Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2007


சமூக நினைவுகளும் வரலாறும்
ஆ.சிவசுப்பிரமணியன்

ஒரு சமூகத்தின் வரலாறு என்பது பல்வேறு வகைமைகளாகப் பார்க்கத்தக்கது. இதில் பண்பாட்டு வரலாறும் ஒன்றாகும். பண்பாட்டு வரலாற்று வரைவிற்கான தரவுகளில் ஒன்றாக ‘சமூக நினைவு’ அமைகிறது. பீட்டர் பர்க் என்பவர் ‘சமூக நினைவாக வரலாறு’ (History as social memory) என்று இதைக் குறிப்பிடுவார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வரலாறு எப்படி அச்சமூகத்தின் நினைவுகளில் வாழ்கிறதோ அதுபோல் ஒரு குறிப்பிட்ட ஆட்சி மரபின் செயல்பாடுகளும் சமூக நினைவாகத் தொடர்கின்றன. இந்நினைவானது அடித்தள மக்களின் வரலாற்று வரைவிற்குப் பெரிதும் துணைநிற்கும் தன்மையது.

அடித்தள மக்கள் தம்வாழ்வில் எதிர்கொள்ளும் முக்கிய அவலங்களுள் பாலியல் வன்முறையும் ஒன்றாகும். இன்றுவரை பல்வேறு வடிவங்களில் இது தொடர்கிறது. இராமநாதபுரம் மன்னர்களின் ஆட்சியில் அடித்தள மக்களின் மீது ஏவப்பட்ட பாலியல் வன்முறை குறித்த சமூக நினைவுகள் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றன.
இராமநாதபுரம் மன்னர்கள்: இராமநாதபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிபுரிந்தவர்கள் ‘சேதுபதிகள்’ என்றழைக்கப்பட்டனர். தனது இலங்கைப் படை எடுப்புக்கு உதவியாக இருந்தமைக்காக இப்பகுதியைக் காவல் செய்யும் பொறுப்பை சேதுபதி மரபினரிடம் இராஜராஜ சோழன் வழங்கினான் என்ற கருத்து உண்டு (இராமசாமி 1990-175). லங்காபுரன் என்ற ஈழ அரசனின் தளபதியால் நியமிக்கப் பட்டவர்களே சேதுபதிகள் என்ற கருத்தும் உண்டு (மேலது). கி.பி .1604ல் இராமநாதபுரம் பகுதிக்கு சேதுபதியாக, போகளூரை ஆண்டுவந்த சடையக்கத் தேவர் உடையார் என்பவரை முத்துக்கிருஷ்ண நாயக்கர் (1601-1609) என்ற மதுரை நாயக்கர் மன்னர் நியமித்தார்.

இதன் அடிப்படையில் நோக்கும்போது இராமேஸ்வரம் பகுதியை உள்ளடக்கிய நிலப்பகுதிக்கு மதுரை நாயக்கராட்சிக்குக் கட்டுப்பட்ட மன்னராக விளங்கியவர்கள் சேதுபதி என்ற பட்டத்துக்குரியவர்களாக விளங்கினர் என்று கூறலாம்.
கிழவன் சேதுபதி (1674-1710) என்ற சேதுபதி மன்னன், மதுரை நாயக்கர்களின் மேலதிகாரத்திலிருந்து தம் ஆட்சிப்பகுதியை விடுவித்துக் கொண்டு தனிநாடாக ஆக்கினார். அத்துடன் போகளூரிலிருந்த தலைநகரை இராமநாதபுரத்துக்கு மாற்றினார்.

கி.பி.1792ல் கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டிற்குள் சேதுபதி பரம்பரை கொண்டுவரப்பட்டது. 1803ல் இராமநாதபுரம் சேதுபதி மன்னரின் தகுதி, ஜமீன்தார் என்ற நிலைக்குத் தாழ்த்தப்பட்டு இராமநாதபுரம் ஜமீன் என்று அவரது ஆளுகைக்குட்பட்ட பகுதி அழைக்கப்படலாயிற்று.

