Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2006
தலித்துகளிடையே ஏகாதிபத்திய-எதிர்ப்பு உணர்வு

ஆனந்த் டெல்டும்ப்டே / தமிழாக்கம்: எஸ்.வி.ராஜதுரை

முனைவர் ஆனந்த் டெல்டும்ப்டே (Dr.Anand Teltumbde), இந்தியாவிலுள்ள தலைசிறந்த தலித் அறிவாளிகளிலொருவர். அறிவியல், தொழில்நுட்பம், நிர்வாகவியல், பொருளாதாரம், மனித உரிமைகள், தலித் விடுதலை, தலித் இலக்கியம், மார்க்ஸியம், அம்பேத்கரியம் முதலியவற்றில் ஆழ்ந்த புலமையுடையவர். மனித உரிமைச் செயல்வீரர். ஆங்கிலத்திலும் மராத்தியிலும் பல்வேறு நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளவர். இந்தியாவில் ஏகாதிபத்திய-எதிர்ப்பு இயக்கமும் தலித் இயக்கமும் ஒருமுகப்பட வேண்டும் என விரும்பும் இவர், அதற்கான தடைகள், சாத்தியப்பாடுகள் பற்றிய ஆழமான விவாதத்தைத் தூண்டுகிற Anti Imperialism and Annibilation என்னும் நூலை எழுதியுள்ளார். சென்ற ஆண்டில் வெளியிடப்பட்ட இந்த நூலின் இரண்டாவது பதிப்பும் விரைவில் வெளிவரவிருக்கிறது. மராத்தி, இந்தி, பஞ்சாபி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டு வரும் இந்த நூலின் தமிழாக்கம் ‘விடியல் - புத்தா’ பதிப்பகத்தாரால் இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படவுள்ளது. இந்த நூலின் ஒரு பகுதியின் தமிழாக்கத்தை ‘புது விசை’யில் வெளியிட இசைவுதந்த மொழிபெயர்ப்பாளர் எஸ்.வி.ராஜதுரைக்கும் ‘விடியல்-புத்தா’ பதிப்பகத்தாருக்கும் எமது நன்றி-ஆசிரியர், புது விசை.

அவர்கள் முதலில் கம்யூனிஸ்டுகளைப் பிடிக்க வந்தார்கள்
ஆனால் நான் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல
எனவே நான் ஏதும் பேசவில்லை

பிறகு அவர்கள் சோசலிஸ்டுகளையும்
தொழிற்சங்கவாதிகளையும் பிடிக்க வந்தார்கள்
ஆனால் நானோ ஒரு சோசலிஸ்டோ,தொழிற்சங்கவாதியோ அல்ல
எனவே நான் ஏதும் பேசவில்லை

பின்னர் அவர்களை யூதர்களைப் பிடிக்க வந்தார்கள்
ஆனால் நானோ ஒரு யூதன் அல்ல
எனவே நான் ஏதும் பேசவில்லை

கடைசியில் அவர்கள் என்னைப் பிடிக்க வந்தனர்
அப்போது எனக்காகப் பேச யாருமே இருக்கவில்லை

-புரொடெஸ்டெண்ட் பாதிரியார் மார்டின் நியெமொல்லெர்
(Pastor Martin Niemoeller)

ஏகாதிபத்திய-எதிர்ப்பு என்பது குறிப்பாக இடதுசாரிகளுடன் மட்டுமே சம்பந்தப்பட்டிருக்கிறது. எனவே கம்யூனிஸ்ட் அல்லாத வட்டாரங்கள் எதிலும் இக்கருத்து வழக்கிலிருப்பதில்லை. தலித்துகளில் பெரும்பான்மையினர் இந்த வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் தாம். நவதாராளவாத உலகமயமாக்கல் மீது தலித்துகளுக்குப் பெரும் அதிருப்தி இருக்கிறது என்றாலும், அதை அவர்கள் ஏகாதிபத்தியம் எனக் குறிப்பிடுவதில்லை. அதற்குக் காரணம், உலகமயாக்கல் என்றால் என்ன எனபதை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதல்ல: மாறாக, ஏகாதிபத்தியம் என்றால் என்ன என்பதை அவர்கள் அறிந்து கொள்ளாமல் இருப்பதுதான். தங்களது வாழ்வாதரங்களின்மீது உலகமயமாக்கல் ஏற்படுத்தும் தீய விளைவுகளைக் குறித்து அவர்கள் சரியாகவே கவலைப்படுகின்றனர்; ஆனால் மற்ற விஷயங்களெல்லாம் அவர்களது சிந்தனை எல்லைக்கு வெளியேதான் இருக்கின்றன. பெரும் பாலான தலித்துகள் அன்றாட வாழ்க்கையில் மிக அடிப்படையான பிரச்சனைகளுனுடனேயே இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை ஏகாதிபத்தியம் என்பது ஒரு விநோதாமான, அருவமான கருத்தாகவே இருக்கிறது. உண்மையில் கம்யூனிஸ்டுகள் பயன்படுத்தும் அருஞ்சொற்களில் பெரும்பாலானவை தலித்துகளைப் பொருத்தவரை அருவமான கருத்துகளே. அவர்கள் மேல்சாதியினரின் ஒடுக்குமுறைக்காளாகும் போது, அவர்கள் வர்க்கப் போராட்டத்தை நடத்தவேண்டும் எனக் கம்யூனிஸ்டுகள் சொல்கின்றனர்: தலித்துகள் வர்க்கப் போராட்டத்தை புரிந்துகொள்ள முயன்றபோது, சாதியைப் பற்றிய குழப்பம் கம்யூனிஸ்டுகளுக்கு இருந்தது; தலித்துகள் ஆலைத் தொழிலாளிகளாகி, அதே வர்க்கத்தைச் சார்ந்த சகதொழிலாளிகளால் பாரபட்சமாக நடத்தப்பட்டபோது, தொழிலாளர் வர்க்க ஒற்றுமை என்னும் பெயரால் அந்தப் பாரபட்சத்தைக் கம்யூனிஸ்டுகள் பொறுத்துக் கொண்டனர். ஆலைகளில் தற்காலிக (காஷீ¨வல்) தொழிலாளர்களாகும் வாய்ப்புப் பெற்ற தலித்துகளுக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளிகளுக்கும் முரண்பாடு ஏற்பட்டபோது, பாட்டாளி வர்க்கப் போராட்டம் என்னும் பெயரால் அவர்களது நலன்களைக் கம்யூனிஸ்டுகள் உதாசீனப்படுத்தினர். தலித்துகள் தங்கள் தலைவர்களை, தங்களது அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்ய வந்தவர்கள் எனக் கொண்டாடியபோது, கம்யூனிஸ்டுகள் அத்தலைவர்களை ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள் என அவதூறு செய்தனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்துறையில் உள்ள தொழிலாளிகள் குளிர்சாதன அறைகளில் பூர்ஷ்வா வர்க்கத்துடன் ஊதிய உயர்வுக்காகவும் வேறு கொழுத்த சலுகைகளுக்காகவும் பேரம் பேசிக் கொண்டிருந்தபோது கம்யூனிஸ்டுகள் அதைப் புரட்சிகரப் பணியாக வகைப்படுத்தினர்; ஆனால் தலித்துகள் தங்களது அடிப்படையான மானுட அடையாளத்தை மீட்டெடுக்கப் போராடியபோது, அந்தப் போராட்டம் முழுவதுமே அற்ப சீர்திருத்தத்திற்கான போராட்டம் என இகழப்பட்டது. தலித்துகள் உள்ளூர் மேட்டுக்குடியினரால் தொல்லைகளுக்காளாகும் போது, அவர்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடவேண்டும் என கம்யூனிஸ்டுகள் எதிர் பார்க்கின்றனர். தலித்துகளுக்கு அரசியல் முதிர்ச்சி ஏற்பட வில்லையென்றோ, இந்த நாட்டின் யதார்த்த நிலையைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் கம்யூனிஸ்டுகளுக்கு இல்லையென்றோ எந்தக் காரணத்தை சொன்னாலும், கம்யூனிஸ்டுகளின் பார்வையும் தலித் பார்வையும் ஒன்றுக்கொன்று பொருத்தமானதாக இருப்பதில்லை என்பதுதான் உண்மை.

