Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2007
பசி
புதுகை சஞ்சீவி

என்ன ஆனாலும் சரி. எனக்குச் சாப்பாடே வாங்கிக் கொடுப்பதில்லை’ என்று சத்தியம் செய்து விட்டு வந்திருப்பவனைப் போல் செயல்பட்டான் தியாகு. காலையிலிருந்து சாப்பாட்டை எதிர்பார்த்து எதிர்பார்த்து பசி அடங்கி வயிற்று வலி வந்துவிட்டது. மைக்கில் பேச முடியாமல் குரல் உடைந்து கொஞ்ச நேரத்தில் அழுகை வந்துவிடும் போலிருக்கிறது.

‘அப்படியென்ன மயிரு இவனோடக்காசு. செலவு பண்ணுனாக் கரைஞ்சா போயிரும்...’ தியாகுவின் மீதான கோபம் கொஞ்சங் கொஞ்சமாய் உச்சிக்கு ஏறியது. கையிலிருந்த மைக்கை வண்டிக்குள் வீசி எறிந்தேன். வரிசையாய் நெருக்கமாக ஒன்றன் மேல் ஒன்றாய் தக்காளிப் பெட்டிகள் அடுக்கியிருக்க, மேல் வரிசைப் பெட்டியில் ஓர் கனிந்த தக்காளியின் மீது மைக் விழுந்ததும், தக்காளி உடைந்து சாறு பீறிட்டது.

மினி வேன் போலிருக்கும் லோடு ஆட்டோவில், தக்காளிப் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு, கிராமம் கிராமமாய் சென்று மைக்கில் பேசி விற்போம். கன்னியாப்பட்டியில், பஞ்சாயத்து டி.வி. அறைக்கு முன்னால், அடர்ந்த புளியமர நிழலில் வண்டியை நிறுத்தி, வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். கீழே நின்று யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டிருந்தான் தியாகு. நேரெதிரே வடக்கு பார்த்த முகமாய் திருவிழாவின் போது நாடகம் நடத்துவதற்கான கலை அரங்கு மேடை இருந்தது. இடதுபக்கம் முள்கம்பி வேலி போட்ட சிறிய பள்ளிக்கூடம் விடுமுறையில் பூட்டிக் கிடந்தது.

இந்த மதியநேரத்திலும் இளைஞர்கள் கும்பலாய் டி.வி அறையில் உட்கார்ந்து திடீரென அமைதியைக் கிழித்து “ஸ்கோ” என்று கூச்சலிடுகிறார்கள். மற்ற நேரமாய் இருந்தால் வண்டியை விட்டிறங்கி “ஸ்கோர் என்ன?” என்று கேட்டுத் திரும்பியிருப்பேன். இப்போதிருக்கும் பசியில் அவர்கள் உற்சாகமாய் கத்துவது கூட எரிச்சலை ஏற்படுத்துகிறது.

எந்தத் திசையிலிருந்து வருகிறதென்றே புரியாமல் சில்வண்டுகளின் சப்தம் நாலாதிசையிலும் கேட்டது. என் தலைக்கு நேராக மரத்தின் மேலிருந்து, ஓர் காகம் கரைந்து கொண்டிருந்தது. “ச்சீ.. நீ இப்ப எந்த விருந்தாளிய அழைக்கிற?” என்று அதட்டியவாறே ஒரு சிறிய தக்காளியை எடுத்து மேலே வீசினேன். சடசடத்து பறந்தோடியது காகம்.

குளித்த ஈரம் காயாமல் முதுகெங்கும் கேசத்தைப் படரவிட்டிருந்த ஓர் பெண் சில்வர்ட தட்டில் குழம்பு சோற்றைப் பிசைந்தவாறே ஓர் சிறுவனுக்கு ஊட்டிவிட முயன்று கொண்டிருந்தாள். மேல்சட்டையின்றி அரக்கு டவுசர் மட்டும் போட்டிருந்த சிறுவன் “வேணாம் போ... வேணாம்போ...” என்று தலையை சாய்த்துக் சாய்த்து சொல்லிக் கொண்டிருந்தான்.

எங்கள் வண்டியருகே வந்து, வண்டியை தொட்டுப் பார்ப்பதிலும் தக்காளியை வேடிக்கை பார்ப்பதிலும் ஆர்வம் காட்டினான்.“நீ இப்பச் சாப்பிடல, இந்த தக்காளி மாமா ஒன்னெத் தூக்கிட்டுப் போயிரு வாரு” என்று சிறுவனை மிரட்டியவாறே கொஞ்சம் கொஞ்சமாய் சோறூட்டினாள்.

அந்தச் சாம்பாரின் வாசனை என் பசியை மேலும் கிளர்த்தியது. அவள் தட்டிலிருந்த பருப்புகளுடன் பிசைந்த சோற்றை உற்றுபார்த்தேன். நாக்கு ஒரு தடவை எச்சிலைக் கூட்டி விழுங்கியது.

முகமெல்லாம் சுருக்கமாக ஓர் கிழவி சேலை நுனியிலிருந்த முடிச்சை அவிழ்த்துக்கொண்டே பத்து ரூபாய்க்குத் தக்காளி கேட்டது. இருகைகளாலும் மொத்தமாய் அள்ளி தராசுத்தட்டில் போட்டேன். ‘யப்பா, யப்பா... ஒரு வாரத்துக்கு வச்சுக்கிறது காயாக் குடுப்பா..”என்று அவசரமாய்ச் சொன்னவாறே, குவிந்திருந்ததில் அரைக்காயாய்த் தெரிந்தவற்றை பொறுக்கத் துவங்கியது. “இந்தம்மா, எடும்மாக் கைய... பொறுக்கி வாங்குறதுனா கடைக்கு போ. காய், பழம், சிறிசு, பெருசு எல்லாம் கலந்துதான் வண்டியில் குடுப்போம்.” சட்டென்று வாடிப் போனது கிழவியின் முகம். “இப்ப என்னெக் கேட்டுட்டேன்னு இப்டிக் கோவிச்சுக்கிற, பாத்துப் போடுப்பா...” என்றது கெஞ்சலாய்.

