அறநெறிகள் கோரும் கழுதைகள் அருள்குமார் .
அறநெறிகளற்ற தெருவில் நின்று
நியாயங்களை கோரிக் கொண்டிருப்பவர்கள்
கோவேறு கழுதைகளென அடையாளமிட்டுப்
போகிறான் அத்தெருவில் வசித்திருப்பவன்.
விதிக்கப்பட்டதிற்கெதிராய் மாற்றுக் குரலொன்றில்
கழுதைகள் கோஷிப்பது அத்தெருவுக்கு
அறவே பிடிக்கவில்லை.
நியாயங்களில் நம்பிக்கை கொண்டிருந்த
கழுதைகளோ கோஷித்து கோஷித்து
இரத்தம் கக்கி மடிவது அத்தெருவில்
ஒரு அன்றாட நிகழ்வாகி விட்டது.
நிகழ்த்தப்பட்ட கொலைகளின் மீது
தற்கொலையின் வர்ணங்களை நேர்த்தியாய்
தீட்டுகிறவன் அத்தெருவின்
அடுக்குமாடி ஜன்னலிலிருந்து
கழுதைகளின் ஓலத்தை கைகொட்டி
இரசித்திருக்கிறான்.
அவன் வக்கிரச் சிரிப்பு அவ்வறையிலிருந்து
வெளியேறி உலகு முழுதும் ஒரு
கொடிய நோயாய் பரவிக் கொண்டுவிட்டது
அறநெறியை கோரியிருந்தவைகளும்
உலகெங்கும் பெருகி இரத்தம் கக்கி மடிய
அதையொரு அன்றாட நிகழ்வென
ஆக்கிவிட்டது உலகமும்.
|