Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2006
கங்கைச் சமவெளி ஆரியர் சமுதாயம்

பேரா. கே.ஏ.மணிக்குமார்

ரிக்வேத கால இறுதியில் பத்து ஆரிய அரசர்களின் போர் பற்றியும், இப்போரில் வென்ற பரதர்கள் பற்றியும் குறிப்பிடப்படுகின்றன. இப்பரதர்கள் தொடர்ந்து வந்த படையெடுப்பாளர்களின் தொல்லைகளாலும், தண்ணீரைப் பயன்படுத்துவதில் ஆரியப் பிரிவினர்க்கிடையே ஏற்பட்ட சச்சரவாலும் கிழக்கு நோக்கி நகர்ந்து இறுதியில் நெடுந்தொலைவில் இருந்த கங்கைச் சமவெளியின் ஒரு பகுதியில் குடியேறினர். காடுகளை அகற்ற உதவும் கருவிகளைத் தயாரிக்கத் தேவையான உலோகங்கள் கி.மு.1500 வரை போதுமான அளவு கிடைக்காததால் பஞ்சாபிலிருந்து கிழக்கு நோக்கிய ஆரியர்களது இடப்பெயர்வு கி.மு.1000க்கு முன் இருந்திருக்க முடியாது என கோசாம்பி கருதுகிறார். புத்தர் வாழ்ந்த காலத்தில் கூட கங்கைச் சமவெளி அடர்ந்த காடுகளைக் கொண்டதாகவே காணப்பட்டது. இருப்பினும் வட இந்தியாவை இயக்கிய நாகரிக மையம் பஞ்சாபிலிருந்து கங்கைச் சமவெளிக்கு கி.மு. 7 ஆம் நூற்றாண்டிலேயே இடம் மாறியிருக்கலாம் என வரலாற்றறிஞர்கள் கருதுகின்றனர்.

கி.மு.1750 இல் பஞ்சாபில் குடியமர்ந்த ஆரியர்களிடமிருந்து கங்கைச் சமவெளி ஆரியர்கள் முற்றிலும் வேறுபட்டிருந்தனர். மலிவாகக் கிடைத்த இரும்பின் பயனையும், சிந்து சமவெளி மக்களிடமிருந்து கற்ற தச்சு, நெசவு மற்றும் மண்பாண்டம் செய்யும் தொழிலையும் அவர்கள் அறிந்திருந்தனர். கிழக்கு நோக்கிக் குடிபெயர்ந்த ஆரியர்கள் செல்லும் வழியில் பல பழங்குடி இனத்தினரை தங்களோடு இணைத்துக் கொண்டனர். வழக்கில் இருந்த பலதாரமணம் இனக்கலப்புக்கு வழிவகுத்தது. ‘மகாஜன பதாஸ்’ என அழைக்கப்பட்ட பழங்குடியினரின் நிரந்தர வாழ்விடமான கங்கைச் சமவெளிப்பகுதியில் அனைத்துப் பிரிவினரையும் ஒருங்கிணைத்து பிரபல பேரரசுகள் பல பின்னாளில் உருவாக ஆரியர்கள் வழிவகுத்தனர்.
ஒருபுறம் ஒதுங்கி அந்நியப்பட்டுக்கிடந்த பழங்குடியினரை ஒடுக்கி, அவர்கள் சமூகக் கட்டுமானத்தை உடைத்தெறிந்ததன் மூலம் புதியதோர் சமுதாயம் உருவாக கங்கை அடிவாரத்தில் குடியேறிய ஆரியர்கள் உதவினர். மறுபுறம் பல்வேறு பழங்குடியினரிடையேயும், பழமைவாதம் கொண்ட வேளாண் மக்களிடையேயும் இருந்த இடைவெளியை நீக்கி புதிய உற்பத்தி உறவுகள் உருவாகுவதற்கும் வழிவகுத்தனர். இதனால் அதுவரை இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வந்த திறமை, உற்பத்தி முறை மற்றும் உற்பத்திக் கருவிகள் அனைவருக்கும் பயன்பட முடிந்தது.

