Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2008

கொஸாவோ : மனிதாபிமானத் தலையீடும் தேசிய விடுதலையும்
எஸ்.வி.ராஜதுரை
.

உலகின் சிறிய நாடுகளிலொன்றான செர்பியாவுக்கு உலக அளவில் ஒரு சிறு கௌரவத்தையும் ஆறுதலையும் தேடித்தந்த மூன்று செர்பிய விளையாட்டு வீரர்கள் 2008 விம்பிள்டனில் காலிறுதிப் போட்டிக்கு முன்பே களத்திலிருந்து வெளியேறினர். உலகத் தரவரிசையில் ஆண்களில் மூன்றாவது இடத்தை வகித்துள்ள ஜோகோவிச் இரண்டாவது சுற்றிலும் பெண்களில் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ள அனா ஐவானோவிச், யெலினா யாங்கோவிச் ஆகியோர் முறையே மூன்றாம், நான்காம் சுற்றிலும் ஆட்டமிழந்தனர். தோல்வியைத் தழுவுவதற்கு முதல்நாள் தொலைக்காட்சியொன்றுக்குத் தந்த நேர்காணலில், யெலினா யாங்கோவிச், பொருளாதார வலிமையோ ஊக்குவிப்பு யந்திரங்களோ இல்லாத ஒரு சின்னஞ்சிறு நாட்டிலிருந்து வந்திருப்பவர் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதைக் கேட்கும் போது மனம் சற்று நெகிழத்தான் செய்தது -டென்னிஸ் மேட்டுக்குடியினரின் விளையாட்டுத்தான் என்னும் போதிலும். ஆனால், இதைவிடப் பன்மடங்கு பெரிய சோகம் - முன்பு எற்பட்ட சோகங்கள் போதாதென்று- அந்த நாட்டிற்கு இந்த ஆண்டுத் தொடக்கத்திலேயே ஏற்பட்டுவிட்டது.

பல தசாப்தங்களாக யூகோஸ்லேவியா என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்ததும், 1989 முதல் துண்டுதுண்டாக் கப்பட்டதுமான ஒரு நாட்டின் வரலாற்றுரீதியான வாரிசாகத் தன்னைக் கருதிக் கொண்டிருப்பதும், ஏறத்தாழ 20 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர்களாலும் ஏகாதிபத்திய இராணுவத் தலையீடுகளாலும் அலைக்கழிக்கப்பட்டு, அரசியல்,பொருளாதார சரிவையும் சிதைவையும் மட்டுமே கண்டு வந்துள்ளதுமான சின்னஞ்சிறு கிழக்கு ஐரோப்பிய நாடான செர்பியாவிலிருந்து, தன்னை முற்றிலும் துண்டித்துக் கொண்ட ஒரு சுதந்திரநாடாகத் தான் இருக்கப் போவதாக அந்த நாட்டின் ஒருபகுதியாக இருந்து வந்த கொஸோவோ மாநில நாடாளுமன்றம் சென்ற பிப்ரவரி 17ஆம் நாள் அறிவித்தது. 1999 ஆம் ஆண்டு முதற்கொண்டே செர்பியாவுக்கு அந்த மாநிலத்தின் மீதான கட்டுப்பாடு ஏதும் இருக்கவில்லை என்றாலும், அந்த சுதந்திரப் பிரகடனம் அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியம் தனக்கு ஏற்படுத்திய மற்றொரு அவமானம் என்று அது கருதியதில் வியப்பில்லை.

செர்பியாவும் அதன் மக்களும் கடந்த இரு தசாப்தங்களுக்கும் மேலாக அனுபவித்து வருவது ஏகாதிபத்திய அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் அரசியல், பொருளாதார, இராணுவத் தலையீடுகளும் ஒடுக்குமுறைகளும் மட்டுமல்ல; உலகின் மிக வலுவான அச்சு, மின்னணு ஊடகங்கள், வல்லரசுகளின் அரசு யந்திரங்கள், ஐ.நா. அவை ஆகியவற்றின் திட்டமிட்ட, சாதுரியமான, கோயபல்ஸிய பொய்ப் பிரச்சாரங்கள் அவர்களைப் பற்றி உருவாக்கியுள்ள கோரமான பிம்பங்கள் அவர்களை உளவியல் வல்லாங்குக்கு (rape) உட்படுத்தியுள்ளன. செர்பியர்களையும் அவர்களது தேசத்தையும் உலகின் கண்களுக்கு அரக்கத்தனமானவர்களாகக் காட்டுவதில் வெற்றியடைந்த ஊடகங்களின் அசுர பலம் நம்மை மலைக்கவைக்கிறது. ஏனெனில், உலகம் முழுவதிலுமுள்ள இடதுசாரிகளிலும் தாராளவாதிகளிலும் கணிசமானோர் இப்பொய்ப் பிரச்சாரத்தில் மயங்கியுள்ளனர்.

எடுத்துக்காட்டாக, கொஸோவோவின் விடுதலைப் பிரகடனம் ஒரு ஏகாதிபத்திய சூழ்ச்சி என்பதை சரியாக விளக்கும் அமெரிக்க மார்க்ஸியவாதி லி ஸுஸ்டர், அன்றைய யூகோஸ்லேவிய அதிபர், கொஸோவோ பிரச்சனையை கருத்தில்கொண்டு மத்திய கால செர்பியர்களுக்கும் துருக்கிய ஓட்டோமான் பேரரசுக்குமிடையில் கடந்த காலத்தில் நடந்த சண்டையின் ஆண்டு விழா நிகழ்ச்சியொன்றின் போது நிகழ்த்திய உரையே செர்பிய தேசியவாதத்தை உயிர்ப்பிப்பதன் தொடக்கமாக அமைந்தது என்கிறார். உண்மையில் இந்த உரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில வார்த்தைகள்தான் இந்நூற்றாண்டின் மிகப்பெரும் ஏகாதிபத்தியப் பொய்களிலொன்றுக்கான அடிப்படையாக இருந்ததென்பதைப் பின்னர் காண்போம்.

இந்த ஊடகப் பிரச்சாரத்தை எவ்வித விமர்சனமோ, பகுத்தாய்வோ இன்றி அப்படியே எடுத்துக் கொள்வதன் விளைவுகளிலொன்றுதான், கொஸோவோவின் சுதந்திரப் பிரகடனத்தை வெற்றிக்களிப்போடு சிலர் வரவேற்று ஆர்ப்பரிப்பதாகும். உலகிலுள்ள தேசங்கள், தேசிய இனங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி தேச-அரசுகளை உருவாக்கிக் கொள்வதுதான் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கான ஒரே தீர்வாக அமையும் என்பதைத் தமது அரசியலின் அடிநாதமாகக் கொண்டுள்ள இவர்கள், தமது அரசியல் கோட்பாடுகள் சரியானவையே என வரலாறு தீர்ப்பளித்துவிட்டதற்கான ஒரு சான்றாக கொஸோவோ விடுதலைப் பிரகடனத்தை சுட்டிக்காட்டுகின்றனர்.

