Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2006
என் பெயர் ராக்கேல் கோரி

பொன்.சின்னத்தம்பி
பா.செயப்பிரகாசம்

நாடற்று அலைந்த யூத இனம், நாட்டுக்குள் வாழ்ந்து கொண்டிருந்த பாலஸ்தீனியர்களை ஏகாதிபத்தியப் பேரரசுகளின் துணையோடு ஓரத்துக்கு விரட்டி உட்கார்ந்து கொண்டது. இதுவரை உலக வரைபடத்தில் இல்லாத இஸ்ரேல் உருவானது. யூதர்கள் சிறு எண்ணிக்கையிலிருந்தாலும் பேரினவாதமாக உருவெடுத்து பாலஸ்தீனியர்களை கங்கணம் கட்டிக்கொண்டு அழிக்கிறார்கள். உலகை ஆட்டிப்படைக்க எத்தனிக்கின்ற அமெரிக்காவின் வேட்டைநாயாக, இராணுவத்தளமாக செயல்படுகின்ற இஸ்ரேலிய அரசின் மலையளவு குற்றங்களை அம்பலப்படுத்தும் தொடர்நிகழ்வாக பாலஸ்தீனிய மக்களின் அறுபதாண்டுப் போராட்டம் தொடர்கிறது.

இடிக்கவும் அள்ளி வீசியெறியவும் மட்டுமே புல்டோசர் இயந்திரத்துக்கு தெரிந்திருக்கிறது. அதை இயக்குகிறவன் - அவனுக்கு மேலே அரசில் உட்கார்ந்து அவனை இயக்குகிறவர்களும் ரத்த ஓட்டமில்லாத புல்டோசர்கள்தாம். பாலஸ்தீனியக் குடும்பத்தினர் வசித்து வந்த வீட்டை, இஸ்ரேல் ராணுவம் புல்டோசரால் இடித்துத் தள்ளியதைத் தடுக்க முயன்ற ‘ராக்கேல் கோரி’ என்ற அமெரிக்க இளம்பெண் அதே இயந்திரத்தால் அள்ளி நசுக்கப்பட்டாள்.

வாஷிங்டனிலுள்ள ஒலிம்பியாவைச் சேர்ந்த ராக்கேல் கோரி, கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கையிலேயே சமூகசேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட மாணவி. படிப்பு முடித்ததும் உலகின் பல பகுதிகளுக்குப் பயணம் செய்தபோது கடைசியாய் தொண்டு செய்யத் தேர்வுசெய்த இடம் பாலஸ்தீனம்.

அவர் கொல்லப்படுவதற்கு சிலநாட்கள், சிலவாரங்கள் முன்பு தனது தாய்க்கு அனுப்பிய மின்னஞ்சல் கடிதங்கள் அசாதாரணமானவை. அமெரிக்க அரசின் அரக்கபலத்தை முதுகெலும்பாகக் கொண்ட இஸ்ரேலிய அரசு, பாலஸ்தீனியர்களுக்கு இழைத்துவரும் கொடுமைகளை ஒளிவு மறைவின்றி தெள்ளத்தெளிவாகச் சித்தரிக்கின்றன அக்கடிதங்கள்.

“அம்மா, இங்கு நிலவுகின்ற சூழலின் உண்மைநிலையை என்னால் எந்தவிதத்திலும் புரிந்துகொள்ள இயலவில்லை. நீ நேரில் பார்த்தாலன்றி, கற்பனை செய்வது இயலாத காரியம். அப்பொழுதுகூட நாம் கண்கூடாகக்கண்டது உண்மைதானா என்ற உணர்வே மேல் வரும்.

நிராயுதபாணியான ஒரு அமெரிக்க குடிமகனை, இஸ்ரேல் ராணுவம் இங்கு சுட்டுக் கொன்றிருக்க முடியுமா? சுட்டுக்கொன்றால், அது எத்தகைய விளைவுகளை அமெரிக்க கரங்களில் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்?.

