Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2006
பெருந்திணை

நூல் அறிமுகம் - கம்பீரன்

பெய்தோ, காய்ந்தோ கெடுக்கும் இயற்கை, அரசாங்கங்களின் தவறான கொள்கை, பொருள் உற்பத்தி முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், எல்லாம் சேர்ந்து விவசாயத்தில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பின் ஒரு பக்கத்தை முன் வைக்கிறது நாவல்.

நாவலின் களம் தஞ்சை தரணி. பொதுவுடமை இயக்கத்தின் உறுப்பினர் ஆறுமுகம்தான் நாவலின் நாயகன். பறை குடியை சேர்ந்த ஆறுமுகம். வண்ணாரகுடி கிளியம்மாவை காதலித்து கல்யாணம் கட்டி ஐந்து பெண்களும் ஒரு ஆண்மகனுமாய் ஆறு பிள்ளைகளுக்கு தந்தையாகிறார்.
ஆறாவது பிரசவத்தால், கிளியம்மா உயிரை விட ஆறுமுகம் உழைத்து ஐந்து பெண்களை ஆளாக்கி கட்டி கொடுக்கிறார், மகன் சாமிக்கண்ணுவை படிக்க வைக்க, அவன் மின்வாரியத்தில் வேலையில் சேருகிறான். சாமிக்கண்ணு ஒரு ஆசிரியரை கல்யாணம் கட்டி, புதிய வீடும் வசதியுமாய் நகரத்தில் வாழ்கிறான்.

நகரத்தில் வசதியாய் வாழும் மகனைப் பற்றிய ஆறுமுகத்தின் பழைய நினைவுகளுடன் தொடங்கும் நாவல், பண்ணை மாகானம் சிவசங்கரன் பிள்ளையின் மருமகன் விவசாயத்தை நம்பி கடன்பட்டு, தற்கொலை செய்து கொள்வதோடு முடிகிறது.

இவைகளினிடையே, விவசாய கூலித் தொழிலாளர்களாய் வாழும் தலித் மக்களின் அவல நிலை, பண்ணை மாகானம் சிவசங்கரன் பிள்ளை விவசாயத்திலும், குடும்பத்திலும் சந்திக்கும் சரிவு, தாதுவருஜ பஞ்சம், இயற்கையின் தாக்குதல் என்று நாவல் விரிந்து செல்கிறது.

தன்னையும், உடன் பிறந்த சாகோதரிகளையும் தாங்குவான் என்று எதிர்பார்த்து படிக்கவைத்த மகன் சாமிக்கண்ணு உத்யோகம், மனைவி என்றானபின் அடியோடு மாறிவிடுகிறான். மக்கள் பிரச்சனையில் முன்நின்று, போலீசிடம் அடிவாங்கி, காயம் புரையோடி உயிர் நீத்த உறவினரும் தோழருமான இராமனின் மகன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக எம்.ஜி.ஆர் கட்சி சார்பில் எல்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிடுகிறான்.

எலிக்கறி தின்னும் அளவுக்கு ஊரில் வறுமை. பெய்தும், பெய்யாமலும் மழை வஞ்சிக்கிறது. தனிப்பட்ட முறையிலும், பொதுவிலும் இழப்புகளும் சோதனைகளும் வந்த போதும் மனந்தளராத மனிதாபிமானியாக ஆறுமுகம் நிற்கிறார். போராட்டமும் சோதனைகளும் சூழ்ந்த அவர் வாழ்வில் கிளியம்மாவுடனான காதல் ஒரு வசந்தம்போல் வந்து போகிறது. அதுபோலவே ஆர்மோனியப் பெட்டி சிவக்கண்ணு.

சேரி மக்களை அரசு நிர்வாகம் எப்படி பார்த்தது என்பதற்கு அரசின் பிரதிநிதியாக வரும் பட்டாமணியம் ஒரு எடுத்துக் காட்டு.
சேரியில் பிறந்த மாரியம்மனை, அய்யருமாருங்க ஈஸ்வரியா ஆக்கியதும், மாரியம்மன் மகன் காத்தவராயனை கோவிலுக்குள் வைக்காமல் வெளியே வச்சதும், ஊரை காக்க கொள்ளையர்களை எதிர்த்து உயிர்விட்ட குட்டியான் வழிபாட்டுக்குரியவரானதும் நாவலின் போக்கில் சொல்லப்படுகிறது.

குடியிருக்கும் இடம்கூட விவசாயக் கூலித் தொழிலாளிக்கு உரிமையுடையதாய் இல்லை. அப்பன் மகன் தனிகுடிசை போட வேண்டுமென்றாலும், பண்ணை மாகானத்தின் காதுக்கு போய்தான் தலைகட்டு பிரிக்கமுடியும், பெண்கள் கால் கொலுசு போடக்கூடாது. வளர்த்த பசு கன்று ஈன்றால் வீட்டில் வைத்து பால் குடிக்க முடியாது. பண்ணை மாகானத்திடம் ஒப்படைத்து விட வேண்டும்.

பிராமண பண்ணை மாகானங்களின் சட்டதிட்டங்களை அனுசரித்துதான் பிராமணரல்லாத பண்ணைமாகானங்கள் நடக்க வேண்டும். இப்படி, பண்ணை அடிமைமுறையினையும், வருண முரண்பாடுகளையும், வருண உள் முரண்பாடுகளையும் பதிவு செய்ய தவறவில்லை.

ஆறுமுகம், சிவசங்கன் பிள்ளையின் குடும்பத்தில் ஒரு உறுப்பினர்போல் நல்லது கெட்டதுகளில் பங்கேற்றாலும், ஆறுமுகத்திடம் கேட்டு முடிவெடுப்பவராக இருந்தாலும் சாதிக்கட்டுக்குள்ளாகவே இந்த உறவு நிகழ்கிறது.

கம்யூனிஸ்ட்கள் ஜனநாயக முறைப்படி பேசி முடிவெடுப்பதை கேலி செய்வதும், தேனை எடுக்கிறவன் புறங்கையை நக்க மாட்டானா என்று ‘கமிஜன்’ வாங்குவதற்கு நியாயம் கற்பிப்ப துமாய் ஆகிப்போன திராவிட இயக்க அரசியல் கட்சிகளைப் பற்றிய பதிவுகளும் உண்டு. மனிதாபிமானியாக, அரசியல் சிந்தனையாளராக வரும் ஆறுமுகம் தன் மகனை படிக்க வைத்ததுபோல், பெண்களின் கல்வி குறித்து ஆக்கப்பூர்வமான சிந்தனை உடையவராக இல்லை. அது ஒரு பலவீனம் தான்.

இயற்கையின் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டுள்ளது. செந்நெல் நாவலில் கையாண்ட அளவுக்கு வசவு சொற்கள் இதில் இல்லை. எனினும் மண்ணும் மொழியும் நாவலின் பலம். படிக்க பொறுமையும் தேவை.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com