Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2006
தமிழ்ச் சமூகத்தில் கற்பும் கற்பிப்பும்

அ. செல்வராசு

தமிழர்தம் அகவாழ்க்கை களவு, கற்பு என இருவகையாகப் பிரிக்கப்பட்டிருந்துள்ளது. தமிழில் கிடைக்கப்பெற்ற முதல்நூலான தொல்காப்பியப் பொருளதிகாரம் அவ்விரு வகை பற்றி பேசியுள்ளது. தொல்காப்பியத்தின் பொருளியல், மெய்ப்பாட்டியல் முதலிய இயல்களும் அகவாழ்க்கைத் தொடர்பான செய்திகளைக் குறிப்பிட்டுள்ளன. திருமணத்திற்கு முந்தைய உறவு களவு என்றும் திருமண உறவு கற்பு என்றும் கொள்ளப் பெற்றுள்ளது.

தொடக்கத்தில் மனிதர்களின் வாழ்க்கை முறை, காட்டுமிராண்டி வாழ்க்கைமுறை. காட்டுமிராண்டிகளின் உணவுத் தேவையைத் தீர்த்து வைத்தது மலைப்பகுதிகளாகும். மலைப்பகுதிகளில் கிடைத்த கிழங்கு, காய், கனிகள், தேன் முதலியன அவர்களது இயற்கை உணவுப் பொருள்கள். வேட்டையாடுதல் மூலம் கிடைத்த விலங்கு இறைச்சியும் அவர்களது உணவானது. இக்கூட்டத்தினரிடையே ஆண், பெண் என்ற பாகுபாடுகள் இருந்திருக்கவில்லை. மலைப்பகுதிகளில் கிடைத்த இயற்கை உணவுப் பொருள்களையும், வேட்டையாடுதல் வழி கிடைத்த இறைச்சியையும் கூட்டத்திலுள்ள அனைவரும் பகிர்ந்து கொண்டனர். இயற்கை உணவுப் பொருள்கள் பருவகாலங்களில் மட்டுமே கிடைப்பன. எனவே அவர்களது உணவுத் தேவையைப் பெரும்பான்மையாகத் தீர்த்து வைத்தது வேட்டையாடுதல் வழி கிடைத்த இறைச்சிகளே.

வேட்டைச் சமூகத்தினர் அத்தொழிலுக்கென்று வேல், வில் முதலிய கருவிகளை வைத்துக் கொண்டிருந்துள்ளனர். தங்கள் வேட்டைக்குத் துணையாக நாய்களைப் பழக்கி வைத்திருந்துள்ளனர். சங்க இலக்கியக் குறிஞ்சித்திணைப் பாடல்களில் இதற்குச் சான்றுகள் உள்ளன. (நற்.285).

தொடக்ககால வேட்டைக்குழுவினர் உணவுப் பொருள்களைப் பகிர்ந்துகொண்டது போலவே பெண்களையும் பகிர்ந்து கொண்டனர். அதாவது ஒரு கூட்டத்தில் உள்ள அனைவருக்கும் அக்கூட்டத்திலுள்ள பெண்கள் பொதுவானவர்கள். ஆண்களும் அவ்வாறே. இயற்கை உணவுப் பொருள்களைக் காட்டிலும் வேட்டையாடுதலே உணவுத்தேவையை நிறைவு செய்தன என்ற நிலையில், திறமையாக வேட்டையாடிவரும் ஆண்களின் மீது, கூட்டத்திலுள்ள பெண்களுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு - பசி போக்குவதற்கு அவ்வாடவன் காரணமாவதால். எனவே ஒரு பெண் கூட்டத்திலுள்ள அனைவருக்கும் பொது என்றாலும் தனது உணவுத் தேவையை நிறைவு செய்யும் ஆடவன் மீது தனி ஈடுபாடு காட்டியிருக்க வேண்டும். அதாவது திறமையாக வேட்டையாடிவரும் ஆடவனையே பெண்கள் விரும்பினர். இதுதான் பெண்கள் வீரம் மிகுந்தவர்களை விரும்புதல் என்றும், வீரம் மிகுந்த ஆடவர்களுக்கே பெண் கொடுத்தல் என்றும் ஆகிவிட்டது.

