Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2006
நீதியா நியாயமா

த.வி.வெங்கடேஸ்வரன்.

நீதி என்றால் என்ன? நியாயம் என்றால் என்ன? என்ற அடிப்படை கேள்வியே இன்றைக்கு பெரும் சிக்கலாக மாறியுள்ளது. நீதி நியாயம் சமத்துவம் என்பவை என்னவென்று புரிந்து கொள்வதில் சமீபத்திய சர்ச்சைகள் குழப்பம் ஏற்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக இட ஒதுக்கீடு சர்ச்சை. இட ஒதுக்கீட்டை எதிர்த்து குரல் கொடுப்போர், குறிப்பாக வட இந்தியாவில், தம்மை ‘சமத்துவத்திற்கான இளைஞர் குழுமம்’ (Youth for Equality) என்று கூறிக்கொள்கின்றனர். ‘சமமாக நடத்து என்பதே தங்கள் கோரிக்கை, தாம் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரானவரல்ல’ என்றும் கூறி கொள்கின்றனர். சாதிசார்ந்து பாகுபாடு காட்டுவது சாதியை நிலைநாட்டும் என்பதும் அவர்களது வாதம். உயர்கல்வியில் குறிப்பாக சில சிறப்பு உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) 27% இடஒதுக்கீடு என்ற சட்டம் இயற்றப்பட்டு அது நடைமுறைக்கு வரும்போது இந்த கிளர்ச்சி துவங்கியது. விரும்பியவர் அனைவருக்கும், எக்காலத்திலும், உயர்கல்வி கிட்டாது. தேர்வான சிலருக்கே உயர்கல்வி வாய்ப்பு கிட்டும் என்ற நிலையில் யார் யாருக்கு உயர்கல்வி வாய்ப்பு கொடுப்பது? எப்படி ‘நியாயமாக’ இத்தேர்வை செய்வது? இதுவே சிக்கல்.

இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களை எதிர்த்தும் சிலர் கிளர்ச்சியில் குதித்துள்ளனர். ஊடகங்கள் பாராமுகம் காட்டி இப்போராட்டத்தினை வெளியிடுவதில் பொதுவாக தயக்கம் காட்டி வருகின்றன. என்றபோதிலும் இடஒதுக்கீட்டை ஆதரித்து குரல் கொடுப்பவர்கள் இல்லை என்றாகிவிடாது. இடஒதுக்கீட்டை ஆதரிப்போரும் சமத்துவம், சமூகநீதி என்றுதான் பேசுகிறார்கள்.

சமத்துவம் என்றால் என்ன? நீதி, நியாயம் என்றால் என்ன? இதை அறிவியல் பூர்வமாக விளக்க இயலுமா? இதன் கோட்பாடு என்ன? இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்/எதிர்ப்பவர் பேசும் சமத்துவம் நீதி ஆகியவற்றை சாத்தான் ஓதும் வேதம், போலி என சாடிவிடுதல் எளிது. ஆனால் தர்க்கபூர்வமாக அறிவியல் பூர்வமாக இதனை சந்திப்பதே தேவை.

இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் தாம் ஒன்றும் தலித்களுக்கோ, பிற்பட்டோருக்கோ உயர் கல்வியில் இடம் தரக்கூடாது என்று முட்டுக்கட்டை போடுபவர் இல்லை என்றும், அவரவர் தகுதி அடிப்படையில், திறமையை அளவுகோலாக கொண்டு உயர்கல்வியில் இடம் அளிக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். நுழைவுத்தேர்வில் கிடைக்கும் மதிப்பெண் (இதனை திறமையின் அளவுகோல் என கற்பிதம் செய்து/கருதி) அடிப்படையில் உயர்கல்வி வாய்ப்பு கொடு என்கின்றனர். ‘சமமாக’ நோக்கவேண்டும் என்றே வாதிடுவதாக கூறுகின்றனர். அநியாயமாக, சிலருக்கு மட்டும் சிறப்பு வாய்ப்பு கொடுத்து, திறமையை தவிர்த்து ஒதுக்கீடு செய்து, அநீதி இழைப்பதை எதிர்ப்பதாக கூறுகின்றனர்.

சமமாக பாவித்தல், நீதி, அநீதி, நியாயம், அநியாயம், முதலியவை இவ்வாதங்களில் இழையோடும் கோட்பாடுகள். மெய்யாக இக்கோட்பாடுகளை எவ்வாறு விளங்கிக் கொள்வது?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

‘எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை’ என்பது- சில விதிவிலக்குகள் தவிர- அனைவரும் ஏற்கும் கருத்து. மனிதராக பிறந்தவரில் இயற்கையில் உயர்வில்லை தாழ்வில்லை, அவரவர் முனைப்பு, நடத்தை, திறமை சார்ந்து உயர்வு தாழ்வு அடையலாம். ஆனாலும் அனைவரும் ‘சமம்’ அனைவருக்கும் பொதுவான நீதி, அனைவருக்கும் சம உரிமைகள் என்பது நவீன சமூகத்தில் ஏற்கப்படும் கருத்து ஆகும்.

இப்படித்தான் எப்போதும் இருந்ததா? இல்லை. இந்தியாவில் மனுஸ்மிருதி சார்ந்த வர்ணாஸ்ரம சமூக அமைப்பு இருந்தபோது ‘அனைவரும் ஒரு விலை’ என்பது ஏற்கப்படவில்லை. தாழ்த்தப்பட்டோர் உயர் சாதியினரைவிட தாழ்ந்தவர், பெண்களை விட ஆண் உயர்ந்தவன், மலைவாழ் மக்கள் முதலிய பஞ்சமர்கள் மற்ற எல்லோரை விடவும் தாழ்ந்தவர்கள் என படிநிலை பாகுபாடு இருந்தது.

பிராமணர்களுக்குள் சமத்துவம் பேணப்பட்டிருக்கலாம். தாழ்த்தப்பட்டோர் தமக்குள் சமத்துவம் போற்றியிருக்கலாம். ஆனால் சமூகம் முழுமையும் சமம் என்ற கருத்து இருக்கவில்லை. பிறப்பால் எவரும் உயர்வு தாழ்வு இல்லை என்ற கருத்தும் இருக்கவில்லை.

மேலை நாடுகளிலும் தொழிற்புரட்சி- ஜனநாயக மலர்ச்சிக்கு முன்பு உயர்ந்தோர் தாழ்ந்தோர் பாகுபாடு இருந்தது. ஆண்டான்-அடிமை முறை ஐரோப்பாவிலும் இருந்தது. ஆக பாகுபாடு பாராட்டுதல் என்பது இந்தியாவின் தனிச்சிறப்பு அல்ல. நவீன சமுதாயத்திற்கு முந்தைய சமூதாயங்கள் பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டும் சமூகங்களாகவே அமைந்திருந்தன எனலாம்.

நவீன சமுதாயம் ஜனநாயக-முதலாளித்துவ புரட்சி வழி உருவான சமயத்தில்தான் நவீன சிந்தனையாளர்கள்- மில், ரூஸோ போன்றோர் மனிதன், உரிமை, சமத்துவம் போன்ற கருத்துகளை வெளிப்படுத்தினர். பிறப்பால் மனிதர்கள் எவரும் சமம்; எல்லோருக்கும் சில அடிப்படை மனித உரிமைகள் உண்டு; அவரவர் தமது விருப்பத்திற்கேற்ப, சட்ட விதிகளுக்கு முரண்படாமல் எப்பணியையும் செய்யலாம்; செய்யாமலும் இருக்கலாம், நிர்ப்பந்திப்பது கட்டாயப்படுத்துவது என்பது ஏற்புடைய முறையல்ல என பல கருத்துக்கள் மலர்ந்தது இக்கட்டத்தில்தான். யாரும் எதுவும் செய்யலாம் என்றால் அது அராஜகமாக மாறிவிடாதா என எதிர்ப்பு குரல் எழும்பியபோது, நியாயமான நீதியான சமூக கட்டுபாடு குறித்த கோட்பாடுகள் மலர்ந்தன.

சமூகம் என்றால் என்ன? சமூக கட்டுப்பாடு என எவைகளை கொள்வது? போன்ற கேள்விகள் இக்காலகட்டத்தில் இயல்பாக உருவாகின.

எல்லா சமூக கட்டுபாட்டையும் ஏற்கவியலுமா?

சாதிசார் வேலை பிரிவினை, சாதிசார் ஊதியம், முதலியவை சமூக கட்டுபாடு தானே; சமூக கட்டுபாடு இல்லா சமூகம் சாத்தியமில்லை.ஆகவே காலங்காலமாக பின்பற்றப்படும் மனுநீதியை ஏன் புறக்கணிக்க வேண்டும்? மனுநீதி சமநீதி அல்ல என கூறுலாம். சமநீதி என்றால் என்னவென்று இயல்பாக அடுத்த கேள்வி எழும் அல்லவா? இச்சமநீதியை யார் வகுப்பார்கள்? அப்படி வகுப்பவர்கள் தமக்கு சாதகமாகதானே வகுப்பார்கள்? எனவே சமநீதி சாத்தியமில்லை எனவும் வாதிடலாம்.

