Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
ஜூலை 2005
ரிக்வேத ஆரியர்கள் - கங்கைச் சமவெளியில் வேதநாகரீகம்

பேரா. கா.அ.மணிக்குமார்


ஆரியர்களின் கிழக்கு நோக்கிய விரிவாக்கலை உருவக பாணியிலேயே (aegoricay) பல நூல்கள் விவரிக்கின்றன. அக்கினியின் புனிதத் தீ வழி நெடுகிலும் இருந்த காடுகளை அழித்து, பெரும் நதிகள் இருந்த இடத்தில் மட்டும் சிறிது நின்று கோசல நாட்டின் எல்லைக்கருகில் (இன்றைய உத்திரபிரதேசம்) சென்றடைந்தது என சடபத பிராமணம் கூறுகிறது. இடையில் கான்டக் நதியைக் கடப்பதில் அக்கினிக்கு உதவிய விதேக மாதாவா பெயரில் அப்பகுதி விதேகம் என பின்னர் அழைக்கப்பட்டது எனவும் அது தெரிவிக்கிறது.

aryas சீதை பிறந்த விதேகம், ஜனகமன்னரின் புதல்வன் இராமன் பிறந்த கோசலம் அடுத்தடுத்து அமைந்திருந்த இப்பகுதியில்தான் வால்மிகியின் இராமாயணம் பிறந்தது. கி.மு.1000இல் இப்பகுதியில் இந்தியர் வாழ்க்கை நிலை பற்றி அறிய மகாபாரதம் உதவுகிறது. அழகு தேவதை கங்காவுடன் சந்தானு அரசன் கொண்ட காதல், திருமணத்தில் பின்னர் முடிந்தது.

கங்கைச் சமவெளிப் பகுதியில் ஆரியர் குடியேற்றம்பற்றி அது உணர்த்துகிறது. சந்தானு மன்னனின் மரபுரிமைச் செல்வத்தின் மீதான உரிமைப்போரின் ஓர் பகுதியாகவே மகாபாரதப் போர் பார்க்கப்படுகிறது. ஆரிய இனக்குழுக்களின் கூட்டமைப்பு ஓர் பேரரசாக மாறும் கால நிலையை உணர்த்துவதாக இப்போர் அமைந்துள்ளதாக வரலாற்றறிஞர்கள் கருதுகின்றனர்.

மகாபாரதத்தில் இராமர், சீதை பெயர்கள் பல தடவை குறிப்பிடப்படுவதால் மகாபாரதத்திற்கு முன்பு இராமாயணம் (சுமார் கி.மு.500) எழுதப்பட்டிருக்க வேண்டும் என கருதப்படுகிறது. காடுகள் அடர்ந்த பகுதிகளில் குடியிருந்த பல பூர்வீக இனக்குழுக்கள் ஆரியர்கள் விரிவாக்கத்தால் வெளியேற்றப்பட்ட ஆத்திரத்தில் தொடர்ந்து ஆரியர்கள் குடியிருப்புகளின் மீது தாக்குதல் நடத்தியிருக்கக்கூடும். ஏனெனில் காடுகளில் அமைதியாக ஆன்மீக வாழ்வில் ஈடுபட்டிருந்த யோகிகளையும் ஞானிகளையும் அசுரர்களின் தலைவனாகிய இராவணன் தொடர்ந்து தாக்கி வந்ததாகவும், இக்கொரிர அரசனின் இராஜ்யம் லங்கா எனவும் மகாபாரதம் தெரிவிக்கிறது.

இலங்கைக்கும் மகாபாரதத்தில் அறியப்படும் லங்காவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பல வரலாற்றறிஞர்கள் கருதுகின்றனர். அவுத் அருகாமையில் மாளவம் தென்பகுதியில் ஆரியர்கள் வருகைக்கு முன்னர் பூர்வீகக் குடியினர் வாழ்ந்த பகுதியே லங்கா என அவர்கள் நம்புகின்றனர். ஆரியா மற்றும் ஆரியர் வருகைக்கு முன் குடியிருந்த பூர்வீக இனக்குழுக்களுக்கும் இடையேயான மோதலாகவே இராமாயணக்கதை புரிந்து கொள்ளப்படுகிறது. பூர்வீக இனக்குழுக்கள் ஆரியர்களிடமிருந்து இரும்பின் உபயோகத்தை அறிந்து பல புதிய ஆயுதங்களை தயாரித்து அவர்களை எதிர்த்துப் போரிட்ட போதிலும் அவர்களிடையே காணப்பட்ட ஒற்றுமையின்மையும் ஆரியர்களின் தரம் கூடிய ஆயுதங்களும் அவர்களை முழுமையாகத் தோற்கடிக்க உதவின.

