Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2007
சனிப்பொணம்
தஞ்சை சாம்பான்

பாவிப்பய மவோ என்ன பாவம் செஞ்சாளோ எமே இந்த அட மழ காலத்திலே ஏட்டே எடுத்து பாத்திருக்கான். ஆங்காரம் தீர அடிச்சி அழுவக்கூட முடியாம போகுது என்று சாவு வீட்டிலிருந்த பெண்கள் பேசிக்கொண்டார்கள். தெருவாசிகள் அவரவர் வீடுகளில் இருந்த மரம் மட்டைகளைக் கொண்டாந்து பந்தல் போட்டாலும், மழை ஆங்காங்கே சொட்டிக் கொண்டேயிருந்தது. எலே, ஈரம் இல்லாத எடத்தில ரண்டு செத்த செருவே போட்டு நெருப்பே மூட்டி தப்பக் காச்சி, ஒரு பாட்டம் அடிச்சி நிறுத்துங்கய்யா. சாவுக்கட (துக்கவீடு) ஒத்தக் குரலு கேட்கக்கூடாது என்றார் ஒரு பெரியவர். எலே, எந்த ஊருக்கு ஆளு அனுப்பனுமோ அனுப்பியுடு. போறவிங்ககிட்ட சொந்தம் சொலிய வுட்டுடாமே சொல்லிவுடு. நாளைக்குப் பொழுதிருக்க எடுத்துற வேண்டியதுதான் என்று இறந்து போனவரின் மகனிடம் தெரு முக்கியஸ்தர்கள் கூறினார்கள்.

ஏண்ணோ, நீ போயி வூட்டுல சோறு தின்னுப்புட்டு படுணா. நீ காயலாகாரன் என்றார் மாட்டாண்டி பேரன். ஏ தம்பி நீயும் வாடா, ஆளுக்கு இரண்டு வா சாப்புட்டு வந்துடலாம் என்று விருந்தாடி வந்தவர் கூறவே, இருவரும் சாப்பிடச் சென்றனர். சாப்பாட்டை முடித்தவுடன், தம்பி ஒரு காரூவா காசு இருந்தா குடுடா கடப்பக்கம் போயிட்டு வாரேன் என்றார் பெரியம்மா மகன். அவரின் நோக்கத்தைப் புரிந்த மாட்டாண்டி பேரன், மேலாண்ட பக்கத்து மாடக்குழியில காசு காரூவா கிடக்கு, அதை எடுத்து அண்ணன்கிட்ட கொடு ஆயா என்றார் தாயிடம். எண்ணா நான் சாவு கடையில போயி செத்த ஒக்காந்துட்டு வாறேன். நீ எரவாணத்தில சொருவியிருக்கிற சாக்கை எடுத்துப்போட்டு படுண்ணா என்றபடி சாவு வீட்டுப் பக்கம் மாட்டாண்டி பேரன் சென்றார்.

கடைக்குச் சென்ற விருந்தாளி பீடிக்கட்டும், தீப்பெட்டியும் வாங்கிக்கொண்டு திரும்பும்போது மழை தூறவே அங்கிருந்த வீட்டோரம் ஒதுங்கி ஒரு பீடியை பற்றவைத்து ஆசைத் தீர இழுத்தார். கடும் இருமல் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள், மழைக்கு ஒதுங்கிய யாரோ ஒருத்தர் பீடி குடிக்கிறார் என்று போய்விட்டார்கள்.

சிறிதுநேரம் கழித்து எழவு வீட்டிற்கு சென்ற மாட்டாண்டி பேரன் வீடு வந்து பார்த்தபோது சாக்கு விரிப்பு மட்டும் கிடந்தது. பெரியம்மா மகனைக் காணவில்லை. அண்ணன் வந்துச்சா என அம்மாவிடம் கேட்டார். இல்லடா காசு வாங்கிக்கிட்டு போனவன்தான், இங்க வரலியே. நான் ஒன்னோடதான் வந்திருப்பான்லே இருக்கேன் என்று அம்மா கூறவே அக்கம்பக்க வீடுகளில் போய் பார்த்தார். அங்கும் இல்லாமல் போகவே ஆழிவாய்க்கா அண்ணா, ஆழிவாய்க்கா அண்ணா என்று பெயர் சொல்லாமல் ஒரு மரியாதை நிமித்தத்தோடு ஊர்ப்பெயரைச் சொல்லி அழைத்துப் பார்த்துவிட்டு கடைப்பக்கம் போய் விசாரித்தார். பீடிக்கட்டும் தீப்பட்டியும் வாங்கிச் சென்றதாக கடைக்காரர் கூறினார்.