சேதுபதி மன்னர்கள் தமிழ், தெலுங்கு வடமொழிப் புலவர்களையும் இசைவாணர்களையும் ஆதரித்துள்ளனர். இராமநாதபுரம் அரண்மனைச் சுவர்களில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள், ஓவியக்கலையின் மீது சேதுபதி மரபினர் கொண்டிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்தின. சமய வேறுபாடின்றி இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் ஆகியோரின் வழிபாட்டுத் தலங்களுக்கு மானியங்கள் வழங்கியுள்ளனர்.

விவேகானந்தரின் சிக்காக்கோ பயணத்திற்கு உதவி செய்தவர் பாஸ்கர சேதுபதி (1889-1903) என்ற இராமநாதபுரம் சேதுபதி மன்னர்தான். இவரது உறவினரும் பாலவநத்தம் ஜமீன்தாருமான பாண்டித்துரைத்தேவர் வ.உ.சி நிறுவிய சுதேசிக் கப்பல் நிறுவனத்திற்கு நிதி உதவி செய்ததுடன் அதன் தலைவராகவும் பணியாற்றினார். நான்காம் தமிழ்சங்கம் என்று கூறப்படும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தை 1901 செப்டம்பர் 4 ல் நிறுவினார். இதற்கு பாஸ்கர சேதுபதி நிதிஉதவி புரிந்தார். ரா.இராகவையங்கார், மூ.இராகவையங்கார் போன்ற தமிழ் அறிஞர்கள் இச்சங்கத்தில் பணியாற்றினர். ‘செந்தமிழ்’ என்ற இதழையும் இச்சங்கம் வெளியிட்டது. இத்தகைய வரலாற்றுப் பின்புலம் கொண்ட இராமநாதபுரம் ஜமீன் ஆட்சியில் குடிமக்கள் மீது ஏவப்பட்ட பாலியல் வன்முறை தொடர்பான சமூக நினைவுகள் இரண்டை இனிக்காண்போம்.

ஆளுவோரின் பாலியல் வன்முறை

ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை ஆட்சிபுரிவோர் தம் ஆளுகைக்குட்பட்ட பகுதியிலுள்ள அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் என அனைத்தின் மீதும் அதிகாரம் செலுத்தும் உரிமை பெற்றவராக இருந்தனர். இதற்கு மனிதர்களும் விலக்கல்ல. மனித உடலின் மீது வன்முறையைப் பயன்படுத்தவும் உயிரைப் பறிக்கவும் அவர்கள் உரிமை படைத்தவர்களாக இருந்தனர். இந்த அதிகாரத்தின் அடிப்படையில், அழகிய பெண்களைத் தமக்கு உரிமையாக்கிக் கொள்ளவும் அவர்கள் தயங்கியதில்லை. படையெடுப்புகளின்போது தமிழ் மன்னர்கள் பெண்களைக் கவர்ந்து வந்ததை, இலக்கியங்களும் கல்வெட்டுகளும் பெருமையுடன் குறிப்பிடுகின்றன.

மன்னனின் மனைவியராக மன்னர் குடிப்பிறப்புடைய பெண்கள் அமைந்தனர். இவர்தம் மகன்களே ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் உரிமை படைத்தவர்களாக விளங்கினர். மன்னனது மறைவிற்குப்பின் அவனது அந்தபுர பெண்டிர் நிலை கேள்விக்குரியது. இந்தப் பின்புலத்தில் ‘மகட்கொடை மறுத்தல்’ என்ற துறையை ஆராய இடமுண்டு. தம் ஆளுகையின் கீழுள்ள பெண்களை விலைக்கு வாங்கியும், பெற்றோரை அச்சுறுத்திக் கவர்ந்து வந்தும் அந்தபுர மகளிராக மன்னர்கள் ஆக்கிக் கொண்டனர்.

இச்செயலைச் ‘சிறை எடுத்தல்’ என்று குறிப்பிட்டனர். பெண்ணைப் பாதுகாத்து இல்லத்தில் வைத்திருப்பதை ‘சிறை காத்தல்’ என்று வள்ளுவர் (குறள்:57) குறிப்பிடுகிறார். பெற்றோரால் பாதுகாக்கப்படும் பெண்ணைக் காதலன் அழைத்துச் செல்வதையும், மன்னர்கள் அதிகாரத்தின் துணையுடன் கவர்ந்து செல்வதையும் ‘சிறையெடுத்தல்’ என்று பேச்சு வழக்கில் குறிப்பிடுவர்.