வேட்டையாடுதலும் எல்லா நேரங்களிலும் உணவுத் தேவையை நிறைவு செய்யவில்லை. அவ்வாறான நேரங்களில் உணவுத் தேவையை நிறைவு செய்து கொள்ள வேட்டையாடுவோரால் சிந்திக்கப்பட்டதுதான் கால்நடைகளைப் பழக்கியது. முன்பே நாய்களைப் பழக்கியத் திறன் தெரிந்திருந்ததால் கால்நடைகளான ஆடுமாடுகளைப் பழக்குதல் அவர்களுக்கு எளிதாக இருந்திருக்க வேண்டும். கால்நடைகளைப் பழக்கியது அவர்களுக்கு இரு வகையில் உதவியது. ஒன்று கால்நடைகளிலிருந்து கிடைத்த பால் உணவாகப் பயன்பட்டது. மற்றொன்று கால்நடைகளே உணவாகவும் பயன்பட்டது. பசுவைக் கொன்று இறைச்சியைச் சுட்டுத் தின்றதையும், ஆடுகளை உணவாக்கி உண்டதையும் சங்க இலக்கியங்கள் சுட்டியுள்ளன(அகம்.249, புறம்.261).

கால்நடைகள் உணவுத்தேவையைத் தீர்த்ததும், அதுவே உணவாகப் பயன்பட்டதும் வேட்டைச் சமூகத்தினரை இன்னொரு தொழிலுக்கு இழுத்துச் சென்றது. அதுதான் கால்நடை மேய்த்தல். வேட்டையாடுதலைவிட கால்நடை மேய்த்தல் உணவுத் தேவையை நிறைவு செய்வதில் முக்கியப் பங்கு வகித்தது. வேட்டையாடுதல் எல்லா நேரங்களிலும் உணவுத் தேவையை நிறைவு செய்யவில்லை. எனவேதான் வேட்டைச் சமூகம் விரைவில் மறைந்தது என்பார் எங்கெல்ஸ்.

குறிஞ்சி நிலத்திலிருந்து ஒரு குழுவினர் வேட்டையாடிக் கொண்டு உணவுத் தேவையை நிறைவுசெய்து கொள்ள முடியாத நிலையில் இருக்க, மற்றொரு குழுவினர் கால்நடைகளை மேய்த்துக் கொண்டு, தங்கள் தேவையை முழுவதுமாக நிறைவு செய்து கொண்டனர். இவ்வாறான ஏற்றத்தாழ்வு இரு குழுவினருக்கிடையே மோதலைத் தோற்றுவித்திருக்க வேண்டும் எனலாம். இம்மோதலின் காரணமாக, கால்நடை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் வேட்டைச் சமூகத்தினரிடமிருந்து விலகி, மலைப்பகுதியிலிருந்து நகர்ந்து காட்டுப்பகுதிகளில் குடியேறியுள்ளனர். கால்நடை மேய்த்தோர் குடியேறிய பகுதிதான் முல்லை எனக் கொள்ளப் பெற்றது.

முல்லை நிலத்தில் குடியேறியவர்களின் தொழில் கால்நடை மேய்த்தலானது. கால்நடைகளே சொத்தாகக் கருதப்பெற்றன. கால்நடைகளுக்கு ஆண்கள் உரிமையுடையவர்களாயினர். கால் நடைகளை அதிகமாக உடையோர் சொத்துடைமையாளர்களாயினர். குறிஞ்சி நிலத்தில் திறமையாக வேட்டையாடியோர் கவனம் பெற்றமை போன்று, முல்லை நிலத்தில் கால்நடைகளை அதிகமாக உடையோர் (ஆண்கள்) கவனத்திற்குரியோராயினர்.
இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கூட்டத்திற்குரிய தலைவராயினர். கணம் என்றால் கூட்டம். கணவான் என்றால் கூட்டத்தின் தலைவன். இதுதான் பிறகு கணவன் என்று ஆகியிருக்க வேண்டும்.