மளிகைக்கடைகளில் பொறுக்கி எடுக்கச் சொல்லி, கிலோ பத்து ரூபாய்க்குத் தக்காளி விற்றால், நாங்கள் அப்படியே அள்ளிப் போட்டு அதே பத்துரூபாய்க்கு ரெண்டுகிலோ கொடுப்போம். எங்களிடம் மலிவு விலை என்பதால் கடைக்காரர்களுக்கு வியாபாரம் படுத்துவிடும். வாங்க வருபவர்கள் தான் எங்களிடம் கடையைப்போல பொறுக்கி எடுக்க நினைப்பதும், கடைக்குப் போகும்போது நாங்கள் கொடுக்கும் மலிவான விலைக்கே கேட்டு சண்டையிடுவதுமாய் குழம்பிப் போயிருக்கிறார்கள்.

புளியம் பூக்களின் வாசத்தையும் மீறி, கிழவியின் தலையிலிருந்து வேப்பெண்ணை வாடை வீசிக் கொண்டிருந்தது.‘ச்சே! நல்லா மணத்துக் கெடக்குது” என்று நான் நினைத்துக் கொண்டிருந்தபோது, அந்தக்கிழவி “மணி என்னப்பா?” என்று பவ்யமாய்க் கேட்டது. கடிகாரத்தைப் பார்த்தேன். பகீரென்றது. ‘மூணு மணியாச்சா? காலையிலயும் சாப்பாடு வாங்கித்தரல. இப்பவும் அதப்பத்தி அக்கறையே இல்லாம, இப்டி வங்கொலையாய் போட்டுக் கொல்றானே...’ என்று தியாகுவின் மீது கோபம் மூண்டது.

இங்கே வியாபாரத்தை முடித்ததும், வண்டியை நேராக உப்பிலிக்குடிக்கு விடச் சொல்ல வேண்டியதுதான். அங்கே ஓர் வீட்டின் திண்ணையில் மேஜைகளும் நாற்காலிகளும் போட்டு வாசல் புங்கை மரத்தில் ‘சாப்பாடு கிடைக்கும்’ போர்டு சனலில் கட்டித் தொங்கும். அதை விட்டால் இந்த லயனில் வேறு சாப்பாட்டுக் கடைகள் இல்லை.

ரொம்பநேரமாய் சம்மணம் போட்டு உட்கார்ந்து, வியாபாரம் பார்த்ததில், இடதுகால் மரத்துப் போய்விட்டது. எழுந்து நின்று காலை நன்றாக உதறியபோது உதட்டில் சோற்றுப் பருக்கை ஒட்டியிருந்த சிறுவன், தரையிலிருந்து எக்கியவாறு வண்டிக்குள் மெள்ளக் கை நீட்டி சிறிய தக்காளி ஒன்றை ஆசையுடன் எடுத்தான். ‘சின்னப் பய தானே.. போய்ட்டுப் போறான்’ என்று நினைத்து பார்க்காதது போல் பேசாதிருந்தேன். ஆனால் கீழே நின்றவாறு நான் வியாபாரம் செய்வதை கவனித்துக் கொண்டிருந்த தியாகு சரேலென பாய்ந்து வந்தான். சிறுவனின் கையிலிருந்த தக்காளியை வெடுக்கென்று பிடுங்கி வேகமாய் வண்டிக்குள் வீசினான்.

திடுக்கிட்ட சிறுவன் கச்சுக்கச்சென்று நான்கடி பின்னால் நகர்ந்தான். இடதுகையால் டவுசர் இடுப்புப் பட்டியை தூக்கிப் பிடித்துக் கொண்டே தியாகுவை நோக்கி வலதுகையை நீட்டியவாறு சத்தமாய்க் கத்தினான். “மண்டு, சனியனே...”
அவன் கத்தியதைக் கேட்டு, எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. கூடவே தியாகுவின்மீது எரிச்சலும் வந்தது. ‘கஞ்சப்பய, யாருக்கும் ஒண்ணு ஈயமாட்டான்.” சிறுவனின் தாயாரும் கோபத்தோடு தியாகுவை நோக்கிக் கத்தினாள். “பச்சப்புள்ள ஆசப்பட்டு ஒன்னெ எடுத்ததுக்கு, இப்டி வெடுக்குனு புடுங்குறீயே... நீயெல்லாம் மனுஷன்தானா? மொதல்ல வண்டியை எடுத்துக்கிட்டுப் போ இங்கேர்ந்து...”

தியாகு முன்னால் உட்கார்ந்து மேடு பள்ளமான மண்சாலையில்

குலுங்கக் குலுங்க வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறான். வாகனத்தின் நெற்றியில் கல்யாண வீடுகளில் கட்டுகிற குழாய் ஹாரன் முன்னோக்கி கட்டப்பட்டிருந்தது. நான்கைந்து முறை தொடர்ந்து ‘ஹாரன் அடித்தான். ‘ஏன்?’ என்று தெரிந்துகொள்ள எழுந்து நின்று பார்த்தேன். சற்றுதூரத்தில் வேலிக்கருவை மரங்களுக்கு ஊடாக தொகுப்பாய் சில வீடுகள் தெரிந்தன.

எங்கள் வியாபாரத்தில் வண்டி யோட்டுகிற டிரைவர் யாராகயிருந்தாலும் வீடுகளைக் கண்டால் ஹாரன் அடித்து ‘மைக்கில் பேசு’ என்று பின்னால் இருக்கும் வியாபாரிக்கு சமிக்ஞை செய்வது வழக்கம். நான் உப்பிலிக்குடியில் சாப்பிட்ட பிறகு வியாபாரம் பார்க்கலாம் என்ற முடிவில் இருந்ததால் தக்காளிச்சாறு பட்டு அழுக்கேறியிருந்த மைக்கைக் கையில் எடுத்து “போகட்டும், போகட்டும்...” என்றேன் அழுத்தமாய்.