என் கையில் பணம் இருக்கிறது. ராணுவம் குடிதண்ணீர்க் கிணறுகளை அழித்துக் கொண்டிருக்கிற போது தண்ணீர்ப் புட்டிகளை வாங்கிக் கொள்கிறேன். உண்மைதான். இங்கிருந்து எந்த நேரத்திலும் வெளியேறும் சுதந்திரம் எனக்கிருக்கிறது. விரும்பினாலும் இங்குள்ள மக்கள் வெளியேற முடியாத துயரங்களை நான் பார்த்து விட்டேன். அம்மா, இந்தக் குழந்தைகள்...

குழந்தைகள் உயிர்த்திருக்கிற இந்த உலகத்தை சொற்பகாலம் எட்டிப் பார்த்த என்னுள்ளேயே ஆங்காரம் ஓங்கியெழுகிறதே எனது உலகத்தை அவர்கள் காண நேர்ந்தால் எப்படி உணர்வார்களென்று நினைத்துப் பார்க்கையில் வாயடைத்துப் போகிறேன். நீங்களும் கடலைப் பார்த்திருக்கிறீர்கள். அமைதி தவழும் சூழலில் வாழ்ந்திருக்கிறீர்கள். அங்கு குடிநீர் ஒரு பிரச்சினையே இல்லை. இரவோடு இரவாக புல்டோசர்களால் வாழ்விடம் களவாடப்படுவதில்லை. மாலைநேரத்தை மகிழ்ச்சியாகக் களிக்கிறீர்கள். இடிக்கப்பட்டு வீட்டின்சுவர் உள்ளே விழுந்து விடுமோ என்கிற அச்சம் இல்லை. இராணுவ இராட்சத இயந்திரங்களாலும், பீரங்கியாலும், சுற்றி நிறுத்தப்பட்ட இரும்புச்சுவர்களாலும் நீங்கள் சூழப்பட்டதில்லை. அத்தகைய வாழ்தலில் இத்தனை காலம் இருக்க நேர்ந்தால், அந்த உலகத்தை உங்களால் மன்னிக்க இயலுமா என எண்ணி வியக்கிறேன். இடைவிடாது வீட்டை அழித்தொழிக்க முயலுகிறார்கள். இராணுவத்தின் இந்த அழித்தொழிப்பை தடுத்து நிறுத்த அந்த மக்கள் இடையறாது எத்தனித்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளின் போராட்ட ஜீவிதம்தான் என்னை வியப்படையச் செய்கிறது. உண்மையாகவே இவை பற்றியெல்லாம் அறிந்து கொள்கிறபோது என்ன நேரிடும் என எண்ணிப் பார்க்கையில் அதிர்ச்சியாகிறது.”

பிறகு இத்தகைய சஞ்சலக் காட்சியெல்லாம் மறக்கச் செய்கிற சாதாரணமக்களின் வாழ்க்கை எத்தனிப்புகளை மின்னஞ்சல் கடிதங்கள் அறிமுகப்படுத்துகின்றன.

