவர்களை எல்லாம் எப்படி நாம் பாதுகாப்பான வழிகாட்டிகளாகவும், சக பணியாளர்களாகவும் ஏற்றுக்கொள்ள முடியும்!

அதனால் நாம் நம்பிக்கை இழந்து பணியை விட்டுவிட முடியுமா? முடியாது. நமது பகவான் புத்தரை பின்பற்றும் ஆர்வலர்களால்-படித்தவர்களால் சட்டத்தைப் போதித்தி ருக்கின்ற ஐரோப்பா, அமெரிக்கா போன்ற வெகுதூர நாடு களில் வாழுகின்ற அறிவியல் ஆய்வுள்ள சகோதர பௌத் தர்களின்- நமது நம்பிக்கைக்குரிய நண்பர்களின் இரக்கத் தையும் ஒத்துழைப்பையும் வென்றால் ஒழிய மிகப்பெரிய முரண்பாடான நிலையில் பணியாற்ற தள்ளப்பட்டிருப் போம். பௌத்தத்திற்கும் அறிவியலுக்கும் முரண்பாட்டை உருவாக்காத புத்தருடைய தத்துவமானது, இயற்கையில் ஒவ்வொன்றோடும் புத்தரின் தத்துவத்தை கற்றறிந்து தன்வழிக்கு திருப்புவதற்காக தூய்மையான பௌத்தத்தில் ஆழமான படிப்பை செலுத்தியவர்கள்தான் (மேற்சொல்லப் பட்ட) அவர்கள்.

அக்காலத்தில் எவ்வித வெளிப்புற உதவி யுமில்லாமல், தனித்தப் பகுதியில் அமர்ந்து தியானத்தின் மூலம் புத்தரால் கண்டுபிடிக்கப்பட்டவைகளைதான், இப்பொழுது வியப்புக்குரிய திட்டத்தின்- உபகரணத்தின் உதவியால் புத்திசாலியான விஞ்ஞானிகள் தமது கூர்மை யான ஆய்வின் மூலம் கண்டுபிடித்து மிகவும் வியப்புக்குள் ளாகிறார்கள். தட்டுத்தடுமாறி நிலையற்ற இடத்தில் தென்னிந்தியாவில் வளரும் குழந்தைநிலையிலுள்ள சாக்கிய பௌத்த சங்கங்களை நடத்துகின்ற எங்களுக்கு, இத்தகைய நெருக்கடியான நேரத்தில் ஐரோப்பாவின் பல நாடுகளில் பௌத்த மையங்களை உருவாக்கியிருப்பதும், சமயப்பரப்பு நிறுவனங்களை ஏற்படுத்தியிடுப்பதும் மிகப் பெரிய நிவாரணமாகும்.

ஆகையினால், கற்றறிந்த தாராள இதயம் படைத்த மேற்கத்திய பௌத்தர்களின் பங்களிப்புக்காக நாங்கள் அனைத்து ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் நல்லறத்திற் காகவும் முறையிடுகிறோம். கீழ்த்திசை மற்றும் மேல் நிலையிலுள்ள அனைத்துக்கிளைகளிலும் புலமைபெற்ற, பாலி கற்றறிந்த அறிஞர்களை இந்த சமயத்தில் சமயப் பரப்பு நிறுவனங்களுக்கு அனுப்புவதால் எங்களுடைய செயல்களைத் தூண்டுவதற்கு காரணமாகவுள்ளவற்றை தாங்கள் எடுத்துக்கொண்டாலும் மிக்க அன்புடன் இருப் போம். பரந்த நிலத்தில் தம்மத்தின் விதையை விதைப்பதற் கும் அதற்குரிய தயாரிப்புகள் விரிந்த நிலையில் இருப் பதற்கும் மிகப்பெரிய அறுவடையாக பயன் கிடைக்கு மென்றும் நாங்கள் உறுதியளிக்கின்றோம். பகவான் புத்தருடைய கருணை நம்முடன் இருப்பதாக.