ஆளுவோரின் அதிகாரத்தைச் செலுத்தும் தளங்களில் ஒன்றாகப் பெண்ணின் உடல் நிலவுடமைச் சமூகத்தில் விளங்கியது. ஐரோப்பாவில் குடியானவப் பெண்களின் திருமணத்தில் முதலிரவு உரிமை நிலப்பிரபுக்களுக்கிருந்தது கேரளத்தில் நம்பூதிரிகள் இவ்வுரிமையைக் கொண்டிருந்தனர். தமிழ்நாட்டில் ‘சிறையெடுத்தல்’ வாயிலாகப் பெண்கள் மீது தம் அதிகாரத்தைக் குறுநில மன்னர்கள் நிலை நாட்டியதற்குச் சான்றாக
‘புல்லு அறுத்தா மாட்டுத் தொட்டிக்கு
பொண்ணு சமைஞ்சா அரண்மனைக்கு’
என்ற பழமொழியைக் குறிப்பிடலாம்.

ஜமீன் பகுதிகளில் வழிபடப்படும் அம்மன்களில் சில ஜமீன்தார்களின் பாலியல் வன்முறைக்கஞ்சி, பெற்றோர்களால் கொலை செய்யப்பட்ட அல்லது தற்கொலை செய்துகொண்ட பெண்களின் நினைவாக உருவானவை தான். இப்பின்புலத்தில் மேலே குறிப்பிட்ட இராமநாதபுரம் ஜமீனை மையமாகக் கொண்டு இன்றுவரை வழக்கிலுள்ள இரு சமூக நினைவுகளை இனிக் காண்போம்.

சமூக நினைவு: ஒன்று

மறவர் சமூகத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாகக் ‘கொண்டையங் கோட்டை மறவர்’ என்ற பிரிவு உள்ளது. மறவர் சமூகத்தில் உயரிய பிரிவாக இதைக் கருதுவர். இராமநாதபுரம் ஜமீன்தார் செம்பிநாட்டு மறவர் பிரிவைச் சேர்ந்தவர். இப்பிரிவு தன்னைவிடத் தாழ்ந்தது என்பதே கொண்டையங்கோட்டை மறவர்களின் கருத்து. எனவே இருபிரிவினருக்கும் இடையே மண உறவு முன்னர் இருந்ததில்லை.

இராமநாதபுரம் ஜமீன்தார் ஒருவர் கொண்டையங்கோட்டை மறவர்களின் தலைவர் வீட்டிலிருந்த அழகிய பெண்ணொருத்தியைச் சிறை எடுக்க விரும்பினார். இது அப்பெண்ணின் தந்தைக்குத் தெரிந்துவிட்டது. இதை அவர் விரும்பாமைக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது காரணம், ஜமீன்தாரின் குலம் தம் குலத்தை விடத் தாழ்ந்தது என்பது. இரண்டாவது காரணம், மனைவி என்ற தகுதியின்றி, தன் பெண் காமக் கிழத்தியாக வாழ வேண்டிய அவலம்.

ஆனால் ஜமீன்தாரின் விருப்பத்திற்கு இணங்காவிட்டால், பெண்ணை பலவந்தமாகத் தூக்கிச் சென்றுவிடுவார். அத்துடன் அவரது பகையும் ஏற்படும். இவற்றைத் தவிர்க்கும் முகமாக நெருங்கிய உறவினர்களுடன் இரவோடிரவாகப் புறப்பட்டு, கால்நடையாகப் பல நாட்கள் பயணம் செய்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்து சேர்ந்தனர். நாங்குநேரி ஊருக்கு வடபகுதியில் உள்ள மறுகால்குறிச்சி என்ற கிராமத்தில் நிலையாகத் தங்கி வாழத் தொடங்கினார். இன்றும் மறுகால் குறிச்சிக் கிராமத்தில் கொண்டையங்கோட்டை மறவர்களே அதிக அளவில் வாழ்கின்றனர். மறுகால் குறிச்சி மறவர்களின் இடப்பெயர்ச்சியை வெளிப்படுத்தும் வாய்மொழிக் கதையாகவும் இதைக் கொள்ளலாம்.

