பொம்மைகள் விற்பவன்
-இளங்கோகிருஷ்ணன்
இன்று உங்களுடைய பொம்மைகளின்
எல்லா சாகசங்களும் வீணாகவே போயின
கைகளை நிலத்தில் ஊன்றியவாறு
குட்டிக்கர்ணமிட்டுக் கொண்டேயிருக்கிறது
குரங்கு பொம்மை
டபடபவென பேரிகை
கொட்டிக் கொண்டிருக்கிறது கங்காரு
தப்பிக்கவியலாதவாறு சுற்றிக் களைக்கிறது
புகைவண்டி முடிவற்ற தண்டவாளங்களில்
நடைபாதையில் செல்பவர்களின் பாதங்களின் பின்னே
குரைத்துக் கொண்டே போய்திரும்புகிறது
வயிறு பிளந்த சிறு நாய்க்குட்டி
அனைத்து வித்தைகளும் தீர்ந்தாயிற்று
அட்டைப்பெட்டியில் அடுக்கத்துவங்குகிறீர்கள் பொம்மைகளை
இதுவரை எந்த சமத்காரமுமற்று ஊமைவிழிகளால்
உங்களையே பரிதாபமாய் பார்த்துக் கொண்டிருந்த
கரடி பொம்மையொன்று நெடிய பெருமூச்சு விடுகிறது
தொலைவில் போக்குவரத்துக் காவலன் வந்து
கொண்டிருக்கிறான் இன்றைய தினத்தின் சாவியோடு.
|