- பொதுச்செயலாளர்

பண்டிட்.சி.அயோத்திதாஸ்

மதங்களின் நிறுவனர்களில் மூத்தவரும் முதல்வரும் நம் சாக்கியமுனி புத்தரே என்பதையும் அப்புத்தபிரான் சாக்கியக்குடி என்ற அரச பரம்பரையில் பிறந்தார் என்பதை யும் வரலாற்று மாணவர்கள் நன்கு அறிவர். உலக மதங் களின் மிகப்பெரிய புத்த தர்மத்தை படைத்த வரலாற்று சிறப்புமிக்க புத்த பகவானின் பிறந்ததேதியில் சில நிச்சயமற்றத்தன்மைகள் இருப்பதை எண்ணி வருத்தப்பட வேண்டியுள்ளது.

புத்தரின் சிற்பங்கள், அசோகரின் கல்வெட்டுகளை படித்த புத்த மற்றும் அறிஞர்கள் முன்வைக்கும் கருத்து என்ன வென்றால் கிறிஸ்து பிறப்பதற்கு 620 ஆண்டுகளுக்கு முன்னால் புத்தர் பிப்ரவரி மாதம் துறந்து, மார்ச்சில் புத்தராகி மீண்டும் மே மாதத்தில் பிறந்து மீண்டும் டிசம்ப ரில் மகா பரிநிர்வாணம் அடைந்திருக்கிறார் என்பதுதான். திராவிட மன்னர்களது வரலாறுகளின் உதவியால் என்னால் பகவான் புத்தர் பிறந்ததேதியை கீழ்கண்டவாறு கணக்கிட முடியும்.

செய்யுள்கள் பலவற்றில் காணப்படும் செய்திகள் புத்தரின் பிறப்பு குறித்த செய்திகளை உறுதிபடுத்துகின்றன. இவர் மாயாதேவி அம்மையாருக்கு, மகதநாட்டு தலைநகரான கபில நகரில், வைகாசி மாதம் (பாலியில் வைசாகா) பௌர்ணமி பொங்கிய ஞாயிற்றுக்கிழமை அன்று 13-ம் தேதியுமான திராவிட சித்தார்த்தியிலும் வருடத்தில் கலி யுகமான 1616-ல் பிறந்தவர். இப்போது புத்தர் பிறந்து 3397 ஆண்டுகள் ஆகிறது என்று கட்டிக்கொள்ளலாம். (இது மீன லக்கனத்தில் கேட்டை நட்சத்திரத்தில்) பிறந்ததென்று கணிக்கப்படுகிறது.

மணிமேகலையிலிருந்து:

1347 வரி:

விருள்பரந்துகிடந்த மலர்கலியுலகத்து/ விரிகதிர்ச் செல்வன் தோன்றின னென்ன/ வீரெண்ணூற்றோ டீரெட்டாண் டினிற்/ பேரறிவாளன்றோன்றி யதிற்றவ/ பெருகுள மருங்கிற் சுருங்கைச்சிறுவழி/ யிரும்பெருநீத்தம் புகுவது போல/ வளவாச்சிறுசெவி யளப்பரு நல்லற/னுளமலியுவகையொடுயிர் கொளப்புகூஉங்/கதிரோன் றோன்றுங் காலையாங்கவ/னவிரொளி காட்டு மதியே போன்று/ மைத்திருள் கூர்ந்த மனமாக கழூஉம்/ புத்த ஞாயிரு தோன்றுங்காவைத்/ திங்களு ஞாயிருந் தீங்குறா விளங்கத்/ தங்காநாண் மீன்றகைமையினடக்கும்.