திறமையான ஆடவரை விரும்புதல் என்ற குறிஞ்சி நிலப் பண்பு முல்லை நிலத்திலும் தொடர்ந்துள்ளது. அந்த வகையில் நிறைய கால்நடைகளுக்கு உரிமையுடைய ஆடவர்கள் பெண்களின் கவனத்திற்குரியவர்கள் ஆயினர். அவ்வாடவன் தனக்கு மட்டுமே உரிமையுடையவனாக இருக்க வேண்டும் என விரும்பினர். இவ்விருப்பந்தான் குடும்பம் என்ற அமைப்பு முறைக்கு இவர்களை இழுத்துச் சென்றது. பெண், ஓர் ஆடவன் தனக்கு மட்டும் உரிமையுடையவனாக இருக்க வேண்டும் என எதிர் பார்த்தமைக்குக் காரணம் உண்டு. அவளது தேவையை நிறைவு செய்பவன் அவன்தான். ஆடவனும் கூட, ஒரு பெண் தனக்கே உரிமையுடையவளாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்தான். ஆனால் இவனுடைய எதிர்பார்ப்பிற்குக் காரணம் வேறு. தன் சொத்திற்கான வாரிசை அடையாளம் கண்டு கொள்வதற்காக மட்டுமே. பெண்ணைப் போன்று உணவுத்தேவையை நிறைவு செய்து கொள்வதற்காக அல்ல. ஆதலால்தான் ஆண்களிடம் பரத்தமை ஒழுக்கம் கால் கொண்டது எனலாம்.

முல்லை நிலத்து ஆடவர்கள் கால்நடை மேய்ப்போர்களாக இருந்தனர். தங்கள் நிலத்தில் கால்நடைகளுக்கு மேய்ச்சல் இருக்கும் காலங்களில் ஆண்கள் கால்நடை மேய்த்தலிலும், பெண்கள் அவற்றிலிருந்து கிடைக்கும் பால், தயிர் முதலிய உணவுப் பொருள்களை விற்பவர்களாகவும் ஆயினர். முல்லை நிலத்தில் மேய்ச்சல் இல்லாத காலங்களில், ஆடவர்கள் வேற்று நிலத்திற்குக் கால்நடைகளை ஓட்டிச் சென்று வந்துள்ளனர். இக்கால கட்டத்தில்தான் தமிழர்களிடையே பெண் தலைமைச் சமூகம் நிலவியிருக்க வேண்டும். குடும்ப நிர்வாகம் பெண்களிடம் இருந்திருக்க வேண்டும். பெண்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்திருப்பினும், சமூகத்துடனான அவர்களது தொடர்பு பரந்துபட்டதாக இருந்திருக்கவில்லை. இதன் காரணமாகப் பெண் தலைமைச் சமூகம் விரைவில் மறைந்திருக்க வேண்டும் எனலாம். சங்க இலக்கியங்கள் சுட்டும் நகரொடு மிடைந்த கற்பு, இல்லொடு அடங்கிய கற்பு என்ற சொல்லாடல்கள் இதனையே நினைவுறுத்துகின்றன. ஆடவர்களின் சமூகத் தொடர்பு பரந்துபட்டும் பெண்களின் சமூகத் தொடர்பு குறுகியதாகவும் ஆனதற்கு மேற்சுட்டியது போன்ற வேலைப்பகிர்வு காரணமாகிவிட்டது எனலாம்.

தமிழ்ச் சமூகத்தில் குடும்பம் என்ற அமைப்பு முறை முல்லை நிலத்தில்தான் தோற்றம் கொண்டிருக்க வேண்டும். எனினும் வேட்டைச் சமூகத்திலிருந்து பிரிந்த கால்நடை மேய்ப்போர் ஆண், பெண்களுக்கிடையேயான பொதுப் பகிர்வில் இருந்த இன்னல்களிலிருந்து விலகி, குழு என்பதைக் குடும்பம் என்ற அமைப்புமுறையாக ஆக்கிக் கொண்டுள்ளனர். இந்தக் குடும்பம் என்ற அமைப்புமுறை தோற்றம் கொண்டபிறகுதான் கற்பு என்ற ஒன்றும் தோற்றுவிக்கப் பெற்றிருக்க வேண்டும் எனலாம்.

தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் நூலான தொல்காப்பியம் கற்பெனப்படுவது கரணமொடு புணர/கொடைக்குரி மரபினர் கொளற்குரி மரபினர்க்குக் கொடுப்பக் கொள்வதுமே என்று கற்பு பற்றிக் குறிப்பிட்டுள்ளது. உரையாசிரியர்கள் இந்த நூற்பாவில் வரும் கரணம் என்பதற்கு வதுவைச் சடங்கு என்று விளக்குகின்றனர். எனினும் இது ஐயப்பாட்டுக்குரியதாகும்.