வண்டி மண்ரோட்டிலிருந்து, தார் ரோட்டில் மேற்காகத் திரும்பி உப்பிலிக்குடி நோக்கி போய்க் கொண்டிருந்தது. காலை பத்துமணி வாக்கில் முத்துடையான்பட்டியிலேயே “சாப்பிடலாம்” என்று தியாகுவிடம் சொன்னபோது “அதுக்குள்ள என்னம்மா அவசரம்?” என்று சிரித்தவாறே கேட்டான். பிறகு காவேரிமில்லில் சாப்பாட்டை ஞாபகப்படுத்திய போதும் தட்டிக் கழித்தான்.

சந்தானம் அண்ணனிடம் நான் வியாபாரியாய் வேலைக்கு இருந்த போது இதே தியாகுவின் வண்டியை ரெகுலராக வாடகைக்கு எடுப்பார். சீசனுக்குத் தகுந்தாற்போல் மேச்சேரியிலிருந்தோ, அய்யலூரிலிருந்தோ, ஒட்டன்சத்திரத்திலிருந்தோ, ஒரு லாரி நிறைய தினமும் தக்காளிப் பெட்டிகள் அதிகாலையில் வரும். கொள்முதல் செய்யும் இடத்தில் விற்காமல் தங்கிப் போயிருக்கும், இருப்புத் தக்காளிகளை மிகக் குறைந்த விலையில் வாங்கி வருவார்.

அந்தத் தக்காளிகளை இரண்டு நாட்களுக்குள் விற்றாக வேண்டும். இல்லையேல் அழுகிப் போய்விடும். ஐந்தாறு லோடு ஆட்டோக்களை வாடகைக்குப் பிடித்து வண்டிக்கு ஐம்பது பெட்டிகள் வீதம் லோடுமேன்களை ஏற்றச் சொல்வார். மைக் செட், பேட்டரி வாடகைக்கு எடுத்துக் கொடுத்து, வண்டிக்கொரு வியாபாரியை தராசு படிக்கல்லோடு அனுப்புவார். வியாபாரம் செய்த மொத்தப் பணத்தையும் மீதத் தக்காளிகளையும் இரவில் அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

முன்பெல்லாம் நல்ல காவட்டான புத்தம் புதியத் தக்காளிகளை வாங்கி மார்க்கெட் வியாபாரிகளுக்கும் சந்தை வியாபாரிகளுக்கும் சப்ளை செய்து கொண்டிருந்தாராம். ஆனால் இருப்புத் தக்காளிகளை வாங்கி விற்க ஆரம்பித்த பிறகுதான் காம ராஜபுரத்தில் சொந்தமாய் வீடு வாங்கினார்என்று வியாபாரிகள் பேசிக் கொள்வாரிகள்.

இப்போதெல்லாம் இன்ன வியாபாரம் என்றில்லை. மீன், பழங்கள், காய்கறிகள், கருவாடு என்று எல்லா வியாபாரிகளும் வண்டி பிடித்துக் கொண்டு கிராமங்கள் நோக்கி போவது பேஷனாகி விட்டது. இந்த வியாபாரங்களுக்காக வாடகைக்கு வண்டியோட்ட வருகிற வண்டிக்காரர்கள் கொஞ்சநாட்களில் வியாபாரத்தின் நெளிவு சுளிவுகளையும் எந்தெந்த நேரத்தில் எந்தெந்த லயனுக்குப் போனால் நன்றாக ஓடும் என்பதையும் தெரிந்து கொள்கிறார்கள். பிறகு ‘நாமே சொந்தமாய் எடுத்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் போல’ என்று கணக்கிட்டவாறு தனித்தனியாய் சரக்கு வாங்கி ஒரு வியாபாரியை சம்பளத்திற்கு அமர்த்திக்கொண்டு, புறப்பட்டு விடுகிறார்கள். அப்படி வாடகைக்கு வண்டியோட்ட வந்த தியாகு தான் இன்றைக்கு சொந்தமாய் சரக்கு வாங்கி என்னை வியாபாரியாய் கூட்டி வந்திருக்கிறான்.

சந்தானம் அண்ணன் தனக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதையும் மறந்து பக்கத்து வீட்டுப் புவனாவே கதியென்று கிடக்கத் துவங்கிய பிறகு தான் அவருடைய தொழில் சரியத் துவங்கியது. ஆறுமாதத்திற்குள் முற்றிலும் வியாபாரத்தை இழந்து பித்துப் பிடித்த மாதிரி அவர்ட திரிந்த போது அவரிடம் இருந்த வியாபாரிகள் வருமானத்திற்குத் தடுமாறத் துவங்கினோம். தினமும் நூற்றியிருபது ரூபாய் சம்பளம் கொடுப்பார். அவருக்குத் தெரியாமல் குறைந்தது நூறுரூபாயாவது கைலியின் இடுப்பு மடிப்புக்குள் ஒளித்துவிடுவோம். தவிர எங்களுக்கும் டிரைவர்களுக்குமான டீ, சிகரெட், சாப்பாடு எல்லாச் செலவையும் அவர்ட கணக்கிலேயே சொல்லிவிடுவோம்.

வீட்டிலிருந்து கிளம்பும்போது என் பாக்கெட்டும் காலியாகவே இருந்ததால் தனியாக போய் சாப்பிட்டு வரவும் வழியில்லை. தியாகு தொடர்ந்து ஹாரன் அடித்துக் கொண்டிருக்க நிமிர்ந்து பார்த்தேன். உப்பிலிக்குடியின் முகப்பு வீடுகள் கண்களுக்கு தெரிந்தது. மைக்கில் பேசச் சொல்லி ஹாரன் அடிக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டாலும் முதலில் சாப்பிட்டு விடுவோம் என்று முடிவெடுத்தவனாக “போகட்டும், போகட்டும்...” என்றேன் மைக்கில்.

மூன்று ரோடுகள் பிரிகிற, வரிசையாய் கடைகள் இருக்கும் பஜாரை நெருங்கியதும் வண்டிக்குள்ளேயே எழுந்து நின்றேன். வாகனத்தின் வேகத்திற்கேற்ப முகத்தில் அறையும் காற்றை எதிர்த்துப் பார்வையை வீசினேன். ‘சாப்பாடு கிடைக்கும்’ என்ற போர்டு புங்கை மரத்தில் இல்லாதிருப்பதுபோல் தோன்றியது. அடிவயிற்றில் பரவும் திகிலோடு உற்றுப்பார்த்தேன். சாப்பாட்டுக் கடைவீட்டின் மரக் கதவின் தாழ்ப்பாளில் சில்வர்ட பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. போச்சுடா என்று தலையில் கை வைத்துக்கொண்டேன்.