காயலாகார மனுஷன் இந்த ஈரடியில எங்க போனிச்சு என்றவாறு ரோடு பக்கம் வந்து பலமுறை சத்தமாக கூப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த மேல்சாதியார், எலே மாட்டாண்டி பேரா, யாரையடா கூப்பிடுற என்று கேட்கவே, தன் பெரியம்மா மகனைப் பற்றி கூறினார். கீழவோட்டார், எலே திண்ணையில ஒருஆளு பீடி குடிச்சு இருமிக்கிட்டு இருந்தான், அங்க ஈரத்துக்கு அணவா இருந்ததால தூங்கிப்புட்டானோ என்னவோ போயி எழுப்பிட்டு போடா என்றார்.

அங்கே போய்ப் பார்த்த மாட்டாண்டி பேரன், அட ஒப்புரான நான் இவ்வளவு சத்தம் போடுறேன் ஏன்னு கேட்காம நீ இங்கினதான் உட்கார்ந்திருக்கிறியா? வாண்ணா போவலாம் என்று அழைத்தார். சுவற்றில் சாய்ந்து நன்றாக தூங்கிவிட்டார் போல என்று நினைத்து அண்ணனை தட்டி எழுப்பினார் மாட்டாண்டி பேரன். எந்த சலனமுமின்றி அவர் கீழே சாய்ந்தார். ஏற்கனவே உடல் நலிவுற்றிருந்த அண்ணனின் ஆவி இருமலுடன் இவரின் ஆவி அடங்கிப் போயிருந்தது.

கதறல் சத்தம் கேட்டதும் தெரு வாசிகள் கூடிவிட்டனர். அடபாவி பயலே உடம்புக்கு சரிப்படலேன்னு வந்த நீ ஒன்னும் சொல்லாம போயிட்டியடா என்று சின்னாயி கதறினார். ஒரு கயிற்றுக் கட்டிலில் சடலத்தை கிடத்தி தூக்கிவந்து வீட்டில் வைத்தனர். பெரியவர்கள் கூடி மாட்டாண்டி பேரனிடம், ஏலே இது அடுத்த ஊரு பொணம், அதே உடையவனுக்கிட்ட சொல்லி ஒப்ப டைச்சிருனும். யாராவது ஒரு ஆள துணைக்கு அழைச்சிக் கிட்டு ராவுனு பார்க்காம கையோட போய் சொல்லிட்டு வாங்க என்றார்கள்.

நமக்கு என்னவோ கெட்டகாலம் போல இருக்கு. ஒரே தெருவுல ரெட்டைப் பொணம் விழுந்திருக்கு என்று கூறி ஆழிவாய்க்கால் போக துரிதப்படுத்தினார்கள். மழைத் தூறலில் மாட்டாண்டி பேரனும் மற்றொருவரும் சாக்கை கொங்காணியாக மடித்து தலையில் மாட்டிக்கொண்டு இரவே புறப்பட்டனர். செய்தியறிந்ததும், பெண்டுப் பிள்ளைகள் மழை, இரவு என்று பாராமல் அலறியடித்துக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தனர்.
மறுநாள் காலையில் ஆழிவாய்க்காலில் பெரியவர்கள் ஒன்று கூடி ஒரு முடிவு செய்தனர். ஊர்ல ஒரே தெருவுல ரெண்டு பொணம் விழுந்திருக்கு. ஒன்னை போட்டுட்டு ஒரு பொணத்தை தூக்கக்கூடாது. என்னமோ நடக்கக் கூடாதது நடந்து போச்சு. ஆளும் பேருமா நின்னு அதே ஊரிலேயே அடக்கம் பண்ணிட வேண்டியதுதான். பிரிச்சி கொண்டாந்தா - இன்னைக்கி சனிக்கிழமை- சனிப்பொணம் தனியாக போவாதும்பாங்க. சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லி அங்கே வரச் சொல்லுங்கய்யா நாங்க முன்னாலே போறோம் என்றார்கள்.

