Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2007


வாழ்வும் மரணமும்

லலிதாம்பிகா அந்தர்ஜனம் / ஆங்கிலம் வழித் தமிழில்: எஸ். நாகராஜன்

அவன் சாவதற்கு முன்பு இரண்டு ஆண்டுகளாய் நோயுற்றுப் படுக்கையில் விழுந்து கிடந்தான். டாக்டர்கள் அவளைக் கைவிட்டுவிட்ட பின்னால் ஆறு மாதங்கள் உயிரோடிருந்தாள். அவன் பெற்றோர் கூட மரணம் விரைந்து வந்து அவளைத் துன்பத் திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று பிரார்த்தித்தனர். ஆனாலும் இளம்விதவை, பிணத்தின் காலடியில் விழுந்து கையால் தலையிலடித்துக் கொண்டு விம்மி விம்மி அழுதாள். அவள் நகைகளைக் கழற்றி எறிந்தாள். துக்கம் மேலிட்டு வெறிபிடித்தவள் போலத் தன் கைகளால் மார்பில் அறைந்து கொண்டாள். அவளைத் தடுப்பதற்கு யாரும் முயலவில்லை. யாரும் அவளை ஆற்றுப்படுத்துவதற்கும் துணியவில்லை. அவளை எவ்விதம் சமாதானப்படுத்த இயலும்?

அவர்களிருவரும் திருமணம் செய்து கொண்டபோது வாழ்க்கைமீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அவர்களின் தேனிலவின் ஒளி, சுடர்விட்டுப் பிரகாசிக்க மின்ன லின் வேகத்துடன் தோன்றி மறைந்த அந்த குறுகிய ஓராண்டு நிறைவதற்கு முன்பே அவன் நோயாளியாகிப் போனான். அவள் அவன் செவிலியானாள். அச்சமும் நம்பிக்கையும் மாறி மாறி வர அவள் பலநாட்கள் போராடினாள். அவன் சிகிச்சைக்காக ஏகப்பட்ட பணம் செலவிடப்பட்டது. க்ஷயரோக நோயால் எவருமே இதைப் போன்ற சிரத்தையுடன் கவனிக்கப்பட்டதில்லை.

இப்போது எல்லாமே முடிந்துவிட்டது. செத்தவர்கள சுடுகாட்டுக்குப் போய்த்தானாக வேண்டும். ஆனால் அவள் என்ன செய்வாள்? அவளுக்கு வயது பத்தொன்பதுதான் ஆகிறது. அவள் உடல் செத்து, சிதையில் தூக்கி வைப்பதற்கு முன்பு அவள் எத்தனை எத்தனை நீண்ட, அர்த்தமற்ற நாட்களையும், இரவுகளையும் மாதங்களையும், வருடங் களையும் கழிக்க வேண்டும்? அவள் எத்தனை துன்பம் நிறைந்த சோதனைகளை எதிர் கொள்ள வேண்டியது வரும்? கடுமையான, கண்டிப்பான அவள் மாமனார் கூட தேம்பித் தேம்பி அழுதார்.

துக்கம் அனுஷ்டிக்கிற காலத்தில், அவள் சம்பிரதாயப் படி மூன்றுமுறைக்குக் குளத்தில் மூழ்கி எழுந்தாள். ஈரம் சொட்டச்சொட்டத் தரையில் படுத்துறங்கினாள். வெறும் இள நீரை மட்டும் உட்கொண்டு பத்துநாட்கள் உயிர் வாழ்ந்தாள். ஒரு அங்குலத்தின் முனை யளவுகூட விதவைக்கென்று விதிக்கப்பட்ட விதிகளிலிருந்து அவள் பிறழவில்லை. சடங்குகளை இவ்வளவுதூரம் கடுமையாகக் கடை பிடிக்க வேண்டாமென்று உறவினர்கள் எடுத்துச்சொல்லி அவளைத் தடுக்க முயன்றனர்.