இனி குளத்தூரோ கீரனூரோ போனால்தான் சாப்பாடு கிடைக்கும். இங்க வியாபாரத்தை முடிச்சு அடுத்துள்ள சின்னச்சின்ன ஊர்களைப் பார்த்து இளையாவயலைத் தாண்டி குளத்தூருக்கு எப்ப போய்ச் சேர்றது? என்ன செய்ய? என்ன செய்ய? என்று பரிதவித்தது மனசு. எந்த வியாபாரமும் வேணாம். நேரா கொளத்தூருக்கு போகச் சொல்லுவோம். சாப்பிட்ட பிறகு அங்கிட்டு ஏதாவது லயனைப் பிடிச்சுக்கலாம்.

வண்டியை முன்னால் நகர்த்தி பஜார் முடியும் கடைசிக் கடைக்கு சற்று தள்ளி நிறுத்திவிட்டு கீழிறங்கினான் தியாகு. “மைக்ல பேசும்மா” என்றான் திரும்பிப் பார்த்து. ‘வேண்டாம் மொதல்ல வண்டிய எடு” அவசரமாய்ச் சொன்னேன். புரியாமல் விழித்தவாறு கழுத்தில் கிடக்கும் தங்கச் செயினை விரல்களால் நெருடிக் கொண்டிருந்தான். பதட்டமாய் சொல்வதுபோல் சொன்னேன். “வர்ற வழியில் ரோட்ல அங்கங்க ஒவ்வொரு தக்காளியாக் கெடந்துச்சு. நமக்கு முன்னால ஏதோ வண்டி யாவாரம் பாத்துகிட்டுப் போயிருக்குன்னு நெனைக்கிறேன். நேரா குளத்தூரு போ. அங்கேர்ந்து வேற லயன மாத்திக்குவோம். இல்லைன்னா இன்னைக்கு வியாபாரம் போச்சு.”

திடுக்கிட்டு வேகமாய் முன்னால் ஓடிய தியாகு அவசரமாய் ‘ஸ்டாரிட்’ செய்தான். சீறிக்கொண்டு புறப்பட்டது வண்டி. ‘வியாபாரம் போயிரும்னு சொன்னதும் என்னமாய் பறக்குறான்’ என்று நினைத்துக் கொண்டேன். ‘அவன் காசுன்னாப் பறப்பான்யா...’ என்று நண்பர்கள் சொல்வது ஞாபகத்தில் வந்தது.

குளத்தூரில் குஸ்கா கடைகள் மட்டும்தான். அதையும் தாண்டி ரெண்டு கிலோமீட்டர் தூரத்தில் கீரனூர் போனால் விதவிதமான ஓட்டல்கள் இருக்கும். ஒரு சாப்பாடு இருபது ரூபான்னா சைவமா சாப்பிட்டாலும் ரெண்டு பேருக்கு நாற்பது போயிருமே என்று கணக்குப் பார்ப்பவன் தியாகு என்பதால் குளத்தூரில் சிம்பிளாக அரைவயிற்றுக்கு ஒரே யொரு குஸ்கா மட்டும் சாப்பிட்டுக் கொள்வதென்று முடிவெடுத்தேன்.

இளையா வயலைக் கடந்து, திருச்சி ரோட்டில் வடக்காகத் திரும்பி குளத்தூர் நோக்கி வண்டி போய்க் கொண்டிருந்தது. இருபக்கமும் வரிசையான புளிய மரங்கள் சாலை யில் இடைவெளி விட்டுவிட்டு நிழலை விரித்திருந்தது. வண்டியின் வேகம் குறைந்து ஊர்வதுபோல மெள்ள போய்க்கொண்டிருக்க ‘என்னாச்சு?’ என்று பார்ப்பதற்காக முன்பக்கம் எட்டிப் பார்த்தேன்.

பால்குடம் சுமந்தபடி கூட்டமாய் பலர் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.“முத்துமாரி அம்மனுக்கு” என்று சத்தமாய் கத்திக்கொண்டே வர அதைத் தொடர்ந்து “அரோகரா..” என்கிற வார்த்தை கோரசாய் எழுந்து அடங்கியது. நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்து கொண்டிருப்பது ஞாபகம் வந்தது. ஒரு வாரத்திற்கு சுற்றுப்பட்டு ஊரெல்லாம் விசேஷமாக இருக்கும் என்று நினைத்தபோதே இன்று எல்லாத் தக்காளியும் விற்றுக் காலியாகி விடும் என்ற நம்பிக்கை வந்தது. குளத்தூருக்கு முன்பாக பாலக் கட்டையருகே இடதுபக்கம் பிரிகிற ஒடுக்கூர் ரோட்டில் வண்டி திரும்பிக் கொண்டிருந்தபோது திடுக்கிட்டேன்.

குளத்தூருக்கு சாப்பிடப் போகாமல், இங்கிட்டு ஏன் திரும்புகிறான் என்று அவசரமாய் மைக்கை கையில் எடுத்து ‘யேய், வண்டிய நிறுத்துப்பா...’ என்று கத்தப்போனேன். அப்போது எதிரே வந்த வெள்ளை ஜீப்பைப் பார்த்ததும் சடக்கென மைக்கிலிருந்த கருப்பு சுவிட்சை நகத்தால் இழுத்து ஆஃப் செய்தேன். ஜீப்பின் முகப்புக் கண்ணாடிக்கு மேல் சிவப்புநிறத்தில் ‘காவல்’ என்று எழுதியிருந்தது.

வண்டியில் மைக் செட் கட்டி விளம்பரம் செய்ய போலீஸ் பர்மிஷன் வாங்கவேண்டும். எங்களைப் போன்ற வியாபாரிகள் எல்லாம் பர்மிஷன் இல்லாமலேயே வியாபாரம் செய்வதால் போலீஸ் காரர்களைப் பார்த்தால் மைக்கை ஆஃப் செய்து விடுவோம். சில நேரங்களில் இருபதோ, ஐம்பதோ கொடுத்துவிட்டு தப்பித்துப் போவதும் உண்டு.