பின்வேதகால ஆரியர் அரசவை செயல்பாடுகளையும் அரசவையில் இடம் பெற்றிருந்த மேன்மக்களின் குணாதிசயங்களையும் அறிந்து கொள்வதற்கு இராமாயணம் உதவுகிறது. உதாரணத்திற்கு, வயதான மன்னரின் மூன்று மனைவிகளும் அவரவரது மகன்களை அரியணையில் அமர்த்த நடத்தும் சூழ்ச்சிகளையும் போராட்டங்களையும் இங்கு குறிப்பிடலாம்.

இக்காலத்திற்குள் ஆரியர்கள் விந்தியமலையைக் கடந்து தென் இந்தியாவினுள் ஊடுருவியிருந்ததை மகாபாரதம் விவரிக்கிறது. இமயமலை பால் பொறாமை கொண்டு விந்தியமலை மிகப் பெரும் அளவில் வளர்ந்து சூரியனின் பாதையை மறைத்ததால் இமயமலையில் வாழ்ந்த கடவுள்கள் தாங்கள் தூதுவர் அகஸ்தியரை தென் இந்தியாவிற்கு அனுப்பியதாகவும், விந்தியாவின் குரு அகஸ்தியர் ஆதலால், விந்தியமலை தனது குரு வருவதைக் கண்ணுற்றதும் குனிந்து வழி விட்டதாகவும், தான் திரும்பும் வரை அவ்வாறே இருக்குமாறு பணித்துச் சென்ற அகஸ்தியர் மீண்டும் திரும்பி வரவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

aryas ரிக்வேத ஆரியர்கள் இந்த பிரபஞ்சத்தை கடவுள் படைத்ததாகக் கருதவில்லை. கடவுள்களை பிரபஞ்ச படைப்பின் ஒரு அங்கமாகவே பார்த்தனர். ஆனால் பின்வேதகாலத்தில் பிரஜாபதி (பின்னாளய பிரமா) படைப்புக் கடவுளானார். அதுபோல் ரிக்வேத காலத்தில் சடங்குகள் எளிமையாக பெரும்பாலும் வீடுகளில் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிராமணர் வீட்டிலும் ஒரு புனித அடுப்படி இருந்தது. குடும்பத் தலைவரோ அல்லது அவரது சமையற்காரரோ சடங்குகளைச் செய்தனர். நாள் ஒன்றுக்கு ஐந்து தடவைகள் இச்சடங்குகள் செய்யப்பட்டன. சோம,ராஜசூய, அசுவமேத யாகங்கள் மட்டுமே பொது பலி பீடங்களில் நடத்தப்பட்டன. ஆனால் பின் வேத காலத்தில் பிராமண புரோகிதர்கள் மட்டுமே சடங்குகளை செய்யுமளவிற்கு சாஸ்திரங்கள் சிக்கலாக்கப்பட்டிருந்தன. மேலும் ஆண்டு முழுவதும் பலி பீடங்களில் யாகங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தன.

பல நேரங்களில் யாகம் நடத்துவதற்கு முன்பே மழை பொழிந்ததும் யாகம் முடிந்த பல வாரங்களுக்குப் பிறகும் மழை பெய்யாததும் மக்களுக்கு யாகத்தின் பலன் பற்றிய சந்தேகத்தை கிளப்பியது. படைப்புகளுக்காக பணம் அதிகம் செலவழித்திருந்த மன்னர்களும் பெரு வணிகர்களும் பிராமணர்களின் இறை சக்தி மீது நம்பிக்கை இழக்கத் தொடங்கினர். அதற்கு மேலாக பணம் மற்றும் பொருள் விரயம் அவர்களை மிகவும் வருந்தச் செய்தது. யாகத்தால் பலன் இருந்தால் மன்னர் ஏன் மரணமடைய வேண்டும்? பணம் படைத்தவன் ஏன் நோய்வாய்ப்பட வேண்டும்? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஹஸ்தினாபுரம், ஆலம்கிர்பூர் மற்றும் கவுசாம்பி ஆகிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள பல பொருள்கள் மூலம் இரும்பு உலோகத் தொழிற்கலையில் ஆரியர்கள் சிறந்து விளங்கியதை அறிகிறோம். இரும்பினால் ஆன கோடாரி மூலம் நிலத்தைப் பண்படுத்தியும், இரும்புக் கலப்பையால் உழுதும் விவசாயத்தை பெருமளவில் அவர்களால், மேற்கொள்ள முடிந்தது. கங்கைச் சமவெளி மிகவும் செழிப்பான நிலத்தைக் கொண்டிருந்ததால் விவசாயம் சிறப்பாக நடைபெற்றது. இதனால் உணவு பற்றிய கவலை நீங்கியது. உபரி உணவுப் பொருள்களை சேமித்து வைத்துக்கொள்ள முடிந்ததாலும் ஓய்வுநேரத்தில் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து விடுபட்டிருந்த சிலர் வாழ்க்கையின் முழு அர்த்தத்தையும் புரிந்து கொள்ள முயன்றனர். இறவாமையை வழங்காத இல்வாழ்க்கையால் எனக்கு என்ன பயன்? என பிருகதாரண்யக உபனிடதத்தில் மைத்ரேயி புலம்புகிறாள்.