அந்தணர்களால் உருவாக்கப்பட்ட வதுவைச் சடங்கு பிற்காலத்திற்குரியதாகும். சங்க இலக்கியத்தில் கூட அந்தணர்களை முன் வைத்து நடத்தப் பெறும் திருமணம் சுட்டப் பெறவில்லை. தொல்காப்பியமோ சங்க இலக்கியத்திற்கும் முற்பட்டதாகக் கொள்ளப் பெறுகிறது. எனவே அச்சொல்லுக்கு அந்தணர்கள் உருவாக்கிய வதுவைச் சடங்கு எனப் பொருள் கொள்ளின் பொருத்தமில்லாதது போன்று தோன்றுகிறது.

மாற்றாக அச்சொல் கர்ணம் என்றிருந்திருக்க வேண்டுமோ என்ற ஐயப்பாடு எழுகிறது. கர்ணம் என்ற வடமொழிச் சொல்லுக்குக் காது என்பது பொருள். செவிவழியாகச் சொல்லப் பெற்றுவரும் கதைக்குக் கர்ணப்பரம்பரைக் கதை எனப் பெயர். காதுகுத்து விழாவைக் கரணபூசன விழா என்பர். குடம் போன்ற காதுடையவன் கும்பகர்ணன் என அழைக்கப் பெற்றுள்ளான். காதைப் பிடித்துக் கொண்டு குனிந்து நிமிர்வதைத் தோப்புக் கர்ணம் என்பர்.

வடமொழிச் சொற்கள் தொல்காப்பியர் காலத்திலேயே புகுந்து விட்டமையை வடசொற்கிளவி என்று தொடங்கும் தொல் காப்பிய நூற்பா சுட்டுகிறது. எனவே கர்ணம் என்ற சொல்லும் தமிழில் புகுந்து விட்ட வடசொல் எனலாம். தொல்காப்பியரும் கர்ணம் என்ற சொல்லாட்சியைக் காது என்ற பொருளில் கையாண்டிருக்கலாம். பிற்காலத்தில் ஏடெடுத்து எழுதுவோரால் கர்ணம் என்ற சொல்லிலிருக்கும் புள்ளி விடப்பட்டு கரணம் என்றாகியிருக்க இடமுண்டு.

கற்பி என்ற தமிழ்ச் சொல்லுக்குக் கற்றுக் கொடு என்று பொருள். கற்பு என்ற சொல்லுக்குக் கற்றதைப் பின்பற்று என்று பொருள். இரு சொற்களுமே கல்வி என்பதை அடியொற்றியதாகும். அதாவது பெரியோர்கள் கற்பித்தபடி இல்லறம் நடத்தலே கற்பு. பெரியோர்கள் கற்பித்தலிலிருந்து தலை மக்கள் மீறும் பொழுது அவர்கள் கற்பிழந்தவர்களாகக் கருதப் பெறுவர். வள்ளுவரின் கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற கூற்றையும் இங்கு நினைவிருத்திக் கொள்ளலாம்.

தமிழ்ச் சமூகத்தில் ஆண்கள் வீரத்தோடு விளங்க வேண்டும் என்றும் பெண்கள் இல்லறம் காப்பவர்களாகவும், பெரியோரைப் பின்பற்று பவர்களாகவும், சொல் மீறாதவர்களாகவும், விருந்தினர்களைப் போற்றுபவர்களாகவும் இருக்கவேண்டும் என்றும் கற்பிக்கப் பெற்றனர். வீரம் மிகுந்த ஆடவனைச் சங்க இலக்கிய நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து கற்பன் என்று குறிப்பிடுகின்றது(பதி.43,59,80). எனவே பெரியோர்கள் செவி வழியாகக் கற்பித்தபடி வாழ்க்கை நடத்துவதே கற்பு எனக் கொள்ளப் பெற்றி ருக்க வேண்டும் எனலாம். இதன் அடிப்படையில் தொல்காப்பிய நூற்பாவிற்குக் கற்பு என்று சொல்லப் படுவது பெரியோர்கள் கற்பித்த வழிச்சேர கொடைக்குரிய மரபினரான பெண் வீட்டார் பெண் கொடுக்க, கொளற்குரிய மரபினரான மணமகன் வீட்டார் பெற்றுக் கொண்டு இல்லறம் நிகழ்த்துவது கற்பு எனப் பொருள் கொண்டால் பொருத்தமாக அமையும்.

திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கை களவு என்றும் திருமண வாழ்க்கை கற்பு என்றும் கொள்ளப் பெற்றுள்ளதும் மேற்கண்ட கருத்தை உறுதிப்படுத்துவதாய் உள்ளது. சங்க இலக்கியத் துள்ளும் திருமணமான பெண்களுக்கே கற்பு வற்புறுத்தப் பெற்று வந்துள்ளது என்பதைக் காணமுடிகின்றது. யாரும் யாருடனும் வாழலாம் என்ற நிலையில் கற்பு வற்புறுத்தப் பெற்றிருக்க முடியாது.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப என்ற தொல்காப்பியக் கருத்து எண்ணிப் பார்க்கத்தக்கது. திருமண வாழ்க்கைக்குப் பிறகு ஆடவரோ, பெண்டிரோ ஒருவருக் கொருவர் கருத்து வேறுபாடின்றி இணைந்து வாழவேண்டும் என்பதற்காக, திருமணத்தின் போது சில உறுதிமொழிகள் எடுத்துக் கொள்கின்றனர். இவ்வுறுதி மொழிகளைப் பெரியோர்கள் முன்னி லையில் இப்பெண்ணை நான் மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன். இன்ப துன்பங்களில் இவளோடு துணை நிற்பேன் என்பதான உறுதிமொழியை அக்கினி, ஞாயிறு, நிலவு சாட்சியாக நான் எடுத்துக் கொள்கிறேன் என்று ஆடவன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள சொல்லப் பெறுகிறான். பெண்டிரும் இது போன்று உறுதி மொழி எடுத்துக்கொள்ள சொல்லப் பெறுகிறாள். பெண்டிரும் இதுபோன்று ஒழுக்கத்தோடு இருக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும். இது ஆண், பெண் ஆகிய இருவருக்குமே பொது. இதிலிருந்து மீறும்பொழுது / வழுகும் பொழுதுதான் அவர்கள் கற்பிழந்தவர்களாகக் கொள்ளப் பெறுகின்றனர். இவ்வாறான உறுதிமொழிகள் எழுதப்படாத சட்டங்களாக இருந்து வந்துள்ளது / வருகிறது.

மேற்சுட்டிய எல்லாவற்றையும் உள்ளடக்கிய கற்பு என்ற சொல் பாலியல் உறவோடு மட்டும் தொடர்புபடுத்தப் பட்டதும் அது பெண்களோடு மட்டும் தொடர்புபடுத்தப் பட்டதும் ஆணாதிக்கத்தின் விளைவு. கற்பு என்பது பெரியோர்களால் கற்பிக்கப்பட்ட நல் கற்பிதங்கள் என்பது புரிந்து கொள்ளப்படாமைதான், இன்றும், கற்பு மனதோடு தொடர்புடையதா? உடலோடு தொடர்புடையதா என்ற விவாதத்திற்குக் காரணமாகிவிட்டது.

சொத்துக்கள் ஆண்களுக்கு உரிமையுடையதாக இருந்ததும், சமூக வெளித் தொடர்போடு ஆண்கள் நெருக்கம் கொண்டிருந்ததும் பெண்களின் நடவடிக்கையை இறுக்குவதாக ஆகிவிட்டது. கணவன் போருக்கோ, பொருளுக்கோ பிரிந்து சென்றிருக்கும் போது பெண்கள் பூ வைத்துக் கொள்வதில்லை என்ற கருத்து சங்க இலக்கியத்துள் பதிவு செய்யப்பட்டுள்ளது (புறம்.293). கடலுக்குள் செல்லும் கணவன் நல்லபடியாகத் திரும்ப வேண்டுமெனில், அவன் மனைவி கற்புடையவளாக இருக்க வேண்டும் என்ற கருத்து நெய்தல் நில மக்களிடம் இன்றும் உள்ளது. மனைவி கற்போடு இருந்தால்தான் வேட்டைக்குச் செல்லும் கணவன் வெற்றியோடு திரும்புவான் என்ற எண்ணம் குறிஞ்சி நில மக்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியம் வழி அறிய முடிகின்றது (கலி.34). இச்சூழல்கள் எல்லாமே ஆடவன் பிரிந்திருக்கும் பொழுது அவன் மனைவி தவறிழைக்கக் கூடாது என்பதற்கான ஏற்பாடுகள் ஆகும்.