சமூக நினைவு- இரண்டு

இராமநாதபுரம் மாவட்டம் நாடு என்ற உட்பிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருந்தது. இன்று அரசின் வருவாய்த் துறையின் ஆவணங்களில் நாடு என்ற பிரிவு இடம் பெறாவிட்டாலும் நடைமுறையில் ‘நாடு’ என்ற பிரிவு அதிகார மையமாக இன்றும் விளங்கி வருகிறது. இத்தகைய ‘நாடு’ என்ற அமைப்பில் ஒன்றாக ஆப்பநாடு இருந்தது. ஆப்ப நாட்டு மறவர் தலைவரின் மகளைச் சிறையெடுக்க இராமநாதபுரம் ஜமீன்தார் ஒருவர் விரும்பியபோது ஆப்ப நாட்டு மறவர்களின் தலைவர் அதற்கு உடன்படவில்லை. மேல பார்த்த சமூக நினைவில் குறிப்பிட்ட காரணங்களே அவர் உடன்படாமைக்கான காரணங்களாக இங்கும் அமைந்தன.

ஜமீன்தாரின் சிறையெடுப்பிலிருந்து காப்பாற்றும் வழிமுறையாக தென்திசையில் சற்றுத் தொலைவிலுள்ள வேம்பாறு என்ற கடற்கரைச் சிற்றூருக்குத் தன் மகளை அவர் அனுப்பிவிட்டார். அங்கு வாழ்ந்து வந்த பரதவர் சாதியினரின் தலைவரான அவரது நண்பர் வீட்டில் அடைக்கலமாக அப்பெண் ஒன்றிரண்டு உறவினர்களுடன் தங்கியிருந்தாள். பெண்ணை அழைத்துப்போக வந்த ஜமீன் ஆட்களிடம் பெண் எங்கோ ஓடிப்போய்விட்ட தாக கூறிவிட்டார்கள். அங்கு பெண்ணைத் தேடிக் கிடைக்காமல், விடாது தேடி, வேம்பாறு பரதவர் தலைவர் வீட்டில் அப்பெண் இருப் பதை அறிந்து அவளைச் சிறையெடுக்கப் புறப்பட்டு வந்தனர்.

இதை அறிந்த பரதவர் தலைவர் இக்கட்டான நிலைக்கு ஆளானார். அவர்களை எதிர்க்க வலிமையான படை அவரிடமில்லை. அதேநேரத்தில் தம்மிடம் அடைக்கலமாக ஒப்படைக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்றியாக வேண்டும். இறுதியில் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். அதன்படி ஆப்பநாட்டு மறவர்களின் முறைப்படி திருமணம் செய்து கொடுத்து விட்டார். கன்னிப் பெண்ணை, சிறையெடுக்க வந்தவர்கள் ஏமாந்து திரும்பிச் சென்றனர். இச்செய்தியையும் ஒரு வாய்மொழிக் கதையாகக் கொள்ள முடியும்.

சமூக நினைவுகளின் நம்பகத்தன்மை
மேற்கூறிய சமூக நினைவுகளின் நம்பகத்தன்மையை ஆராயும் முன் இதையொத்த எழுத்துச்சான்றுகள் சிலவற்றைக் கண்டறிவது அவசியம். முதாவதாக சேதுபதி மன்னர்களின் செப்பேடுகள் மூன்றில் சிறையெடுத்தல் தொடர்பாக இடம்பெறும் செய்திகளைக் காண்போம்.

முத்துராமலிங்க சேதுபதி என்பவர் தன் ஆட்சியில் அடங்கிய ஊர்களில் இருந்து ஊருக்கு ஒரு பெண்ணைச் சிறையாகக் கேட்டபோது ஆயிரமங்கலம் ஊரைச் சேர்ந்த கொளும்பிச்சரு தேவன் என்பவர் தமது மகள் முருகாயி என்பவளைச் சிறையாகக் கொடுத்தார். ஊரவர்கள் கூடி இதற்காக அவருக்கு நிலம் கொடுத்துள்ளனர். (இராசு. 1994:525-528)