இக்கால கட்டத்தில் மன்னர்கள் தங்கள் ஆட்சிப்பகுதியையும் ஆதிக்கத்தையும் விரிவுபடுத்த முயற்சிகள் எடுத்தனர். அதற்காக மேற்கொள்ளப்பட்டதுதான் அசுவமேதயாகம். பலம் வாய்ந்த ஓர் வெண்ணிறம் கொண்ட ஆண் குதிரை கட்டவிழ்த்து விடப்படும். குதிரை செல்லுமிடமெல்லாம் மன்னரது போர்வீரர்கள் பின் தொடர்ந்து செல்வர். எவ்வித எதிர்ப்பும் இல்லாவிட்டால் மன்ணின் ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதிகளாக அவை பிரகடனம் செய்யப்படும். வருட முடிவில் குதிரை மீண்டும் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பலி பீடத்தில் கொல்லப்பட்டு கூறு போடப்பட்டு யாகம் நடத்தப்படும். அதிகாரத்தை பரவலாக்கியிருந்த மன்னர்கள் ராஜா என்ற பட்டத்துடன் மன நிறைவு பெறாமல் இக்காலகட்டத்தில் மகாராஜா எனப்பட்டம் சூட்டி மகிழ்ந்தனர்.

இத்தகைய மன்னர்கள் பிராமணச் சடங்குகள் மீது வெறுப்புற்று அதிருப்தியுடன் காடுகளில் தியானம் செய்துகொண்டும், கற்றவற்றை தங்கள் சீடர்களுக்கு கற்றுக்கொடுத்தும் வந்த கங்கைச் சமவெளியில் காணப்பட்ட அறிவுஜீவிகளையும், முனிவர்களையும் ஆதரிக்கத் தொடங்கினர். பிராமணியத்திற்கு எதிரான இத்தகைய கி.மு. எட்டாம் நுற்றாண்டுக் கிளர்ச்சியின் விளைவாகக் கிடைத்ததுதான் உபனிடதங்கள். உபனிடதங்கள் என்றால் என் முன் உட்கார் எனப் பொருள் அதாவது கற்றுணர்ந்த ஊகங்களையும் செய்திகளையும் காடுகளில் நடந்த விவாதத்தில் குருக்கள் மாணவ சீடர்களுக்கு தெரிவிப்பதாக பாடல் வடிவில் உரையாடலாக 108 மறைஞானிகளின் கருத்துக்கள் நமக்கு கிடைத்துள்ளன.

108 உபனிடதங்களில் 13 மட்டுமே கி.மு. ஏழு மற்றும் நான்காம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டவை எனவும், மற்றவை புராணங்களை ஒத்திருப்பதால் பின் காலத்தில் குறிப்பாக கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கலாம் என வரலாற்றறிஞர்கள் கருதுகின்றனர். சத்திரியர்கள் வேதங்களைக் கற்றுக்கொள்ள தடை இல்லாததாலும், பிராமணர்கள் வேதசடங்குகள் செய்வதை மட்டுமே தங்களது முற்றுரிமையாகக் கருதியதாலும், இறைநூல் ஆய்வில் சத்திரியர்கள் ஈடுபட்டனர். இதனால் அரச குடும்பத்தைச் சார்ந்த பலர் இக்காலகட்டத்தில் ஆன்மீகக் கோட்பாட்டில் வல்லுநர்களாக உருவாகினர். பிராமணரான கௌத அருனி கூடுவிட்டு கூடு பாய்தல் பற்றி தான் பாஞ்சால நாட்டு மன்னன் பிரவாகன ஜெய்வலியிடம் கற்றதாக பிருகதாரண்யக உபனிடதம் கூறுகிறது. இதுபோன்று, பிராமண வகுப்பைச் சார்ந்த கார்க்ய பாலகி மகதநாட்டு மன்னன் அஜாதச்தருவை அணுகி இறைமறைபற்றி அறிந்து கொள்ளமுயன்றபோது, அரசாளும் வம்சத்தைச் சார்ந்த ஒரு நபர் பிராமண சீடருக்கு கற்றுக் கொடுப்பது நடைமுறைக் கொள்கைக்கு எதிராக இருந்தாலும், வா, நான் கற்றுக் கொடுக்கிறேன், எனக் கூறியதாக கௌசிடகி உபனிடதம் தெரிவிக்கிறது.

