Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2008

சாதிச்சான்றுக்குத் தகுதி : குலத்தொழிலா? செய்யும் தொழிலா?
- கோ.ரகுபதி & சி.லஷ்மணன்
.

சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமூகநீதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக இடஒதுக்கீடு முறையும் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பலன்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஆதாரமாக இருந்துவரும் சாதிச்சான்று அட்டவணைச் சாதியினருக்கும் பழங்குடி இனத்தினருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. ஆனால் சமூக அடுக்கின் மேல்தட்டில் இருக்கும் சாதிகள் அதனால் கிட்டும் சமூக மரியாதையினை ஒரு புறம் அனுபவித்துக் கொள்ளும் அச்சாதிகள், தங்களின் சுயநலன்களுக்காக அரசாங்கத்திடமிருந்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், அட்டவணைச் சாதியினர், பழங்குடியினர் என்று போலியான சாதிச்சான்றிதழைப் பெற்றுக் கொள்வதை காணலாம். இவ்வாறு போலிச் சாதிச்சான்று பெற்றுக் கொண்டவர்கள் தாங்கள் எந்த சாதியின் பெயரில், அதற்குரிய வகைப்படுத்தலில் சான்று பெற்றுக் கொண்டனரோ அதேவகையில் தங்களை சட்டரீதியாக இணைத்துக் கொள்ளவேண்டும் என்று போராட்டமும் நடத்துகின்றனர். அட்டவணைச் சாதிப்பிரிவு மற்றும் பழங்குடியினம் ஆகியவற்றில் இடம் பெற்றிருப்போர் அவர்களுக்குரிய சான்றிதழைப் பெறமுடியாததால் அதனைப் பெறுவதற்கான போராட்டமே அவர்களின் முதன்மையான இலக்காக இருந்து வருகிறது.

போலிச் சான்றிதழ் பெற்றுக்கொண்டு அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் பெறுவதற்கு நடைபெறும் போராட்டத்திலும், உண்மையிலேயே ஒடுக்கப்பட்டவர்கள் அவர்களுக்குரிய சாதிச் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கு நடைபெறும் போராட்டத்திலும் சாதி ஒழிப்பு இல்லை என்பதை எளிதாக புரிந்து கொள்ளமுடியும். இவ்விரண்டு பிரிவினர்களையும் அவர்களின் போராட்டத்தையும் சம தளத்தில் நிறுத்தவில்லை; இருவருக்குமிடையே பெருத்த வேறுபாடு உண்டு. இட ஒதுக்கீட்டிற்கான விவாதத்தில் சாதி ஒழிப்பு குறித்த விவாதம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு சாதியை நிலை நிறுத்தும் போக்கு ஆழமாகிக் கொண்டே வருவது இங்கு கவனிக்கப்பட வேண்டும். இதுகுறித்து விவாதிக்க வேண்டிய தேவை மிகுதியாய் இருப்பினும் அவ்விவாதத்திற்குள் செல்லவில்லை. ஆனால் இதற்கும் கட்டுரை விவாதிக்க இருக்கும் ஆய்வுப் பொருளுக்கும் தொடர்பு இருப்பதனால் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இக்கட்டுரை சாதிய அடிப்படையில் வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டின் பலன்களைப் பெறுவதற்கு ஒருவர் எவ்வாறு ஒரு சாதியில் பிறந்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவர் இந்த நவீன காலத்திலும் அச்சாதிக்குரிய குலத்தொழிலை செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார் என்பதை எடுத்துரைக்க முயற்சிக்கிறது. அட்டவணைச் சாதிகளின் பட்டியலில் இடம் வழங்கப்பட்டிருக்கும் புதிரை வண்ணார் எனப்படும் சாதியினர் இந்த ஆய்விற்குப் பொருத்தமானவர்கள். காரணம், சாதிச்சான்று பெறுவதில் புதிரை வண்ணார் சந்தித்து வரும் சிக்கலுக்கும் நமது ஆய்வுப் பொருளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. வாய்மொழித் தரவுகள், சாதிச்சான்று கேட்டவர்களின் விண்ணப்பம், அதிகாரிகளின் மறுப்புக் கடிதம், புதிரை வண்ணார் சங்கத்தின் துண்டறிக்கை, பத்திரிகை செய்தி போன்றவை இக்கட்டுரையில் ஆதாரங்களாக பயன் படுத்தப்பட்டுள்ளன.

புதிரை வண்ணார்: ஓர் அறிமுகம்

பொருளியல் மற்றும் கருத்தியல் பண்பாடு, அடுக்கடுக்கான அசமத்துவ படிநிலை இவற்றை மையமாகக் கொண்ட சாதிய கட்டமைப்பில், சாதி வேறுபாடின்றி அனைவரின் வாழ்க்கையிலும் அங்கமாக இருந்து வருகிறது. ஆடை அணிதல், சிகை அலங்காரம் செய்து கொள்ளுதல் போன்றவற்றை பொருளியல் பண்பாடு என்றும்; பிறப்பு, பூப்பெய்தல், மாதவிடாய், திருமணம், இறப்பு போன்ற காலங்களில் கடைபிடிக்கப்படும் சடங்குகளை கருத்தியல் பண்பாடு என்றும் கூறலாம். நாவிதர் மற்றும் வண்ணார் எனப்படும் சாதியினர் மேற்கூறப்பட்ட பணிகளைச் செய்து வருகின்றனர். பள்ளர் மற்றும் பறையர்களுக்கென தனியாக நாவிதர் மற்றும் புதிரை வண்ணார் எனப்படும் பிரிவினர் மேற்கூறப்பட்டிருக்கும் பண்பாட்டுப் பணிகளை செய்து வருகின்றனர். நாவிதர் இல்லாத ஊர்களில் புதிரை வண்ணார் நாவிதர் செய்யும் பணியையும் சேர்த்தே செய்து வருகின்றார். இவர்கள் பள்ளர் மற்றும் பறையர்களுக்கு சேவை செய்து வருவதின் காரணமாகவும், அவர்களின் பணிகள் உடல் மற்றும் சடலத்தோடு தொடர்புடையதனாலும் அவர்களுக்கிடையேயான உறவு படிநிலைப்படுத்தப்பட்டு அரை தீண்டாமை ஒடுக்குமுறைக்கு உட்பட்டது.