இந்தப் பொருந்தா நிலைதான் இந்த நாட்டிலுள்ள முற்போக்கு இயக்கத்தின் வரலாற்றின் தனிச்சிறப்பான அம்சமாக உள்ளது. இதைக் காட்டிலும் அவப்பேறான அம்சம் என்னவென்றால், இடதுசாரி முகாம், தலித் முகாம் ஆகிய இரண்டுக்குமே இதைப்பற்றிய உணர்வு சுத்தமாக இல்லாததுதான். இரண்டு முகாம்களுக்குமிடையே உள்ள பிளவு மிகப் பெரியதாக இருக்கிறது. எனவே இடதுசாரிகளின் புரட்சிகர முழக்கங்கள், கருத்துகள், சொற்கள் ஆகியன உலக விஷயங்களை ஆய்ந்தறிய தலித்துகள் பயன்படுத்தும் வகைப்பாடுகளிலிருந்து முற்றிலுமாக விலக்கி வைக்கப்பட்டுள்ளன. இது பெரும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் ஏகாதிபத்திய-எதிர்ப்பு உணர்வு தலித்துகளிடம் முளைவிடும் சாத்தியப்பாடு உள்ளதா இல்லையா என்னும் கேள்விக்கே இடமில்லாமல் போய்விடுகிறது. நாம் பின்னர் பார்க்கப்போவதைப் போல, ஏகாதிபத்தியத்துடன் தொடர்புடைய கொள்கைகளுக்கு மிகவும் மோசமாகப் பலியாகின்றவர்கள் அவர்கள்தான். உலகமயமாக்கலின் கொடுமையை அவர்களும் உணரத்தான் செய்கின்றனர். அவர்கள் அதை எதிர்க்கத்தான் செய்கின்றனர். ஆனால் அவர்களது எதிர்ப்புக்குக் காரணமாக இருப்பது எந்தவொரு கருத்து நிலையும் (ideaology) அல்ல; மாறாக, உலகமயமாக்கல் அவர்களது வாழ்க்கையில் ஏற்படுத்தும் பேரழிவுதான்.

அவர்கள் புரிந்து கொள்ளமலிருப்பது, உலகமயமாக்கல் என்பது எப்படித் தோன்றியது, இந்த அரக்க சக்தி எங்கிருந்து வருகிறது, அதனுடைய உள்ளடக்கம் என்ன, அது எத்தகைய உத்திகள் மூலம் செயல்படுகிறது, இதற்குப் பின்னாலிருந்து இயக்கும் சக்திகள் யாவை என்பனவற்றைத்தான். அவர்கள் இவற்றைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதால், சுயநலச் சக்திகள் அவர்களை போலிக் குறிக்கோள்களை நோக்கி வழி நடத்திச் செல்கின்றனர். உண்மையில் உலகமயமாக்கல் என்பது தலித்துகளுக்கு எதிராகப் பார்ப்பனர்கள் உருவாக்கியுள்ள மற்றொரு சதி என்னும் கவர்ச்சிகரமான விளக்கத்தைச் சில அமைப்புகள் வழங்குகின்றன. வரலாற்று ரீதியாக தலித்துகள் பார்ப்பனியத்தால் ஒடுக்கப்பட்டிருந்ததால், இத்தகைய விளக்கங்கள் அவர்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. தலித்துகளின் வாழ்க்கையனுபவங்கள் அவர்களிடம் வலுவான பார்ப்பன-எதிர்ப்பு உணர்வை உருவாக்கியுள்ளன. இதன் காரணமாக, தங்களது நலன்களுக்கு எதிரான அனைத்தையும் பார்ப்பன சூழ்ச்சியாகவே பார்க்கும் முடிவுக்கு எளிதாக வந்து விடுகிறார்கள். இந்தப் பார்ப்பன-எதிர்ப்பின் தன்மைதான் என்ன? அது ஏகாதிபத்திய-எதிர்ப்பு உணர்வுக்குத் துணை நிற்கக்கூடியதா அல்லது அதற்கு எதிரானதா? ஏகாதிபத்திய-எதிர்ப்பு உணர்வை தலித்துகளுக்கு ஊட்டுவது எவ்வாறு? இவை போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க ஏகாதிபத்திய-எதிர்ப்பாளர்கள் கடும் முயற்சி செய்ய வேண்டும்.

எந்தவொரு உணர்வும், பொருத்தமான கருத்துநிலை மண்ணில், வாழ்ந்து பெற்ற அனுபவத்தினூடாகவே வளர்கிறது. பெரும்பான்மையான மக்கள் சாதி அடிமைத்தனத்தில் காலங்காலமாக இருந்து வருவதுதான் இந்திய வாழ்க்கையனுபவங்கள் காட்டும் யதார்த்தமாகும்.

ஆனால் இந்த நிலைமையாலும்கூட மக்களுக்கு இன்றியமையாத சாதி-எதிர்ப்பு உணர்வை உருவாக்க முடியவில்லை. அதற்குக் காரணம் இந்த உணர்வு வளர்வதற்கு வேண்டிய பொருத்தமான கருத்துநிலை மண் இங்கு இருக்கவில்லை என்பதுதான். சாதி அமைப்பால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களான கீழ் சாதியினரிடையேயும் தலித்துகளிடையேயும் ஒரு கட்டத்தில் நாடு முழுக்க திடீரென்று சாதி-எதிர்ப்புணர்வு வளரத் தொடங்கியது. அதற்குக் காரணம், மேற்கத்திய தாராளவாத நவீனத்துவம், பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின்போது உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் என்னும் வடிவங்களில் வெளியிலிருந்து வந்த சத்தூட்டத்தின் காரணமாக, சாதி-எதிர்ப்பு உணர்வுக்கு வேண்டிய பொருத்தமான கருத்துநிலை மண் உருவாகியது. தலித்துகளிடையே கல்வி பரவி, நகர்ப்புறப் பகுதிகளிலும் தொழில் வளர்ச்சியடைந்த பகுதிகளிலும் பணம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியது. இதுவும், பணப் பொருளாதாரத்தின் வளர்ச்சி, வேலை வாய்ப்புகளில் ஏற்பட்ட வளர்ச்சி ஆகியனவும் சேர்ந்து தலித்து களிடையே ஒரு புதிய வர்க்கம் தோன்றக் காரணமாயின.

