Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2006
பண்டித அயோத்திதாசரும், கிறித்தவமும்

ஆ.சிவசுப்பிரமணியன்

16 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் இராமேஸ்வரம் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான கடற்கரைப் பகுதிகளில் கத்தோலிக்கம் பரவியது. 17ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்கள் இதே பகுதியிலும், நாகப்பட்டினம் தொடங்கி பழவேற்காடு வரையிலான சில கடற்கரை ஊர்களிலும் சீர்திருத்தக் கிறித்துவத்தைப் பரப்பினர். ஆயினும் 16ஆம் நூற்றாண்டில் பரவி நிலைத்திருந்த கத்தோலிக்கத்தை இது விஞ்சவில்லை என்பதே உண்மை. 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘மதுரை மறைத்தளம்’ என்ற ஒன்றை உருவாக்கிய கத்தோலிக்கத் திருச்சபை, அதன் துணையுடன் உள்நாட்டுப் பகுதிகளில் கத்தோலிக்கத்தை பரப்பியது 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், டேனிஷ் மிஷினரியினர் தரங்கம்படியில் லூத்தரன் மிஷினை உருவாக்கி சீர்திருத்தக் கிறித்தவத்தைப் பரப்பினர். 18 ஆம் நூற்றாண்டில் பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி நிலைபெற்றபோது சி.எம்.எஸ்., எஸ்.பி.ஜி., ஏ.எம்.எம்., என்ற மிஷன்கள் சீர்திருத்தக் கிறித்தவத்தைத் தமிழ்நாட்டில் பரப்பின.1 திருநெல்வேலி மாவட்டத்தில் இச்சபைகளின் செயல்பாடு சற்று அழுத்தமாக வேர்விட்டது. புதுச்சேரிப் பகுதியில் பிரெஞ்சு ஆதிக்கம் உருவான பின்னர் கத்தோலிக்கம் அப்பகுதியில் பரவியது.

இவ்வாறு 16 ஆம் நூற்றாண்டு தொடங்கி, தொடர்ச்சியாக நிகழ்ந்த கிறித்தவ மதமாற்றத்தால் தமிழ்நாட்டின் அடித்தள மக்கள், குறிப்பாக, தலித் மக்கள் குறிப்பிடத் தகுந்த அளவில் கிறித்தவர்களாயிருந்தனர். இந்தியாவிலும் இத்தகைய நிலைதான் நிலவியது என்பதை ஏராளமாக உள்ள தீண்டப்படாத மக்கள் இந்தியாவில் இல்லையென்றால் கிறித்துவத்தைப் பரப்புவதென்ற முயற்சியே நம்பிக்கையற்று போயிருக்கும்’’ ‘‘இந்தியக் கிறித்தவர்கள் பிரதானமாக தீண்டப்படாதவர்கள் மத்தியிலிருந்தும் ஓரளவுக்குச் சூத்திர சாதியினரிடமிருந்து ஈர்க்கப்பட்டுள்ளனர் என்பதை மனதில் கொள்ள வேண்டியது அவசியம்.’’ என்ற அம்பேத்கரின் (1997-479, 522) கூற்றால் உணரமுடிகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களிடம் பரவிய கிறித்தவம் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளது. அவற்றை 1) குழந்தைகள் மத்தியில் 2) இளைஞர் மத்தியில் 3) வெகுஜனங்கள் மத்தியில் 4) பெண்கள் மத்தியில் 5) நோயாளிகள் மத்தியில் என்று பகுத்துக்கூறும் அம்பேத்கர் (1997:-520-522) இத்துறைகளில் இந்து சமயத்தின் பங்களிப்பைக் கிறித்தவத்துடன் ஒப்பிட்டு, ‘‘வரலாற்றுரீதியாகப் பார்த்தால், மனித சமுதாயத்திற்குச் சேவை செய்வது என்பது இந்து சமயத்திற்கும் இந்துக்களுக்கும் அன்னியமானது. இந்து சமயத்தில் பிரதானமாக உள்ளவை சடங்குகளும் ஆசாரங்களுமே. அது கோவில்களின் மதம். மனிதனை நேசிப்பது என்பதற்கு அதில் இடமில்லை. மனிதநேயம் இல்லாமல் சேவைகளை எவ்வாறு ஊக்குவிக்க முடியும்?’’ என்று அவதானித்துள்ளார். தமிழ்நாட்டில் பரவிய கிறித்தவத்திற்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இடையிலான உறவை மேற்கூறிய கருத்துக்களின் பின்புலத்தில் ஆராய்வது அவசியமான ஒன்று. ஆனால் இது விரிவாக ஆராய வேண்டியதாகும். அம்பேத்கருக்கு முன்னர் தமிழ்நாட்டில், ஆதிதிராவிடர் பிரிவில் பிறந்து 19 ஆம் நூற்றாண்டுத் தமிழக அறிஞர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராக விளங்கியவர் அயோத்திதாசர். கிறித்தவம் குறித்த இவரது கண்ணோட்டத்தை அறிமுகப்படுத்துவதே இக்கட்டுரை.

II

தமிழ்நாட்டில் கிறித்தவம் பரவி வேர்விடத் தொடங்கியபோது இந்துக்கள் தரப்பிலிருந்து இரு வகையான அணுகுமுறைகள் வெளிப்பட்டன. முதலாவதாக ஆதிக்க சாதியினரின் அணுகுமுறையைக் குறிப்பிடலாம். தம்மால் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினர், கிறித்தவர்களாகி, கல்வி பெற்று, அதன் பயனாக சிறு வேலை வாய்ப்புகளையும், நல்ல ஆடை போன்ற பண்பாட்டு அடையாளங்களையும் பெறுவதைப் பொறுக்க முடியாத நிலையில் கிறித்துவ மதமாற்றத்திற்கு எதிராக இவர்கள் குரல் எழுப்பினர். கிறித்தவ மதமாற்றத்திற்கு எதிராகச் செயல்பட ‘சாலைச் சங்கம்’, ‘விபூதிச் சங்கம்’ போன்ற அமைப்புகளை நிறுவினர்.2 சில நேரங்களில் கிறித்துவ மறைபரப்பாளர்களுக்கு எதிராக வன்முறையையும் மேற்கொண்டனர்.