ஏகாதிபத்தியத்தின் பொருளாதார நலன்கள், அரசியல் குறிக்கோள்கள், இராணுவ அக்கறைகள், தன்னுரிமை, தேச விடுதலை என்பனவற்றுக்குப் பின்னிருக்கிற அரசியல் பின்னணிகள் வர்க்க நலன்கள் பற்றிச் சிறிதும் கவலைப்படாத இவர்கள், ஒரு தேசம் அல்லது தேசிய இனம் தனக்கொரு கொடியுடன், ஒருநாட்டுப் பெயருடன் ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் கீழ் புதிய காலனி நாடாக இருந்தாலும் சரி, அதை தேசிய விடுதலை, தேசத்தின் தன்னுரிமை எனப் பாராட்டத் தயங்குவதில்லை. இவர்கள் அறிந்தோ, அறியாமலோ மேற்சொன்ன மாபெரும் பொய்யொன்றை உண்மையென ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, முன்னாள் யூகோஸ்லேவிய அதிபர் ஸ்லோபோடன் மிலோஸோவிச்சின் செர்பிய தேசிய வெறி, செர்பிய பெருந்தேசக் கனவு ஆகியவை தான் உள்நாட்டுப்போர், இனப்படுகொலைகள், இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றைத் தூண்டிவிட்டன, அதனால்தான் மேற்கு நாடுகளின் மனிதாபிமானத் தலையீடு அவசியமாயிற்று என்னும் பெருஞ் சொல்லாடலை ஏற்றுக் கொண்டவர்களாகின்றார்கள்.

1987இல் மிலோஸோவிச், கொஸோவோவின் தலைநகரான பிரஸீனாவில் ஆற்றிய உரை, அமெரிக்க மார்க்ஸிய வாதி லீ ஸுஸ்டர் குறிப்பிடும் உரை ஆகியவற்றிலிருந்து பிய்த்தெடுக்கப்பட்ட சில வார்த்தைகளிருந்துதான் அந்த மகத்தான பொய் தயாரிக்கப்பட்டது. உங்கள் மீது கை வைக்க ஒருவருக்கும் தைரியம் இருக்கக்கூடாது என்பது மிலோஸோவிச்சின் உரையிலுள்ள ஒரு வாக்கியம் என்பது உண்மைதான். அன்றைய யூகோஸ்லேவியாவிலிருந்த பிற தேசிய இன மக்களை ஒடுக்கும்படி செர்பியர்களுக்கு மிலோஸோவிச் விடுத்த அறைகூவல் தான் இது என்று அமெரிக்க, ஐரோப்பிய ஊடகங்களிருந்து ஐ.நா. அவை அமைத்த முன்னாள் யூகோஸ்லேவியாவுக்கான சர்வதேசக் குற்றத் தீர்ப்பாயத்தின் தலைமை வழக்குரைஞர் வரை நூற்றுக்கணக்கான முறை இந்த வாக்கியம் வக்கிரமான முறையில் திரும்பத்திரும்பத் திரித்துக் கூறப்பட்டு, உலக மக்களின் பொதுபுத்தியில் உண்மையென ஆழமாகப் பதிய வைக்கப்பட்டது. அவப்பேறான இச்சொற்கள் உதிர்க்கப்பட்ட நாளுக்கும் கொஸோவோ விடுதலைப் பிரகடனத்துக்குமிடையில் 21ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. எனினும், காலம் கடந்தேனும் உலக மக்கள்-குறைந்தபட்சம் இடதுசாரிகளும் ஏகாதிபத்திய-எதிர்ப்பு ஜனநாயகவாதிகளும்-மேற்சொன்ன ஆண்டுகளில் நடந்தவை பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்னும் ஆதங்கத்தோடு, யூகோஸ்லேவியாவின் உடைவு பற்றி எழுதப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பக்கங்களுடைய நூற்றுக்கணக்கான நூல்களையும் ஆவணங்களையும் ஆழமாகப் பரிசீலித்தும் பல்வேறு தரவுகளை நேரடியாகத் திரட்டியும் ஓர் அரிய நூலை எழுதியுள்ளனர் எட்வர்ட் எஸ்.ஹெர்மன், டேவிட் பீட்டர்ஸன் ஆகிய இரு அமெரிக்க இடதுசாரி ஆய்வாளர்கள்-பத்திரிகையாளர்கள். இவர்கள் செர்பியர்கள் அல்லர்; எந்தவொரு கம்யூனிஸ்ட் கட்சியிலும் எந்தவொரு தேசியவாத அணியிலும் இருப்பவர்களுமல்லர்.

இவர்களது ஆய்வு நூலைக் காணும் முன், மிக அண்மைக்கால நிகழ்வாகிய கொஸோவோ விடுதலைப் பிரகடனத்தை ஆராய்வோம். யூகோஸ்லோவியாவின் உடைவிற்கு உள்நாட்டுக்காரணிகள் இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இவை மிகைப்படுத்திக் கூறப்படுகின்றன. அதே வேளை, வெளிக்காரணிகளான ஏகாதிபத்தியத் தலையீடு, நேட்டோ படைகளின் இராணுவத் தாக்குதல்கள் ஆகியன குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளன. உள்நாட்டுக் காரணிகள், வெளிக்காரணிகளைப் பிறிதோர் இடத்தில் விளக்குவோம். இவற்றை விளக்குகையில், செர்பியர்களோ, செர்பிய அரசியல் தலைவர்களோ குற்றம் ஏதும் இழைக்காதவர்கள், களங்கமற்றவர்கள் என்று நிறுவமாட்டோம். மாறாக, அவர்கள் மீது கொடுங் குற்றச் சாட்டுகளைச் சுமத்தி, அந்தக் குற்றச் செயல்களுக்குப் பலியானவர்கள் எனக் கூறியவர்கள் குற்றம் சாட்டப் பட்டவர்களைவிடக் கொடூரமான குற்றங்களைச் செய்தவர்கள், ஏகாதிபத்தியத்தின் அடியாட்களாகச் செயல் பட்டவர்கள் என்பதைத் தக்க சான்றுகளுடன் காட்ட முனைவோம். ஆஃப்கானிஸ்தானில் இருந்த இடதுசாரி அரசாங்கத்திற்கும் பின்னர் அதற்கு ஆதரவாக அங்கு வந்த சோவியத் இராணுவத்திற்கும் எதிராகப் போரிட்ட இஸ்லாமியவாதிகள், ஜிஹாதிகள், பின்லேடனின் அல்-கெய்தா அமைப்பினர் ஆகியோர் கிளிண்டனால் பால்கன் நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்டதையும் நாம் எடுத்துக் கூறுவோம்.