வயிரமுத்து விசைய ரகுநாத ராமலிங்க சேதுபதி என்பவர்க்கு மளுவிராயப் புரையார் அசையாவீரன் என்பவர் தன் மகள் முத்துக் கருப்பாயியை சிறையாகத் தந்தான். இதற்காக ஊரவர்கள் அவருக்கு நிலம் கொடுத்தனர் (இராசு, 1999: 523 -24)
இதே மன்னருக்கு விசையநல்லூர் பல்லவராயப் புரையர் மொக்கு புலித்தேவன் என்பவர் அழகிய நல்லாள் என்ற தன் மகளைச் சிறையாகக் கொடுத்தமைக்காக அவருக்கு ஊரவர் நிலம் கொடுத்துள்ளதைச் செப்பேடு ஒன்று தெரிவிக்கிறது. (1994:529-30)

ஊரவர்கள் கூடி தம் பெண்களைக் காப்பாற்றும் முகமாக வேறு ஒருவரது மகளைச் சிறை கொடுக்க வைத்து அதற்காக நிலம் வழங்கிய கொடுமை இம்மூன்று செப்பேடுகளிலும் காணப்படுகிறது. இச்செப்பேடுகளில் இடம் பெறும் சேதுபதிகளின் காலமும், செப்பேடு எழுதப்பட்ட காலமும் ஒத்து வரவில்லை. இது தனியாக ஆராய வேண்டிய செய்தி. செப்பேடு எழுதப்பட்டதன் அடிப்படை நோக்கம், பெண்ணைச் சிறை கேட்ட மன்னருக்குத் தன் மகளைச் சிறையாகக் கொடுத்த தந்தைக்கு, ஊரவர் கூடி நன்றிக்கடனாக நிலம் வழங்கிய செயலைக் குறிப்பிடுவதுதான். இதை மட்டும் நாம் கவனத்தில் கொள்ளுதல் போதுமானது.

பெண்களைச் சிறை எடுக்கும் இப்பழக்கத்திற்கு பெரிய நாயகம் பிள்ளை என்பவர் எழுதிய அச்சிடப்படாத சுய சரிதையும் சான்றாக அமைகிறது. அமெரிக்கன் மதுரை மிஷனில் 19ம் நூற்றாண்டில் இவர் பணியாற்றியுள்ளார். தமது சுயசரிதையில் தொடக்கத்தில், தமது முன்னோர் இராமநாதபுரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இடம் பெயர்ந்ததைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

என் பாட்டனார் ஞானப்பிரகாசம் பிள்ளை இராமநாதபுரம் சமஸ்தானத்தில் சம்பிரிதி வேலை பார்த்தார். இவர் இந்து மார்க்கத்தைச் சேர்ந்தவர். இந்து மார்க்கப்பேர் ஞாபகமில்லை. இராமநாதபுரம் சமஸ்தானத்தில் பேர் பிரஸ்தாபமாயும், ஜமீன்தாருக்குப் பிரியமும் உண்மையும் நடந்து வந்தார். இப்படி சம்பிரதி வேலை ஒழுங்காய் நடந்து வருகிற காலத்தில், அந்தக் காலத்திலிருந்த ஜமீன்தார், இவர்கள் வீட்டுப் பெண்ணைச் சிறை எடுக்க யோசித்திருப்பதாக சமாசாரம் இவர் காதுக்கெட்டியது. அந்தக் காலத்தில் ரெயில் கிடையாது. சடுக்கா வண்டி கிடையாது. மாட்டு வண்டிகள்கூடக் கிடைக்கிறது ரொம்ப வர்த்தமாயிருக்குமாம்.

சிறையெடுக்க யோசித்திருக்கிற சமாசாரம் இவர் காதுக் கெட்டியவுடனே இனிமேல் இவ்விடத்திலிருப்பது மரியாதையில்லையென்று எண்ணி, ஊரைவிட்டுப் போகத் தீர்மானித்து நகைகளையும் எடுத்துக் கொண்டு இராத்திரியே புறப்பட்டு, பிள்ளை குட்டிகளெல்லாம் கால்நடையாய் நடந்து எட்டுநாள் போல் தங்கித் தங்கி திருநெல்வேலி போய்ச் சேர்ந்தார்களாம்.

