சடவு வே.இராமசாமி
சுண்ணாம்பு உதிர்ந்து
செங்கண்கள் முழிக்கும்
செம்மண் சுவற்றோடும்
தட்டிவைத்த சாணிவட்டம்
கண்முளைத்து மிரட்டும்
அதன் வெளிப்புறத்தோடும்
உனக்குக்
கதைகள் கடலளவு
வானொலிச் சத்தத்தோடும்
வெள்ளாட்டங்குட்டியோடும்
தண்ணீர் கிணற்றோடும்
மொழிகள் லட்சம்
அஞ்சனப்பெட்டியோடும்
அருவாமனையோடும்
பக்கா நாழியோடும்
பண்ட பாத்திரங்களோடும்
கொட்டி முழக்கக்
கோடிக்கணக்கில்
நண்பகலில்
செண்பகப்பூ விற்பவனுக்கும்
நுங்கு சீவித் தந்தவனுக்கும்
உன் நாவின் தாழ்வாரத்தில்
பந்தல் கிடைக்கிறது
பன்னூறு வார்த்தைகளில்
முறுக்கும் வாசக்கதவு
வீரிடும் சன்னல் கதவு
மண்ணில் மேனி முங்கிய
நிலைக்கற்கள்
காதுவிடைத்த அடுப்பாங்குழி
பாசிபடிந்த ஓடுகள் என
வீடுமுழுவதும்
உன் சொல் முத்தங்களில்
திளைத்திருக்க...
எனக்கென்றுதான்
ஏதும் கிட்டாமல்
எச்சில் முழுங்கிக் கழிக்கிறேன்
இந்தப் பகல் முப்பதும்.
|