மைக்கைக் கீழே போட்டுவிட்டு, “நிக்கட்டும் நிக்கட்டும்....” என்று சத்தமாய்க் கத்தினேன். தலையை வெளியே நீட்டி “என்னம்மா?” என்று கேட்டவாறே அடி பைப்புக்கு அருகே வண்டியை ஒரங்கட்டினான் தியாகு. கீழே குதித்து அவனிடம் காட்டமாய்க் கேட்டேன். “ஏன் வண்டிய இதுலத் திருப்புன?”. “இந்த லயன் நல்லா ஓடும்னு நீதானே அடிக்கடி சொல்லுவ”. “மண்ணாங்கட்டி, மொதல்ல கொளத்தூர் போ. சாப்ட்டு அப்றம் வரலாம்.”

முகத்தில் எந்தச் சலனமும் இல்லாமல் மணியைப் பார்த்தான். பிறகு வலுக்கட்டாயமாய் வரவழைத்துக்கொண்ட சிரிப்புடன் சொன்னான்.“ஹே.. மணி நாலாகப் போகுது. இதானே வியாபார நேரம். இப்பப்போயி சாப்பிடக்கூப்பிடுற..”

தியாகு ஆட்காட்டி விரலால் கடை வாய்ப் பல்லுக்கு மேல் ஈறுகளில் ஒட்டியிருந்த எதையோ வழித்து விரலைச் சப்பினான். பிஸ்கட் வாசம் மிதந்து வந்தது. யதார்த்தமாய் வண்டிக்குள் பார்வையைத் திருப்பினேன். சுவிட்சுகள் இருக்கும் டேஸ் போர்டுக்கு மேல் மூன்றுரூபாய் டைகர்டி பிஸ்கட்டின் சிவப்பு பேப்பர் பிரிக்கப்பட்டு, பிஸ்கட்டுகள் ஒன்றன் மேல் ஒன்றாய் சரிந்து கிடந்தன. ‘என்னைப் பட்டினி போட்டுக் கொன்னுட்டு இவன் பசிக்கு தனியா பிஸ்கட் வாங்கித் தின்னுக்குறானா?’ என்னுள் மூர்க்கமாய் எழுந்தது கோபம். ‘போடா, நீயுமாச்சு ஒன் வேலயுமாச்சு. மரியாதெயா பஸ்சுக்கு பத்துரூபா குடு. நா வீட்டுக்குப் போறேன்..” என்று கத்தவேண்டும் போல் தோன்றியது.

வீட்டை பற்றி நினைத்த அடுத்த கணம் காலையில் புறப்பட்ட போது மலர்ச்சியாய் பிரகாசித்த அவள் முகம் ஞாபகத்தில் வந்தது. நான் கொஞ்சநாட்களாய் வேலைக்குப் போகாமல் சும்மாயிருக்கத் துவங்கிய போது அரிசி வாங்கவோ பிள்ளைக்குப் பிஸ்கட் வாங்கவோ காசு கேட்பதற்காக அவள் தயங்கித் தயங்கி நிற்பது என் மனசை ரம்பமாய் அறுத்துக் கொண்டிருந்தது.

இன்று காலை தியாகு வீட்டிற்கு வந்து “வியாபாரத்திற்கு வா...” என்று என்னைக் கூப்பிட்டபோது அவள் முகத்தில் ஜொலித்த பிரகாசம் மனதில் புகைப்படமாய் தங்கி விட்டது. ‘இவன் கஞ்சப் பயல், சரியான சம்பளம் தரமாட்டான்’ என்றெல்லாம் மனதில் இருந்தாலும்கூட சும்மா இருப்பதற்கு இதுவேப் பெருசு என்றுதான் வந்திருந்தேன்.

இப்பப் போய் போடா நீயுமாச்சு உன் வியாபாரமும் ஆச்சுன்னு சொல்லிட்டு பஸ்சுக்கு மட்டும் காசு வாங்கிப் போறதா...? முன்னாலயல்லாம் வியாபாரம் முடிஞ்சிப் போகும்போது ராஜாவுக்காக கொஞ்சம் ஜீனி வச்சு ரெண்டு புரோட்டா வாங்கிப் போவது வழக்கம். தூங்கிக்கிட்டிருந்தாக்கூட எந்திரிச்சு அரைத்தூக்கதிலேயே ஆசைஆசையாய்த் தின்பான். காலையில் புறப்படும்போது “டாட்டாப்பா. டாட்டாப்பா...” என்று கையாட்டினான். இப்போ, போனதும் எதிர்பார்ப்பானே!.

மனதை திடப்படுத்திக்கொண்டு வண்டியில் ஏறினேன். தராசுக்குப் பக்கத்தில் கிடந்த மைக்கை எடுத்து கரகரப்பானக் குரலில் பேசத் துவங்கினேன். “தக்காளி வாகனம் முன்னால வருது பாருங்க... வேணுங்கிற வங்ககையக் காட்டுனா வண்டி நிக்கும். ரெண்டுகிலோ பத்து ரூபா”

என் அப்பாவும் அம்மாவும் பெருமாள் கோயில் மார்க்கெட்டில் மிகப் பெரிய காய்கறிக்கடை வைத்திருக் கிறார்கள். மொத்தம், சில்லரை வியாபாரத்தில் எஸ்.என்.ஆர். காய்கறிக்கடை என்றால் புதுக் கோட்டையில் வெகு பிரசித்தம். பணப்புழக்கத்திற்கு பஞ்சமே இருந்ததில்லை. என்னிடம் “ஒனக்கு அவ வேணுமா? நாங்க வேணுமா?” என்று அப்பா தீர்மானமாய்க் கேட்ட பிறகுதான் நான் வீட்டை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. அவளும் எல்லோரையும் பகைத்துக்கொண்டு வந்திருந்தாள்.

சந்தானம் அண்ணனிடம் வியாபாரியாய் இருந்தவரைக்கும் பெரிய கஷ்டம் ஒன்றும் எங்களுக்கு வந்துவிடவில்லை. அவளும் நானும் எளிமையாகவும் சந்தோஷமாகவும் தான் இருந்தோம்.