தம் முன்னோரின் இடப்பெயர்ச்சி தொடர்பாக, குடும்ப உறுப்பினர்களிடம் வந்த கர்ணபரம்பரைச் செய்தியை எழுத்து வடிவில் எழுதிவைத்ததன் வாயிலாக அச் செய்தியைப் பெரிய நாயகம் பிள்ளை ஆவணப் படுத்தியுள்ளார்.

நிகழ்வும் சமூக நினைவும்

இக்கட்டுரையில் குறிப்பிட்ட இரு சமூக நிகழ்வுகளும் வாய்மொழியாக வழங்கி வருபவை. இவற்றின் நம்பகத்தன்மைக்கு மேற்கூறிய எழுத்தாவணங்கள் துணைபுரிகின்றன. இந்த இடத்தில் சமூக நினைவு குறித்து பீட்டர் பார்க் (2003-44) என்பவர் கூறும் செய்தியை அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.

சமூக குழுக்களால் நினைவு கட்டமைக்கப்படுகிறது. அக்குழுவைச் சார்ந்த தனி மனிதர்கள் நினைவுகளை நினைவில் கொள்ளுகிறார்கள். ஆனால் அச்சமூகக் குழுக்கள் எது நினைவில் கொள்ளத்தக்கது, எப்படி நினைவில் கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன. தாங்கள் நேரடியாக அனுபவித்தறியாத ஒன்றை அவர்கள் நினைவில் கொள்ளுகிறார்கள். எனவே ஒரு குழுவினர், கடந்த கால நிகழ்வுகளைக் கூட்டாக மறுகட்டமைப்பு செய்வதே நினைவு என்று கூறலாம். இக்கூற்றின் அடிப்படையில் முதல் இரண்டு சமூக நினைவுகளை ஆராய்வோம்.

முதல் நிகழ்வுடன் தொடர்புடைய தெய்வ வழிபாடு ஒன்றுள்ளது. மணியாச்சியில் இருந்து ஒட்டப்பிடாரம் செல்லும் சாலையில் உள்ள ஊர் பாறைக்குட்டம். இவ்வூரில் உள்ள அய்யன் செங்கமல உடையார் கோவிலைப் பாதுகாத்துப் பூசாரியாக இருப்பவர்கள் இடையர் சமூகத்தினர். இத்தெய்வத்திற்கும் இவர்களுக்கும் இடையே உள்ள உறவு மேற்கூறிய சமூக நினைவுடன் தொடர்புடையது.

இதன்படி இராமநாதபுரம் பகுதியிலிருந்து கால்நடையாகப் புறப்பட்டு வந்த கொண்டையங்கோட்டை மறவர்கள் இவ்வூரில் இரவு நேரத்தில் தங்கி ஓய்வெடுத்தார்கள். அவர்கள் புறப்பட்டு வரும்போது தம்முடன் தம் குலதெய்வமான சிலையையும் கொண்டு வந்திருந்தனர். அதற்குத் திருநீராட்டு செய்யப் பால் தேவைப்பட்டது. அவ்வூரிலுள்ள இடையர்களிடம் பால் கேட்டபோது அவர்கள் தர மறுத்துவிட்டனர். மறுநாள் அங்கிருந்து புறப்படும்போது அத்தெய்வத்தின் உருவச் சிலையைத் தூக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. சரி இது தெய்வத்தின் விருப்பம் போல என்று கருதி தம் பயணத்தைத் தொடர்ந்து இறுதியில் மறுகால்குறிச்சியில் குடியேறினர்.

அவர்கள் சென்றபின்னர், பாண்டியாபுரம் கிராமத்து ஆயர்களின் கால்நடைகள் இறந்து விழத் தொடங்கின. இது குறித்து அவர்கள் குறி கேட்டபோது, அய்யன் செங்கமல உடையார்க்குப் பால் கொடுக்காமையால் அத்தெய்வத்தின் கோபத்தால் கால்நடைகள் அழிகின்றன என்றறிந்தனர். அத்தெய்வத்தின் கோபத்தைத் தவிர்க்கும் வழிமுறையாக, அதை வழிபடத் தொடங்கினர். அதன்பின்னர் அவர்களது கால்நடைகள் அழிவிலிருந்து தப்பின.