பலநூறு ஆண்டுகளுக்குப் பிறகு குறிஞ்சி நிலத்தில் ஏற்பட்ட பூசல் நிகழத் தொடங்கியது. முல்லை நிலத்திலிருந்த ஒரு பிரிவினர் கால்நடை மேய்த்தலைத் தொழிலாகக் கொண்டிருக்க, மற்றொரு பிரிவினர் கால்நடைகளைக் கொண்டு நிலச்சீர்திருத்தம் செய்து விவசாயம் செய்ய தொடங்கினர்.

கால்நடை மேய்த்தலைவிட வேளாண்மை செய்தது, உற்பத்திப் பெருக்கத்திற்கு வழிவகுத்துள்ளது. ஒரு பிரிவினர் கால்நடைகள் வழி கிடைக்கும் உணவுப்பொருட்களை நம்பி வாழ்ந்து கொண்டிருக்க, மற்றொரு பிரிவினர் வேளாண்மை உற்பத்தியால் தன்னிறைவு பெற்று உணவுப் பொருட்களைச் சேமிக்கும் அளவிற்கு உயர்ந்தனர். இரு குழுவினருக்கும் இடையேயான இப்பொருளாதார ஏற்றத்தாழ்வு அவ்விருவருக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.

இம்மோதலின் காரணமாக வேளாண்மை செய்தோர் சிறிது நகர்ந்து நிலத்தைச் சீர்செய்து வேளாண்மையை முழு நேரத் தொழிலாக ஆக்கிக் கொண்டுள்ளனர். இதுதான் மருதநிலம் என்றானது. இந்நிலத்து ஆடவர்கள் நில உடமையாளர்களாயினர். பொருளாதாரப் பலமும் அதிகாரப் பலமும் பெற்ற பொழுது மருத நிலத்தவர்கள், தங்களைவிட குறைந்த அளவு நிலம் உடையவர்களையும் கால்நடை உடையவர்களையும் அடக்கி ஆள முற்பட்டனர். இதுதான் பேரரசு தோற்றம் கொள்வதற்குக் காரணமாகி இருக்க வேண்டும்.

இதே காலகட்டத்தில் நெய்தல் நிலப் பரதவர்களிடமிருந்து மீனையும், உப்பையும் பெற்று மருதநிலத்தில் விற்றவர்கள் வணிகர்களாயினர். இவர்களும் பொருளாதாரப் பலம் படைத்தவர்களே. நில உடைமையாளர்களோடு வணிகர்கள் கொண்ட தொடர்பு வலுவான மருதநிலச் சமூகக் கட்டமைப் பிற்கு முக்கிய காரணமாகிவிட்டது. சங்க இலக்கியத்தில் உள்ள பேரரசர்களைப் பாடும் பாடல்கள், அவர்களது நாட்டை நீர்வளம் மிகுந்த நாடாகவே காட்டுவது குறிப்பிடத்தக்கதாகும்.

குறிஞ்சி நிலத்திலிருந்து மருதநிலம் வரையிலான மக்களின் நகர்வும் நெய்தல் நிலத்திலிருந்து மருதநிலத்து வரையான மக்களின் நகர்வும் ஒரே காலகட்டத்தில் நிகழ்ந்ததன்று. இதற்குச் சில ஆயிரம் ஆண்டுகளாவது ஆகியிருந்திருக்க வேண்டும். மக்களின் நகர்வோடு, அவர்களது பழக்க வழக்கமும் ஒட்டிக்கொண்டு வந்திருக்க வேண்டும். அந்த வகையில் குறிஞ்சி நிலத்தவர்களிடமிருந்த கற்பு பற்றிய கருத்தும் நெய்தல் நிலத்தவர்களிடமிருந்த கற்பு பற்றிய கருத்தும் மருத நிலம் வரையும் வந்துள்ளது. மருத நிலச் சமூகம் வலுவான ஆணாதிக்கச் சமூகம் என்பதால் கற்பு கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனக் கண்டிப்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறாக, பெண்களின் மீதான கற்பிதங்கள் இறுக்கம் பெறப்பெற நிறைவில் கற்பு என்பது கற்பிக்கப்பட்ட ஒழுக்கங்கள் என்பதிலிருந்து மாறி பாலியலோடு மட்டும் தொடர்புடையதாக ஆக்கப் பெற்றுவிட்டது. திருமணத்தின் போது பெரியோர்கள் கற்பித்ததைப் பெண்கள் பின்பற்றிக் கொண்டே வர, ஆண்கள் அதனை விட்டுவிட்டனர். ஆணாதிக்கச் சமூகத்தில் ஆடவர்கள் இழந்த கற்பிதம் கண்டுகொள்ளப் பெறவில்லை. பெண்கள் மீதான கற்பிதங்கள் மட்டும் தொடர்ந்து வர வற்புறுத்தப் படுத்தப்பட்டுவிட்டது. கோவலன், கண்ணகி கதை இதற்குச் சிறந்த சான்றாகும்.