அரசாங்க வகைப்படுத்துதலில் புதிரை வண்ணார்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இடம் அட்டவணை சாதிப்பிரிவு. இவ்விடத்தில் எழும் கேள்வி: சமூக நிலையில் பள்ளர், பறையருக்குக் கீழே படிநிலைப்படுத்தப்பட்டிருக்கும் புதிரை வண்ணார் சாதியை அட்டவணைப் பிரிவில் சேர்த்திருப்பது அவர்களுக்குள் நிலவிவரும் இயல்பான சமூகநிலைக்குப் பொருத்தமுடையதுதானா? இக்கேள்வி குறித்து விரிவாக விவாதிக்க வேண்டியது அவசியமானது தான் இருப்பினும், அதுகுறித்து இங்கு விவாதிக்கவில்லை. தங்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து சில அடையாளப் போராட்டங்களை புதிரை வண்ணார்கள் நடத்தியிருப்பதிலிருந்து அவர்கள் அரசாங்க வகைப்படுத்தலை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம் (தினமலர்,05 செப்.06;14). சொற்ப எண்ணிக்கையில் வசித்து வரும் இச்சாதி பழங்குடியினர் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்படுமா என்பது கேள்விக்குறிதான். ஆனால் அரசாங்கம் புதிரை வண்ணார்களை வகைப்படுத்தியிருக்கும் அட்டவணை சாதிக்குரிய சான்று பெற்றுக் கொள்வதில் அவர்கள் பல இடையூறுகளை சந்தித்து வருகின்றனர்.

இங்கே முதலில் நாம் காண வேண்டியது, புதிரை வண்ணார் என்ற ஒரு சாதி இருக்கிறதா? பள்ளர் பெண்ணுக்கும் பறையர் ஆணுக்கும் பிறந்தவர்களே புதிரை வண்ணார் என்ற வாய்மொழி வரலாறு புதிரை வண்ணார்களிடத்தில் இருந்து வருகிறது. பள்ளர், பறையர் மற்றும் இதர தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு சேவகம் செய்கின்ற பிரிவினர் புதிரை வண்ணார் என்ற குறிப்பு காலனி ஆட்சியாளர்களின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புகளில் காணமுடிகிறது. 1891ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பொதர வண்ணான் பறையர், பள்ளர் மற்றும் இதர தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு வெளுப்பு வேலை செய்பவர்கள் என்ற பதிவு இடம் பெற்றிருக்கிறது (பக்.287). இதுவே புதிரை வண்ணார் குறித்த முதல் பதிவாக இருக்கமுடியும். இதற்குப் பின்னர் தென்னிந்திய சாதிகளைக் குறித்து பதிவு செய்த எட்கர் தர்ஸ்ட்டன் தன் நூலில் இச்சாதியினர் குறித்து பதிவு செய்துள்ளார். 1931ம் ஆண்டு சாதிரீதியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பிலும் புதிரை வண்ணான் என்ற பெயர் இடம் பெற்றுள்ளது. (ஹரிஜன், 11 மார்ச். 1931, பக்: 6-7). 1961ம் ஆண்டு கணக்கெடுப்பிலும் புதிரை வண்ணார்கள் தாலுகாவாரியாக அவர்களின் தொழில், கல்வி போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கின்ற தமிழ்நாடு அரசின் 06 அக்டோபர் 2005 தேதியிட்ட கடிதம், எண். 20379 புதிரை வண்ணார் அட்டவணை சாதியினரில் ஒரு பிரிவினர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, 1891ம் ஆண்டு முதற்கொண்டு 2005 வரையிலான அரசு குறிப்புகளிலிருந்து புதிரை வண்ணார் அட்டவணை சாதியினருக்கு, குறிப்பாக பள்ளர், பறையருக்கு வெளுப்பு வேலை செய்துவரும் சாதியினர் என்பது தெளிவு. அரசாங்கமே புதிரை வண்ணார் என்ற ஒரு சாதி இருக்கின்றது என்பதை ஒப்புக் கொண்டு அவர்களை முன்னேற்ற வேண்டும் என்று முயற்சிக்கும் பொழுது ஏன் அதிகாரிகள் அவர்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்குவதற்கு மறுத்து வருகின்றனர் என்பதனை இனி விரிவாகக் காண்போம். பரிசோதனை தரும் வேதனை சாதிச்சான்று கேட்டு விண்ணப்பிக்கும் ஒருவரை அவர் புதிரை வண்ணார் சாதியைச் சேர்ந்தவர்தானா? என்பதை கண்டுபிடிப்பதற்கு கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர் மற்றும் தாசில்தார் ஆகியோர் நிர்வாக ரீதியான சோதனையை மேற்கொள்கின்றனர். அச்சோதனையில் அவர்கள் எழுப்பும் கேள்விகள்:
1. புதிரை வண்ணாரிடம் கழுதை இருக்கிறதா?
2. துணி வெளுப்பதற்கு பாரம்பரிய வெள்ளாவி அடுப்பு முறை பயன்படுத்தப்படுகிறதா?
3. அவர் ஊரில் வெளுத்தார் என்பதற்கு சாட்சியாய் இருப்பது யார்?

அதிகாரிகளின் பரிசோதனையின் போது தன்னை புதிரை வண்ணார் என்று வலுவான ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு சாதிச் சான்றிதழ் கோருகின்ற நபருடையது. ஆதாரங்கள் என்றால் அது கழுதையையும் வெள்ளாவி அடுப்பையும் குறிக்கிறது. மேலும், பள்ளர், பறையர் சாதியினைச் சேர்ந்தவர்கள் சாதிச் சான்று கோரும் புதிரை வண்ணார் தங்களுக்கு வெளுப்பு வேலை செய்தார் என்று சாட்சியம் அளிக்க வேண்டும். இச் சோதனை சான்றிதழ் கோருபவரின் ஊரில் நடத்தப்படும்; அதிகாரிகளின் அலுவலகத்தில் அல்ல. இதற்காக அதிகாரிகளை மகிழுந்தில் அழைத்துச் செல்ல வேண்டியது சான்றிதழ் கேட்பவரின் கடமை. சோதனையின் போது மேலே குறிப்பிட்டுள்ள ஆதாரங்கள் சான்றிதழ் கோரியவரிடம் இல்லையென்றால் அவருக்கு சான்றிதழ் மறுக்கப்படும். இச்சோதனையை மேற்கொள்வதற்கு மட்டும் சான்றிதழ் கோரும் புதிரை வண்ணார் சில/பல ஆயிரங்கள் நிதி செலவினை சந்திக்க வேண்டும். சான்றிதழ் கிடைத்தால் ஒருவிதத்தில் நிதிச்செலவினை தாங்கிக் கொள்கின்றனர்; ஆனால் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சான்றிதழ் பெறுவதற்கு பல பத்தாண்டுகளாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த புதிரை வண்ணார்கள் போராடி வருகின்றனர்.
இப்போராட்டம் இரண்டு வகைப்பட்டது:
1. தனிநபர் போராட்டம்
2. கூட்டுப் போராட்டம்.