“அம்மா நிடால் நாளுக்கு நாள் ஆங்கிலத்தில் தேறிவருகிறான். இவனொருவன் தான் என்னை ‘அக்கா’ என்று அழைக்கிறான். தன்னுடைய பாட்டிக்கு “ஹலோ” எப்படி இருக்கீங்க‘?” என்று ஆங்கிலத்தில் விசாரிக்கக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்துவிட்டான். புல்டோசர்களும் டாங்கிகளும் கடந்து செல்லும் ஓசை சதா கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால் அந்த மக்கள் உண்மையாகவே கலகலப்பாக இருப்பதுடன், ஒருவரோடொருவர் கொண்டிருக்கும் பாசம்போலவே, என்னிடமும் பாசம் காட்டுகிறார்கள். மனித உரிமைப் பார்வையாளராகவோ, ஆவணப்படத் தயாரிப்பாளராகவோ நேரடியாய் நடவடிக்கைத் தடுப்பாளராகவோ செயல்படுவதைக் காட்டிலும் பாலஸ்தீனிய நண்பர்களோடு இருக்கும்போது பயவுணர்வு குறைவாகவே இருக்கிறது. அச்சத்தின் பிடியில் நீண்டகாலம் வாழும் அத்தகைய சூழலை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு அவர்கள் ஒரு நல்ல உதாரணம். எல்லாநிலைகளிலும் ஆபத்தான சூழல் அவர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. முடிவில் அது அவர்களைத் தின்று தீர்த்து விடும் என்பதையும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நம்பவொண்ணா பயங்கரம் அவர்களுடைய வாழ்க்கையைச் சூழ்ந்து கொண்டிருக்கிற பொழுதிலும், மரணதேவதை நிலையாகக் குடிகொண்டுவிட்ட நேரத்திலும் சிரிப்பு, நகைச்சுவையுணர்வு, பெருந்தன்மை, குடும்ப பாசம் போன்ற மானுடப் பண்புகளை பெருமளவில் தக்கவைத்துக் கொண்டிருக்கிற அவர்களின் வலிமையைக் கண்டு நான் திகைத்துப்போகிறேன். துயரம் மிகுந்த சூழல்களில் மனிதர்கள் மாண்புகளோடு விளங்குவதற்கான அடிப்படை வலிமை, திறமையின் புதிய பரிமாணத்தைக் கண்டு வியக்கிறேன். இதற்கு முன் ஒருபோதும் நான் இவற்றை கண்டதில்லை. தன்மானம் பாலஸ்தீனத்துக்குப் பொருத்தமான வார்த்தை. அவர்களை நீங்களும் சந்திக்க வேண்டுமென்பது என் ஆசை.”

அநியாயங்களை சாதாரண மக்களாலும் எதிர்த்து நிற்க முடியும். வரலாற்றை நெஞ்சுரம் கொண்ட அவர்களாலும் படைக்க முடியும். நாம் அனைவருமே அத்தகைய சோதனைகளுக்கு ஆளாக்கப் படுகிறோம். மிக அபூர்வமாக நாமே அத்தகைய சூழலைத் தேர்வுசெய்து கொள்கிறோம். முழுமையாகத் தயாரில்லாத சமயங்களில் கூட, வீராவேசத்துடன் செயலாற்ற உந்தப்படுகிறோம். இதுதான் ராக்கேல் கோரியின் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்கிற முக்கியமான விசயம்.

தனது அமெரிக்க அரசாங்கத்தின் அட்டகாசங்களைக் கண்கூடாகக் கண்டு கொண்டே உலகின் பல பாகங்களையும் சுற்றி வந்து முடிவில் மனித இனத்துக்கு எதிரான இஸ்ரேலின் கொடுமைகளைத் தடுக்கிற முயற்சியில் உயிரைவிட்டார். இத்தகையதொரு துணிகரச் செயலைச் செய்யப்போகிறோம் என்று தெரிந்து புறப்படவில்லை அவர்.

ராக்கேல் கொல்லப்பட்டதற்குப் பிறகு அவருடைய தாயார் நினைவு கூர்ந்தார்:

“அவள் காயாவிலிருந்து எங்களுடன் பேசியது தெளிவாக நினைவிருக்கிறது. எந்த வீட்டின் முன்பாக அவள் கொல்லப்பட்டாலோ, அங்கே அவள் தங்கியிருந்தாள் என நினைக்கிறேன். அவருடைய குரலில் நடுக்கம் தென்பட்டது. உங்களுக்குக் கேட்கிறதா, கேட்கிறதா என்று கத்தினாள். அது எல்லைப்புறத்திலிருந்து இஸ்ரேல் வீசிய குண்டுகளின் ஓசை. அவள் கொல்லப்படுவதற்கு ஐந்துநாட்களுக்கு முன்பு பேசினாள். முற்றிலும் சரியான செயலைச் செய்கிறோம் என்ற தன்னம்பிக்கை அவளுள் வளர்ந்திருந்தது. மரணத்தை தரிசித்தபடி வாழ்கிற பாலஸ்தீன மக்களின் நடுவில் அவள் இருந்ததினாலேயே அவளுக்கு இந்த நெஞ்சுரம் வந்திருந்தது.”