இச்சூழலில்தான் ரூஸோ, இம்மானுவேல் காண்ட், மில் போன்றோர் ‘சமூக உடன்படிக்கை’ என்ற கருத்தை கொண்டு வந்தனர். நீதியான நேர்மையான நியாயமான சமூகம் அதன் உறுப்பினர்கள் - சம திறனும் உரிமையும் உள்ளவர்களாக - சுயமாக விரும்பி தமக்குள் ஏற்றுக்கொள்ளும் சட்டவிதிகளே நீதியான சமூக கட்டுப்பாடு என்றனர். சமூக உறுப்பினர்கள் தமக்குள் தாமாக சுயமாக ஏற்படுத்திக் கொண்டதால் இது ‘சமூக உடன்படிக்கை’. இவ்வாறுதான் மக்களாட்சி என்ற கருத்து பிறந்தது. பிரஜைகள் உரிமை பெறுவது அரசன் அளிக்கும் சலுகையினால் அல்ல, ஒரு சமூகத்தின் (நாட்டின்) குடிமக்கள் தாமே தமக்குள் ஏற்படுத்திக் கொள்வதே சமூக உடன்படிக்கை என்ற கருத்தில் மக்களாட்சி தத்துவம் பிறந்தது. அரசியல் சட்டவிதி இயற்ற சிறப்பு மக்கள் மன்றம், அதன்பின் வகுக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டம், அரசியலைப்பு சட்டம் சார்ந்த சட்டவிதிகள் என மக்களாட்சி அமையும். இந்தியாவும் 1950ல் தம்மை மக்களாட்சி என அறிவித்தது. அரசியல் சட்டவிதி இயற்ற சிறப்பு மக்கள் மன்றத்தை தேர்வு செய்து அதன்வழி அரசியல் சட்டத்தை ஏற்படுத்திக் கொண்ட மக்களாட்சி அரசாக இந்தியா உள்ளது.

சமூக உடன்படிக்கை என்பது என்ன? சமூக உடன்படிக்கையின் கோட்பாடு என்ன? இது அரசியல் தத்துவ அறிஞர்கள் பல ஆண்டுகளாக ஆராயும் கேள்வி.

மக்கள் மன்றம் என்றால் எல்லா மக்களும் அடங்கிய மக்கள் மன்றம் சாத்தியமில்லை. தேர்தல், விகிதாசார தேர்வு முறை என எந்த நடைமுறையை கடைபிடித்தாலும் இறுதியில் ‘பிரதிநிதி’ சார் ஜனநாயகம்- மக்கள் மன்றமே நடைமுறை சாத்தியம். பிரதிநிதிகள் அடங்கிய மக்கள் மன்றத்தார், நீதியாக நியாயமாக நடக்காமல் தமக்கு சாதகமான சட்ட திட்டங்களை வகுத்து விடமாட்டார்களா? இது நடைமுறை கேள்வி மட்டுமல்ல, கோட்பாடுரீதியாகவும் விளக்க வேண்டிய கேள்வி. இதனை விளக்கும் முகமாக ஜான்ரால்ஸ் என்பவர் படைத்த கோட்பாடே ‘நியாயமான நீதி’ என்ற கோட்பாடு. (The Justice of fairness)

ஜான்ரால்ஸ் (John Rawls)

2002 ஆம் ஆண்டு தனது 80வது வயதில் மரணமடைந்த ஜான்ரால்ஸ் அரசியல் தத்துவம் (Political Philosophy) என்ற பிரிவினை மறுபடி சமீபகாலத்தில் முன் காட்சிப்படுத்தியதில் தலையாயவர். மார்க்சுக்கு பிறகு ஆய்வு நிறுவனங்களில் அரசியல் தத்துவம் பின்னுக்கு தள்ளப்பட்டு மொழி, தர்க்கம் முதலியன முன்னுக்கு வந்தன. மறுபடி அரசியல் தத்துவத்தின் மையக் கோட்பாடுகளை அலசி ஆராய்ந்து மீள்பார்வையோடு செம்மையூட்டிய ராஸ்ல் பிரின்ஸ்டன், கார்னெல், மஸாசூசெட்ஸ், ஹார்வேர்டு முதலிய தலையாய அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய அறிஞர்.

1950-60களில் அமெரிக்காவில் நிகழ்ந்த சமூகப் போக்குகளின் பின்னணியில் ராவல்ஸ்ஸின் கோட்பாடுகள் உருவானதை புரிந்துகொள்ளலாம். பயன் (Utility) செயல்திறன் (Efficiency) ஆகிய இரண்டு கோட்பாடுகள் அமெரிக்க அரசின் தத்துவப் பின்னணியாக விளங்கின. எதை செய்தால் அதிக பயன் கிடைக்கும், எப்படி செய்தால் அதிக செயல்திறன் பெறமுடியும் என்பதுவே இறுதி இலக்காக திகழ்ந்தது. அதிக பயன்பெற என்ன விலை வேண்டுமானாலும் தரலாம்; ஒருசிலர் பாதிக்கப்பட்டாலும் பலர் அதிக பயனடைவது ஒன்றும் அநியாயம் அல்ல என்பது இப்பார்வையிலிருந்து மலர்ந்தபோக்கு. விருப்பமோ வெறுப்போ அதிக செயல்திறன் பெறுவது வழி அதிக செல்வம் ஈட்டுவது என்பது இறுதி குறிக்கோளாக கொள்ளப்பட்டது.

1960 களில் வியத்நாம் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அமெரிக்க ராணுவம், தான் சம்பந்தமே படாத வியத்நாம் யுத்தத்தில் ஈடுபடுவது ஏன் என மக்கள் கொதித்து எழுந்தபோது ‘பயன்’, ‘செயல்திறன்’ முதலியவை அரசுதரப்புவாதத்தின் மையக் கருத்தாக இருந்தன.

ஆம். வியத்நாம் யுத்தத்தினால் அமெரிக்க ராணுவ வீரர் உட்பட பலர் மடிவார்கள். மெய்தான் வருந்த கூடியதுதான். ஆனால் ‘கம்யூனிசம்’ என்ற அரக்கன் தோற்கடிப்பது என்பது பெரும் பயன். ஆகவே பெரும் பயனுக்காக சிறிய விலை கொடுப்பதில் தவறில்லை என்று வாதிட்டது. மேலும் வியத்நாமில் பொதுமக்களையும், சிறைபிடிக்கப்பட்ட வியத்நாம் வீரர்களையும் கொடூரமாக சித்திரவதை செய்வதை கேள்வி கேட்டபோது, ராணுவம் ‘அதிக செயல்திறனுடன்’ தனது இலக்கை அடைய கொடுக்கும் விலை என நியாயப் படுத்தப்பட்டது.

இந்த விவாதச் சூழலில்தான் எது நியாயம் எது நீதி, அதிக பயன் என்பதால் (அது உண்மையாகவே இருந்தால் கூட) சிலரின் அடிப்படை உரிமைகளை (வாழ்வுரிமை முதலிய) பறிக்கலாமா? அதிக செயல்திறனும் நியாயமான உரிமைகளும் முரண்படும்போது எங்கே எல்லைகோடு வகுப்பது என்ற சர்ச்சைகள் எழுந்தன. இந்த பின்னணியில்தான் ஜான்ராவல்ஸ் ‘நீதியின் கோட்பாடு’ என்ற தனது நூலினை எழுதினார்.

ஜான்ரால்ஸின் கோட்பாடு

தெளிவான தர்க்கமுறையில் படிப்படியாக தமது கோட்பாட்டை வகுத்தார் ஜான்ராவல்ஸ். முதலில் நீதியான சமூக கோட்பாடு என்பது சமூகத்தில் உள்ளோர் சமமான வலிமைபெற்று தமக்குள் சுயமாக உருவாக்கி கொள்ளும் உடன்படிக்கை என்ற ரூஸோவின் கருத்தினை ஏற்கிறார் ஜான்ரால்ஸ். உடன்படிக்கை என கொண்டாலும் சில பிரச்னைகள் உண்டு.

எடுத்துக்காட்டாக சமூகத்தில் தனித்தனி திறன்பெற்றவர் உளர். அவரவர் வசதிவாய்ப்பு வேறுபட்டு அமையும். ஆகவே ஒவ்வொருவருக்கிடையில் முரண்கள் தோன்றக்கூடும். எடுத்துக்காட்டாக செல்வம் படைத்தவர்கள் அதிக வரி கூடாது என கூச்சல் போடுவர். ஆனால் வறியவரோ அதற்கு நேர்மாறான கருத்து உடையவராக இருப்பர். இச்சூழலில் நியாயமான முறையில் உடன்படிக்கை எப்படி ஏற்பட முடியும்? பெரும்பான்மையோரின் ஆட்சி (Majority Rule) என தீர்வு கூறலாம். ஆனால் இது நீதியாகுமா? நியாயமாகுமா? என்பதும் ஆராயப்படவேண்டும். கலீலியோவின் காலத்தில் கலீலியோ சிறுபான்மை. கலீலியோவை எதிர்போர் பெரும்பான்மை. ஆகவே கலீலியோ தண்டனைக்குள்ளானதை நியாயம் என கூறுதல் முறையா? குறிப்பிட்ட விசயத்தில் பெரும்பான்மையோர் பொதுநலம் பாராது தன் நலம் பார்த்து முடிவெடுத்தால் அது நியாயமான முடிவு என்று ஆகிவிடாது. அதுவே ‘‘நியாயம்’’ என்பதை பெரும்பான்மை கருத்து என்பதோடு குழப்புதல் இயலாது. வலியவர்கள் வறியவர்களை எத்தி மிதித்துவிட மாட்டார்களா? உடன்படிக்கை மீண்டும் சமநீதி இல்லாமல் அநீதியாக மாறிவிடாதா?