அதிகாரிகள் பரிசோதனை செய்வது அவர்களுக்கு நிர்வாகப் பணி, ஆனால் புதிரை வண்ணார்களைப் பொறுத்தமட்டிலும் அது ஒருவகைப் போராட்டம். சான்றிதழ் கோரும் ஒருவர் தான் வெளுப்பு வேலை செய்து வந்த ஊரிலேயே அதிகாரிகளின் முன்னிலையில் உரிய ஆதாரங்களையும் சாட்சிகளையும் காண்பித்து தன்னை புதிரை வண்ணார் என்று நிரூபிப்பதில் அவர்களுக்கு அடிப்படையில் சிக்கல் இருந்து வருகிறது. காரணம், உற்பத்திமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் சோப்பு, சலவை எந்திரம் போன்றவற்றின் அறிமுகம் இவற்றினை வாங்கி அதன் மூலம் தங்களுடைய துணியை தாங்களே வெளுத்துக் கொள்ளும் முறை வண்ணார்களுடையே தேவையை குறைத்துவிட்டது. மேலும், தீண்டாமை-ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுவதற்கு எத்தனித்த புதிரை வண்ணார்கள் தங்களின் ஊரைவிட்டு வெளியேறி வேறு கிராமம் அல்லது நகரங்களுக்கு இடம்பெயர்தல்; பாரம் பரியத் தொழில்களில் ஒன்றான மனோதத்துவம் சார்ந்த வைத்தியத் தொழிலை மேற்கொள்வது; கல்வி பயின்று மாத ஊதியம் வழங்கும் தனியார் அல்லது அரசு நிறுவனங்களில் பணி செய்வது போன்ற பலவகையான செயல் களைப் பின்பற்றுகின்றனர். இதன் பொருள் அவர்கள் வெளுப்பு வேலை செய்வதிலிருந்து விடுபட்டு வருகின்றனர் என்பதாகும்.

இப்பிரிவினர் உடலியல்ரீதியாக புதிரை வண்ணாராக பிறந்திருந்த போதிலும் அச்சாதிக்குரிய பாரம்பரியத் தொழிலை தற்போது செய்வதில்லை. இவர்களும் அதிகாரிகளின் நிர்வாகரீதியான சோதனையில் தங்களை புதிரை வண்ணார் என்று நிரூபித்துக் காட்ட வேண்டியது கட்டாயம். மேலும், பாரம்பரியத் தொழில்களை செய்து வருபவர்களின் வாரிசுகளும் அச்சோதனையில் வெற்றி பெற வேண்டும்; இவர்கள் கடும் போராட்டங்களுக்குப் பின்னர் சான்றிதழ் பெறுகின்றனர். ஆனால் பாரம்பரியத் தொழிலை விட்டுவிட்டவர்கள் சோதனையில் வெற்றி பெற இயலாத காரணத்தினால் சான்றிதழ் பெறமுடியவில்லை. சான்றிதழ் பெற்றவர்கள் பலருக்கும் வெவ்வேறு போராட்ட அனுபவம் இருப்பதால் கள ஆய்வில் நம்மிடம் சிலர் கூறிய வேதனைகளை இங்கு விவரிப்போம்.

கையூட்டு, அவமானம், தீக்குளிப்பு

தங்கராஜ் தன்னுடைய மகனுக்கு சாதிச் சான்றிதழ் கேட்டு வெள்ளாளன்குளம் கிராம நிர்வாக அதிகாரியை அணுகிய பொழுது அவர் புதிரை வண்ணார் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உருவானது. தங்கராஜூம் மற்றும் அவரது சகோதரரும் பள்ளர்களின் ஒடுக்குமுறையினால் அவர்கள் வசித்து வந்த தென்கலத்திலிருந்து இடம் பெயர்ந்து ஒரு காட்டுப்பகுதியில் விவசாய நிலம் வாங்கி அங்கேயே விசாயமும் செய்து குடியிருந்து வருவதால் அவ்விருவரும் பாரம்பரியத் தொழிலிலிருந்து முழுவதுமாக விடுபட்டுவிட்டனர். சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்த தங்கராஜ் தன்னை புதிரை வண்ணார் என்று நிரூபிக்க வேண்டிய சூழல் உருவானதால் அவர் ஏற்கனவே வசித்து வந்த தென்கலத்திற்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தங்கராஜ் எங்களுக்குத்தான் வெளுப்பு வேலை செய்தான் என்று தென்கலத்திலுள்ள சுமார் 25 பள்ளர்கள் தங்கராஜின் வேண்டுகோளுக்கிணங்க மனு ஒன்றில் சாட்சியம் அளித்தபோதிலும்கூட உடனடியாக அவருக்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை. சான்றிதழைப் பெற தலையாரி முதற்கொண்டு கிராம நிர்வாக அதிகாரி, தாசில்தார் வரை சில ஆயிரம் ரூபாய் கையூட்டு கொடுத்த பின்னரே சான்றிதழைப் பெற முடிந்ததென அவர் களஆய்வின் போது தெரிவித்தார்.

சேரன்மகாதேவியில் பந்தல் தொழிலையும் உடைகள் தேய்த்தல் வேலையும் செய்துவரும் கிருஷ்ணன் தன் மகனுக்கு சாதிச்சான்று பெறுவதற்கு முயற்சி செய்த பொழுது நீ புதிரை வண்ணான் என்பதை நிரூபிக்கவும் என்று சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளின் அதிகாரிகள் கூறி விட்டனர். இதனால் கிருஷ்ணன் தான் ஏற்கனவே வெளுப்பு வேலை செய்து வந்த மாவடி என்ற ஊருக்கு அவ்வதிகாரிகளை தன்னுடைய சொந்த செலவில் அழைத்துச் சென்றார். அவ்வதிகாரிகள், உன் வீட்டில் வெள்ளாவி இல்லை, கழுதை இல்லை, துணிகள் இல்லை! நீ வண் ணான் என்று கூறினால் நாங்கள் எவ்வாறு நம்புவது? இதனால் தான் நாங்கள் நேரடியாக பார்க்க வருகிறோம் என்று கிருஷ்ணனை கடிந்தனர். இந்த இக்கட்டான சூழலில் அவ்வூர் பள்ளர்கள் திரண்டு வந்து, ஐயா அவன் எங்களுக்குத்தான் வெளுத்தான், அதனால் சான்றிதழ் கொடுக்கலாம் என்று சாட்சியமளித்தனர். பின்னர் அதிகாரிகள் அவருக்கு சாதிச் சான்றிதழ் வழங்கினர்.

