Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2006
செகன்ட் ஹேண்ட்

வைக்கம் முகமது பசீர்
தமிழில்: மு.ந. புகழேந்தி

தலையைக் கலைத்து விட்டு, கண்களை சிவப்பாக்கி கோபத்துடன் ரகளை பண்ண சாரதா தயாராகிக் கொண்டிருப்பதைக் கண்ட பத்திரிக்கை ஆசிரியரான கோபிநாதன் மிகத் தாழ்மையுடன் சொன்னான்.

சாரதா, நாளைக்குப் பத்திரிக்கை வெளிவர வேண்டிய நாள் என்று தெரியுமில்லையா? இன்று இரவு எனக்கு நிறைய வேலையிருக்கிறது. சாப்பாடு போடு.

‘சாப்பாடு!’ அவள் அலறினாள், ‘நான் ஒன்றும் சமைக்கவில்லை. சமைக்க மனதில்லை! வேண்டுமென்றால் நீங்களே சமைத்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள். எனக்கு சலித்து விட்டது.’

அது சரி. சாரதாவிற்கு கோபிநாதனை ஆரம்பத்திலேயே சலித்துவிட்டது. அவளுக்கு அவன் மேல் பாசமில்லை. ‘என் இதயத்தில் காதல் இல்லை, என்னால் யாரையும் நேசிக்க முடியாது!’ என்று திருமணத்திற்கு முன்பே அவள் சொன்னதுதான். திருமணம் நடந்து மூன்று மாதங்கள் கழிந்து விட்டன. இன்று வரை அவள் அவருக்கு அன்பாய் எதையும் செய்திருக்கவில்லை. அவளை அன்பே என்று கூப்பிடவோ, முத்தம் கொடுக்கவோ, தொடவோ கூட செய்திருக்கவில்லை.

அவன் கேட்டான்.

‘கொஞ்ச நாட்களாகவே நீ இப்படி முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறாய். உனக்குப் பிடிக்காதது எதை நான் செய்தேன்?’

‘எதற்கு என்னைத் திருமணம் செய்தீர்கள்?’ பெரும் மார்புகளை முன்னால் தள்ளிக் கொண்டு சுவரில் சாய்ந்து நின்று கொண்டு கேட்டாள். அவன் திடுக்கிட்டு பார்த்தான்!’ மனைவி கணவனைப் பார்த்து ஏன் என்னைத் திருமணம் செய்து கொண்டீர்கள் என்று கேட்டால் அவன் என்ன பதில் சொல்வான்? அவன் ஜன்னல் வழியாக இருண்ட தெருவைப் பார்த்துக் கொண்டு நின்றான். வேகமாய் வீசிக் கொண்டிருந்த காற்று மழைத்துளிகளை அறைக்குள் தெளித்துக் கொண்டிருந்தது.

‘மழை நீர் விழுவது தெரியவில்லையா? நீங்கள் நனைந்தால் பரவாயில்லை, அறைக்குள் தண்ணீர் வருகிறது’ சாரதா நினைவூட்டினாள்.

சன்னலை அடைத்து விட்டு அவன் அவளருகில் சென்றான். அவளுடைய கண்களில் இருந்து வடிந்து கொண்டிருந்த கண்ணீர்த் துளிகளில் அந்த அறையிலிருந்து விளக்கின் ஒளி பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

‘எனக்கு, செத்துப் போனால் போதும்!’ அவள் நெஞ்சில் அடித்துக் கொண்டாள்.

அவன் வேகமாய்ச் சென்று அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான். ‘என்னைத் தொடாதீர்கள்! நான் அசுத்தமானவளில்லையா!’ அவள் அலறினாள்.

அவன் அவள் வாயைப் பொத்த முயற்சித்தான்.

‘நான் சாகிறேன்!’ அவள் விலகி நின்று தலையை சுவரில் முட்டிக் கொண்டாள். புடவைத் தலைப்பை எடுத்து மூக்கைச் சிந்தினாள்.

‘வெறுத்துப் போன இந்த வாழ்க்கை எனக்குப் போதும்!’ கையிலிருந்த வளையல்களை உடைத்து அறைக்குள் வீசி ஓடினாள். படுக்கையில் போய் விழுந்து தேங்கித் தேங்கி அழுதாள்.