1509 வரி:

னாங்கவரவ்வயிற்றமரர் கண்முவப்பத்/ றீங்கனி நாவலோங்கு மித்தீவினுக்/ கொருதானாகியுலகு தொழுந்தோன்றினன்/ பெரியோன் பிறந்த பெற்றியைக் கேணீ/ ரிகுதினவேனி லெறிகதிரிடபத்/ தொருபதின் மேலு மொருமூன்று சென்றபின்/ மீனத்திடை நிலை மீனத்தகவையிற்/ போதித்தலைவனோ பொருந்திய போழ்தந்து/ மண்ணகமெல்லா மாரியின்றியும்/பண்ணிய நன்னீர் போதொடு சொரிந்தது/ போதித்தலைவனோ பொருந்தியபோழ்தத்து/ மண்ணியதன்னீர் போதொடு சொரிந்தது போதிநாதன் பூமியிற் றோன்றுங் காலம்

3264 வரி:

மறந்துமழைவறா மகதநன்னாட்டுக்/ கொருபெருந் திலக மென் றுரவோ குரைக்குங்/ கரவரும் பெருமெக் கபிலைப்பதியி,

சூளாமணியிலிருந்து:

இரதநூபுரச்சருக்கம் 96 பாடல், புத்தர் தியானம்:

ஆதியங்கடவுளை யருமறை பயந்தனை/ போதியங் கிழவனை பூமிசை யொதிங்கினை/ போதியத் கிழவனை பூமிசை யொதிங்கிய/ சேதியஞ் செல்வதின் றிருவடி வணங்கினம்/

மந்திரசாலைச்சருக்கம்:153,154,155,156 பாடல்கள்:

மாற்றவர் மண்டில மதனுளூழியா/ வேற்றுழிபுடையன விரண்டுகண்டமாத்/ தேற்றிய விரண்டினுந் தென்முகத்தது/ பாற்றரும் புகழினாய் பரதகண்டமே.

- சி.அயோத்திதாஸ்

சாக்கிய பௌத்த சங்கத்தின் கிளைகள்:

இடம் செயலாளர்

மைசூர் மாரிக்குப்பம் கே.ஜி.எப் திரு.சி.குருசாமி உபாசகா

மைசூர் பெங்களூர் திரு.க்ஷி.ஜீவரத்னம்

வடாற்காடு திருப்பத்தூர் திரு.சி.ரி.நகுல பிள்ளை

ஹைதராபாத் செகந்தராபாத் திரு.ஸி.க்ஷி.சபாபதி

பர்மா ரங்கூன் திரு.ஷி.அண்ணாமலை

தென்னாப்பிரிக்கா டர்பன், ஓவர்போர்ட் திரு.க்ஷி.வீரன்

நம் பௌத்த சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

தம்மத்தை, அதன் பிறப்பிடத்திலேயே மீண்டும் நிறுவு வதற்கு எடுத்த கடும் முயற்சிகள் நன்கு கனிந்து இனிக்கத் தொடங்கி உள்ளது. புகழ்மிக்க பௌத்த விடுதலைக் கோட்பாடுகள் மீண்டும் லட்சக்கணக்கான இந்தியர்களின் மனங்களில் குடிகொள்ள ஏற்றத் தருணம் இந்தியாவில் வந்துள்ளது. அசோகரின் காலத்தில் செழித்திருந்ததுபோல, மீண்டும் இந்திய மக்களின் வாழ்வு உரம் பெற்று மேலோங் கிடவும் தேசியஅளவில் புகழ் பெறவும் சகோதரத்துவ உணர்வு மட்டுமே வழியாக இருக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. புத்தரின் சீடர்கள் இப்பகுதி யில் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், சாக்கிய பௌத்த சங்கத்திற்கு ஒரு கட்டிடம் தேவைப்படுகிறது.