மக்கள் அனைவரும் ஒன்று என்றாலும் வேற்றுமைகள் உடையவர்கள். எல்லோரும் ஓர்விலை என்றாலும் அவரவர் விருப்பம் இலக்கு நோக்கு வேறுபடும். இயல்பாக முரண்கள் தோன்றும். முரண்களை மீறி பொதுவான நியாயமான முடிவை எப்படி எட்டுவது?

இங்கே சாலமனின் கதையை கூறுவது பொருத்தமாக இருக்கும். சாலமனிடம் இருவர் வந்தனர். தம்மிடம் உள்ள அப்பத்தை இருவரும் சமமாக பங்கிட விரும்பினர். ஆனால் எப்படி பங்கு வைத்தாலும் இருவருக்கும் சந்தேகம், திருப்தியின்மை. அப்பத்தை எடைபோட்டு சரியாக இரண்டு கூறாக வெட்டிக் கொடுத்தால், ஒருவர் ‘எடை சரியாகதான் இருக்கிறது, ஆனால் அந்த அப்பத் துண்டு பெரிதாக இருக்கிறது’ என்று வாதிட்டார். சரி அளவு கொண்டு வெட்டினால் எடை சமமாக இல்லை. அப்பத்தில் உள்ள முந்திரி திராட்சை போன்றவை வேறு புதிய பிரச்னையை கிளப்பின. இதை தீர்க்கவே விவேகி அரசன் சாலமனிடம் முறையிட்டனர் இருவரும்.

விவேகி சாலமன் கூறினார் ‘உங்களில் ஒருவர் - எவராக வேண்டுமானாலும் இருக்கலாம்- உனக்கு சரி என்று படுவதுபோல இரண்டாக பிரி. மற்றவர், இதில் ஒன்றை- உனக்கு பிடித்த ஒரு பகுதியை- அதிக அதிக அப்பம் உடையதாக நினைப்பதை எடுத்துக்கொள்’ என்று கூறினாராம். சரியான தீர்ப்பு.

உள்ளபடியே முதல்நபர் சமமாக அப்பத்தை பிரிக்கவில்லை எனக்கொள்வோம். ஆனால் முதல்நபரின் பார்வையில் இரண்டும் சமம். ஆகவே அதில் எது கிடைத்தாலும் அவருக்கு திருப்தி அளிக்கவேண்டும். இரண்டு துண்டு உள்ளன, இதில் தனக்கு வேண்டிய விருப்பமான துண்டை முதலில் தேர்வு செய்ய இரண்டாம் நபருக்கு உரிமை இருப்பதால் அவரும் திருப்தி அடைவார். உள்ளபடியே இரண்டு துண்டு அப்பமும் ‘‘சமமா’’ என்பதல்ல முக்கியம். அது ஒரு பொருட்டே அல்ல. இருவரும் தமக்கு விருப்பமானது கிடைத்தது என்பதில் மகிழ்ச்சி, திருப்தி அடைவர் அல்லவா? அதுபோல வரி விகிதம் குறையவேண்டும் என்று கூறும் செல்வந்தர், வரிவிகிதம் கூடி இவ்வரியை சமூகப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என விரும்பும் வறியவர் இருவருக்கும் பொதுவான சட்டவிதியை இயற்றுவது குறித்த கோட்பாட்டை எப்படி இயற்றுவது?

கற்பனையான கற்பிதமான ஒரு சோதனை வழி இதனை நிறுவ முயன்றார் ஜான்ரால்ஸ். நடைமுறை சமூகம் துவக்கத்திலிருந்து துவங்குவது இல்லை. நடப்பு சமூகத்திற்கு வரலாறு உண்டு. ஆனால் தனது கோட்பாடு வகுப்பதற்கு கற்பிதமாக புத்தம் புது சமூகத்தை முதன்முறையாக கட்டி எழுப்புவதாக கொண்டார். அதில் எப்படி நீதியான கோட்பாடு வகுப்பது என கண்டபிறகு நமது நடைமுறை சமூகம் குறித்து கூறுவது அவர்நோக்கம். அவரது கற்பனை சோதனையை இனி விவரிப்போம்.

முதலில் நாம் எல்லோரும் பகுத்தறிவோடு சிந்தித்து சீர்தூக்கி நடப்பவர்கள் என கொள்வோம். அடுத்ததாக கடவுள் என்பவர் ஒருவர் உள்ளதாகவும், அவர்/அவள் தன்னிச்சைப்படி உலகை மாற்றியமைக்க ஆற்றல் பெற்றவர் எனவும் கொள்வோம். கற்பனையாகத்தான். ‘கடவுளே உனக்கு கண் இல்லையா,’ ‘கடவுளே நீ ஏன் சிலையானாய்’ என்றெல்லாம் மக்கள் புறம் கூறுகின்றனர், இதுவரை தாம் படைத்த உலகினை எல்லோரும் ஏசுகின்றனர் என வருந்தி, இனி தாமும் ஜனநாயகப் பூர்வமாக நடப்பதாக முடிவெடுத்து கடவுள் மக்கள் மன்றத்தை கூட்டுவதாக கொள்வோம்.

உலகில் உள்ள அனைவரையும் மக்கள் மன்றத்தில் கூப்பிட முடியாது. ஆகவே (பேச்சுக்காக) 20பேரை தேர்வு செய்து (ஜனநாயக முறைப்படி) மக்கள் மன்றத்தை கடவுள் கூட்டுகிறார். மக்கள் மன்றத்தின் ஒரே அலுவல் உலகின் - சமுதாய இயக்கத்தின் அரசியல் சட்டத்தை வரைய வேண்டும். 20 பேர் முடிவு செய்வதை கடவுள் அப்படியே நிறைவேற்றுவார். இதுதான் சூழல்.

20 பேர் என்ன செய்வார்கள்? ஆஹா கிடைத்தது வாய்ப்பு! என உலகை 20 பங்காக பிரித்து ஒவ்வொரு பங்கிற்கு ஒருவர் என தம்மை பேரரசராக அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கலாம். உலகில் வேறு எல்லோரும் தமக்கு அடிமையாக இருக்கவேண்டும் என சுயலாபம் கருதி பரிந்துரைக்கலாம் அல்லவா... இது பெரும் ஆபத்து.

கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவ்வளவு முட்டாளாக இருக்கமாட்டார். மக்கள் மன்றத்தை கூட்டும் அளவிற்கு பைத்தியம் பிடித்திருக்கலாம். ஆனால் முட்டாள் இல்லை. சற்றேனும் விவேகி.

‘‘அன்பு நான் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு ஐந்து சால்பு ஊன்றிய காண்’’ பொருத்தியவர்தான் மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்படவேண்டும் என கூறலாம். ஆனால் நடைமுறையில் இது உறுதி செய்ய இயலாது. மக்கள் பிரதிநிதியான பின்பு ‘‘நன்றேதரினும் நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழியவிடல்’’ என வள்ளுவரின் அறிவுரைபடி நடப்பர் எனவும் கூறுதல் இயலாது. தன் நலம் பாராது பொதுநலம் கருதி செயல்பட வேண்டும் என விரும்பினாலும் உள்ளபடியே ‘‘வானளாவிய’’ அதிகாரம் கிடைத்ததும் அவ்வாறே நடப்பர் எனவும் கூறமுடியாது. ஆகவே பொதுவிதி எழுத நாம் தேர்வு செய்யும் முறை ‘‘தன்நலம் பாராட்டும்’’ பிரதிநிதிகள் கூடி வகுத்தாலும் நீதி நியாயமாக இருப்பதாக அமையவேண்டும்.

20 பேரும் சுயலாபம் கருதி சட்டதிட்டங்களை எழுதிவிடக்கூடும் என்ற அச்சம் எழுவது இயல்பு. ஆகவே கடவுள் இட்டார் ஒரு விதியை. சட்டதிட்டம் இயற்றிய பிறகு 20 பேரும் மறுபடி உலகிற்கு திரும்புவார்கள். ஆனால் யாராக எங்கு திரும்புவார்கள் என்று முன்கூட்டியே அறிய இயலாது. சிலர் குருடாக பிறக்கலாம். சிலர் அலியாக. சிலர் ஆப்கானிஸ்தானில் போரும் அவலமும் நிறைந்த சூழலில் பிறக்கலாம். வட இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் தலித் குடும்பத்தில் பிறக்கலாம். உலக அழகியாக, பணக்காரனாக தீராநோய் உள்ளவராக என பலவிதமாக பிறக்கலாம். இது கடவுள் இட்ட கட்டளை. இப்போது என்னவாகும்? உலகில் 20 தனிப்பெரும் நபர்கள் உருவாகும்படி சட்டதிட்டம் வகுப்பார்களா? பகுத்தறிவு உடையவர் எனில் மாட்டார். ஏன்? ஏனெனில் அவர்கள் மறுபடி உலகில் பிறக்கும்போது 20 தனிப்பெரும் நபர்களின் அடிமையாக பிறந்துவிட நேருமல்லவா? அது ஏற்புடையது அல்ல. எனக்கு இரண்டு கண் போனாலும் பரவாயில்லை பங்காளிக்கு ஒரு கண் போகட்டும் என்று யோசிப்பவர் என்றால் சரிவராது. பகுத்தறிவோடு தன் நலம் பாராட்டுபவர் எனக்கு இரண்டு கண் போனாலும் பரவாயில்லை என கருதமாட்டார்கள். நான் யாராக பிறந்தாலும் எச்சூழலில் பிறந்தாலும் எனக்கு குறைந்தபட்ச வசதியாவது இருக்க வேண்டும். வாய்ப்பு இருக்க வேண்டும் என்று ‘‘தன்நலம்’’ போற்றி யோசிப்பதே பகுத்தறிவான முடிவு அல்லவா?