ஒரு ரெண்டாயிரமோ மூவாயிரமோ புரட்டிக்கொண்டு நானே சொந்தமா தக்காளி வாங்கி ஒரு வண்டியை வாடகைக்குப் பிடித்து லயன் வியாபாரத்திற்குப் போனால் நன்றாக சம்பாதிக்கலாம் என்று தோன்றியது. வியாபாரத்திற்குத் தேவையான முதலீட்டிற்காக அவள் மகளிர் சுய உதவிக்குழுவில் சேர்ந்து ஐந்தாயிரம் ரூபாய் கடனாக வாங்கித் தருவதாக சொல்லியிருக்கிறாள். இந்த செவ்வாய் அடுத்த செவ்வாய் என்று இன்னும் தராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வண்டி ஒடுக்கூரை நெருங்கிக் கொண்டிருந்தது. தியாகுவின் மீதான தொடர் கோபத்தில் மனச்சோர்வும் தலைவலியும் ஏற்பட வியாபாரம் செய்ய ஆர்வமே இல்லாமல் ஒப்புக்கு மைக்கில் பேசிக் கொண்டிருந்தேன்.

ஒடுக்கூர் மிகப்பெரிய பஜார் எல்லாம் கிடையாது. ஒரு டீக்கடை இரண்டு மளிகைக் கடை. ஒரு எஸ்.டி.டி. பூத். மொத்தம் நான் கைந்து கடைகளே இருந்தன. பழைய சைக்கிளில் வந்த ஒருவர் பத்துரூபாய்க்கு தக்காளி கேட்டார்.

ஒடுக்கூரில் வியாபாரத்தை முடித்து விளாப்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். ஓர்வளைவில் வண்டியை நிறுத்தச் சொல்லி வேலிக்கருவை மரத்தின் ஒரமாய் ஒண்ணுக்குப் போனேன். அதீத மஞ்சள் நிறம். வெளியேற வெளியேற சுளீரென்ற வலி. காலையிலிருந்து மொட்டை வெயிலில் உட்கார்ந்திருந்ததால் வந்த நீர்க் கடுப்பு. திரும்பியபோது மறுபடியும் ஒண்ணுக்கு வருவது போலிருந்தது. வலிக்குப் பயந்து அடக்கிக் கொண்டேன்.

விளாப்பட்டியில் நுழையும்போதே தயாராய் பெண்கள் வாசல்களில் நின்றிருந்தார்கள். இருபக்கமும் வரிசையான வீடுகளுடன் நீள மண்சாலை. ஒரே தெரு. அவ்வளவுதான் ஊர். மொதுமொதுவென சூழ்ந்து விட்டது கூட்டம். முறம், ஒயர் கூடை, கடகாப்பெட்டி, அலுமினியச் சட்டி என ஆளாளுக்கு கையில் கொண்டு வந்திருந்தார்கள். இவ்வளவு கூட்டம் வரும் என்று தெரிந்திருந்தால் ஊருக்கு முன்பாகவே வண்டியை நிறுத்தி ஒரு பட்றைத் தக்காளியை ரெடி பண்ணிவிட்டு வந்திருக்கலாம்.

லயன் வியாபாரத்திற்கு இருப்புத் தக்காளிதான் அதிகம் வாங்குவோம் என்பதால் அழுகலும், உடைந்ததும் நிறைய இருக்கும். அதை ஒவ்வொன்றாய் பொறுக்கி ரோட்டோரம் வீசுவோம்.

ஊருக்குள் வண்டியை நிறுத்தி ஆட்களுக்கு மத்தியில் இப்படியெல்லாம் அழுகலையும் உடைசலையும் பொறுக்கிக் கொண்டிருந்தால் ‘அய்யய்ய.. இது நல்லத் தக்காளி இல்ல...’ என்று சொல்லி வாங்க மாட்டார்கள். அதனால் ஒரு பட்றை முடிகிற தருவாயில் வீடுகளற்ற இடத்தில் வண்டியை நிறுத்தி அடுத்ததை தயார் செய்துகொண்டு மறு ஊருக்குள் நுழைவது வழக்கம்.

விளாப்பட்டியில் தக்காளி விறுவிறுவெனக் காலியாகிவிட்டது. தியாகு அவசரமாய் மேலேறி பொடியான நாட்டுத் தக்காளி அடுக்கியிருந்த பெட்டியைத் தூக்கி சாக்கு மேல் கொட்டப் போனான். அவசரமாய் கை நீட்டித் தடுத்தேன். நாட்டுத் தக்காளி பார்க்க அழகாய் இருக்கும். குழம்பு வைக்கும்போது மிகுந்த சுவையாயும் இருக்கும். ஆனால் பெட்டியைக் கொட்டினால் உள்ளே ஒட்டை உடைசல் நிறைய இருக்கும். அதைப் பொறுக்கி எடுப்பதற் குள் கூட்டம் முகஞ்சுளித்துக் கலைந்துவிடும் என்பதால் முன் வரிசையில் அடுக்கியிருந்த ‘916’ தக்காளிப் பெட்டியைத் தூக்கச் சொன்னேன்.

அது பெரிது பெரிதாய் கவர்ச்சியாய் இருக்கும். வெந்து கரையாமல் கறித் துண்டம் மாதிரி அப்படியே குழம்பில் கிடக்கும். வியாபாரிகளுக்கு மட்டுமே இதன்பெயர் 916. வாங்குகிற மக்கள் ஆந்திராத் தக்காளி என்றோ ஆப்பிள் தக்காளி என்றோ சொல்வார்கள். இரவு ஏழுமணியாகி விட்டது. எல்லா தக்காளிப்பெட்டிகளும் காலியாகி இருக்க வண்டி கீரனூரில் நுழைந்து பிரதான சாலையில் புதுக்கோட்டை நோக்கி போய்க் கொண்டிருந்தது.

வண்டியை ஓரங்கட்டத் தோதான இடம் தேடிக்கொண்டே மெதுவாக ஒட்டிக் கொண்டிருந்தான். ‘லெட்சுமி தியேட்டர்ட அருகே போய்விட்டால் வண்டியை நிறுத்தவும் இடம் இருக்கும். சாப்பிடவும் கடை இருக்கும்’ என்று நினைத்துச் கொண்டேன்.