அக்கட்டிடம் பிக்குகளின் வசிப்புடனும் பௌத்தத்தைப் பரப்பும் அறையாகவும் பயன்பட ஏதுவாக இருக்கும். நாங்கள் அப்படி ஒரு கட்டிடம் வேண்டி பௌத்த சங்க தலைமை யிடத்தில் தேடி போராடிக் கொண்டிருக்கும் வேளையில் மறைந்த கர்னல் ஆல்காட் அவர்கள், நமக்கென ஒரு கட்டிடம் கட்டும்வரை ரூ.10 மாதந்தோறும் வாடகையாக ஒரு வீட்டிற்கு அளித்து வந்தார்கள். அதனால்தான் ராயப் பேட்டையில் ஒருவீடு வாடகைக்கு எடுத்து அதில் ஒவ்வொரு ஞாயிறன்றும் பௌத்த வட்டங்களும் பஞ்ச சீலமும் நடத்தப்பெற்றது. கர்னல் ஆல்காட்டின் வேதனைக் குரிய இறப்பிற்குப் பிறகு அன்னிபெசன்ட் அம்மையார் அவர்கள் அவ்வாடகைத் தொகையை தொடர்ந்து அளித்து வருகிறார்கள். சாக்கிய பௌத்த சங்கத்திற்கு தகுந்த கட்டி டம் தேவைபடுவதால் தான் சங்க வேலைகளும் மிகப் பெரிய அளவிலான இடையூறுக்குள்ளாகி உள்ளது. தற் போதுள்ள சங்கக்கூடம் மிகச் சிறிதாகவும் பாதுகாப்பற்றும் உள்ளதால், தாராளமான சங்க கட்டிடம் என்பது மிகவும் அவசியமானதாக உள்ளது.

அப்படி ஒரு பெரிய கட்டிடம் இருந்தால்தான் வெளியிலிருந்து பெருமளவு வரும், குறிப்பாக சிலோன் மற்றும் பர்மிய பிக்குகளை தங்க வைக்க முடியும். அவர்கள்தான் பேராசான் புத்தரின் பரந்த நல்லெண்ணத்தையும் அன்பையுமுடைய பௌத்தக் கோட்பாடுகளை துவங்கியது முதல் நாடுதோறும் சென்று, புத்தப்பணியை சீரும் சிறப்புமாக ஆற்றி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களை எங்களுடன் தங்க வைத்திருந்தால் தான் சங்க வேலைகளும் பெருமளவு பரவி வரும். ஆகையால்தான், வணங்குதற்குரிய புத்தபகவானின் தம்மத்தை உலகெங்கும் பரப்ப, தாராள மனம் கொண்ட பௌத்த சமயத்தைக் சேர்ந்த பெண்களும் ஆண்களும் தாங்களால் இயன்ற உதவியை நல்க இந்த வேண்டுகோளை உங்கள் முன்வைத்துள்ளோம்.

கட்டிடத்தின் மதிப்பீடு:

கீழ்த்தளம் ரூ.5,000

விரிவுரை அறை ரூ.5,000

பார்வையாளர் பகுதி ரூ.3,000

பஞ்சலா ரூ.2,000



தங்களின் சந்தாத் தொகையை திருமதி. அன்னி பெசன்ட், றிஜிஷி அடையாறு என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அம்மையார் மெட்ராஸ் வங்கிக்கு திருப்பி அனுப்பி நமது சேமிப்பில் சேர்த்துவிடுவார்கள்.

-பண்டிட் சி.அயோத்திதாஸ், பொதுச்செயலாளர், 5.6.1911 (சாக்யா பௌத்த சங்கம், சென்னை, வெளியிட்ட கீமீணீளீ ஞிணீஹ் என்ற பத்திரிகையிலிருந்து) சசச

மேற்கோள்கள்:

1) ததாகர் : ஒருவர் புத்தராக வேண்டுமென்றால் அதற்கான பல்வேறு நிலைகளைக் கடந்தாக வேண்டும். அவ்வாறு கடந்து புத்தரானவர் சித்தார்த்தர். புத்தரின் இன்னொரு பெயர் ததாகர் என்பதாகும்.

2) நிர்வாணம் - நிப்பானம் : நிர்வாணம் என்பது சமஸ்கிருதச் சொல். நிப்பானம் என்பது பாலி. தமிழில் அதை பேரா இயற்கை என்றழைத்தார் திருவள்ளுவர்.