இச்செயல்களுக்கு அடிப்படைக் காரணம் அவர்களது மட்டுமீறிய மதப்பற்று என்பதைவிட, ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக முன்னேற்றம் மீதான காழ்ப்புணர்ச்சியும், குறைந்த கூலிக்கு, அடித்தள மக்கள் வேலை செய்ய இனி வரமாட்டார்கள் என்ற அச்சமும் காரணம் என்று கூறுவது பொருத்தமானதாகும். மற்றொருபுறம், ஆதிக்க வகுப்பில் பிறந்து வளர்ந்தாலும், தாம் கற்ற ஆங்கிலக் கல்வியின் வாயிலாகப் பெற்ற ஜனநாயக சிந்தனையின் உந்தலும், மனிதநேய உணர்வும் ஏற்படுத்திய தாக்கத்தின் அடிப்படையில் கிறித்துவ மதமாற்றத்தை சிலர் நோக்கினர். 1891 ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் நாளிட்ட ‘இந்து’ ஆங்கில இதழில் வெளியான பின்வரும் செய்தியை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம் (Gopalakrishnan, M. 2000:219).

‘‘தாழ்த்தப்பட்ட சாதியினரின் நிலையை உயர்த்த, கிறிஸ்தவ மிஷினரிகள் எடுத்து வரும் முயற்சிகள் இந்திய மக்களின் பாராட்டுக்குரியன. இந்தச் சாதியினரின் நிலை மிகவும் மோசமானது. இவர்களைத் தங்களுடைய சமூகத்தின் ஓர் அங்கமாக இந்துக்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இந்து உயர்சாதியினர், பறையர்களையும் ஏனைய, தாழ்த்தப்பட்ட சாதியினரையும் நடத்துவதைவிட இழிவான மோசமான நிலைவேறு இருக்கமுடியாது. முழுமையான அடிமைத்தனத்தைத் தவிர இந்து மதம் இவர்களுக்கு வேறு எதையும் தரவில்லை. அவர்கள் அந்த அடிமைத்தனத்திற்கு மட்டுமே தகுதியானவர்கள் என்று இந்துமதம் வரையறுக்கிறது. ஆனால் கிறித்தவ மிஷினரிகள் இவர்களை வேறு மனப்பாங்கில் நடத்துகிறார்கள். சாதி வேறுபாடுகளின் மேல் கொண்ட இரக்கத்தாலும், இந்த மிஷனரிகள் இவர்களைத் தங்களின் ஆதரவின் கீழ் கொண்டு வந்து, இவர்களின் நிலையை உயர்த்தப் பெரிதும் பாடுபட்டிருக்கிறார்கள். தங்களுடைய பள்ளிகளில் இவர்களுக்குக் கல்வி அளிக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கைத் தரம் மேம்பட உதவுகிறார்கள். ஒழுக்கத்திலும் ஆன்மீகத்திலும் அவர்கள் உயர மத ரீதியாகவும் சிறந்த பயிற்சி அளிக்கிறார்கள். தங்களுடைய இப்போதைய இழிவான நிலையில் இருந்தும் வறுமையில் இருந்தும் இந்த பறையர்கள் விடுபட இந்த மிஷினரிகளின் ஆதரவைத் தவிர வேறு வழி இல்லை. இந்த தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது அரசாங்கம் அக்கறை கொள்ளச் செய்யும் முயற்சிகள், இந்த நல்ல மிஷினரிகள் இப்போது மேற்கொண்டுள்ளனர்.’’

திவான் பகதூர் ஸ்ரீநிவாசராகவய்யங்கார் என்பவர் ஆங்கில அரசுக்கு அளித்த அறிக்கை ஒன்றில் சென்னை மாநிலப் பறையர்களின் முன்னேற்றம் இசுலாமியராகவோ, கிறித்தவராகவோ அவர்கள் மாறுவதில்தான் இருக்கிறது என்று எழுதியுள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.3

தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களுள் ஒருவரான அ.மாதவய்யா (1872-1925) தமது கிளாரிந்தா (1915), சத்தியானந்தன்(1909), முத்து மீனாட்சி (1908) ஆகிய நாவல்களிலும் கிறித்தவ மதமாற்றம் குறித்து உடன்பாடான முறையில் சில கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். அதே நேரத்தில் கிறித்தவத்தில் நிலவும் சாதிய வேறுபாடுகளை விமர்சித்தும் உள்ளார்.

III

இவ்வாறு கிறித்தவ மதமாற்றம் குறித்து மாறுபட்டக் கருத்துக்கள் நிலவி வந்த தமிழ்ச் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட சமூகமான வள்ளுவர்குடியில் தோன்றிய அயோத்திதாசர் 1907 இல் தொடங்கி 1914 வரை தாம் நடத்திய தமிழன் என்ற பத்திரிக்கையில் கிறித்துவம் குறித்தும் கிறித்தவ மதமாற்றம் குறித்தும் தமது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். இதற்கு முன்னர் 1870ஆம் ஆண்டில் ‘அத்வைதானந்த சபை’ என்ற அமைப்பை உருவாக்கியிருந்தார் (தர்மராஜன்,2003, 30-31).