சற்றே அறிவியல்பூர்வமாக ரீதியாக சிந்தித்துப் பார்த்தால் உள்ளபடியே பகுத்தறிவு உடையவர்கள் கீழ்கண்ட முடிவுக்குதான் வருவர் என்றார் ஜான் ரால்ஸ்.

1.முதலில், எல்லோருக்கும் ஓர்நிறை எல்லோரும் ஓர் விலை என்பதுபோல எல்லோருக்கும் சமமான அடிப்படை உரிமைகள் இருக்க வேண்டும். இந்த முதல் கட்டளை- முதல்விதி முக்கியமானது. விதிவிலக்கின்றி பின்பற்றப்பட வேண்டும். இது ரால்ஸின் வாதம். அடிப்படை உரிமை என்பது வாழ்வுரிமை பேச்சுரிமை, எழுத்துரிமை, தமது கருத்தை வெளியிடும் உரிமை, சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தாம் சுயமாக தமது வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை. பொதுவாக அடிப்படை மனித உரிமைகள் என்பவற்றை வாழ்வுரிமை எனக் கூறலாம். ‘இம்மென்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம்’ என்பதுபோல நெறிமுறையற்று தண்டிக்கப்பட கூடாது. வெளிப்படையான சட்டதிட்டங்கள் வழி நடத்தல் வேண்டும் என்பனவும் இதில் அடங்கும்.

இதில் பொதுவாக கருத்து வித்தியாசம் இருக்க முடியாதுதான். இதை இயற்றிவிட்டு கடவுள் கூட்டிய மக்கள் மன்றம் கலைந்து விடலாமா? இது மட்டும் போதுமா? சற்றே சிந்திப்பவருக்கு உடனடியாக இது போதாது என்பது விளங்கும். ஏன்? மக்கள் மன்றத்தில் உள்ள 20 பேரில் ஒருவர் குருடராக பிறக்கிறார் எனக் கொள்வோம். அவருக்கு கல்வி கற்கும் உரிமை வேண்டுமா? வாய்ப்பு வசதி வேண்டுமா? வேண்டும். கண்பார்வை அற்றவரால் தாமே தேர்வு எழுத முடியுமா? முடியாது. ஆகவே தேர்வு எழுத உதவியாளர் தேவை. தான் சொல்ல சொல்ல உதவியாளர் தேர்வு எழுத வேண்டும். ஆனால் முதல் விதிப்படி எல்லோரும் சமம். அனைவருக்கும் ஒரே சமமான விதி அல்லவா? கண்பார்வை அற்றவர்க்கு மட்டும் விதிவிலக்காக உதவியாளர் என்பது ‘‘சமத்துவம் பாராட்டல் இல்லை. ஆகவே குருடருக்கு உதவியாளர் என்பது சாத்தியமில்லை. இது ஏற்புடையதா?

விவேகமும் பகுத்தறிவும் உடையவர் எனில் கண்பார்வை அற்றவர் போன்று பாதிப்படைந்தவருக்கு, நலிந்தவருக்கு சாதகமான சில ஷரத்துகள் தேவை என்பதை உணர்வர். ஆகவே பகுத்தறிவோடு சிந்திப்பவர் கீழ்கண்ட இரண்டாம் விதியினை வகுப்பார் என்றார் ஜான்ரால்ஸ்:

சமூக பொருளாதாரக்கூறுகளில் அசமத்துவம் கீழ்கண்டவாறு போற்றப்பட வேண்டும்.

2(அ) அனைவருக்கும் நியாயமான சம வாய்ப்பு அளிக்கும் வகையில் பணி மற்றும் பதவி வாய்ப்பு அமையவேண்டும்.

2(ஆ) அசமத்துவத்தின் வழி பெறப்படும் பலன்கள் சமூகத்தில் பின்தங்கியவருக்கு அதிக பயன் அளிக்கும் முகமாக அமையவேண்டும்.

இந்த இரண்டாவது ஷரத்தின் இரண்டு கூறுகள் அடிப்படை உரிமைகள் குறித்து பேசவில்லை என்பது கவனிக்கத்தக்கது. எடுத்துக்காட்டாக குறிப்பிட்ட கூறில் பின்தங்கிய பிரிவினருக்கு (எ.கா. தீராநோய் உள்ளவர்கள்) ஆதரவாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை எதுவும் - உதாரணமாக எந்த ஒரு தனிநபரின் பேச்சுரிமை கருத்துரிமையை (முதல் ஷரத்து) மறுப்பதாக அமையக் கூடாது- அவ்வாறு அமைந்தால் அது அநீதி. நியாயமற்ற போக்கு என்பார் ஜான்ரால்ஸ். அதேசமயத்தில் சமூகம் வரி முதலியவை மூலம் தான் திரட்டிய நிதியில் அதிக அளவு (அசமத்துவமாக) தீராநோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க செலவழிக்கலாம். செலவழிக்க வேண்டும். அதுதான் நீதி. எல்லோருக்கும் சமம், என்று கூறி நோயே அற்றவருக்கும், தீராநோய் உடையோருக்கும் சமூகம் ஒரே அளவு மருத்துவ வசதி அளிக்கக் கூடாது. இது இரண்டாம் விதியை மீறும் செயல். அநீதி.

முதல் ஷரத்தில் கூறிய அடிப்படை உரிமைகளில் எவ்வித விதிவிலக்கும் சமரசமும் இல்லை. இதில் விதிவிலக்கு எதையும் ஜான்ரால்ஸ் பரிந்துரைக்கவில்லை. ஆனால் செல்வம், வசதி, வாய்ப்பு முதலிய கூறுகளில் நலிந்தோருக்கு ஏற்றம் அளிக்கும் வகையில், பிற்பட்ட நிலையில் உள்ளோர் வசதி பெறும் வகையில் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பதே ரால்ஸின் கருத்து. இதனை மேலும் விளக்குவோம்.

திடகாத்திரமான உடல்வாகு உடைய ஒருவர், கால் முடமான ஒருவர், இருவரையும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுங்கள், இருவருக்கும் சமத்துவமான வாய்ப்பு என கூறவியலுமா? இது நீதியா? பகுத்தறிவுசார் வாதமா? இங்கே முடமானவருக்கு சாதகமாக, அதிக - சமத்துவமற்ற முறையில் கூடுதலாக வாய்ப்பு அளிப்பதே சரி அல்லவா? வறுமை அண்டாத உயர்சாதி குடும்பத்தில் பிறந்த பிள்ளை, காலங்காலமாக ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தில் பிறந்த குழந்தை. இருவரும் ஒரே சமதளத்தில் போட்டியிடுங்கள், நுழைவு தேர்வு எழுதுங்கள், சமமான போட்டி என கூறவியலுமா?

விதிவிலக்கான சில குடும்பங்களைத் தவிர்த்து உயர்சாதி வகுப்பினர் பசியால் வாடுவதில்லை. இரண்டு வேலையேனும் உணவு கிட்டும். அவரது உறவினர் பலரும் பல்வேறு ஆதிக்க பணிகளில் பணிபுரிபவராக இருப்பர். காலங்காலமாக கல்வி அறிவு உள்ளதால் கல்வியில் உதவ வீட்டில் சற்றே அதிகமாக வாய்ப்பு இருக்கும். பெரும் செல்வம் சொத்து இல்லையென்றாலும் சமூக மூலதனம் (மேற்கூறிய வகைகளில்) உள்ள குடும்பமாகவே உயர்சாதிக் குடும்பங்கள் அமையும். இதற்கு எதிர்மாறாக தலித் குடும்பம் எனில் - விதிவிலக்கு தவிர- அவர்களது வாழ்வில் ஏதேனும் ஒரு முறையேனும் பசி பஞ்சம் தாக்கியிருக்கும். அடுத்தவேளை உணவுக்கு வழி என்ன என்று விழிபிதுங்கும் அக்கணங்களில் கல்வி கேள்வி எதுவும் முக்கியத்துவம் பெறாது. ஒடுக்கப்பட்ட சமூகம் என்பதால் உறவினர் யாரும் மதிப்பான பணியில் உள்ளவராக கூட இல்லாமல் இருக்கலாம். பெரும்பாலும் கல்விபெறும் முதல் தலைமுறையாக இருப்பர்.

