Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2008

சுவரெங்கும் அசையும் கண்கள் - தூரன் குணாவின் கவிதைத் தொகுப்பு
- சாஹிப் கிரான்
.

ஒரு தொகுப்பிற்கு தலைப்பு அவசியமில்லை. ஆனால் அதிலுள்ள கவிதைகளுக்கு தலைப்புகள் அவசியமாகவே தோன்றுகிறது. இப்படி தலைப்புகளற்ற ஒரு கவிதைத் தொகுப்பை படித்துவிட்டு அதற்கான விமர்சனம் எழுதும்போதுதான் பெரிய தடையை அடைந்தேன். கவிதைகள் தலைப்புடன், அதற்கான ஓர் எல்லையை அல்லது குறியைக் கொண்டிருக்கின்றன. இது கவிதையை ஏதோவொரு தளம் சார்ந்து நகர்த்த உதவுகிறது. தொகுப்பில் மொத்தம் அறுபத்து ஒரு கவிதைகள் உள்ளன. எந்தக் கவிதைக்கும் தலைப்பில்லை. தூரன் குணாவிற்கு இரவே, பெரும்பாலான கவிதைகளில் அவரை படைப்பு நிலைக்கு கொண்டு வருகிறது. இரவு குளிர்ச்சி பாய்ச்சுகிறது. அதுவே மிகக் கொடுமையாகவும் இருக்கிறது. அந்தக் கொடுமையே கவிதையை சாத்தியப்படுத்துகிறது. இரவு வானம் அல்லது இரவு சூழலே நம்முன் பிரபஞ்சத் தனிமையை உணர்த்தி, அவ்வுணர்வை நம் ஆழ்மனதிலிருந்து வெளிப்படுத்துகிறது. மீட்டெடுக்கிறது. அத்தகைய தனிமையே நமது நுண்ணுணர்வுகளை கூர்மையடைய வைத்து, சுவரெங்கும் அசையும் கண்களாகி, படைப்பாளிக்கி எல்லாவற்றையும் முன்னிறுத்தி, ஏதோ ஒரு கட்டத்தில் அத்தனைக் கண்களுடையவனாகிறான் கவி. இதுவே கவி உணர்வை பொதுமைப்படுத்துகிறது.

கவி ஒரு சொல்லிலிருந்தே தனது நீட்சியைப் பெறுகிறார். இது தொடக்க கவிக்கான ஒரு குணம். ஆனால் தொகுப்பினூடே ஆங்காங்கே சில வரிகள்...

1. கணங்களில் மரணத்திற்கு அருகாமையிலிருப்பவனின் சீற்றம் (பக்-53)
2. பாவனைகளிலேனும் மகிழ்வை நிரப்பவியலாமல் (பக்-45)
3. பாழை அடைகாப்பவன் நீ (பக்-42)
4. முறியும் கிளையில் மலர்ந்திருக்கும் பூக்கள் (பக்-35)
5. வேட்டைக்காரன் உனக்கு நேசம் வழியும் கண்களே பிரியமானவையாக இருக்கின்றன (பக்-9)
6. சொற்களின் மூலம் ஆயுதம் செய்யப்பழகி விட்டவர்கள் (பக்-55).

கவிதை சொற்களின் வழியாக ஒரு உணர்வை நம்முள் விரிக்கிறது. எனவே ஒரு சொல் அல்லது ஒரு வாக்கியம் மட்டுமே கவிதைக்குரிய அதிர்வைத் தருவதில்லை.

தொகுப்பின் முதல் கவிதை: ஏறிப் பறக்குமதன்/ சிறகுகளின் கீழே / புள்ளியெனக் குறுகுது பார் / பெருவானம். ஒரு பறவையின் வாழ்வு சோகத்தை இயற்கை பேரழிவுடன் இணைத்து பெரும் துக்கத்தை அண்டமெங்கும் எழுதிச் செல்வதாக முடிக்கிறார். புனைவில் தோன்றும் முரண் கவிதையைக் காட்சிப்படுத்தத் தவறிவிடுகிறது. அல்லது அந்த உணர்விற்கான திரட்சியை கவிஞன் மொழியிடம் கை நீட்டிப் பெறுவது கண் உறுத்தச் செய்கிறது. தன் பாவங்களின் மூட்டையோடு/ வெளியெங்கும் அலைகிறான் நிராதரவாய் / ஒளிவட்டத்திற்குள் / சிறைவைக்கப்படுவதன் துயரம் / படர்ந்திருக்கிறது அவன் கண்களில் (பக்-14)

இந்தக் கவிதை ஒரு பரதேசியை ஒட்டிய, அவன் தனது மரணத்தின் மூலமே தன் புனிதங்களின் பாவனைகளை விடுவித்தவனாக மோட்சமடைகிறான். இங்கே கவிதையும் மோட்சமடைகிறது.