எனினும், தற்சமயம், கொஸோவா விடுதலை இயக்கம் உருவான காலத்திலிருந்து தொடங்குவோம். 1989ஆம் ஆண்டிலிருந்து யூகோஸ்லேவியா உடையத் தொடங்கியது. முதலில் பிரிந்து சென்ற குடியரசு ஸ்லோவனியா; அடுத்து குரோஷியா; ஏகாதிபத்தியத் தலையீட்டால் உருவாகியது போஸ்னியா - ஹெர்ஸகோவினா. பின்னர் யூகோஸ்லேவியாவில் எஞ்சியிருந்தவை செர்பியக் குடியரசு, மாசி டோனியா (இதுவும் பின்னர் பிரிந்து சென்றுவிட்டது), மாண்டினெக்ரோ, கொஸோவா தன்னாட்சி மாநிலம், வாய்வொடெனியாத் தன்னாட்சி மாநிலம் ஆகியன மட்டுமே. யூகோஸ்லேவியா, குறிப்பாக செர்பியா மிகவும் பலகீனப்பட்டிருந்த நிலையையும், கொஸோவோ அல்பேனியர்களின் நியாயமான தேசிய உணர்வையும் பயன்படுத்திக் கொண்ட தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட அமைப்பே கொஸோவோ விடுதலைச் சேனை (Kosovo Liberation Army). இது, போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு இயங்கும் ஒரு பயங்கரவாத அமைப்பு என அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த போதிலும், தொடக்கம் முதலே ஜெர்மனியுடன் இணைந்து இவ்மைப்பிற்கு இரகசிய இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கி வந்தது. இந்த சேனை, 1996ல் கொஸோவோவிலிருந்த செர்பியக் காவல் படைகள் மீது தாக்குதல்களை அதிகரிக்கத் தொடங்கியதால் செர்பிய அரசும் பதிலடி கொடுக்கத் தொடங்கியது.

கொஸோவோ அல்பேனியர்களை (இவர்கள் இப்போது கொஸோவர்கள் என அழைக்கப்படுகின்றனர்) துருக்கியும் செர்பியர்களை கிரீஸும் ஆதரித்தன. இந்தசண்டைகளின்போது கொஸோவோ விடுதலைச் சேனை (கொ.வி.சே)அம்மாநிலத்தின் 20-40% வரையிலான பகுதிகளைக் கைப்பற்றியது. ஆனால் 1998ஆம் ஆண்டு நடுப்பகுதியில், செர்பிய அரசு அப்பகுதிகளை மீண்டும் தன்வசமாக்கிக் கொண்டது. இதற்கிடையே அந்த மாநிலம் இன அடிப்படையில் பிளவு பட்டுவிட்டது. கொ.வி.சே. முற்றாகத் தோற்கடிக்கப்படும் நிலை உருவான சமயத்தில், அமெரிக்காவிலிருந்த கிளிண்டன் அரசாங்கம், இனப்படுகொலைகள், இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் என்னும் குற்றச்சாட்டுகளை செர்பிய அரசின் மீதும் மிலோஸோவிச் மீதும் மீண்டுமொரு முறை சுமத்தியது.

கொஸோவோ யுத்தம் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை தனக்கு மட்டுமே உரியதெனக் கருதிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மேடலின் அல்பிரைட், பாரீசுக்கு அருகிலுள்ள நகரமான ரம்பூயெவில் செர்பிய அரசுக்கும் கொ.வி.சே.வுக்கு மிடையில் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்தார். ஆனால், அங்கு அமெரிக்கா விதித்த நிபந்தனைகளை மிலோஸோவிச் ஏற்க மறுத்து விட்டார். யூகோஸ்லேவியப் பிரதேசம் முழுவதிலும் நேட்டோ படைகள் நடமாட அனுமதிக்க வேண்டும் என்பதே முக்கியமான நிபந்தனை. இனப்படுகொலைகளிலிருந்து கொஸோவர்களைக் காப்பாற்ற செர்பியப் படைகள் மீதும் செர்பியக் குடி மக்கள் வாழும் பகுதிகள் மீதும் நேட்டோ படைகள் விமான குண்டு வீச்சுகளை நடத்தி, செர்பியாவின் பொருளாதார, இராணுவ ஆதாரங்களைச் சீர்குலைத்தன. ஏறத்தாழ 2000 செர்பியர்கள் கொல்லப்பட்டனர். 78 நாட்கள் இடைவிடாது மேற்கொள்ளப்பட்ட விமான குண்டுவீச்சுத் தாக்குதல்களுக்குப் பிறகு, அதாவது 1999 ஜூன் 10ஆம் நாளன்று,போர் நிறுத்தப்பட்டது. நேட்டோ விமான குண்டு வீச்சுகளை நடத்திக்கொண்டிருந்த போது, கொ.வி.சே., செர்பியர்களின் தலைமையிலிருந்த யூகோஸ்லேவிய இராணுவத்தின் மீது தரைவழித் தாக்குதல்களை நடத்தி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

1991இல் நடந்த முதல் வளைகுடாப் போரின் போதும் அதன் பிறகு யூகோஸ்லேவியாவை உடைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அப்பட்டமான அமெரிக்க-ஐரோப்பிய சார்புடன் நடந்துகொண்ட ஐ.நா. அவை, அனைத்து சர்வதேசச் சட்டங்களுக்கும் விதிகளுக்கும் எதிராக நேட்டோ நடத்திய தாக்குதல்களுக்கு ஒப்புதல் வழங்கியது. மேற்சொன்ன போர் முடிந்ததும், அமெரிக்க-ஐரோப்பிய யூனியனின் நிர்பந்தத்தால் கொஸோவோ மாநிலம் ஐ.நா.அவையின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதாவது, ஒருபுறம் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நலன்களுக்கும் மறுபுறம் ரஷியாவின் நலன்களுக்குமிடையே உக்கிரமான முரண்பாடுகளை ஏற்படுத்தும் நிபந்தனைகளின் அடிப்படையில் அம்மாநிலம் ஐ.நா. கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. கொஸோவோ விடுதலைச் சேனை கலைக்கப்பட்டு அதிலுள்ள முக்கியமான பிரிவினர், இராணுவ அதிகாரமில்லாத சிவில் பாதுகாப்பு அலகுகளில் சேர்க்கப்பட்டனர்.

1999 ஜூன் 10ஆம் நாள் நிறை வேற்றப்பட்ட ஐ.நா.தீர்மானம் எண். 1244, கொஸோவோ பகுதியிலிருந்து யூகோஸ்லேவியப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் அப்பகுதி ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலினதும் அதன் இராணுவ அமைப்பினதும் (KFOR)கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கூறியது. (ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலில் ரஷியா ஒரு நிரந்தர உறுப்பு நாடு என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டும்) ஆனால், அத்தீர்மானம், கொஸோவோவிற்கு சுதந்திரம் வழங்குவது குறித்து ஏதும் சொல்லவில்லை. மாறாக கொஸோவோவின் எதிர்கால அந்தஸ்தைத் தீர்மானிப்பதற்கும் கொஸோவோ நெருக்கடிக்கு ஒரு அரசியல் தீர்வை உருவாக்குவதற்குமான ஒரு அரசியல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கான வசதிகளை செய்தல் என்னும் பொதுவான குறிக்கோளின் அடிப்படையில்தான் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அத்தீர்மானத்தின் முகப்புரை (preamble) யூகோஸ்லேவியாவின் பிரதேச ஒருமைப்பாடு என்பதைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டியது. அந்தத் தீர்மானத்தின் 10வது பிரிவு (article), யூகோஸ்லேவியக் கூட்டாட்சிக் குடியரசிற்குள்ளேயே கணிசமான தன்னாட்சி (substantial autonomy) வழங்கப்படுவதற்கும் ஐ.நா.அவை யின் கீழ் மட்டுமே இராணுவப் படைகளை நிறுத்தவும் ஒப்புதல் வழங்கியிருந்தது.