கிறித்துவ மறைபரப்புப் பணிக்கு எதிரான செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல், அத்வைத மரபின் மூலம் வர்ணாசிரம ஒடுக்குமுறைகளுக்கு எதிராகச் செயல்படல் என்பன இவ்வமைப்பின் நோக்கங்களாயிருந்தன. (பின்னர் இக்கருத்து நிலையிலிருந்து அவர் தன்னை விடுவித்துக் கொண்டார்.). தமிழன் பத்திரிக்கையில் கிறித்தவம் தொடர்பாக அவர் எழுதிய கட்டுரைகளில் 1) கிறித்தவர்களாக மதம் மாறியதால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட பயன்கள். 2) கிறித்தவத்திற்கும் சாதிக்கும் இடையிலான உறவு ஆகியன இடம்பெற்றன. 1909, மார்ச் 24ஆம் நாளிட்ட தமிழன் இதழில் மோசே என்னும் தீர்க்கதரிசியைக் குறித்து நீண்ட கட்டுரை ஒன்றை அயோத்திதாசர் எழுதியுள்ளார் (அலாய்சியஸ் 1999, 565-587). இக்கட்டுரையைப் படிக்கும்போது விவிலியத்தை, குறிப்பாக நற்செய்தி ஏடுகளை அவர் நன்றாகப் படித்திருப்பது தெரிய வருகிறது. 1909, ஜனவரி 27 தமிழன் இதழில் கிறிஸ்தவன் என்னும் சொல்லுக்கு பின்வருமாறு விளக்கம் தருகிறார். (மேலது 92).

‘‘கிறீஸ்தவன் எனுஞ் சிறந்த மொழியானது
அவன் கிறிஸ்து எனும் பொருளைத் தரும்’’

அதாவது கிறீஸ்துவின் நடையுடை பாவனை ஒழுக்கங்களைப் பின்பற்றியவன் எவனோ அவனே கிறீஸ்து அவனாவானென்பதாம்.

மதம் மாறிய இந்தியக் கிறிஸ்தவர்களை மீண்டும் இந்துக்களாக்கும் முயற்சியில் ஈடுபட்ட அமைப்புகளுள் ‘ஆரிய சமாஜம்’ என்பதும் ஒன்று. கிறீத்தவர் ஒருவர் ஆரிய சமாஜத்தில் சேர்ந்ததை விமர்சனம் செய்து 1910 ஜூன்8 நாளிட்ட தமிழன் இதழில் பின்வருமாறு எழுதியுள்ளார். ‘‘தலைநோய்க் கண்டவன் தலையணை வுறையை மாற்றிப் போட்டுக் கொள்ளுவது போல் இராயப்பனென்பவன் இராஜகோபாலனென்னும் பெயரை மாற்றிக் கொள்ளுவதால் உண்டாம் பயன் யாது’’.

கிறீஸ்தவ சோதிரர்களே, கிறீஸ்துவென்னும் ஒருவர் பிறந்தார். வளர்ந்தார் அனந்த நீதிகளைப் போதித்தாரென்பது சரித்திராதாரமுண்டு. அதுபோல் ஆரியரென்பவர் ஒருவர் பிறந்தாரா வளர்ந்தாரா? ஏதேனும் நீதிகளைப் போதித்தாரா, சரித்திரமுண்டா உசாவுங்கள் தேற உசாவிச் சேருங்கள், சேருங்கள்.

* * *

குண்டூரிலிருந்து வி.ஏபிராம் என்பவர், ‘‘நமது நேயராம் கிறீஸ்தவர்கள் கிறீஸ்துவானவர் நமக்காகப் பாடுபட்டார். நம்முடைய பாபங்கள் நீங்கிவிட்டனவென்று கூறுகின்றார்கள். அவர்கள் வாக்கை மறுத்து முன் செய்துள்ள பாவங்கள் நீங்கிவிட்டதா, இனி செய்யும் பாவங்களும் நீங்கிவிடுமாவென்று வினவுங்கால் யாதொரு விடையுமின்றி திகைக்கின்றார்கள்.’’என்று வினாயெழுப்பியிருந்தார்.

இவ்வினாவை வெளியிட்டு அதற்குப் பின்வரும் விடையை அதற்குப் பின்வரும் விடையை 1910 மார்ச் 2ஆம் நாளிட்ட தமிழன் இதழில் (அலாய்சியஸ் 1999, 135-136) வெளியிட்டுள்ளார்.

‘‘முன் செய்துள்ள பாவத்திற்காக ஒருவர் தோன்றி பாடுபட்டாரென்னும் உறுதி உள்ளத்தில் லயிக்குமாயின் பின்னும் பாவங்களுக்காய் மற்றொருவர் தோன்றி பாடுபடுவார் என்னும் தைரியத்தால் தினேதினே பாவங்கள் அஞ்சாது செய்வதற்காகும்.’’ ஆதலின் அவரவர்கள் அறியாது செய்த பாவத்திற்காய் ஒருவர் வந்து பாடுபட்டார் என்பது வீண் மொழியேயாம்.

கிறீஸ்து நமக்காகப் பாடுபட்டார் என்னும் மொழியின் அந்தரார்த்தம் யாதெனில், எருசலேமிலுள்ள விவேகிகள் கிறிஸ்துவின் மகத்துவத்தைப் பற்றி பேசுங்கால், அவர் தான் கண் கண்ட ஞானத்தின் காட்சியை தன்மட்டிலும் அனுபவித்துக் கொள்ளாது கருணை கொண்டு நமக்கும் அந்த பேரானந்த ஞானத்தை ஊட்டி ரட்சிக்க முயன்றபடியால் விவேகமற்றோர்களாகிய சதுசேயரும், பரிசேயரும் அவரைத் துன்பப்படுத்திக் கொல்ல ஆரம்பித்தார்கள். அதன் செயல் கொண்டு கிறீஸ்து நமக்காகப் பாடுபட்டார் என்று கூறியுள்ளார்கள்.

