Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2006
காவல்துறை சீர்திருத்தம்

ச.பாலமுருகன்

கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்திற்கு எதிராக சுதந்திர வேட்கையுடன், தன்னெழுச்சியாகவும் சில இடங்களில் ஓருங்கிணைந்தும் 1857ல் முதல் இந்திய சுதந்திரப்போர் எழுந்தது. அதன்பின் தன்னாட்சி முழக்கங்களை நசுக்கவும் ஆளும் ஆங்கிலேயரின் கம்பெனிக்கு பாதுகாப்பு தரும் நோக்கிலும் முதல் காவல் ஆணையம் உருவாக்கப்பட்டது. அதன் வழிகாட்டுதலின்படி 1861ல் காவல்துறை சட்டம் உருவாக்கப்பட்டது. காலனியாதிக்க நலனைக் காப்பதும், சனநாயக உணர்வுகள் பரவாமல் தடுப்பதும் அச்சட்டத்தின் நோக்கமாக இருந்தது. மீண்டும் 1902ல் இரண்டாவது காவல்துறை ஆணையம் உருவாக்கப்பட்டது. புலனாய்வு செய்யும் அதிகாரிகளின் பொருளாதார நலன்களைப் பாதுகாக்க அதன் மூலம் வழி செய்யப்பட்டது. காவல் துறையின் செயல்பாடுகளைச் சீர்திருத்த மீண்டும் 1947ல் எடுக்கப்பட்ட முயற்சிகள் பல்வேறு சட்டச் சிக்கல்களால் தடைபட்டது. நாடு விடுதலையடைந்து நமக்கான சனநாயக அமைப்புகள் உருவான சூழலிலும் காலனியாதிக்க நலனை பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டத்தின்படியே காவல் துறையின் செயல்பாடுகள் இருந்தது.

காவல்துறையின் உள்ளே நிலப்பிரபுத்துவ வடிவங்களான எசமான்- ஆள்காரன் மனோபாவமும், மேலிருந்து வரும் கட்டளைக்கு கண்களை மூடி கீழ்படியும் நிலையும் அதிகரித்தது. பணிபுரியும் காவலர்களின் பணிநேரம் அதிகரிப்பு, விடுமுறையின்மை போன்ற பணிசார்ந்த நெருக்கடிகள் அதிகரித்தன. அதேபோன்று காவல்துறைக்கும் பொதுமக்களுக்குமிடையேயான உறவு நட்புரீதியாக இல்லாமல் அச்சம்தரும் வகையில் தொடர்ந்தது. சட்டமின்மை, ஊழல், நடுநிலையில்லாமை போன்றவை அதிகரித்தது. மேலும் காவல் துறையின் காவல்வன்முறை நாள்தோறும் அதிகரிக்கத் துவங்கியது. காவல்துறை சீரமைக்கப்பட வேண்டிய கட்டாயம் பற்றிய விவாதங்கள் எழுந்தன. 1977ம் ஆண்டில் தேசியக் காவல்துறை ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் முக்கிய நோக்கம் காவல்துறையில் புதிய மாற்றங்களைக் கொண்டுவருவதும் காவல்துறையினை மக்களின் அடிப்படைஉரிமைகள், அரசியலமைப்பு உரிமைகளை மதித்து பாதுகாக்கும் விதத்தில் இருந்தது. காவல்துறையின் செயல்பாடுகளை அரசியல் கட்சிகளின் தலையீடுகள் பாதிப்பது குறித்தும் விரிவாக இவ்வாணையம் ஆய்வு செய்தது. மேலும் காவல்துறையின் செயல்பாடுகளை செழுமைப்படுத்த பல்வேறு ஆழமான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. இறுதியில் இவ்வாணையம் 1979 பிப்ரவரியில் தன் முதல் அறிக்கையையும் அதே ஆண்டு ஆகஸ்டில் இரண்டாம் அறிக்கையையும் இறுதி அறிக்கையை 1981 மே மாதமும் தாக்கல் செய்தது.