ஆனால், 2000 செப்டம்பரில் மிலோஸோவிச் பதவியிலிருந்து இறக்கப்பட்டதும் (அவர் நேட்டோ படைகளால் கைது செய்யப்பட்டு நெதர்லாந்து நாட்டிலுள்ள தெ ஹேக் நகரிலிருந்த முன்னாள் யூகோஸ்லேவியாவுக்கான சர்வதேச் குற்றவியல் தீர்ப்பாயத்தின் விசாரணைக்காகக் கடத்திச் செல்லப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டது மட்டுமல்ல, அந்தத் தீர்ப்பாயமுமே ஐ.நா. பாதுகாப்பு அவையின் விதிகளுக்கு எதிரானது.) அமெரிக்க குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஜார்ஜ் புஷ், கொஸோவோவைத் தனிநாடாக ஆக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தொடங்கினார். 2007 ஆம் ஆண்டு அல்பேனியாவுக்குச் சென்ற அவர், கொஸோவோவிற்கு சுதந்திரம் கொடுக்க முடியாதபடி பாதுகாப்புக் கவுன்சிலில் ரஷியாவால் நடவடிக்கை எடுக்க முடியுமா என்று பகிரங்கமான சவால் விடுத்தது குறிப்பிடத்தக்கது. இது ரஷியாவுக்கும் அமெரிக்க-ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குமிடையே கூர்மையடைந்து வரும் முரண்பாட்டின் மற்றொரு வெளிப்பாடாக அமைந்தது. அமெரிக்கா தனது அணியிலுள்ள நாடுகளின் பாதுகாப்புக்காக ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டமொன்றை உருவாக்கியுள்ளது. அதன் பகுதியாகத்தான், போலந்தில் ஏவுகணைத் தளத்தையும் செக் குடியரசில் ராடார் அமைப்பையும் நிறுவப் போவதாக அச்சுறுத்தி வருகிறது. மத்தியக் கிழக்கில்-குறிப்பாக இராக்கில்-அமெரிக்கக் கூட்டுப்படைகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதும் மத்திய ஆசிய நாடுகள் சிலவற்றில் எரிசக்தி மூலவளங்களை அமெரிக்கா கைப்பற்றிக் கொண்டதும் ரஷியாவுக்கு ஏற்கனவே ஆத்திர மூட்டியிருந்தன.)

1999 முதல் நேட்டோ படைகளின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் ஜனநாயக கொஸோவோவின் சட்ட (நாடாளு)மன்றத்துக்கான 2வது தேர்தல் 2007 நவம்பரில் நடைபெற்றது. அதில், கொஸோவோ விடுதலைச் சேனையின் அரசியல் வாரிசாக உருவாக்கப்பட்ட கொஸோவோ ஜனநாயகக் கட்சிக்கு (Democratic Party of Kosovo - PDK) 34% (ஏறத்தாழ 2,22,000 வாக்குகள்), 1998 இல் நேட்டோ படைகள் நுழைந்த நாள் முதல் ஆட்சியிலிருந்த கொஸோவோ ஜனநாயக லீக்கிற்கு( Democratic League of Kosovo - LDK) 22% வாக்குகளும் கிடைத்தன. கொஸோவோ மாநிலத்திலிருந்த மொத்த வாக்காளர்களில் (ஏறத்தாழ 14 இலட்சம்) 43 விழுக்காட்டினரே வாக்களித்தனர். 2003இல் நடந்த முதல் தேர்தலில் 43% வாக்குகளைப் பெற்று ஆட்சியிலமர்ந்த (நேட்டோவால் அமர்த்தப்பட்ட) LDK, 2007 தேர்தலில் 22% வாக்குகள் மட்டுமே பெற்றதற்குக் காரணம் நேட்டோவின் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி நடத்திய தேசிய விடுதலைப் போராளிகள் அங்கு வறுமையையும் இலஞ்ச ஊழலையும் ஜனநாயகப்படுத்தினர் என்பதுதான்!

இந்தத் தேர்தலைப் பார்வையிட வந்த ஐரோப்பிய நாடாளுமன்றப் பிரதிநிதிகளின் தலைவர் டோரிஸ் பேக் (Doris Pack), வாக்களித்தோரின் எண்ணிக்கை இவ்வளவு குறைவாக இருந்தது, தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் நிர்வாகத்தில் அவர்களுக்கு இருந்த அதிருப்தியையும் எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மையையும் பிரதிபலித்தது என்று கூறினார். தவிரவும், செர்பிய அரசின் அறைகூவலை ஏற்று கொஸோவாவிலுள்ள செர்பியர்களில் மிகப் பெரும்பான்மையினர் அத்தேர்தலைப் புறக்கணித்தனர். ஆயினும், கொஸோவோவின் மக்கள்தொகையில் 15 விழுக்காட்டுக்கும் குறைவான வாக்குகளை மட்டுமே பெற்ற கட்சியைச் சேர்ந்த வரும் (PDK), கொ.வி.சேனையின் முன்னாள் தலைவருமான ஹஷிம் தாச்சி கூறினார்: கொஸோவா மக்கள் உலகத்திற்கு ஒரு செய்தி அனுப்பியுள்ளனர்... கொஸோவோ சுதந்திரத்திற்கு தயாராகிவிட்டது என்பதுதான் அந்த மிக வலுவான செய்தி. 2007 டிசம்பர் 10ஆம் நாள் கொஸோவோ தனது சுதந்திரப் பிரகடனத்தை வெளியிடும் என்று கூறினார் தாச்சி.

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ரஷியா ஆகிய முத்தரப்புப் பிரதிநிதிகள், கொஸோவோ விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி கொஸோவோ மக்கள்தொகையில் 90 விழுக்காட்டினராக உள்ள அல்பேனியர்களுக்கும் செர்பியாவுக்குமிடையே சமரசத்தை உருவாக்க என்னென்ன முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன என்பதை அந்தப் பிரதிநிதிகள் ஐ.நா. பொதுச் செயலாளர்பான் கி-மூனிடம் அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கெடு டிசம்பர் 10ஆம் தேதியன்று முடிவடைவதைக் கருத்தில் கொண்டுதான் தாச்சி மேற் சொன்ன அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் அதற்கு முன் ஏறத்தாழ இரண்டாண்டுக் காலம் நடந்து வந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தைகளில் எந்த விதமான சமரச உடன்பாடும் ஏற்படவில்லை. மாறாக, ஒருபுறம் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றுக்கும் மறுபுறம் ரஷியாவுக்கும் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன் இருந்ததைவிட அதிகமான கருத்து வேறுபாடுகளும் முரண்பாடும்தான் ஏற்பட்டன.

