Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2008

Download writing: நதியில் எரிந்தவர்கள்

‘கீற்று’ நந்தன்
.

பெருங்கடல் போல் விரிந்திருக்கும் இணையத்தில் இருந்து வேண்டிய தகவல்களைப் பதிவிறக்கம் செய்து கொண்டு, அவற்றையெல்லாம் தானே நேரில் கண்டு, ஆராய்ந்து எழுதியது போல், வெட்கமேயின்றி தனது பெயரில் வெளியிடும் ‘download writers’ இப்போது தமிழில் அதிகரித்து வருகிறார்கள். அறிவியல், வரலாறு தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிப்பது, தென்னமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள் குறித்து கட்டுரைகள் எழுதுவது உள்ளிட்டவற்றிற்காக இணையத்தைப் பயன்படுத்தும் இந்த எழுத்தாளர்கள், மேலதிக தகவல்கள் தெரிந்து கொள்ள விரும்பும் வாசகர்களுக்கு உதவியாக ஒருபோதும் அந்த இணைய தளங்களின் முகவரியைத் தருவதில்லை. இத்தகைய இலக்கியத் திருட்டுகளுக்கு மத்தியில் முதன்முறையாக, ‘இவையனைத்தும் இணையத்தில் திரட்டப்பட்ட தகவல்களே’ என்ற ஒப்புதலுடன் ‘download writing’ என்ற தலைப்பிலேயே இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.

நதியில் எரிந்தவர்கள்


அமெரிக்க உள்நாட்டு போர் முடிவு, ஆப்ரகாம் லிங்கன் கொலை, கொலையாளி கைது, அடுத்து பதவியேற்கவிருந்த புதிய அமைச்சரவை மற்றும் உள்நாட்டுப் போருக்குக் காரணமான தளபதிகளின் சரணடைவு என அமெரிக்க நாடே பரபரப்பில் இருந்தபோது அந்த பயங்கர விபத்து நடந்தது. ஏறத்தாழ 1700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்குக் காரணமான அந்த விபத்துச் செய்தியைவிட, பரபரப்பான அரசியல் செய்திகளுக்கே பத்திரிக்கைகள் முக்கியத்துவம் அளித்தன. விளைவு, 1700 பேரின் மரணம் பெட்டிச் செய்தியாய் கடைசிப் பக்கத்தில் சுருங்கிப் போனது. அரசியல் சதுரங்கத்தில் வெட்டப்படும் சிப்பாய்களுக்கு வரலாற்றுப் பக்கங்களில் எந்த முக்கியத்துவமும் இல்லை என்பது மீண்டும் நிரூபணமானது.

கிடைத்த தரவுகளின் அடிப்படையில், 1700 பேரின் கோர முடிவுக்கான காரணத்தைத் தேடினால், அதை விபத்து என்ற மனசாட்சி உள்ள யாரும் சொல்ல முன்வரமாட்டார்கள். பணம் சேர்ப்பது ஒன்றையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்ட அதிகார வர்க்கத்தின் படுகொலையே அது.

*****

1865, ஏப்ரல் மாதம் 21ம் தேதி. அமெரிக்காவின் தெற்குப் பகுதி. நான்கு ஆண்டுகளாக நீடித்து வந்த உள்நாட்டுப் போர் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருந்தது. பிரிவினையை முன்னிருத்தி உள்நாட்டுப் போரைத் தொடக்கிய தெற்குப் பகுதியினரை ஐக்கிய அமெரிக்க அரசுவின் படை நீண்ட போராட்டத்திற்குப் பின் அடக்கி ஒடுக்கியது. போரினால் இருதரப்பு படையினரும் வெகுவாகக் களைத்திருந்தனர். ஏராளமானோர் கொல்லப்பட்டிருந்தனர். பலர் கை, கால்களை இழந்திருந்தனர். சண்டையின் போது பாய்ந்த தோட்டாக்கள் அகற்றப்படாமல், பலரது உடல்களில் அப்படியே தங்கியிருந்தது. மருத்துவமனைகள் எல்லாம் நிரம்பி வழிந்தன. போர் முடிந்திருந்தாலும், அது ஏற்படுத்தியிருந்த ரணம் நீங்கவில்லை. எங்கு திரும்பினும் ரத்தம், வலி, அழுகை, துயரம்.

போரின்போது பிடிபட்டு, இருதரப்பிலும் போர்க் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தவர்கள் மிக அதிகமான கொடுமைகளை அனுபவித்தவர்களாக இருந்தனர். போர்க் கைதிகளின் முகாம்கள் அனைத்தும் வதை முகாம்களாகவே இருந்தன. இதற்கு அமெரிக்க அரசின் முகாம், பிரிவினைப் படையினரின் முகாம் என எந்த வேறுபாறும் இல்லை. இருண்ட, நெருக்கமான அறைகளில் விலங்குகளை விட மோசமாக அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். ஏராளமானோர் அந்த முகாம்களில் சித்திரவதையாலும், தொற்றுநோயாலும் இறந்திருந்தனர். உயிர் தப்பியவர்களும், சரியான உணவு இல்லாத காரணத்தால் குற்றுயிரும் குலையுயிருமாகவே இருந்தனர்.