இரு குடும்பத்து பிள்ளைகளும் சமமான பின்னணியிலிருந்து வரவில்லை- ஒருவர் திடகாத்திரமான வாகு உடையவர், மற்றவர் உடல் ஊனமுற்றோர் போன்று. ஆகவே சிறப்பு சலுகை (இது சலுகை அல்ல, ரால்ஸின் கருத்துப்படி உரிமை) பெறுவதும் தருவதும் நீதி தவறிய நியாயமற்ற செயல் அல்ல. மாறாக பாரபட்சம் காட்டுவதே சரியான நீதி. சரியான நியாயம். சமூகத்தின் அடித்தட்டில் உள்ளோர், நலிந்தோர் ஆகியோருக்கு சாதகமாக, அதிக வாய்ப்பு அளிக்கும்படியான பார்வையே நியாயமான நீதி என ரால்ஸ் கோட்பாடு சுட்டுகிறது. இது கவனிக்கத்தக்கது. ஏழையின் பேச்சு அம்பலமேறாவிட்டாலும் அதில்தான் நியாயம் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம். தொகுப்பாய் கூறினால், பிற்படுத்தபட்டோர் நலிந்தோர் பின்தங்கியோர் ஏற்றம் அடையும் வகையில் பாரபட்சம் காட்டுவதே நியாயமான நீதி என்பதே ஜான்ராவல்ஸ் வகுத்த கோட்பாடு.

பாரபட்சம் காட்டுவதின் கோட்பாடு

பாரபட்சம் காட்டுவது நியாயமான நீதி. ஆகவே பாரபட்சம் காட்டுவதில் எவ்வித தடையுமில்லை, என விதிவிலக்கின்றி பாரபட்சம் காட்டுவது சரியா? எதில், யாருக்கு பாரபட்சம் காட்டப்படவேண்டும், முன்னுரிமை தரப்பட வேண்டும்? தீரா நோய் கொண்டவர்களுக்கு அதிக மருத்துவ வசதி என்பத பாரபட்சம்தான். இம் முன்னுரிமை நியாயமானது. நோய்க்கு மருத்துவ வசதி தேவை. ஆகவே அவ்வாறு வழங்குதல் தவறல்ல. ஆனால் தீரா நோய் உள்ளவருக்கு ‘‘கல்வியில் முன்னுரிமை என்பது முறையாகாது. தீராநோயினால் ஏற்படும் ஊனத்திற்கு கல்வி மருந்து அல்ல. ஆகவே இது பொருந்தா முன்னுரிமை.

காலம் காலமாக கல்வி கேள்வியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு சமூகத்தால் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்ட தலித் சமூகத்தினருக்கு உயர்கல்வி வாய்ப்பு, முன்னுரிமை என்பது பொருத்தமானதா? இது பலர் எழுப்பும் கேள்வி.

உயர்கல்வி என்பது இன்றைய சமூகத்தில் ‘‘கல்வி’’ மட்டுமல்ல, சமூக ஏற்றம் பெற வழி. ஆகவே சமூக ஏற்றத்தில் சம வாய்ப்பு மறுக்கப்பட்ட தலித் பிரிவினருக்கு சம வாய்ப்பு அளிக்கும் வகையில் சமூக ஏற்றம் தரும் உயர்கல்வியில் முன்னுரிமை நியாயமானதே ஆகும்.

ஆனால் அதே சமயம் தலித்துகளுக்கு மட்டும் ‘‘மருத்துவ வசதி’’ என கூறுவது பொருத்தமான பாரபட்சம் - முன்னுரிமையாக இருக்காது.

நலிந்தோர் என்பதை தலித்துகள் மட்டும் எனவும் கொள்ளக் கூடாது. பெண்கள், உடல் ஊனமுற்றோர், வறுமையில் உள்ளோர், வேலை வாய்ப்பு இழந்த இளைஞர்கள், என ‘‘நலிந்த பிரிவினர்’’ பலர் உள்ளனர். எந்த அம்சத்தில் ‘‘நலிந்து’’ உள்ளனர், சமவாய்ப்பு பெற எந்த அம்சத்தில் முன்னுரிமை வழங்குதல் வேண்டும் என்பதை பகுத்து அறிந்து செயல்படுதலே முறைமை. நலிந்த பிரிவினர் என கூறும்போது இரண்டு விதமாக இது அமையும். உயிரியல் சார்ந்து பிறப்பால் - உடல் ஊனமுற்றோர், தீராநோய் உடையோர் போன்றது.

சில வரலாற்று காரணங்களினால் அமையும். இந்தியாவில் தலித்துகள், அமெரிக்காவில் கருப்பர், உலகம் முழுமையும் பெண்கள் என.

வரலாற்று காரணத்தால் நலிந்த பிரிவினராக அமைவோருக்கு சாதகமான முன்னுரிமை என்பதை வரலாற்றில் நடந்த தவற்றை திருத்துவதாக கருதகூடாது.

யூதர்கள் தாம் ஏசுவை கொன்றனர். ஆகவே அவர்கள் வரலாற்றில் தவறிழைத்தவர்கள் என ஐரோப்பாவிர் கருதுகின்றனர். இசுலாமிய அரசர்கள் மதவெறி பிடித்து பல கொடுமைகள் செய்தனர். ஆகவே இசுலாமியர்களை அடக்கு, மசூதிகளை இடி என இந்து வெறியர்கள் கூறுகின்றனர். இதுபோல எவ்வளவோ வரலாற்று தவறுகளுக்காக இன்றைய சந்ததியினரை பழி சொல்லும் போக்கு உள்ளது.

வரலாற்றில் நடந்த தவறுகளை சரிசெய்வது அல்ல, வரலாற்றால் நடந்த தவறுகளை சரி செய்வதுதான் சரி.

யூதர்கள் ஏசு கிருஸ்துவை கொன்றிருக்கலாம். ஆனால் இன்றைய யூதர்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. ஆகவே யூத எதிர்ப்பு என்பது பகுத்தறிவானதல்ல. அதுபோல. கருப்பர்களை வெள்ளையர்கள் அடிமைப்படுத்தியது மெய்தான். ஆனால் இன்றைய வெள்ளையர்களுக்கும் அதற்கும் நேரடி சம்பந்தமில்லை.

ஆனால், வரலாற்றில் நடந்த அந்த பிழையின் காரணமாக இன்றளவும் கருப்பர்களின் நிலை தாழ்ந்து உள்ளது. இன்றைய தாழ்ந்த நிலையை உயர்த்துவதே முன்னுரிமை அளிப்பதன் இலக்கு. வெள்ளையர்களை பழிவாங்குவதற்காக முன்னுரிமை அல்ல என்பதை விளக்குதல் வேண்டும்.

வரலாற்றில் ஏற்பட்ட இழிநிலையை (தலித்துகள், பெண்கள் முதலியோர்) சரி செய்வது என்பது அன்றைய அடக்கு முறையாளர்களின் இன்றைய சந்ததியினரை பழிவாங்கும் செயல் அல்ல. மாறாக வரலாற்றால் ஏற்பட்டுள்ள அசமத்துவத்தை போக்க எடுக்கும் முயற்சியே ஆகும். ஆகவே நியாயமான பாரபட்சம் என்பது பழிவாங்கும் நடவடிக்கையாக அல்லாமல், வரலாற்றால் ஏற்பட்ட தவறுகளை திருத்தும் போக்காக அமைதல் வேண்டும்.

ரால்ஸின் தாக்கம்

1960களில் சோவியத் யூனியன் ஓங்கி உயர்ந்தது. சமத்துவம், சமவாய்ப்பு, நலிந்தோர் உயர்வு, தொழிலாளர் நலம் முதலியவை புறந்தள்ள முடியாதவையாயின. இச்சூழலில் சமூக ஜனநாயக அரசியல் தத்துவத்திற்கு கோட்பாடு ரீதியாக ஆதரவு தந்தது ரால்ஸின் கோட்பாடு. மக்கள் நல அரசுகள் (Welfare State) என வடக்கு ஐரோப்பாவில் மலர்ந்த அரசுகள் ராவல்ஸின் கோட்பாடுகள் கொள்கைகளை பின்பற்றின. அதிக வருமானமுடையோரிடமிருந்து அதிக விகிதத்தில் வரி. அரசு சேகரிக்கும் வரியில் பெரும் விகிதம் நலிந்தோர் உதவி பெறும் வகையில் செலவு செய்தல் என மக்கள் நல அரசுகளின் போக்கு அமைந்தது. உள்ளபடியே இந்த அரசுகள் எல்லா சமயத்திலும் எல்லா சூழலிலும் இந்த கோட்பாட்டை பின்பற்றின என கூறமுடியாது. அவ்வப்போது ஆளும் வர்க்கத்தின் மூர்க்கமான நிர்ப்பந்தத்தினால் திசை மாறியதுண்டு. என்றாலும் பொது சுகாதாரம், எல்லோருக்கும் சமமான தரமான கல்வி, பொதுநலம் முதலியவை பொதுவாக போற்றப்பட்டன.