கங்கைச் சமவெளிப் பகுதியில் கோதுமை, அரிசி, எள் போன்ற எண்ணைய் வித்துக்கள் பெருமளவில் பயிரிடப்பட்டன. வணிகம் தொழில் பெருமளவில் வளர்ச்சி பெற்றன. ஜவுளி, தந்தம் மற்றும் மேற்காசிய நாடுகளுடன் கடல் கடந்த வணிகம் நிலவியது. தென் கிழக்கு ஆசிய நாடுகளுடான வர்த்தகத் தொடர்பும் அதிகரித்திருந்தன. சிரெஸ்தி என்ற பெயர் வணிகரையும், சிரனிஸ் என்ற சொல் கைவினைஞர்கள் தங்களுக்கென அமைத்திருந்த சங்கத்தையும் குறிப்பிடுகின்றன. கி.மு. 6ஆம் நூற்றாண்டிலேயே மகதத்திலிருந்து தட்சசீலம் மற்றும் பாரசீகம் வரை இருந்த வணிகப் பாதைகளில் வெள்ளி நாணயங்கள் புழக்கத்தில் இருந்ததாக அறிகிறோம்.

வணிகம் மற்றும் தொழில் விருத்தி அடைந்திருந்த பகுதிகளில் புதிய நகரங்கள் உருவாகியிருந்தன. ராஜகிருகா, சாம்பா, காசி, கௌசாம்பி, தட்சசீலம், வைசாலி போன்றவை கி.மு.6ம் நூற்றாண்டில் தோன்றியிருந்த நகரங்களாகும். இந்நகர்ப்புறங்களில் தனி உடைமைத் தோட்டங்கள், வீட்டு மனைகள் தென்பட்டன. சமுதாய மாற்றம் புதிய நிறுவனங்களின் தோற்றத்திற்கும் வழி வகுத்திருந்தது. கடன்பட்ட சூதாடி அண்டை வீட்டிற்கு இரகசியமாய் செல்கிறான் என ரிக்வேதம் கூறுகிறது. இது கடன் வாங்குவதற்காகவா?அல்லது திருடுவதற்காகவா? என்பது தெரியவில்லை என கோசாம்பி கூறுகிறார். இருப்பினும் வட்டி பற்றிய குறிப்பு ஏதும் ரிக் வேதத்தில் இல்லை. ஆனால் கங்கைச் சமவெளி சமுதாயத்தில் அடமானம், வட்டி, கந்து வட்டி போன்றவற்றை நாம் கேள்விப்படுகிறோம்.

உணவு, மது மற்றும் துணியைப் பயன்படுத்தியதில் எவ்வித குறிப்பிடத்தக்க மாற்றமும் இருந்ததாகத் தெரியவில்லை. உபநிடத காலத்தின் தலைசிறந்த தத்துவஞானி யாக்ஞவல்கியருக்கு மாட்டிறைச்சி மிகவும் பிடித்தமானது என சமகால நூல்கள் தெரிவிக்கின்றன. பின்வேத இலக்கியங்களில் காணக்கிடக்கும் “கோக்னா” எனும் சமஸ்கிருத வார்த்தை விருந்தினரைக் குறிக்கும். இவ்விருந்தினருக்கு எருது (OX) வெட்டப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கருத்தரிக்காத பசுக்களை துறவிகளாய் அலைந்த பிராமணர்களுக்கு மக்கள் அன்று வழங்கியதாக அதர்வ வேதம் கூறுகிறது.

முதலில் மாமிசத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட கால்நடைகள் பின்னர் தோலுக்காகவும் பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களுக்காகவும், பயிர் உரத்திற்காகவும், போக்குவரத்திற்காகவும் நிலத்தை உழுவதற்காகவும் பயன்படுத்தப்பட்ட போது அவற்றை பலியிடுவதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. புதிய சமுதாயத்தில் கால்நடைகள் தனிநபர் சொத்தாக மாறியிருந்ததும் இதற்கு முக்கிய காரணம். சதாப்த பிராமணத்தில் கடவுள் அனைத்து சக்தியையும் பசு மற்றும் காளைகளுக்குள் வைத்துள்ளதால் மாட்டிறைச்சி உண்பது பாவம் என சொல்லப் படுகிறது.

