Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2006
நாடும் நாயன்மாரும் மூடுதிரை வி(ல)ளக்கமும்

பிரகஸ்பதி

தமிழக சமூக வரலாற்றைப் பல வரலாற்றறிஞர்கள் எழுதியுள்ளனர். அவர்களுள் முனைவர். க.கைலாசபதியே முதன் முதலில் உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் சமூக வரலாற்றினைக் காண முற்பட்டார். அவர் “நாடும் நாயன்மார்களும்” என்ற கட்டுரையின் மூலம் பக்தி இயக்கத்தின் சமூக அடித்தளத்தைக் காண முயற்சித்துள்ளார். அவரை அடியொற்றி, சமூக வரலாற்றை மார்க்சீய அடிப்படையில் எழுத முற்பட்ட நா.வானமாமலை, “நாடும் நாயன்மார்களும்” என்ற கட்டுரையின் வரையறைகளில் சில குறைபாடுகள் இருப்பதாகக் கூறி “மூடுதிரை” என்றதொரு அரியதோர் கட்டுரையை எழுதியுள்ளார். இவ்விரு கட்டுரைகளுமே பக்தியுகத்தின் தோற்றுவாய்க்கான சமூக அடித்தளத்தை மார்க்சீய அடிப்படையில் காண்பதற்கான சீரிய முயற்சிகளாகும்.

பக்தி இயக்கத்தின் தோற்றுவாய்க்கான சமூக அடித்தளத்தைக் காண முனைகையில் தவிர்க்க இயலாதபடி அதற்கு முன்பாக நிலவிய சமூக நிலைமைகளை வரையறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாகச் சொல்வதாயின் சங்ககாலம் மற்றும் சங்கம் மருவிய காலச் சமூக நிலைமைகளை வரையறை செய்து கொள்வது அவசியம். இக்காலக் கட்டத்தைப் பற்றிய க.கைலாசபதி மற்றும் நா.வானமாமலை, ஆகிய இருவரின் வரையறைகளிலுமே சில குறைபாடுகள் உள்ளன. இத்தகைய குறைபாடுகள் இருந்தாலும் மார்க்சீய நோக்கில் தமிழ் சமூக வரலாற்றை எழுதும் முயற்சியின் முன்னோடிகள் அவர்களே என்பது கேள்விக்கிடமற்ற உண்மையாகும். அவர்களது முயற்சியைத் தொடர்ந்து, சமீப காலங்களில் கிடைத்துள்ள சான்றுகளையும் இணைத்து, அவர்களின் ஆய்வில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, சங்ககாலம், களப்பிரர் காலம் மற்றும் பக்தியுகத்தின் சமூக அடித்தளங்களையும், அக்காலங்களில் தோன்றிய சமூக முரண்பாடுகளையும் சுருக்கமாக விளக்க முயற்சிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முனைவர்.க.கைலாசபதியின் “நாடும் நாயன்மாரும்” என்ற கட்டுரையின் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

1. “சிறு சிறு குலங்களாகவும், குடிகளாகவும், குலங்களின் இணைப்புகளாகவும் சிதறிக் கிடந்த தமிழகத்து மக்கள் ஓயாத போரில் ஈடுபட்டிருந்தனர். ஓயாத போர், படையெடுப்பு, ஊழ், அழிவு, அரசுரிமைச்சண்டை ஆகியவற்றின் அடிப்படையிலேயே சங்க காலத் தமிழகத்திலே மெல்ல மெல்ல அரசுகள் தோன்றலாயின. சங்க காலத்தில் அரசு செலுத்திய பேரரசும் தொடக்கத்தில் சிறு கூட்டத்தினருக்குத் தலைவராக இருந்திருத்தல் வேண்டும். சங்க காலத்தின் நடுப்பகுதியில், அவர் அரசராய் மாறும் நிலையை அடைந்தனரென அக்கால நூல்கள் வாயிலாக அறிகிறோம். ஈற்றில் பொருளாதாரத்திலும் தொகையிலும் சிறந்த உழவர் (மருத நிலத்) தலைவனே தமிழ்நாட்டு அரசியலில் வலிமை சிறந்து விளங்கினான்.” (தமிழர் சால்பு, க.வித்யானந்தன். பக்.40 -41) புராதன வாழ்க்கையிலே முதலில் தோன்றிய குலங்கள் அவற்றின் விரவாகவமைந்த குடிகள், அத்தகைய குடிகள் சில சேர்ந்த இணைப்புக் குலங்கள் ஆகியன முட்டி மோதிப் பொருதிய நிலையிலே அளவு மாறுபாடு குணமாறுபாடாக உருமாறியதே சங்ககால அரசியல் நிறுவனமாகும்.

2. “சங்க காலத்தின் பிற்பகுதியிலும், சங்கம் மருவிய காலப்பகுதியிலும் பலம் வாய்ந்த அரசுகள் தோன்றியதன் விளைவாகத் தனியுடைமையின் பேரில் அரசுகள் நிலை நிறுத்தப்பட்டன.”

3. பொன், பொருள் முதலான உடமைகள் மட்டுமின்றி பெருவாரியான நிலத்தையும் சமணர் (அவர்கள் சார்பில் வணிகர்) வைத்திருக்கவே, நிலவுடமைக்காரருக்கும், வணிகருக்கும் போட்டி, மோதல், முரண்பாடு, போராட்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாயிற்று. அரசரது அங்கீகாரத்துடன் பழைய சைவ, வைணவன் கோயில்களின் நிலங்கள், புதிதாக சமணர்கள் தமதாக்கிக் கொண்ட நிலங்கள், உடமைகள், தமதாகுமாயின் உழவுத் தொழிலும் அதனை அடிப்படையாகக் கொண்டு கிராமத் கைத்தொழில்களும் செழித்து வளரும் என்னும் பொருளாதார உண்மையை உணர்ந்தனர். அவர்களை நிலக்கிழார்கள், நிலபிரபுக்கள் அல்லது வேளாளர்கள் என நாம் குறிப்பிடலாம்”.

