Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் 2005
இலக்கம் 4, பிச்சிப்பிள்ளைத் தெருவிலிருந்து...

பிரளயனுடன் ஒரு நேர்காணல்


II

பார்த்திபராஜா - நிலவுகிற சமூக மதிப்பீடுகளை குறுக்கீடு செய்ய வேண்டியது ஒரு கலைஞனுடைய கடமை... இப்போ சென்னைக் கலைக்குழு ஒரு கூட்டு முயற்சியாக நாடகங்களை செய்யுது... புதிய புதிய விஷயங்களைப் பார்க்குது... அதைப்போல தமிழ்நாட்டுல வேற வேற நாடகக் குழுக்கள் பார்க்குதா... புதிய நாடகங்கள் உருவாக்கம், வீதிநாடக முயற்சிகள், அல்லது ஒரு இடத்துல செய்யப்பட்ட நாடகத்தைப் பிரதியெடுக்கறது... இந்த மாதிரி இருக்கா...

பிரளயன்- வீதிநாடகத்தில் மூன்று நான்கு குழுக்கள்தான் இயங்குது. தலித் இயக்கங்களில் செம்மணி, நாகர்கோவில் பகுதியில் கலை இலக்கிய பெருமன்றத்தின் ஒரு குழு- மதுரையில் தேசிய நாடகப்பள்ளியில் பயின்ற சண்முகராஜாவோட குழு- வீதிநாடகங்களும் அவ்வப்போது செய்யும். இடதுசாரி இயக்கங்கள்ல செயல்பட்ட 24 குழுக்களும் இப்ப நின்னு போச்சு... சென்னையில் எங்களுடைய சென்னை கலைக்குழு, பாவேந்தர் கலைக்குழு, பகத்சிங் நாடகத்தை செய்த அக்னி நாடகக்குழு தவிர மற்ற குழுக்கள்லாம் இயங்கறதில்ல. கூத்துபட்டறையும் வீதிநாடகம் பண்றாங்க. மௌனக்குரல் ஒரு காலத்துல பண்ணிகிட்டுருந்தாங்க... கிறிஸ்டியன் காலேஜ் பேராசிரியர் ஜார்ஜ், மாணவர்கள வச்சி அப்பப்போ சில முயற்சிகள் செய்கிறார். டான் போஸ்கோ தீபிகாவில் சில நேரத்தில் ஏதாவது பண்ணுவாங்க. ஆனா தொடர்ந்த செயல்பாடா இருக்கிறதில்ல...

புதுகை பூபாளம் வீதிநாடகம் அதிகம் பண்றதில்லை. கதாகலாட்சேபம் மாதிரி இசையும் உரையாடலும் கொண்ட நிகழ்ச்சி. அது ஒரு புதுவடிவம். ரொம்ப Spantanity Skill வேணும் அதுக்கு. திறமையுள்ள இளைஞர்கள். கிருஷ்ணகிரி மக்கள் கலைக்குழு பெரும்பாலும் எங்களோட ஸ்கிரிப்டைத் தான் செய்யறாங்க... சுயமாகவும் சிலது தயாரிக்கிறாங்க... ஒசூர் கலைக்குழு எங்களுடைய ‘பெண்’ ‘முற்றுப்புள்ளி’ இரண்டையும் செய்திருக்கு. இப்ப இயங்கிறதில்ல. தாமிரபரணி கலைக்குழு, கருமாத்தூர் திசைகள், சேலம் அக்னி கலைக்குழு- இவையே தற்போது இயங்கிக்கொண்டிருப்பவை.

பார்த்திபராஜா: இன்றைக்கு தமிழகத்தில் நடத்தப்படும் வீதி நாடகங்களுக்கு ஒரு வரையறையும், புரிதலும் இருக்கிறதா?

Scene from Pralayan's drama பிரளயன்: ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கலாம். நான் வீதி நாடகம் செய்கிறபோது எங்களுக்குன்னு ஒரு வரையறை உண்டு. அது வளர்ந்துகொண்டும், மாறிக்கொண்டும் வரலாம். எது சரியான வீதிநாடகம் எது தவறானது என மதிப்பீடு செய்து தீர்ப்பு வழங்கும் நாள் இன்னும் வரவில்லை. இன்று இருக்கிற பண்பாட்டுச் சூழல்ல யாருடைய நாடகமாக இருந்தாலும் அது சமூகத்துல என்ன விளைவுகளை ஏற்படுத்துது என்பதை வைத்துத்தான் அதை மதிப்பீடு செய்ய முடியும். நாடகமாடுவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. ஏற்கனவே இருந்ததைப் போல இன்று வீதிநாடகம் இல்லை. தன்மயமாக்கப்பட்டு பலவிதங்களில் மாறியிருக்கு. ஒரு பொருளை விளம்பரப்படுத்துவதற்குக்கூட வீதிநாடகம் பண்ணமுடியுமான்னு சிலபேர் கேட்கிறாங்க. பண்ணமுடியும்னு சிலர் ஆரம்பிச்சிருக்காங்க.

