யாழி கவிதைகள்
சாக்கடையின் தூர்களுக்காக
வீட்டின் உட்பூச்சுக்காக
புடைத்தெடுக்கப்படும் அரிசிக்காக
மழிக்கப்படும் முகங்களுக்காக
தைக்கப்படும் செருப்புகளுக்காக
சில நேரங்களில்
தள்ளி வைக்கப்படுகிறது
தீண்டாமையும்...
வளையத்திற்குள் புகுந்து
வெளிவர சிரமப்படுகிறது
நாட்கள்...
எதுவும் நடக்கலாம்
உச்சியில் நிறுத்தப்பட்டுள்ளது
உயிரின் அந்தர நம்பிக்கை.
வாழ்க்கையின் தடுமாற்றம்
கம்பீரமாய் நடக்கிறது
கயிற்றின் மீது...
தாளங்கள் லயித்து
தவறி விழுகின்ற
நியாயமற்ற நாணயங்கள்
இப்படி எப்போதாவது
தக்க வைத்துக் கொள்கிறது
தன்னை.
நாளைய நொடிகளை
இன்று நிர்ணயம் செய்கிறது
கையிலுள்ள
அலுமினியத் தட்டின் ஓசை.
|