ஜப்பானியக் கவிதை வடிவமான ஹைகூ, அதற்கான தெளிவு எட்டப்படாமலேயே தமிழில் எழுதப்படுகிறது. தொகுப்பில் உள்ள ஒரு ஹைகூ வடிவ கவிதை.

உதிர்ந்து கிடக்கும் / சிறகின் மீது / கவிந்து கிடக்கிறது / அதின் / வானம் (பக்-20)

இனி, ஜப்பானின் பெய்ஹோவின் ஒரு கவிதையைப் பார்ப்போமானால் (சி.மணி மொழிபெயர்ப்பில்)

இரவு இரவாக ஓடையில் / பிரதிபலிக்கப்படுகிறது நிலவு.
எனினும் தேடிப் பாரேன் அது / தொட்டிருப்பது எங்கே என்று / சுட்டிக்காட்டேன் போதும் ஒரு / நிழல். கவிதை பௌத்தத்தின் அடிப்படைகள் அனைத்தையும் பிரதிபலிப்பதாக அமைகிறது. நீ வாழவேண்டும். பற்று கொள்ளாமல், அன்பின் சுணையாக, கருணையின் நிழலாக. நிஜம் தொலைந்த பின் தோன்றாத அந்த நிழலாக. இதுவே ஹைகூவின் ஆன்மா.

தூரன் குணாவின் ஹைகூ வடிவ சிறிய கவிதைகள் பெரும்பாலும் ஆன்மாவற்றே உள்ளன. ஆனால் அவரையும் அறியாமல் ஹைகூவின் மொட்டுகள் அவரின் பெரிய கவிதைகளின் உட்பொதிந்து காணப்படுகிறன.

உனக்கெப்படி வாய்த்தது
நானருந்தும் நீரையும்
கள்ளாய் மாற்றும் ரசவாதம்? (பக்-29)

தொகுப்பில் பெரும்பாலும் அபத்தமான விடியலை எதிர் நோக்கியிருக்கும் இராப்பொழுதுகள், அதில் பொதிந்துள்ள தீரா காமம், பால்யங்களை நினைவுறுத்தும் நகர்ச்சுழல், அழிந்து வரும் இயற்கை சமநிலை, அதனால் வீறுகொண்டு எழும் பேரழிவுகள், மறக்கப்படும் தொன்மங்கள், மது தரும் மீட்சி, சில உரையாடல்கள் என ஒரு பட்டியல் தொகுப்பின் இரண்டாம் பாதி கவிதைகள் பெரும்பாலும் நிறைவைத் தருகின்றன.

கடவுளை வரைபவன் (பக்-39)
தலைகீழாய் தொங்கியவாறு
வெறித்துக்கொண்டிருக்கிறான் கடவுள் (பக்-40)

கவிதைகள் ஒரு புதிய உரையாடலை கொண்டிருக்கின்றன. இதில் ஒரு தத்துவார்த்தம் கிளைவிடுவதையும் அது மனிதனின் களிவெறி நிலையில் பொருள் கொண்டு நிற்பதையும் காணமுடிகிறது. அதன் உச்சமாக,

பிடிமானமற்ற கணத்தில் / கரையொதுங்கி / உயிர்க் காற்றிற்காய் தவித்து / துள்ளித்தவித்த மீனின் / மரணத்தை வெறித்திருந்துவிட்டு / தூக்கி எறிந்தேன் / நீருக்குள்.

மனிதனின் ஆதி குரூரம் தொக்கி நிற்பதையும் மீனின் சிறுமையே அதன் கொலைக்கான உறுத்தாத காரணமாக இருப்பது காட்சிப்படுத்தப்படுகிறது. இது கவிதையைப் பல திசைகளில் நகர்த்துகிறது. இந்தக் கவிதைக்குத் தலைப்பும் தேவையில்லைதான்.