பாடைகள் இருபக்கமும் தயாரானது. இரண்டு ஊர் பெரியவர்களும் கூடி விஷயத்தை ஆராய்ந்து சனிக் கிழமையாதலால் இந்த ஊரிலேயே அடக்கம் செய்வது என முடிவு செய்தார்கள். சுறுவாடு (சுடுகாடு) எங்ஙனே... பறையன் பள்ளம்தானே போகனும் என வந்தவர்கள் கேட்டனர். உள்ளூர்காரர் அட போங்கையா இது மழைக்காலம் வாய்க்கா வரப்புல கால்வைக்க முடியாது. இங்ஙன கால வச்சா அங்ஙன கொண்டு விட்டுடும். எல்லாம் நடவு வயக்காடு. வடக்கித்தெரு சின்னா மருமகளை வச்ச இடத்திலே வச்சிற வேண்டியதுதான் என்று பிணங்களை குளிப்பாட்டாச் சொன்னார்கள். கேட்டுக் கொண்டிருந்த வண்ணான் ஆரோக்கியம், இங்கே பாருங்கைய்யா நான் பொணத்தை எடுக்கவுடமாட்டேன். இன்னிக்கு சனிக் கிழமை இரண்டு பொணத்துக்கும் சனிக்குஞ்சு கட்டணும். கட்டலேன்னா தொணைக்கு யாரையாவது கூப் பிட்டுக்கிட்டேதான் இருக்கும்.

இத ஊரு நம்மைக்காகத் தான் சொல்றேன் என்றார். பல்லாக்கு எப்படி கட்டணும் எனச் சொல்லிக்கொண்டு மரஉரலை திருப்பிப் போட்டு அமர்ந்திருந்த பெரியவர், இலே சன்னாசி என்னடா ஒரே சத்தமாக இருக்கு.. என்னானு பாருடா என்றார். வண்ணா வூட்டுப்பய கோழிக்குஞ்சு கட்டணும்னு தகராறு பண்றான் என்றார் சன்னாசி. அவனை நான் கூப்பிடுறேனு கூப்பிடுங்கடா என்றார் மிரட்டும் தொனியில். இலே செவத்தியான் மவனே என்ன சத்தம் போடுறே என்றார் பெரியவர் ஆரோக்கியத்தைப் பார்த்து. ஆரோக்கியம் தோளில் கிடந்தத் துண்டை இடது கை கம்கட்டையில் இறுக்கியவாறு கைகட்டி பவ்வியமாக நின்றவாறு விசயத்தை சொன்னார். என்னடா உங்கப்பன் பேர எடுக்க மாட்டப் போலருக்கே என்றபோது ஏதோ கூறவந்த ஆரோக்யத்தை எலே எதுத்து பேசாதேடா எழுந்திருச்சேனா பிச்சுப்பிடுவேன் பிச்சு என்று தன்னதிகாரத்தை ஆரோக்கியத்தின் மீது செலுத்தினார்.

எதேச்சையாக அந்தப்பக்கம் வந்த படித்த இளைஞர்கள் ஆரோக்கியம் கைகட்டி நிற்பதையும், ஊர்ப்பெரியவர் ஆதிக்கமாய் பேசுவதையும் பார்த்து, இலே இங்கே பாருங்கடா, நம்ம பெரியாளு உரல்மேல குந்திக்கிட்டு வண்ணாவூட்டு ஆள மிரட்டறதை. நேத்தைக்கு ஆயிரத்தெட்டு தடவை மணியார் காலுல விழுந்து அடி வாங்கிட்டு வந்த பெரியாளு எப்படி கால் மேல கால் போட்டு பேசுதுன்னு பாருங்கடா... என்று சிரித்தனர்.

சனிக்குஞ்சு கட்டணும் அவ்வளவு தானடா? என்றார் பெரியவர் தோரணையாக. ஆமாங்க ஆமாங்க ஊரு நன்மைக்கிதாங்க சொன்னேன் என்றார் ஆரோக்கியம். சனிப்பொணம் தனியாப் போவாதுன்னுதான் கோழிக் குஞ்சு கட்டுறது... இது தனியா போவாம சோடியாதான் போவுது...அதனால பாதகம் இல்லன்னாலும் அவன் கேட்கறது நியாயம்தான். மாட்டாண்டி பேரன்கிட்டயும், மல்லியன் மவன்கிட்டயும் தலைக்கு ரெண்டுரூபாய் வாங்கி வண்ணாவூட்டு பையங்கிட்ட கொடுத்துடுங்கடா என்று உத்தரவு போட்டார் பெரியவர்.