II

நியூயார்க் நாடகப்பட்டறை (Newyork Theatre Workshop NYTW) நியூயார்க் நகரின் தலை சிறந்த நாடக நிறுவனம். ஒடுக்கப்பட்டவர்கள்,உரிமை மறுக்கப்பட்டவர்களின் கதைகளை, கலைநுட்பத்தோடு சொல்லவல்ல நாடக ஆசிரியர்கள் மூலம் அரங்கேற்றுகிற துணிச்சலுக்குப் பெயர் பெற்ற நிறுவனம். அந்தப் பாரம்பாரியத்தைப் பின்பற்றி ராக்கேல் கோரியின் அசாதாரண கடித சாரத்தை எடுத்து “எனது பெயர் ராக்கேல்கோரி” என்ற நாடகத்தைத் தயாரித்தது. முதன்முதலில் இந்த நாடகத்தை லண்டனில்தான் அரங்கேற்றினார்கள். அந்தப் பெருமைக்குரியவர்கள் “ராயல் கோர்ட் தியேட்டர்” நிறுவனத்தார்.

அரங்கேற்றுவதற்கு சற்று முன்னதாக (மார்ச் 22, 2006) நியூயார்க் நாடகப்பட்டறையின் கலை இயக்குநரான ஜிம்நிகோலோவை யூத சமுதாய மக்களின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினார்கள். அச்சந்திப்புக்குப் பிறகு “யூத இனத்தைச் சேர்ந்தவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அரசியல் பகைமை கொண்ட பல்வேறு பிரிவினர் அவரவர்களின் நலன்களுக்கு இந்த நாடகத்தைப் பயன்படுத்தக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மறுக்க இயலாது. எனவே இந்த நாடகத்தை, மேடையேற்றுவதில் கால நீட்டிப்பு தேவைப்படுகிறது.” என்று தெரிவித்து அரங்கேற்றத்திலிருந்து ஜிம்நிகோலோ பின்வாங்கினார்.

அமெரிக்காவின் பொது அரங்குகளில் பாலஸ்தீன மக்களுடைய நியாயமான கோரிக்கைகளைப் பற்றிக் குறிப்பிடுவதுகூட குற்றமாக கருதப்படுகிற சூழலில் இந்த மறுப்பு வெளிப்பட்டிருக்கிறது. அமெரிக்க அரசே திட்டமிட்டு நிகழ்த்தி அரங்கேற்றிய செப்டம்பர் 11, 2001 நிகழ்வுக்குப் பிறகு குடியுரிமை பெற்ற அமெரிக்கா வாழ் பிற தேசத்தவர்கள் வேவு பார்க்கப்படுகின்றனர். அராபியர்கள், ஆசியர்கள், கறுப்பர்களின் (ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்) கலாச்சார நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் கண்காணிக்கப்படுகின்றன. அவமதிக்கப்படுகின்றன. இஸ்லாமியர்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டு கடுமையான சோதனை நடத்தப்படுகிறது. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாலஸ்தீன உரிமைகள் பற்றிப் பேசும் பேச்சாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில் “காலச் சூழலுக்கேற்ப நாடகத்தின் உள்ளடக்கத்தை வடிவமைப்பதற்கு கால நீட்டிப்பு தேவைப்படுவதாக” - நியூயார்க் நாடகப் பட்டறையின் கலை இயக்குநர் தெரிவிக்கிறார்.