வங்கி ஊழியரான, சவுந்திரராஜனின் வாழ்க்கை அனுபவம் மேற்கூறப்பட்டவர்களின் அனுபவத்திலிருந்து வேறுபட்டது. அவர் பிறப்பால் புதிரை வண்ணாராக இருந்தபோதிலும் அதற்கான சாதிச் சான்றிதழைப் பெற முடியாததால் இந்து வண்ணான் என்று சான்றிதழைப் பெற்றுக்கொண்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வங்கிப் பணிக்கு சென்றார். அவருடைய வாரிசுகளுக்கும் சான்றிதழ் உரிய நேரத்தில் கிடைக்காத காரணத்தினால் அவர்களால் கல்வி நிலையங்களில் உதவித் தொகையை வாங்க முடியாமற்போனது. அவர் தன் வாரிசுகளுக்கும் தனது சகோதரருக்கும் சாதிச்சான்று வாங்கிய அனுபவத்தைக் கூறுகிறார்: புதிரை வண்ணார் சாதிச்சான்றிதழ் வாங்கச் சென்றால் அதற்கு ஆதாரமாக நிலப்பத்திரம் இருந்தால் கொண்டுவா என்று நிர்ப்பந்திக்கிறார்கள். புதிரை வண்ணார்களில் யாருக்கு நிலம் இருக்கிறது? எனது தம்பிக்கு சாதிச் சான்றிதழ் வாங்கும் பொழுது சிரமப்பட்டேன். அதிகாரிகள் புதிரை வண்ணார் என்ற சாதி இல்லவே இல்லை என்றே கூறுகின்றனர்.

நான் முன்பு வேலை பார்த்து வந்த தியேட்டர் முதலாளி சாதிச்சான்று வழங்கும் அதிகாரிக்கு நண்பர் என்பதால் அவர் மூலமாக வாங்கினேன். சான்றிதழ் வாங்குவதற்கு கொஞ்சம் பணம் செலவு ஆனது. வேதியியலில் இளங்கலை பட்டம் படித்துக் கொண்டிருந்த ராமச்சந்திரனின் பெற்றோர்கள் ஊர் வெளுப்பு வேலை செய்துவந்தனர். ராமச்சந்திரன் அவருக்கு சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த பொழுது அதிகாரிகளால் இழுத்தடிக்கப்பட்டதோடு மட்டுமல்லா மல் பலர் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டார். இவரை புதிரை வண்ணார் என்று நம்புவதற்கு மறுத்து விட்டார் திருச்செந்தூர் தாசில்தார். இதனால் அவர், தான் புதிரை வண்ணார் என்பதை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந் தம் உருவானது. இதனை நிரூபிக்கச் சென்ற பொழுது தாசில்தார் அவரை இழிவுபடுத்திய நிகழ்வினை ராமச்சந்தி ரன் கூறுகிறார்: நாங்கள் காயாமொழி என்ற ஊரில் பறை யர்களுக்கு வேலை பார்த்ததால் அவர்களை தாசில்தாரிடம் சாட்சி சொல்வதற்கு அவருடைய அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றேன்; இருப்பினும் அவர் நம்பவில்லை. அவர் அலுவலகத்தில் பலர் முன்னிலையில் நீங்கள் இராப்பாடிகள்; இரவில்தான் நடமாட வேண்டும், செருப்பு அணியக்கூடாது, மேல்சட்டை அணியக்கூடாது என்றெல் லாம் அவமானப்படுத்தினார். அலுவலகத்தில் இருந்த அனைவரும் என்னை ஒரு வேற்றுலக மனிதனைப் போல் வேடிக்கையாகப் பார்த்தனர்.

நான் கையைக் கட்டிக் கொண்டு செய்வதறியாமல் நின்று கொண்டிருந்தேன். எனக்கு உள்ளுக்குள் ஒரே அவமானமாகவும், அசிங்கமாக வும் இருந்தது. நான் நடுங்கிக் கொண்டிருந்தேன். என்ன படித்திருக்கிறாய்? என்று அதட்டினார். இளங்கலை வேதி யியல் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினேன். உடனே வியப்பில் மவுனமானார். பின்னர் நாளை வா என்று கூறினார், சென்றேன் சான்றிதழ் கொடுத்தார். தாசில் தார் பலர் முன்னிலையில் ராமச்சந்திரனை அவமானப் படுத்திய செயலை அவரால் இன்றும் மறக்க இயல வில்லை. தரவு சேகரிப்பதற்குச் சென்ற சமயத்தில் அவரை சந்தித்த மூன்றுமுறையும் சாதிச் சான்றிதழ் பிரச்சினை எழும் பொழுது அவர் தாசில்தார் தன்னை அவமானப்படுத்திய செயலை மீண்டும் மீண்டும் கூறி கண்கலங்கினார். தாசில்தார் உண்மையில் ராமச்சந்திரனை மிகக் கொடூரமாக ஆற்றிக் கொள்ள இயலாத உளவியல் ரீதியான காயத்தினை ஏற்படுத்தியிருக்கிறார். சில சமயங்களில் புதிரை வண்ணார் சான்றிதழ் பெறுவதற்கு தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் போராட் டம் நடத்த அம்மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றனர். சின்னத்துரை தன் மகன் பெரியசாமிக்கு சான்றிதழ் பெற முயற்சி செய்தபொழுது அவர் தீக்குளிப்பு போராட்டத்தை நடத்துவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்.

அவர் தன் அனுபவத்தை கூறுகிறார்: நான் எனக்கு புதிரை வண்ணான் என்று ஏற்கனவே சாதிச் சான்றிதழ் பெற்றிருந்தேன்.என் மகன் பெரியசாமி, அவனுக்கு சாதிச்சான்று கேட்டு செம் மறிக்குளம் கிராம நிர்வாக அதிகாரியைச் சந்திக்க சென்ற பொழுது அவர், நீ புதிரை வண்ணான் இல்லை என்று கூறி விட்டார். இதனை என் மகன் என்னிடம் தெரிவித்தான். நான் அவ்வதிகாரியைச் சந்தித்து ஐயா அவன் என்னுடைய மகன்; நான் பெற்ற மகன். நான் புதிரை வண்ணானாக இருக்கும்பொழுது நான் பெற்ற பிள்ளை யாராக இருக்கும்? வேறு சாதியாய் இருக்க முடியுமா? என்றேன். அதிகாரி, நீ புதிரை வண்ணான் என்பதற்கு என்ன சான்று இருக்கிறது என்றார். நான், என்னிடம் சான்று இருக்கிறது, மாலையில் கொண்டு வருகிறேன். என்னிடம் இருக்கிறதா இல்லையா? என்பதை இங்கு நிற்கின்ற இந்த தலையாரிகளிடம் கேட்டுப் பாருங்கள் என்றேன். அவர்களும் அவனிடம் சாதி சான்றிதழ் இருக்கிறது, அவன் மகனுக்கு சான்றிதழ் கொடுக் கலாம் என்றனர். நான் பழைய நடைமுறை போல் ஐயா என்று மரியாதையாகப் பேசுவேன். ஆனால், என் மகன் படித்திருக்கிறான், நாகரீகமாக சார் என்று பேசியிருக்கி றான். இதனால் அவன் என்னுடைய மகன்தானா? என்றே அவ்வதிகாரிக்கு சந்தேகம் வந்துவிட்டது. இருப்பினும், விசாரிக்கிறோம் என்ற பெயரில் மூன்று மாதம் இழுத்து அடித்தனர்.