காவல்துறை சமீபகாலத்தில் எதிர்கொள்ளும் சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் காவல்துறையுடன் பொதுமக்களுக்கு நிகழும் முரண்பாடுகள் அதனை சட்டம் வழியே தீர்க்கும் வழிமுறைகளையும் மேலும் அரசியல் தலையீடுகளால் காவல்துறை மீது திணிக்கப்படும் சட்டவழியற்ற நிர்பந்தங்களையும் அவ்விதமான நிர்பந்தங்களுக்கு பணிய மறுக்கும்போது காவல்துறையினர் எதிர்கொள்ளும் பணி மாறுதல் போன்ற சிரமங்கள் குறித்தும் விவாதித்தது. இவ்வாணையம் ஒரு காவல்துறை அதிகாரியின் பணிக்காலத்தை குறிப்பிட்ட காலத்திற்கு மாறுதலின்றி இருக்க உத்திரவாதப்படுத்தவும் கோரியது. ஆனாலும் இந்த ஆணையத்தின் அறிக்கை நடைமுறைக்கு வரவேயில்லை. இந்நிலையில் 1991ம் ஆண்டு இந்தியக் காவல்துறை சட்டத்தில் புதிய மாற்றம் கொண்டு வரக்கோரியும் தேசியக் காவல்துறை ஆணைய வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தி புதிய காவல்துறை சட்டம் இயற்றக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பதினைந்தாண்டுகள் உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு இறுதி முடிவெடுக்கப்படாமல் இருந்தது. இச் சூழலில் காவல்துறையின் சட்டவிரோத நடவடிக்கைகள் அரசியல் காழ்ப்புணர்வில் அது நடந்து கொள்ளும் எதிர்நிலைப் போக்குகள் பரவலாக உற்று நோக்கப்பட்டது. குறிப்பாக குஜராத் கலவரம் போன்றவற்றில் காவல்துறையின் நிலைப்பாடு மக்கள் விரோதமாக மாறியிருந்ததை தேசிய மனித உரிமை ஆணையம் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தது. இந்தப் பின்னணியில் காவல்துறை அதிகாரி ரிபைரோ கமிட்டி, மத்திய உள்துறை செயலராக இருந்த பத்மநாபய்யா கமிட்டி மற்றும் குற்றவியல் நீதி பரிபாலனை குறித்த மாலிமத் குழு பரிந்துரைகள் போன்றவற்றின் கூறுகள் பரிசீலிக்கப்பட்டன. மேலும் மத்திய அரசு புதிய காவல்துறை சட்டம் உருவாக்க முன்னாள் அரசு தலைமை வழக்குரைஞர் சோலி சொராப்ஜி தலைமையில் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது.

மேற்கண்ட அனைத்து குழுக்களின் வழிகாட்டுதல்களை எடுத்துக்கொண்டு உச்ச நீதிமன்றம் 2006 நவம்பர் வழங்கிய தீர்ப்பில், வரும் 2006 டிசம்பர் 31ம் தேதிக்குள் மத்திய மாநில அரசுகள் கீழ்கண்டவாறு காவல்துறை சீரமைப்பு செய்தும் குழுக்களை அமைத்து அதன் விபரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உத்திரவிட்டுள்ளது. இக்குழுக்களின் செயல்பாடுகள் மாநில அரசுகள் தங்களுக்கென புதிய காவல்துறை சட்டங்களை இயற்றும்வரை தொடரும். அரசு இயற்றும் புதிய சட்டத்தில் இக்குழுக்களைப் போன்ற குழுக்கள் உருவாக்கப்படும் அல்லது இக்குழுக்களே தொடர வழிவகை செய்யப்படும்.

1.மாநில பாதுகாப்பு ஆணையம் (State Security Commission): ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்படும் இந்த ஆணையத்தின் நோக்கம் தேவையற்ற அரசியல் தலையீடுகளால் காவல்துறையினர் சட்டத்தின் வழியின்றியும் அரசியலைப்பு வழங்கிய வழிகாட்டுதலுக்கு மாறாகவும் செயல்படாமல் கண்காணிப்பதாகும். இந்தக் கண்காணிப்பு குழுவுக்கு மாநிலத்தின் முதல்வர் அல்லது உள்துறை அமைச்சர் தலைவராக இருப்பார். காவல்துறை தலைவர் தலைமைச் செயலர் எதிர்கட்சி தலைவர் மற்றும் மூன்று அரசியல் சாராத சான்றோர்கள் இதில் உறுப்பினராக இருப்பார்கள். இவ்வமைப்பின் அறிக்கையானது காவல்துறை செயல்பாடு குறித்து முறையாக சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

2.மாநில காவல்துறை தலைவரை, ஆளும்கட்சியின் விருப்பப்படி தேர்வு செய்யாமல் காவல்துறையின் மூன்று மூத்த அதிகாரிகளிலிருந்து ஒருவரை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு செய்யும். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட காவல்துறை தலைவர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் பதவி வகிப்பார். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட காவல்துறைத் தலைவரை வெகு அசாதாரணமான காரணங்களான ஊழல், குற்ற வழக்கு தண்டனை அல்லது மாநில பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதல் போன்ற காரணங்களினால் மட்டுமே பதவி விலக செய்ய முடியும்.

3. காவல்துறை உயர் அதிகாரிகளான I.G, D.I.G போன்றவர்கள் பணி மாறுதலின்றி குறைந்தபட்சம் இரண்டாண்டுகள் பணிபுரிவார்கள். வலுவான ஊழல் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் போன்ற காரணங்கள் இருந்தால் மட்டுமே பணி மாறுதல் செய்யப்படுவார்கள்.

4. காவல்துறையில் உள்ள சட்டம் ஒழுங்கு பராமரிக்கும் பணியையும் புலனாய்வுப் பணியையும் இனி தனித்தனி பிரிவுகள் கவனிக்கும். இது முதலில் பத்துலட்சத்துக்கும் அதிகம் மக்கள் உள்ள நகரப்பகுதியில் துவங்கி பின் படிப்படியாக கிராமப்புற காவல்நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்.