பார்த்திபராஜா: வீதிநாடக இயக்கத்தை நீங்களெல்லாம் முன்னெடுத்து வந்தவங்க. அப்படி ஒரு வரையறைக்குள்ள இதனுடைய ஸிமீதீமீறீ-ங்கிற தன்மையை அழுத்தமாகப் பதித்திருந்தால் இன்னிக்கு இந்தமாதிரியான ஒரு டிரெண்ட் வளர்ந்திருக்காதே?

பிரளயன்: இன்று வீதி நாடகம் என்பது விழிப்புணர்வு நாடகங்களாக என்.ஜி.ஓக்களின் தகவல் சொல்லும் உத்தியாக (Media strategy) மாறி வருகிறது. நீங்கள் அதைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். நாம் நம்முடைய கண்ணோட்டத்திலிருந்து மட்டுமே சில விஷயங்களை பார்க்க முடியாது. என்.ஜி.ஓக்கள் நாடகம் செய்வதை தடைசெய்ய வேண்டுமென்று கோரிக்கை வைக்க முடியாது. நீங்கள் நம்புகிற வீதி நாடகத்தை வலுவாகச் செய்வதன் மூலம் மட்டும்தான் அதை எதிர்கொள்ள முடியும். ஒரு என்.ஜி.ஓ. நாடகத்திற்கு இருக்கிற நோக்கம் என்ன? பலகீனங்கள் என்னவெனில் பிரச்சினைகளை ஒன்றோடொன்று தொடர்புபடுத்துவதை அவர்கள் அனுமதிப்பதில்லை.

என்.ஜி.ஓ வில் நீங்க ஒரு பிரச்னையை எடுக்கும்போது Confrontation-க்கு போகவேண்டியிருக்கும். அரசு அதிகாரிகளோட நிர்வாகத்தோட, மோதலுக்கும், முரண்பாடுகளுக்கும் நீங்க போக வேண்டியிருக்கும். எல்லா விஷயத்தையும் மோதல் முரண்பாடு உண்டாக்கித்தான் தீர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒத்த கருத்தை உருவாக்கியும் கூட சில விஷயங்களை செய்து முடிக்கலாம். சில இடங்களில் வலுக்கட்டாயமாக தவிர்க்கவே முடியாது. அதுக்கு அந்த என்.ஜி.ஓக்களுடைய செயல்பாட்டு எல்லைகள் இவற்றை அனுமதிக்காது. தண்ணீர் சம்பந்தமா ஒரு ப்ராஜெக்ட் செய்யறாங்க. அதுல கிடைக்கிற அனுபவங்களை அடுத்த திட்டத்தில் பயன்படுத்தனும்னா அது முடியாது. அடுத்து கல்வி பற்றிய ப்ராஜெக்ட்டுக்கு போயிடுவாங்க.அவங்க செயல்பாடுகளுக்குள்ள தொடர்ச்சி இருக்காது. தர்க்க ரீதியான உறவு இருக்காது.

இருந்தபோதிலும் என்.ஜி.ஓக்கள் செயல்படும் தளங்களை குறைத்து மதிப்பிட முடியாது. நாம் எதையெல்லாம் முக்கியமற்றதென நினைக்கிறோமோ அதிலெல்லாம் வேலை செய்யறாங்க. அதை ரொம்ப சுலபமா எளிமைப்படுத்தி பார்த்திட முடியாது. பிரச்சினைகள் இருக்கிறது என்பது உண்மை. இப்ப என்.ஜி.ஓக்கள் வீதிநாடகம் செய்யறாங்கன்னா அவங்க வீதிநாடகத்துக்கு வரணுங்கிற ஆர்வத்துல செய்யறதில்ல. அவங்களுக்கு பண்ட் தருகிற ஏஜென்சியிடமிருந்து, உங்கள் திட்டம் மக்கள் மத்தியில் எப்படி ஈர்க்கப்படுகிறது ? எப்படி இந்த திட்டத்தை மக்கள் மத்தியில் பரவலாக்குகிறீர்கள் எனும் கேள்வி வர்றப்போ அதுக்கு வீதிநாடகம்தான் பதில்னு வந்துடுது. ஆனா என்.ஜி.ஓக்களுக்கு வீதி நாடகம் பற்றின பிரக்ஞை கிடையாது. மேலிருந்து ஒரு கருத்தை திட்டமிட்டு உருவாக்கி கீழ்மட்டத்தில் அதை பரவலாக்குவதுதான் என்.ஜி.ஓ அணுகுமுறை- அரசாங்க அணுகுமுறை. திட்டத்தை உருவாக்குவதற்காக கீழ்மட்டத்தில் பலவிதமான ஆய்வுகளை நடத்தி Case Study நடத்தி அதன்மூலம் மேல்மட்டத்தில் கருத்துக்களை திட்டமிட்டும் இருக்கலாம். ஆனால் இச்செயல்பாட்டிலிருக்கும் பிரச்னை என்னவென்றால் மக்களை ஒரு மந்தையாக நினைத்து (Passive Being) அவர்களை எந்த கருத்துக்கும் உடன்பட வைக்கலாம் என்ற அணுகுமுறைதான் அவர்களிடம் கோலோச்சுகிறது. ஆனால் உண்மையான வீதிநாடகம் என்பது மக்களை மந்தைகளாக கருதாமல் செயலூக்கமுள்ளவர்களாக (Active Being) கருதுகிறது. அடிமட்டத்திலுள்ள எதிர்ப்புணர்வுகளை கொந்தளிப்புகளை மேல்மட்டத்துக்கு கொண்டு செல்கிறது.