4. “பெரும்பாலும் சமணராயிருந்த வணிக வர்க்கத்தினருக்கும், வைதீகர்களாக (சிறப்பாக சைவர்களாக) இருந்த நிலவுடமை வர்க்கத்தினருக்குமிடையே ஏற்பட்ட இப்பொருளாதார முரண்பாட்டினை, அக்காலத்தில் தோன்றிய “பொருளாதார நெருக்கடி” என்று பொருளாதார வார்த்தைகளில் கூறிக் கொள்ளலாம்.”

5. “பல்லவர் காலத்திலே சமணத்தைச் சாடுவதன் மூலம் வணிக வர்க்கத்தினரிடமிருந்து பொருளாதார தலைமையையும், சமுதாயச் செல்வாக்கையும் பிடுங்கிக் கொண்ட சைவர்கள்.”

6. “சுருக்கமாகக் கூறுவதாயின் நகரங்களிலிருந்து கொண்டு வணிகம் முதலாய பொருளீட்டும் முயற்சிகளைத் தத்தமது ஏகபோக உரிமையாகக் கொண்டிருந்த ஒரு ஆட்சி குழுவிற்கும் (ளிறீவீரீணீக்ஷ£நீலீஹ்), நிலத்தில் அக்கறை கொண்டிருந்த, பண்ணையாட்கள் கிழார் ஆகியோருக்கிமிடையே தோன்றிய முரண்பாடே இப்பொருளாதாரப் போரின் அடிப்படை எனலாம்.”

அறவழியில் ஒழுகிய சைவ நாயன்மார்கள், சமணத் துறவிகளின் பால் கொண்டிருந்த கொலை வெறிப்பிடித்த எதிர்ப்பின் அடித்தளத்தை ஆராய முற்பட்டே முனைவர்.க.கைலாசபதி இக்கட்டுரையை எழுதியுள்ளார். வணிக வர்க்கத்தினருக்கும், நில உடமை வர்க்கத்தினருக்குமான முரண்பாடே அக்காலத்தில் நிலவிய பிரதான முரண்பாடு என அவர் வரையறை செய்கின்றார். வணிக வர்க்கத்தினரை எதிர்ப்பதற்காகவே அடித்தட்டு உழைக்கும் மக்களை நிலக்கிழார் வர்க்கம் அணி சேர்த்து போராடியது என்பது அவர் அனுமானம். வணிக வர்க்கத்தின் சுரண்டலால் அதிகம் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் உணர்வின் வெளிப்பாடாகவே சமண துறவியருக்கெதிரான நாயன்மாரின் கடுமையான சாடல்கள் எழுந்தன என்ற முடிவுக்கும் வருகின்றார். அவர் தனது கட்டுரையில் எழுப்பிய வினாவிற்கு இது ஒரு சரியான பதில் போன்றத் தோற்றத்தைக் கொடுக்கின்றது.

எனினும் சங்ககால வாழ்வியல் ஏவல் மரபினராக வாழ்ந்த வேளாளரை, அரச குடியான நிலப்பிரபுவாகக் கருதியதால் இவருடைய வரையறையெல்லாம், தவறாகிவிட்டன. சங்க காலப் பிற்பகுதியையும், சங்கம் மருவிய காலத்தையும் ஒன்றாக கூறுவதன் மூலம் களப்பிரர் காலம் என்ற ஒரு புதிய சமூக அடித்தளத்தையுடைய காலத்தைக் கணக்கிலெடுத்துக் கொள்ளவும் தவறியுள்ளார்.

இனி நா.வானமாமலை............. என்ற நூலில் எழுதிய “மூடுதிரை” என்ற கட்டுரையின் முக்கியக் கூறுகளைப் பார்ப்போம்.

1. கி.மு.ஆறாம் நூற்றாண்டில் வடமேற்கு இந்தியாவில் காணப்பட்ட நிலமையையும், தமிழ்நாட்டில் கி.மு. 2, 1, ம் நூற்றாண்டில் நிலவிய நிலைமையும் ஒன்றெனக் கொள்ள முடியாது. இக்காலத்தில் தென்னாட்டில் அரசுகள் நிலைத்துவிட்டன.

2. முதலில் நிலக்கிழார் வர்க்கத்திலிருந்து தோன்றிய வணிக வர்க்கம் நிலக்கிழார்களின் நிலப்பிடிப்பை எதிர்த்து நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

3. மன்னர்கள் நிலக்கிழார் வர்க்கம் வலுப்பெற்றால் அதனோடும், வணிக வர்க்கம் வலுப்பெற்றால் அதனோடும் மாறி மாறிச் சேர்ந்து கொண்டார்கள். இதுதான் கி.பி.முதல் நூற்றாண்டு முதல் 6 ஆம் நூற்றாண்டு வரை நிலவிய சமூகச்சித்திரம்.

நா.வானமாமலை சங்க காலமாகிய கி.மு.2,1ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் அரசுகள் நிலைத்துவிட்டன என்பதை சரியாகக் குறிப்பிடுகின்றார். எனினும் மன்னர்களும் நிலக்கிழார் வர்க்கமும் தனித்தனி வர்க்கங்கள் எனத் தவறாக வரையறை செய்கின்றார். இது சங்ககால வாழ்வியலுக்குப் பொருத்தமற்றதாக உள்ளது.

மேலும் சங்ககால இறுதியில் நிலவிய வர்க்க முரண்பாடுகளும், களப்பிரர் காலமாகிய கி.பி.3-கி.பி.6-ஆம் நூற்றாண்டில் நிலவிய வர்க்க முரண்பாடுகளும் ஒன்று என்றே கூறுகின்றார். இதுவும் தவறாகும்.

