Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2007
ராமு ராமநாதனின் ததாஸ்து
பிரளயன்

ராமு ராமநாதனின் ‘ததாஸ்து’ என்கிற ஆங்கில நாடகத்தை ஓர் வாசிப்பாக நிகழ்த்தித் தரமுடியுமா என ‘ப்ரக்ருதி’ பவுண்டேஷன் நண்பர்கள் என்னிடம் கேட்ட போது முதலில் எனக்கு தயக்கமாகவே இருந்தது. ஏனெனில் ஆங்கிலத்தில் நாடகத்தை தயாரிக்கிற எந்த பெருமுயற்சியிலும் நான் இதுவரை ஈடுபட்டதில்லை அது வேறு தளம் என்பதும் எனக்குத் தெரியும்.

பிறகு நண்பர் ராஜீவ்கிருஷ்ணன் இதில் இணைகிறார் என்றறிந்ததும் எனது தயக்கம் போயிற்று. அவர் Moon Over Still Water Productions எனும் நாடகக்குழுவை நடத்தி வருகிறார். மேஜிக் லாண்டர்ன் நாடகக்குழுவோடும் இணைந்து பணியாற்றியவர்.

‘ததாஸ்து’ நாடகத்தை எழுதிய ராமு ராமநாதன் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்து தற்போது மும்பையில் வசிக்கும் ஓர் தமிழர். ஆங்கிலத்தில் மட்டுமே நாடகங்களை எழுதி வருகிறார். இவரது நாடகங்கள் பல மராத்தியில் மொழிபெயர்க்கப்பட்டு 'ப்ருத்வி தியேட்டர்' குழுவினரால் மேடையேற்றப்பட்டுள்ளன.

‘ததாஸ்து’ பிறப்பால் தலித்தாக பிறந்த ஒருவனை பார்ப்பனனாக மாற்றுகிற ஓர் சடங்கினை மையமாக கொண்ட நாடகம்.

நர்மேத் சாத்திரம் (Narmedh text)) என்கிற நூல் தலித்தாக பிறந்த ஒருவனை பார்ப்பனாக மாற்றுகிற சடங்கினைப் பற்றி விவரிக்கிறது. பார்ப்பனனாக விரும்புவனை ஒரு கோணிப்பையில் கட்டி யாகம் வளர்த்து பூசை புனஸ்காரங்கள் செய்து ஆயிரம் அடி உயரமுள்ள மலையிலிருந்து உருட்டிவிடுவார்கள். உயிரோடு மீண்டுவந்தால் பார்ப்பனனாக இரு பிறப்பாளனாக ஆகிவிடுவதாகக் கொள்ளப்படும்.

இச்சடங்கினை நடத்த 10,000 ரூபாயை தட்சணையாக புரோகிதருக்கு பார்ப்பனனாக விரும்புபவன் கொடுக்க வேண்டும். உருட்டி விடப்பட்டவன் மீண்டு வரவில்லையெனில் அவனது மனைவி மற்றும் மாடு கன்று போன்ற பிற உடமைகள் அனைத்தும் சடங்கினை நடத்தும் புரோகிதனுக்கு சொந்தமாக்கப்பட்டுவிடும். எனவே சடங்கு தொடங்கும் முன்னரே பார்ப்பனனாக விரும்புபவனின் மனைவி விதவை என்று அறிவிக்கப்பட்டு விடுவாள். உயிரோடு மீண்டு வந்து பார்ப்பனனாக மாறியதாக இதுவரை எவருமில்லை. அப்படியே உயிரோடு மீண்டு வந்தாலும் சடங்கில் ஏதோ தவறு நேர்ந்துவிட்டது என்று சொல்லி மறுபடியும் உருட்டி விட்டு விடுவார்களாம்.

இப்படியொரு சடங்கு இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் பகுதிகளில் தற்போதும் நிலவுவதாக நாடகாசிரியர் குறிப்பிடுகிறார். இச்சடங்கைச் சுற்றித்தான் நாடகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அபத்தத்திற்கும் எதார்த்தத்திற்குமிடையிலான ஓர் இழையில் நாடகப்போக்கு நீள்கிறது.