சாதிபேதமற்ற திராவிடர்களுக்குப் பிராண பிச்சைக் கொடுத்து ஆதரிப்பது பிரிட்டீஷ் துரைத்தனம். கல்வி கொடுத்து காப்பாற்றி வருவது பிரோட்டிஸ்டெண்ட் பாதிரிகளின் கருணை. இவ்விருதிரத்தோர் செய்து வரும் நன்றியை மறந்து சாண் தண்ணீரில் மல்லாந்து விடுவதபோலும், வெல்லமென்னும் வாயை நக்குவதுபோலும் சத்துருக்களின் சொற்பப் பிரயோசனத்தை நாடியவர்பாற் சேருவதாயின் உள்ள சுகமுங்கெட்டு கூடிய சீக்கிரத்தில் நாசமடைவோம் என்பத சாத்தியம்.

IV

புதுச்சேரியிலுள்ள கத்தோலிக்கத் தேவாலயம் ஒன்றில், பாதிரியார் ஒருவர், ஆதிதிராவிட கிறித்தவர்களை நோக்கி, ‘‘நீங்கள் எல்லோரும் தாழ்ந்த சாதியார், உயர்ந்த சாதி கிறிஸ்தவர்களுடன் உட்கார கூடாது’’ என்று கூறினார். ‘‘இக்கோவிலில் எப்போதும் இல்லாத வழக்கத்தை நீங்கள் ஏற்படுத்துவது நியாயமல்லவே என்று ஆதிதிராவிடர்கள் கூறியதற்கு அக்குருவின் எதிர்வினை எவ்வாறு இருந்தது என்பதனை,

‘‘குருவானவருக்கு மிக்க கோபம் பிறந்து உங்கள் பெண்ணை சக்கிலிக்குக் கொடுப்பீர்களா என்று சம்மந்தமும் கோரினாராம். அவ்வார்த்தைக்கு ஏழை கிறிஸ்தவர்கள் கோபிக்காமல் தாழ்ந்த உத்திரவைக் கொடுத்தும் குருவின் கோபம் அடங்காமல் கோவிலுள் செபஞ் செய்துக் கொண்டிருந்த ஓர் பெண்பிள்ளையின் முதுகில் வலுவாகத் தட்டி அழைத்துக் கொண்டு போய் வெளியில் விட்டுவிட்டாராம்.’’ என்று 1908 டிசம்பர் 23 ஆம் நாளிட்ட தமிழன் இதழில் எழுதியுள்ளார் (அலாசியஸ், 1999:93) ஒடுக்கப்பட்ட மக்களிடையே உட்சாதி உணர்வையூட்டி, பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டு, தமது செயலை நியாயப்படுத்திய பாதிரியாரை அயோத்திதாசர் இவ்வாறு அம்பலப்படுத்தியுள்ளார்.

‘‘ஒரு மனிதன் தங்களை வந்தடுத்து தங்கள் கூட்டத்தில் சேர்ந்தவுடன் பிள்ளைப் பெறுமாயின் அதற்கு ஞானஸ்நானக் கட்டணத் தொகை, ஆதிவாரந்தோரும் உண்டித் தொகை, அர்ச்சய சிரேஷ்டர்களின் உற்சாகத் தொகை, புது நன்மெய், பழயநன்மெய்த் தொகை, விவாகத்தின் தொகை, பிள்ளையோ, பெரியோரோ இறந்தார்களாயின் குழிக்குத் தொகை, குழித்தோண்டுந் தொகை, மணியடிக்குந் தொகை, தூம்பாகுருசுத் தொகை, மீன் மெழுகுவர்த்திகளுதவாது, தேன்மெழுகுவர்த்திகள் தொகை மற்றுமுள்ளத் தொகைகளையும், கட்டணங்களையும் விவரங்கண்டெழுதின் விரியுமென்றஞ்சி விடுத்துள்ளோம்.

துரைமக்கள் வீடுகளில் ஊழியஞ்செய்யும் அரண்மனை உத்தியோகஸ்தர்களாகுந் திராவிடர்கள் தேகசக்தியிலிருந்து ஊழியஞ் செய்யுமளவும் அவர்களிடத்தில் மேற்கண்டபடி தொகைகளை வசூல் செய்து கொண்டுவந்து அவர்கள் தேகசக்தி ஒடுங்கியவுடன் ஓடுகளை கையில் கொடுத்து பிச்சையேற்க விட்டுவிடுகிறீர்கள். அந்தோ, இத்திராவிடர்கள் கஷ்டத்திற்கு நஷ்டத்திற்கும் அஞ்சாதவர்கள். கிழவன் கிழவியானபோதிலும் ஒருவரிடஞ்சென்று உதவியென்று, கேக்காமல் விறகுவிற்றேனும், புல்விற்றேனும் ஓரணா சம்பாதித்து சீவிக்கும் ரோஷமுடையவர்கள். இத்தகைய ரோஷமுடையோர் உங்களை அடுத்துக் கண்ட பலன் கைகளில் கப்பரையும், கழுத்தில் மணிகளுமேயானார்கள்.

துரைகள் வீட்டு உத்தியோகங்களைக் கற்றுக் கொள்ளாமல் கைத்தொழிலையேனும், வியாபாரத்தையேனும் கற்றுக் கொண்டிருப்பார்களாயின் உங்களுக்குச் செலுத்த வேண்டியத் தொகைகளை மரணபரியந்தஞ் செலுத்தி தங்களைப் புதைக்குங் குழிக்குத் தொகையைச் செலுத்தி விடுவார்கள்.