போரில் பிரிவினைப் படையினர் தோற்றதையடுத்து, அவர்களால் கைது செய்யப்பட்டு, முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க ராணுவத்தினர் விடுதலை செய்யப்பட்டனர்

போரின் கொடூரத்தால் சிதைந்திருந்த தெற்குப் பகுதியில் துப்பாக்கிச் சத்தம் கலவாத காற்று வீசத் தொடங்கியது. இனி சண்டை இல்லை, குண்டுமழை இல்லை, உயிரை உலுக்கும் ஓலம் இல்லை. போர் ஏற்படுத்திய அழிவுகளும், துயரங்களும் நீங்குவதற்கு பல நாட்கள் ஆகும் என்றாலும், ‘இனி அமைதியாக நாட்கள் கழியும்’ என்ற எண்ணமே அங்கு மக்கள் மனதில் குதூகலாமாகவும், வீடு திரும்பலாம் என்ற எண்ணம் சிப்பாய்களின் மனதில் மகிழ்ச்சியானதாகவும் இருந்தது.

வதை முகாம்களில் இருந்து விடுதலையான சிப்பாய்களும், இதர சிப்பாய்களும் விக்ஸ்பர்க் நகரத்தில் குழுமியிருந்தனர். அவர்கள் அனைவரது மனத்திலும் ஒரேயொரு எண்ணம்தான், ‘உடனடியாக வீடு திரும்ப வேண்டும்’. நான்கு ஆண்டுகளாக நீடித்த யுத்தம் அவர்களுக்கு மிகவும் அயற்சியைத் தந்திருந்தது.

‘சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும், குடும்பத்தினரைப் பார்க்க வேண்டும், உடலை இறுக்கும் ராணுவ உடையைக் கழற்றி எறிய வேண்டும், ருசியான உணவை போதுமான அளவு உண்ண வேண்டும், தளர்ந்து போன உடலுக்கு தேவையான அளவு ஓய்வு தர வேண்டும்’ - ஒவ்வொரு சிப்பாயின் மனதிலும் இந்த எண்ணங்களே இருந்தன. பெரும்பாலானோர் மிசிசிப்பி ஆறு வழியாக தங்களது சொந்த ஊருக்குப் பயணம் செய்யவிருந்தனர். தனியார் கப்பல்கள் மூலம் அவர்களது பயணத்திற்கு இராணுவம் ஏற்பாடு செய்திருந்தது. அப்படி ஒரு கப்பலின் வருகைக்காக சிப்பாய்கள் காத்திருக்கத் தொடங்கினர்.

****

சுல்தானா கப்பலின் கேப்டன் மாசன் அமைதியின்றி கப்பலின் மேல்தளத்தில் நடமாடிக் கொண்டிருந்தான். மிசிசிப்பி நதியில் கப்பல் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. மாசன் வெறுமனே கேப்டன் மட்டுமல்ல, கப்பலின் பங்குதாரர்களில் ஒருவன். விக்ஸ்பர்க் துறைமுகத்தில் காத்திருக்கும் சிப்பாய்களை ஏற்றிக்கொண்டு வடக்கு நோக்கி செல்ல வேண்டும். ஒவ்வொரு சிப்பாய்க்கும் 5 டாலர் பணம் கிடைக்கும். அதிகாரிகள் யாராவது இருந்தால் 10 டாலர். சிப்பாய்களை ஏற்றிச் செல்வதுதான் அப்போது நல்ல வியாபாரப் போக்குவரத்தாக இருந்து வந்தது. ஆனால் இப்போது வந்து, ‘பாய்லர் கெட்டுவிட்டது’ என்கிறான் கப்பலின் என்ஜீனியர்.

மாசன் பாய்லரைப் போய்ப் பார்த்தான். அதில் கீறல் விழுந்து, அதன் வழியாக நீராவி வெளியேறிக் கொண்டிருந்தது. கப்பல் மெதுவாக நகர்வதற்கும் அதுதான் காரணமாக இருந்தது. ‘பாய்லரை சரி செய்யாமல் விக்ஸ்பர்க் துறைமுகத்தில் இருந்து கிளம்ப முடியாது’ என்றான் என்ஜீனியர். மாசன் அவன் கூறியதைப் பொருட்படுத்தவில்லை.

1865 ஏப்ரல் 23ம் தேதி மாலையில் சுல்தானா கப்பல் விக்ஸ்பர்க் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சியது. அந்த நகரில், கப்பலின் பாய்லர்களைப் பழுது பார்க்கும் தொழிலைச் செய்து வந்த டெய்லர் என்பவனை மாசன் வரவழைத்தான். டெய்லர் பாய்லரைப் பார்த்தான்.

“எவ்வளவு நேரம் செலவாகும், பாய்லர்களைச் சரி செய்வதற்கு?” என்று கேட்டான் மாசன்

“குறைந்தது மூன்று நாட்களாவது ஆகும்” - டெய்லர்.

‘மூன்று நாட்களா, அதற்குள் சிப்பாய்கள் வேறு கப்பலில் ஏறிச்சென்றுவிட்டால், பெரும் வருமானம் கெட்டு விடும், இதர பங்குதாரர்களுக்குப் பதில் சொல்ல முடியாது.’

“மூன்று நாட்கள் எல்லாம் தர முடியாது. இன்றைக்கே கப்பல் கிளம்பியாக வேண்டும். அதற்குள் நீ பாய்லர்களை சரி செய்தாக வேண்டும்” என்றான் மாசன்.

“கேப்டன், ஒரு பாய்லர் அதிகமாக லீக் ஆகிறது. அதை மாற்ற வேண்டும். அதற்கு நிச்சயம் நேரமாகும்.”