நான் புதிரை வண்ணான், அதற்கான சாதிச் சான்றிதழ்தான் வழங்க வேண்டும், இல்லையென்றால், நான் தீக்குளிக்கப் போகிறேன் என்று தாசில்தாருக்கு கடிதம் எழுதினேன். இதனை படித்ததும் என்னை தலையாரி மூலம் அழைத்து வரச் சொன்னார் தாசில்தார். பின்னர்தான் சான்றிதழ் வாங்கினேன். மேலே குறிப்பிடப்பட்டவர்களில் பெரியசாமியும் ராமச்சந்திரனும் சாதிச்சான்று கேட்டு விண்ணப்பித்த காலத் தில் அவர்களுடைய பெற்றோர்கள் வெளுப்பு மற்றும் சடங்கு வேலையில் ஈடுபட்டிருந்தனர்; இன்றும் ஈடுபட்டு வருகின்றனர். தங்கராஜ், சவுந்திரராஜன் ஆகியோர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த சமயத்தில் வெளுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கவில்லை. முன்னவர்கள் தாம் செய்துவரும் வெளுப்புப் பணியின் அடிப்படையில் சாதிச் சான்றிதழ் பெற்றிருக்கின்றனர். பின்னவர்கள் பாரம்பரியத் தொழிலை விட்டிருப்பினும் தங்கராஜ் முன்னர் தங்களுக்கு வெளுத்தார் என்று பள்ளர்கள் சாட்சியம் அளித்ததாலும், சவுந்திரராஜன் முன்னர் வெளுத்தார் என்பதற்கு அவர் ஏற்கனவே பணிபுரிந்த திரையரங்கு முதலாளிக்கு சாதிச் சான்று வழங்கும் அதிகாரிகளிடம் இருந்த நெருக்கத்தின் மூலம் சாதிச்சான்று பெற்றுக் கொண்டனர். இவர்கள் சந்தித் திருந்த அதே சிக்கலைத்தான் ஆனந்த ரூபியும் தன் மகனுக்கு சாதிச்சான்று கேட்டு விண்ணப்பித்த பொழுது சந்திக்க நேர்ந்தது, ஆனால் அவரால் சாதிச்சான்று பெறமுடியாமற் போனது. இதுகுறித்து விரிவாகக் காணலாம்.

ஆனந்த ரூபியின் தந்தை தியாகராஜன். தியாகராஜனின் தாய் திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டையிலுள்ள வீரமாணிக்கபுரம் பள்ளர்களுக்கு வெளுப்பு வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்தவர்; தந்தை இதே மாவட்டம் சிவந்திபட்டியில் பள்ளர்களுக்கு வெளுப்பு வேலை செய்துவந்த குடும்பத்தில் பிறந்தார். தந்தையை தனது சிறுவயதிலேயே தியாகராஜன் இழந்து விட்ட காரணத்தினால் அவரது தாய் அவரை அழைத்துக் கொண்டு வீரமாணிக்கபுரத்திற்கே வந்து பள்ளர்களுக்கு வெளுப்பு வேலை செய்யத் தொடங்கினார். தியாகராஜன் தன் அம்மாவுக்கு வெளுப்பு வேலையில் உதவி செய்து கொண்டு அவருடைய கல்வித் தகுதியினால் அரசு பணியாளரானார். சுமார் 90 வயதினை எட்டிவிட்ட தியாகராஜனின் தாய் வீரமாணிக்கபுரத்தில் தற்போதும் வாழ்ந்து வருகிறார். தியாகராஜனின் மகள் ஆனந்த ரூபி பிறப்பு அடிப்படையில் புதிரை வண்ணார் என்பது தெளிவு. இவருடைய மூத்த சகோதரியை, சான்றிதழ் கேட்டு தாசில்தாரை சந்தித்த பொழுது அவரால் அவமானப்படுத்தப்பட்டதாக மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ராமச்சந்திரன் திருமணம் செய்திருக்கிறார் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி. எனவே, ஆனந்த ரூபியின் பிறப்பும் அவருடைய குடும்பத்தார் உறவும் புதிரை வண்ணார்களோடுதான் இருக்கிறது என்பது திண்ணம்.

ஆனந்த ரூபியின் கணவர் பாலமுருகன், புதிரை வண்ணார். இவர் களக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 1984ம் ஆண்டு 6ம் வகுப்பில் படித்திருக்கிறார். பள்ளி நிர்வாகம் அவர் அப்பள்ளியில் சேர்ந்த ஆவணங்களின்படி கோ.பாலமுருகன் புரத வண்ணான் சாதியைச் சேர்ந்தவர் என்று சான்றளித்திருக்கிறது. எனவே, புதிரை வண்ணாராகிய ஆனந்த ரூபி-பாலமுருகன் தம்பதியினருக்குப் பிறந்த மகன் பிறப்பு அடிப்படையில் புதிரை வண்ணார் என்பதற்கு எவ்வித சான்றும் அவசியமற்றது; அதற்குரிய சான்று வழங்குவதற்கு எவ்வித பரிசோதனையும் அவசியமற்றது. ஆனால் அரசு அதிகாரிகளுக்கு அவர்கள் புதிரை வண்ணார்கள்தானா? என்பதில் தீராத ஐயம் ஏற்பட்டுவிட்ட காரணத்தினால் அவர்கள் நிர்வாகரீதியான பரிசோதனையை மேற்கொண்டனர். இதனால் பாலமுருகனின் தந்தை கோபால், திருநெல்வேலி மாவட்டம் சிதம்பராபுரத்தில் பள்ளர், பறையர்களுக்கு பண்பாட்டு சேவை செய்த குடும்பத்தில்தான் பிறந்தேன், அதனால் என் மகன் பாலமுருகன் புதிரை வண்ணார்தான் என்று நிரூபிப்பதற்கு அவர் பள்ளர், பறையர் என இருவரை சாட்சி சொல்வதற்கு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.