மறுகால்குறிச்சியில் குடியேறிய கொண்டையங்கோட்டை மறவர்கள் தம் குலதெய்வத்தை மறக்கவில்லை. திருமண நிகழ்ச்சிக்கு முதல் வெற்றிலை பாக்கு வைத்தல், புதுமணப்பெண் உறவினர்களுடன் வந்து பொங்கலிடல் ஆகிய செயல்களின் வாயிலாக, குலதெய்வத்துடனான உறவை வெளிப்படுத்தி வருகின்றனர். நோய்த்தீர, வழக்குகளில் வெற்றிபெற, குடும்பச்சிக்கல்களில் இருந்து விடுபட இத்தெய்வத்தை வேண்டிக் கொண்டு அவ்வேண்டுதல் நிறைவேறினால் இங்கு வந்து விலங்கு உயிர்ப்பலி கொடுத்தல், பொங்கலிடல் ஆகிய சடங்குகளை மேற்கொள்கின்றனர். இங்கு குலதெய்வ வழிபாடு என்ற சமயச் சடங்கின் வாயிலாக கொண்டையங்கோட்டை மறவர்களின் இடப்பெயர்ச்சியும் அதற்கான காரணமும் சமூக நினைவாகத் தொடர்கின்றன.

இரண்டாவது சமூக நினைவை உறவுச்சொல் ஒன்று, இன்றும் மறக்கவிடாமல் வைத்துள்ளது. ஆப்பநாட்டு மறவர் தலைவரின் பெண்ணுக்கு திருமணம் செய்வித்த தன் வாயிலாக தந்தையின் கடமையை வேம்பார் பரதவர்களின் சாதித்தலைவர் செய்துள்ளார். இவ்வுதவியின் வாயிலாக, தம் குலமானத்தைக் காத்ததாக ஆப்பநாட்டு மறவர் சமூகம், இன்றளவும் கருதி வருகிறது. இதன் வெளிப்பாடாக ‘அப்பச்சி’ என்ற உறவுச் சொல்லால் வேம்பார் பரதவ சமூகத்தினரை அழைத்து வருகின்றனர்.

ஒரு சமூகத்தின் வரலாற்றில் நிகழ்ந்த நிலவுடமைக் கொடுமைகளைப் பெரும்பாலும் மரபுவழி வரலாற்றாவணங்கள் பதிவு செய்வதில்லை. ஆனால் மக்களின் சமூக நினைவுகள் அவற்றைப் பதிவு செய்து பாதுகாத்து வருகின்றன. ஆனால் ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு வகையில் இதைப் பாதுகாத்து வருகின்றது.

மறுகால்குறிச்சி மறவர்கள் தம் குலதெய்வ வழிபாட்டின் வாயிலாகவும், ஆப்ப நாட்டு மறவர்கள் ‘அப்பச்சி’ என்ற உறவுச் சொல்லின் வாயிலாகவும், ஜமீன்தாரின் பாலியல் வன்முறையிலிருந்து தம் மூதாதையர்கள் தப்பியதை நினைவில் கொள்ளுகின்றனர்.

தம் முன்னோர்களின் இடப்பெயர்ச்சி குறித்து வாய்மொழியாக வழங்கி வந்த மரபுச் செய்தியை பெரியநாயகம் பிள்ளை எழுத்தாவணமாக்கியுள்ளார். இது எழுத்து வடிவிலான வரலாற்றுத் தரவாக அமைந்து மேற்கூறிய சமூக நினைவுகளின் நம்பகத்தன்மைக்குச் சான்றாகிறது.

தனியொரு மனிதனுக்கு ஊரவர் வழங்கிய நிலக் கொடையைத் தெரிவிக்கும் மேற்கூறிய மூன்று செப்பேடுகளும், நிலக்கொடையை வழங்கியமைக்கான காரணத்தையும் பதிவு செய்துள்ளன. இதன் அடிப்படையில் மேற்கூறிய இரு சமூக நினைவுகளில் இடம்பெற்றுள்ள பாலியல் வன்முறை தொடர்பான செய்திகள், கற்பனையல்ல, நடைமுறை உண்மையே என்ற முடிவுக்கு நாம் வரமுடிகிறது.