“புதிய பாய்லரைப் பொருத்துவதற்கு பதிலாக, பழையவற்றையே வெட்டி, ஒட்டி சமாளி. செயிண்ட் லூயிஸ் துறைமுகத்தில் சரி செய்து கொள்கிறோம். இங்கு நேரத்தைக் கடத்தி, சிப்பாய்களைத் தவற விட்டால், எனது வருமானம் கெட்டுவிடும்.”

சுல்தானா, 260 அடி நீளமுடைய நீராவிக் கப்பல். பயணிகள், ஊழியர்கள் என 376 பேரைத் தாங்கிச் செல்லும் திறன் படைத்தது. காட்டன் வியாபார நிமித்தம் 1862ல் கட்டப்பட்ட இந்தக் கப்பல், நான்கு பாய்லர்களைக் கொண்டது. நான்கு பாய்லர்களும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருந்தது. இதில் ஒன்றுதான் பழுதுபட்டிருந்தது. டெய்லருக்கு வேறு வழியில்லை. கேப்டன்கள் சொல்வதுதான் கப்பல்களைப் பொருத்தவரை இறுதி முடிவு. கப்பல் ஓடுமளவிற்குத் தற்காலிகமாக பாய்லரை சரி செய்தான்.

உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து கடந்த இரண்டு வருடமாக சிப்பாய்கள் போக்குவரத்துக்காக சுல்தானா பயன்படுத்தப்பட்டு வந்தது. நியூஆர்லன்ஸ் மற்றும் செயிண்ட் லூயிஸ் நகரங்களுக்கு இடையே தனது படைத் துருப்புகளின் நடமாட்டத்திற்கு இத்தகைய கப்பல்களையே அமெரிக்க ராணுவத் துறை நம்பியிருந்தது.

1865 ஏப்ரல் 21ம் தேதி நியூஆர்லன்ஸ் நகரிலிருந்து 100 பயணிகளுடன் கிளம்பிய சுல்தானா ஏப்ரல் 24ம் தேதி மாலையில் விக்ஸ்பர்க் துறைமுகத்தில் பெருமளவு சிப்பாய்களை ஏற்றிச் செல்வதற்காக நின்றது. மற்ற கப்பல்கள் வருவதற்கு முன்பு எவ்வளவு சிப்பாய்களை ஏற்ற முடியுமோ அவ்வளவு சிப்பாய்களை ஏற்றி கொள்ள வேண்டும். பொதுவாக கப்பலின் கொள்ளளவு எவ்வளவோ அவ்வளவுதான் சிப்பாய்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என்பது சட்டம். ஆனால் பெரும்பாலும் அப்படி நடப்பதில்லை. கூடுதல் பயணிகளை ஏற்றிச் செல்வதை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக, ராணுவ அதிகாரிகளுக்கு கையூட்டு தரப்பட்டது. அதிகாரிகளும் ஒரு சிப்பாய்க்கு 1.15 டாலர் வீதம் இலஞ்சம் வாங்கிக் கொண்டு, மொத்தம் மொத்தமாக சிப்பாய்களை கப்பல்களுக்குள் அடைத்தனர்.

மாசன் இராணுவ முகாமுக்குச் சென்று அதிகாரிகளைச் சந்தித்தான். அவர்கள் கேட்கிற இலஞ்சப் பணத்தை தருவதாக ஒத்துக் கொண்டான். 1000 பேருக்குக் குறையாமல் சிப்பாய்களை ஏற்றுமாறு வேண்டிக் கொண்டான். அதிகாரிகளும் ஒத்துக் கொண்டனர். இலஞ்சப் பணம் கைமாறியது. இதற்கிடையே சுல்தானாவை விட பெரிய கப்பலான ‘லேடி கே (Lady Gay)’ என்ற கப்பல் விக்ஸ்பர்க் துறைமுகம் வந்தது. அந்தக் கப்பலின் கேப்டன், தனது கப்பலில் ஏற்றிச் செல்வதற்கு சிப்பாய்கள் யாராவது இருக்கிறார்களா என்று இராணுவ அதிகாரிகளிடம் கேட்டபோது, வாங்கி இலஞ்சப் பணத்திற்கு நாணயமாக ‘யாரும் இல்லை’ என்று சொல்லி விட்டனர். லேடி கே எந்தவொரு சிப்பாயையும் ஏற்றிக் கொள்ளாமல் விக்ஸ்பர்க் துறைமுகத்திலிருந்து கிளம்பியது.

சுல்தானா கப்பலில் ஏற வேண்டும் என்ற தகவல் சிப்பாய்களுக்கு வழங்கப்பட்டது. எப்படியாவது வீடு போய் சேர்ந்துவிட வேண்டும் என்ற ஆவலில் இருந்த சிப்பாய்களும் இட நெருக்கடி பற்றி கண்டுகொள்ளவில்லை. கப்பல் வந்து நின்றதும் முண்டியடித்துக் கொண்டு உள்ளே ஏறினார்கள். கிடைத்த இடங்களில் எல்லாம் ஆக்ரமித்துக் கொண்டார்கள். 376 பேர் வசதியாக செல்லக்கூடிய கப்பலில் 600 பேர் நெருக்கியடித்து உட்கார்ந்தனர். பின்னரும் சிப்பாய்களை ஏற்றுவதை கேப்டன் நிறுத்தவில்லை. உட்காருவதற்குப் போக மீதமிருந்த இடங்களில் நிற்க வைத்தான். சிப்பாய்கள் மேலும் மேலும் ஏறிக் கொண்டிருந்தனர். அடுத்து ஒருவரைக்கூட ஏற்ற முடியாது என்ற நிலை வந்தபின்பே கேப்டன் மாசன் கப்பலின் நங்கூரத்தை எடுக்க உத்தரவிட்டான்.

ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. வெள்ள வேகத்தினால் கரையெங்கும் நுரை பொங்கிக் கொண்டிருந்தது. கப்பலினுள்ளே சிப்பாய்கள் 2100 பேரும், பொதுமக்கள் 200 பேரும் இருந்தனர். இது கப்பலின் கொள்ளளவை ஆறு மடங்கு அதிகமாகும். அதோடு, மெம்பிஸ் துறைமுகத்தில் இறக்க வேண்டிய சரக்கு மூட்டைகளும் இருந்தன. இவ்வளவு கனத்துடன் கப்பல் மெதுவாக ஆற்றில் நகரத் தொடங்கியது.

கப்பலில் சிப்பாய்கள் அடைந்திருந்த பகுதியில் காற்று நுழைவதற்குக் கூட இடமில்லை. ஒருவர் மீது ஒருவர் விழுந்து அடைந்திருந்தனர். தண்ணீர் குடிப்பதற்கோ, சாப்பிடுவதற்கோ கூட கையை அசைக்க முடியாத அளவுக்கு நெரிசல் இருந்தது. இருப்பினும், வதைமுகாம்களில் தங்கியிருந்த அனுபவமும், வீட்டிற்குச் செல்லப் போகிறோம் என்ற எண்ணமும் அவர்களுக்கு அந்தப் பயணத்தை இலகுவாக்கியது.

ஆற்றின் வெள்ளப்பெருக்கு கேப்டன் மாசனை சற்று மருட்டியது. பயணிகள் ஒரே இடத்தில் குவிந்திருந்தால் கப்பல் கவிழ்ந்துவிடும் என்ற அச்சம் அவனுக்கு இருந்தது. எனவே அவர்களை கப்பல் முழுவதும் விரவியிருக்குமாறு எச்சரித்தான்.

****

மிசிசிப்பி நதியில் வடக்கு நோக்கிச் செல்லும் அந்த சுல்தானா கப்பலில்தான் லெப்டினென்ட் ஹார்வே ஆனிஸ், அவனது மனைவி அனா மற்றும் அவர்களது ஏழு வயது மகளும் இருந்தனர். உள்நாட்டுப் போருக்குப் பின், சொந்த ஊருக்கு செல்வதற்காக ஹார்வே தனது வேலையை ராஜினாமா செய்திருந்தான். இராணுவ அதிகாரிகள் இலஞ்சம் வாங்கிக் கொண்டு ஏதாவது ஒரு கப்பலில் இப்படி கூட்டமாக ஏற்றிவிடுவார்கள் என்பதை அவன் அறிந்திருந்ததால், சுல்தானாவிலேயே தனது குடும்பத்தினருடன் ஏறி விட்டான்.

தனது குடும்பத்தினருக்கு தனி அறை வேண்டும் என்பதற்காக கூடுதல் பணம் செலுத்தி தனி அறையும் வாங்கியிருந்தான். கப்பலில் முண்டியடித்த கூட்டத்தைப் பார்த்து அவரது மனைவி அனா பயந்து போயிருந்தாள். வெள்ளப்பெருக்கு அவளது பயத்தை மேலும் அதிகப்படுத்தியது.

பயத்தைப் போக்கிக் கொள்வதற்காக மாலுமிகள் அறைப் பக்கம் நடந்தாள். அங்கிருந்த மாலுமி ஒருவரிடம், “இவ்வளவு பேரைத் தாங்கிக் கொண்டு கப்பல் நாம் போய் சேர வேண்டிய இடத்திற்குப் போய்விடுமா?” என்று கேட்டாள்.

“அந்தக் கவலை வேண்டாம் மேடம். பலமுறை இத்தகைய பயணத்தை இந்த சுல்தானா வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது.”

“ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருக்கிறதே?”

“ஏப்ரல் மாதத்தில் வெள்ளம் அதிகரிப்பது வாடிக்கையானதுதான். அதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை”

சற்று திருப்தியடைந்தவளாக அவள் தனது அறைக்குத் திரும்பினாள். அந்த மாலுமி குறிப்பிட்டதுபோல் அந்த வெள்ளப்பெருக்கை சட்டை செய்யாது, சுல்தானா தனது பயணத்தைத் தொடர்ந்தவாறு இருந்தாள். 48 மணி நேரப் பயணத்திற்குப் பின் 26ம் தேதி மாலை கப்பல் மெம்பிஸ் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி, நின்றது.

****

மெம்பிஸ் துறைமுகத்தில் சில பயணிகளையும், சில சரக்கு மூட்டைகளையும் இறக்க வேண்டியிருந்தது. வதை முகாம்களில் இருந்து விடுதலையான சிப்பாய்களில் ஓரளவுக்கு உடல் காத்திரமாக இருந்த சிலர் சரக்கு மூட்டைகளை இறக்கும் வேலையில் ஈடுபட்டனர். சரக்குகளை இறக்குவதற்கு உதவி செய்தால் பணம் தருவதாக கேப்டன் அளித்த வாக்குறுதி அளித்திருந்தான். ‘கொஞ்சம் பணம் கிடைத்தால் வீட்டிற்குப் போகும்போது ஏதாவது வாங்கிக் கொண்டு போகலாமே!’ என்ற எண்ணத்தில் அவர்கள் அந்த வேலை செய்தார்கள்.