திருப்பங்கள், நாடகார்த்தனமான நிகழ்வுகள் நாடக வளர்ச்சிகள், நாடக இறுக்கம் எதுவுமின்றி பிம்பங்கள், தர்க்கங்களால் கட்டமைக்கப்பட்டு பார்வையாளர்களின் யூகங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தாத முடிவினை நோக்கி நாடகம் நகர்த்தப்படுகிறது.

சேவற்கண்ணன் (cock -eyed one) என்று எல்லோராலும் அழைக்கப்படுகிற ‘நான்’ என்பவன்தான் நாடகத்தின் மையப்பாத்திரம். பார்ப்பனனாக விரும்பி மலையிலிருந்து உருட்டிவிடப்படக் காத்திருப்பவனும் இவனே. மேலும் சேவற்கண்ணனின் மனைவி, சடங்கினை நடத்துகிற ‘பெரிய மனிதன்’ Big Man)கடவுள், நிகில்பாய், பூஜார்லி ரோஹ்ரு (Pujarli Rohru)) மற்றும் கோரஸ் இவர்கள்தாம் நாடக மாந்தர்கள்.
நாடக மாந்தர்கள் அனைவரும் துல்லியமாக சித்தரிக்கப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட ‘பாத்திரங்கள்’ அல்ல. சமூகத்தின் பல்வேறு போக்குகளை பிரதிபலிக்கிற பிரதிநிதித்துவம் செய்கிற ‘வகைப்பாத்திரங்கள்’ (typo characters)..

பாத்திரங்களின் தட்டையான தன்மை. அவை பிரதிபலிக்கும் சமூகப்போக்குகளால் சமன் செய்யப்படும். இது அரசியல் அரங்கிற்குரிய விசேடத்தன்மை. ‘தாதாஸ்து’ நாடகப்பிரதியும் இவ்வாறே. அவஸ்தைப்படுகிற பாத்திரம் நாடகத்தின் மையப்பாத்திரமான சேவற் கண்ணன், எதார்த்தத்தை மறுமொழி பேசாமல் ஏற்று விழுங்கி விடுகிற பாத்திரம்.

பூஜார்லி ரோஸ்ரு அப்படியல்ல. அவன் ஒரு அம்பேத்கரிஸ்ட். எதார்த்தத்தோடு முரண்டு பிடிப்பான். மோதிப்பார்ப்பவன். நாடகத்தில் வரும் மற்றொரு பிம்பம் கடவுள், சேவற்கண்ணனின் மனைவியோடு கலவி செய்துவிட்டு லுங்கியை வழித்துக் கட்டிக் கொண்டு கக்கத்தை சொரிந்தபடி படுக்கையிலிருந்து எழுந்து வருகிறார்.

மனைவியை அழைத்துச் செல்லக் காத்திருக்கும் சேவற் கண்ணன், “கடவுளே என் மனைவியை கவர்ந்து கொண்டுவிட்டீர்... சரி போகிறது, பதிலுக்கு ஒருநாள் உன் மனைவியோடு படுத்துக் கொள்ளட்டுமா?” என்று கேட்க முயல்கிறான். ஆனால் முடியவில்லை. வாயிலிருந்து வார்த்தைகள் எதுவும் வரவில்லை. மொழியும் அவன் வசப்படாமல் போகிறது.

14 காட்சிகளைக் கொண்ட இந்நாடகம், எளிமையாக மேடையேற்றக் கூடிய சாத்தியங்களைக் கொண்டது. இதில் நான்கு காட்சிகளையே தெரிவு செய்து வாசிப்பை தயாரித்தோம். வெறும் வாசிப்பாக அல்லாமல் நிகழ்வை நோக்கிய நீட்சியாக சில இடங்களில் அது உருப்பெற்றது. அதற்குக் காரணம் வாசிப்பில் பங்கேற்ற நடிகர்கள் அவர்களுக்கிருந்த பன்முகச் செழுமையுள்ள அனுபவமும்தான். ராஜிவ் கிருஷ்ணன், ஈஸ்வர், மாளவிகா இம்மூவரும் வாசிப்பை நிகழ்த்தினர். நான் ஒருங்கிணைப்பு செய்தேன்.