அவன் துயரத்துடன் நாற்காலியில் போய் உட்கார்ந்தான். அவள் இப்படி நடந்து கொள்ளக் காரணம் என்ன? அவன் அவளை ஒன்றும் சொல்லியிருக்கவில்லை. பெண், ஓர் அற்புதப் படைப்பு என்று நினைத்தபடி, காற்றின் சீற்றத்தையும் மழையோசையையும் கவனித்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தான்.

வாழ்க்கையில் மிகவும் விரக்தி அடைந்திருந்த பொழுதுதான் அவன் அவளை முதன் முதலாய் பார்த்தது. சுட்டு பழுத்த பாலைவனத்தில் சுற்றி அலைவது போன்ற நிலை. எலுப்புக்கூடும், தசையும் கடுகடுத்து வரண்டு கொண்டிருந்தன. பெண், ஒரு குளிர்மை நிறைந்த பொய்கை என்று அவன் எண்ணத் தொடங்கியிருந்தான். பெண் தரிசனம் அவன் கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஒரு பெண்ணைத் தன் பரந்த மார்புடன் சேர்த்துத் தழுவிக் கொள்ள வேண்டும்! முத்தம் கொடுக்க வேண்டும். ஆயிரம் ஆயிரம் அன்பான பேச்சுக்களைப் பேச வேண்டும்! ஆனால், தழுவிக் கொள்ளவும், முத்தம் கொடுக்கவும் பேசவும் அவனுக்கு என்று யாரும் இல்லை.

அந்தக் காலகட்டத்தில்தான் ஆச்சர்யமான விதத்தில் சாரதா வந்து சேர்ந்தாள். அதுவும், காற்றும் மழையும் நிறைந்திருந்த ஓர் இரவு நேரம்தான். அவன் பத்திரிகை அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்தபொழுது, பூட்டியிருந்த கதவில் சாய்ந்தபடி யாரோ நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். அருகில் சென்று டார்ச் லைட் வெளிச்சத்தில் பார்த்த பொழுது, அது சாரதா. அப்பொழுது அவள் சாரதா என்பது அவனுக்குத் தெரியாது. அவன் கேட்ட கேள்விகளுக்கு முதலில் அவள் பதில் சொல்லவில்லை. காற்றிலும் மழையிலும் விறைத்து நின்று கொண்டிருந்த அவளை உள்ளே வரும்படி அழைத்தான்.

‘உங்களுக்கு குடை வேண்டுமா, அல்லது வண்டி எதாவது?’

அதற்கும் பதில் இல்லை.

‘நீங்கள் அங்கே நின்று கொண்டிருப்பது சரியல்ல. உள்ளே வந்து உட்காருங்கள்’

அவள் உள்ளே வந்தாள். கையில் சிறு சூட்கேஸ் இருந்தது. அவளுடைய கண்கள் கலங்கியிருந்தன. கன்னங்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. உடைகள் நனைந்து உடலுடன் ஒட்டிக் கொண்டிருந்தன. கறுத்த கரையுள்ள வெள்ளைப் புடவையும் கருப்புப் புள்ளிகலுள்ள வெள்ளை ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். புலியைப் பார்க்கின்றப் பசுவைப் போல அவள் பார்த்தாள்.

கோபிநாதன் சொன்னான்

‘நீங்கள் பயப்பட வேண்டாம். வந்து உட்காருங்கள்’

அவள் உள்ளே வந்தாள், அவன் கதவை மூடி தாழிட்டான்.

‘நீங்கள் எங்கே போக வேண்டும்?’

அவள் பதில் சொல்லவில்லை.

‘நீங்கள் அந்த அறைக்குள் போய் உங்களுடைய நனைந்த உடைகளை மாற்றிக் கொள்ளுங்கள். இங்கே நான் மட்டும்தான் வசிக்கிறேன். நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம். என்னை உங்கள் அப்பாவாக நினைத்துக் கொள்ளுங்கள், என்னை உங்களுடைய சகோதரனாக நினைத்துக் கொள்ளுங்கள், என்னை உங்களுடைய ----------’

அவன் அதை சொல்லி முடிக்கவில்லை. அவளிடம் வேறு உடை எதுவும் இல்லை என்று சொன்னாள்.