தொகுப்பு ஏதாவது ஒரு புள்ளியில் ஒரு முக்கியமான அதிர்வைக் கடந்துவிடுகிறது. இது தொகுப்பிற்குமான ஓர் அதிர்வாகவே கொள்ளப்படுகிறது.

எந்த வலிவுமில்லாத / இவன் செய்யத்தக்கது / இனியேதுமில்லை / மிச்சமிருக்கும் மதுவோடு / வடக்கிருத்தல் தவிர- என முடியும் கவிதை முடிந்த பின் எல்லா புள்ளிகளிலும் வெவ்வேறு தளங்களில் தனது நிழலைப் படியவைக்கிறது.

வடக்கிருத்தல் - பண்டைக் காலத்தில் அரசன் முதலியோர் தமக்கு நேர்ந்த அவமானம் முதலியவற்றால் உயிர் இழக்கத் துணிந்து உண்ணாமல் வடக்கு நோக்கி இருத்தல் என்ற நிலையானது, மனித குலம் இயற்கையை அழித்து தனது ஆன்மாவைக் கொன்று கொண்ட அவமான செயலை ஒரு புள்ளியில் சார்கிறது. வடக்கிருப்பவன் தன்னுடன் ஒரு மதுக் கிண்ணமும் கொஞ்சம் மதுவையும் வைத்திருக்கிறான். அது குறிப்பது மதுவையல்ல. அது ஒரு கிளர்நிலை. கிளர்நிலையே என்றும் கவிதை தரும். எனவே குறைந்த பட்சம் அவன் ஒரு படைப்பாளியாகவே நிற்கிறான். அதுவே மற்றொரு படைப்பு சிதைவுறுவதை அனுமதிப்பதில்லை.

உலக சமாதானத்திற்காக வியட்நாமில் ஒரு புத்த பிட்சு தீக்குளிக்கிறார். வடக்கிருத்தல் போல. அறுபதுகளில் இது உலகையே குலுக்கியது. தனது சாதனையில் உச்சக்கட்டமாக இரண்டு திரைபடங்களை இங்மார் பெர்க்மன்(ஸ்வீடன் இயக்குநர்) குறிப்பிட்டார். ஒன்று Cries and Whisper மற்றொன்று 'Persona' Persona வில் அந்தத் தீக்குளிப்பு காட்சியை, படத்தின் நாயகி - நடிகையான அவள் திடீரென ஒரு கணத்தில் நிலைத்த புன்னகையுடன் அடியோடு பேசுவதை நிறுத்திவிடுகிறாள். மருத்துவமனை அறையில் சிகிச்சையில் இருக்கும்போது - தொலைக்காட்சியில் பார்த்து பேரதிர்ச்சி அடைவதாகக் காட்டியிருப்பார் பெர்க்மன். இது காட்சி சார்ந்து மிகப்பெரிய தாக்கத்தை படத்தில் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையே வடக்கிருத்தல் அல்லது தீக்குளித்தல் செயலின் வழியே ஓர் உறைதலை உருவாக்குகிறது. அந்த உறைதல் படிப்படியாக பரவுகிறது. இதுவே படைப்பின் சாதனையாக அடையாளம் காணப்படுகிறது.

தூரன் குணாவின் தொகுப்பிலுள்ள எல்லா கவிதைகளும் கவிதைக்கான உரையாடலை நிகழ்த்தவில்லை என்றாலும் அதற்கான தொடக்கம் மிகுதியாகவே காணப்படுகிறது. மொழியின் சிக்கனமும் தெளிவான கவிதை வடிவமும் மானுட அக்கரையும் நிச்சயமாக சிறந்த ஒரு கவிதைத் தொகுப்பை உருவாக்கும். காத்திருக்கலாம்.


சுவரெங்கும் அசையும் கண்கள்,
தூரன் குணாவின் கவிதைகள்- ரூ.35
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
ஃப்ளாட் ஏ,நியூடெக் வைபவ், 57-53 வது தெரு,
அசோக் நகர், சென்னை-83


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com