சேரிகளின் மத்தியில் ஒவ்வோர் கோவில்களைக் கட்டி எளிய பேதை மக்களின் கைப்பொருட்களை வேண்டியவரையுங் கவர்ந்து இரக்கமின்றி ஒவ்வொருவர் கைகளிலும் ஓடுகளைக் கொடுத்து வருவதுமன்றி அம்மட்டிலும் விட்டுவிடாமல் இவர்களுக்கு ஆயிரத்தி ஐந்நூறு வருடமாக சத்துருக்களாயிருந்து நசித்துவந்த சாதிபேதம் உள்ளோர்களை சேர்த்துக் கொண்டு, நீங்கள் கிறீஸ்துவக் கூட்டத்தில் சேர்ந்தபோதிலும் முதலியார் முதலியாராயிருக்கலாம், நாயக்கர் நாயக்கராயிருக்கலாம், செட்டியார் செட்டியாராயிருக்கலாம், சந்தனப் பொட்டு வைக்க வேண்டுமானால் சந்தனக் கட்டையை விஞ்சாரித்துக் கொடுத்து விடுவோம். குங்குமப் பொட்டு வைக்கவேண்டுமானால் குங்குமம் விஞ்சாரித்துக் (மந்திரித்து) கொடுத்துவிடுவோம். எங்களுக்குச் சேரவேண்டிய தொகைகள் மட்டிலும் சரிவரச் சேர்ந்துவிட்டால் போதும் என்று உயர்த்திகக் கொண்டு ஆதியில் கிறீஸ்து மதத்தை அடுத்து எங்கும் பரவச் செய்த ஏழை மக்களை எதிரிகளிடம் இரக்கமில்லாமல் காட்டிக் கொடுத்து இவர்கள் பழயக் கிறீஸ்தவர்கள் அல்ல, பறைக் கிறீஸ்தவர்கள் என்றுத் தாழ்த்தி மனங்குன்றி நாணமடையச் செய்துவிட்டீர்கள். இதுதானே உங்களை நம்பிய பலன், இதுதானே உங்களை அடுத்த பிரயோசனம், இதுதானே துக்க நிவர்த்திப் பெற்று மோட்சத்திற்குப் போகும் வழி, இதுதானே கிறிச்ஸ்துமதப் போதகர்களின் அன்பு. இங்கிலீஷ் துரைத்தனம் இதுவரையில் இல்லாமல் இருக்குமாயின் சத்துருக்களால் முக்கால் பாகம் நசிந்து உள்ளக் கால்பாகமும் உங்களால் ஓடெடுத்துக் கொண்டே நசிந்திருப்பார்கள்.’’

பறையர் சமூகத்தினரை முன்னேற்றுகிறோம் என்று கூறி அவர்களை கிறித்தவ மிஷனெரிகள் வஞ்சிக்கிறார்கள் என்ற கருத்தை

‘‘மிஷனெரிகளென்போர் ஏழைப் பறையரென்போர்களைப் படங்கள் பிடித்து மேல்நாட்டிற்குக் கொண்டு போய் அவ்விடமுள்ள பிரபுக்களுக்குக் காண்பித்து அவர்களை விருத்தி செய்கின்றோமென்று வேண்டிய திரவியங்களைச் சேகரித்து வந்து கல்வி சாலைகளை ஏற்படுத்தி ஏழைப் பறையர்களிடம் சம்பளமும் பெற்றுக் கொண்டு சேகரித்து வந்த பணத்தால் பெரிய சாதிகளென்போர்களைக் கிறித்தவர்களாக்கி அவர்களுக்கு உதவி செய்து கொண்டு, பறையரென்போர்களைக் கவனிக்காமல் வண்டி குதிரை வைத்துக் கொண்டு தங்கள் சுகத்தை விருத்தி செய்துக் கொள்கிறார்கள்.’’ என்று 1907 நவம்பர் 20-ஆம் நாள் தமிழன் இதழில் எழுதியுள்ளார். (அலாய்சியஸ், 2003:5). ‘சாதியானது இந்து மதத்தின் ஆதார மூச்சாக சந்தேகத்திற்கு இடமின்றி அமைந்துள்ளது. ஆனால் இந்துக்கள் காற்றை அசுத்தமாக்கியதால் சீக்கியர்கள் இஸ்லாமியர்கள் கிறித்தவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்பார் அம்பேத்கர். இக்கூற்றுக்கேற்ப சாதியத்தை உள்வாங்கிய கிறித்தவர்களை ‘அரைக் கிறித்தவர்கள்’ என்று பெயரிட்டு அழைக்கிறார். இவ்வாறு பெயரிட்டமைக்கு அவர் தரும் விளக்கம் வருமாறு...

‘‘சாதியாசாரமும், சமயாசாரமும் விடுவதில்லையென்றால் அவனுக்குக் கிறித்தவனென்னும் பெயர் பொருந்தவே பொருந்தாது.... மநுதர்ம சாஸ்திரக் கட்டுப்பாடும் வேண்டும் சாதியாசாரமும் வேண்டுமென்பதில் அரை இந்துவாகவும், கிறிஸ்து மத ஆசாரமும் வேண்டுமென்பதில் அரைக் கிறிஸ்தவனாகவும் விளங்குகின்றார். ’’

‘‘கீற்றில் வேண்டாம் சாற்றில் வாருங்கோ’’ ளென்னும் பழமொழிக் கிணங்க நான் கிறிஸ்தவனாகிவிட்டேன். இந்துக்களது மதாசாரம் வேண்டாம் சாதியாசார மட்டும் வேண்டுமென்பதில் அவர் சாதியில் இந்துவும், மதத்தில் கிறிஸ்தவனுமாயிருக்கின்றார். ஆதலின் அவரை அரைக்கிறிஸ்தவ னென்பதே துணியாம்.’’ (அலாய்சியஸ், 2003, 38-39)

கிறித்துவம் சாதியை ஏற்றுக் கொள்ளலாமா என்ற விவாதம் எழுந்தபோது அயோத்திதாசர் பின்வரும் கருத்தை முன்வைத்துள்ளார்.