சடங்குகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டிய தில்லை என்று அவர்கள் சொன்னார்கள். வீட்டில் எல்லோருக்கும் வயதில் மூத்தக் கிழவிகூட அவளோடு வாதாடிப் பார்த்தாள். ஆனால் சாவித்திரி பிடிவாதமாய் இருந்தாள். அவள் கணவனின் ஆத்மா சாந்தியடைவ தற்குத் தேவையான அனைத்தையும் செய்வதில் அவள் உறுதியாய் நின்றாள். அவளாள் முடிந்த எல்லாத் தியாகத் தையும் செய்து முடிக்கும்வரை ஓயக்கூடாது என்று தீர்மானித்துடனிருந்தாள்.

அவளுக்கு ஒரு மகன் மட்டுமிருந்ததால், அவள் வருடம் முழுக்கத்துக்கம் அனுஷ்டித்திருப்பான். ஆனால் அவ ளுக்கு மகனில்லை. அதற்குபதிலாக ஒவ்வொரு விஷயத் திலும் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டு அவளே எல்லா இறுதிச் சடங்குகளையும் செய்து முடித்தாள். கணவன் வாழ்ந்திருந்தால், அவளுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான். இப்போதும் அந்த மகனைத் தன் உடம்பில் கொண்டிருப் பதைப் போன்ற உணர்வு அவளுக்கு ஏற்பட்டது. முழங் கால் வரையுள்ள முண்டை மட்டும் உடுத்தினாள். குளித்த பின் அவள் கூந்தலுக்கு எண்ணெய் தடவுவதில்லை. ஒரு நாளைக்கு ஒரு பிடிச்சாதமே உண்டாள். இந்த முறையில் ஒருவருடம் முழுவதும் துக்கம் அனுஷ்டித்தாள். வைதீகப் பெரியவர்கள்கூட வியந்து போனார்கள். "சாவித்திரி தன்னை ரொம்பவும் வருத்திக் கொள்கிறாள். இவ்வளவு விடாப்பிடியாய் இருப்பாளென்று கற்பனைகூட செய்ய முடியவில்லை" என்றார்கள் அவர்கள்.

அவள் தன்மீது திணித்துக் கொண்ட துன்பங்களுக்காக அவளின் மாமனாரும் மாமியாரும் அனுதாபப்பட்டாலுங்கூட அவர்கள் ஆழ்மனத்திற்குள் அவள் கணவனிடம் - அவர்கள் மகனிடம் காட்டிய அன்பையும் பக்தியையும் கண்டு சந்தோஷப்பட்டார்கள். யாரும் இதை அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அவள் பழைய உலகத்தைச் சேர்ந்தவளல்ல. அவள் கணவன் அவளை அவளுடைய படிப்பிற்காக அல்ல. அவன் பெற்றோரின் சம்மதமின்றியே அவளை மணந்தாள். சமூக சீர்திருத்தத்தில் தீவிர ஆர்வம் உள்ளவனாய் இருந்ததினால், அவனது நடவடிக்கைகளில் மனைவியையும் ஈடுபடுத்திவிடுவானோ என்று அவன் பெற்றோர் பயந்தனர். ஆனால் அந்தமாதிரி எதுவும் நிகழவில்லை. அதற்கான நேரமும் வாய்க்க வில்லை. விதி வேறுவிதமாய் அமைந்தது.

கணவனின் முதலாமாண்டு திவசத்தன்று சாவித்திரி அடுக் களையில் அமர்ந்திருந்தாள். வருடம் முழுவதும் ஓய்வு ஒழிவின்றி சடங்குகள் அனுஷ்டித்ததினால் அவள் தொண்டை காய்ந்து வறண்டு போயிருந்தது. அவள் பெருமூச்செறிந்தாள். அவள் கணவனுடைய உடலுக்காகவும் ஆன்மாவுக்காகவும் அவனால் செய்ய முடிந்தத னைத்தையும் செய்துவிட்டாள். அவள் இப்போது ஒரு குழந்தையில்லாத விதவை. இவ்வுலகில் அவள் ஆற்றவேண்டிய கடமைகள் இனி எதுவுமே இல்லை. ஆனால் அவள் உடல் எரிந்து சாம்பலாகும்வரை இந்த வாழ்க்கையை அவள் வாழ்ந்தாக வேண்டும்.