சமூகச் சொத்தாக கால்நடைகள் கருதப்பட்ட காலத்தில் மாட்டிறைச்சி உண்பதற்கு எதிரான கருத்து உருவாகவில்லை. புதிதாய் தோன்றிய வேளாண் சமுதாயத்தில் கால்நடைப் பலியிடல்கள் உற்பத்தியாளர்களையும் வணிகர்களையும் பாதித்ததால் பலியிடும் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் அவர்கள் எதிர்க்கத் தொடங்கினர். புரதச்சத்து கொண்ட விவசாயப் பொருட்களான மொச்சை, பருப்பு மற்றும் கடலை போன்றவற்றை விலையாக்கவும் அவர்கள் மாட்டிறைச்சி உண்பதைத் தடை செய்ய முயற்சித்திருக்கலாம். இருப்பினும் மகாபாரத காலத்தில்கூட (கி.மு.4ஆம் நூற்றாண்டு- கி.பி.4 ஆம் நூற்றாண்டு வரை) மாட்டிறைச்சி, கன்றின் மாமிசம் மதிக்கத்தக்க விருந்தினர்க்குப் படைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சத்திரியர்கள் போரில் தொடர்ந்து ஈடுபட போர் பெருமைப்படுத்தப் பட்டது. பிராமணப் புரோகிதர்களின் யாகங்களும் பலிகளும் போரின் வெற்றிக்குப் பெரிதும் உதவுவதாக கருத்து உருவாக்கப்பட்டது. போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் பிராமணப் புரோகிதர்களுக்கு கிராமங்களையே பரிசாக அளித்தனர். கோசல மன்னன் பாஸ்கரசாடி என்ற பிராமணனுக்கு உக்கத்தா கிராமத்தை இலவசமாக வழங்கினான். மகதநாட்டு பிம்பிசாரன் கானுமாதா என்ற மற்றொரு பிராமணனுக்கு குட்டதந்தா கிராமத்தை வழங்கியதாக சமகால ஆவணங்கள் தெரிவிக்கின்றன. மன்னர்கள், நிலபிரபுக்கள் மற்றும் பெரு வணிகர்களுக்கு மட்டுமே பிராமண புரோகிதர்கள் சடங்குகள் நடத்தினர். செல்வ வளம் பெற்ற இப்புதிய பிராமண சாதி கங்கைச் சமவெளியில் புதிதாய் உருவாகிய சமுதாயத்தில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, பின்தங்கிய பழங்குடியினர் வாழ்ந்த பகுதிகளில் தானமாக வழங்கப்பட்ட நிலத்தில் இரும்புக் கலப்பையிலான விவசாயம் பரவுவதற்கும், பழங்குடியினர் சூத்திரர்களாக விவசாய சமுதாயத்தில் இணைக்கப் படுவதற்கும் வழி வகுத்தது.

பழங்குடியினர் சமுதாயத்தில் நிலத்தை ஒருவர் தன் குடும்பத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த, மறுக்க முடியாத, உரிமையாகக் கருதிப் பயிரிட்டு வந்த நிலை, பிராமணர்களுக்கு நிலம் பரிசுப் பொருளாக வழங்கப்பட்டதால் மாறியது. பிராமணர்களின் தனி உடைமையாகக் கருதப்பட்ட இந்நிலத்தின் மீது பழங்குடியினர் தலைவன் அல்லது குழுவின் கட்டுப்பாடு ஏதும் கிடையாது. உடைமை உரிமை பெற்றவர்கள் செலுத்த வேண்டிய நிலவரியைக் கூட பிராமணர்கள் செலுத்த வேண்டியதில்லை. இப்புதிய அந்தஸ்து அவர்களை மக்களிடையே தர்ம வான்களாக்கி அவர்கள் கூறிய வர்ணாசிரம முறையை ஏற்றுக்கொள்ளச் செய்தது. மகாபாரதத்தில் கேள்வி ஒன்றுக்கு வாயு பகவான் பதில் கூறுவதுபோல் கீழ்கண்ட வரிகள் மக்கள் மனதில் பதிக்கப்படுகின்றன. “ஈசுவரர் நான்கு வர்ணங்களைப் படைத்து, பிராமணர் கடமை தர்மத்தை பாதுகாப்பது எனவும், சத்திரியர் கடமை மக்களைக் காப்பது எனவும், வைசியர் முதல் இரண்டு பிரிவினர்க்கு உழைப்பை வழங்குவர் எனவும் பணித்தார்.”

