Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2006
வரப்பு புல் நனைத்து வாய்க்காலில் ஓடும் நீர்...

ந.பெரியசாமி

தெளித்துக் கிடக்கும் சாணி மிதித்து வாசல் தாண்டித் திரிந்த என் ஊரின் நினைவில் மூழ்கடித்தது பச்சியப்பனின் ‘மழை பூத்த முந்தானை’ கவிதைத் தொகுப்பு.

குழந்தைகளின் அதி அற்புதமான கனவு உலகத்திலும் கூட கையில் பிரம்புடன் சிரிப்பற்று மிடுக்காய்த் திரியும் டீச்சரும், வீட்டுப் பாடமும் விடாது துரத்தியபடி இருப்பதை கூறும் ‘பொம்மை உலகம்’ கவிதை குழந்தைகளின் மீதான வன்முறையை சுட்டுகிறது.

கிராமங்களை விட்டு பிழைப்புக்காக நகரம் வந்து, கிடைக்கும் சவுகரியங்களால் நகரம் விட்டு போகாமல் வாழும் நம் நினைவிலிருந்து, தேய்ந்து போய்க் கொண்டிருக்கும் புழங்கிய தாவரங்களை நினைவூட்டுவதாய் இருந்தது ‘உள்ளன்று’ கவிதை. அதுவும் ஒரே கவிதையில் எத்தனை வகையான தாவரங்களின் பெயர்கள். நாயுருவி, வேம்பு, ஈச்சமரம், இலந்தைமரம், நாவல், அவுஞ்சி, அத்தி, ஓணான்கொடி, தும்பை, பிரண்டை, நாய்த்துளசி, நெருஞ்சி, தர்ப்பை, பனை என மனதை தொற்றியது கவிதை.

ஏய்... மூளகெட்டவனுக்குப் பொறந்தவனே அறிவிருக்கா புது டவுசர எப்படி ஆக்கிட்டான். ஏதாவது பையில போட்டு வச்சிக்கிட்டு திங்க வேண்டியதுதானே... கர எப்படி புடிச்சிருக்குப் பாரு என அம்மாவிடம் திட்டு வாங்குவதுண்டு நாவப்பழத்தால். பறவைகளின் கீச்சிடலோடு மரத்தில் கனிந்துத் தொங்கும் நாவல் பழங்களை காணும் போதெல்லாம் ஊறும் எச்சிலோடு இனி பச்சியப்பனின் கவிதை வரிகளும்... நாவல் கிளை நுனி / கறுப்பு நட்சத்திரங்கள் உதிர்க்கையில் / கால் சட்டைப் பைகள் / சிவந்த வானமாயின.

எவருக்கும் வாய்க்காததுதான் உடன்படித்த எல்லோரும் நல்ல வேலைக்குப் போய் வசதியாய் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பது. ஒன்னாம் வகுப்பிலிருந்து கல்லூரி காலம் வரை, குடும்ப சுமை, வாத்தியார் கொடுமை, பெயிலாக்கப்பட்ட வர்களென நிறைய நண்பர்களை நினைவூட்டியது ‘நீ என்னவா ஆகனும்னு’ கவிதை.

கொடுமை கொடுமையென கோவிலுக்குப் போக, அங்கொரு கொடுமை அவுத்துப் போட்டு ஆடுச்சாம் என்ற கதையாகத் தானிருக்கிறது விவசாயிகளின் கதை. மழையை எதிர்பார்த்து காய்ந்து போகும் பயிரை பார்க்க மனசு இல்லாம, பக்கத்துக் கெணத்துக்காரன் கிட்ட கலம் நெல்லுக்கு தண்ணி வாங்கி பாய்ச்சுகையில், மோட்டார் காயில் போய்விட காயில் கட்ட காசு இல்லாம மாட்டைக் கொண்டு போய் சந்தையில் விற்ற பிறகு யாவாரியைப் பார்த்து அறுப்புக்கு அனுப்பிடாதைய்யா நல்ல சம்சாரியா பார்த்துக் கொடு எனும்போது வறுமையிலும் சக உயிரிமீது இருக்கும் மனிதர்களின் அக்கறையில் மனம் கலங்குகிறது. ஒரு சிறுகதையாக இருக்கும் ‘கோடை கவிதை’.

சின்ன சின்ன ஆசைகளையெல்லாம் அந்தஸ்து பார்த்து இழந்து ஏக்கமடைவதை ‘கண்டும் காணாமல்’ கவிதையில் கூறியுள்ளார். மரம் தோறும் / உலுக்கிய கையை / எது தடுக்கிறது / நகரத் தெருவில் / உதிர்ந்து கிடக்கும் / நாவல் பழத்தை / குனிந்து பொறுக்க.

