Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2007

தொலைநோக்கி விண்ணிலிருந்து மண்ணுக்கு
ந.பெரியசாமி
.

ஆகாயத்தை பார்த்தபடி இருக்கும் தொலைநோக்கி சற்றே தாழ்ந்து சமூகத்தை நோக்கி குவியுமானால்...? அதுவழியே இதுவரை தெரிந்த அறிவியல் உண்மைகளைப் போலவே அதிர்வூட்டும் சமூக உண்மைகளைக் கண்டடைகிறார்கள் ஒசூர் டி.வி.எஸ் அகாதமி மாணவ, மாணவியரும் பிரளயனும். பெர்டோல்ட் பிரக்ட்டின் கலீலியோ கலிலி நாடகத்தை பின்புலமாய்க் கொண்டு உருவானது தொலைநோக்கி நாடகம்.

நாடகம் ஒன்றிற்கான ஒத்திகையே நாடகமாக மாறும் உத்தி, கதையை கால இட எல்லை கடந்து முன்னும் பின்னுமாக நகர்த்திப் பார்க்க உதவுகிறது. உள்ளடக்கம் வடிவம் என்றில்லாது, அரங்க நிர்மாணம், ஆடையலங்காரம், ஒளியமைப்பு, இசை, நடனம் என ஒவ்வொரு அம்சமும் காட்சிக்குள் பார்வையாளரை ஈர்த்து வீழ்த்தும் பாங்குடன் அமைந்துள்ளன.

தன் வறுமையினால் ஒரு கழைக்கூத்தாடி ரோட்டில் வித்தை காட்டுவதையும், தம் பெருமைக்காக நாலுபேர் மத்தியில் குழந்தையை ஆடு... பாடு.. ரைம்ஸ் சொல்லு என்று பெற்றோர் நச்சரிப்பதையும் ஒரே தன்மையுடையதாய் இணைக்கும் காட்சி கூரிய விமர்சனமாகும். அப்போதைக்கு சிரித்தாலும் வேதனையாகத் தான் இருந்தது நாமும் அப்படித் தானே இருக்கிறோம் என்று.

கிராமத்தில் வெளிப்படையாய் இருக்கும் சாதி நகரத்தில் நாசூக்காய் இருப்பதை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் நுணுக்கமானது. தாழ்ந்த சாதித் தலைவரின் பெயரில் வரும் பஸ்ஸை மறிக்க கையில் கொடுவாள், தடியோடு வெறி கொண்டு துரத்துவதையும், நகரத்தில் வெஜிடெரியன்களுக்கு மட்டும் வாடகைக்கு வீடு தருவதில் காட்டும் முனைப்பையும் ஒரேவகை வன்மமாக சமன்செய்வதும், அதை பின்னணி இசை மூலமாகவே பார்வையாளனுக்கு உணர்த்துவதும் சாதியத்தின் நுண்ணடுக்கு மீது பாய்ச்சப்படும் புது வெளிச்சம்.

கிராமத்தில்தான் சாதி பார்க்கப்படுகிறது நகரங்களில் சாதி பார்க்கப்படுவதில்லை என்பதெல்லாம் ஆபாசமான நகைச்சுவை. ஒசூரில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்காக நேர்முகத் தேர்வுக்கு சென்றவரின் சான்றிதழை பார்வையிட்ட அதிகாரி ஓ.. நீ வன்னியரா, நல்லா மரம் வெட்டி ரோட்டுல போடுவீங்க.. இங்க வந்து என்னவேல பார்க்கப் போறீங்க போங்க போங்க என்றான். அதிகார வர்க்கம்தான் அப்படி என்றால் தொழிலாளி வர்க்கமோ சாதிச்சங்கங்கள் அமைத்து குடும்பவிழாக்கள் நடத்தி குளறுபடி செய்கின்றது.

‘ஒரு எழவும் தெரியாம ஒதுக்கீட்டில் வேலைக்கு வந்து எங்க உசுர வாங்குவீங்க’ என்னும் குரல் இன்னும் அரசு அலுவலகங்களில் கேட்டபடிதானே இருக்கிறது. சாதி பார்த்து பழகுவது, நட்பு கொள்வதென்பதெல்லாம் வெகு இயல்பாக நடந்தபடிதானே இருக்கிறது. சாதி அற்ற இடம் எங்கும் இல்லை என்னும் மிகப்பெரிய உண்மைகளை சிறு சிறு காட்சிகளில் சுட்டிவிட்டு நகர்ந்தபடியே இருந்தது நாடகம்.

இயற்கையோடு இயைந்த நம் வேளாண்முறை, உணவுப்பழக்கம் என வாழ்வின் எல்லாத்தளங்களிலும் சுயத்தை இழப்பதன் குறியீடாக வேம்புக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றிருப்பதைச் சுட்டுகிறது நாடகம். கிராமத்து சுய உதவிக்குழு பெண்களுடனான மாணவர்களின் உரையாடல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. எங்க பிள்ளைங்க டாக்டருக்கும் என்ஜினியருக்கும் படிக்காம விவசாயத்தை மட்டுமே பார்த்துக்கிட்டு இருக்கனுமா? என்ற கேள்விகள் பதிலற்று தொங்கியபடிதானே இருக்கிறது. உடல் நலத்தையும் சூழல் காப்பையும் முன்னிலைப்படுத்தும் அவர்களின் தொழில்முறைக்கு நேரெதிராக சமூகத்தில் நாம் நிகழ்த்திவரும் சூழற்கேடுகளைப் பற்றிய குற்றவுணர்ச்சியை உருவாக்குகிறது.

ஆட்சியாளர்களும் ஊடகங்களும் உருவாக்கித் தந்துள்ள பொதுப்புத்தியை கேள்விக்குள்ளாக்கும் நாடகங்களை பிரளயனோடு இணைந்து தொடர்ந்து நிகழ்த்திவருகிறது டிவிஎஸ் அகாதமி. நாடகச் செயல்பாட்டிற்காக பாடப் புத்தகங்களை ஒருமாதத்திற்கு மூட்டைக் கட்டி வைக்கிற கலகக்காரர்களாக மாணவர்களும் ஆசிரியர்களும் முக்கியமாக பெற்றோர்களும் இருக்கிறார்கள். இந்த கலகம் எல்லாப் பள்ளிகளுக்கும் பரவுவதாக.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com