உண்மையை உடைத்துச் சொல்வதென்றால் “காலச்சூழல்” என்பது அரசியல் காரணங்களுக்காக இந்த நாடகத்தைத் தள்ளிப் போட்டிருப்பதன் மூலம், அமெரிக்க அரசாங்கம் மூர்க்கத்தனமாகத் திணிக்கும் நிபந்தனைகளுக்கு நியூயார்க் நாடகப் பட்டறை நிறுவனத்தார் ஒத்துப் போகிறார்கள் என்பதுதான். உலகக் கோளத்தில் வாழுகின்ற மக்களுக்கு இன்றைய தினம் அரசியல்ரீதியாக முன் வைக்கப்பட்டுள்ள வாய்ப்புக்கள் இரண்டே இரண்டுதான்.

சிலுவையில் அறையப்படுவதா
அல்லது
வெட்டி பலியிடப்படுவதா”

பாலஸ்தீன மக்களுடைய நியாயமான போராட்டங்கள் கூட இஸ்லாமிய தீவிரவாதத்தோடு இணைத்துப் பார்க்கப்படுகின்றன. கேவலம் என்னவென்றால் நாடக இயக்குநரின் இந்த மறுப்பு, பாலஸ்தீனியர்களின் அறுபதாண்டுகாலப் போராட்டத்தினை அடக்கி ஒடுக்குகிற இஸ்ரேலின் மலையளவு குற்றத்துக்கு சமமாகவே இருக்கிறது. யூதப் பேரினவாதிகள் வைக்கும் வாதத்தை ஏற்றுக் கொண்டு ஒத்துப் போகும் மனநிலையும் அம்மறுப்பின் மூலம் அப்பட்டமாக வெளிப்படுகிறது.

நாடகத்தை அரங்கேற்றும் முடிவு 2006 சனவரியில் எட்டப்பட்டது. நாடகத்தை நிறுத்திவைக்கும் முடிவு மார்ச்சில் எடுக்கப்படுகிறது. பாலஸ்தீனத்தில் நடைபெற்ற தேர்தலில் ஹமாஸ் இயக்கத்தினர் வெற்றி பெற்ற சூழலில் இம்முடிவு நிகழ்கிறது. ஹமாஸ் இயக்கத்தினர் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் மூர்க்கமான எதிரிகளாகக் காட்டிக் கொண்டாலும், பாலஸ்தீன மக்களுக்கு எதிர் காலத்தில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய மதவாதத் திட்டத்தை முன்வைக்கின்றனர். ராக்கேல் கோரி நாடகத்திற்கும் மதவாதத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. பாலஸ்தீன மக்கள் ஏகாதிபத்திய வாதிகளுக்கு கட்டுப்பட்டவர்களாக அடங்கி வாழவேண்டும் அல்லது இஸ்லாமிய மதவாதத்தைக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற பார்வைக்கு ராக்கேல் கோரி நாடகம் பலத்த அடிகொடுக்கின்றது. ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் குழந்தைக்கும் திறந்தவெளிச் சிறையாக மாறிக்கொண்டிருக்கிற ஒரு நாட்டில் வாழ்வது எப்படியிருக்கும் என்பதை ராக்கேல் கோரிஅம்பலப் படுத்தினார்.

கடந்த காலத்தில் சமரசமற்ற எதிர்ப்புக் கலை அம்சங்களைக் கொண்ட நாடகங்களைத் தயாரித்த நாடக நிறுவனம் அத்தகைய நாடகங்களுக்கு முன்னெப்போதையும் விட தேவை அதிகரித்திருக்கிற சூழலில், நாடக அரங்கேற்றத்திலிருந்து பின்வாங்கியிருப்பது நாடகக் கலையுலகில் இருக்கும் பலரின் தாக்குதலுக்கும் ஆளாகியிருக்கிறது. அமெரிக்காவிலும், லண்டனிலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

கலையுலக இடிபாடுகளைத் தொடர் நிகழ்வாக ஆக்கும் மோசமான பின்னடைவு இது. மோசமான கால நிலைமைகளில் எதிர் நீந்திச் சென்று உண்மையைப் பேசத் துடிக்கின்ற ஒவ்வொரு கலை உலகினரும் நிர்பந்தங்களுக்கு வளைந்து போயிருப்பது நியாயமானதுதானா?