பால்வேறுபாடு, இன ஒடுக்கு முறை முதலிய தாக்கத்தினால் பின்தங்கிய பிரிவினருக்கு சாதகமாக பாரபட்சமான சலுகை என்ற போக்கும் எழுந்தது. அனைவருக்கும் சம வாய்ப்பு, நியாயமான சம வாய்ப்பு என்ற பெயர்களில் அறியப்பட்ட இக்கொள்கை (நமது இடஒதுக்கீடு போன்றது) அமெரிக்காவில் கூட நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. நேரடியாக ரால்ஸின் கோட்பாட்டின் தாக்கம் என இவை எல்லாவற்றையும் கூறவியலாது என்றாலும் இத்தகு பொதுக் கொள்கைகள் (Public Policy) சுட்டும் கோட்பாடு ராவல்ஸின் கோட்பாட்டுடன் ஒத்து வருவது கண்கூடு. குறிப்பாக,

*அதிக வருமானமுடையவர்களிடமிருந்து அதிக விகிதத்தில் வரி வசூலிப்பது.

*அரசின் நிதியை நலிந்தோருக்கு அதிகமாகவும், வலியோருக்கு குறைவான விகிதத்திலும் செலவழித்தல்.

*கல்வி சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகள்/ உரிமைகள், பொது வினியோகம்.

*வேலையற்றோர் நிவாரணம், பெரும்நோய் உள்ளவருக்கு சலுகை சிகிச்சை- என வாடுவோருக்கு பாரபட்சமான முன்னுரிமை வழங்குவது.

*பால், இனம், சாதி முதலியவற்றால் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பாரபட்சமான முன்னுரிமை என பல பொதுக் கொள்கைகளின் பின்புலத்தில் உள்ள அரசியல் தத்துவப் பார்வை ரால்ஸின் பார்வையே ஆகும் எனலாம்.

சமத்துவம் சாத்தியமா - ரால்ஸ்க்கு சவால்.

‘சமத்துவம் சாத்தியமா? சாத்தியமே இல்லை. குறிப்பாக ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட்டு, தனிமனிதரின் உரிமைகள் போற்றப்பட்டால் சமத்துவம் சாத்தியமே இல்லை. எனவே ரால்ஸ் கூறுவதுபோல மறுபங்கு வைத்து சமத்துவ சமுதாயம் அமைத்தாலும், ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட்டால் அச்சமூகம் அசமத்துவமாகும் என்று எதிர்வாதமிட்டார் நார்ஸிக் எனும் ஆய்வாளர்.

1980களில் நவீன வலதுசாரி கருத்தின் பிரதிபலிப்பாக உருவான நார்ஸிக்கின் கருத்து ரால்ஸின் கோட்பாடுகளுக்கு சவால் விடுத்தது.

அரசு, சமூக நீதி என்ற பெயரில் தலையிட்டு மறுபங்கீடு செய்து ஜனநாயகமற்ற நிர்ப்பந்த செயல் என சாடிய இவரது கோட்பாடு சந்தையை முன்நிறுத்தியது. சந்தை பொருளாதாரம் அதுவும் கட்டுப்பாடுகள் இல்லாத சுதந்திர சந்தை (Free Market) தான் சமூக பலாபலன்களை தீர்மானிக்க வேண்டும். இதில் செல்வம் குவிந்தாலும் வறுமை பெருகினாலும் அது நியாயமே, நீதியே ஆகும் என வலியுறுத்தியது. இக்கருத்தின் தாக்கத்தில் வலதுசாரி கருத்து புது மவுசு பெற்றது.

சமத்துவம் சாத்தியமில்லை என நார்ஸிக் கூற காரணம் என்ன? உள்ளபடியே ‘சுதந்திரமான’ சமுதாயத்தில் சமத்துவம் சாத்தியமில்லை என்பதே நார்ஸிக்கின் வாதம். நிர்ப்பந்தமாக கட்டாயப்படுத்தி சமத்துவம் ஏற்படுத்தி நிலைக்க வைக்க முடியும். ஆனால் சுதந்திரமான சமூகச் சூழலில் துவங்கும் சமத்துவம் காலப்போக்கில் நியாயமான வழிகளிலே அசமத்துவமாக மாறும் என தனது வாதத்தை முன்வைத்தார் நார்ஸிக்.

வாதத்திற்காக முற்றிலும் சமத்துவ சமுதாயம் ஏற்பட்டுவிட்டதாக கொள்வோம். அதில் 20 பேர் (மட்டுமே) உள்ளதாக கொள்வோம். 20 பேரில் நான் ஒருவன், நீங்கள் ஒருவர், அது மட்டுமல்ல உலக அழகி ஐஸ்வர்யாராய் ஒருவர் என வாதத்திற்காக கொள்வோம்.

அந்த சமூகத்தின் மொத்த மதிப்பு - சொத்து 20 ஆயிரம் ரூபாய் என கொள்வோம். சமத்துவ சமூகம் என்பதால் ஆளுக்கு 1000 வீதம் 20 பேர் கொண்ட சமூகத்தில் 20000 உள்ளது. சரிதானே.

ஒரு நாள் உலக அழகி ஐஸ்வர்யாராய் தான் ஒரு நடன நிகழ்சி நடத்தப்போவதாகவும், அதற்கு நுழைவுச்சீட்டு ரூ.100 என்று கூறுவதாகவும் கொள்வோம். அதேநாள் அதேசமயம் நான் ‘நீதியின் கோட்பாடு’ என்ற உரை நிகழ்த்தப் போவதாகவும் அதற்கு நுழைவுச்சீட்டு ரூ.10 என விளம்பரப்படுத்துவதாகவும் (தற்செயலாக) கருதவும்.

ஐஸ்வர்யாராய், நான் ஆகிய இருவர் தவிர்த்து 18 பேர் உள்ளனர். இதில் எவ்வளவு பேர் ஐஸ் நடனத்திற்கு செல்வர்? எவ்வளவு பேர் எனது கூட்டத்திற்கு வருவார்கள்? பேச்சுக்காக 10 பேர் ஐஸ் நடனத்திற்கும், 8 பேர் எனது கூட்டத்திற்கும் வருவதாக கொள்வோம். நடன நிகழ்சியும் கூட்டமும் முடிந்த பின் நிலை என்ன? 10 பேர் கொடுத்த ரூ.100 வீதம் 1000 சேர்ந்து ஐஸ்வர்யாராய் 2000 கொண்ட மிக பணக்காரியாகவும், 8 பேர் கொடுத்த 80 கொண்டு 1080 கொண்ட நான் நடுத்தர பணக்காரனாகவும், 10 பேர் 100 இழந்து 900 கொண்ட ‘ஏழைகளாகவும்’, 8 பேர் 10ரூ. இழந்து ஆளுக்கு 990 கொண்ட நடுத்தர வர்க்கமாகவும் இருப்பர். அசமத்துவம் ஏற்பட்டு விட்டது இல்லையா?

இதில் அநியாயம் எங்கே உள்ளது? யாருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது? நியாயமாக, நீதிப்பூர்வமாக பணக்காரன் ஏழை என்ற வித்தியாசம் எழுந்துவிட்டது அல்லவா?

20 பேர் கொண்ட அந்த கற்பனை சமூகத்தில் எல்லோரும் ‘ஐஸ்’ போன்று அழகும் நடனத்திறனும் கொண்டிருந்தால் எல்லோரும் அரசியல் தத்துவம் போன்ற துறைகளில் சம நிபுணத்துவம் பெற்றிருந்தால் யாரும் ‘ஐஸ்’ நடனத்திற்கு போக மாட்டார்கள், எனது கருத்துரைக்கு வர மாட்டார்கள் - காசு கொடுத்து.

ஐந்து விரலும் ஒன்றுபோல் இல்லையே, தனிநபர்களின் ‘திறன்’, ‘திறமை’ வேறுபட்டு அமையுமானால் இயல்பில் சமூகத்தில் அவரவரிடம் குவியும் சொத்தும் (நீதிப்பூர்வமாக நியாயமாக பெறப்பட்ட சொத்து) வேறுபட்டே அமையும். சட்டம் போட்டு கட்டாயப்படுத்தி சமத்துவத்தை நிலைநாட்டலாம், நடனத்திற்கு நுழைவு கட்டணம் விதிக்கக்கூடாது, கருத்துரைக்கு நுழைவுக்கட்டணம் கூடாது - கல்வியை வியாபாரமாக்காதே என வலிந்து மூர்க்கமாக கட்டாயப்படுத்தி சட்டம் போட்டு தடுக்கலாம்தான். ஆனால் இவை தனிமனித உரிமைகளை மீறிய செயல், நிர்ப்பந்த செயல்கள். ஆகவே ஜனநாயகம் மையமாகவும், தனிமனித உரிமைகள் முதன்மை படுத்தப்பட்டும் உள்ள சமூகங்கள் சமத்துவத்தை குறிக்கோளாக கொள்ளக்கூடாது என நார்ஸிக் வாதிட்டார்.

அதுமட்டுமல்ல, அரசு வரிவிதிப்பது என்பதே ‘கொள்ளை’ என்பது நார்ஸிக் வாதத்தின் விளைவு. எடுத்துக்காட்டாக இந்தியாவில் வருமான வரி விகிதம் என்பது வருமானம் கூட கூட விகிதம் அதிகரிக்கும் படி அமைந்துள்ளது. ஆண்டு வருமானம் 50000 க்கும் குறைவாக உள்ளவர்களுக்கு வருமானவரி இல்லை. 50001லிருந்து 60000 வரை 10% (கூடுதல் தொகைக்கு), 60001 முதல் 150000 வரை 20% 150001 முதல் 30% . இதுதான் வருமானவரி விகிதம்.