கங்கைச் சமவெளி தீரத்தில் உருவான ஆரிய சமுதாயம் கிராமத்தை அடிப்படை அலகாகக் கொண்டிருந்தது. மன்னனுக்கு பொறுப்புள்ள ஒரு சத்திரியரோ அல்லது பிராமணரோ கிராமணியாக நியமிக்கப்பட்டார். பழங்குடியினர் வாழ்ந்த இடங்களில் புராதான குடியரசு ஆட்சியும், குழு ஆட்சிமுறையும் நடைபெற்று வந்தன. பின்னால் தோன்றிய பேரரசுகள் கூட அவைகளின் உள் விவகாரங்களில் தலையிடவில்லை. ஆனால் மன்னர்கள் தங்களது மேலாண்மையை ஏற்குமாறு வன்முறையைப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தனர். பஞ்சாபில் பழங்குடியினர் குழுவின் அனுமதியின்றி வன்முறை நடவடிக்கை ஏதும் சாத்தியமாகாது. ஆனால் எண்ணிக்கையில் பெருகிவந்த வளமான வணிக வர்க்கத்தினர் தாங்கள் பெற்றிருந்த செல்வங்களையும், உடைமைகளையும் பழங்குடியினரின் அபகரிப்பிலிருந்து பாதுகாக்க கங்கைச் சமவெளிப்பகுதியில் அனைத்து அதிகாரமும் உடையவனாக இருப்பதையே விரும்பினர். இச்சூழலைப் பயன்படுத்தி பழங்குடியினரின் தலைவர்கள் என்னென்ன உரிமைகள் பெற்றிருந்தனரோ அவை அனைத்தையும் அரசன் வேண்டினான். அரசனிடம் சம்பளம் பெற்று அவனுக்கு விசுவாசமாயிருந்த படைவீரர்களைக் கொண்ட நிரந்தர படை இக்காலத்தில் உருவாக்கப்பட்டது. இதனால் மன்னர்கள் படைபலத்திற்கு பழங்குடியினரின் தலைவர்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை இல்லாது போயிற்று.

சூத்திரர் உழைப்பை சுரண்டியும், வணிகர்களாகிய வைசியர்களிடமிருந்து அதிகவரி வசூலித்தும் பிராமணர்கள் ஆதரவோடு, சத்திரியர்களயாகக் கருதப்பட்ட மன்னர்கள் தங்கள் ஆதிக்கத்தை முழுமையாக நிலை நாட்டினர். இதனால் இதுவரை பழங்குடியினரின் பொது நன்மைக்காகப் பங்கிடப் பட்ட உற்பத்தி உபரி உயர் சாதிக்காரர்களுக்கான உபரியாக மாறியது.