தேரடி வீதி முக்கத்தைப் தாண்டியதும் இடது பக்க ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் ரோட்டுக்குத் தெரிந்தார்கள். வலது பக்கம் உயரமான படிகளுடன் வேறொரு ஒட்டல் தெரிந்தது.

பஸ் ஸ்டாப்புக்கு முன்பாகவே ரோட்டை விட்டு வண்டியை இறக்கி மண்தரையில் நிறுத்தினான் தியாகு. ஓட்டலின் திண்ணையில் வலதுபக்கம் டீ பாய்லரும் கையை உயரத் தூக்கி டீ ஆற்றுபவரும் தெரிந்தனர். இடதுபக்க சிமிண்டுத் திட்டில் பெரிய ஸ்டவ்வில் கொதிக்கும் எண்ணெயில் மிதக்கும் பஜ்ஜிகள் சிவப்பாய் தெரிந்தன. வாசலில் நான்கைந்து பேர் கையில் சிறிய பிளாஸ்டிக் தட்டுகளை ஏந்தி பஜ்ஜியை பிய்த்து தின்று கொண்டிருந்தார்கள்.

நடுவில் நுழைந்து கல்லாவைக் கடந்து உள்ளே போனால் வரிசையான மேஜைகளில் இட்லி தோசை என ஆளாளுக்குச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சாம்பாரின் வாசமும், குருமாவின் வாசமும் போட்டிபோட்டு என்னை வரவேற்க மிகுந்த ஆவலோடு கை கழுவுமிடம் சென்றேன். பைப்பைத் திருகி கையைத் தேய்த்துக் கழுவினேன். அழுக்கு கரைந்து நீர் கருப்பு நிறமாய் பேஷினில் ஓடியது. இட்லி சாப்பிடலாமா? புரோட்டா சாப்பிட லாமா? என்று யோசித்துக் கொண்டே திரும்பியபோது தியாகுவைக் காணவில்லை. கைலி நுனியை தூக்கி கையைத் துடைத்துக் கொண்டே அவனைத் தேடி வெளியில் வந்தேன்.

வாசலில் என்னை மறித்து “இந்தாம்மா” என்று கையை நீட்டினான் தியாகு. அவன் கையில் வட்டமான சிறிய பிளாஸ்டிக் தட்டு இருந்தது. அதிலிருந்த இரண்டு பஜ்ஜிகளின் ஓரங்களிலும், நீள் கோடாய் வாழைக்காய் தோல் தெரிந்தது. ராஸ்கல். வெறும் பஜ்ஜிய வாங்கித் தர்றான். மரியாதயா சாப்பாடு வாங்கித் தரப்போறீயா இல்லையான்னுக் கேட்டுச் சண்டை போடலாமா? என்று பரபரத்தது மனசு.

இன்னொரு பக்கம் சோத்துக்காகவா சண்டையிடுவது என்று வெட்கமாகவும் இருந்தது. இன்னும் அரைமணி நேரத்தில் புதுக்கோட்டை போய்விடுவோம். அங்கே போனதும் கூலிய வாங்கி நம் இஷ்டத்துக்கு சாப்பிட்டுக் கொள்ளலாம்.

தேங்காய் சட்னியில் நனைத்த பஜ்ஜி காரமாக இருந்தது. விரல்களில் பரவும் சூட்டுடன் கடமைக்கு முழுங்கினேன். டீ குடித்துவிட்டு அவன் வாங்கித் தந்த கோல்டு பில்டரை ஆழமாய் இழுத்தவாறு வண்டிக்குத் திரும்பினேன்.

ஆளுக்கு ரெண்டு பஜ்ஜி, டீ, சிகரெட்னு பதினாறு ரூபாய் செலவாகி இருந்தது. ‘லூசுப்பய, சிக்கனம் பண்றேன்னு உயிர எடுக்குறான். கூட நாலுரூபா போட்டு ஆளுக்கு பத்து ரூவாக்கி புரோட்டா தின்னிருந்தா வயிறு நெறஞ்சிருக்கும்.

இன்னைக்கு எவ்வளவு கூலி குடுப்பான் என்று மனசு அலை பாய்ந்தது. சந்தானம் அண்ணன் நூத்தி இருபது கொடுப்பார். அவருக்குத் தெரியாமல் செலவுக்கு கொஞ்சம் சுருட்டிக் கொள்வேன். இவனோ கூடவே இருந்து விற்ற காசுகளை உடனுக்குடன் வாங்கிக்கொண்டே இருந்தான். நூறுரூபாய் கொடுப்பானா? அவ்வளவுக்கு மனசு வராவிட்டால் எண்பதாவது கொடுப்பான் என்று தோன்றியது.

வேலைக்கு போகாவிட்டாலும் தினமும் தக்காளியின் மார்க்கெட் நிலவரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டுதான் இருந்தேன். தியாகுவிடம் இன்னைக்குப் பெட்டி விலை எவ்வளவு என்று காலையில் கேட்டபோது அவன் சொல்லவே இல்லை. இந்த ஒரு வாரமாகவே பெட்டி முப்பத்தஞ்சு, நாற்பது ரூபாய்க்குத்தான் போய்க் கொண்டி ருக்கிறது. பதினைஞ்சு கிலோ பெட்டியில் இரண்டுகிலோ சேதாரம் போனாலும் அறுபத்தஞ்சு ரூபாய்க்கு வித்திருக்கும்.

இன்னிக்கு மொத்தம் ஐம்பது பெட்டி ஓடியிருக்கும். பெட்டிக்கு இருபத்தஞ்சு ரூபா லாபம்னாலும் மொத்தம் ஆயிரத்தி இருநூறு ரூவாக்கிட்ட கெடச்சிருக்கும். சொந்த வண்டியா இருந்தாலும் வாடகைன்னு நானூற்றி ஐம்பது, டீசலுக்கு இருநூறு, மைக்செட் வாடகை நூறு, எல்லாச் செலவும் போக நானூறோ, ஐநூறோ இவனுக்குத் தனியாக நிக்கும்.