பின்னர் கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த ரூபியின் விண்ணப்பப் படிவத்தை வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பினார். ஆனந்த ரூபி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு விசாரணைக்குச் சென்ற பொழுது அவரிடம் அவருடைய தந்தை, கணவர், மாமா ஆகியோரின் தொழில்களைக் கேட்டறிந்து கொண்டு அதனை நான்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பினார். அவர் ஆனந்த ரூபியின் மகனுக்கு சாதிச்சான்று கொடுக்க முடியாது என்று அவருக்கு, 27 நவம்பர் 2007 அன்று அனுப்பிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: நான்குனேரி வட்டம் சிதம்பராபுரத்தைச் சேர்ந்த திருமதி. ஆனந்த ரூபி என்பவர் தனது மகனுக்கு இந்து புதிரை வண்ணான் என சாதிச்சான்று கேட்டது தொடர்பாக விசாரணைச் செய்யப்பட்டதில் மனுதாரரின் கணவர் சென்னை நந்தனம் தனியார் நிறுவனத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வருவதாகவும், மனுதாரரின் தந்தையார் மரக் கடையில் வேலை பார்த்து வருகிறார் என்றும் மனுதாரரின் கணவரின் வாரிசுகள் யாரும் சலவைத் தொழிலில் ஈடுபட வில்லை எனவும் விசாரணையில் தெரிய வருகிறது. எனவே மனுதாரின் மகனுக்கு இந்து புதிரை வண்ணான் என சாதிச்சான்று வழங்க இயலாது என்ற விபரத்தினை இதன் மூலம் மனுதாருக்கு தெரிவிக்கப்படுகிறது.

ஆனந்த ரூபியும் அவருடைய கணவரும் பிறப்பு அடிப்படையில் புதிரை வண்ணாராக இருந்தபோதிலும் இவர்களின் மகன் பிரவீனுக்கு புதிரை வண்ணார் என்று சாதிச்சான்றிதழ் வழங்க முடியாது என்கிறார். வட்டாட்சியர் புதிரை வண்ணார் என்று சான்று வழங்க முடியாததற்கு காரணமாக கூறியிருப்பதாவது: மனுதாரரின் தந்தை மற்றும் கணவர் பாரம்பரியத் தொழிலை செய்யவில்லை. மனு தாரரின் கணவரின் வாரிசுகள் யாரும் சலவைத் தொழிலில் ஈடுபடவில்லை. கணவரின் வாரிசுகள் மொத்தம் மூன்று பேர். மனுதாரரும் மனைவியுமாகிய ஆனந்த ரூபி, இவர்களின் மூத்த மகன் தற்போது மூன்றாம் வகுப்பு படித்து வரும் பிரவீன், இரண்டாவது மகள் பாலர் பள்ளி படித்துவரும் பிரீத்தி ஆகியோர் சட்டப்படியான வாரிசுகள். இவர்கள் மூன்றுபேரும் சலவைத் தொழிலில் ஈடுபடவில்லை என்று விசாரணையில் தெரிய வந்திருக்கிறது என்கிறார் தாசில்தார். மனுதாரரின் கணவரின் வாரிசுகள் இரண்டு பேரும் 10 வயதினைக்கூட எட்டியிருக்கவில்லை; இவர்களை சலவைத் தொழில் செய்யவில்லை என்கிறார். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்துவது குற்றம் என்கிறது குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம்; ஆனால் வட்டாட்சியரோ அவர்கள் சலவைத் தொழில் செய்யவில்லை என்கிறார். வட்டாட்சியரின் செயல் அம்மழலைகளை சலவைத் தொழில் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவே இருக்கிறது; இவருடைய செயல்பாடுகள் மட்டுமல்ல சாதிச்சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் அனைவரின் செயலும் புதிரை வண்ணாரை குலத்தொழில் முறைக்குள் மீண்டும் புகுத்துவதாகவே இருக்கிறது.

இங்கு எழுகின்ற அடிப்படையான கேள்வி: ஒருவர் சாதிச் சான்று பெறுவதற்கு அடிப்படையான தகுதி அவர் அச்சாதியில் பிறந்திருப்பதா? அல்லது தன்னுடைய பாரம்பரிய தொழிலை செய்வதா? அதாவது ஒருவருக்கு சாதிச்சான்று பிறப்பு அடிப்படையில் அல்லது அவர் தற்போது செய்துவரும் தொழிலின் அடிப்படையில் வழங்கப்படுகிறதா? வட்டாட்சியர், சாதிச்சான்று கொடுக்க மறுப்பதற்கு அவர் கூறியிருக்கும் காரணம் புதிரை வண்ணார்கள் சாதிச்சான்று வாங்க வேண்டும் என்றால் அவர்கள் அச்சாதியில் பிறந்திருப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்குரிய சலவைத் தொழிலையும் செய்ய வேண்டும் என்கிறார். இந்த புரிதல் ஆனந்த ரூபிக்கு இருந்திருக்கிறது. அவர் வட்டாட்சியர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஆதி-திராவிட நலத்துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள 18 டிசம்பர் 2007 தேதியிட்ட கடிதத்தில் அவர் கூறுகிறார்: தாங்கள் அனுப்பிய கடிதம் ஆ9/15626/2007 மூலம் நான் எனது மகன் பிரவீனுக்கு தங்களால் சாதிச்சான்றிதழ் தர இயலாது என்று தெளிவாக தெரிந்து கொண்டேன். தங்களின் கடிதம் படி யார் எந்த தொழில் செய்கிறார்களோ அவர்களுக்கு அதன் அடிப்படையில் தான் சாதிச்சான்றிதழ் வழங்கப்படுகிறது என்று தெரிகிறது. அதாவது எடுத்துக்காட்டாக நாடார் சாதி என்றால் பனைமரம் கண்டிப்பாக ஏறியாக வேண்டும், சக்கிலியர் என்றால் அவர் கண்டிப்பாக செருப்பு தைப்பவராக இருக்க வேண்டும் என்று தான் உங்களுடைய அர்த்தம். உங்களுடைய கடிதம்படி அந்தந்த சாதியை சேர்ந்தவர்கள் படித்திருந்தாலும் அவர்கள் சாதிக்கென்ற தொழிலை செய்தால் தான் சாதி சான்றிதழ் வழங்கப்படும் என்ற எண்ணம் அல்லவா? தங்களுடைய விசாரணையில் மனு தாரரின் தந்தை மரக்கடையில், கணவன் சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதெல்லாம் தெரியவரும் போது, மனுதாரரின் சாதி என்னவென்று தெரியவில்லையா? தாங்கள் அனுப்பிய கடிதத்தின் நகலை மாவட்ட ஆட்சியாளர், ஆதி-திராவிட நலத்துறை அமைச்சர், முதல்வர் அனைவருக்கும் அனுப்பி எனது மகனின் சாதி சான்றிதழ் கிடைக்குமா என்று நினைக்கிறேன். மன்றாட்டம், உரிமைப் போராட்டம்