குரு, பாஞ்சாலர் போன்ற பாரம்பரிய சத்திரியர் குலங்கள் முழுமையாக கி.மு.350ல் மகத நாட்டு மன்னன் மகாபத்ம நந்தனால் அழிக்கப்பட்டதாகவும், அதன்பின் அரசாண்டவர்கள் எல்லாம் சூத்திரர்கள் எனவும் புராணங்கள் வருந்துகின்றன. மகதப் பேரரசன் பிம்பிசாரன் பழங்குடி வகுப்பைச் சார்ந்த சிசுநாக குடும்பத்தைச் சார்ந்தவன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இருப்பினும் பரிசுப்பொருட்களை வழங்கிய ஆட்சியை நிறுவியவர் யாராய் இருந்தாலும் சத்திரியர்களாக அவர்களை பிராமணர்கள் பிரகடனம் செய்தனர். ஆந்திரதேசத்தின் நிறுவனர் கௌதமிபுத்திர ஸ்ரீசதகர்னி (கி.பி.149) பிறப்பால் சூத்திரர். அவரை சத்திரியராக்க கீழ்கண்ட வழிமுறை பின் பற்றப்பட்டது. சூத்திரர் சாதியைச் சார்ந்த தாயின் கர்ப்பப்பையில் வந்ததால்தான் ஸ்ரீசத கர்னி சூத்திரர். எனவே தங்கத்தால் ஆன கர்ப்பப்பை ஒன்றை செய்து அதை புனித நீரால் நிரப்பி ஸ்ரீசதகர்னியை அதில் நீராடச் செய்து, பிராமண புரோகிதர்கள் மந்திரங்கள் முழங்க, தங்கக் கர்ப்பப்பையில் இருந்து வெளிவரும் போது சத்திரியர் என அவர் பிரகடனப்படுத்தப்பட்டார்.

வைசியர்களையும் சூத்திரர்களையும் சமமாகப் பேசியது யசூர் வேதம். ஆனால் காலப்போக்கில் உடலுழைப்பில் ஈடுபட்ட வர் களின் பொருளாதார அந்தஸ்தில் மிகப் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டதால் சூத்திரர்கள் வெறுத்து ஒதுக்கப்பட்டனர். இதனால் வைசியர்கள் சூத்திரர்கள் மீது வெறுப்பை வளர்த்து தங்களை தனி சமூகப் பிரிவினராகக் கருதத் தொடங்கினர். நிலத்தை உழும்போது உயிரினங்கள் கொல்லப்படுவதால் விவசாயப் பணிகளைக் கைவிடுமாறு சமண மதம் வேண்டியபோது, தனி அந்தஸ்தை விரும்பிய வைசியர்கள் அம்மதத்தைப் பின்பற்றத் தொடங்கினர். வைசியர்கள் அம்மதத்தைப் பின்பற்றத் தொடங்கினர். வைசியர்களின் விழைவுகளைப் புரிந்து கொண்ட பிராமணியமும் மூன்றாவது வர்ணத்தை வணிகர்களுக்குரியதாகப் பாவிக்கத் தொடங்கியது.

தர்ம சூத்திரங்களும் சுமிர்திகளும் வைசியர் தொழிலாக வணிகம், பணம் கொடுக்கல், வாங்கல் ஆகியவற்றிற்கு பிறகு விவசாயத்தைக் குறிப்பிட்டாலும், நடைமுறையில் விவசாயிகள் சூத்திரர்களாகவே நடத்தப்பட்டனர்.

பிராமணர்கள் தொடர்ந்து நடத்தி வந்த சமஸ்கிருத மொழியிலான வேதச் சடங்குகள் சுரண்டல் அடிப்படையிலான கிராமப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் காரணியாக அமைந்தன. வேதங்கள் எவ்வித மாற்றத்திற்குள்ளாகாமல் இக்காலத்தில் பாதுகாக்கப்பட்டது என்றால் அதற்குக் காரணம் பிராமணர்கள். அக்காலத்தில் கடைப்பிடித்து வந்த கடும் கட்டுப்பாடே ஆகும். புரோகிதராக விரும்பிய ஒரு பிராமணன் ஓர் குறிப்பிட்ட ஆசிரியரிடம் பயில காட்டுக்குச் செல்ல வேண்டும். சுமார் 12 ஆண்டுகளுக்கு மேல் தனது குருவின் கால்நடைகளை மேய்த்தும், அவருக்குத் தேவையான உணவினை சேகரித்துக் கொடுத்தும் சமய இலக்கியங்களை அவன் கற்றான். ஒவ்வொன்றையும் விளக்குவதற்கு ஓர் நீண்ட பிரசாங்கம் வழங்கப்படும். மாணவன் அனைத்தையும் தனது மனதில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும். எழுத்து வடிவில் கல்வியை வழங்காததால் பிராமணர் தங்கள் முற்றுரி மையை அறிவுத் துறையில் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது. இது சமுதாயத்தில் பிராமணர்களுக்கு மதிப்பைப் பெற்றுத் தந்தது மட்டுமின்றி பிராமணர் ஒற்றுமைக்கும் அவர்களது மேலாண்மைக்கும் வழி வகுத்தது.