தலித் இயக்கத்தை மேற்சொன்ன இயக்கப்போக்கின் விளைவாகவே பார்க்கவேண்டும். இந்த இயக்கப்போக்கிற்கு மட்டுமின்றி, இந்த இயக்கத்திற்கு முன்பே சூத்திரர்கள் தொடங்கிய பார்ப்பன-எதிர்ப்பு இயக்கத்திற்கும் அடிப்படையாக இருந்த உணர்வை நாம் கூர்ந்து கவனித்தால், அதை பார்ப்பன-எதிர்ப்பு, பிரிட்டிஷ்- ஆதரவு உணர்வு என நாம் வரையறுக்கலாம். தலித்துகளும் சூத்திரர்களும் தம்மிடம் ஏற்பட்ட பார்ப்பன-எதிர்ப்பு உணர்வுக்கு பிரிட்டிஷாருக்குக் கடன்பட்டிருக்கிறார்கள். பிரிட்டிஷார் மட்டும் இந்தியாவை ஆளாமல் இருந்திருப்பார்களேயானல், சாதி அடிமைத் தனத்திலிருந்து தங்களால் விடுதலையடைந்திருக்க முடியாது என்பதை அவர்கள் உண்மையிலேயே உணர்ந்திருந்தனர். சாதி-எதிர்ப்பு இயக்கங்களின் தலைவர்களான மகாத்மா ஃபுலெ, அம்பேத்கர் போன்ற அனைவரும், மக்களிடையே உள்ள பிரிவினைகளைத் தமக்கு அனுகூலமாகப் பயன் படுத்திக் கொள்ளும் பிரிட்டிஷாரின் காலனிய சூழ்ச்சித் திட்டத்தை நன்கு உணர்ந்திருந்த போதிலும், தாம் நடத்திய விடுதலைப் போராட்டங்களை நிறைவேற்றுவதற்கான சாதனமாக காலனியாட்சியாளர்களைப் பயன்படுத்திக் கொண்டனர். தலித் உணர்வில் பதிந்துள்ள வரலாற்றுரீதியான புதிரை இங்குதான் காண முடியும்: இந்துக்களின் மேலாதிக்கத்திற்கு (இது ‘தேசிய நலன்கள்’ என விளக்கப்பட்டது) குந்தக மானதோ எதுவோ அது தலித்துகளுக்கு நன்மை பயக்கக் கூடியதாக இருந்தது.

இந்தியாவிலுள்ள சமுதாயப் பிரச்சனைகளில் பிரிட்டிஷ் அரசு மேற்கொண்ட ‘காருண்யமான’ தலையீடுகளுக்குப் பின்னால் காலனிய அரசின் நுட்பமான நீண்டகாலத் திட்டம் செயல்பட்டுக் கொண்டிருந்தது என்னும் உண்மையை மறுக்க இயலாது. டி.எல்.ஷேத் கூறுகிறார்: காலனிய அரசு இரட்டைப் பாத்திரத்தை மேற்கொண்டது: மரபான மேல்-கீழ் வரிசையிலமைந்த சாதி அமைப்பில் அந்தந்த சாதிகள் உரிமை கொண்டாடிய அந்தஸ்துகள் தொடர்பான தகராறுகளைத் தீர்த்து வைத்து இன்னின்ன சாதிக்கு இன்னின்ன இடம்தான் என்று ஒரு இடத்தைக் குறிப்பிடவும் அதை மாற்றவும் செய்கிற ஒரு அதி-பார்ப்பனன் என்னும் பாத்திரத்தை வகித்தது. தனது ஆட்சிக்குட்பட்ட நலிந்த, ஏழைக் குடிமக்களின் உரிமைகளையும் வேட்கைகளையும் அங்கீரிக்க விரும்பும் ஒரு நீதியான, நவீன ஆட்சியாளன் என்னும் மற்றொரு பாத்திரத்தையும் வகித்தது. இந்த இரட்டைப் பாத்திரம், எழுச்சி பெற்றுவந்த தேசிய இயக்கமானது, காலனிய அரசியல் பொருளாதாரத்திற்குள் நுழைந்து தாக்குதல் தொடுக்காமல் தடுப்பதற்குப் பயன்பட்டது. இந்த இரட்டைப் பாத்திரத்தினால் ஏற்பட்ட விளைவுகளிலொன்று, மக்கள் தமது சாதி அடையாளங்களின் அடிப்படையில் தங்கள் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யவும், காலனிய அரசாங்கத்தின் ஏற்பாடுகள், நிபந்தனைகள் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு, அது உருவாக்கியிருந்த அமைப்புகள் மூலமாக பொருளாதாரத்தில் பங்கேற்கவும் தூண்டுதல் பெற்றதாகும்.

காலனியாட்சியாளர்களுக்கு இந்த நோக்கங்கள் இருந்தது ஒருபுறமிருந்தாலும், காலனிய அரசு பல மாற்றங்களை ஏற்படுத்தியதை மறுக்க முடியாது. இந்த மாற்றங்களில் பல அரசு உத்தேசித்து மேற்கொண்டவையல்ல என்றபோதிலும், அவை தலித்துகளுக்கு நற்பயன்களைத் தந்தன. டி.எல்.ஷேத் மேலும் கூறுகிறார்: ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், காலனிய ஆட்சி, சாதி பற்றிய புதிய விளக்கங்களுக்கான அடிப்படையை அறிமுகப்படுத்தியதுடன், சாதி அமைப்பிலுமே சில மாற்றங்களைக் கொண்டுவரவும் செய்தது. ஆயினும் இந்த மாற்றங்களில் பெரும்பாலானவை காலனியக் கொள்கைகள் உத்தேசித்து மேற்கொண்டவையல்ல. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கிய நவீனமயமாக்கல், அரசை மதச்சார்பின்மையாக்கல், நகர்மயமாக்கல் ஆகிய இன்னும் பெரிய வரலாற்றுச் சக்திகளுடன் தொடர்புடையவையே இந்த மாற்றங்கள். ஆனால், சமுதாயத்திலிருந்த மரபான மேட்டுக்குடியினரின் அதிகாரத்தை செல்லுபடியாகாததாக்குவதையும் தனது ஆட்சிக்கான ஆதரவைத் திரட்டுவதையும் குறிக்கோளாகக் கொண்டு காலனிய ஆட்சி மேற்கொண்ட குறிப்பிட்ட சில கொள்கைகள் சாதி அமைப்பின் மீது நேரடியான பாதிப்புகளை ஏற்படுத்தின. காலனியாட்சி முடிவடைகையில் இத்தகைய கொள்கைகளும் இவற்றை விடப் பெரிய வரலாற்றுச் சக்திகளும் சாதி அமைப்பில் சில ஆழமான, பாரதூரமான மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன.

பிரிட்டிஷ் காலனிய ஆட்சி, தலித்துகளுக்கு முன்னுரிமையில்லாத ஒரு வாய்ப்பை வழங்கியது. பிரிட்டிஷ் இராணுவத்திலும் இதர துறைகளிலும் தலித்துகள் நுழைய வாய்ப்பேற்பட்டது. இவையெல்லாம், காலனிய ஆட்சி தனது நலன்களின் பொருட்டுச் செய்தவைதான். காலனிய ஆட்சி கீழ்க்காணும் மூன்று வகைகளில் தலித்துகளுக்கு உதவி செய்தது: 1. காலனிய ஆட்சி உருவாக்கிய மதச்சார்பற்ற அரசாட்சி, சாதி அமைப்பின் கீழ் பல நூற்றாண்டுகளாகத் தாங்கள் நியாயமற்ற முறையில் ஒடுக்கப்பட்டு வந்ததை தலித்துகள் உணரும்படி செய்தது; 2. எந்தவொரு போராட்டத்தையும் மேற்கொள்வதற்குத் தேவையான பொருளாதார வளர்ச்சிக் கட்டத்தை அவர்கள் அடையவும் அதைக் கடந்து செல்லவும் உதவியது; 3. தலித்துகள் தங்களது மானுட கௌரவத்தை மீட்டெடுக்கும் பொருட்டு சுதேசி ஒடுக்கு முறையாளர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்கு பிரிட்டிஷார் இங்கிருந்தது உத்திரவாதமாக அமைந்தது.