சென்ற வருடம் முழுவதும் தன்னைப் பற்றிய நினைவுகளை அவள் முற்றிலுமாக மறந்திருந்தாள். சாவு ஒன்றே அவள் சிந்தனையை ஆக்கிரமித்திருந்தது. இறந்துபோன கணவனுக்கான சடங்குகளை அவள் செய்து கொண்டிருக்கையில் அவனுடைய கடைசி கணங்களின் பயங்கர அமைதி அவளுள் ஈரம் கசிந்து கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது. உள்ளுக்குள் செத்துப்போய், ஆனால் வெளியே பேருக்கு வாழ்ந்து கொண்டிருந்தாள். ஏதோவொன்று அவளை தினசரிக் காரியங்களை இயந்திர கதியில் செய்து முடிக்க வற்புறுத்தியது. இறந்தவரின் ஆன்மா சாந்தியடையும் பொருட்டு சடங்குகளைச் செய்யும் உயிருள்ள ஜீவனும் இனி உயிரோடில்லை. அதுவும் செத்துவிட்டது என்றே அவள் உணர்ந்தாள்.

அவள் துக்க காலத்தில் படுப்பதற்கு சொரசொரப்பான கறுப்பு ஜமுக்காளத்தையே பயன்படுத்தி வந்தாள். அன்றிரவு தான் சாதாரண போர்வை மேல் படுத்து தூங்கினாள். அப்போது அவள் நினைவில் முதன்முதலாக கணவனின் பிம்பம் தோன்றியது.
ரொம்பநாளாகவே அவள் அவனை இந்தமாதிரி நினைத்துப் பார்க்கவில்லை. மனக்கண்ணில் தோன்றியதெல்லாம் சாவின் தெளிவற்ற நிழல், சுருக்கம் விழுந்த மெலிந்த முகம், பிதுங்கி நிற்கும் விழிகள், ரத்தம் தெறிக்கும் இடைவிடாத இருமல், முடிவில் இறந்த பிறகு முகத்தில் உறைந்துபோன பயங்கர அமைதி- இவை தாம் அந்தப் பிம்பம் அவள் நேசித்த கணவனுடையதல்ல. அந்த வசீகரமான இரவில் தன் மென்மையான தொடுகை யினால் அவள் உணர்வுகளைக் கிளர்ந்தெழச்செய்த அந்த அழகிய இளைஞனுடையதல்ல.

அவர்களிருவரும் திருமணம் செய்துகொள்வதற்கு ஒன் றரை ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தார்கள். அவள் இளம் பள்ளி மாணவியாய் இருந்தாள். அவள் அவனைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாள். அவள் தீவிரமான சீர்திருத்த வாதியாக அறியப்பட்டிருந்தான். அவன் சென்ற இட மெல்லாம் நெருப்பு விதைகளைச் சிதறவிட்டுக் கொண்டிருந்தாள். அவன் எழுதிய சிறுநாடகம் மிதவாத சிந்தனை யாளர்களையும் பாதித்துக் கொண்டிருந்தது. அந்த நாடகம் அன்றுமாலை நடைபெறவிருந்தது. சம்பிரதாயத்தின் இரும்புப்பிடியில் சிக்கிய ஓர் இளம் விதவையைச் சுற்றி நாடகத்தின் கதை பின்னப்பட்டிருந்தது. சமூகத்தில் நிலவிவரும் மூடப்பழக்க வழக்கங்களை மாற்றும் விதமாக, காதலனுடனான ஓர் புதிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தாள். பள்ளியில் படித்த பெரும்பாலான பெண்கள் மேடையில் விதவையின் வேடத்தை ஏற்று நடிக்கத் தயக்கம் காட்டினர். ஆனால் பதினைந்து வயது சாவித்திரி உற்சாகத்துடன் முன்வந்தாள்.