சாதியை உண்டு செய்தவர்களே சாதிகளை ஒழித்துக் கொண்டு வரும்போது சாதி நாற்றமில்லால் இத்தேசத்திற்கு வந்துள்ள கிறீஸ்து மதத்தில் சாதி வைக்கலாமா வைக்கலாகாதா என்று ஆலோசிப்பது விந்தையே.

கிறிஸ்துவர்களுக்குள்ளும் தீண்டப்படும் கிறீஸ்தவர்கள், தீண்டப்படா கிறீஸ்தவர்களுமுண்டோ. கிறீஸ்து வந்து நடுத்தீர்வையளிக்குங்கால் எந்தக் கிறீஸ்தவர்களை வலப்புறத்திலும், எந்தக் கிறீஸ்தவரை இடபுறத்திலும் வைப்பாரோ தெரியவில்லை.

வேண்டுமென்னுங் கெட்ட எண்ணத்தால் ஓர் பெருங்கூட்டத்தோரை தீண்டாதவர்களென்றும், தாழ்ந்த சாதியோரென்றும் கூறி மனத்தாங்கல் உண்டாக்கிவரும் துற்கருமப் பலனானது இவ்வுலகத்திலும் விடாது நடுத்தீர்வையிலும் விடாதென்பது சத்தியம்.

கிறீஸ்துவின் சத்தியமொழி ‘‘தாழ்த்தப்பட்டவன் உயர்த்தப்படுவான்’’.

அயோத்திதாசரைப் போன்றே அம்பேத்கரும் கிறித்தவத்தின் முக்கியக் குறைபாடான அதன் சாதியச் சார்பைக் கண்டுள்ளார். இந்தியாவில் கிறித்தவ மதத்தின் வளர்ச்சியை மட்டுப்படுத்தியதாக, மூன்று காரணங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவது, ஐரோப்பியர்களின் ஒழுக்கக்கேடான நடத்தை.

இரண்டாவதாக, கத்தோலிக்கம், கத்தோலிக்கமல்லாத கிறித்தவப் பிரிவுகளுக்கிடையில் மதமாற்றத்தை மையமாகக் கொண்டு நிகழ்ந்த போராட்டங்கள்.

மூன்றாவதாக, உயர் வகுப்பினரை மதமாற்றிவிட்டால், ஏனைய வகுப்பினரை மதமாற்றவது எளிது என நம்பியது.

அம்பேத்கர் (1997: 486-509) குறிப்பிடும் மூன்றாவது காரணம் சாதியுடன் சமரசம் செய்துகொள்ளும்படி கிறித்தவ மறைபணியாளர்களைத் தூண்டியது. கத்தோலிக்கமானாலும், சீர்திருத்தக் கிறித்தவமானாலும், சாதிய மேலாண்மையை அனுசரித்தே செயல்பட்டன. சிலநேரங்களில் இவ்வணுகுமுறை மிகவும் வெளிப்படையாகவும் அருவருக்கத்தக்க முறையிலும் வெளிப்பட்டது. 1841 வாக்கில் ராபர்ட் நோபிள் என்ற மறைபணியாளர் மசூலிப் பட்டணத்தில் பணிபுரிந்தபோது அவர் மேற்கொண்டச் செயல்களை அம்பேத்கர் (1997: 549-550) பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

பறையர்கள், தோல் பதனிடும் தொழிலாளர், தெருச் சுத்தம் செய்யும் தோட்டிகள் ஆகியவர்களை அவர் பள்ளியில் சேர்த்துக் கொள்வதில்லை என்ற விதியைக் கடைப்பிடித்தார்.

மேலும் தமது செயலை நியாயப்படுத்தும் வகையில் இங்கிலாந்தில் தெய்வ பக்தியுள்ள பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை சமையல்காரர், பணிப்பெண்கள் ஆகியோருடன் சேர்ந்து கல்வி கற்பதை அனுமதிக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டார்.3 இறுதியாக,

ஏசுநாதரின் போதனையைக் கற்றுக் கொடுப்பதற்கு முன், பிராமணர்கள் பறையர்களோடும் தோட்டிகளோடும் அதே வகுப்பில் உட்காரவேண்டுமென்று கோருவது சரியென்று நான் நினைக்க முடியாது. அவ்வாறு கோருவது நியாயமற்றதும் கிறித்தவத் தன்மையற்றதுமாகும்’ என்று குறிப்பிட்டார்.

கிறித்தவ மிஷினரிகளின் இத்தகைய மனோநிலையை அறிந்திருந்த அம்பேத்கரை, 1936ஆம் ஆண்டில் அசரியா என்ற சீர்திருத்தக் கிறித்தவச் சபையின் பிஷப் சந்தித்து உரையாடினார். இச்சந்திப்பில் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவரது வரலாற்றை எழுதிய சூசன் பில்லிங்டன் ஹார்பெர் (2000 312-330) குறிப்பிட்டுள்ளார். தம்மிடம் உரையாடிக் கொண்டிருந்த அசரியாவை நோக்கி,

‘நாங்கள் (தீண்டத்தகாதவர்கள்) கிறித்தவர்களாக மாறினால் எங்கு வாழ்ந்தாலும் ஒரே திருச்சபையாக ஒன்றுபட்டிருப்போமா?’