“என்னம்மா... ஒன்னுமே பேசாம வர்ற?” என்று கேட்டான் தியாகு. “ப்ச்...”. “சாப்பிடறீயா...”. சாப்பாடு வாங்கித் தர்ற மூஞ்சியப் பாரு. கடையை எல்லாம் விட்டுப்புட்டு நடுக்காட்டுக்குள்ள வந்துச் சாப்பிடறீயாவாம். பேசாமல் இருந்தேன். சற்றுநேர மௌனத்திற்குப் பிறகு அவனாகவே சொன்னான். “இன்னிக்கு வியாபாரத்துல ரொம்ப நட்டம்மா...”. ஒனக்கு எவ்வளவு லாபம்னு எனக்குத் தெரியாதாக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

புதுக்கோட்டையில் நுழைவதற்குள் நான்கைந்து தடவை, “இன்னைக்கு நட்டம், நட்டம்” என்று சொல்லிக் கொண்டே வந்தான் தியாகு. நைனாரிகுளத்தைக் கடந்து, எங்கள் தெருவில் வண்டி திரும்பும்போது எட்டு மணியாகி விட்டது. ரோடு முழுவதும் மெழுகிய ஹெட்லைட் வெளிச்சம் வீட்டு வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்த பெண்களை திரும்பிப் பார்க்க வைத்தது. என் சட்டையிலிருந்து கசகசவென்று வியர்வை நாற்றம். வீட்டுக்குப் போனதும் முதலில் சட்டையைக் கழற்றி வீசிவிட்டு கை கால்களைக் கழுவ வேண்டும்.

இரண்டு தந்திக் கம்பங்களைக் கடந்து வீடு வாடகைக்கு கிடைக்கும் என்ற போர்டு தொங்கிய வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தினான் தியாகு. அந்த வீட்டின் ஒடுங்கிய சந்துக்குள் நுழைந்து பின்பக்கம் போனால் வரிசையாய் ஐந்து வீடுகள் இருக்கும். அதில் கடைசி வீடு எனது. அதுதான் சிறியதாகவும் வாடகை குறைவாகவும் இருக்கும். வண்டியை விட்டுக் கிழிறங்கினேன்.

“நாளைக்கு எனக்கு வேலையிருக்கு. வியாபாரத்துக்கு வரமாட்டேன். நாளைக் கழிச்சி வந்துக் கூட்டிப் போறேன்.” என்று ஸ்டேரிங்கைப் பிடித்தவாறு தியாகு சொல்லிக் கொண்டிருந்தான். வண்டியைச் சுற்றி அவன் பக்கம் போனேன்.

“அப்பா...” என்று கத்திக் கொண்டே பாய்ச்சலாய் ஓடி வந்த ராஜா கால்களை இறுக்கி அணைத்துக் கட்டிக்கொண்டான். அவன் தலையை ஆதரவுடன் தடவிக் கொடுத்தேன்.

“சரிம்மா நா பொறப்படட்டா..” என்று கேட்ட தியாகுவை அவசரமாய் நிமிர்ந்து பார்த்தேன். கூலியே குடுக்காமப் போறேங்கிறான். என் முகக்குறிப்பை உணர்ந்த தியாகு வருத்தப்படும் பாவனையில் சொன்னான் “இன்னிக்கு வியாபாரத்தில் ரொம்ப நட்டம்மா. நாளைக் கழிச்சி சேத்துத் தர்றேன்.”

‘அய்யய்யோ’ என்று பதறியது மனசு. கூலியை மொட்டையடிக்கத்தான் நட்டம் நட்டம்னு நாடகம் போட்டானா? இப்பவே ஏதாச்சும் கறந்தாத்தான் உண்டு. நாளைக் கழிச் சுன்னா அவ்வளவுதான். சல்லிக்காசு பேறாது இவன்ட்ட... என்றெல்லாம் யோசித்தவாறு கெஞ்சலாய்ச் சொன்னேன். “வீட்ல ரொம்ப தடுமாட்டமா இருக்கு. இன்னக்கி கூலியக் குடுத்துட்டுப் போ...”

“அதான் நட்டம்னுச் சொல்றேன்ல. அப்றம் வாங்கிக்கலாம்.” உறுதியாய்ச் சொன்னான். “இந்தப் பயலுக்கு சாப்பாடு வாங்கக்கூட காசில்லை. குடுத்துட்டுப் போய்யா”

சட்டென்று கோபம் வந்துவிட்டது அவனுக்கு. முறைத்தவாறு என்னை நோக்கிக் கத்தினான். “நீ எப்பப் பாத்தாலும் இப்படித்தாய்யா... காசுலேக் குறியா இருப்ப. நா, ஒன்கு எவ்ளோ செஞ்சிருக்கேன். இன்னிக்கு ஒரு நாள் நட்டமாப் போச்சு. அப்றம் வாங்கிக்கலாம்னா பெருசாப் பீத்துற..”
திகைத்துப் போனேன். இவன் என்னத்த செஞ்சுட்டான் நமக்கு என்ற கேள்வி மனதைக் குடைந்தாலும் இவன் கத்துவதை யாரும் பார்த்துவிட்டால் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று பயமாகவும் இருந்தது. தியாகு புறப்படத் தயாரானான். என்ன செய்வதென்று புரியாமல் நான் தவித்து நின்றிருந்தபோது அவன் கியரைத் தட்டிக்கொண்டே தலையை வெளியே நீட்டிச் சொன்னான். “ஆங்... ஒரு விசயம் சொல்ல மறந்துட்டேனே. ... நாளைக்கு எங்கக் குடும்பம் சார்பா நார்த்தா மலையில் அன்னதானம் போடுறோம் அவசியம் வந்துரும்மா...”

செஞ்ச வேலைக்கு கூலி தராம இழுக்கடிச்சிட்டு அன்னதானம் பண்ணி புண்ணியம் தேடப் போறானோ? பாய்ந்து அவன் சட்டையை கொத்தாகப் பற்றி இறுக்கிப் பிடித்தவாறு சொன்னேன்: “மரியாதெயா, எ... கூலிய வச்சிட்டுப் போடா...”


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com