கப்பலினுள்ளே நெரிசலில் அடைப்பட்டுக் கிடந்த சிப்பாய்களில் சிலர், துறைமுகத்தில் இறங்கி காலாற நடந்தனர். பிரிவினை ஏற்பட்டு, ஆயுள் முழுவதும் வதை முகாமிலேயே கழிக்க வேண்டியிருக்குமோ என்று அஞ்சியிருந்தவர்களுக்கு, இப்போது வாழ்வது புதியதொரு வாழ்க்கையாக இருந்தது. ஏற்கனவே அவர்களுக்கு அறிமுகமான மெம்பிஸ் துறைமுகம் இன்று புதியதாய் அழகானதாய்த் தெரிந்தது.

அதே நேரத்தில் கப்பலில் பாய்லர்களை பழுதுபார்க்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. விக்ஸ்பர்க் துறைமுகத்தில் இருந்ததை விட, நிலைமை இப்போது மோசமாக இருந்தது. கேப்டன் மாசன் அங்கு என்ன பதிலைச் சொன்னானோ, அதே பதிலைத் தான் இங்கும் சொன்னான், “சிப்பாய்களை இறக்கி விட்டுவிட்டு மொத்தமாக சரி செய்து கொள்ளலாம். இப்போதைக்கு இருப்பதை வைத்து ஒப்பேற்று,”

அந்த வேலை நடந்து கொண்டிருந்தது. பயணிகளை இறக்கிவிட்ட பின்பு, பயணத்திற்குத் தேவையான நிலக்கரியை ஏற்றிக்கொண்டு இரண்டு மணி நேரத்தில் கிளம்பி விடும் என்று தான் முதலில் சொல்லப்பட்டது. ஆனால் மூன்று மணி நேரமாகியும் கப்பல் புறப்படவில்லை. கப்பல் புறப்பட்டால் மறுபடியும் நெரிசலில் கிடக்க வேண்டும் என்பதால், சிப்பாய்களும் தாமதம் குறித்து கவலைப்படவில்லை.

பாய்லரைத் தற்காலிகமாக சரி செய்யும் வேலை முடிந்தபோது இரவு பத்து மணி ஆகியிருந்தது. அதன்பின்பு நிலக்கரியை ஏற்றத் தொடங்கினார்கள். ஆனிஸின் மகள் நிலக்கரி ஏற்றப்படுவதை குதூகலமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். நள்ளிரவு நெருங்கும் நேரத்தில் கப்பல் மெம்பிஸ் துறைமுகத்தை விட்டுக் கிளம்பியது.

****

கெய்ரோ துறைமுகத்தை நோக்கி கப்பல் நகர்ந்து கொண்டிருந்தது. அங்குதான் பெரும்பாலான சிப்பாய்கள் இறங்கவிருந்தனர்.

ஆனிஸின் அறை. அவனது மகள் கேட்டாள்.

“அப்பா! நாலு வருஷத்துக்கு முன்னாடி நாம இருந்த வீடு இப்ப அப்படியே இருக்குமா?”

“இருக்கும். என்ன, சுத்தப்படுத்துவதற்கு நிறைய நேரம் பிடிக்கும். வீட்டைச் சுற்றி, நிறைய செடிகள் முளைத்திருக்கும். அதையெல்லாம் களைய வேண்டும்.”

“அந்த இடத்தில் நல்லதாக ஒரு தோட்டம் வைக்கலாமா, அப்பா?”

“ம். வைக்கலாமே!”

“தோட்டத்துக்குப் பக்கமாக இருக்கிற அறையை எனக்குக் கொடுத்துவிட வேண்டும்”

“சரி. இன்னொன்றையும் ஞாபகம் வைத்துக் கொள். இத்தனை நாள் சண்டை நடந்த இடத்தில் இருந்ததால், உன்னை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப முடியவில்லை. நமது வீட்டுக்குப் போனதும் நீ பள்ளிக்குச் செல்ல வேண்டும்”

“சரி. ஆனால் ஒரு நிபந்தனை. என்னை பள்ளிக்கூடத்தில் கொண்டு விடுவதற்கும், மாலையில் திரும்ப கூட்டிச் செல்வதற்கும் நீ வரவேண்டும்.”

“அதை விட எனக்கு வேறு என்ன வேலை?”

*****

ஆற்றில் வெள்ளம் முன்பை விட அதிகமாக இருந்தது. நீரோட்டத்தை சமாளித்து, கப்பலை நகர்த்துவது மாலுமிகளுக்கு பெரும் சிரமமாக இருந்தது. மெம்பிஸ் துறைமுகத்தில் இறக்கி விடப்பட்ட பயணிகளுக்கும், சரக்கு மூட்டைகளுக்கும் பதிலாக, நிலக்கரி ஏற்றப்பட்டதால் கப்பலின் நெரிசல் குறையவேயில்லை. அளவுக்கு அதிகமான எடையுடன், சுழித்து ஓடும் நீரோட்டத்திற்கு கஷ்டப்பட்டு ஈடு கொடுத்து, மிக மெதுவான வேகத்தில் அந்தக் கப்பல் நகர்ந்தது. இரண்டு மணி நேரத்தில் இரண்டு மைல் தூரமே அதனால் கடக்க முடிந்தது.

அப்போதுதான் அது நிகழ்ந்தது. ஏப்ரல் 27ம் தேதி இரவு இரண்டு மணிக்கு, அதிக அழுத்தத்தைத் தாங்க முடியாமல், பழுதடைந்திருந்த பாய்லர் பெரும் சத்தத்துடன் வெடித்தது. பாய்லர்கள் நான்கும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருந்ததால், அடுத்தடுத்து அவை வெடித்தன. வெடிச் சத்தம் மெம்பிஸ் துறைமுகம் வரை கேட்டது. ஆரஞ்சு நிற சுவாலைகள் இருண்ட வானில் எழுந்தன. தீ மேலும் கொளுந்து விட்டு எரிந்தது. மிசிசிப்பியில் பல மைல் தூரத்திற்கு தீ சுவாலைகள் தெரிந்தன.