“One Billion eyes”என்ற பெயரில், ப்ரக்ருதி பவுண்டேஷன் நடத்திய சாதியத்தை விசாரிப்புக்குள்ளாக்குகிற ஆவணப்படங்களுக்கான விழாவிற்கு, எங்களது ஒருமைப்பாட்டைக் தெரிவிக்கும் ஓர் செயல்பாடாகவே நாங்கள் இந்த ‘தாதாஸ்து’ நாடக வாசிப்பை புரிந்துகொண்டோம்.

சாதிய மறுப்பிற்கும், தலித் விடுதலைக்கும் இந்நாடகம் எவ்வாறு உதவமுடியும்? என்று கேள்வியெழவும் வாய்ப்பிருக்கிறது. ‘பார்ப்பனனாக விரும்புகிற ஒரு தலித்’ ‘பார்ப்பனனாக மாற்றுகிறேன் என்கிற பார்ப்பன சூழ்ச்சி’ இத்தகைய சித்தரிப்புகள் பிம்பங்கள் சூழ்ச்சியை அம்பலப்படுத்துகிறேன் என்று சொல்கிறதேயொழிய ‘பார்ப்பனன் உயர்ந்தவன்’ என்கிற கருத்தியலை சாதியப் படிநிலையை... கேள்விக்குள்ளாக்கத் தவறுகின்றன. மாறாக அப்பிம்பத்தை, படிநிலையை மீண்டும் வலியுறுத்துகின்றன, மறு உறுதி செய்கின்றன.

Dalith representation பற்றி தீவிரமாக விவாதிக்கும் இத்தருணத்தில் ‘ததாஸ்து’ நாடகத்தை இவ்வாறு புரிந்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. அதற்காக நாடகாசிரியர் ராமு ராமநாதன் உள்நோக்கத்தோடு இதனை எழுதியிருக்கிறார் என்று நாம் குற்றப்பத்திரிகை வாசிக்க முடியாது. அது வெற்று அவதூறில்தான் போய் முடியும்.

சாதியம் இச்சமூகத்தின் புறநிலை யதார்த்தம் மட்டுமல்ல, அகநிலை யதார்த்தமும்கூட. இவை குறித்த ஆழமான புரிதல்களே சிக்கலற்ற அணுகுமுறைகளுக்கு நம்மை இட்டுச் செல்லும். ‘தாதாஸ்து’ நாடகத்தை எழுதியவருக்கு இந்த புரிதல் இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.

ராமு ராமநாதன் என்கிற பெயர், வைணவ மரபைச் சுட்டுகிறது. இந்நாடகத்தில் chorus வாயிலாக மந்திர உச்சாடனம் (chant) ஒன்று வருகிறது. காட்சி மாற்றத்தின் போதெல்லாம் இது பயன்படுத்தப்படுகிறது. இதில் வைணவ மரபினர் புனிதமாகக் கருதும் ‘பத்து அவதாரக்’ கோட்பாட்டை ‘பத்து’ என்கிற எண்ணை கடுமையான பகடிக்குள்ளாக்குகிறார் ராமு ராமநாதன். நாடகத்தின் இப்பகுதியை மட்டும் நான் தமிழாக்கினேன். ‘வாசிப்பின்’ போது இது தமிழிலேயே அளிக்கப்பட்டது. அந்த வரிகள் இங்கே...

“இருக்கும் இருக்கும்
அனைத்திற்குமொரு தொடக்கம்
பிறப்பெடுக்கு முன்னே
சொல்லப்பட்ட தெனக்கும்
பத்தாம் மாதம்
பத்தாம் நாளில்
பத்தாவது மகனாய்ப் பிறந்தேன்
பிறக்கும்போதே
பத்து மயிர்தான் தலையில்
வாழ்நாளு மழியாத
ரணங்கள் பத்து வயிற்றில்
பத்து முறை முயன்றேன்
இவற்றை துடைத்தழிக்க
பத்துமுறை முயன்றேன்
இவற்றை துடைத்தழிக்க
அவதாரங்கள் பத்து
கிரகங்களிங்கே பத்து
எனக்கு... சொத்தைப் பற்களும் பத்து
இன்று இருக்கிறேன்... ஏதோ...
இன்று இருக்கிறேன்... ஏதோ...

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com