இவ்விரு அறிஞர்களும் சங்க காலத்தில் வேளாளரே நிலக்கிழாராயிருந்தனர் என்றும், அவர்களிலிருந்து வலிமையுடன் வளர்ந்த தலைவர்களே வேந்தர்கள் என்றும் தவறாகக் கருதுகின்றனர். இத்தவறான கருதுகோள்தான் சங்ககாலம் மற்றும் களப்பிரர்கால சமூக அடித்தளத்தை இவர்கள் தவறாகப் புரிந்துகொள்ள காரணமாயிற்று. முனைவர். க.கைலாசபதியின் குறிப்பு 1-ல் கூறப்பட்ட கருதுகோள்தான் இத்தவறுதல்களுக்கு மூல காரணமாகும். சங்ககால தமழ்ச் சமூகத்தின் அனைத்து குடிகளும், தமிழகத்திலேயே பூர்வீகமாக வாழ்ந்து வந்த இனக்குழுக்களிலிருந்து பரிணமித்தன என்பதே இக்கருதுகோளின் சாராம்சமாகும். மறைமலை அடிகள், தேவநேயப்பாவாணர் போன்ற தமிழ் ஆர்வலர்களின் விருப்பத்தின் அடிப்படையில் எழுந்த இக்கருதுகோள்தான் இன்றுவரை தமிழ்ச் சமூக ஆய்வாளர்களிடையே செல்வாக்குப் பெற்றதாக உள்ளது.

குஜராத்திலிருந்து கி.மு.800 வாக்கில் தமிழகத்திற்குள் குடியேறிய வேந்தர் குடியினர், கி.மு.3000-லேயே மேற்காசியாவில் தோன்றிய நிலபிரபுத்துவ அரசுகளின் சிறப்பான மரபுகளை தன்னகத்தே கொண்டவர்களாயிருந்தனர். சங்ககால அரசுகள் வேந்தர்களால் கட்டமைக்கப்பட்ட நிலமானிய அரசுகளாக விளங்கின. நானில தலைமக்களாகிய ஊரன்(மருதம்), மலை நாடன்(குறிஞ்சி) குறும்பொறை நாடன்(முல்லை), துறைவன்(நெய்தல்) ஆகியோர் வேந்தர்களின் கீழ் இயங்கிய மானிய பிரபுக்களாவர். இத்தலை மக்களும், தனி ஆட்சி அனுமதிக்கப்பட்டிருந்த வேளிரும் அரசர் குடி என்ற ஒரே குடியைச் சேர்ந்தவர்கள் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. சங்ககால நில பிரபுத்துவ சமூகம் வர்க்கங்களாக அல்லாமல் ‘குடி’களாகவே பிளவுபட்டு நின்றது. இந்திய சாதிய சமூக அமைப்பில் இந்த ஆரம்பக்கட்டத்தில் நாம் ‘குடி’ தவிர்த்து, வர்க்கங்களை அடையாளம் காணமுடியாது. சங்க காலத்தில் ஆளும் குடிகளான அந்தணர், அரசர், வணிகர் ஆகிய மூன்று குடிகளையும் பெருங்குடி என்றும் ஏனைய உழைக்கும் குடிகளை சிறுகுடி என்றும் அழைத்துள்ளனர்.

“பெருங்குடி வாணிகன் பெருமட மகளே”
(சிலப்பதிகாரம் - மனையறம்படுத்த காதை-7)
“இவளே காணல் நண்ணிய காமர் சிறுகுடி
நீல்புறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு
மீனெறி பரதவர் மகளே நீயே” (அகம்-45)

இவ்வாறு குடிகளாகப் பிரிந்திருந்த சங்ககால தமிழ்ச் சமூகத்தை குடிகள் தவிர்த்து வர்க்கங்களாகப் பார்த்தது தவறாகும். சங்க கால வாழ்வியல் நில உடமையாளர்களான வேந்தரும், நான்கு நில தலைமக்களும், வேளிரும் ஒரே குடியைச் சேர்ந்தவராயிருக்கும் பொழுது “மன்னர் நிலக்கிழார் வர்க்கம் வலுப்பெற்றால் அதனோடும், வணிக வர்க்கம் வலுப்பெற்றால் அதனோடும் மாறி மாறிச் சேர்ந்து கொண்டனர்” என வானமாமலைக் கூறுவது பொருளற்றதாகிவிடுகின்றது. இந்த ஆரம்பக் கட்டத்தில் சொந்த குடிகளுக்குள் கட்டுக்கோப்பான ஒற்றுமை நிலவியதன் வெளிப்பாடாக சாதியம் தோன்றி நிரூபித்துள்ளது. எனவே மன்னர்கள் தங்கள் சொந்த குடியைச் சேர்ந்த நிலக்கிழார் வர்க்கத்துடன் முரண்படுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. சங்ககால வாழ்வியலின் வர்க்க (சமூக) முரண்பாடுகளின் அடித்தளத்தை நாம் புதிய நோக்கிலேயே ஆராய வேண்டும்.

சங்ககாலத்தில் அரசர்களிடையே ஓயாத போர் நடந்து வந்தது. சமுதாயத்தின் உற்பத்திக் கருவிகளும், உழைக்கும் சக்தியும் பெருவாரியாகப் போரில் வீணாகின. எனவே காடழித்து நாடாக்கும் பணி அருகியது. வேளாண் உற்பத்திப் பெருக வாய்ப்பில்லாத அதே வேளையில் உற்பத்தியின் பெரும்பகுதி போர்க்குடிகளைப் பராமரிப்பதற்கான வரியாக வசூலிக்கப்பட்டது. இப்போக்கு உழுகுடிகளாகவும், வாரக்குடிகளாகவும் இருந்த வேளாளருக்கும், மருத நில தலைமக்களான ஊரனுக்கும் (அரசு குடிக்கும்) இடையிலான முரண்பாட்டைக் கூர்மையாக்கியது. மேலும், ஓயாத போர், கடல் வணிகத்தில் ஈடுபட்ட வணிகக் குடிகளுக்குப் பெருந்தடையாக இருந்தது. இது அரசர் குடியினருக்கும் (நிலப்பிரபுக்கள்) வணிகக்குடியினருக்கும் இடையே முரண்பாட்டை உருவாக்கியது.