ஆனால் இன்றைய நிகழ்வுகளைக் கவனித்துக் கொண்டிருக்கிற மக்கள் அனைவருக்கும் பூதாகரமான சவால்கள் காத்துக் கொண்டுள்ளன. சமாதானங்களை அவர்கள் ஏற்கவில்லை. அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்கிறார்கள். நாடகத்தை காலச்சூழலுக்கேற்ப தகவமைத்தல் என்பதற்கு பாலஸ்தீனிய மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக எழுந்த ராக்கேல் கோரியின் வீரஞ்செறிந்த குரலுக்கு எதிராகவும், இஸ்ரேலிய அரசாங்கம் கற்பிக்கின்ற காரண காரியங்களை- அதன் ஓலத்தை ஓங்கச் செய்வோம் என்பதுதானே பொருள் என்று கேள்வி எழுப்புகிறார்கள். இதுவரை மக்களின் விமர்சனத்துக்கு, எண்ணங்களுக்கு மதிப்புக் கொடுத்துச் செயல்பட்டு வந்த நியூயார்க் நாடக மன்றம் - முற்போக்குச் சிந்தனையுள்ள ஒரு அமைப்பு- இதனடிப்படையில் மறு பரிசீலனை செய்வது அவசியமாகிறது. இல்லையெனில், ராக்கேல் கோரியை வன்கொலை செய்தது இஸ்ரேல் யூதப் பாசிசமல்ல நாங்களும் தான் மறுகொலை செய்தோம் என்று ஒப்புக்கொள்வதாகிவிடும். இன்னொரு விசயத்தையும் மனதில் கொள்ளவேண்டும். பிற்போக்குச் சக்திகளுக்கு அடங்கிப் போவதென்பது அடங்காப் பசிகொண்ட ஒரு மிருகத்துக்குத் தீனி போட்ட கதையாகிப்போகும். அமெரிக்க அரசியலும், அமெரிக்க வாழ்வியலும் மாற்றியமைக்கப்படுகின்ற காலகட்டத்தில் “ஏற்றுக்கொள் அல்லது ஏற்றுக்கொள்ள வைக்கப்படுவாய்” என்ற யதார்த்தத்தை மண்டியிட்டுக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.

ஒன்று சரியான காரணங்களுக்காக சரியான செயல்களைச் செய்யுமாறு நியூயார்க் நாடக மன்றத்தின்ரோடு போராடி - நியூயார்க் நகரில் உள்ள அவர்களுடைய அரங்கில் விரைவாக நாடகத்தை நடத்த முயல்வது அல்லது நாடகம் ஓரங்கட்டப்பட்டு விடக்கூடாது என்பதால் வேறொரு அரங்கில் வேறொரு நாடக நிறுவனம் மூலம் நடத்துவது.

இந்த இரண்டு சாத்தியங்களையும் நாடக ஆர்வலர்கள் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மார்ச் 16 ராக்கேலின் மூன்றாவது நினைவு நாள். ராக்கேலின் தீரமுள்ள போராட்டச் செயலை நினைவு கூறும் விதத்தில் பாஸ்ரா, லண்டன், பிரஸெல்ஸ், செருசலேம், காபூல், கெய்ரோ, உட்பட உலகின் பல்வேறு நகரங்களில் ராக்கேல் கோரி நாடகவாசிப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான நாடக உலகத்தின் குரலாக அந்த வாசிப்பு வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

ஆதாரம் - The revolution weekly


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com