‘‘எல்லாவகையான சாதியப் பாகுபாடுகளிலிருந்தும் நாங்கள் விடுபட்டிருப்போமா?’’ என்று கேட்டார். ‘இதுபோன்று ஒரு போதும் என் வாழ்நாளில் நான் அவமானப்பட்டதில்லை. இவ்விரு கேள்விகளுக்கும் ‘ஆம்’ என்று என்னால் பதில் அளிக்க முடியாததால் வெட்கக் கேடான நிலையில் திரும்பி வரத்தான் என்னால் முடிந்தது’ என்று அசரியா கூறியதாக சூசன் பில்லிங்டன் எழுதியுள்ளார். அசரியா மட்டுமல்ல எந்தக் கிறித்தவத் திருச்சபையின் அதிகாரிகளும் அம்பேத்கரின் இவ்விரு வினாக்களுக்கும் ஆம் என்று விடையளித்திருக்க முடியாது என்பது எதார்த்தமான ஒன்று.

அம்பேத்கர், அசரியா ஆகிய இருவருக்கும் இடையில் நிகழ்ந்த இவ்வுரையாடலின் பின்புலத்தில் கிறித்தவம் குறித்த அயோத்திதாசரின் கடுமையான விமர்சனங்களை நோக்கினால் அவரது அணுகுமுறையை மறுக்க இயலாது.

V

கிறித்தவ சமய அமைப்பிற்கு வெளியே நின்றவாறு, தன்னை ஒரு பூர்வீக பௌத்தராக அடையாளப்படுத்திக் கொண்டு, கிறித்தவ சமயத்திற்குள் செயல்படும் சாதிய மேலாண்மையையும் அங்கு நிலவும் தீண்டாமையையும் அயோத்திதாசர் வெளிப்படுத்தியுள்ளார். இதன் அடிப்படையில் அவர் கூற்று எந்த அளவுக்கு நேர்மையானதாக இருக்கும் என்று ஐயம் சிலருக்கு ஏற்படலாம். இதைப்போக்கும் வகையில் 1927 இல் தென்னிந்தியாவிற்கு வந்த சைமன் கமிஷனிடம் ‘தென்னிந்தியாவின் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கொடுத்த மனுவில் கிறித்தவத் தலித்துகளின் நிலை குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன (அம்பேத்கர் 1997, 526-528). இம்மனுவிலிருந்து எடுத்துக்காட்டாக சில பகுதிகளைப் படித்தாலே அயோத்திதாசரின் எழுத்துக்கள் உண்மையானவை என்பதை அறிந்து கொள்ளலாம்.

‘‘மத அடிப்படையில் நாங்கள் கிறித்தவர்கள் - ரோமன் கத்தோலிக்கர்களும் புரோடெஸ்டெண்டுகளும் சென்னை மாகாணத்தில் உள்ள இந்தியக் கிறித்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடையே இருந்து மாறியவர்கள் சுமார் 60 சதவிதமாக உள்ளனர்.

கிறித்தவ சமயப் பரப்பாளர்களின் அலட்சிப் போக்கு, அதிகாரமின்மை, அக்கறை இன்மை ஆகியவையும் சேர்ந்து, கிறித்தவர்களாக ஆவதற்கு முன்பு நாங்கள் எந்நிலையில் இருந்தோமோ அதே நிலையில்தான் இன்றும் எங்களை வைத்துள்ளன. அதாவது தீண்டப்படாதவர்களாக, நாட்டில் நிலவும் சமுதாயக் சட்டங்களால் கேவலமான முறையில் நடத்தப்படுபவர்களாக, சாதிக் கிறித்தவர்களால் நிராகரிக்கப்பட்டவர்களாக, சாதி இந்துக்களால் வெறுக்கப்படுபவர்களாக, எங்களது சொந்த இந்துமதத் தாழ்த்தப்பட்ட சகோதரர்களால் ஒதுக்கப்பட்டவர்களாக இருந்து வருகிறோம்.’’

கிறித்தவ சமயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையே மறுத்து, நேசம், தர்ம சிந்தனை, சகோதரத்துவம் ஆகியவற்றிற்கு மாறாக எங்கள் ‘சக கிறித்தவர்கள்’ மாதா கோவில்களில் கூட எங்களைத் தீண்டப்படாதவர்களாகவும் அணுகாதவர்களாகவும் நடத்துகின்றனர், முன் இடத்திலிருந்து பின்னுக்குத் தள்ளி எங்களுக்குத் தனிஇடம் ஒதுக்கி, அதை அவர்கள் பகுதியிலிருந்து இரும்புகளாலோ சுவர்களாலோ தடுப்பு எழுப்புகின்றனர். அத்தகைய மாதா கோவில்கள் பல உள்ளன.

‘‘புனித சடங்கு நிகழ்ச்சியின்போது, தீட்டைத் தவிர்ப்பதற்காக மிகவும் கேலிக்கிடமான முறையில் நாங்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறோம். அவர்கள் உயர்ந்த இடத்தைப் பெறுகிறார்கள். இந்து உயர் ஜாதியினர் இந்து தாழ்த்தப்பட்ட பிரிவினரை எவ்வாறு நடத்துகின்றனரோ அவ்வாறே இந்த சாதிக் கிறித்தவர்களும் கிறித்தவ தாழ்த்தப்பட்ட பகுதியினரையும் நடத்துகின்றனர். சைமன் கமிஷனிடம் தென்னிந்தியாவின் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தந்த மனுவில் இடம்பெற்றுள்ள மேற்கூறிய செய்திகளை எடுத்துக்காட்டிவிட்டு ‘இது கடுமையான குற்றச்சாட்டாகும்’ என்று குறிப்பிடும் அம்பேத்கர் பின்வருமாறு விமர்சனங்களை முன்வைக்கிறார்.

கிறித்தவ மதத்திற்கு மாறியவர்களிடையே சாதி உணர்வைப் போக்குவதில் கிறித்தவ சமயம் வெற்றி பெறவில்லை என்பதுதான் உண்மை.

இந்துக்களின் வாழ்க்கையில் போன்றே கிறித்தவர்கள் வாழ்விலும் சாதிதான் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை மறுக்க முடியாது.