சமணப் புலவராகக் கருதப்படும் கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரி தமிழகம் ஒரே நாடாக வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதாகக் கொள்ளலாம். இது சமணத்தையும், பௌத்தத்தையும் ஏற்றுக் கொண்ட வணிகர்களின் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டது. சங்க காலத் தமிழ் புரோகிதர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து நின்றனர். அக்கால கட்டத்தில் இந்தியா முழுவதும் செல்வாக்குடன் திகழ்ந்த வைதீகக் கோட்பாடுகளையும் சடங்குகளையும் ஏற்றுக் கொண்ட புரோகித வகுப்பனர் பார்ப்பார் என அழைக்கப்பட்டனர். சோதிடத்தில் சிறந்து விளங்கிய கணியன் என்ற புரோகிதச் சமூகமும், வேலன் வெறியாட்டு போன்ற பழங்குடி மந்திரங்களுடன் கூடிய சடங்குகளைச் செய்யும் புரோகிதச் சமூகமும் ‘அறிவர்கள்’ என அழைக்கப்பட்டனர். வேந்தர்கள் பார்ப்பார்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால், அறிவர்கள் வைதிகத்திற்கு எதிரான பௌத்த சமண மதங்களைத் தழுவயதன் மூலம் இம் மதங்களை ஆதரித்த வணிகருடன் அணி சேர்ந்தனர்.

சங்கம் மருவிய கால சமண பௌத்த துறவிகள் ‘அறிவர்’ என அழைக்கப்பட்டதும் இங்கு கவனத்திற்குரியது. இச்சூழலில் தமிழகத்திற்கு வெளியிலிருந்து வந்த விவசாயக் குடியாகவும் போர்க்குடியாகவும் இருந்த களப்பாளர்கள் வேந்தர்களுக்கு எதிராக முரண்பட்டு நின்ற அறிவர், வணிகர் மற்றும் உழுகுடிகளுடன் அணி சேர்ந்து மூன்று வேந்தர்களையும் வீழ்த்தினர். இத்துடன் வேந்தர் குடியினர் ஆட்சி அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டு, அறிவர்களின் மேலாண்மையின் கீழ் வணிகர்களின் பிரதிநிதிகளாகக் களப்பாள அரசர்களின் ஆட்சி தோற்றம் கண்டது. இக்காலகட்டத்தில் நடந்த அரசியல் மாற்றத்தை உலகில் வெற்றி பெற்ற முதல் ஜனநாயகப் புரட்சி என்று கூடக் கூறலாம்.

இந்தக் களப்பாள (களப்பிரர்) அரசர்களின் ஆட்சிக் காலத்தை கி.பி.250 முதல் கி.பி.560 வரை கூறலாம். சங்கம் மருவிய காலமும் இக்காலமும் ஒன்றே. இக்காலத்தின் சமுதாயச் சித்திரத்தை அறிந்துகொள்ள நேரடிச் சான்றுகள் இல்லை. எனினும் களப்பிரர்கால இலக்கியங்கள் மற்றும் வேள்விக்குடி, தளவாய்புரம், காசாக்குடி, செப்பேடுகள் கூறும் செய்திகம் மூலம், சில யூகங்களை நாம் முன் வைக்கலாம்.

1. விவசாயத்திற்கு முன்னுரிமை தரப்பட்டு, காடழித்து நாடாக்கும் பணி பெருமளவில் மேற்கொள்ளப்பட்டது. புதிய பாசன முறைகள் இக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம் என சமூக வரலாற்று அறிஞர் திரு.எஸ்.ராமச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். கீழ்க்கண்ட சங்கம் மருவிய கால இலக்கியமான “மணிமேகலை”யில் உள்ள பாடல் ஒன்று கைவினைஞர்கள் வெளி அரசுகளிலிருந்து தமிழகத்தில் குடியமர்த்தப்பட்டதற்கான சான்றினைக் கொடுக்கின்றது.

“மகதவினைஞரும் மராட்டக் கம்மரு
மவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்”

காடழிந்து நாடாக்கும் பணி களப்பிரர் காலத்தில் பெருவாரியாக நடைபெற்றது என்ற கருதுகோளை மேற்கண்ட பாடல் மறைமுகமாக கட்டுகிறது.

2. அதிக நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்பட்டதனால் உழுகுடிகளின் தேவை அதிகரித்தது. எனவே பல புதிய இனக்குழுக்கள் விவசாயத்தில் ஈடுபடுத்தப்பட்டன. களப்பிரர் காலத்தில் போர்கள் நடந்தமைக்கான சான்றுகள் இல்லை. எனவே புதிய உழுகுடிகள், போர் அடிமைகளாக இல்லாமல் வாரக் குடிகளாகவே விவசாயத்தல் ஈடுபடுத்தப்பட்டிருக்க வேண்டும்.

3. பௌத்தமும், சமணமும் செல்வாக்குடன் விளங்கின. அறிவர்களே பெரும்பாலும் பௌத்த சமணத் துறவிகளாக இருந்தனர்.

களப்பிரர்கால நிலவுடமையின் தன்மையைப்பற்றித் தெளிவாக அறிய முடியவில்லை. சங்ககாலத்தில் உழு குடிகளாக இருந்த வேளாளர் களப்பிரர் காலத்தில் வாரக்குடிகளாக (காராளராக ஏற்றம் பெற்றனர். வாரக் குடிகளான வேளாளரிடமிருந்து தானியங்கள் வரியாகப் பெறப்பட்டிருக்குமானால் போரில் அதிகம் ஈடுபடாத களப்பிரர் அரசு உபரி வருமானம் அதிகம் பெற்ற அரசாக திகழ்ந்திருக்க முடியும். அவ்வாறாயின் அக்காலக்கட்டத்தில் கட்டடக்கலையும் பிற கலைகளும் சிறப்பாக வளர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறான தொல்பொருள் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே நிலத்திலிருந்து கிடைத்த வரி, வருவாய் முழுவதும் அரசுக்குச் சேர்ந்ததாகக் கொள்ள முடியவில்லை.

சங்க காலத்திலேயே வலுப்பெற்றிருந்த வணிகக்குடியினரின் தலைமையில்தான் களப்பிரர் வேந்தர்களை வெற்றி கொண்டனர். எனவே களப்பிரர் காலத்தல் நிகழ்ந்த அரசியல் மாற்றம் வணிகக் குடியினர் அதிகம் பயன்பெறும் வகையிலேயே நிகழ்ந்திருக்க வேண்டும் அல்லவா? நிலவருவாயில் பெரும் பங்கினை வணிகக்குடிகள் பயன்படுத்துவதற்கான நிர்வாக ஏற்பாடு எதாவது களப்பிரர் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கம் என யூகிக்கலாம்.