சுதந்திரத்திற்குத் தயாராக இருந்த கொஸோவாவின் பொருளாதார நிலைமைகளை 2007 அக்டோபரில் உலக வங்கி வெளியிட்ட ஒரு அறிக்கை (A Kosovo Poverty Assessment) விளக்கியது. வேளாண்மை வெறும் உயிர்பிழைப்புக்கான அளவிலேயே இருக்கிறது. தொழிற்துறை உற்பத்தி தேக்கமடைந்துள்ளது. ஐரோப்பாவின் கனிம வளங்களில் மிகப்பெரும் வளங்கள் சில இந்த மாநிலத்தில் இருந்தபோதிலும் அவை இன்னும் தொடப்படாமலே உள்ளன. அதற்குக் காரணம், சுற்றுச்சூழல் பிரச்சனைகளும், இந்த வளங்களுக்கு உரிமையாளர்கள் யார் என்பதில் உள்ள தகராறுகளும், இனங்களுக்கிடையே உள்ள போட்டியும் பூசலும் தான். பழுப்பு நிலக்கரி வளத்தைப் பொருத்தவரை உலகில் ஐந்தாவது இடத்திலுள்ளது இந்த மாநிலம். பல்லாயிரக்கணக்கான கோடி டாலர் பெறுமதி உள்ள துத்தநாகம், தங்கம், வெள்ளி மற்றும் சில அரிய உலோகங்களின் தாதுப்பொருட்கள் கணிசமாக இந்த மாநிலத்தில் உள்ளன.

கொஸோவோ போருக்கு முன்பு, இந்த மாநிலத்தில் இருந்த மிகப் பெரும் கனிம நிறுவனமும் ஏற்றுமதியாளருமான ட்ரெப்கா சுரங்கக் கூட்டமைப்பு (Trepca Mining Complex), அதற்குக் கடன் கொடுத்ததாக உரிமை கொண்டாடுபவர்களிடமிருந்து (இவற்றிலொன்று பிரிட்டிஷ் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் உடைமையாக இருந்த சுரங்கங்கள்தான் 1945-46ஆம் ஆண்டுகளில் சோசலிச யூகோஸ்லேவிய அரசால் நாட்டுடை மையாக்கப்பட்டன) தன்னைப் பாதுகாத்துக் கொள்ள நீதிமன்றத்தை நாடியுள்ளது. அதாவது அதனைத் தனியார் மயமாக்குவதற்கான கால்கோள் இட்டுள்ளது.

மேலும், இப்பிரச்சனையைச் சிக்கலாக்கக்கூடிய அம்சம், அந்தச் சுரங்கங்கள் இருக்கும் இடமாகும். அதாவது அல்பேனியர்கள் பெரும்பான்மையாக உள்ள கொஸோவோ மாநிலத்தின் வட பகுதில் தொடங்கி செர்பியக் குடியரசில் செர்பியர்கள் மட்டுமே வாழ்கின்ற நிலப்பகுதி வரை அந்தச் சுரங்கங்கள் படர்ந்துள் ளன.கொஸோவோ மக்கள்தொகை யில் 45% வறியவர்கள் (அதாவது வயது வந்தவர்களின் சராசரி மாத வரு மானம் 43 யூரோக்களுக்கும் குறைவு.) மேலும் 18% மக்களும் வறுமை பீடிக் கப்படும் அபாயத்தில் உள்ளனர். இந்த இருபிரிவினரையும் விட வசதியாக ஒருபகுதியினர் உள்ளனர் என்றால், அதற்குக் காரணம் வெளிநாடுகளில் வேலை செய்யும் அவர்களது உறவினர் கள் அனுப்பும் பணம்தான். தொழிலா ளர்களில் 30 விழுக்காட்டினருக்கு வேலை இல்லை. உண்மை ஊதிய விகிதம் தேக்கமடைந்துள்ளது.

சமூக உதவித் திட்டங்கள் மக்களின் சேம நலத்தை மேம்படுத்துவதில் சிறு தாக்கத்தைக்கூட ஏற்படுத்தவில்லை. செர்பியத் துருப்புகளும் செர்பியக் குடி மக்கள் படைகளும் பல்லாயிரம் கொஸோவர்களைக் (கொஸோவோ அல்பேனியர்களை) கொன்று குவிக் கும் இனப்படுகொலையிலும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளிலும் ஈடு பட்டதால்தான், அந்த அல்பேனியர் களைப் பாதுகாப்பதற்கான மனிதாபி மானத் தலையீடைச் செய்ய வேண்டி யுள்ளதாகக் கூறி அமெரிக்காவும் நேட்டோவும் செர்பியா மீதான விமான குண்டு வீச்சுத் தாக்குதல்களை நியாயப்படுத்த முனைந்தன. ஆனால், செர்பிய இராணுவத்தாலும் குடி மக்கள் படைகளாலும் கொல்லப் பட்ட அல்பேனியரது எண்ணிக்கை மிகவும் ஊதிப் பெருக்கப்பட்டது என்பது போர் முடிந்தபின் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டது. மறுபுறம், அமெரிக்காவாலும் நேட்டோவாலும் ஆட்சியில் அமர்த்தப்பட்ட கொஸோ வர்கள், செர்பியப் படைகளால் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் அல்பேனியர்களைவிட அதிக எண்ணிக்கையில் கொஸோவோவிலிருந்த செர்பியர்களைக் கொன்று குவித்தனர் என்பதும் அம்பலமாகியது.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்ட அறிக்கையொன்று, கொஸோவோவைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிர்வாகம், அங்குள்ள அல்பேனிய அதி-தீவிர தேசியவாதிகளின் கரங்களிலிருந்த கட்டுகளை அவிழ்த்துவிட்டு, அவர்கள் தங்கள் விருப்பப்படி நடப்பதற்கு அனுமதி கொடுத்ததாகக் கூறியது. கொலை, வல்லாங்கு(rape), ஆள் கடத்தல், ஒரு இடத்தில் வசித்து வந்தவர்களைப் பலாத்காரமாக வெளியேற்றுதல் போன்ற குற்றங்களைச் செய்ததாக இந்த அதி-தீவிர தேசியவாதிகள் மீது சுமத்தப்பட்ட நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுகளை ஐ.நா.நிர்வாகம் போதுமான அளவுக்கு புலனாய்வு செய்யவில்லை அல்லது புலனாய்வு செய்ய முற்றிலும் தவறிவிட்டது என்றும் அந்த அறிக்கை கூறியது. ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்டில் இயங்கிவரும் "ஐரோப்பிய ரோமா உரிமைகள் மையம்" (European Roma Rights Centre), நேட்டோ குண்டு வீச்சுகளைத் தொடர்ந்து, கொஸோவோ பகுதியிலிருந்த 1,20,000 ரோமா (ஜிப்ஸி), அஷ்காலி இனங்களைச் சேர்ந்த 1,20,000 பேர்களில் மூன்றிலிரு பகுதியினர் கொஸோவோவிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்டனர் என்று கூறியது.