இந்துக்கள் போலவே இவர்களும் சாதியின் கோரப் பிடியில் சிக்கி உழல்கிறார்கள்.

அம்பேத்கரின் மேற்கூறிய விமர்சனத்தை ஒத்ததுதான் அயோத்திதாசரின் விமர்சனமும். கிறித்தவம் பற்றி அவர் கூறியுள்ள கருத்துக்களையும் விமர்சனங்களையும் ஒருசேரத் தொகுத்து நோக்கும் போது பின்வரும் முடிவுகளுக்கு வரலாம்.

1) கிறித்தவர்களின் சமூகப் பணியை, குறிப்பாக தலித்துகளுக்குக் கல்வி வழங்கியதை அவர் மதித்துப் பாராட்டியுள்ளார்.

2) தமிழ்நாட்டின் படித்த அறிவாளிகள் சிலரைப் போல் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு கிறித்தவ மதமாற்றத்தை அவர் பரிந்துரைக்கவில்லை.

3) அதே நேரத்தில் இந்து சமயக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் மதமாற்றத்தை எதிர்க்கவும் இல்லை.

4) அவர் காலத்தில் நிலவிய கிறித்தவ மதமாற்றத்தைக் குறித்த இவ்விரு அணுகுமுறைகளுக்கும் மாறாக ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணோட்டத்தில் கிறித்தவ மதமாற்றத்தை அவர் அணுகியுள்ளார்.

5) இதன் அடிப்படையிலேயே சாதியத்தை உள்வாங்கிய தமிழ்நாட்டுக் கிறித்தவத்தை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

6) காணிக்கை என்ற பெயரில் ஏழைக் கிறித்தவரிடமிருந்து பல்வேறு பெயர்களில் பணம் வாங்குவதையும் கண்டித்துள்ளார்.

‘இந்தியக் கிறித்தவர்கள்பால் நான் ஆழமான அக்கறை கொண்டிருக்கிறேன். ஏனெனில், அவர்களில் மிகப் பெரும்பான்மையினர் தீண்டப்படாத சாதிகளிலிருந்து ஈர்க்கப்பட்டவர்கள். நான் செய்துள்ள விமர்சனங்கள், நண்பனின் விமர்சனங்களேயன்றி ஒரு எதிராளியின் விமர்சனங்கள் அல்ல. அவர்களின் குறைகளை அவர்களது கவனத்திற்குக் கொண்டு வந்ததற்குக் காரணம் அவர்கள் பலமுடையவர்களாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புவதால்தான்.’

என்று இந்தியக் கிறித்தவம் குறித்த தமது விமர்சனக் கட்டுரை ஒன்றின் இறுதியில், அம்பேத்கர் (1997-561) குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டுக் கிறித்தவம் குறித்த அயோத்திதாசரின் விமர்சனமும் இத்தகையதுதான் என்பதில் ஐயமில்லை.

அடிக்குறிப்புகள்.

1. C.M.S. - Church Missionary Soceity

S.P.G. - Society for the Propagation of the Gospel
A.M.M. - America Madurai Mission


2. 1840-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் விபூதிச்சங்கம் என்ற அமைப்பைப் பல்வேறு சாதியினரும் இணைந்து உருவாக்கினர். திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி என்ற ஊர்களில் செயல்பட்ட இவ்வமைப்பைச் சார்ந்தவர்கள் கிறித்தவர்களாக மதம் மாறியவர்கள் மீது திருநீறைப் பலவந்தமாக பூசினர். சைவம், ஸ்மார்த்தம், வைஷ்ணவம், மத்துவம் ஆகிய நான்கு பிரிவினரையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட ‘சதுர்வேத சித்தாந்த சபை’ என்ற அமைப்பு சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டது. ‘கிறிஸ்து மதக்கண்டம்’. ‘மெய்யான போதம்’ போன்ற கிறித்தவத்திற்கு எதிரான துண்டு நூல்களை வெளியிட்டது. (Hugald Grafe, 1990:158).

3. ஸ்ரீநிவாசராகவய்யங்காரின் மத மாற்றம் குறித்த இக்கருத்தை மறுத்துக் கடிதம் ஒன்றை அயோத்திதாசர் அவருக்கு எழுதியுள்ளார். அதில் கிறித்தவத்தில் நிலவும் தீண்டாமைக் கருத்தியலை வெளிப்படுத்தியுள்ளார் (அலாய்சியஸ், 1999எ 4-8).

4.இத்தகைய கருத்தைத்தான் அன்னிபெசண்டும் கொண்டிருந்தார். இங்கிலாந்தின் ஏழை மக்களுக்கான ‘கந்தல் பள்ளிகள்’ போன்று இங்கும் உருவாக்கி அதில் ஒடுக்கப்பட்டவர்களின் பிள்ளைகள் பயிலச் செய்ய வேண்டும் என்று எழுதியுள்ளார். இது குறித்த விரிவான செய்திகளுக்கு அம்பேத்கர் நூல் தொகுதி வரிசையில் 16-ஆம் தொகுதியைப் பார்க்கவும். (பக். 6-12)

துணைநூல் பட்டியல்

அம்பேத்கர் 1997 டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், பேச்சும் எழுத்தும் தொகுதி-10
அலாய்சியஸ், ஞான., 1999, அயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி – I, II
அலாய்சியஸ், ஞான., 2003, அயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி - III
தர்மராஜன், டி.2003, நான் பூர்வ பௌத்தன்.
Gopalakrishan, M., 2000, Gazetteers of Indian Tamilnadu State Tamilnadu State Kancheepuram and Tiruvalluvar Districts, Vol. I.
Hugald Grafe, 1990, History of Chrisian in Indian Vol.IV, Part, R.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com