புத்தர் ஏற்படுத்திய சங்கங்களைப் பற்றிய திரு.க.கைலாசபதி அவர்களின் குறிப்பு இத்தேடலுக்கு உதவுகின்றது.

“தனியுடமை காரணமாகவும், தம் செல்வ சுகம் காரணமாகவும் புறவுலகில் பாதகங்கள் நடைபெற்றன. ஆனால் சங்கத்திலோ உடமைகள் யாவருக்கும் பொதுவாக இருந்தன. பொருளோடு, பணத்தோடு துறவிகளுக்கு தொடர்பில்லாமல் செய்தார் புத்தர். இவ்வாறான தத்துவத்தையும் நடைமுறையையும் வகுத்த புத்தர் தனது காலத்துக்கேற்ற பொய்ம்மை (illusion) ஒன்றினைச் சிருட்டித்திருந்தார். இந்த நிலையிலேயே அன்றைய வட இந்திய மக்கள் சங்கத்தில் சேரலாயினர். சாந்தியும், சமாதானமும், அமைதியும், ஒழுங்கும் வேண்டிய உலகிற்குப் பொய்மை வடிவிலேனும் அவற்றைக் கொடுத்தார் புத்தர்”.

புத்தர் ஏற்படுத்திக் கொடுத்த பொய்மை வடிவம்தான் ஜனநாயக அரசு என நாம் கருதிய களப்பிரர் காலத்தில் வணிகர்களுக்கும் பயன்பட்டது. பெரும்பான்மையான நிலங்கள் பௌத்த சங்கங்களின் உடமைகளாக்கப்பட்டன. களப்பிரர் காலம் முடிவுக்கு வந்த காலக்கட்டத்தில் பௌத்த விகாரைகள் மிகவும் செல்வாக்குடன் இருந்ததற்கான பல குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன.

கி.பி.ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனப் பயணியான யுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகளில் காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட திராவிட தேசத்தில் ஏறத்தாழ நூறு பௌத்த விகாரைகளும், பத்தாயிரம் பௌத்தத் துறவிகளும் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். பல்லவ மன்னன் மகேந்திரவர்மனால் எழுதப்பட்ட “மத்தவிலாசப் பிரகசனம்” என்ற நாடகத்தின் வாயிலாக பௌத்த பிக்குகளின் செல்வச் செழிப்பை அறிய முடிகிறது. சைவ சமய கபாலியான சத்ய சோமனுக்கும், பௌத்த துறவியான நாகசேனனுக்கும் இடையே சத்யசோமனின் பிச்சைப் பாத்திரம் தொலைந்து போனதன் பொருட்டு சண்டை ஏற்பட்டது. சத்திய சோமனை நியாயங்கேட்டு நீதிமன்றம் செல்லுமாறு சிலர் அறிவுறுத்துகின்றனர். அப்போது சத்யசோமனின் மனைவி தேவசோமா நீதிமன்றம் குறித்தும் பௌத்த பிக்குகள் குறித்தும் பின்வருமாறு கூறுகிறாள்.

“பல விகாரைகளிலிருந்தும் கிடைக்கிற காணிக்கைப் பணத்தை இந்தப் பிக்கு தனது இராஜ விகாரையில் குவித்து வைத்திருக்கிறார். நீதிமன்றத்தில் இருக்கிறவர்களின் வாயில் அந்தப் பணத்தைப் போட்டு அவர்கள் வாயை அடக்கிவிடுவார். நானோ ஏழை கபாலிகை. எனக்கு என்ன இருக்கிறது? பாம்புத் தோலும் திருநீரும்தான் இருக்கிறது. நியாயமன்றம் போக எனக்கு காசு ஏது?”

மேலே கூறப்பட்டுள்ள குறிப்பு பல செய்திகளை நமக்கு அளிக்கின்றது.

1. பௌத்த விகாரைகள் செல்வச் செழிப்புடன் விளங்கின.

2. புத்தப் பிக்குகள் விகாரைக்குச் சொந்தமான செல்வத்தை தனது சுய நலனுக்குச் செலவிட்டுள்ளனர். ஆரம்பத்தில் ஒருவிதமான கற்பனைப் பொதுவுடைமையைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட சங்கங்கள் (விகாரைகள்) பிற்காலத்தில் பிக்குகளின் சொந்த மடங்களாக மாறியுள்ளன. அதாவது ஆரம்ப காலத்தில் உழைக்கும் மக்களாகிய வேளாளரின் காவலர்களாக இருந்த மடாதிபதிகளான புத்தபிக்குகன், பிற்காலத்தில் ஆதிக்கச் சக்தியாக மாறி உழைக்கும் மக்களுக்கு எதிராக நின்றுள்ளனர்.

3. பௌத்த சமண சமயங்கள் செல்வாக்குப் பெற்றிருந்த பல்லவ நாட்டில், நீதிமன்றங்களிலும் ஊழல் புரையோடியிருந்தது.

4. எல்லாவற்றிற்கும் மேலாக இச்சீரழிவுகளைக் களைய வேண்டிய அப்பகுதியின் அரசனான மகேந்திரவர்மனே தனது சொந்த நாட்டில் நடக்கும் முறைகேடுகளைக் கிண்டல் செய்து எழுதியுள்ளான். இதிலிருந்து புத்த விகாரைகளும், புத்த பிக்குகளும் அரசனால் கூடக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, செல்வாக்குடன் விளங்கியது புலனாகிறது.

முனைவர் திரு.க.கைலாசபதியும் பல்லவர் காலத்தில் சமணப் பள்ளிகளும் பாழிகளும் பெரும் நிலவுடமை நிறுவனங்களாக ஆட்சி செய்தன எனக் கூறுகிறார்.