கற்பு பெண்களிடம் மட்டும் எதிர்பார்க்கப்பட்ட சூழலில் கற்பெனப்படுவது பிறர் ஆடவர் நெஞ்சு புகாமை என்று இறுக்கப்பட்டுவிட்டது. பிறர் ஆடவர் நெஞ்சு புகுந்தமைக்குப் பெண்கள் காரணமாகாவிட்டாலும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டியது பெண்களே என்ற ஆதிக்க மனப்பான்மை
இக்கூற்றில் வெளிப்பட்டிருக்கக் காணலாம். பெண்கள் ஆண்களைச் சார்ந்து வாழ்ந்ததால், ஆண்கள் சொன்னவற்றிற்கெல்லாம் கட்டுப்பட வேண்டியவர்களாக்கப்பட்டு விட்டனர். இலக்கியங்கள் யாவும் இதனையே திரும்பத் திரும்ப வற்புறுத்தின. அவ்வற்புறுத்தல் கற்பையே மூன்றாகப் பிரித்தது, முதல், இடை, கடை என வகைப்படுத்தப்பட்டது. இவையெல்லாம் பெண்கள் மீது மட்டுமே திணிக்கப்பட்டிருப்பது கவனத்திற்குரியது.

தற்காலத்தில் பெண்கள் பொருளாதாரத் தன்னிறைவு பெற்று வருகின்றனர். எனவே தங்கள் மீதான வறட்டுக் கற்பிதங்களைத் தூக்கி எறியத் துணிந்துள்ளனர். வரவேற்கப்பட வேண்டியது தான். எனினும் தங்கள் மீது மட்டும் திணிக்கப்பட்டு வந்திருக்கும் கற்பு என்பதன் பொருளை மீட்டெடுப்பதும் காலத்தின் தேவையாகும். பெரியோர்களால் கற்பிக்கப்பட்டது ஆண்களுக்கும் உரியதுதான் என்று வலியுறுத்த வேண்டியதும் காலத்தின் தேவையாகும்.

துணை நூல்கள்:

கலித்தொகை, 1984. தஞ்சாவூர்; தமிழ்ப்பல்கலைக்கழகம்.

செல்வராசு, அ. 2003. ஆண் ஆளுமையில் பெண் கற்பு, த.பதார்பேட்டை எழில்.

.........2004 முல்லை நிலமும் எல்லைப் போரும் த.பதார்பேட்டை எழில்.

.........2006. பொருளாதாரப் பொருத்தமின்மையும் மடலேறும் தலைவனும் நாமக்கல் (ஆர்) அனைத்திந்திய முதலாம் கருத்தரங்கு.

பத்துப்பாட்டு மூலம், 1993, சென்னை; உ.வே.சாமிநாத ஐயர் நூல் நிலையம்.

பத்துப்பாட்டு ஆய்வு, 1981, மு. சண்முகம் பிள்ளை (பதி), மதுரை; சர்வோதய இலக்கியப் பண்ணை.

பிரெடெரிக் எங்கெல்ஸ்-குடும்பம் தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், மாஸ்கோ; அயல்மொழிப்பதிப்பகம்.

புறநானூறு, 1985, தஞ்சாவூர்: தமிழ்ப்பல்கலைக் கழகம்

வேங்கடசாமி, சீனி, 2003 சங்ககாலத் தமிழக வரலாறு பகுதி 2,சென்னை; எம். வெற்றியரசி.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com