நக்கீரன் கவிதைகள்
தன்னை நிரப்பும் வெயில்
யாசிக்கும் கரங்கள் வேண்டுவன யாவை
சில்லறைகள் என்பது உங்கள் அபிப்பிராயம்
குழிந்த அக்கரங்களுக்குள்
கூர்ந்து கவனித்தால் காணலாம்
அமைதி தவழும் ஓர் இல்லம்
அழகிய ஆடையணிந்த மனிதர்கள்
உணவு மேசைமுன் அமர்ந்து
ருசியை தின்று தின்று செரிக்கிறார்கள்
அதில்
தனித்தப் புல்லாங்குழலின் இசையைப் போன்று
காற்றில் பரவி மிதக்கிறது நேசம்
தவறியும் கரங்களுக்கு வெளியே கசிந்திராபடி
கவனிக்க நேரமின்றி நாம்தாம் விரைகிறோம்
அக்கரங்களுக்குள்
வாஞ்சையுடன் தன்னை இட்டு நிரப்புகிறது
வெயில்.
விடுதலை
பறந்து கொண்டிருந்த பறவையைப் பிடித்து
கூண்டுக்குள் சிறை வைக்கிறான் ஓவியன்
விட்டுவிட கெஞ்சுகிறது குழந்தை
தொலைந்துவிட்டது சாவியென
நகர்கிறான் சிரித்து
குழந்தை
கையில் தூரிகையை எடுத்ததும்
இருள் சூழ்கிறது
பறந்து போயிருக்கலாம்
அப்பறவை
|