மேலே கூறப்பட்ட குறிப்புகளிலிருந்து பல்லவர் ஆட்சியில் பௌத்த சமண மடங்கள் பெரும் நிலவுடமை நிறுவனங்களாக ஆட்சி செய்தன என்பது புலனாகிறது. பல்லவர் ஆட்சிக்காலத்திலேயே இம்மடங்கள் மிகப் பெருமளவில் நிலங்களை நிர்வகித்தன எனவும், காடழித்து நாடாக்கும் பணியையும் இம்மடங்கள் மேற்கொண்டிருந்தன எனவும் யூகிக்கலாம். அறிவர்களாகிய பௌத்த, சமணத் துறவிகளின் நேரடி நிர்வாகத்திலிருந்த மடங்கள், வணிகச் சங்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது எனக் கொள்வதே சரியானதாக இருக்கும். நாட்டின் நலன் கருதி வெளிநாட்டு வாணிபத்தைப் பெருக்குவதாகக் கூறி வணிகச் சங்கங்கள் மடங்களின் செல்வங்களைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

இன்றும் கூட மக்கள் வங்கிகளில் சேமித்துள்ள பணத்தில் பெரும்பகுதி தொழில் மற்றும் வணிக வளர்ச்சிக்காக தொழில் அதிபர்களால் கடனாகப் பெற்று பயன்படுத்துவதுடன் இது பொருந்தும். மேலும் சங்க காலத்தல் உழுகுடியாக இருந்த வேளாளர் வாரக்குடிகளாக ஏற்றம் பெற்றது மட்டுமல்லாது, அவர்கள் செலுத்த வேண்டிய வரிகளும் கணிசமாகக் குறைக்கப்பட்டன என யூகிக்கலாம். அரசருக்கு ஆறில் ஒன்று கடமை என்றும், வேளாளருக்கு எட்டில் ஒன்று கடமை என்றும் பல குறிப்புகள் உள்ளன. கார்காத்த வேளாளரே, களப்பிரர் என்ற வரலாற்றறிஞர் எஸ்.இராமச்சந்திரன் கருதுகோள் சரியாக இருக்குமானால், அரசர் குடியினரின் காலமாகிய சங்ககாலத்தில் ஆறில் ஒன்று வரியும், களப்பிரர் காலமாகிய கார்காத்த வேளாளர் ஆட்சியின்போது எட்டில் ஒன்று வரியும் வசூலிக்கப்பட்டதெனக் கூறலாம். வரிக்குறைப்புச் செய்ததன் மூலம் ஆட்சி மாற்றத்திற்குத் தங்களுடன் அணி சேர்ந்த உழைக்கும் மக்களாகிய வேளாளரை திருப்திப்படுத்தியதுடன், புதிய இனக் குழுக்களை உழுகுடிகளாக (அல்லது வாரக்குடிகளாக) மாற்றுவதற்கு தூண்டுதலாகவும் அமைந்தது. சங்ககால நிலைமைகளுடன் ஒப்பிடுகையில் இக்காலத்தில் வேளாளரின் வாழ்க்கை மிகவும் சுபிட்சமடைந்தது என்றே கூறவேண்டும்.

இக்காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் உழவுத் தொழிலைச் சிறப்பிக்கின்றன.

“உழுவார் உலகத்தார்க்கு ஆணி அ•து ஆற்றாது,
எழுவாரை எல்லாம் பொறுத்து”
(குறள்.1032)
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல்பவர்”
(குறள்.1032)

இவ்வாறு உழுகுடிகளைச் சிறப்பிப்பதை, வேட்டிடுவ மக்களாகவும் முல்லை குறிஞ்சி நில மக்களாகவும் இருந்த பல இனக் குழுக்களை உழுகுடிகளாக மாற்றம் செய்யும் முயற்சியாகவும் கருதலாம். களப்பிரரின் சம காலத்தில் வட இந்தியாவிலும் இது போன்ற சமூக மாற்றங்களே நிகழ்ந்துள்ளன என்பதை ராம்சரண் சர்மாவின் குறிப்பு உணர்த்துகின்றது.

“வைசியர்கள் உழவுத் தொழிலில் ஈடுபட்டவர்கள் எனும் பரம்பரைக் கருத்தை, மௌரியர் காலத்துக்குப் பின்னரும் குப்தர் காலத்திலும் இயற்றப்பட்ட நூல்களில் மீண்டும் மீண்டும் காண்கிறோம். அமரகோசத்தில் வைசிய வர்க்கம் என்னும் பகுதியில்தான் உழவர்கள் என்று பொருள்படும் சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் சூத்திரர்களுள்ளும் பலர் உழவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்குச் சிறிது ஆதாரம் உள்ளது. விளைச்சலில் பாதியைக் குத்தகையாகச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், சூத்திரர்களுக்கு விளைநிலங்கள் தரப்பட்டன என்று பல நீதி நூல்கள் கூறுகின்றன. சூத்திரர்களுக்கு நிலத்தை வாரத்துக்கு விடும் பழக்கம் வளர்ந்து கொண்டே சென்றது என்பதை இந்த நீதி நூல்கள் காட்டுகின்றன...

-----இவ்வாறு சூத்திரர்கள் விவசாயிகளாக மாறியது ஒரு முக்கியமான வளர்ச்சியாகும். சமுதாயத் துறைகளிலும், பொருளாதாரத் துறைகளிலும் ஏற்பட்ட இந்த மாறுதல் குப்தர் காலத்தில் தொடங்கியது. கி.பி.7ம் நூற்றாண்டின் முதற்பாதி முடிவதற்குள் சூத்திரர் அனைவருமே விவசாயிகள் என்ற நிலை ஏற்பட்டு விட்டது.”

தமிழ்நாட்டில் களப்பிரர் காலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றம், வட இந்தியாவில் குப்தர் காலத்தில் ஆரம்பித்தது என்பதை மேலே உள்ள குறிப்புக்கள் உணர்த்துகின்றன. குப்தர்களை வைசியர் என்கின்றனர். எனவே வட இந்தியாவில் உழுகுடிகளான சூத்திரர்களுக்கும், நிலப்பிரபுக்களான சத்திரியர்களுக்குமிடையிலான முரண்பாட்டை வைசியர்களான குப்தர்கள் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். ஆட்சி மாற்றத்திற்கு குப்தர்களுடன் அணி சேர்ந் சூத்திரர்கள் வாரக்குடிகளாக (காராளராக) ஏற்றம் பெற்றனர். தமிழ்நாட்டில் வணிகர்கள் நேரடியாக அரசராகாவிட்டாலும் களப்பிரர்கள் வணிகர்களின் பிரதிநிதிகளாகவே ஆட்சி செய்துள்ளனர். இதனாலேயே இக்காலகட்டத்தை ஒரு வகையான ஜனநாயக காலகட்டம் என கருதுகின்றோம்.