பிணங்களை குளிப்பாட்டி பல்லக்கில் ஏற்றினார்கள். பரலோகம் வைகுண்டம் கோவிந்தா என்ற கோஷத்துடன் ஒன்றன்பின் ஒன்றாக பாடைகள் பாலம் நோக்கி போய்க் கொண்டிருந்தன. பாலத்தில் என்றுமில்லாத வகையில் ஒரே கூட்டமாக மேல்சாதியினார் குழுமி இருந்தார்கள். முன் பாடையை சுமந்து சென்றவர்கள் என்னய்யா இவ்வளவு கூட்டம் என்றதற்கு, ஏலே அந்தய்யங்கோ ஏதாச்சும் கூட்டம் கீட்டம் பேசுவாங்கோ அதான் கூட்டம்... நீங்க போங்கய்யா என்றனர்.

பாடை பாலத்தின் மேல்கரையில் தென்பக்கம் திரும்பி யது. மேல்சாதியார் ஏய் நில்லுங்கடா என்று பாடையை மறித்தனர். அவர்களோடு முத்தரையர்களும் (வலையர்கள்) சேர்ந்துகொண்டார்கள். எங்கடா இந்தப்பக்கம் போறீங்க என்றனர். நாங்க பிரேதத்தை அடக்கம் பண்ண சுடுவாடு போறோம் என்றனர். உங்களுக்கு சுடுகாடு கொசவன் கொல்லையோ பறையன் பள்ளமோதானே. இங்கே கிடையாதே என்றனர். தலித் இளைஞர்கள் பெரியவர்களை பின்தள்ளி பதிலடியாக இங்கேதான் எங்க சுடுகாடு இருக்கு. நாங்க ஏற்கனவே அங்ஙனதானே பொணத்தே பொதச்சிருக்கோம். அப்பவே தடுக்கல இப்ப என்னய்யா உங்களுக்கு? எலே திருட்டுப் பயலுவோ மாதிரி யாருக்கும் தெரியாம வந்து பொதைச் சிட்டு ஓடிப்போயிட்டிங்க. தெரிஞ்சா சும்மா உட்டுருப்போமா? தெற்கனமா வச்சக் காலே துண்டாடிருப்போம் தெரியுமா என்றனர். யோவ் நாங்க ஒன்னும் திருட்டுத்தனமா தூக்கியாந்து பொதைச்சுட்டு ஓடிப்போகல, தாரை தப்பட்ட முழங்கி வந்துதான் பொதைச்சோம். இப்பவும் அப்படித்தான் வாறோம் என்றனர்.

வார்த்தைகள் வேகமாக வரவே தலித் பெரியவர்கள் சமாதானம் பேச முற்பட்டார்கள். ஏ பெரியாளு பாடையை எம்புட்டு நேரமா சுமந்துக்கிட்டு நிக்கிறது, நவருய்யா சுடுவாட்டுல கொண்டேப் போய் வெச்சுட்டு அங்ஙனப் பொதைக்கிறதா வேற இடம் போறதானு பேசிக்குவோம். யாரு தடுத்தாலும் பாடையோடு நின்னு பேசமுடியாது என்றனர் பாடையைச் சுமப்பவர்கள். யாருடா அது, பேசிக்கிட்டு இருக்கிறது மனுசனா தெரியலயா? என்று முன்னின்ற மேல்சாதி இளைஞர்கள் கேட்கவே, ஏய்யா பாடையைச் சுமந்துகிட்டு நிக்கறது உன் கண்ணுக்கு தெரியலையா? என்று பதில் வந்தது. ஏய் என்ன எதுத்து எதுத்தா பேசற என்று பாடையைச் சுமந்து நின்றவர்களை பின்னுக்குத் தள்ளினார்கள். தள்ளிய வேகத்தில் பாடை தடுமாறி கீழே சாய, மற்றவர்கள் கைத் தாங்கலாக பாடையை கீழே இறக்கினார்கள். அடுத்தப் பாடையும் கீழே இறக்கப்பட்டு ரோட்டின் மறுபுறம் வைக்கப்பட்டது.

மேல்சாதி பெரியவர்கள் வந்தார்கள். சாமி இப்ப எப்படி அய்யா நீங்க இல்லாமலே உங்க பையன்வோ வந்து தகராறு பண்ணுதுவோ அதுபோல எங்க பயலுவோவும் பண்ணுதுங்க. அவுங்களக் கேட்காம நாங்க ஏதாவது சொன்னோம்னா அடிச்சே கொன்னுப்புடுவாங்க. யாங் காலமெல்லாம் மலையேறிப் போச்சு சாமி. நீங்க அவங்ககிட்ட பேசுங்க என்றனர் தலித் பெரியவர்கள்.