நிலவுடமைச் சமூக அமைப்பில், பெண்ணின் உடல் மீதான வன்முறையானது, தன் சாதி, அயற்சாதி என்ற பாகுபாடில்லாமல் ’சிறை எடுத்தல்’, ‘பெண் கேட்டல்’ என்ற பெயர்களால் நிகழ்ந்துள்ளது. இவற்றையெல்லாம் பல்வேறு வடிவங்களில் சமூக நினைவுகளாக மக்கள் குழு காப்பாற்றி வருகிறது. இத்தகைய சமூக நினைவுகளை முறையாகச் சேகரித்து ஆராய்ந்தால், தமிழக நிலவுடமைக் கொடுமைகளின் ஒரு பகுதி வெளிப்படும்.

குறிப்பு

1.சில நேரங்களில் இதற்கு மாறான நிகழ்வுகளும் நிகழ்ந்துள்ளன. ஆயினும் இவை விதிவிலக்கான நிகழ்வுகளே.

2.கொண்டையங்கோட்டை மறவர்களிடம், ‘கொத்து’, ‘கிளை’ என்ற பிரிவுகள் உண்டு. இதனடிப்படையில் இவர்கள் உயர்வாகக் கருதப்படுகின்றனர்.

3. பெண்ணின் மானத்தைக் காப்பாற்றியவர்களைத் தந்தை என்று போற்றும் வழக்கம் இருந்துள்ளமைக்கு செப்பேட்டுச் சான்று ஒன்று உள்ளது. 1873ஆம் ஆண்டைச் சேர்ந்த இச்செப்பேடு கூறும் செய்தியின் சுருக்கம் வருமாறு: “கோம்பையில் வாழும் இடங்கையைச் சேர்ந்த ஐந்து ஜாதி ஆசாரிமார்கள் மற்றும் குடும்பன்மார்களின் பெண்களை வலங்கையார் சிறைபிடிக்க முனைந்தபோது பக்கிரிவா சேர்வை ராவுத்தர் என்பவர் அவர்களைத் தடுத்துப் பெண்களின் மானத்தைக் காப்பாற்றினார்.

இதற்கு நன்றிக் கடனாக அவருக்கு மானங்காத்த தகப்பன் என்ற சிறப்புப் பெயர் கொடுத்துச் சுருளி ஆற்றுப் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாழும் இவர்கள் அனைவரும் தங்கள் தலைவரான ஸ்ரீநவநீத கிருஷ்ண மேஸ்திரி ஆசாரி உத்தரவுப்படி தங்கள் கல்யாணங்கள் ஒவ்வொன்றுக்கும் 5 பணம் வீதமும் நவதான்யங்கள், அரிசி அஞ்சுபடியும் கொடுக்க இச்செப்புப்பட்டையம் எழுதித் தந்துள்ளனர்.” (ஸ்ரீதர், 2005 - 209) வலங்கையார் கூட்டமாக வந்த செய்தியை ‘வலங்கையார் குமுசல் கூடிப் பெண் சிரை(றை) பிடிக்க வந்ததில்’ என்று செப்பேடு குறிப்பிடுகிறது. பெண்களைக் கவர்ந்து செல்வதை ‘சிறை பிடித்தல்’ என்று குறிப்பிடும் பழக்கம் இருந்தமைக்கு இச்செப்பேட்டு வரியும் சான்றாகிறது.

தகவலாளர்கள்:
1.தோழர் கிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மறுகால் குறிச்சி.
2. திரு. தம்பி அய்யா பர்னாந்து, வேம்பாறு

துணை நூற்பட்டியல்:
இராமசாமி, அ., 1990. தமிழ்நாடு மாவட்ட விவரச் சுவடிகள், இராமநாதபுரம்.
இராசு, செ. (பதிப்பாசிரியர்), 1994. சேதுபதி செப்பேடுகள்.
பெரியநாயகம் பிள்ளை வாழ்க்கை வரலாறு (அச்சிடப்படாத கையெழுத்துப்படி)
ஸ்ரீதர், தி.ஸ்ரீ, (பதிப்பாசிரியர்) 2005. தமிழகச் செப்பேடுகள் , தொகுதி 1.

Peter Burke, 2003. History as Social Memory ‘Varieties of Cultural History’, Polity Press


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com