காலனியாட்சிக் காலத்தில் உருவான நகர்ப்புறப் பகுதிகளும், தகவல் தொடர்புகளை எளிதாக்க உதவிய சாதனங்களும் வட்டார அல்லது உள்ளூர் அடையாளங்களைக் கடந்த ஒரு கூட்டுணர்வை தலித்துகள் உருவாக்கிக் கொள்ள உதவின. சூழ்ச்சிகரமான முறையில் சாதிகளை ஏற்படுத்தி மேல்சாதிக்காரர்கள் தங்களை ஒடுக்குவதாக தலித்துகள் கருதத் தொடங்கியதன் வெளிப்பாடாகவே இந்தக் கூட்டுணர்வு அமைந்தது.

காலனியாட்சியாளர்கள் ஏற்படுத்திய புதிய நீதிபரிபாலன முறை, உரிமைகள் பற்றிய விவாதங்களையும் விளக்கங்களையும் தோற்றுவித்தது. உரிமைகள் பற்றிய இத்தகைய விவாதங்களும் விளக்கங்களும் சாதி ஆசாரரீதியில் ஆதிக்கம் செலுத்திவந்த, மேல்-கீழ் வரிசையிலமைந்த சாதி முறை உருவாக்கிய கருத்துகளுக்கு முற்றிலும் நேர்மாறானவையாக இருந்தன. காலங்காலமாக அடுக்குகளாகப் பிரித்துவைக்கப் பட்டிருந்த சமுதாய அமைப்பையும் அதைத் தாங்கிப் பிடிக்கும் மதநெறிகளையும் கேள்விக்குட்படுத்தும் புதிய கருத்துநிலை உருவாகியது. இந்த சமுதாய அமைப்பைத் தோற்றுவித்த பார்ப்பனர்களையும் பார்ப்பனியத்தையும் ‘தாழ்த்தப்பட்ட வகுப்பினர்’ என்பது போன்ற புதிய அடையாளங்கள்- தீண்டத்தாகாத சாதியினரைக் குறிக்கும் புதிய அடையாளங்கள் - எதிர்த்து நின்றன. இந்த மோதல் ஏற்படுத்திய கட்டாயத் தேவையின் காரணமாக, பல்வேறு சாதிகள் செங்கோட்டு நிலையிலும் கிடைநிலையிலும் தம்மை ஒன்று திரட்டிக் கொண்டன. சாதிப் படிநிலை அமைப்பில் அவர்களுக்குள்ள இடத்தில் செங்கோட்டு நிலையிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிதறிக்கிடந்த தங்களைக் கிடை நிலையிலும் ஒன்றுதிரட்டிக் கொண்டன. முழுக்க முழுக்க காலனிய ஆட்சியின் காரணமாகவே ஏற்பட்ட இந்த வளர்ச்சிகள், சாதி அமைப்புக்கு எதிரான ஒரு வலுவான இயக்கத்தைத் தலித்துகள் உருவாக்க உதவி செய்தன.

அந்நியர்களின் ஆட்சி எப்போதுமே தலித்துகளுக்கு நன்மை செய்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி மட்டுமல்ல, முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியும்கூட தலித்துகளுக்குப் பல்வேறு நன்மைகளைக் கொண்டு வந்தது. முதலாவதாக, பார்ப்பனியம் உரிமை கொண்டாடி வந்த மேன்மையை மறுதலித்து, அது (பார்ப்பனியம்) ஒரு போலிக் கடவுளே என்பதை அம்பலப்படுத்தியது. புதைபடிவம்போல பழமை வாய்ந்த சாதி சட்டகத்திற்குள் (caste framework) அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் கற்பனைகூட செய்து பார்த்திராத புதிய நாகரிகத்தைக் காலனியாட்சி கொண்டுவந்தது. இந்து சமுதாயக் கட்டமைப்பில் எல்லோரையும் விடக் குறைந்த வலுவைக் கொண்டிருந்த தலித்துகள் சாதியடிமைத்தனத்திலிருந்து தப்பித்து அந்நிய ஆட்சியாளர்கள் வழங்கிய வேலைகளில் நுழைந்தனர் அல்லது அந்த அந்நியர்களின் மதங்களுக்கு மாறினர். முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியின் தொடக்கக் கட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் இஸ்லாத்திற்கு மாறினர் என்பதை வரலாறு நமக்குச் சொல்கிறது (ஐந்திலொரு பகுதி இந்துக்கள் இஸ்லாத்திற்கு மதம் மாறினர் என்றும் இவர்களில் மிகப் பெரும்பான்மையினர் தலித்துகள் என்றும் விவேகானந்தர் புலம்பித் தள்ளினார்.)
இஸ்லாத்திற்கு மதம் மாறிய மேல்சாதி இந்துக்கள் அந்த மதத்திற்குள்ளும் மேல்-கீழ் சாதி உணர்வைக் கொண்டுவந்து முஸ்லிம் சமுதாயத்தையும் இந்துமய மயமாக்கியதாலேயே தலித்துகள் இந்து மதத்திலிருந்து வெளியேறி இஸ்லாத்திற்கு மாறுவது தடைபட்டது. இதே போன்ற விஷயம் ஐரோப்பியர்கள் இங்கு வந்த போதும் மீண்டும் நிகழ்ந்தது. முஸ்லிம் படையெடுப்பாளர்களை ஒப்பிடுகையில் மிகத் தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்த ஐரோப்பியர்கள், மத்திய ஆசியாவிலிருந்து பெரும் எண்ணிக்கையில் வந்த முஸ்லிம்களைப் போல, தங்கள் நாட்டு மக்களைப் பெருமளவில் இங்கு கொண்டுவர முடியவில்லை. எனவே தங்களது இராணுவத்திற்கும் தங்களுக்கு வேண்டிய சேவைகளைச் செய்வதற்கும் இங்கிருந்தே ஆட்களைச் சேர்க்க வேண்டியதாயிற்று. கீழ்சாதியினர்-குறிப்பாக தலித்துகள்-ஐரோப்பியர்களிடம் வேலைக்குச் சேர மற்ற எல்லோரைக் காட்டிலும் அதிக உற்சாகம் காட்டினர். ஐரோப்பியர்கள் தமது சாம்ராஜ்யத்தை இந்தியாவில் உறுதியாக நிறுவவதற்கு உதவியவை கீழ் சாதிகளைச் சார்ந்த சேனைகளாகும். இதைச் சிறப்பாக எடுத்துக்காட்டுவது புனெ நகரத்திற்கு அருகிலுள்ள கோரெகவோன் என்னுமிடத்தில் நிறுவப்பட்டுள்ள நினைவுத் தூணாகும்.