படிப்படியாக வருமானவரி விகிதம் கூடுதலாக அமைவதை காண்க. இவ்வாறு திரட்டப்பட்ட வருமானவரி அரசாங்கத்தால் பொதுபணிகளுக்காக, போலீஸ், ராணுவம், போக்குவரத்து என பொது சேவைக்காக செலவழிக்கப்படுகிறது. மெய்யாக அரசு செலவிடும் தொகையினால் தனிநபர் பயன்பெறுதல் என்பது வேறுபடுகிறது. சிலர் அதிகமாகவும், சிலர் குறைவாகவும் பயன்பெறுகின்றனர். வாதத்திற்கு அனைவரும் சமமாக பயன்பெறுவதாக கொள்வோம். அதன் பொருள் என்ன? செல்வம் அதிகம் ஈட்டுவபர்கள் அதிக விகிதத்தில் வரி செலுத்தினால் செல்வம் குறைவாக ஈட்டுபவர்கள் அதே அரசு சேவைகளை குறைவான விகித வரி அளித்து பெருகின்றனர். அதுவும் 50000க்கும் குறைவான வருமானமுடையோர் எவ்வித வரியும் இன்றி அரசு சேவை பெறுகின்றனர். இது கடைத்தேங்காயை எடுத்து பிள்ளையாருக்கு உடைத்த கதையாக இருக்கிறது என்று நார்ஸிக் விளக்கம் அளித்தார். அதிக பணம் ஈட்டுபவர்கள் நியாயமான முறையில் சட்டப்பூர்வமாக பணம் சம்பாதிக்கும் போது அவர்கள் மீது ஏன் அதிக வருமானவரி விகிதம்? இது ஒரு வகையில் நிர்ப்பந்தம், கட்டாயப்படுத்துதல், அரசு பாரபட்சமாக நடத்தல், உரிமை மீறல் என நார்ஸிக் கூறினார்.

மக்கள் நல அரசுகள் வேறுபட்ட வருமான வரிவிகிதம் மட்டுமல்ல, அரசு செலவிலும் வேறுபாடு காண்பித்தன. நலிந்தோருக்கு பாரபட்சமாக அதிக செலவு செய்வதற்காக, அரசானது நியாயமான முறையில் செல்வம் ஈட்டியவரிடமிருந்து அதிகவரியை பிடுங்கி ஏழைகளுக்கு கொடுக்கிறது, இது ஒரு வகையில் கொள்ளை என நார்ஸிக் வாதாடினார்.

வறுமையில் உழல்வோர் குறித்து கவலை தெரிவித்த அவர் தனது நூலில், பெரும் செல்வமுடையவர்கள், மற்றும் அதிக சம்பளம் ஈட்டுபவர்கள் தாமே மனமுவந்து உதவிக்கரம் நீட்டவேண்டும், தான தருமம் செய்தல் வேண்டும், மகமை செய்யவேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். ஆனால் இவை நிர்பந்தத்தினால் அல்ல, அவரவர் தமது இஷ்டப்படி தானே தருமம் செய்தல் வேண்டும்- கட்டாய வேறுபட்ட வரி விகிதம் என்பது நிர்ப்பந்த தானதருமம்- அடித்து பறித்தல், வழிப்பறி என சாடினார் அவர்.

சிறு தொழில்களுக்கு சலுகை அளித்தல், அரசு பணத்தில் நலிந்தோருக்கு சுகாதாரம், கல்வி முதலியவை பாரபட்சமாக அளித்தல் என பல நடைமுறைகள் நீதியற்றது. இவை நிர்ப்பந்தமாக அரசு செயல்படுவது, இவை ஜனநாயக பெருமைக்கு விரோதமானது எனவும் கூறினார்.

சமகால அரசியல் சிந்தனைகளின் ஊற்று நார்ஸிக். அரசு விலகி சந்தை வருவது, அரசு பொதுப்பணிகளிலிருந்து விலகுவது, சலுகைகள் மானியங்களை வெட்டிக் குறைப்பது என பல அரசியல் கொள்கைகள் நார்ஸிக்கின் பார்வையோடு ஒத்தவை. அமெரிக்காவின் அரசியல் நடைமுறை மட்டுமல்ல பலநாடுகளின் அரசியல் பொருளாதார சித்தாந்தங்களிலும் இக்கொள்கையின் தாக்கம் இன்று வலுபெற்று வருவது கண்கூடு.

இரு பார்வைகளின் மோதல்

முன்பு நாம் கண்டபோது ‘சமத்துவம்’ என இட ஒதுக்கீட்டை ஆதரிப்போரும் எதிர்ப்போரும் பேசுவது உள்ளபடியே இருவேறு பார்வையின் விளைவே ஆகும்.

நார்ஸிக்கின் பார்வையின் வழி இட ஒதுக்கீட்டை தனது சுதந்திரத்தில் தலையீடு எனக் கருதுபவர்கள் ‘சமத்துவம்’ என கூறும்போது அரசாங்கம் சும்மா இருக்க வேண்டும். பல பிரிவினர் இருந்தாலும் யாருக்கும் பாரபட்சம் காட்டக்கூடாது என்கிற சமத்துவத்தை பேசுகின்றனர்.

ரால்ஸின் பார்வையின் வழி இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள் நலிந்தோர் சார்பாக காட்டப்படும் பாரபட்சம், நியாயமான நீதி - என கருதுவோர் ஆவர். சமத்துவம் என்பதை மெய்யான சம வாய்ப்பு என்று வாதிடுபவர்கள். நார்ஸிக்கை பொருத்தவரை சுதந்திரங்கள், உரிமைகள் முதலியவை ‘தலையீடு கூடாது’ என்பதை சுட்டுவதாக அமைகிறது. எனக்கு இது கிடைக்க வேண்டும், எனக்கு இந்த வாய்ப்பு இருக்க வேண்டும் என்று கூறாமல் நார்ஸிகின் தத்துவத்தில் என்மீது இந்த தலையீடு இருக்கக்கூடாது, அந்த கட்டுபாடு இருக்கக்கூடாது என கூறுகிறது என்பதை காண்க.

ஆனால் ரால்ஸின் பார்வையில் உரிமை என்பது அனைவருக்கும் பொதுவாக கிடைக்க வேண்டியது. அனைவருக்கும் சம வாய்ப்பாக இருக்க வேண்டியது என அமைந்துள்ளது என்பதையும் கூர்ந்து நோக்கவேண்டும்.

உரிமை என்பதை யாருடைய தலையீடும் குறுக்கீடும் இல்லாமல் இருப்பது எனக் கொண்டால் அது நார்ஸிக் வழி. உரிமை என்பது சமூகத்தின் பயன்களை சமமாக பெறுவது, வாய்ப்புகளுக்கு சம உரிமை எனக் கொண்டால் ரால்ஸ் வழி.

‘ஈவோர் இல்லை ஏனெனில் இறப்போர் இல்லை’ என்ற நிலை உருவாக வேண்டும் என்பது இடதுசாரி வாதம்.

ஈவோரும் இறப்போரும் இருந்துவிட்டுப் போகட்டும், ஐந்து விரலும் ஒன்றா என்பது வலதுசாரி வாதம். இதில் எது நீதி? எது நியாயம்?

சமத்துவம் என்பது என்ன?

எல்லோரும் ஒரே அளவு செல்வம் வைத்திருப்பது, எல்லோரும் ஒரே விதமான சட்டை அணிவது, எல்லோரும் ஒரே விதமான உணவு உட்கொள்வது, படுப்பது, தூங்குவது என்பதல்ல சமத்துவம். நார்ஸிக் கற்பித சோதனையில் எல்லோரும் ஒரே அளவில் பணம் வைத்திருப்பதால் மட்டும் அது சமத்துவ சமுதாயமாகிவிடாது.

எடுத்துக்காட்டாக, பொதுவாக வீடுகளில் கணவன் மனைவி இருவரும் ஒரே உணவைதான் உண்கின்றனர். ஓரளவுக்கு ஒரே தரமான உடை, இருப்பிடம் உள்ளது. ஆனால் இங்கு சமத்துவம் ஏற்பட்டுவிட்டதா? ஆணாதிக்க ஒடுக்கு முறை இல்லையா? சமத்துவம் என்பது சம வாய்ப்பு கொண்டதாக அமைந்தாலே மெய்யான சமத்துவம். சமவாய்ப்பு என்பது நலிந்தோருக்கு பாரபட்சம் காட்டுவதாலேயே எட்ட முடியும். எனவே நார்ஸிக்கின் வாதம் ஏற்புடையது அல்ல என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