என்.ஜி.ஓக்களின் தன்மையிலான இதுபோன்ற ஒரு நாடகப்போக்கிற்கு அறிவொளி இயக்க நாடகங்கள் வித்திட்டுவிட்டதோ என்ற கருத்து எனக்குண்டு. அந்த நாடகங்களை உருவாக்குவதில் பயிற்சியளிப்பதில் நான் முழுமையாக பங்கேற்றிருந்தாலும் கூட நான் இதை ஒரு சுயவிமர்சனமாகத்தான் பார்க்கிறேன். அறிவொளியில் ஒரு நாடகத்தை உருவாக்குவோம். திறமை வாய்ந்த பல நாடக ஆளுமைகளின் பங்களிப்பில் அது உருவாகும். பிறகு அந்த நாடகம் அட்சரம் பிசகாமல் அசைவுகள் அடவுகள் படிமங்கள் மாறாமல் அப்படியே பல குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஒரே மாதிரியான நாடகத்தை நூற்றுக்கணக்கான குழுக்கள் தமிழகம் முழுவதும் நடத்தும். ஒரு மையப்படுத்தப்பட்ட தயாரிப்பை பல இடங்களுக்கு கொண்டு செல்வது என்ற போக்கு அப்போது ஏற்பட்டது. மையப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட அந்த நாடகம் செறிவுள்ளதாகவும் வலுவானதாகவும் கூட இருக்கலாம். கருத்தியல் ரீதியாக எந்த பிழையும் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் என்ன நடந்தது என்றால் ஒரு மையப்படுத்தப்பட்ட தயாரிப்பை பல இடங்களுக்கு கொண்டு செல்கிற ஒரு முன்மாதிரியை அது உருவாக்கிவிட்டது.

நூற்றுக்கணக்கான நடிகர்களை பாடகர்களை வாத்ய கலைஞர்களை இந்த அறிவொளி கலைப்பயணம் உருவாக்கியிருந்தாலும் நாடகத்தை எழுதுகிற- தயாரிக்கிற திறமைகளை அது மாவட்டங்கள் தோறும் உருவாக்கத் தவறிவிட்டது. அதனால் உள்ளூர் முயற்சிகள், நாடகக்குழுக்களின் தனிப்பட்ட முயற்சிகள் வளர்த்தெடுக்கப்படவில்லை. குழுச் செயல்பாடுகள் முற்றிலும் அழிந்துபோனது. மாநிலம் முழுவதும் கலைஞர்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் பரவலான தனித்த சுயேச்சையான நாடக முயற்சிகளுக்கு அது இடம் தரவில்லை. மையப்படுத்தப்பட்ட தயாரிப்பு என்பது ஒன்றிரண்டு முறை நிகழ்வது தவறில்லை. ஒரு இயக்கத்தின் தொடக்கநிலையில் இதுதான் சாத்தியம். ஆனால் இதுவே சிறந்த உத்தி என்று பின்னாளில் ஆகிவிட்டது. அறிவொளி இயக்கமோ, அதனை வழிநடத்திய அறிவியல் இயக்கமோ இதை உணர்ந்து கொள்ளவேயில்லை. இந்த முன்மாதிரியைத்தான் என்.ஜி.ஓக்கள் நாடு முழுவதும் விஸ்தரித்தார்கள்.

மையப்படுத்தப்பட்ட தயாரிப்புகளில் ஒரு நாடகாசிரியன்- ஒரு இயக்குனன் இருந்தான். எனினும் கூட்டுச்செயல்பாட்டில் பல நாடக ஆளுமைகளின் பங்களிப்பில் இவை உருவாயின. இதே அனுபவங்களின்- படிமுறைகளின் மூலம் மாவட்டங்கள் தோறும் நாடகங்களை உருவாக்குகிற பல குழுக்கள் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் அறிவொளி இயக்கத்தில் இதற்கான இடம் இருக்கவில்லை.

முந்தைய பகுதிதொடர்ச்சி...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com