தலித் இளைஞர்களிடம் பேசியபோது, போனால் தெக்கேதான் போவோம். இல்லேன்னா இந்த ரோட்டுக் கரைதான் எங்களுக்கு சுடுகாடு. இந்தப் பொணத்த இங்ஙனேப் போட்டு அழுவி நாறுனாலும் நாறுமே தவிர வடக்க போவமாட்டோம் என்றனர். ஆத்திரப்பட்ட மேல்சாதி இளைஞர்கள், பாடையை ஆளுக்கொரு பக்கமா பிடிங்கடா இழுத்து ஆத்துத் தண்ணீல உட்டுடுவோம் என்றார்கள். இதைக்கேட்ட மாரிமவன், சாமி என்பேச்சில் குத்தம் குறை இருந்தா கோபிச்சிக்கக் கூடாது. ஆண்டாண்டு காலமா பொதைக்கறதும் எரிக்கறதும் நாங்கதான். இந்த வேலைய இனிமே ஒங்கப் பிள்ளைங்க எடுத்துக்கோம்னு சொல்லுதுங்க. இனிமே பறத்தெருவுல பொணம் விழுந்தா இங்ஙனக் கொண்டாந்து போட்டுடுறோம். அதுக்கு பொறவு நீங்க பாத்துக்குங்கோ. நாங்க வெட்டியா வேலையை வுட்டுக் கொடுக்க தயார். ஒரு மொச்சலிக்கை போடுங்க கைநாட்டு வச்சித் தரோம் என்றார்.

இதைக் கேட்டதும் மேல்சாதியார் கையில் கிடைத்த குச்சி கோலுடன் மாரிமவனைத் தாக்க முற்பட்டனர். தலித் இளைஞர்களும் அவர்களை எதிர்கொள்ளும் நிலையில் தடிக்குச்சிகளுடன் முன்னேறினார்கள். பெரும் கலவரம் வரப்போகும் நிலையில் மேல்சாதி பெரியவர்கள் நடுவில் நின்று தடுத்து, எலே போங்கடா அவிங்க ரோட்டுல வெச்சிக்கட்டும். சர்க்காரான் சும்மா விடமாட்டான் பாத்துக்குவோம். ஏலே யாருடா? எக்காரணம் கொண்டும் மேல்கரைக்கு பொணம் போகக்கூடாது என்றார்கள். இவர்களும் எக்காரணமும் கொண்டு நாங்க பொணத்தை எடுக்கமாட்டோம் என்றார்கள்.

அன்றிரவு பொணத்துக்கு சம்பந்தப்பட்டவர்கள் பெட்ரோமாக்ஸ் லைட் உதவியுடன் காவலிருந்தனர். மறுநாள் பிணம் அமைதியாயிருந்தது. அடுத்தநாள் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது. மூக்கில் கை வைக்காமல் பாலத்தைக் கடக்க முடியவில்லை. போக்குவரத்து தடைப்பட்டது. துர்நாற்றம் வீசவே அக்கம்பக்கம் உள்ளவர்கள் இந்த திசைப்பக்கம் வரவே அச்சப்பட்டனர்.

நிலைமை மோசமடைவதைக் கண்ட தலித் தலைவர் ஒருவர் அந்த காலத்தில் இந்தப்பகுதியில் இவர் ஒருவர் தான் இண்டர்மீடியம் வரைப் படித்தவர்- அரசு அதிகாரிகளுக்கும் போலீசுக்கும் தகவல் கொடுத்தார். ஒரே நேரத்தில் வந்து சேர்ந்த போலீஸ் ஆய்வாளர், தாசில்தார், பி.டி.ஓ அனைவரும் முதலில் பிணத்தை அப்புறப்படுத்துங்கள் மற்றபடி இடத்தை தேர்வு செய்வோம் என்று தலித்களை வேண்டினர். அய்யா சாமி நீங்க அப்புறப்படுத்தச் சொல்லுறீங்க நாங்க தயார். எங்கு கொண்டு வைக்கிறதுன்னு இடத்தைக் காட்டுங்க சாமி என்றார்கள். அதிகாரிகள் நீங்க எப்பவும் வைக்கிற இடத்துக்கு கொண்டு போங்க என்றனர். நாங்க எப்பவும் வைக்கிற சுடுகாடு போவனும்னா நேத்தே போயிருப்போம். இந்த நாறிப்போன பிணத்தை நாறப்போட்டு தூக்கணுமா? எங்களுக்கு வேற இடம் காட்டுங்க என்றனர். அதிகாரிகள் உங்களுடைய பழைய சுடுகாடு எங்க இருக்கு, போய் பார்க்கணும் என்றனர். அய்யா சாமி இதுக்கா வேண்டி தான் காத்துக்கிட்டு இருந்தோம். நீங்க வந்து பாருங்கய்யா என்றனர்.