வாடகை வீட்டில் வாழ்வதின் அவலமும், வலி நிறைந்த நிகழ்வுகள் நடந்து கொண்டிருப்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எல்.ஐ.சியிலோ, பேங்கிலோ லோனை வாங்கி வீடுகட்டி கடன் காரனாய் ஹவுஸ் ஓனர் பட்டம் வாங்கிக் கொண்டு ஆடும் ஆட்டமும் சகிக்க முடியாததாகி விடுகிறது. குழந்தைகளைக் கூட சுதந்திரமாய் வளர்க்க முடியாத போக்கு இன்னும் கொடுமை. ‘ஹவுஸ் ஓனர் திட்டுவாரும்மா’ / என்றவுடன் / சுவரில் இசைக்க வரும் / குழந்தையின் விரல்கள் / மூச்சு முட்டத் தளருமாரு / எது அவனை வீடற்றவனாக ஆக்கியது / மற்றொருவனை / எவன்தான் வீட்டுக்காரனாகச் செய்தான் என முடிவடையும் ‘வாடகை வாழ்வு’ கவிதை யதார்த்த சித்தரிப்பு.

தவிர்க்க இயலாது வாங்கித் தொலைக்க வேண்டிய சந்தர்ப் பங்களிலெல்லாம் பெருத்த துயரங்களோடுதான் பாக்கெட் தண்ணீரால் தொண்டையை நனைக்க வேண்டியதாகி விடுகிறது. நீரின் ஆளுமையை மிக எளிதாய் காயடித்து விட்டார்களேயென ‘கானல்காடு’ கவிதை இப்படியாய் முடிகிறது. பாக்கெட் தண்ணீர் / பருகும் தோறும் / அடிக்கிறது அதனின் / பிணவாடை.

சில கவிதைகள் வெறுமனே பக்கத்தை திருப்புவது போன்று இருப்பது தவிர்க்க இயலாதுதான். அமோக விளைச்சலில் ஆங்காங்கே இருக்கும் தப்புப்பயிர்கள் குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. வரப்புப் புல் நனைத்து வாய்க்காலில் ஓடும் நீரின் நிதானமாய் தொகுப்பில் பாய்ச்சிடலாம்.

நிறம் பார்த்து, பல் பிடித்து, சுழி பார்த்து, தட்டி ஓட்டி நடை பார்த்து மாடு வாங்குவது... மூடிய துண்டினுள் விரல்பேசி மாடு விற்பது... குளிப்பதற்கு கூலியாய் மோட்டார் பார்த்துக்கச் சொல்வது... புள்ளத்தாய்ச்சி அறுவடைக்கு வந்தால் ரெட்டைக் கூலி கொடுப்பது... எவர் மரணமென்றாலும் இடுகாடுவரை போய்வருவது... பொது வரப்பில் கல்லைப் பெயர்த்து, பொதுக் கிணற்றில் முறை மீறல், பயிரில் மாட்டை மேய விடுவதென வெற்றுப் பிரச்சினைக்காக வெட்டுக் குத்தென பரம்பரைதோறும் கோர்ட்டுக்குத் தெண்டம் கட்டும் துயரம்... சொசைட்டிக்காரனை ஏமாற்ற கேனில் தண்ணியை வைத்துக் கொண்டே பால்கறந்து ஏமாற்றுவது... விவசாய வேலை குறித்த சங்கடங்கள், வலிகள்... திருட்டுக் கலவிகள்... பொறாமை, பொச்சரிப்பு, பழி தீர்த்தலென வஞ்சத்தோடு திரிபவர்கள்... யாருக்கும் தீங்கு ஏற்படாதிருக்க படையலிட்டு வேண்டுதல் நடத்தும் மனிதநேயம்... எல்லா வேலைகளுக்கும் யாரும் கூப்பிடாமலேயே தானாக முன்வந்து உதவிக் கொண்டிருக்கும் மனிதர்களென... கிராமத்தின் அழகையும், அவலங்களையும் ஒரு சேரத் தந்து பசி, பசி என அலைபவனிடம் வெறுமனே சோறு என எழுதிக்காட்டாமல் வயிறு நிறைய விருந்து படைத்தது போலிருந்தது.
‘மழை பூத்த முந்தானை’ தொகுப்பில் அசலான கிராமத்தை பதிவு செய்துள்ள பச்சியப்பன் ரொம்பப் பெருமைப் பட்டுக்கொள்ளலாம்.

வெளியீடு:
காவ்யா,
16,இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம்,
சென்னை-600024. விலை.ரூ.50.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com