பாய்லர்கள் வெடித்தபோது பயணிகளில் சிலர் 200 அடி தூரம் வரை தூக்கிவீசப்பட்டனர். வெடிப்பின்போது கப்பல் முழுவதும் நிலக்கரி மூட்டைகள் தூக்கி வீசப்பட்டதால் கணநேரத்தில் கப்பல் முழுவதும் தீ பரவியது.

பாய்லர்கள் வெடித்த சத்தம், அதைத் தொடர்ந்து பரவிய தீ இவற்றைப் பார்த்து மெம்பிஸ் துறைமுகத்திலிருந்த படகுகள் கப்பலை நோக்கி விரைந்தன.

விபத்தின்போது தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தப்படும் படகுகளோ (life boat), கவச உடைகளோ (life jacket) சுல்தானாவில் போதுமான அளவு இல்லாததால் பெரும்பாலான பயணிகள் தீயில் மாண்டனர். எஞ்சியிருந்தோர் தீக்காயங்களுடன் ஆற்றில் குதித்தனர். உடல் வலுவாக இருந்தவர்களும், மரத்துண்டு ஏதாவது கையில் கிடைத்தவர்களும் நீரில் நீந்தியவாறு இருந்தனர். வதைமுகாம்களில் பட்ட சித்திரவதைகளாலும், பல மாதங்களாக அரைப்பட்டினி கிடந்ததாலும், சோர்ந்திருந்த பல சிப்பாய்களால் தங்களது திறனைத் திரட்டி நீந்த முடியவில்லை. பனிக்கட்டி குளிரில் இருந்த ஆற்று நீரும் அவர்களுக்குப் பெரும் தீங்காய் அமைந்தது. கப்பல் முழுவதும் எரிந்து கொண்டிருந்ததால், தோதாகப் பிடித்துச் செல்ல எந்த மரத்துண்டும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. பாய்ந்தோடும் வெள்ளநீர் பலரை இழுத்துச் சென்றது. தீயில் தப்பியவர்களால் நீரில் தப்ப முடியவில்லை.

வெடிச்சத்தம் கேட்டு கண்விழித்த ஆனிஸ், என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள தனது அறைக்கதவைத் திறந்தார். தீ சுவாலையின் அனல் அவரைத் தாக்கியது. படாரென்று கதவை மறுபடியும் மூடினார். தனது மனைவியையும், மகளையும் எழுப்பினார். அவரது குடும்பத்திற்கு மட்டும் தரப்பட்டிருந்த கவச உடைகளை எடுத்துக் கொண்டார். மகளைத் தூக்கிக் கொண்டு, தன்னைப் பின்தொடருமாறு மனைவியிடம் கூறிவிட்டு, அவசர வழி வழியாக வெளியேறி, கடலில் குதித்தார். அவரைப் பின்தொடர்ந்து அனாவும் ஆற்றில் குதித்தாள்.

குதித்தபின்புதான் உணர்ந்தாள், அவசரத்தில் கவச உடையை சரியாக அணியவில்லை என்பதை. பக்கத்தில் மிதந்த ஒரு பலகையை எட்டிப் பிடித்துக் கொண்டாள். மிகுந்த பதைப்புடன், தனக்கு முன்பு குதித்த ஆனிஸையும், அவரது தோளிலிருந்த மகளையும் தேடினாள். நீரோட்டம் அவர்களை இழுத்துச் சென்றதைப் பார்த்தாள். அவளது கண்முன்னே அவளது குடும்பம் மிசிசிப்பி நதியில் ஜலசமாதியானது. தாளமுடியாத துயரத்திலும் அதிர்ச்சியிலும் அந்தப் பலகையிலேயே நினைவிழந்தாள்.

மிசிசிப்பி நதி இரத்தத்தால் நிறம் மாறியது. மேற்பரப்பு முழுவதும் பிணங்களால் நிரம்பியது. சுல்தானா நிதானமாய் எரிந்து கொண்டிருந்தது. காலையில் சூரியன் மேலெழுந்தபோது, கேப்டன் மாசன் உட்பட 1700 பேர் இறந்துவிட்டனர். உயிர்தப்பியவர்கள் அங்காங்கே கையில் கிடைத்ததை பிடித்துக் கொண்டு, மிதந்து கொண்டிருந்தனர். அவர்களில் பலர் கர்த்தரைத் துதித்துப் பாடிக் கொண்டிருந்தார்கள். விபத்தின் அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீளவில்லை.

மெம்பிஸ் துறைமுகத்திலிருந்து வந்த படகுகள் இரவிலிருந்தே மீட்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. தோராயமாக 600 பேர் மீட்கப்பட்டு மெம்பிஸ் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அனாவும் காப்பாற்றப்பட்டு மெம்பிஸ் கொண்டு செல்லப்பட்டாள். இதயம் உடைந்த நிலையில், தன்னைக் காப்பாற்றியவருக்குப் பரிசாக, தனது கையிலிருந்த மோதிரத்தைக் கொடுத்தாள், “என் வாழ்க்கையில் அனைத்தையும் இழந்துவிட்டேன், இதைத் தவிர.”. அது திருமணத்தின்போது ஆனிஸ் அவளுக்கு அணிவித்த மோதிரம்.

மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டோரில், சிகிச்சை பலனின்றி 300 பேர் இறந்தனர். கப்பலிலும், ஆற்றுநீரிலும் இறந்தவர்களின் உடல்கள் ஆடைகள் ஏதுமின்றி ஆற்று ஓரங்களில் பிணங்களாக ஒதுங்கின. அவற்றைச் சேகரித்து அடக்கம் செய்வதற்கு மெம்பிஸ் நகரிலிருந்து தினந்தோறும் காலையில் வெற்றுப் படகுகள் செல்வதும், மாலையில் பிணங்கள் நிரம்பித் திரும்பி வருவதும் விபத்திற்குப் பின் பல நாட்கள் தொடர்ந்தது. விக்ஸ்பர்க் துறைமுகத்திலும் சில உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

எத்தனை பேர் இறந்திருப்பார்கள் என்ற புள்ளி விபரம் யாரிடமும் இல்லை. சிலர் 1500 என்றும், சிலர் 1900 என்றும் கூறியதால் சராசரி கணக்காக 1700 என்று உத்தேசிக்கப்பட்டது.

****

உயிர் பிழைத்த சில நூறு பேர்கள் உடல்நலம் தேறிய பின்னர் வீடு போய்ச் சேர்ந்தனர். அவர்களில் சிலர் ‘சுல்தானா உயிர்பிழைத்தோர் சங்கம்’ அமைத்தனர். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 27ம் தேதி ஒன்று கூடி, தங்களுடன் பிரயாணம் செய்த சக பயணிகளுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். 1928ம் ஆண்டு அந்த சங்கத்தில் கடைசி நான்கு பேர் உயிருடன் இருக்கும்வரை இந்த சந்திப்பு தொடர்ந்து நடந்தது.

882 அடி நீளமுடைய டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கியபோது, 1517 பேர் இறந்தனர். ஆனால் 260 அடி நீளம் மட்டுமே உடைய சுல்தானா மூழ்கியபோது 1700 இறந்தனர். ஆனால் டைட்டானிக் கப்பலுக்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட சுல்தானாவிற்குக் கொடுக்கவில்லை.

டைட்டானிக் உல்லாசக் கப்பல், இறந்தவர்களில் பெரும்பாலானோர் செல்வச் சீமான்கள். சுல்தானா சரக்குக் கப்பலாய் இருந்து, வருவாய்க்காக பயணிகள் கப்பலானது. இதில் இறந்தவர்கள் எல்லாம் போர்க்கைதிகளாக இருந்து விடுதலையானவர்கள். அதோடு அப்போதிருந்த அரசியல் சூழலும் சேர்ந்து கொள்ள எளியவர்களின் மரணம் மிக எளிதாகப் புறக்கணிக்கப்பட்டது.

உள்நாட்டுப் போர் அப்போதுதான் முடிந்திருந்தால் பத்திரிக்கைகள் அனைத்தும் போரின் இறுதிக்கட்ட காட்சிகளை சந்தைப்படுத்துவதில் மும்முரமாக இருந்தன. ஏப்ரல் 9ம் தேதிதான் உள்நாட்டுப் போருக்குக் காரணமானவர்களில் ஒருவரான லீ சரணடைந்திருந்தார். ஏப்ரல் 14ம் தேதி அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கொல்லப்பட்டார். அவரைக் கொலை செய்த ஜான் வில்க்ஸ் பூத், சுல்தானா துயர சம்பவத்திற்கு முந்திய நாள் (ஏப்ரல் 26)தான் பிடிபட்டான். அதே நாளில் தான் பிரிவினைப் படைக்குத் தலைமை தாங்கியவர்களில் ஒருவரான ஜெனரல் ஜோசப் ஜான்ஸ்டன் சரணடைந்தார். அதற்கு அடுத்த நாட்களில் ஜெபர்சன் டேவிஸ் தலைமையிலான புதிய அமைச்சரவை குறித்த செய்திகள் பத்திரிக்கைகளை ஆக்கிரமித்தன. இந்த அரசியல் களேபரங்களுக்கு மத்தியில் நடைபெற்ற சுல்தானா துயரச் சம்பவம் குறித்து கவலை கொள்ள அமெரிக்க பத்திரிக்கைகளோ, அரசாங்கமோ தயாராக இல்லை. அந்த நிகழ்வு ஒரு பெட்டிச் செய்தியாய் கடைசிப் பக்கத்தில் சுருண்டு போனது.

பெயரளவில் நடத்தப்பட்ட விசாரணையும் பத்திரிக்கைகளில் போதிய கவனம் பெறவில்லை. பாய்லர்களில் போதிய அளவு தண்ணீர் இல்லாததுதான் விபத்திற்குக் காரணம் என்று அந்த விசாரணை முடிந்திருந்தது. அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றப்பட்டது குறித்தோ, அதற்குக் காரணமாக இருந்த ராணுவ அதிகாரிகள் குறித்தோ விசாரணை அறிக்கை எந்தவித கவனமும் கொண்டிருக்கவில்லை.