ரிக், யசூர், சாம, அதர்வ வேதங்கள், 5ஆவது வேதமாகிய காப்பியங்கள் மற்றும் புராணப் பாடல்கள், இலக்கணம், கணிதம், இறையியல், அரசியல், காலவரிசை மற்றும் பேச்சு வழக்குகள், போர்க்கலை, வானசாஸ்திரம், பாம்பாட்டம், மற்றும் நுண்கலை ஆகியவற்றை நான் படித்திருக்கின்றேன் என்று ஓர் பிராமண மாணவன் கூறுவதாக சந்தோக்ய உபநிடதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேதகாலத்தில் உயரிய நிலையில் இருந்த பெண்கல்வி, உபநிடத காலத்திற்குப் பின், குறிப்பாக பேரரசுகள் உருவான பிறகு விவசாய சமுதாயத்தில் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. இது பெண்ணின் அந்தஸ்தில் ஏற்பட்ட சரிவை பிரதிபலிப்பதாக உள்ளது.

ரிக்வேத ஆணாதிக்க சமுதாயத்தில் கூட ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு அனேகமாகப் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் பின் வேதகாலத்தில் பலதார மணம் நடைமுறைப் படுத்தப்பட்டது. பலதாரமணம் பழங்குடியினரை சமுதாய நீரோட்டத்தில் இணைக்கப் பயன்பட்டது. பெண்கள் பல கணவர்களுடன் வாழும் பழக்கமும் இருந்ததாகத் தெரிகிறது. அதர்வ வேதத்தில் ஒரு வீட்டுத் தலைவன் அவனது குடும்பத்தில் மூத்தவன். அவனது மனைவி கணவனின் இளைய சகோதரர்கள் அனைவருக்கும் மனைவியாக இருந்தாள் எனக் கூறப்படுகிறது. மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களுக்கு பொதுவான மனைவி திரௌபதி என்பது அனைவரும் அறிந்ததே. விதவை கணவனுடன் உடன்கட்டை ஏறும் பழக்கமும் பின் வேதகாலத்தில் துவங்கியது. இருப்பினும் பெண்கள் குறித்த சில நல்ல அம்சங்களும் காணப்பட்டன. பால்ய விவாகம் கிடையாது.
திருமணவயது 16 அல்லது 17 ஆகத்தான் இருந்தது. பெண்கள் தங்கள் கணவர்களைத் தேர்ந்தெடுக்கும் சுயம்வரம் பின்பற்றப்பட்டது.
விதவைக்குரிய துயர்களைப் போக்க ஆண் குழந்தை இல்லாத பட்சத்தில் அவளது கணவனின் சகோதரனை அவளுக்கு திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்தது.

காப்பிய காலத்தில் இந்திரன் முக்கியத்துவம் இழந்து பிரமன், விஷ்ணு மற்றும் சிவன் போன்ற கடவுள்கள் பிரபலமடைந்தனர். விஷ்ணு அவதாரம் பற்றிய நம்பிக்கை நிலவியது.

முதலில் புத்தரும், பின்னாளில் கிருஷ்ணரும் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்பட்டனர். ஸ்கந்தன் போன்ற புதிய கடவுள்களும் இக் காலகட்டத்தில் அறிமுகப் படுத்தப்பட்டனர். பகவத் கீதை பக்தி மார்க்கத்திற்கு வித்திட்டது. வழிபாட்டு முறையில் இருந்தது போல் சாதிய முறையிலும் நெகிழும் தன்மை கடை பிடிக்கப்பட்டது. பிராமணர் மற்றும் சத்திரிய குடும்பங்களுக்கிடையே திருமண உறவு அனுமதிக்கப்பட்டு வந்தது.