இது இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசை நிறுவுவதற்காக மராத்தியர்களுடன் நடத்தப்பட்ட தீர்மானகரமான போரில் உயிர் நீத்தவர்களின் நினைவைப் போற்றுவதற்காக எழுப்பப்பட்டது. ஐரோப்பியர்களின் ஆட்சி தன்னுடைய கிறிஸ்துவ மிஷனரிகளையும் இங்கு கொண்டு வந்தது. அவர்கள் மேற் கொண்ட பணிகளிலொன்று பிறசாதி மாணவர்களோடு தலித் மாணவர்களையும் சேர்த்துக்கொண்ட மிஷனரி பள்ளிகளைத் தொடங்கியதாகும். அடிப்படையில் காலனிய நோக்கத்தோடு செய்யப்பட்டவையாக இருந்தாலும், பிரிட்டிஷார் உருவாக்கிய அகக் கட்டுமானங்கள், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட முதலாளியத் தொழில்மயமாக்கல் ஆகியன தலித்துகளுக்குப் பெருமளவில் நன்மை பயத்தன. இந்த வளர்ச்சிகளால் ஏற்பட்ட ஒட்டு மொத்த பயன்களின் காரணமாக, தலித்துகளிடையே ஒரு புதிய வர்க்கம் உருவாகியது. தான் தொடர்ந்து முன்னேறுவதற்கு சாதிகள் தடையாக இருப்பதை மென்மேலும் அதிகமாக உணர்ந்துவந்த வர்க்கம்தான் இது. இந்த உணர்வின் வெளிப்பாடே தலித் இயக்கம். தலித்துகளுக்கு அந்நியராட்சிதான் நல்லது, சுதேசி இந்துக்களின் ஆட்சி தீங்கானது என்னும் உணர்வுதான் இது. ‘எதிரியின் எதிரி நமது நண்பன்’ என்பது தான் அவர்களது தர்க்கம். உள்நாட்டு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தங்கள் போராட்டத்திற்கு, அந்நிய ஏகாதிபத்தியத்தை ஒரு நேச சக்தியாக அவர்கள் பார்த்தனர்!

இதுதான் தலித்துகளின் வாழ்ந்துபெற்ற அனுபவம். அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட வகையான ஏகாதிபத்திய-எதிர்ப்பை நிர்ணயித்தது இதுதான். உள்நாட்டு சமூக-பண்பாட்டு ஏகாதிபத்தியத்திற்கும் உலகளாவிய அரசியல்-பொருளாதார ஏகாதிபத்தியத்திற்குமிடையிலான முரண்பாட்டை இந்த உணர்வு அடையாளப்படுத்தி மதிப்பீடு செய்தது. வரலாற்றுரீதியாகப் பார்த்தால், தலித்துகள் உள்நாட்டு சமூக-பண்பாட்டு ஏகாதிபத்தியத்திற் கெதிரான உணர்வுக்கு உலகளாவிய அரசியல்-பொருளாதார ஏகாதிபத்தியத்திற்குக் கடன்பட்டிருக்கிறார்கள். சமூக-பண்பாட்டு ஏகாதிபத்தியம் என்பது, தலித்துகளின் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுக்குத் துன்பத்தைத் தருகிற, திட்டவட்டமான, தூலமான ஒன்று; அரசியல்-பொருளாதார ஏகாதிபத்தியமோ அவர்களைப் பொருத்தவரை அருவமானது, ‘படித்துத் தெரிந்து கொண்ட’ ஒன்று. இதன் பொருள், ஒரு பரந்து விரிந்த சித்திரத்தைப் பார்க்கவோ, உலகளவில் நடக்கும் சுரண்டல் இயக்கப்போக்குகளைப் புரிந்து கொள்ளவோ அவர்களால் இயலவில்லை என்பதல்ல. மாறாக, இந்து சமூக அமைப்பிற்குள்ளேயே உள்ள ஒடுக்குமுறையுடன் உலகளாவிய அரசியல்-பொருளாதார ஏகாதிபத்தியம் எத்தகைய உறவைக் கொண்டுள்ளது என்பதை அவர்கள் துல்லியமாகப் புரிந்து கொள்வதில்லை என்பதுதான். கடந்த காலத்தில், அந்நியராட்சி அவர்களுக்கு நன்மை பயத்தது என்றால், எதிர்காலத்தில் அவர்கள் ஏன் அதற்கு எதிராக இருக்க வேண்டும்? அதைப் பற்றி அவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? அது அவர்களுக்குத் தீங்கு விளைவித்திருக்கு மேயானால் கட்டாயம் அவர்கள் அதனைக் கருத்தில் கொண்டிருப்பர்.

ஆனாலும் அவர்கள் உள்நாட்டு ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவதற்கு முன்னுரிமை கொடுப்பதைக் கைவிட மாட்டார்கள். மேல்சாதியினருக்கு (சவர்ணர்களுக்கு) எது கேடானதோ அது தங்களுக்கு நல்லதாகவே இருக்கும் என்னும் தர்க்கத்தின்படி செயல்படுகின்றனர். உலகமயமாக்கல் குறித்து தலித்துகளுக்கு ஏற்படும் குழப்பத்திற்கு இதுவே மூலகாரணம். உலகமயமாக்கலால் ஏற்படும் கேடுகளை அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையனுபவங்களிலிருந்தே தெரிந்து கொண்டுள்ள போதிலும், உலக மயமாக்கலுக்கான ஆதரவு, அதற்கான எதிர்ப்பு ஆகிய இரண்டுமே மனுவாத சக்திகளின் சூழ்ச்சி என்றே கருதுகின்றனர் (எடுத்துக்காட்டாக, பாம்ஸெஃப், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றின் பிரச்சாரங்கள்.) அவர்கள் தங்களது தலைவர்கள் மீது இன்னும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்- பல்லாண்டுக்காலம் அத்தலைவர்களுடன் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் எதிர்மறையானதாக இருந்த போதிலும். இதற்குக் காரணம் இந்தத் தலைவர்கள் சாதி-எதிர்ப்பு வாய்வீச்சுககளைத் தொடர்ந்து செய்துவருவதுதான்.

எல்லாவிடங்களிலும் படர்ந்து பரவியுள்ள ஏகாதிபத்தியத்தின் நீண்டகாலத் திட்டத்தின் வெளிப்பாடே உலகமயமாக்கல் ஆகும். இது ஏற்படுத்தும் கேடுகளை தலித்துகள் தமது கடந்த பத்தாண்டுக்கால அனுபவத்தின் வழியாக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். அப்படியிருந்தும் உலகமயமாக்கல் என்பது பார்ப்பனிய சூழ்ச்சியே தவிர வேறல்ல எனக் கருதுகிறார்கள் என்றால், அவர்களை இன்னும் நேரடியாகப் பாதிக்காத, ஏகாதிபத்தியத்தின் இதர சூழ்ச்சிகளைப் பற்றிய அவர்களது உணர்வு எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம். ஏகாதிபத்தியம் தற்சமயம், முதன்மையாக முதலீடுகள், கடன் வழங்குதல், தொழில்நுட்பத்தை ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லுதல், வர்த்தகம், சந்தைகளை ஒன்றிணைத்தல், பண்பாட்டு உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்தல் ஆகியன போன்ற பொருளாதார இயக்கப் போக்குகள் மூலமே செயல்பட்டு வருகிறது. இந்த அம்சங்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையுடன் கொண்டுள்ள உறவுகள் புரிந்து கொள்ளப்படுவதேயில்லை. எடுத்துகாட்டாக, ஏகாதிபத்திய முதலீடுகள் செய்யப்படுவதன் முதன்மை நோக்கம், உயர்ந்த அளவு இலாபங்களை ஈட்டுவதுதான் என்றாலும் அவை நீண்ட காலப் போக்கில் ஒரு நாட்டின் வளர்ச்சி செல்லும் திசையை நிர்ணயிக்கக் கூடியதாகவும் உள்ளன.