புதிரை வண்ணார்களின் தேவை குறைந்துவிட்டதாலும், அவர்கள் மீது செயல்படுத்தப்பட்ட ஒடுக்குமுறையின் காரணமாகவும் சில ஊர்களில் புதிரை வண்ணார்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டதனால் அவர்கள் தான் பள்ளர்/பறையருக்கு வேலை செய்தேன் என்பதை நிரூபிப்பது கடினமான ஒன்று. சான்றிதழ் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக அவர்கள் வேறுவழியின்றி அவ்வூர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உருவாகிறது. அங்குமிங்குமாக ஓடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. தன்னை புதிரை வண்ணார் என்று நிரூபிப்பதற்கு ஏற்கனவே அதிக பணம் செலவு செய்த பின்னர், தலையாரி முதற்கொண்டு கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர் மற்றும் தாசில்தார் வரை கையூட்டு கொடுப்பதற்கு பெரிய அளவு தொகை செலவு செய்வதாகவும், ஒரு சாதிச் சான்றிதழ் பெறுவதற்கு ஒருவருக்கு சுமார் ஐந்து ஆயிரம் வரை செலவு ஆகிறது என்றும் அவர்கள் கூறினர். இத்தொகையினைக் கொடுக்கவியலாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர் புதிரை வண்ணார்கள். இருப்பினும் அதிகாரிகள் அவர்களிடம் ஈவிரக்கமின்றி கையூட்டு வசூலித்துக் கொண்டதாக கள ஆய்வில் அறிய முடிந்தது. சான்றிதழ் பெறுவதில் புதிரை வண்ணார்கள் அதிகாரிகளை நிர்ப்பந்திக்கும் போராட்டம் நடத்துவது இயலவே இயாலாதது, அவர்களிடம் இரந்து கேட்க வேண்டிய சூழலே நிலவுகிறது.

இதனால் மன உளைச்சலும் அதிகாரிகள் மீதான சினமும் அவர்களிடத்தில் எழுவது தவிர்க்க இயலாததாய் இருந்தும்; இதனை தணித்துக் கொள்வது இயலாததாக இருப்பினும், வேறுவழியின்றி சான்றிதழுக்காக அதனைக் கட்டுப் படுத்திக் கொண்டனர். நிர்வாகரீதியான சோதனையில் ஆதாரங்களையும் சாட்சிகளையும் முன்வைப்பதில் தொடங்கி கையூட்டு கொடுத்து சான்றிதழ் பெறும்வரை அவர்கள் வேதனை, அவமானம், கடன்படுதல், சினத்தை அடக்கிக் கொள்ளுதல் போன்ற செயல்களை கட்டாயம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தும் இருந்தது. இது ஒரு வகைப் பட்ட போராட்டமே. எனவே, இப்போராட்டத்தினை மன்றாட்டம் என்று வரையறுக்கலாம். ஆனந்த ரூபியின் அனுபவம் மற்றவர்களிடத்திலிருந்து வேறுபட்டது. மற்றவர்களுக்கு என்ன நிகழ்ந்ததோ அச்சோதனையே ஆனந்த ரூபிக்கும் நிகழ்ந்தது. இருப்பினும், மற்றவர்கள் மன்றாடி சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர். ஆனால் ஆனந்த ரூபியோ வட்டாட்சியர் சான்றிதழ் தர இயலாது என்று எழுத்துப் பூர்வமாக கொடுத்த காரணத்தினால் தன்பக்கம் இருக்கும் நியாத்தை, தன் பிறப்பைக்கூறி சான்றிதழ் பெறுவதற்கு நேரடியான போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார். பிறப்பு அடிப்படையில் தன் மகனை புதிரை வண்ணார் என்று அங்கீகரிக்க வேண்டும் என்று உரிமைப் போராட்டத்தை நடத்துகிறார்.

இனி, நாம் அதிகாரிகளின் செயல்பாடுகள் புதிரை வண்ணாரை பண்டைய குலத்தொழில் முறை செய்வதற்கு நிர்ப்பந்திக் கும் செயல் குறித்த விவாதத்திற்கு திரும்புவோம். உயிரூட்டப்படும் குலத்தொழில் அதிகாரிகளின் பரிசோதனையில் எழுப்பப்படும் கேள்விகள் சாதிச் சான்று கேட்டு விண்ணப்பிக்கும் ஒருவர் ஒருசாதியில் பிறந்திருப்பதோடு மட்டுமல்லாமல் அச்சாதிக் குரிய குலத்தொழிலையும் செய்வதுதான் அதற்குரிய தகுதி என்பதனை அறியமுடிகிறது. ஆனால், தீண்டத்தகாத-பழங் குடியின சமூகத்தில் பிறந்திராத பலருக்கும் அச்சாதியில் பிறந்ததாகவே போலிச் சாதிச்சான்றிதழ் அரசாங்கம் வழங்கி யிருப்பதாக அட்டவணை மற்றும் பழங்குடியின மக்களுக் கான தேசிய ஆணையம் குறிப்பிட்டுள்ளது. புதிரை வண்ணார்களிடம் அரசு அதிகாரிகள் கேட்கும் கேள்வியின் உள்ளார்ந்த பொருள் அவர்கள் தங்களின் குலத்தொழிலை செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் செயல்தானே தவிர அதில் உண்மையான பரிசோதனை ஒன்றும் இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.

துணி வெளுப்பதில் பாரம் பரிய முறை ஒழிக்கப்பட்டு நவீன முதலாளித்துவ முறை புகுத்தப்பட்டிருப்பினும், அதனை தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிகாரிகள் செயலாற்றிவரும் வேளையில், வண்ணார் என்றால் சலவை செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் எதிர்பார்ப்பது ஏன்? வண்ணார் என்றால் அவர் இவ்வாறுதான் இருப்பார்; இருக்க வேண்டும் என்று அவர்களுக்குள் பொதிந்திருக்கும் சாதி சார்ந்த உருவகமே இதற்குக் காரணம். அவர்களின் மூளை தாழ்த்தப்பட்ட சாதி என்றவுடன் கடந்த காலத்திலேயே நின்றுவிடுகிறது; அதனால்தான் புதிரை வண்ணார் என்றால் கழுதை மற்றும் வெள்ளாவி, ஐயா என்ற மொழி போன்ற அடையாளக் குறியீடுகள் அவர்கள் முன் எழுந்து நின்றுவிடுகிறது; அவைகள் இல்லை என்றால் புதிரை வண்ணார் என்று சான்றளிக்க மறுத்துவிடுகிறார்கள். அதிகாரிகளின் இச்செயல்பாடுகள் ஏற்படுத்தும் ஐயம்: அதிகாரிகள் மறைமுகமாக புதிரை வண்ணார்களை தீண்டாமை-ஒடுக்கு முறை வாழ்க்கையை வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கிறார்கள். இந்த ஐயம் அச்சாதியினருக்கும் இருந்து வருவதைக் காண முடிகிறது. சாதிச் சான்றிதழ் கோரி 04 செப் 2006 அன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு வெளியிடப்பட்டிருந்த துண்டறிக்கையின் முழக்கம் இவ்வாறு முழங்குகிறது:

வேண்டும்! வேண்டும்! எங்களுக்கு புதிரை வண்ணான் என்று
சாதிச் சான்று உடனே வேண்டும்
சொல்லாதீர்! சொல்லாதீர்! எங்களை
புதிரை வண்ணான் சாதியே இல்லை என்று சொல்லாதீர்
ஆக்காதீர்! ஆக்காதீர்! எங்களை
கொத்தடிமைகளாக ஆக்காதீர்
சொல்லாதீர்! சொல்லாதீர்! எங்களை
அடிமைத் தொழில் செய்யச் சொல்லாதீர்

இம்முழக்கங்களை அவர்கள் தானாகவே எழுத முற்பட்டிருக்கவில்லை; சாதிச்சான்று வழங்க வேண்டிய கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் தாசில்தார் ஆகிய அதிகாரிகளின் நிர்வாக ரீதியாக பரி சோதனை புதிரை வண்ணார்களை அவ்வாறு முழக்கம் எழுதுவதற்கு தூண்டியது என்றால் அது மிகையானது அல்ல. இதனால் புதிரை வண்ணார் இயக்கம் சாதிச்சான்று பெறும் போராட்டத்தையே முக்கிய இலக்காகக் கொண்டிருக்கிறது. சட்டம் படித்த பட்டதாரி தனது சாதியில் இல்லாததால் தனது சாதிய இயக்கத்திற்கான சட்ட ஆலோசகரை வேற்று சாதியிலிருந்து நியமித்திருப்பதிலிருந்து அந்த சாதியின் தற்கால நிலையை அறிந்து கொள்ள முடியும். இச்சமூகத்திற்கு இட ஒதுக்கீடு மூலம் அனைத்து பலன்களும் வழங்கப்பட வேண்டியது உடனடி தேவையாய் இருக்கிறது. ஆனால் அரசு அதிகாரிகள் புதிரை வண்ணார்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்குவதற்கு மறுத்து வருவதால் அம்மக்களால் இட ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்பட்டு வரும் பலன்களைப் பெற்றுக்கொள்ள இயலாத நிலையே நீடித்து வருகிறது.

புதிரை வண்ணார்கள் அவர்களுக்குரிய குலத் தொழிலைச் செய்யாத காரணத்தினால் சாதிச்சான்று கொடுப்பதற்கு அரசு அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். குலத்தொழில் செய்யவில்லை என்று சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கு மறுத்து வரும் அதிகாரிகளுக்கு கட்டுரை முன்வைக்கும் கேள்விகள்: குலத்தொழிலை கை விட்டிருக்கும் புதிரை வண்ணார்களை அரசு இனி எவ்வாறு வகைப் படுத்தப் போகிறது? குலத்தொழிலை கைவிட்டுவிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் போன்றோரை அரசு எவ்வாறு வகைப்படுத்தும்? கட்டுரை பின்வரும் கோரிக்கையையும் முன்வைக்கிறது: குலத் தொழிலை கைவிட்டுவிட்ட புதிரை வண்ணாருக்கு சாதிச் சான்று வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கவில்லை என்றால், குலத்தொழிலில் ஈடுபடாத அனைத்துச் சாதியினருக்கும் சாதிச்சான்று வழங்கப்படுவது நிறுத்தப் பட வேண்டும். மேலும் இதுவரை அவர்களுக்கு வழங்கப் பட்ட சான்றிதழும் திரும்பப் பெறவேண்டும் அல்லது அச்சான்றிதழ்கள் செல்லத்தகாதவை என்று அறிவிக்க வேண்டும்.

குறிப்பு: விகாஸ் அத்யாயன் கேந்தரா, மும்பை, அளித்த நிதியுதவியினால் கோ. ரகுபதி மற்றும் சி. லக்ஷ்மணன் (இணைப் பேராசிரியர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், சென்னை) ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிரை வண்ணார் குறித்த ஆய்வின் ஒரு பகுதியே இக்கட்டுரை.

ஆதாரங்கள்:
தினமலர், நெல்லை பதிப்பு, 05 செப்டம்பர் 2006.
தினத்தந்தி, நெல்லை பதிப்பு, 06 செப்டம்பர் 2006.
நான்குடேரி வட்டாட்சியரின் அறிக்கை, ஆ9/15626/2007, 27 நவம்பர் 2007. ஆனந்த ரூபி, வள்ளியூர், நான்குனேரி வட்டாட்சியருக்கு அனுப்பிய தேதியிட்டிராத பதில்.
ஆனந்த ரூபி, வள்ளியூர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பிய மனு, 18 டிசம்பர் 2007. ஆனந்த ரூபி, வள்ளியூர், ஆதி-திராவிடர் நலத்துறை அமைச்சருக்கு அனுப்பிய மனு, 18 டிசம்பர் 2007. கோ. பாலமுருகனின் சாதிச் சான்று (பள்ளி நிர்வாகம் வழங்கியது) 22 ஆகஸ்டு 2006.
துண்டறிக்கை, திருநெல்வேலி மாவட்ட இந்து புதிரை வண்ணான் சமுதாய முன்னேற்ற சங்கம்.

ஆனந்த ரூபி, வள்ளியூர்.
கோபால், வள்ளியூர்.
ராமச்சந்திரன், வள்ளியூர்.
தியாகராசன், வள்ளியூர்.
பிரின்சி, வள்ளியூர்.
அந்தோணியம்மாள், வீரமாணிக்கபுரம்.
சின்னத்துரை, கல்விளை.
சவுந்திரராஜன், ஊருடையான்புரம்.
தங்கராஜ், அண்ணாநகர்.
பெருமாள், அம்பாசமூத்திரம்.

Census of India, 1891, Vol. XIII.
Census of India, 1931, Vol. XIV.
Census of India, 1961, Vol. IX.
Harijan, Vol. I (March: 1933).
D.O. Letter No. 20379/ADW6/2005-20 dated 06 October 2005.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com