"யாரும் அந்த வேஷத்தில் நடிக்கவில்லையென்றால் நானே நடிக்கிறேன். விதவையின் பாத்திரத்தை ஏற்று யாரும் நடிக்கவில்லையென்பதால், நாடகத்தை ரத்து செய்யவேண்டாம்." என்றாள்.

அவள் செயல் மிகவும் துணிச்சல் வாய்ந்தது. ஒளி வீசும் அழகு படைத்த அவளுக்குக் கண்கள் இயற்கையிலேயே ஈரம் படிந்தது போலிருந்தன. கலைந்த கூந்தலோடு கழுத் தில் ருத்ராட்ச மாலையுடனும் நெற்றியில் அப்பிய விபூதியுடனும் சோகமாக மறுவுரு கொண்டாற்போன்று அவள் மேடையில் தோன்றியபோது, அரங்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் கண்ணீர் உகுத்தனர். விதவை மறுமணத்தைத் தீவிரமாய் எதிர்க்கும் பத்தாம்பசலிகள் கூட அதை அசாதாரணமான சூழ்நிலைகளில் அனுமதிக்கலாம் என்று ஒப்புக்கொண்டனர். மிதவாதச் சிந்தனையுடை யோரும் இதை ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். நாடக ஆசிரியன் பாராட்டப்பட்டான். ஓர் இளைஞன் ஆர்வ மிகுதியினால் எழுந்து தான் ஒரு விதவையை, அவள் விரும்பினால், திருமணம் செய்து கொள்ளத் தயாராகயிருப்பதாய் அறிவித்தான். நாடகம் ஈடு இணையற்ற வெற்றியாக அமைந்தது.

இதற்கிடையில் அந்த இளம் நாடகாசிரியன் கதாநாயகி வேடம் ஏற்று நடித்த நடிகையை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தான். அவள் நடிப்பை ஓர் விமர்சகனின் பார பட்சமற்ற பார்வையோடு விமர்சனக் கண்ணோட்டத்துடன் பரிசீலிப்பதற்கு முயன்றான். நாடகம் முடிந்து பாராட்டுக் கூக்குரலும் ஆமோதிக்கும் ஆரவாரமும் ஓய்ந்த பின்பு அவன் துடிக்கும் இதயத்துடன் மேடைக்குச் சென்றான். அவன் கையில் கட்டியிருந்த விலை உயர்ந்த கடிகாரத்தைக் கழற்றி மேஜை மேல் வைத்தான். பிறகு "என்மீது பொழிந்த பாராட்டையும், அது சமூகமாற்றங்கள் ஏற்படுத்தத் தந்திருக்கும் ஊக்கத்தையும், இந்தக் கடிகாரத்தோடு கதாநாயகி வேடமேற்று நடித்த இந்த இளம் பெண்ணுக்குப் பரிசாகத் தருகிறேன்". என்று அறிவித்தான்.

பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பினர். அவள் வெட்கத்துடன் தலைகுனிந்து பரிசை வாங்கும்போது கடிகாரம் அவள் நடுங்கும் விரல்களிலிருந்து நழுவி கிழே விழுந்து கண்ணாடி துண்டுகளாய்ச் சிதறியது. அது மோசமான அபசகுனமாய்ப்பட்டது. அரங்கத்திலிருந்த மூடநம்பிக்கையற்றோர் மத்தியில் கூட இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒன்றரை வருடம் கழித்து, நண்பர்களும் உறவினர்களும் எவ்வளவோ எதிர்த்தும் பொருட்படுத்தாமலும், அவள் அவனளவுக்குப் பணக்காரியாகவோ வசதிபடைத்தவளாகவோ இல்லாதிருந்தும் அதைச் சட்டை செய்யாமலும் அவன் அவளை மணந்தான். காலத்தின் வினாடிகளைக் காட்டும் கடிகாரத்தைக் கொடுக்கும்போதே காதலினால் துடிக்கும் இதயத்தையும் சேர்த்தே அவளுக்கு கொடுத்து விட்டதாக அவன் அவளிடம் கூறினாள். இந்தச் சம்பவங் களை நினைத்துப் பார்க்கும்போது சாவித்திரியின் உடல் நடுங்கியது. அவன் அவளுக்குக் கொடுத்த முதல்பரிசே அதுவும் காலங்காலத்துக்கு நிலைத்து நிற்கும் என்று அவன் நினைத்த பரிசே உடைந்து நொறுங்கிவிட்டது. இந்தக் காரணத்துக்காகத்தான் அவள் விதவையின் உடையணிந்து வந்து பாராட்டினைப் பெற்றாளா? அவள் கணவனும் அவளுடைய கடைசிநாட்களில் இதைப்போன்ற எண்ணங்களையே கொண்டிருந்தான். நோய் அவனை உருக்குலைத்தவுடன், அவனுடைய முற்போக்கான கருத்துக்களைத் துறந்து பழைய சம்பிரதாயமான விஷயங்களைப் பற்றியே நினைக்க ஆரம்பித்தான். ஒரு முறை அவன் அவளிடம் சொன்னான்.

"சாவித்திரி, அந்த வேஷத்தை ஏற்று நடித்திருக்கக் கூடாது. உன்னை நான் முதன்முதலாகப் பார்க்கும் போதே விதவைக் கோலத்தில்தான் பார்த்தேன். அதுவே இப்போது உண்மையாகிவிடப் போகிறது."

அவன் சிந்தனையில் மூடநம்பிக்கையின் வலிமையான கூறு படிந்திருந்தது. "நீங்கள் எழுதிய நாடகத்தில் நான் நடித்ததால் அல்லவா இப்படி ஆயிற்று?" என்று கேட்க வேண்டும்போல அவளுக்குத் தோன்றிற்று. ஆனால் அவள் ஒன்றும் பேசவில்லை. சாவித்திரி ரொம்பவும் அமைதியாகிவிட்டாள். முன்பு இருந்ததைப் போன்று எதற்கும் வாதம் செய்யக்கூடிய பெண்ணாக இப்போது அவளில்லை.

படுக்கையில் கிடந்தபடி அவன் அவளுடைய வளையலையும் கழுத்துச் சங்கிலியையும் அடிக்கடி தொட்டுப் பார்ப்பான். இந்த நகைகளை அவள் அழகிய உடலிலிருந்து இப்போதே கழற்றிவிட்டாலென்ன என்று நினைப்பான். அவன் இதையே விரும்புகிறான் என்பதை அவளும் சிலசமயம் உணர்வாள். ஒருமுறை எந்தவிதக் காரணமுமின்றி அவள் நெற்றியிலிருந்த பொட்டை அவன் அழித்துவிட்டான். அவன் என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் அவள் முணுமுணுப்புக் காட்டியதில்லை. அவள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு தகாத வார்த்தை எதையும் சொல்லாமல் கண்ணீர் விட்டோ பெருமூச்செறிந்தோ அவனைத் துன்பப்படுத்தாமல் பக்திச்சிரத்தையுடன் அவனுக்குப் பணிவிடை செய்தாள். ஆனால் இதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் இப்போது கட்டுப்படுத்த முடியாமல் மடை திறந்த வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது.

அவள் மற்ற விஷயங்களில் கவனத்தைத் திருப்புவதற்குக் கடும் முயற்சி செய்தாள். சமையலறை வேலையும் பூஜையும் முடிந்த பின்னால், அவள் படிப்பதில் நேரத்தைச் செலவிட்டாள். முதலில் புராணங்களைப் படித்தாள். பின்னர் கவிதைகளையும், நாடகங்களையும், நாவல்களையும் படித்தாள். பக்தி மார்க்கத்திலிருந்து தன் கவனத்தைத் திருப்பி இடையறாத வாசிப்பின் மூலம் அவள் எண்ணிறந்த விஷயங்களைப்பற்றித் தெரிந்து கொண்டாள். இதற்காகத்தான், அவள் கணவன் இத்தனைப் புத்தகங்களை வாங்கி வைத்தானே!