ரோமாக்களைப் பொருத்தவரை, இரண்டாம் உலகப்போரின்போது நாஜிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு அடுத்தபடியாக முழுமையாக மேற்கொள்ளப்பட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை கொஸோவா அதி-தீவிர தேசியவாதிகளால் செய்யப்பட்டதாகும். இது தவிர, பல்லாயிரக்கணக்கான செர்பியர்கள் கொஸோவோ பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். எஞ்சியுள்ள 1,20,000 செர்பியர்கள், அல்பேனியர்களின் வசிப்பிடங்களால் சூழப்பட்டுள்ள சின்னஞ்சிறு தீவுகள் போன்ற வசிப்பிடங்களில் வாழ்ந்து வருகின்றனர். கொஸோவோவிலுள்ள சிறுபான்மை இனத்தவர்களான செர்பியர்கள், அஷ்காலிகள், துருக்கியர்கள், போஸ்னியாக்குகள் ஆகியோரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று சுதந்திர கொஸோவோவின் ஆட்சியாளர்கள் கூறுகின்றனர் என்றாலும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இதுவரை சிறிதும் குறையவில்லை. கொஸோவோ பகுதி நேட்டோ கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு கலைக்கப்பட்டுவிட்ட கொ.வி.சேனையின் தலைவரும் கொஸோவோவின் தற்போதைய பிரதமருமான தாச்சி பல்வேறு கொடிய குற்றங்களுக்காக செர்பிய அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொஸோவோவின் தற்போதைய மொத்த மக்கள் தொகை 20 இலட்சம். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் வேலையில்லாதவர்கள். வேலையில்லாதோர் பட்டியலில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 30000 இளம் மக்கள் சேர்கின்றனர். மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினரின் நாள் வருமானம் 1.50 யூரோவுக்கும் குறைவு. கொஸோவோ மக்களின் சராசரி மாத வருமானம் 220 யூரோ.

2007ஆம் ஆண்டு கொஸோவோ நிலைமைகள் இவ்வாறிருக்க, மேற் சொன்ன ஐ.நா.தீர்மானத்தைப் புறக்கணித்தும் ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலின் பெயரளவு ஒப்புதலைக்கூடப் பெறாமலும், கொஸோவோவை சுதந்திரத் தனிநாடாக ஆக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கிய அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனிலுள்ள முக்கிய நாடுகளின்- குறிப்பாக ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவற்றின்-ஆதரவைத் திரட்டிக் கொண்டது. பின்னர், முன்னாள் பின்லாந்துக் குடியரசுத் தலைவர் மார்ட்டி அஹ்டிஸாரி (Martti Ahtissaari) என்பார், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலுக்காகத் தயாரித்திருந்த ஒரு ஆவணத்தைப் பயன்படுத்தி, கொஸோவா சுதந்திரப் பிரகடனம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியது. இந்த ஆவணமும்கூட கீழ்க்கண்ட சில வரம்புகளையும் நிபந்தனைகளையும் உள்ளடக்கியிருந்தது: கொஸோவோ, சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டும்; அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள போர்வீரர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட வேண்டும்; கொஸோவாவிலுள்ள செர்பியர்களுக்கும் பிற சிறுபான்மை இனத்தவருக்கும் உரிய பாதுகாப்புத் தரப்பட வேண்டும்.

கொஸோவோ வேறு எந்த நாட்டுடனும் இணைய அனுமதிக்கக்கூடாது என்பது இன்னொரு நிபந்தனை. அதாவது கொஸோவாவிலுள்ள அல்பேனியர்கள் அல்பேனியாவுடன் இணையக்கூடாது என்பதுதான் இந்த நிபந்தனை! இதைத்தான் சிலர், கொஸோவா தனது தேசிய சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தி சுதந்திர நாடாகியுள்ளது என வர்ணிக்கிறார்கள்!! மார்ட்டி அஹ்டிஸாரியின் திட்டம் தொடக்கத்திலேயே செர்பியா, ரஷியா ஆகியவற்றால் முற்றாக நிராக ரிக்கப்பட்டது. அப்படியிருந்தும், கொஸோவோவின் சுதந்திரத்திற்கான காலக்கெடு உள்ளிட்டவற்றை அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் தீர்மானிப்பதற்கு, அந்தத் திட்டத்தையே அடிப்படையாகப் பயன் படுத்திக்கொண்டன. அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் கொஸோவோ பிரதமர் தாச்சியும் தொடர்புக் குழு என அழைக்கப்படும் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். சர்வதேச விதிகளின்படி ஒரு பிரச்சனையில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். ஆனால் அஹ்ட்டிஸாரியின் திட்டத்தை நடை முறைப்படுத்துவதற்கான ஆலோசனைகளில் செர்பியா முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டது.

கொஸோவோவை சுதந்திர நாடாக ஆக்குவதற்கான இந்நடவடிக்கைகள், அமெரிக்க-ஐரோப்பிய யூனியனின் அடிமையாக நடந்து கொண்டிருக்கும் ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானம் எண். 1224க்கும் கூட எதிரானதாகும். ஆனால், இத்தீர்மானத்தின் நோக்கத்திற்கும் அதன் அடிப்படை அர்த்தத்திற்கும் இசைந்த வகையிலேயே தான் செயல்படுவதாக ஐரோப்பிய யூனியன் கூறுகிறது. இப்போது நிலவுகிற ஒன்று (entity), சர்வதேச சட்டங்களின் சாரத்துக்குப் பொருந்தும் வகையில் அரசு என்ற நிலைக்கு வந்துவிட்டால், அதை அங்கீகரிப்பதற்கான ஒரு அரசியல் முடிவை எடுக்க முடியும் என்று ஐரோப்பிய யூனியன் விளக்கம் கொடுத்துள்ளது!

அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த பெரும்பாலான நாடுகளும் கொஸோவோவின் சுதந்திரத்தை அங்கீகரித்துள்ளன. கொஸோவோவின் சுதந்திர பிரகடனமும் அதற்கு அமெரிக்க-ஐரோப்பிய யூனியன் அரசுகளும் தந்துள்ள ஆதரவும் ஒரு நாட்டின் எல்லை ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றின் பாதுகாப்பை உத்திரவாதம் செய்யும் ஐ.நா.அவையின் அடிப்படை ஆவணங்கள், ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுக்கான அமைப்பின் (Organisation for security and Co-operation in europe) விதிகள் ஆகியவற்றை அப்பட்டமாக மீறும் நடவடிக்கைகளாகும் என்று ரஷியாவும் செர்பியாவும் அறிவித்தன (செர்பியாவில் இப்போது இருப்பது மேற்கு நாட்டுச் சார்பான அரசாங்கம்தான்.) மேலும், தற்போது அமெரிக்காவினதும் ஐரோப்பிய யூனியன் நாடுகளினதும் நட்பு நாடாகியுள்ளதும் முன்னாள் சோவியத் குடியரசுமான ஜார்ஜியாவிலுள்ள அப்காசியா (Abkhazia), தென் ஒஸ்ஸெடியா (South Ossetia) ஆகிய பகுதிகளுள்ள பிரிவினைவாதச் சக்திகளைத் தான் ஆதரிக்க வேண்டியிருக்கும் என்றும் மற்றொரு முன்னாள் சோவியத் குடியரசும் தற்போது அமெரிக்காவின் கூட்டாளியாகியுள்ளது மான உக்ரெய்னில் அமெரிக்கா ஏவுகணகளை வைக்குமேயானால், உக்ரெய்ன் மீது குண்டு வீச்சு நடத்த வேண்டியிருக்கும் என்றும் ரஷியா கூறியது.