மெய்ப்பொருள் பற்றிய புதிர்கள் பலவற்றிற்கு விளக்கங்களை உபனிடதங்களில் காண்கிறோம். இறைமறையின் கோட்பாடுகளான பிரமா, ஆத்மா, கர்மா, சம்சாரா ஆகியவை உபனிடதங்களில் விவரிக்கப்படுகின்றன. பிரபஞ்ச அளவிலான ஆத்மா பிரமன் எனவும், தனிநபர் ஆத்மா ஆத்மன் எனவும், இரண்டும் ஒன்றே தவிர வேறுபட்டவை அல்ல எனவும் விளக்கப்படுகிறது. ஆத்மன்தான் பிரமன் என பிருகதாரண்யக உபனிடதத்தில் யாக்ய வால்க்யா கூறுவதை ஓர் நீதிக் கதையின் மூலம் சங்தாக்ய உபனிடதம் விளக்குகிறது.

aryas மகாஞானி உத்தலக அருனி தனது சீடன் சுவேதகேதுவிடம் ஓர் அத்திப்பழத்தைக் கொண்டுவரச் செய்து அதை வெட்டச் சொல்லி உள்ளே என்ன இருக்கிறது என பார்க்கச் சொல்கிறார். சிறு விதைகள் என பதிலளிக்கிறான் சீடன். அதில் ஒன்றை வெட்டுமாறு பணிக்கிறார் அருனி. வெட்டிய பாகத்தினுள் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு, ஒன்றுமில்லை என்கிறான் சீடன். நீ பார்க்க முடியாததிலிருந்து தான் ஒரு மிகப்பெரிய அத்திமரம் வளர்கிறது. அது போன்று இவ்வுலகில் காணப்படுகிற எல்லாவற்றிற்கும் மூலம் அந்த கண்ணிற்கு புலப்படாத நுட்பமான பொருளே என்கிறார் அருனி.

மேற்கூறியதையே சிறிது மாறுபட்ட முறையில் விளக்குகிறது சுவேத சுவதார உபனிடதம்: எள்ளில் எண்ணைய், பாலாடையில் வெண்ணை, ஆற்றுப்படுக்கையில் நீர், நெருப்புக்குச்சியில் தீ என்பதைப் போன்றே ஆன்மாவை தனக்குள்ளிருந்து புரிந்து கொள்வதும்.

கதஉபனிடதம் இதற்குமேல் ஒருபடி சென்று உலகமே ஒரு மாயை என அறிவிக்கிறது. கொலையாளி தான் கொன்றதாக நினைத்தால் அல்லது பலியானவன் கொல்லப்பட்டதாக எண்ணினால் இருவருள் எவரும் உண்மையான அறிவாற்றலை பெற்றிருக்கவில்லை. ஏனெனில் முன்னவன் கொல்லவும் இல்லை, பின்னவன் கொல்லப்படவும் இல்லை.

மீட்சி என்பது மோட்சத்தில் நிலைபேறுடைய பேரின்ப வாழ்க்கையில் அல்ல. மாறாக இப்பிறவியிலிருந்து விடுபட்டு மீண்டும் பிறவாமையைப் பெறுவதே ஆகும் என தெளிவுபடுத்தப்படுகிறது. தனது சிந்தனை, செயற்பாடுகள் விளைவாக ஒரு மனிதன் ஊழ்வினைப் பயனை அனுபவிக்கிறான். உபனிடதங்களின் முக்கிய குறிக்கோள் இப்பிறவி பற்றி விளக்குவதும், அதிலிருந்து மீள்வதற்கான பாதைபற்றிய புரிதலைக் கொடுப்பதுமாகும்.

ஆனால் மேற்கூறிய நுட்பமான கருத்துக்களை எல்லாம் மக்களுக்கு புரிய வைப்பது எளிதான காரியமாக அக்காலத்தில் இருக்கவில்லை. எனவே பிரமன் ஆத்மன் கோட்பாடுகள் பற்றி புரிந்து கொள்வதில் குழப்பம் நிலவியது. புதிய கடவுள்களைத் தோற்றுவிப்பதும் சடங்குகளை உள்ளடக்கிய மதவழிபாடு நீடிப்பதும் தொடரவே செய்தன.

( தொடரும் )

கா. அ. மணிக்குமார் ([email protected]), பேராசிரியர், வரலாற்றுத்துறை,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com