சகஜமான ஒழுங்கினால் உடல் ஆரோக்கியமடைந்தது அவள் இதயம் அமைதியடைந்தது. அவள் பழைய தோழிகளைக் காணும்போது அவ்வப்போது புன்னகை புரியத் தொடங்கினாள். அதிகமான கவனத்துடன் உடை யணிந்தாள். பௌர்ணமி இரவுகளில் ஜன்னலருகே நின்று நீண்டகாலமாய் ஓய்ந்துபோன இதயத்தின் முதல் தற்காலிக மொழியை வெளிப்படுத்தும் விதமாய் சின்ன சின்ன சோகமெட்டுக்களை முணுமுணுப்பாள்.

அவள் மாமனாரும் அபாக்கியவதியான அவர்கள் மருமகள் மீது எந்த வருத்தமும் காட்டவில்லை. ஆனால் அவள் கணவரின் தம்பி கல்யாணப் பேச்சு எழுந்தபோது, அவன் தாய் அவனிடம் சொன்னாள்: "தம்பி ஜாதகம் சரியாகப் பொருந்துகிறதா என்று நிச்சயம் செய்துகொள். செவ்வாய் எட்டாம் இடத்து சந்திரனில் இல்லாமல் பார்த்துக்கொள். நமக்கு ஏற்கனவே மோசமான அனுப வம் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் சொல்கிறேன்."

சாவித்திரி இதைக் கதவு பின்னாலிருந்து கேட்டுவிட்டு உடல் நடுங்கினாள். அவள் ஜாதகம் சம்பந்தமாய் புகார்கள் இருந்தன என்பதை நினைவில் வைத்திருந்தாள். ஆனால் அதை யாரும் சட்டை செய்யவில்லை. என்ன தவறென்று கண்டுபிடிப்பதற்கு யாரும் முயலவில்லை. இதயங்கள் தாம் ஒன்றுசேர வேண்டும். ஜாதகங்கள் அல்ல என்று அவள் கணவன் வாதிட்டான். ஆனால் முடிவு என்னவாயிற்று? இதைப்பற்றியே அவள் நாள் முழுதும் கவலையுடன் நினைத்துக் கொண்டிருந்தாள்.

கொழுந்தன் ஓர் தகுதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். அவள் நிறைய வரதட்சணையும் கொண்டு வந்திருந்தாள். புது மணப்பெண் வீட்டிற்கு வந்ததுமே அவளுக்கு மாமியார் சாவித்திரி காதில் விழும்படி புத்திமதி சொன்னாள்: "குழந்தே மஞ்சள் சரடைக்கெட்டியாக கையில் பிடித்துக் கொண்டு ஆண்டவனை வேண்டிக்கொள். ஆங்கிலம் கற் பதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. உன் கணவன் நீண்டகாலம் வாழவேண்டும் என்பதே முக்கியம்." சாவித்திரி எந்தக் காலத்திலும் மஞ்சள் சரடைக்கையில் பிடித்துக்கொண்டு பிரார்த்தித்ததில்லை. அவள் கழுத்தில் தங்கச் சங்கிலி தான் அணிந்திருந்தாள்.

கொழுந்தனுக்கு கல்யாணம் ஆகிவிட்டபடியால் அவன் அடிக்கடி அந்தபுரத்துக்கு வர ஆரம்பித்தான். அவன் பார்ப்பதற்கு அழகாயிருப்பான். பழகுவதற்கும் இனியவனாயிருந்தான். அவள் திருமணத்தின்போது அவன் மாணவனாயிருந்தான். அவன் அண்ணனோடு அவனை சிலசமயம் பார்த்திருக்கிறாள். அப்போதெல்லாம் அவள் அவனை ஒரு மென்மையான நேசிக்கத்தக்கச் சிறுவனாகத்தான் கண்டிருக்கிறான். அதற்குப் பின்னாலும் எத்தனையோமுறை பார்த்திருந்தாலும், இப்போதுதான் அவள் அவனுக்கும் அவள் கணவனுக்கும் உள்ள ஆச்சரியப்படத்தக்க உருவ ஒற்றுமையைக் கவனித்தாள்.