நார்ஸிக் கருதுவதுபோல உரிமைகளில் தலையீடு கூடாது என்பதை அப்படியே வேதவாக்காக கொள்ளமுடியுமா? சுதந்திரம், தன் உரிமை என்பது குறித்தும் விமர்சனங்கள் உண்டு. ஊரே தீப்பற்றி எரிகிறது. ஊரில் ஒருவரின் வீட்டு கிணற்றில்தான் நீர் உள்ளது. அந்நபர் தன் உரிமை, தன் இஷ்டம், எனக்கு சுய விருப்பம் இருந்தால்தான் நீர் இறைக்க அனுமதிப்பேன். ஊர் எரிந்தால் எனக்கு என்ன? என்று இருந்துவிட முடியுமா? குறிப்பாக கவனியுங்கள்- ஒருவரின் தன் உரிமையை - அதுவும் சொத்து கொண்டாடும் உரிமையை- சற்றே கட்டுப்பாடு செய்து பலரின் நன்மைக்காக கட்டாயமாக நீர் இறைத்தல் நீதியன்று எனக் கூறமுடியுமா? ஆகவே உள்ளபடியே எல்லா உரிமைகளும் சிற்சில சந்தர்ப்பங்களில் கட்டுப்படுத்தப்பட்டு வரைமுறைக்குட்பட்டுதான் அமையும். அதுவும் சில உரிமைகள் அவ்வளவு போற்றுதலுக்குரியவை அல்ல. மனிதரின் வாழ்வுரிமை, தன்மான உரிமை, கருத்துரிமை போன்று அதே தட்டில் சொத்துரிமையை வைக்க இயலாது. சில உரிமைகள் உயர்வானவை. சில அவ்வளவு புனிதமாக கருதப்பட வேண்டியவை அல்ல. இதுவும் நார்ஸிக் கோட்பாட்டில் உள்ள குறைபாடு. எல்லா உரிமைகளையும் ‘உரிமைகள்’ என்ற புனித வார்தையால் ஒன்றாக சமமாக பாவித்து கோட்பாடு வகுத்துள்ளார். இது பிழை.
எல்லா உரிமைகளும் சமமானவையா? எல்லா உரிமையும் ஒருபோல கருதவேண்டுமா? வேண்டுமென்றே கொலை செய்யக்கூடாது, சித்திரவதைக்கு ஆளாக்கக் கூடாது என்பது வலுவான உரிமைகள். இவ்வுரிமைகளை மீறி சில பொதுப்பயன்களை அடைவது என்பதற்கு வலுவான எல்லை இருத்தல் வேண்டும். ஆனால் செயல்புரிவதற்கான உரிமை, சொத்தை பயன்படுத்துவதற்கான உரிமை, எவ்விதமான ஒப்பந்தங்களை இடலாம் என்பது போன்ற உரிமைகள் வலுவான உரிமைகள் அல்ல. பொதுநலன் கருதி இவ்வுரிமைகள் வரையறுக்கப்படுவதும், குறைக்கப்படுவதும் தவறு என கருத இயலாது. முதலாளித்துவ சமூகத்தில் ஒடுக்குமுறை இன்றி தன் சுயவிருப்பத்தின் வழி நடக்கும் பண்டமாற்றம் கூட நியாயமானது அல்ல. எடுத்துக்காட்டாக, ஆந்திர பிரதேசத்தில் சில பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலத்தை விற்பனை செய்கிறார்கள். யாரும் அவர்களை கட்டாயப்படுத்தவில்லை. நிலம் விற்கவில்லை என்றால் தீங்கு வரும் என பயமுறுத்துவது இல்லை. தங்களது சுய விருப்பத்தின் பேரிலேயே விற்பனை செய்கின்றனர்.

இதில் என்ன பிழை, இதில் என்ன அநியாயம்? ஏன் நிலத்தை விற்கிறார்கள்? கடன் தொல்லை, கடன் வாங்கி பயிர் செய்து, பயிர்த்தொழில் மோசமாகி வேறு போக்கின்றி நிலத்தை விற்கும் நிலமைக்கு தள்ளப்படுகின்றனர். சுய விருப்பத்தின் பேரில், எவ்வித ஒடுக்குமுறையும் இன்றி விற்பனை செய்தாலும் இதில் சுரண்டல் இல்லை என கூற இயலுமா?

முதலாளித்துவ அமைப்பில் எல்லா செயல்களிலும் சுரண்டல் பொதிந்துள்ளது. நேரடியாக, மூர்க்கமாக, மறைமுகமாக, பூடகமாக என பல வடிவில் சுரண்டல் உள்ளது. சுரண்டலின் வழி உள்ளபடியே ஒரு பகுதியினருக்கு மெய்யான சம வாய்ப்பு ஏற்படுவதில்லை. ஆகவே சுரண்டல் ஒழிப்பு, சுரண்டலை தோற்றுவிக்கும் அமைப்பில் மாற்றம்தான் மெய்யான சமத்துவம்.

சொத்தில் சமத்துவம் அல்ல மெய்யான பொதுஉடமை. உழைப்பு கருவிகள் பொது உடமையாக இருக்க வேண்டும் என்பதுதான் பொது உடைமையாளர் கருத்து என்பதை கவனிக்க வேண்டும். முன்பு கூறிய ‘ஐஸ்’ எடுத்துக்காட்டை பார்ப்போம். ‘ஐஸ்’ சற்றே பணம் அதிகமாக உடையவராக இருப்பதினால் யாருக்கு என்ன தீங்கு? ஆனால் ‘ஐஸ்’ தான் திரட்டிய பணத்தில் தொழிற்சாலை ஏற்படுத்தி அதில் ஏனையோரை வேலைக்கு அமர்த்தி, சுரண்டுகிறார் எனக் கொள்வோம். இங்கு நிலமையே வேறு. வேலைக்கு சேர்ந்துள்ள தொழிலாளர்கள் முதலாளியின் தயவில் என்று ஆகிவிடும்போது அவர்களது உரிமைகள் நடைமுறை உரிமைகளாக இல்லாமல் ஏட்டளவிலான உரிமைகளாக மாறிவிடும் அல்லவா? பணம், செல்வத்தில் வேறுபாடுகள் களைவது அல்ல முக்கியம். உழைப்பு கருவிகள் பொது சொத்தாக அமைய வேண்டும் என்பதுதான்.

நார்ஸிக்கின் வாதம் பொருட் செல்வத்தை மட்டுமே முன்னிறுத்துகிறது. மனித வாழ்கையின் இலக்கு பொருட்செல்வம் சேகரிப்பது மட்டுமா? மகிழ்சியும் தன்நிறைவும் மனித வாழ்கையின் குறிக்கோள் என கொண்டால் சமத்துவத்தை புதுவிதமாக விளங்கிக் கொள்ளலாம்.

சமத்துவம் என்பது எல்லோரிடமும் சம பொருட்செல்வம் இருப்பதா? பொருட்செல்வம்= மகிழ்ச்சி என கொள்ள இயலாது. அவரவருக்கென்று வெவ்வேறு விருப்பங்கள் அமையலாம். பொருட்செல்வத்தை தவிர வேறு ‘‘ஊதியங்கள்’’ தேவைப்படலாம். ஒரு சிலர் தமது வாழ்க்கை வசதி உயரவேண்டும் என கருதலாம். வேறு சிலரோ தமக்கு ஓய்வும் அமைதியும் வேண்டும் என விரும்பலாம். பாராட்டு, மனமகிழ்ச்சி என பல்வேறு விருப்பங்கள் அமையமுடியும். ஆகவே சமத்துவம் என்பதை வெறும் பொருட்செல்வம், சமமாக உடைமையாக இருத்தல் என கொள்வது முறையாகாது. சமமான ஒப்பு தருதல் என்பது எல்லோருக்கும் ஒரே அளவு பொருட் செல்வத்தை ஊதியமாக தருதல் என்பது மட்டுமல்ல, அவரவர் விருப்பத்திற்கேற்ப ஓய்வு, மனமகிழ்சி, பாராட்டு என பல வேறுவகை ஊதியங்களும் அளிக்கப்படலாம் அல்லவா?

நார்ஸிகின் கோட்பாடு வெறும் பொருட்செல்வத்தை மட்டும் முதன்மைப்படுத்துவது பிழை எனும் அதேசமயத்தில் ரால்ஸின் கோட்பாட்டிலும் இது காணக்கிடைக்கிறது என்பதுதான் குறை.

திறமைகள் வேறுபட்டு தான் அமையும். ஏன் குழந்தைகள், முதியோர், உடல் ஊனமுற்றோர் ஆகியோரால் வேலை செய்யக்கூட முடியாது. சிலர் மளமளவென வேலை செய்வர், சிலர் சிந்தனைப்பூர்வமாக, சிலர் மிக நேர்த்தியாக என பல வகைகளில் பணிபுரிபவர்களாகத்தான் மனிதர் அமைவர். மனிதர்களில் திறன்களில் மட்டுமல்ல இலக்கிலும் வேறுபாடு இருக்கத்தான் செய்யும். சிலருக்கு வாழ்கை வசதியில் பெரும் விருப்பம் இருக்கும். டி.வி. பெரிய டி.வி. மின்அடுப்பு, என ஆசை இருக்கலாம். சிலர் ‘அப்பாடா’ என இருக்க வேண்டும் என நினைக்கலாம். சிலர் ஊர் சுற்றவேண்டும் என கருதலாம். இவ்வாறு தமக்கு என்ன வேண்டும் என்பதில் வேறுபாடு அமையும். இவை எல்லாம் பொருட் செல்வம் என சுருக்கி விட முடியாது. அவரவர் விருப்பம் ஒன்றுபோல அமையாது. ‘திறமைக்கேற்ற உழைப்பு’, ‘தேவைக்கேற்ற ஊதியம்’ என்பதுவே மெய்யான சமத்துவம். இதுவே நீதி, இதுவே நியாயம்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com