அவற்றால் உள்நாட்டுத் தொழில்களை அகற்றவும் வேலை வாய்ப்புகளை அழிக்கவும் முடியும். கடந்த பத்தாண்டுகளில் நாடு முழுக்க பல்லாயிரக்கணக்கான தொழிற்சாலைகளும் தொழிற்கூடங்களும் இழுத்து மூடப்பட்டன. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான சாதாரண மக்கள் வேலைகளை இழந்து நடுத்தெருக்களில் நின்றனர். ஆயினும் இந்த சாதாரண மக்கள், இதற்குக் காரணம் அவர்கள் வேலை செய்கின்ற உள்ளூர் சூழ்நிலைகள்தான் எனக் கருதுகின்றனேரயன்றி, அந்த சூழ்நிலைமைகளுக்கு வெளியே உள்ள ஏகாதிபத்தியம்தான் காரணம் எனப் பார்ப்பதில்லை. நுகர்வுப் பண்பாடு பணப்பயிர்களைச் சாகுபடி செய்யுமாறு விவசாயிகளை மிக சாதுரியமாகத் தூண்டுகிறது. நிலைத்த தன்மையுடைய விவசாய உற்பத்தி முறைமீது வெளிநாடுகளிலிருந்து வரும் வேளாண் தொழில் நுட்பங்கள் பாதிப்பை ஏற்படுத்தி விவசாய உற்பத்தித்திறனை வீழ்ச்சியடைய வைக்கின்றன. விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான சந்தைகள் ஒன்றிணைக்கப்பட்டதன் காரணமாக, அப்பொருட்களின் விலைகள் தாறுமாறானவையாகின்றன. மேற் சொன்னவையும் இவை போன்ற இன்னபிற காரணிகளும் ஏற்படுத்தும் ஒட்டுமொத்தமான விளைவு என்ன வென்றால், விவசாயிகள் ஓட்டாண்டிகளாக்கபடுவதும் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவதுமாகும்.

இந்தத் தற்கொலைகளும்கூட உள்நாட்டுப் பிரச்னைகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகின்றனவேயன்றி ஒருபோது ஏகாதிபத்தியத்துடன் தொடர்பு படுத்தப்படுவதில்லை. ஏகாதிபத்தியம் இலட்சக்கணக்கான வழிகளில் மக்களைப் பாதிக்கிறது. பலகீனமான மக்கள் மீதுதான் அதனுடைய பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கிறது. இதில் விந்தை என்னவென்றால், மற்றவர்களைக் காட்டிலும் மிக மோசமாகப் பாதிக்கப்படும் மக்களிடம்தான் ஏகாதிபத்திய சூழ்ச்சிகளைப் பற்றிய உணர்வு மற்றவர்களைக் காட்டிலும் குறைவாக உள்ளது. அவர்களது ஒட்டுமொத்தமான பலகீனம், அறியாமை ஆகியவற்றின் காரணமாக, அவர்களை இன்னும் நேரடியாகப் பாதிக்காத விஷயங்களைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பது அவர்களுக்குக் கடினமாக உள்ளது. தலித்துகளைப் பொருத்தவரை, இதற்குக் காரணம், ஏகாதிபத்தியத்தைப் புரிந்து கொள்வதில் அவர்களுக்குள்ள இயலாமை என்பதைக் காட்டிலும் பொருளாதாரம் அல்லாத விஷயங்களிலேயே அவர்களது சிந்தனை முழுவதும் ஊன்றியிருப்பதன் விளைவாக பொருளாதாரத்தில் அக்கறை காட்டுவதில்லை என்பதுதான்.

சமுதாயத்தில் பிற எல்லோரையும் பார்க்க, மிக மோசமான பொருளாதரச் சீரழிவை அனுபவித்துக் கொண்டிருக்கும் தலித்துகள் பொருளாதாரத்தின் மீது இத்தகைய அக்கறையின்மையைக் கொண்டிருப்பது ஏன்? தங்களது வாழ்வாதாரப் பிரச்னைகளைப் பற்றிய விவாதங்களைக் கூட வெறுத்தொதுக்குமளவுக்கு அவை ஏன் அவர்களுக்கு ஒவ்வாதனவையாக இருக்கின்றன? இதற்கான விடையை, தொடக்ககால தலித் இயக்கத்திற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் இருந்த வரலாற்றுரீதியான பரஸ்பர அணுகுமுறையில் காணலாம். பொருளாதாரச் சுரண்டல் மட்டுமே யதார்த்தமானது, மற்றவகை ஒடுக்குமுறைகளும் சுரண்டல்களும் சமுதாயத்தின் மேல்கட்டுமானம் தொடர்பான பிரச்னைகளே எனத் தொடக்ககாலக் கம்யூனிஸ்டுகள் அடித்துப் பேசினர். இக்கருத்து தலித் இயக்கத்திடம் பகை உணர்வை ஏற்படுத்தியது. கம்யூனிஸ்டுகள் பொருளாதாரரீதியாக நிர்ணயிக்கப்படும் வர்க்கங்கள், வர்க்கப் போராட்டம் ஆகியவற்றோடு மட்டுமே ஒன்றிப்போய் கீழ்சாதியினரும் தலித்துகளும் அனுபவிக்கும் சாதி ஒடுக்குமுறை பற்றிய அறியாமையில் மூழ்கிக் கிடந்ததால், தலித் இயக்கத்தில் அதற்கு நேரெதிரான எதிர்வினை தோன்றியது. பொருளாதாரச் சுரண்டலைப் போலவே பொருளாதாரம் சாராத ஒடுக்குமுறையும் முக்கியமானது என்பதை வலியுறுத்தும் தமது முயற்சியில் தலித்துகள் பொருளாதாரப் பிரச்னைகளை முழுமையாக ஒதுக்கித் தள்ளும் நேரெதிர் நிலைபாட்டை மேற்கொண்டனர். பொருளாதார அறிஞரான அம்பேத்கரும்கூட, பொருளாதாரமல்லாத அம்சங்களே சாதிப் பிரச்னைக்கு முதன்மையான காரணிகளாக இருப்பதாகக் கருதினார். தலித்துகளின் சிந்தனையை ஆட்டிப் படைக்கும் பொருளாதாரமல்லாத விஷயங்கள், தலித் உணர்வில் ஆழமாகப் படிந்துள்ளன. இதன் காரணமாக, பொருளாதாரத்தோடு சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்னையானாலும் அதை அவர்கள் கம்யூனிஸ்டுகளுடன் தொடர்புபடுத்தி, அதனைத் தம்மால் விலக்கப்பட வேண்டியதொன்றாகக் கருதுகின்றனர்.

மற்றொரு அவப்பேறான எதிர்வினையையும் தலித்துகளின் நடைமுறையில் காணலாம். துன்புறும் இதர மக்களுடன் ஒன்றிணைந்து போராடுவதில் அவர்களுக்கு அக்கறையின்மை அதிகரித்து வருவதாகத் தோன்றுகிறது. அந்த மக்கள், சாதி ஒடுக்குமுறைக்குப் பலியாகிறவர்களாக இருந்தாலன்றி தலித்துகள் அவர்களுடன் இணைவதோ, அவர்களது துன்ப துயரங்களைத் தங்கள் துன்ப துயரங்களாக உணர்வதோ இல்லை. எடுத்துக்காட்டாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூர்க்கத்தனத்தை அனுபவித்த, அதற்குத் தாக்குப் பிடித்த ஈராக்கியர்களுடன் தலித்துகள் ஒன்றுபடமாட்டார்கள். குஜராத்தில் இந்துத்துவவாதிகளின் வன்கொடுமையை அனுபவித்த முஸ்லிம்களின் துன்பதுயரங்கள் தலித்துகளை சிறிதும் அசைப்பதில்லை. வியப்பேற்படுத்தக்கூடிய இந்தக் குறுங்குழு மனப்பான்மை, ஏகாதிபத்திய-எதிர்ப்பு உணர்வுக்கு நேர்முரணானதாகும்.