உயர்சாதி ஆண் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம். சத்யகாம ஜடகலா, தந்தை அறியாத ஓர் தாசியின் மகன். இருப்பினும் ஓர் பிரபல ரிஷி யின் சீடராக இருந்து உண்மையை பேசியதால் அவர் பிராமணராகக் கருதப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒருவனுக்கு வெற்றி தேடித்தருவது உண்மை, சுயக்கட்டுப்பாடு, பெருந்தன்மை, வன்முறை தவிர்த்தல், எளிமை போன்ற நற்குணங்களே தவிர அவனது சாதியோ அல்லது குடும்பமோ அல்ல என மகாபாரதத்தில் கூறப்படுகிறது. புத்தரது சாதிக்கு எதிரான பிரச்சாரங்கள் பிராமண ஆதிக்க சமுதாயத்தை ஏன் பெரிதாக பாதிக்கவில்லை என்பதை இங்கு நாம் புரிந்து கொள்ளமுடியும்.

மிலேச்சர் என்ற சொல் மகாபாரதம் காலம் வரை அன்னியர் அல்லது வெளிநாட்டவர் என்ற பொருளிலேயே பயன்படுத்தப் பட்டிருக்கிறது. சில வரலாற்றறிஞர்கள் காட்டு மிராண்டிகள் என்ற பொருளிலும் பயன் படுத்தப்பட்டதாகக் கருதுகின்றனர்.

யுதிஷ்டிரரின் ராஜசூய யாகத்தில் மிலேச்சர்கள் கலந்து கொண்டனர் என மகாபாரதம் தெரிவிக் கிறது. இங்கு மிலேச்சர்கள் தீண்டத் தகாதவர்களாக இருந்திருந்தால் யாகத்தில் பங்கு பெற அழைக்கப்பட்டிருக்க மாட்டார்கள். சாகர்கள், யவனர்கள் போன்ற அனிரவசிட்ட சூத்திரர்கள் உணவுண்ட உலோகப் பாத்திரங்களை சுத்தம் செய்யமுடியும். ஆனால் சண்டாளர் மற்றும் மிரிட்டபா போன்ற நிரவசிட்ட சூத்திரர்கள் உபயோகித்த பாத்திரங்களை எம்முறையிலும் சுத்தம் செய்யமுடியாது என பதாஞ்சலி விளக்குவதை ஆர்.எஸ்.சர்மா சுட்டிக்காட்டுகிறார். சண்டாளர் பணி இறந்தவர் உடலை அகற்றுவதாகும். யவனர்கள் பிராமணர்களை உதாசீனப்படுத்தியதால் மிலேச்சர்களாகக் கருதப்படும் நிலைக்கு தள்ளப்பட்டதாக யுதிஷ் டிரர் சபையில் பீஷ்மர் அறிவிக்கிறார். ஒரு பிரிவினரின் சமூக அந்தஸ்தை நிர்ணயிப்பதில் பிராமணர்கள் எந்த அளவிற்கு அன்றைய சமுதாயத்தில் அதிகாரம் பெற்றவராயிருந்தனர் என்பதை இது சுட்டிக்காட்டும்.

குப்தர்கள் காலத்தில் (கி.பி.4ஆம் நூற்றாண்டு) இந்தியாவிற்கு வந்த சீனயாத்திரிகர் பாகியான் நான்கு வர்ண சாதிய அமைப்பிற்குள் வராத மற்றொரு பிரிவினர் பற்றி கூறுகிறார். அவர்கள் கிராமங்களில் தனியாக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்ததாகவும் அவர்கள் பார்வை பட்டாலே தீட்டு எனக் கருதப்பட்டதாகவும் பாகியான் கூறுகிறார். சூத்திரர்கள் நிலையை விட அவர்களது நிலை மேலும் மோசமாயிருந்ததாக அவர் கூறுகிறார். எனவே தீண்டாமை வன்கொடுமை என்பது குப்தர்கள் காலத்திலிருந்தே தீவிரமாயிருக்க வேண்டும்...

தொடரும்....



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com