அடர்ந்த புருவங்களுக்குக் கீழே ஒளிரும் அதே கண்கள், அதே அகல நெற்றி, அதே நீண்ட, மாந்த முகம்... அவன் அவனுடைய சகோதரனைவிட மூன்றுவயது இளையவன். இப்போது அவள் கணவன் இறக்கும் போதிலிருந்த வயதில் அவன் இருந்தான். வேதங்களை உச்சரிப்பதற்கு ஏற்றாற்போல அமைந்த குரலில் அவன் கூப்பிடும்போது, அதற்குப் பதில் சொல்லவேண்டும் என்று அவள் ஏங்கினாள். அவளுக்கு நேர்ந்ததெல்லாமே வெறும் கனவுதானா? திடீரென எதார்த்த நிலையை உணர்ந்து திடுக்கிட்டாள். உடல் நடுங்கி ஓடினாள். அன்று அவள் உண்ணவுமில்லை, உறங்கவுமில்லை. அவன் நினைவு பெரிய மலை உச்சியில் இருந்து வழுக்கி ஆழமான பள்ளத்திற்குச் சரிந்து கொண்டிருந்தது.

அவள் மணப்பெண்ணுக்கு ஆறுமாதங்களே மூத்தவள். அவள் கொழுந்தனைவிட நான்கு வயது இளையவள். அவன் அண்ணன் அவளையும் திருமணம் செய்திரா விட்டால், அவள் இன்னும் கன்னிப்பெண்ணாகவே இருந்திருப்பாள். அதனாலென்ன? அவளைச் சுற்றிப் பறந்து கொண்டிருந்த தேனீயை வெறுத்தான். அது போகாமல் அவளைச் சுற்றியே பறந்து கொண்டிருந்தது. பிறகு தேனீ அவளைக் கொட்டியது. மீண்டும் மீண்டும் கொட்டியது. கொட்டிய இடத்தில் அவளுக்கு கடுமை யாகக் கடுத்தது. பாவ நினைவுகளில் சிக்கிக் கடைசியில் அவள் உணர்விழந்து விழுந்தாள்.

மணமகனும் மணமகளும் முதன்முதலாய் ஒன்று சேரும் முதலிரவு வந்தது. வழக்கமான ஏற்பாடுகள் நடந்தன. வாசனைத் திரவியங்கள், பூமாலைகள் சந்தோஷக் கூச்சல் என்று வீடு அல்லோகலப்பட்டது. சுமங்கலிப்பெண்கள் புதுப்பெண்ணை அலங்கரித்துக் கொண்டிருந்தனர். வீடு முழுக்க சத்தமும், சிரிப்பும் நிறைந்திருந்தன. சாவித்திரி படுக்கையில் குப்றப்படுத்திருந்தாள். கடந்த மூன்று இரவுகள் அவள் உறங்கவில்லை. அவளுக்கு காய்ச்சல் வேறு கொதித்துக் கொண்டிருந்தது. ஆனால் விழாக் கோலங்களுக்கு மத்தியில் அந்த விதவையைக் கவனிப்பதற்கு யாருக்கும் நேரமில்லை. காய்ச்சல் வேகத்தில் அவள் தலை பயங்கரமாய் வலித்தது. பரபரப்பிலிருந்து ஒதுங்கி தனிமைப்பட்டுப் போய், அவள் தன் துன்ப நினைவுகளோடு போராடிக் கொண்டிருந்தாள். அந்த முதலிரவு அறையில் இந்நேரம் புதுப்பெண்ணும் மாப்பிள்ளையும் இன்பக்கடலில் மூழ்கிக்கொண்டு இருப் பார்கள். எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்.