களப்பிரர் ஆட்சியின் ஆரம்ப காலங்களில் பௌத்த சமண மடங்கள் பல வகைகளில் புரட்சிகரமாகச் செயல்பட்டுள்ளன. மடங்களின் நிதியாதாரங்கள் காடுகளை அழித்து புதிய விளை நிலங்களை உருவாக்கும் பணிக்குப் பயன்படுத்தப்பட்டது. குறிஞ்சி, முல்லை, நெய்தல், நில வாழ்நிலையிலும், வேட்டுவ நிலையிலும் இருந்த பல இனக்குழுக்கள் புதிய விவசாயக் குடிகளாகப் பரிணமித்தனர். மொத்தத்தில் அக்காலக் கட்டத்தில் பௌத்த, சமண மடங்கள் உழைக்கும் மக்களின் பாதுகாவலனாகவே செயல்பட்டன. ஆனால் காலப்போக்கில் நிறுவனமயமாகிவிட்ட மடங்களில் ஆயிரக்கணக்கான துறவிகள் எந்த வேலையும் செய்யாமல் உண்டு கொழுத்தனர். வேளாளரது வாழ்நிலையுடன் ஒப்பிடும்பொழுது, இந்த திகம்பர ஸ்வேதாம்பரத் துறவிகள் செழிப்புடன் வாழ்ந்தனர்.

சங்க காலத்தில் தலைமக்களின் வாயில்களாக விளங்கிய செவிலித்தாய், தோழி மரபினர் களப்பிரர் கால சமூக மாற்றத்தில் மேல்நிலை பெற்றதை, களப்பிரர் கால பாடல் ஒன்று நிறுவுகின்றது.

உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்
புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக்
கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால் போற்
கீழ்மேலாய் நிற்கும் உலகு.
(நாலடியார்-368)

இப்பாடல் உடைப்பெருஞ்செல்வராக பார்ப்பாரையும், சான்றோராக அரசகுடியினரையும் குறிப்பிடுகின்றது. சங்க கால வாழ்வியலில் தலைமக்களின் புடைப்பெண்டிராக செவிலித்தாய், தோழி மரபினர் பணி செய்தனர். இம்மரபினர் வேளாளரில் உயர் அடுக்கினராவர். இவர்களுக்குக் கீழ்நிலையிலும் உழுகுடிகளாக வேளாளர் வாழ்ந்தனர். புடைப்பெண்டிர் மக்களும், கீழும் பெருகி எனக் கூறப்படுவது, செவிலித்தாய், தோழி மரபினரும் அவருக்குக் கீழ்நிலையிலிருந்த வேளாளரும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நிகழ்வைக் குறிப்பிடுகின்றது. இந்நிலையானது, குடையை விரித்து தலைகீழாகப் பிடித்தது போல், கீழ்மேலாய் உலக நடப்பு உள்ளது என புலவர் ஆதங்கத்துடன் கூறுகின்றார். களப்பிரர் காலத்தில் இயற்றப்பட்ட பழமொழி நானூறும் இக்கருத்தையே கூறுகின்றது.

உறை சான்ற சான்றோர் ஒடுங்கி உறைய
நிறை உள்ளர் அல்லர் நிமிர்த்து பெருகல்
வரைதாழ் இலங்கு அருவி வெற்ப
அதுவே சுரை ஆழ அம்மி மிதப்ப.
(பழமொழி நானூறு)

நிறைந்த குணங்களையுடைய, அரசர்குடியான சான்றோர் ஒடுங்கி உறைய, நிறை உள்ளம் இல்லாதாரான வேளாளர் நிமிர்ந்து நிற்கும் நிலையானது, நீரில் சுரைக்காய் ஆழ்ந்துவிட, அம்மி மிதப்பது போல் உள்ளது என புலவர் புலம்பிகின்றார். மேலே கூறப்பட்ட இரு பாடல்களும் களப்பிரர்கால சமூக அடித்தளத்தை தெளிவாக்குவதுடன் சமணத்தை ஆதரித்த அறிவர் மற்றும் வணிகருக்கும், சைவ எழுச்சிக்கு அடித்தளமிட்ட வேளாளருக்கும் இடையில் தோன்றியிருந்த முரண்பாட்டினையும் இப்பாடல்கள் குறிப்பால் உணர்த்துகிண்றன எனலாம். களப்பிரர் காலத்தில் மேல்நிலை அடைந்துவிட்ட வேளாளரை ‘புடைப்பெண்டிர் மக்கள்’ என்றும், ‘கீழ்’ என்றும் சமண துறவிகள் கடுமையாக சாடியதிலிருந்து இவ்விரு பிரிவினருக்குமான முரண்பாட்டின் கூர்மையை உணர முடிகின்றது. இதன் எதிர் வினையாகவே சைவ நாயன்மார்களின், சமணத் துறவிகளுக்கெதிரான கொலை வெறிப்பிடித்த எதிர்ப்பு அமைந்தது எனலாம்.

“மத்த விலாசப் பிரகசனம்” என்ற நாடகத்தில் குறிப்பிடப்படுவது போல் களப்பிரர் காலத்தில் நீதி, நிர்வாகம், ஊழல் மலிந்து புரையோடிப் போயிருந்தது. உழைக்கும் மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டது. இச்சூழல் மீண்டும் ஒரு சமூக முரண்பாட்டிற்கு அடித்தளமிட்டது. அதாவது வாரக்குடிகளான வேளாளருக்கும், பெரும்பாணமையான நிலங்களை நிர்வகித்த பௌத்த, சமண மடங்களின் நிர்வாகிகளான “அறிவர்” மற்றும் “வணிகர்” கூட்டணிக்குமிடையே முரண்பாடு தோன்றியது. இம்முரண்பாட்டின் விளைவாகவே வாரக்குடிகளான வேளாளர் தலைமையேற்று ஏற்படுத்திய பக்தி இயக்கம் தோற்றம் கொண்டது. முனைவர் க.கைலாசபதி குறிப்பிட்டுள்ளது போலவே சமண, பௌத்த மதங்களுக்கு எதிராக தமிழ்த் தேசிய உணர்வையும், தமிழ்மொழி உணர்வையும், பக்தி இயக்கம் பயன்படுத்தியது.