இதற்கிடையே விபத்து நடந்து 23 ஆண்டுகளுக்குப் பின், அதாவது 1888ல் செயிண்ட் லூயிஸ் நகரைச் சேர்ந்த வில்லியம் ஸ்டீரிட்டர், விபத்து ஏற்பட்டதற்குப் புதிய காரணம் ஒன்றை கூறினார். வியாபாரத்தில் அவரது கூட்டாளியாக இருந்த ராபர்ட் லௌடன் என்பவர், மெம்பிஸ் துறைமுகத்தில் நிலக்கரி ஏற்றப்பட்டபோது அதில் வெடிகுண்டு ஒன்றையும் கலந்துவிட்டதாகவும், வெடிகுண்டு இருந்த நிலக்கரி முட்டை பாய்லரில் கொட்டப்பட்டபோது பாய்லர் வெடித்து விபத்து நிகழ்ந்ததாகவும், இதை மரணப்படுக்கையில் ராபர்ட் தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.

உள்நாட்டுப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ராணுவத் துருப்புகளை ஏற்றி வந்த சில கப்பல்கள் இவ்வாறு தகர்க்கப்பட்டன என்றாலும், சர்ச்சைக்குரிய லௌடனின் மரண வாக்குமூலத்தை பின்னர் வந்த ஆராய்ச்சியாளர்கள் பலர் நிராகரித்தனர்.

பிற்காலத்தில் சுல்தானா முழ்கிய இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்தபோது கப்பலின் எஞ்சிய பகுதிகள் எதுவும் குறிப்பிடும்படி கிடைக்கவில்லை. நீரோட்டம் மிகுந்த மிசிசிப்பி நதி அதன் எச்சங்களை தன் பாதையெங்கும் கொண்டு சென்றிருந்தது.

மன்னர்கள் இறந்தால் மிகப்பெரிய கோபுரங்கள் கட்டப்படுவதும், படைவீரர்கள் பொதுமக்கள் இறந்தால் புல்பூண்டு மட்டுமே முளைப்பதும் - மன்னராட்சி காலத்து வரலாற்றைப் புரட்டினால் பக்கங்கள்தோறும் காணக்கிடைக்கும் விஷயங்களாகும். மக்களாட்சியும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதற்கு மௌன சாட்சியாய் மிசிசிப்பி நதிக்குள் சுல்தானா மூழ்கியிருக்கிறது.

இலட்சக்கணக்கான இராக் மக்களை கொன்று குவித்தும் பயங்கர ஆயுதங்கள் ஏதும் சிக்கவில்லை என்ற பின்பும், உலக மக்கள் முன்பு பகிரங்க மன்னிப்பு ஏதும் கேட்காமல் - ‘ஜனநாயகத்தை நிலைநாட்டவே போர் தொடுத்தோம்’ என்று அமெரிக்கா கூறியது. ஆனால் தன்நாட்டு மக்களிடமாவது அது கொஞ்சம் நேர்மையுடன் இருந்திருக்கலாம். 1700 பேர் மரணத்திற்குக் காரணமாக இருந்த, ஊழல் புரையோடிப் போன இராணுவத் துறையின் செயலுக்கு தார்மீக பொறுப்பு ஏற்று தனது மக்களிடம் பின்னர் வந்த எந்த அமெரிக்க அரசும் சிறு வருத்தமும் தெரிவிக்கவில்லை. 376 பேர் மட்டுமே செல்லக்கூடிய கப்பலில் 2300 பேர் ஏற்றப்பட்டதுதான் முக்கிய காரணம் என்பது தற்போதைய அறிவியல் சூழலில் வெட்டவெளிச்சமான பின்பு, அந்த கோர நிகழ்வை ‘படுகொலை’ என்று குறிப்பிடாமல் இன்னும் ‘விபத்து’ என்றே அமெரிக்க ஆவணங்கள் குறிப்பிட்டு வருகின்றன.

ஆண்டுகள் பல கடந்தபின்பு, சுல்தானா உயிர்பிழைத்தோர் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சுல்தானாவோடு மூழ்கிய தங்களது நண்பர்களின் நினைவாக ஒரு நினைவுச் சின்னத்தை அரசாங்கம் எழுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். சுல்தானா கோர நிகழ்வைப் போலவே, அந்தக் கோரிக்கையும் அமெரிக்க அரசால் புறக்கணிக்கப்பட்டது. கோரிக்கை வைத்தவர்களில் ஒருவரான ஜேம்ஸ் கிம்பெர்லின் இறக்கும் தறுவாயில், தான் பிறந்து வளர்ந்த அமெரிக்காவின் மீதான தனது வெறுப்பை இவ்வாறு பதிவு செய்தார்:

“தனது நாட்டிற்காக இந்த மண்ணிலேயே நரகத்தை அனுபவித்து, பட்டினியால் வாடி, மரணத்திலிருந்து தப்பிப்பதற்காக கரப்பான் பூச்சிகள் மொய்த்த உணவை உண்டு, போர்க் கைதியாக அனைத்து வகையான அவமரியாதைகளையும் சித்திரவதைகளையும் அனுபவித்த ஒருவன் வெகு சீக்கிரமே இந்த நாட்டினரால் மறக்கப்படுவான் என்றால், அவனுக்கு இந்த அரசாங்கத்தைப் பற்றியோ அல்லது இந்த அமெரிக்க மக்களைப் பற்றியோ நல்லவிதமாகக் கூற என்ன இருக்கிறது?”


கட்டுரைக்கு உதவிய இணையதளங்கள்:

http://en.wikipedia.org/wiki/Sultana_%28steamboat%29
http://travel.howstuffworks.com/shipwreck1.htm
http://www.factmonster.com/spot/sultana1.html
http://www.SultanaDisaster.com
http://www.history.com/this-day-in-history.do?action=Article&id=2189
http://www.rootsweb.ancestry.com/~genepool/sultana.htm#pottle


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com