அவளும் ஏன் சந்தோஷமாக இருக்க முடியவில்லை? அவள் இன்னும் எத்தனை காலம் இந்த இருட்சிறையில் அடைபட்டு உணர்விழந்து தனிமையில் நினைவுகளை மட்டும் துணையாகக் கொண்டு வாழமுடியும்? அவள் கற்றுக்கொண்ட, நம்பிய கொள்கைகளின் பின்னணியில் தனது வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தாள். சாவின் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்வதா? இது பாவச்செயலா? அல்லது சீரிய பண்பா? பலநாட்களாய் அவள் மறக்க நினைத்த உணர்ச்சிகள் அவற்றை மறப்பதற்கு அநேகமாய் அவள் வெற்றி கண்டுவிட்ட நிலையில் மீண்டும் அவள் இதயத்தைத் தொட்டன. அவள் கணவன் எழுதி அவள் நடித்த நாடகத்தின் கடைசிக் காட்சி அவளுக்குத் தெளிவாய் நினைவுக்கு வந்தது.

"கெட்ட ஆவிகளே, என்னைவிட்டு விலகிச் செல்லுங்கள். நான் புத்தம் புதிதாய் வேறு ஒரு வாழ்க்கையில் அவதாரம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். நான் காணப் போகும் நம்பிக்கை வெளிச்சத்திற்காக, புதுப்பெண் ணாய் நான் அடையப்போகும் பேரின்பத்திற்காக நான் பெருமை கொள்கிறேன்." இந்த வார்த்தைகளை அவளைச்சுற்றி நடனமாடி ஊசலாடின.

நள்ளிரவில் புது மாப்பிள்ளையின் கதவை யாரோ தட்டி னார்கள். சாவித்திரி உடல் நலமில்லாமல் இருப்பதாகக் கூறினார்கள். அவர்கள் பார்க்கும்போது, அவள் கூச்ச லிட்டுக் கொண்டு ஆவேசத்தில் உடலெங்கும் கீறிக் கொண்டுமிருந்தாள். அவள் கண்கள் பிதுங்கி நின்றன. உதடுகள் சுழித்துத் துடித்தன. பேய்பிடித்தவள் போலக் காணப்பட்டாள். வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் எழுந்துவிட்டனர். நாட்டு வைத்தியனும், மந்திரவாதியும் வரவழைக்கப்பட்டார்கள். இங்கிலீஷ் டாக்டரும் பின் தொடர்ந்தார்.

அவளை அவள் கணவனின் ஆவிதான் பிடித்திருக்கிறது என்று மந்திரவாதி தனது தீர்ப்பைக் கூறிவிட்டாள். நாட்டு வைத்தியன், அவளின் கொதிக்கிற காய்ச்சல் தான் அவள் நிலைமைக்குக் காரணம் என்று நிச்சயமாகச் சொன்னான். அவளை முழுவதுமாகப் பரிசோதித்த பிறகு இங்கிலீஷ் டாக்டர் அவள் கொழுந்தனைக் கேட்டார்: "இவளுக்குத் திருமணமாகி விட்டதா?" அவன் வருத்தத்துடன் தலை யசைத்தான். "இவள் விதவை. எங்கள் சமூகம் விதவை களை மறுமணம் செய்ய அனுமதிப்பதில்லை."

"அப்படியா? ஆனால்..." டாக்டர் நீண்ட நேரம் யோசித் தார். பிறகு சொன்னார் "அப்படியானால் நீங்களும் உங்கள் சமூகமும் இவளின் குணப்படுத்தமுடியாத மனோவியாதியை சகித்துக்கொண்டு வாழ கற்றுக் கொள்ளவேண்டும்".

அவள் இன்னமும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள்.

"பேய்களே, ஓடிப்போங்கள்."


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com