ரஷியா தனது அண்டை நாடுகளை மிரட்டுவதாகக் குற்றம் சாட்டிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கோண்டலீஸா ரைஸ், மாஸ்கோவிலிருந்து வரும் கண்டனத்துக்குரிய வாய்வீச்சுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் பகுதிகளாக இருந்த உக்ரெய்ன் மற்றும் இதர அரசுகளின் சுதந்திரம், இறையாண்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் அமெரிக்கா தன்னை அர்ப்பணித்துள்ளது என்றும் கூறினார்! ஆக, ஒருபுறம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள்,மறுபுறம் ரஷியா ஆகிய வற்றுக்கிடையிலான அரசியல், பொருளாதார,புவிசார்-அரசியல், இராணுவ நலன்களுக்கிடையிலான முரண்பாட்டின் பின்னணியில்தான் கொஸோவோ பிரச்சனையைப் பார்க்க வேண்டும்.

மேலும்,ஏற்கனவே யூகோஸ்லேவியாவை உடைத்துச் சிதறச் செய்தது மட்டுமின்றி தற்போது கொஸோவோவையும் பிரித்து எடுப்பது பால்கன் பகுதியில் மட்டுமின்றி, ஐரோப்பா முழுவதிலும் பல்வேறு பிரிவினைச் சக்திகளுக்கு ஊக்கம் கொடுப்பதாகும் என்று செர்பியா மட்டுமின்றி, ஸ்பெயின், கிரீஸ் போன்ற நாடுகளும் அச்சம் தெரிவித்துள்ளன.

அதுமட்டுமின்றி,கொஸோவோவின் வடபகுதியில் செர்பியர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதியைத் தன்னுடன் இணைக்க வேண்டும் என்று செர்பியா கோரிக்கை விடுக்கக்கூடும். அங்குள்ள செர்பிய இனத்தலைவர்கள் செர்பியாவுக்கு மட்டுமே பதில் சொல்லக்கூடிய ஒரு தனி நாடாளுமன்றத்தை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளனர். மறுபுறம், தென் செர்பியாவின் ப்ரெஸெவோ பள்ளத்தாக்கில் வாழும் அல்பேனியர்களிடமிருந்தும் மாஸிடோனியாவில் (முன்னாள் யூகோஸ்லேவியாவிலிருந்து பிரிந்து சென்ற ஒரு குட்டி நாடு) உள்ள அல்பேனியர்களிடமிருந்தும் (இவர்கள் அந்த குட்டி நாட்டின் மக்கள் தொகையில் 25%) பிரிவினைக் கோரிக்கைகள் எழுந்துள்ளன! கொஸோவோ சுதந்திர பிரகடனம் தொடர்பாக, பிரிட்டிஷ் நாளேடு தி கார்டியன் பிப்ரவரி19 (2008) அன்று எழுதிய கட்டுரை, சர்வதேச ஒழுங்கமைப்பின் அடிப்படையான தூண்களில் இரண்டு, இறையாண்மை சமத்துவம், நாட்டெல்லைகள் மீறப்படக் கூடாதவை என்னும் கோட்பாடு ஆகியனவாகும்.

கொஸோவோவின் சுதந்திரத்தை அங்கீகரித்தல் என்பது இந்த இரண்டு தூண்களை மேலும் பலகீனப்படுத்துகின்றது. மிலோஸோ விச் ஆட்சியின் கீழ் செர்பியா மனித உரிமை மீறல் குற்றங்களைச் செய்தது என்னும் பெயரால் கொஸோவோ சுதந்திரத்தை நியாயப்படுத்தும் முயற்சி குறித்து அந்த நாளேடு கூறியது: முதலாவதாக, இந்த நியாயவாதம் 1994முதல் செர்பியர்களுக்கும் அல்பேனியர் அல்லாதவர்களுக்கும் எதிராக இழைக்கப்பட்ட ஏராளமான மனித உரிமை மீறல் குற்றங்களை, குறிப்பாக 2004 மார்ச்சில் நடந்த வன்முறை வெடிப்புச் சம்பவங்களை அப்பட்டமாகப் புறக்கணிக்கிறது; இரண்டாவதாக, சுதந்திரத்திற்கு மாற்றாக கணிசமான சுயாட்சி போன்ற தீர்வுகள் முன் வைக்கப்பட்டிருந்தால், தற்போது கொஸோவோவின் சுதந்திரத்தை நியாயப்படுத்துவதற்காக முன் வைக்கப்படும் நியாயவாதத்திற்கு, அதாவது சுதந்திரம் வழங்கப்படாவிட்டால் முன்பு நடந்த மனித மீறல்கள் மீண்டும் நிகழும் என்ற வாதத்திற்கு ஆதாரம் சிறிதும் இல்லை....

1999 முதல் கொஸோவோ பகுதி மீது செர்பியாவிற்கு செயல்திறன் வாய்ந்த கட்டுப்பாடு ஏதும் இல்லாமல் போய் விட்டதால், தற்போது அந்த மாநிலத்தின் மீது செர்பியா தனது இறையாண்மையை இழந்துவிட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை என்னும் வாதம் ஏன் மிகவும் அபாயகரமானது என்பதை அந்த நாளேடு விளக்கியது:

1. இந்த முன்னுதாரணத்தை ஏற்றுக் கொள்வது, இதுபோன்ற சமாதான முயற்சிகளுக்கு சேதம் விளைவிக்கும் சாத்தியப்பாடுகளைக் கொண்டுள்ளது. ஏனெனில், சமாதான முயற்சிகளை மேற்கொள்ள ஐ.நா.வுக்கு அதிகாரம் கொடுப்பது தம் சொந்தப் பிரதேசங்கள் மீது தமக்குள்ள செயல்திறன் மிக்கக் கட்டுப்பாட்டை இழக்கச் செய்யும் என்று பலநாடுகள் அஞ்சுகின்றன.

2. கொஸோவோவில் சமாதானத்தை ஏற்படுத்துவது என்ற பெயரால் ஐ.நா. அதிகாரிகள் அங்கு இருப்பதற்கு அடிப்படை நேட்டோவின் சட்ட விரோத பலாத்கார நடவடிக்கைகள்தான். பாதிக்கப்பட்ட பகுதியின்மீது அதனைப் பாதிக்கும் நாட்டிற்குள்ள செயல்திறன் மிக்க கட்டுப்பாட்டை இழக்கச் செய்தல் என்னும் பெயரால் நாட்டெல்லைகளை மாற்றுவது என்பதன் பொருள், இராணுவ வழிமுறைகளின் மூலம் நாட்டெல்லைகளை மாற்றுவது என்பதுதான். இதைத்தான் ஐ.நா.சாசனம் திட்டவட்டமாகத் தடை செய்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் சர்வதேச சமூகம் இந்த வழிமுறைக்கு ஒப்புதல் வழங்க உறுதியாக மறுத்து வந்துள்ளது.

3. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய உலக ஒழுங்குக்கு அடிப்படையாக இருந்த முதன்மையான நெறிகளை ஒதுக்கித் தள்ளிவிடுவது, கொஸோவோவின் சுதந்திரத்தை அங்கீகரிக்கும் மிக அபாயகரமான முன்னுதாரணத்தை வழங்கிவிடுகிறது.

4. இறையாண்மை சமத்துவம், நாட்டெல்லைகள் மீறப்பட முடியாதவை என்னும் நெறி ஆகிய இரண்டுக்கும் குழி பறிப்பது, சர்வதேச சட்டத்திற்கும் அரசியலுக்குமுள்ள முக்கியமான வேறுபாட்டைத் தகர்த்து விடுகிறது. இது உலக சமாதானத்திற்கும் பாதுகாப்புக்கும் பேரபாயத்தை ஏற்படுத்தும்.

ஆனால், கொஸோவோ பிரச்சனை, சுயம்புவாக தோன்றிய ஒரு அலாதியான வரலாற்று, அரசியல் பிரச்சனை என்றும், கொஸோவோவிற்கு சுதந்திரம் அளிப்பதை வேறு எவரும் பின்பற்றக்கூடிய முன்னுதாரணமாகக் கருதக்கூடாது என்றும் ஜார்ஜ் புஷ் அறிவித்துள்ளார். அதாவது உலகில் உள்ள ஒரு நாடு அல்லது தேசம் அல்லது ஒரு நிலப்பரப்பு, தேசிய சுயநிர்ணய உரிமை பெறத்தக்கதுதானா இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அமெரிக்காவுக்கு மட்டுமே உண்டு என்பதுதான் இதன் பொருள். ஐரோப்பிய மண்னில் அமெரிக்கா வைத்திருக்கும் மிகப் பெரும் இராணுவத்தளங்களிலொன்று பாண்ட்ஸ்டீல் முகாம் (Bondsteel Camp). இது கொஸோவோ நகரான யுரோஸெவாக் அருகில் உள்ளது. குவாண்டனாமோ சிறைமுகாம் போல பயங்கரவாதக் குற்றங்களைச் செய்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களைக் கடத்திக் கொண்டு செல்லவும் சித்திரவதை செய்யவும் பயன்படுகிறது இந்த இராணுவத்தளம். பால்கன் நாடுகளிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள், முன்னாள் சோவியத் யூனியனுக்கு இருந்த செல்வாக்குப் பிரதேசங்களைச் சுற்றி வளைப்பதும் அவற்றில் ஊடுருவுவதுமான மூலோபாயத்தின் பகுதிகளாக அமைகின்றன. அதே சமயம், ஐரோப்பாவில் அமெரிக்காவின் செல்வாக்கை வலுப்படுத்திக் கொள்ளவும் உதவுகின்றன.

கொஸோவோவையும் பால்கன் நாடுகளையும் ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால், அவை கருங்கடல் பகுதியை அடைவதற்கும் காஸ்பியன் படுகையிலுள்ள (Caspian Basin) எரிவாயு, பெட்ரோலிய எண்ணெய் ஆகியவற்றைக் குழாய்கள் மூலம் எடுத்து வருவதற்குமான முக்கியமான மார்க்கத்தைக் கொண்டுள்ளதைப் பார்க்கலாம். கொஸோவோ பகுதியில் தங்கம், ஈயம், தகரம், பழுப்பு நிலக்கரிக் கனிவளங்களும் உள்ளன. அமெரிக்காவின் இளங்கூட்டாளிகளாவதன் மூலம் இந்த மூலவளங்களைச் சுரண்டவும் ஐரோப்பாவில் தம் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ளவும் சில ஐரோப்பிய நாடுகள்-குறிப்பாக ஜெர்மனி- கருதுகின்றன. தங்களுடைய ஏகாதிபத்திய நலன்களின் பொருட்டு, சர்வதேசச் சட்டங்களைத் துச்சமாகக் கருதுகின்றன.

சுதந்திர கொஸோவா மீதான கண்காணிப்பை ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலிடமிருந்து 2008 ஜூன் முதல் தன்னிடம் மாற்றிக் கொள்வதற்காக ஐரோப்பிய யூனியன் யூலெக்ஸ் மிஷன் (Eulex Mission) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. இதிலுள்ள போலிஸ், நீதித்துறையைச் சேர்ந்த சுமார் 2000பேர் கொஸோவோவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் கிளர்ச்சிகளை ஒடுக்கும் சிறப்புப் போலிஸார், 250 நீதிபதிகள், அரசாங்கத் தரப்பு வழக்குரைஞர்கள், சுங்கத்துறை அதிகாரிகள் ஆகியோர் அடங்குவர். இவர்கள் அனைவரும் ஜெர்மனியையும் இத்தாலியையும் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு உறுதுணையாக அங்கு ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ள 16000 நேட்டோ படை வீரர்கள் செயல்படுவர். மேற்சொன்ன யூலெக்ஸ் மிஷனின் தலைவராக இருப்பவர் பிரெஞ்சு இராணுவத்தின் மிக உயர்ந்த பதவியிலிருந்த தெகெர்மபோன் என்பவராவர். ஆப்பிரிக்காவிலும் பால்கன் நாடுகளிலும் ஏகாதிபத்தியம் நடத்திய இராணுவத் தலையீடுகளில் பங்கேற்றுப் பழுத்த அனுபவம் பெற்றவர். ஆக, ஏகாதிபத்தியத்தின் மனிதாபிமானத் தலையீட்டின் விளைவாக உருவான ஒரு நவ-காலனி நாட்டின் வரலாறுதான் சுதந்திர கொஸோவோ பிரகடனம். இதை கொஸோவோவின் தேசிய விடுதலை, தேசிய சுய நிர்ணய உரிமை, தன்னுரிமை என்று சிலர் கொண்டாடி மகிழ்வார்களேயானால், அது அவர்களது கருத்துரிமை, தன்னுரிமை!

கட்டுரைக்கான தரவுகள்:

1.Edward S.Herman & David Peterson, The Dismantling of Yugoslavia: A Study in inhumanitarian intervention-and a Western liberal-left intellectual moral collapse, Monthly Review, New York,October 2007.
2.Paul D’Amato, Bosnia:Model for a New Colonialism?, International Socialist review Issue 8,Summer 1999.
3. Paul Mitchell, Kosovo Assembly election result deepens crisis over independence, World Socialist Web Site, 22 November 2007.
4.Chris Marsden, Kosovo’s declaration of independence destabilizes Europe, World Socialist Web Site, 18 February 2008.
5.Peter Schwarz, The case of Kosovo:”Self-determination” as an instrument of imperialist policy, World Socialist Web Site, 20 February 2008
6.Lee Suster, The meaning of Kosovo’s independence, Socialist Worker online, March 7,2008.
7.Slobodan Milosovich, Wikipedia (accessed on 1 July 2008)
8.Matjaz Hanzek, When will words become actions? Hate speech in Slovenia, Eurozine Magazine, 20 July 2007
(எஸ்.வி.ஆர் . எழுதிவரும் விரிவானதொரு கட்டுரையின் ஒரு பகுதி இங்கு வெளியிடப்பட்டுள்ளது.)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com