ஏனெனில் பாதிக்கப்படும் பிறரது துன்ப துயரங்களைத் தனது துன்பதுயரங்களாக உணராத எவருக்கும் வன்கொடுமைகளைப் புரிபவர்களை எதிர்க்கும் உள்உந்துதல் ஏற்படாது. ஏகாதிபத்திய-எதிர்ப்பு இயக்கங்களின் செயல் நோக்கங்களுக்கு உந்துவிசையாக இருப்பவை ஏகாதிபத்தியத்தால் பாதிக்கப்படுபவர்களின் துன்ப துயரங்களைத் தமது துன்ப துயரங்களாக உணர்வதும். ஏகாதிபத்தியத்தின் தாக்குதல் தடுத்து நிறுத்தப்படாவிட்டால், அது நமக்கும் ஒரு நாள் நேரிடலாம் என்னும் கவலை கொள்வதும் ஆகும்.

எவ்விதத் தண்டனைக்கும் உள்ளாகாமலும் உலகம் முழுவதிலுமுள்ள மக்களின் கண்டனத்தைப் பொருட்படுத்தாமலும் அமெரிக்காவால் ஈராக் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்த முடிகிறது என்றால், அதனால் வேறு எந்த நட்டையும் எந்த நேரத்திலும் தாக்க முடியும். நேற்று ப்கானிஸ்தான், இன்று ஈராக், நாளை ஈரான். இந்த இரத்த வெறி பிடித்த அரக்கன் நாளை மறுநாள் நம்மைக் குறி வைக்கமாட்டான் என்பதற்கு என்ன உத்திரவாதம்? ஒவ்வொருவரும் அவரவரது குறுகிய நலன்களை மட்டுமே பாதுகாத்துக் கொண்டிருந்தால் உலகை எவ்வாறு காப்பாற்ற முடியும்? ஹிட்லரின் சித்திரவதை முகாமிலிருந்த புரொடெஸ்டெண்ட் பாதிரியார் மார்ட்டின் நியேமொல்லெர், கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள், தொழிற்சங்கவாதிகள், யூதர்கள், இன்ன பிறர் மீதான கொடுந்தாக்குதல்களும் இறுதியில் யூதர்கள் இலட்சக் கணக்கில் கொல்லப்பட்டதும் எப்படி நிகழ்ந்தது என அதிசயித்து, அதன் பிறகு இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட வரிகளை-இரத்தத்தை உறைய வைக்கும் வரிகளை-எழுதினார்.

மற்றவர்களின் துன்பதுயரங்கள் தலித்துகளின் மனத்தை உறுத்துவதேயில்லையா? தங்களைச் சுற்றிலும் நடக்கும் அநீதிகளைக் காண விரும்பாத அளவிற்கு அவர்கள் வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டவர்களாக இருக்கிறார்களா? ஒரு விஷயம் தங்களைப் பாதிக்கும்வரை, அதற்கு எதிராகச் செயல் படாமல் இருக்கும் அளவிற்கு அவர்கள் தங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்களா? இக்கேள்விகளுக்கான எளிமைப்படுத்தப்பட்ட பதிலைத் தரமுடியாது.

இவற்றுக்குப் பதில் காண, அவர்களது உணர்வை ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும். அது எப்படி உருவாகியது என்பதைப் பார்க்க வேண்டும். காலங் காலமாகத் தாங்கள் எப்படி இருந்து வந்தார்களோ அவ்வாறேதான் இப்போதும் இருப்பதாக தலித்துகள் கருதுகிறார்கள்: இந்த நாட்டில் நண்பர்கள் இல்லாதவர்களாக; தங்களது துன்பதுயரங்களைப் பகிர்ந்து கொள்கிறவர்கள் இல்லாதவர்களாக.

பார்ப்பனியக் ‘கடந்தகாலப் புகழை’ மீட்டெடுப்பதைத் தமது இலட்சியமாகக் கொண்ட இந்து அடிப்படைவாதிகள்தான் இந்த நாட்டிலுள்ள வலதுசாரிகள். பார்ப்பனியக் ‘கடந்த காலப் புகழ்’ என்பது தலித்துகளுக்கு இயல்பாகவே வெறுக்கத்தக்க ஒரு விஷயமாகும். சாதிகளை எப்படி சமாளிப்பது என்பதை இந்த நாட்டிலுள்ள இடதுசாரிகளால் இன்னும் தீர்மானிக்க முடியவில்லை. ‘அடித்தளம்-மேல் கட்டுமானம்’ என்னும் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்ட குழப்பத்திலிருந்து இடதுசாரிகளிற் பெரும்பாலானோர் விடுபட்டுவிட்டனர் என்றாலும் சாதிப் பிரச்சனை பற்றிய தெளிவு அவர்களுக்கு இன்னும் ஏற்படவில்லை. சாதிப் பிரச்சனையிலுள்ள பொருளாதார அம்சங்களை ஒப்புக்கொள்ள அவர்கள் ஆர்வம் காட்டும்போதிலும், அதனுடைய சமூக, சமய, பண்பாட்டு அம்சங்களை அவர்கள் போதுமான அளவு புரிந்து கொள்வதில்லை.

சமுதாயத்தில் முன்னேறிச் சென்று கொண்டிருக்கும் மத்திய தரவர்க்க தலித்துகளின் செல்வாக்குக்குட்பட்ட தலித் உணர்வைப் பொறுத்தவரை, சாதிகள் பற்றிய இடதுசாரிகளின் புரிதலில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி போதுமானதாக இருப்பதில்லை. தலித் உணர்வில் உள்ள மத்தியதர வர்க்கத்தின் செல்வாக்கை அகற்றுவதும் அந்த உணர்வை பரந்துபட்ட வெகுமக்களின் விடுதலையை நோக்கித் திசையமைப்பதும் இன்றியமையாதவை என்றாலும், இடதுசாரிகள் கருதுவது போல அந்த மத்தியதரவர்க்க உணர்வை உள்ளிழுத்து அடக்கி வைப்பதாலும், ‘இடதுசாரி’ உணர்வுக்குள் அடக்குவதன் மூலமும் இதனை சாதிக்க முடியாது. தலித் வெகுமக்களின் போராட்டங்களை நடத்துவதிலும் அவற்றை ஆதரிப்பதிலும் பிற சக்திகளை விஞ்சுவதன் மூலம் இடதுசாரிகளின்மீது தலித்துகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக் கடும் முயற்சி செய்ய வேண்டும். இன்று பல தலித் இளைஞர்கள் பல்வேறு இடதுசாரி அமைப்புகளில் ஈர்க்கப்படுகின்றனர் என்றால், இடதுசாரிக் கருத்துநிலை அவர்களைக் கவர்ந்திழுக்கிறது என்பதை விட, தலித் இயக்கம் நம்பிக்கையை உருவாக்குவதாக இருப்பதில்லை என்பதுதான் காரணம். இப்படி எதிர்மறைக் காரணத்தினால் அவர்கள் இடதுசாரி இயக்கத்தில் சேர்வதில் தவறில்லை என்றாலும், இடதுசாரிக் கருத்து நிலையை தலித் மக்களுக்கு எடுத்துச் செல்லக்கூடிய உண்மையான தூதர்களாக அவர்களை ஆக்கவேண்டும்; தலித் மக்களுக்கு போதனையூட்ட கிராம்ஷி கூறியதைப் போன்ற அவயவ அறிவாளிகளை (organicintellectuals)” தலித் மக்களிடையே இருந்தே உருவாக்க வேண்டும். இடதுசாரி இயக்கம் இதைத்தான் செய்ய வேண்டுமேயன்றி, இப்போது நடப்பதுபோல் தலித்துகளை அவர்களது சூழலிருந்து வெட்டிப் பிரிக்கக்கூடாது.