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே / பேரா இயற்கை தரும்-370 (அவாஅறுத்தல்)- எந்தவொரு நிலையிலும் நிறை வுறாத இயல்புடைய பேராசையை ஒருவர் ஒழித்துவிட்டால், அத்தகைய நிலையே அவருக்கு மாறாத்தன்மையை உடைய இயற்கையான இன்பத்தை (நிப்பானம்) தரும். நிப்பானம் என்பது உன்னதமான எண்வகை மார்க்கமே அன்றி வேறல்ல. நிப்பானத்தின் ஆதார அடிப்படைக் கருத்து நன்னெறி வாழ்வுக்குரிய வழியே ஆகும். - (டாக்டர். அம்பேத்கர் நூல்தொகுப்பு- தமிழ் 22, ப. 328 )

3) எண் வழிப்பாதை- அஷ்டாங்க மார்கம்: 1. சரியானப் பார்வை (நற்காட்சி-நல்நோக்கு) 2. நல்நினைவு (நல் இலக்கு) 3. நல்பேச்சு 4. நன்னடத்தை (நற்செயல்), 5.நல் வாழ்க்கை முறை 6.நன்முயற்சி 7.சரியான விழிப்புணர்வு (நற்கண்ணோட்டம்) 8. நற்கவனம்

4) பகுத்தறிவின் காலம் (Age of Reason): 17-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் மறுமலர்ச்சி காலத்திற்கும் (Age of Renaissance) அறிவொளிக் காலத்திற்கும் ( Age of Reason) இடையே விளைந்த தத்துவத் தொகுப்புதான் பகுத்தறிவு காலமாகும் ( Age of Reason). இதற்கு முன்னோடி நாடு இத்தாலிதான். பிறகு கிரேக்கம், ஜெர் மனி, பிரான்சு வாயிலாக இங்கிலாந்திலும் சிந்தனையில் மாபெரும் மாற்றங்கள். Rene Descartes என்பவரின் புத்தகங்கள் 17-ம் நூற்றாண்டின் மேற்கத்திய தத்துவங்களை மாற்றம் அடைய செய்தன. தாமஸ் மோர், ஐன் கோலட், வில்லியம் குரோ, செயின் ரொஸ்மஸ், வில்லியம் செல்லிங், தாமஸ் லிங்க்கர் போன்றோர் இக் காலத்திற்கான முன்னோடிகளாவர்.

துன்பியல்வாதம், சொர்க்கம் பற்றிய சிந்தனைகள், மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்த ஐரோப்பியர்களை தட்டி எழுப்பி ஐயம் தவிர்த்து கல்வி என்னும் ஒளியைத் தூண்டியது இப்பகுத்தறிவு காலம் தான். இக்காலத்தில்தான் தனித்துவம், பொருள்முதல்வாதம், விடுதலை, தன்னிலை வெளிப்பாடு போன்ற கொள்கைகள் மதம், வரலாறு, கலை இலக்கியத்துறைகளில் பரவி, தேசியம், நாட்டுப் பற்று போன்ற சிந்தனைகள் தோன்றின. இதே தலைப்பில் எழுத்தாளர் தாமஸ் பெயின் என்பவர் 1794, 1795, மற்றும் 1807 ஆண்டுகளில் புத்தங்களை வெளியிட்டு நிறுவன மாக்கப்பட்ட மதத்தை சாடி பகுத்தறிவுக் கொடியை உயர்த்தினார். Age of Enlightenment of the Buddha என்று பண்டிதர் இங்கு குறிப்பிடுவது, அறிவொளி தந்த காலத்தையும், முழு நிறைவு பெற்ற புத்த பகவானையும் இணைத்துப் பேசுவதுபோல் தோன்றுகிறது.

5. பஞ்சசீலம்- ஐவகை ஒழுக்கத்தைக் குறிக்கும் பாலிச் சொல் லாகும். அவை : 1.கொலை செய்யாதிருப்பதை கடமையாகக் கொள்வது 2.திருடாமையை கடமையாகக் கொள்வது 3.தனக்குரியர்வர்களைத் தவிர பிறர் மீது காம எண்ணங்கள் இல்லாமல் இருப்பது 4. பொய் பேசாமல் இருப்பது. 5. போதை வஸ்துகளை தொடாமல் இருப்பது.