போலீஸ் ஆய்வாளர் ஜீப்பில் தலித்களை இடம் காட்ட அழைத்துச் சென்றார். போகும்போது வண்டியின் ஸ்பீடாமீட்டரில் கிலோமீட்டரைக் குறித்துக் கொண்டார். அந்த இடம் வந்ததும் ஆற்றங்கரையிலிருந்து பறையன்பள்ளம் உள்ள இடத்தை அடையாளம் காட்டினர். அதிகாரியோ ஸ்பீடாமீட்டரைப் பார்த்து மூன்று கிலோமீட்டரும், ஆற்றங்கரையை விட்டு இறங்கி சுமார் அரை கிலோமீட்டரும் நடப்பதற்கு பாதை இல்லாததை புரிந்துகொண்டு மேல் அதிகாரிகளிடம் விபரங்களை தெளிவுபடுத்தினார். இவர்கள் பக்கத்து நியாயத்தையும் எடுத்துக் கூறினார். போக்குவரத்திற்கு மட்டும் கொஞ்சம் இடத்தை ஒதுக்கி வைத்து பாதை விடச் சொன்னார்கள் அதிகாரிகள். சொன்னதை ஏற்றுக்கொண்டு பாடையை ஒருபக்கமாக ஒதுக்கி வைத்தனர்.

இங்கு புறம்போக்கு நிலம் எங்கே உள்ளது என்று அதிகாரிகள் கேட்டதற்கு மணியமும் கணக்கப்பிள்ளையும் இங்கு புறம்போக்கு நிலமே இல்லை என்று கூறியதை தலித்கள் பலமாக ஆட்சேபித்தனர். அதிகாரிகள் அமைதிப்படுத்தி உங்க கருத்து என்ன என்று கேட்டார். அய்யா, நாங்க அங்கேயும் போக முடியாது இங்கேயும் எங்க அய்யாமாருவ உடமாட்டாங்க. இங்கே தெரியற கீழாண்ட கரையிலே இருக்குதே வெட்டிமோடு, அதோட தென்னண்ட கரையில வச்சுக்குறோம் என்றனர். அது ஆற்றுப்படுவை, அங்ஙனே வைக்க முடியாது என்று கர்ணமும், லஸ்கரும் ஆட்சேபணை தெரிவித்தனர்.

தலித் இளைஞர்கள், ஆத்துப்படுவைக்கும் வெட்டி மோட்டு படுவைக்கும் சர்க்காரு எல்லைக்கல் போட்டிருக்கு. ஆனா வயக்காடா, கொய்யாத் தோப்பா நிலத்தை வளைச்சுப்புட்டாங்க. சங்கிலி போட்டு அளந்து அந்த நிலத்தை எல்லாம் ஒங்க கண்முன்னாடியே படுவையிலே சேர்த்துருங்க. அப்படி சேர்க்கலன்னா எங்களுக்கு கொஞ்சம் இடம் அதில கொடுத்திருங்க என்றதும் கர்ணமும் லஸ்கரும் இருந்த இடம் காலியானது.

மணியார் சுதாரித்தவாறு சார் வண்டி வாசியெல்லாம் வட வண்டக் கரையெலதான் போகும் தென்னண்டக் கரை யிலே வண்டிகிண்டி போகமுடியாது. சைபன் ஓரமா ஒரு பத்துக்குழி உபயோகமற்றுதான் கிடக்கு. அதுல இவங்களே வெச்சுக்க சொல்லுவோம் என்றார். அதிகாரிகள் முன்னிலையில் இடம் ஒதுக்கப்பட்டது. இங்கே தலித்துகள் சிறுபான்மை என்றாலும் அவர்களது போர்க் குணத்தை வெட்டிமோடு இன்றும் பேசிக் கொண்டேயிருக்கின்றது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com