5. காவல்துறை வாரியம் (Police Establishment Board): இந்த வாரியத்தில் காவல்துறை தலைவர் உள்ளிட்ட நான்கு மூத்த காவல்துறை அதிகாரிகள் இருப்பார்கள். காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (D.S.P) பதவி வரை உள்ள அனைத்து காவல்துறையினரின் பணி மாறுதல், பணி அமர்த்துதல், பதவி உயர்வு மற்றும் இதரப் பணிசார்ந்த செயல்பாடுகளை இவ்வாரியம் செய்யும். காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பதவிக்கு மேலுள்ள அதிகாரிகளின் மேற்கண்ட பணிசார் செயல்பாடுகளுக்கு இவ்வாரியம் பரிந்துரை செய்யும். பொதுவாக அரசு இந்த பரிந்துரைகளைப் பரிசீலிக்கும். இவ்வாரியத்தின் முடிவுகளால் பாதிக்கப்பட்டால் மேல்முறையீடு செய்யும் அமைப்பும் இதிலுண்டு.

6. காவல்துறை புகார் ஆணைக்குழு (Police Complaints Authority): காவல்துறை மீது பொதுமக்கள் தரும் புகார்களைப் பெற்று விசாரித்து காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பது இந்த ஆணைக்குழுவின் நோக்கமாக இருக்கும். காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மற்றும் அப்பதவிக்கு கீழுள்ள அனைத்துக் காவல்துறையினர் மீது வரும் புகார்களை விசாரிக்க மாவட்ட அளவில் இக்குழு உருவாக்கப்படும். ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி இதன் தலைவராக உயர்நீதிமன்ற நீதிபதியால் அமர்த்தப்படுவார். இதில் புகார்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மூன்றிலிருந்து ஐந்து உறுப்பினர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

இதேபோன்று காவல் துணைக் கண்காணிப்பாளர் பதவிக்கு மேலுள்ள அதிகாரிகள் மீது வரும் புகார்களை விசாரிக்க மாநில அளவில் ஒரு குழு அமைக்கப்படும். இக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி இருப்பார். மூன்று முதல் ஐந்து உறுப்பினர்கள் இருப்பார்கள். ஓய்வு பெற்ற அதிகாரிகளின் பணி பயன்படுத்திக் கொள்ளப்படும். மற்றபடி கொடிய குற்றங்கள் குறித்து வரும் புகார்களுக்கு வழக்கமான காவல்துறையினரின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்த காவல்துறை சார்ந்த மேற்கண்ட அதிகாரிகள் மீது மாவட்ட மற்றும் மாநிலக் காவல்துறை புகார் ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

7. தேசிய பாதுகாப்பு ஆணையம்: இது மத்திய அரசு அமைப்பது. மத்திய காவல்துறை அமைப்பின் (Central Police Organisation) பணி குறித்து இது செயல்படும். காவல்துறை அதிகாரி குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணிபுரிவார். எனினும் அவரின் திறமை, மற்றும் தேவை கருதி அது மாறுதலடையும். காவல்துறை பணியினை செழுமைப்படுத்த இது பயன்படுத்தப்படும். இதன் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் இருப்பார்.

மேற்கண்ட அனைத்து வழிகாட்டுதல்களையும் மத்திய மாநில அரசுகள் உடனடியாக செயல்படுத்த வேண்டும். 2007 ஜனவரி 1ம் தேதி முதல் இந்த குழுக்கள் தன் செயல்பாட்டைத் துவங்க வேண்டும் என்றும் இதனை நடைமுறைபடுத்திவிட்டதாக 2007 ஜனவரி 3ம் தேதி அன்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய மாநில அரசுகள் பிரமாணம் (அபிடவிட்) தாக்கல் செய்யவும் உத்திரவிடப்பட்டுள்ளது. இன்றைய காவல்துறையின் செயல்பாடுகள் நிலப்பிரபுத்துவத் தன்மையோடு இணைக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றி சனநாயகம் சார்ந்த பார்வையை இத்துறைக்கு தரவேண்டியது முக்கியமாகும். இச்சூழலில் இக்குழுக்கள் மக்களின் நண்பர்களாக செயல்படும் வகையில் அதனை மாற்றிக் கொள்ள ஆக்கப்பூர்வமான விவாதங்களை அரசியல் கட்சிகள், சமூக சனநாயக இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். ஏட்டுச் சட்டங்களை உயிரோட்டமிக்க ஆயுதமாக மாற்றுவது மக்களின் விழிப்புணர்வு மூலமே சாத்தியம். மக்கள் தாங்கள் சனநாயகத்தின் பொறுப்புள்ள ஆக்க சக்திகள் எனக் கருதி செயல்படவும் உரிமைக்காகப் போராடவும் முயலும்போது காவல்துறையிலும் சனநாயகப் பண்பு உருவாகும் சாத்தியங்கள் உள்ளது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com