1 Sheth.D.l.(1999),”Secularisation of Caste and Making of New Middle Class”, Economic and political Weekly, August 21-28,199, also available at:http://jan.ucc.nau.edu/-sj6/epwhethmclassI.htm,(Accessed:2005,March 01)

2 ibid 3.அவயவ அறிவாளிகள்: நூலாசிரியர், இத்தாலியக் கம்யூனிஸ்ட் புரட்சியாளர் அந்தோனியோ கிராம்ஷியின் கருத்தொன்றை இங்கு பயன்படுத்துகிறார். எல்லா மனிதர்களுமே அறிவாளிகள்தான் என்றாலும் குறிப்பிட்ட சிலர் மட்டுமே சமுதாயத்தில் அறிவாளிகளின் செயல்பாட்டைப் புரிகின்றனர் எனக் கூறும் கிராம்ஷி, இத்தகையவர்களை ‘மரபான அறிவாளிகள்’ (traditional intellectuals) என்றும் அவயவ அறிவாளிகள்’ (organic intellectuals) என்றும் பாகுபடுத்துகிறார். மரபான அறிவாளிகள்பற்றி அவர் கூறுகிறார்: “வரலாறு நெடுகக் காணப்படுவது என்னவென்றால், கடந்தகாலப் பொருளாதார அமைப்பிலிருந்து வரலாற்றுக் களத்தில் தோன்றும் ஒவ்வொரு அடிப்படை வர்க்கமும் (பொருளாதார வளர்ச்சியின் வெளிப்பாடே அவ்வர்க்கம்) ஏற்கனவே உள்ள அறிவாளிகளைக் காண நேர்கிறது. உண்மையில் இந்த அறிவாளிகள் மிகவும் சிக்கலான, மிகவும் தீவிரமான அரசியல், சமூக மாற்றங்களாலும்கூட பாதிக்கப்படாத வரலாற்றுத் தொடர்ச்சியைப் பிரதிநிதுத்துவம் செய்பவர்களாகவே தோன்றுவர்”. இதற்கு உதாரணமாக கிராம்ஷி கத்தோலிக்கத் திருச்சபையின் உயர் மட்டத்தில் உள்ள சித்தாந்திகளைக் குறிப்பிடுகிறார். அவர்களை நிலப்பிரபுத்துவத்துடன் ஒர் அவயம் போல் பிணைக்கப்பட்டுள்ள அவயவ அறிவாளிகளாகவும் (organic intellectuals) கருதலாம் என்கிறார்.

பழைய உற்பத்தி முறையைப் பொறுத்தவரை அவயவ அறிவாளிகளாக விளங்கும் இக் கத்தோலிக்கச் சித்தாந்திகள், புதிய, பூர்ஷ்வா உற்பத்தி முறையைப் பொறுத்தவரை மரபான அறிவாளிகள்தாம் (traditional intellectuals). ஆனால் இச்சித்தாந்திகளும் கூட பூர்ஷ்வா உற்பத்தி முறையையும் பூர்ஷ்வா ஆட்சிமுறையையும் நியாயப்படுத்த உதவுகிறார்கள்...’ 'அவயவ அறிவாளிகள்’ என்ற கருதாக்கத்தைக் கீழ்க்காணும் வகையில் வரையறுக்கிறார் கிராம்ஷி: 1.சமூகத்திலுள்ள குறிப்பிட்ட அடிப்படை வர்க்கத்துடன் எந்த அளவுக்கு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளார்களோ அதன் அடிப்படையில் அறிவாளிகளை அவயவ அறிவாளிகள் என்று வரையறுக்கலாம் (மரபான அறிவாளிகளும்கூட, குறிப்பிட்ட அடிப்படை வர்க்கத்துடன் கொண்டுள்ள பிணைப்பின் காரணமாக அவயவ அறிவாளிகளாக விளங்கலாம்.); 2. புதிய உற்பத்தி முறையினால் உருவாக்கப்படும் அறிவாளிகள்.

உதாரணமாக, “தொழிற்சாலை முதலாளி, தன்னுடன் கூடவே தொழில்நுட்ப வல்லுநர், பொருளாதார நிபுணர், புதிய பண்பாட்டையும் புதிய சட்டவியலையும் ஏற்படுத்துபவர்கள் முதலியோரையும் உருவாக்கிக் கொள்கிறான்”.... பாட்டாளி வர்க்கம் உருவாக்க வேண்டிய அறிவாளிகள், இத்தாலியில் ‘அறிவாளிகள்’ என்று பொதுவாக அழைக்கப்பட்டு வந்தவர்களிலிருந்து வேறு பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று கிராம்ஷி கருதினார்: “நவீன உலகத்தில், பயிற்சி தேவைப்படாததும் ஆரம்ப நிலையிலுள்ளதுமான தொழிற்துறை உழைப்பிலும் கூட நெருக்கமாகப் பிணைக்கப்பபட்டுள்ள தொழில்நுட்பக் கல்வியின் அடிப்படையிலேயே புதிய வகை அறிவாளிகளை உருவாக்கவேண்டும்”. வெறும் சொற்பொழிவு ஆற்றுகிறவர்களாகவோ மேலோட்டமான உணர்ச்சிகளைத் தட்டியெழுப்புவராகவோ இந்தப் புதியவகை அறிவாளி இருக்க முடியாது. அவர் நடைமுறை வாழ்க்கையில் செயலூக்கமுள்ள பத்திரம் வகிப்பவராக இருக்க வேண்டும். அவர் நிர்மாணியாக, ஒழுங்கமைப்பாளராக, பரந்துபட்ட மக்களை இடைவிடாது தம்பக்கம் வென்றெடுக்கும் ஆற்றல் உடையவராக இருக்க வேண்டும். தொழில்நுட்பத் திறனைப் பெற்றுள்ள தொழிலாளி, வாழ்வைப் பற்றிய விஞ்ஞானக் கண்ணோட்டத்தை உடையவராகவும் வரலாற்றைப் பற்றிய மானுடத்துவ பார்வையைக் கொண்டவராகவும் மாற வேண்டும். பாட்டாளி வர்க்கத்திலிருந்து இத்தகைய அவயவ அறிவாளிகளை வளர்த்தெடுப்பதுடன் மரபான அறிவாளிகளையும் கட்சி வென்றெடுக்க முயற்சி செய்ய வேண்டும். -எஸ்.வி.ராஜதுரை-வ.கீதா, அந்தோனியோ கிராம்ஷி: வாழ்வும் சிந்தனையும், சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை, 1991, ப247-249.

இடதுசாரிகள் செய்யவேண்டிய வேலை, கிராம்ஷி கூறியதைப் போன்ற 'அவயவ அறிவாளிகளை' தலித்துகளிடையே இருந்து உருவாக்குவதேயாகும் என நூலாசிரியார் கூறுகிறார்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com