6) டாக்டர் பால்காரஸ்: பத்திரிகையாளரும் ஆசிரியரும் தத்துவஞானியுமான இவர், டாக்டர்.கஸ்டவ் காரஸ்- லௌதா கிரஸிகர் காரஸ் ஆகியோரின் மகனாக 1852-ல் ஜெர்மனியில் பிறந்தார். 1876ல் முனைவர் பட்டம் பெற் றார். தொடக்கத்தில் மிலிடரி அகாடமிஸ் பணியில் சேர்ந் தார். பின்னர் தாராளவாத சமயக் கருத்துகளால் உந்தப்பட்டு பணியிலிருந்து விலகினார். 1881-1854-ல் சிறிதுகாலம் இங்கிலாந்தில் இருந்தார். பிறகு அமெரிக்கா சென்று ஓபன் கோர்ட் என்ற புதிய பத்திரிகையில் ஆசிரி யராக 1887 லிருந்து 1919 வரை அதாவது தனது இறுதிக் காலம் வரை பணியாற்றியனார். 1893-ல் சிக்காகோவில் நடந்த உலக சமய மாநாட்டில் தம்மபாலர், சோயன் சாகு (Soyenshaku) ஞி.ஜி.சுகிகி (D.T.Suguki) போன்ற புகழ்பெற்ற பௌத்த அறிஞர்கள் கலந்து கொள்வதற்கு முக்கிய கருவியாக விளங்கினார்.

ஆங்கிலத்தில் புகழ்பெற்ற மகாயான பௌத்தத்தின் சுருக்கம் (Out lines of Mahayana Buddhism)என்ற நூலை சுகிகி இவரது வீட்டில் இருந்து கொண்டுதான் எழுதினார். புத்தரின் புனித வாக்கு ( The Gospul of Buddha) என்ற நூலை எழுதி பௌத்தம் பரவ வழி வகுத்திட்டவர். இத்தகைய பௌத்த அறிஞரோடு பண்டிதர் தொடர்பு வைத்திருந்தார்.

7)தமிழன்: ஒவ்வொரு புதன்கிழமையும் சென்னை இராயப் பேட்டையிலிருந்து நான்கு பக்கங்களுடன் அப்பொழுதிருந்த காலணா விலையில் ஒரு பைசா தமிழன் வெளியிடப்பட்டது. 19.06.1907ல் பண்டிதர் முதல் இதழைத் தொடங்கி தனது இறப்புவரை (5.05.1914) தொடர்ந்து தமிழனை நடத்தினார். அவர் மறைவிற்கு பிறகு அவருடைய மகன் பட்டாபிராமனும் அதைத் தொடர்ந்து பண்டிதமணி அப்பாதுரையாலும் இடை யிடையியே தொய்வு ஏற்பட்டாலும் 1934 வரை தமிழன் தமிழ் நாட்டில் மட்டுமல்லாது உலகமெங்கும் வலம்வந்து இந்து மதத்தை வேரோடறுக்க பகுத்தறிவும் சமத்துவமுடைய பௌத்தத்தை பரப்பியதுதான் தமிழன் சமூகத்தளத்திலும், அரசியல்தளத்திலும் திராவிடம் என்ற கருதுகோளுக்கு முன்னோடியாக திகழ்ந்த தமிழனை மீண்டுமொருமுறை நினைவு கூர்வதால் பெருமையடைகின்றோம்.

8) இந்து மதத்திலுள்ள போலி ஆண் பெண் சிலை வழி பாட்டைக் கண்டிக்கவும், போலிக்கடவுள்களை வணங்கி உயர்ந்தவர் யாரென அம்பலப்படுத்தவும் “Worshipping False Gods” என்ற சொற்களை 1911லேயே அயோத்திதாசர் பயன்படுத்தினார். அயோத்திதாசரின் இச்சொற்களையே திருடி, வங்காள பார்ப்பனன் அருண் சௌரி தன் நூலுக்கு “Worshipping False Gods (கிஷிகி வெளியீட்டகம், 1997) தலைப்பாக சூட்டிக்கொண்டார். இதற்காக அயோத்தி தாசருக்கு நன்றிகூட சொல்லாமல் மறைத்தது, அருண் சௌரியின் நன்றிகெட்டத்தனத்தையும், வரலாற்று துரோகத்தையும் வெளிப்படுத்துகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com