இச்சூழலைப் பயன்படுத்தி தெற்கில் போர்க்குடிகளான பாண்டியர்களும், வடக்கில் போர்க்குடிகளான பல்லவர்களும் களப்பிரர்களை வீழ்த்தினர். பின்னால் சேரர்கள் தாங்கள் இழந்த ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டதற்கும் பக்தி இயக்கமே உறுதுணையாக நின்றது. பக்தி இயக்கம் ஏற்படுத்திய தமிழ் மொழி உணர்வு, பல்லவர்களுக்கும் எதிராக நின்ற சூழலைப் பயன்படுத்தி அவர்களுக்குக் கீழ் குறுநில மன்னராக இருந்த சோழர்கள் அவர்களை வீழ்த்தி தங்களுடைய புதிய பேரரசை உருவாக்கிக் கொண்டனர். எனவே மத்திய கால சோழப் பேரரசின் தோற்றம் பக்தி இயக்கத்தின் ஒரு விளைபொருள் என்று கூறுவது மிகையாகாது.

வேளாளர் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட பக்தி இயக்கம் ஒரு மக்கள் இயக்கமாக மாறியதனால் அரசுகள் சைவத்தை ஆதரிப்பதும், வேளாளருக்கு நிர்வாகத்தில் பங்கு அளிப்பதும் தவிர்க்க முடியாமல் போனது. எனினும் சோழர்கள் பேரரசு உருவாக்கத்திற்கு சைவத்தை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதை வரலாறு உணர்த்துகின்றது. மேலும் பக்தி இயக்கத்தின் வெற்றி காரணமாக பெரும் நிலவுடமை நிறுவனங்களாக இருந்த பல பௌத்த, சமண மடங்கள் சைவ மடங்களாக மாற்றப்பட்டன. இந்த மாற்றம் வேளாளரின் ஒரு பிரிவினரைப் பெரும் நிலவுடைமைகளை நிர்வகிக்கக்கூடிய செல்வாக்குப் பெற்றோராக்கியது. சோழர் காலத்தில், ஊர் ஆட்சியில் வேளாளருக்குப் பங்கு அளிக்கப்பட்டது. சித்திரைமேழிப் பெரியநாட்டார் போன்ற செல்வாக்கு மிகுந்த வேளாளர் குடிகள் தோன்றின. சங்ககாலத்தில் செல்வாக்கு மிகுந்த செவிலித்தாய், தோழி மரபினர் சோழர் காலத்தில், வளவர் சேனாதிபதிக் குடியாகவும், அமைச்சர் பதவிக்குரியோராகவும் ஏற்றம் பெற்றனர். இத்தகைய மேல்நிலையை வேளாளரில் மிகச் சிறு பிரிவினரே அடைந்திருந்தனர்.

சோழர் காலத்திலும், பெரும்பான்மையான வேளாளர் பிரிவினர் கீழ்நிலையிலேயே வாழ்ந்துள்ளனர். 12-ம் நூற்றாண்டு சோழர்கால கல்வெட்டு ஒன்று கீழ்க்கண்ட செய்தியைக் கூறுகின்றது.

“பெருங்குடிகள் பேரால் கடைமைக்கு வெள்ளாழ
ரைச் சிறைப்பிடித்தல் இவர்கள் அகங்களில்
ஓடுக்குதல் செய்யக் கடவதல்லாதாகவும்”
பெருங்குறி பெருமக்கள் ஊர் கணக்கர்
கையெழுத்திட்ட கல்வெட்டாகம்.

பெருங்குடிகள் செலுத்தத் தவறிய கடமைக்காக (வரிப்பாக்கிகள்) சம்மந்தப்பட்ட பெருங்குடிகளின், வாரக்குடிகளான வெள்ளாளரை சிறைப்பிடிக்கும் வழக்கம் இக்கல்வெட்டின் காலத்திற்கு முன்பிருந்ததை இது உணர்த்துகின்றது.

13-ம் நூற்றாண்டு பாண்டியர் கல்வெட்டு கூறும் செய்தியாவது,
“அதலையூர் நாட்டு நாடாள்வான்
கூலிச்சேவகன் திருவழுதி நாட்டு
ஸ்ரீகுருகூர் வெள்ளாளன்------------
நாதன்----------”

இங்கு வெள்ளாளன் கூலிச்சேவகனாகக் குறிப்பிடப்பட்டுள்ளான்.

“பொன்மேய்ந்த சோழ பிரமராயர்
வெள்ளாளடிமைகளில் சூடியார்
மக்கள் குன்றியாந் பிற்றடியாந்
நல்லாப் பிள்ளைப் பெற்றாந் விண்டாந்”

இக்கல்வெட்டு வெள்ளாளரில் அடிமைகள் இருந்த செய்தியைக் குறிப்பிடுகின்றது.

சோழர் காலத்தில் சில பிரிவு வேளாளர் மட்டுமே நில உடைமைச் சமுதாயமாக உயர்ந்துள்ளனர். பிற பிரிவு வேளாளர் வாரக்குடிகளாகவும், அடிமைகளாகவுமே இருந்துள்ளனர். எனவேதான், நாச்சினார்க்கினியார் உயர்குடிவேளாளர் மட்டுமே அரசர்களுக்கு “மகற்கொடைக்குரியோர்” எனக் குறிப்பிடுகின்றார்.

சங்க காலத்தில் உழுகுடிகளாக இருந்த வேளாளர்கள், களப்பிரர் காலத்தில் காராளராக (வாரக்குடிகளாக) எற்றம் பெற்று பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் பெரும் நிலவுடமையாளராக மாறி அமைச்சர் பதவிக்குரியோராகவும், மாறிய இயக்கப் போக்கு இவ்வாறே நிகழ்ந்துள்ளது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com