அவன் சென்று பெட்டியில் இருந்து துவைத்த வேட்டியையும், துண்டையும் எடுத்துக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தான்.

‘இங்கு பெண்கள் அணியும் ஆடை எதுவும் இல்லை. நான் திருமணமாகாதவன்.’

அந்த வார்த்தைகள் அவருடைய முகத்தில் இலேசான ஒரு சிரிப்பின் நிழலை வீசினவா? அவள் அடுத்த அறைக்குள் சென்று நனைந்த உடைகளை மாற்றிக் கொண்டு வந்தாள்.

அவன் கேட்டான்.

‘நீங்கள் ஏதாவது சாப்பிட்டீர்களா?’

அவன் மெதுவாகச் சொன்னாள்.

‘எனக்கு ஒன்றும் வேண்டாம்’

அவன் சொன்னான்
‘ஏதாவது சாப்பிட வேண்டும், என் விருநதாளியாய் வந்து விட்டு நீங்கள் ஒன்றும் சாப்பிடாதது சரியல்ல. நாம் டீ குடிக்கலாம்.’

அதற்கு, அவள் வேண்டுமென்றோ, வேண்டாமென்றோ சொல்லவில்லை. அவன் எழுந்து தன்னை அவளுக்கு அறிமுகப் படுத்திக் கொண்டான்.

‘என் பெயர் கோபிநாதன், ஓர் உலர்ந்த இலைப் பத்திரிகையினுடைய பத்திரிக்கையாசிரியர். உங்களுடைய பெயர் என்ன?’

‘சாரதா’ அவள் குனிந்து உட்கார்ந்து முணுமுணுத்தாள். அவன் டீ போடுவதற்காக அடுத்த அறைக்குப் போனான். இரண்டு சன்னல்களில் இரும்புக் கம்பிகளில் இரு முனைகளைக் கட்டி புடவை காயப் போட்டிருப்பதைப் பார்த்தான். அதன்மேல் ஜாக்கெட்டும், பிராவும், பாவாடையும்... முதல் முதலாய் அவன் அறைக்குள் நுழைந்துள்ள, பெண்ணுடைகள், பெண்... அவனுடைய இதயத்தில் எதுவோ நிறைந்ததாகத் தோன்றியது. மகிழ்ச்சியால் - அவனால் எதையும் சிந்திக்க முடியவில்லை. அவன் திருட்டுத்தனமாய் அந்த புடவைக்கு ஒரு முத்தம் கொடுத்தான். அந்த பிராவிலும்... பெண்ணினுடைய மணம்... பிறகு, அடுப்பைப் பற்ற வைத்து டீ தயாரித்தான். இரண்டு டம்ளர்களில் ஊற்றி எடுத்துக் கொண்டு வந்த பொழுது அவள் மேசைமேல் குனிந்து சாய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தான்.

‘சாரதா அம்மையாரே! டீ குடிக்கலாம்.’ அவன் சொன்னான், அவள் களைப்புடன் முகத்தை உயர்த்தி டீ யை வாங்கிக் குடித்தாள்.
‘தூக்கம் வருகிததில்லையா?’ அவன் கேட்டான்.

அவள் சொன்னாள்

‘நான் இந்த நாற்காலியிலேயே உட்கார்ந்து தூங்கிக் கொள்கிறேன்.’

‘சே!’ அவன் தடுத்தான். ‘அதற்கு அவசியம் ஒன்றும் இல்லை. அந்த அறைக்குள் போய் கதவைத் தாழ்போட்டுக் கொண்டு படுத்துத் தூங்குங்க! நான் இந்த சாய்வு நாற்காலியில் படுத்துத் தூங்கிக் கொள்கிறேன்.!

அவள் அதற்கு சம்மத்திக்கவில்லை. இருந்தாலும், கடைசியில் அடுத்த அறைக்குள் சென்று தாழ் போட்டுக் கொண்டு படுத்தாள்.

அவனுக்குத் தூக்கம் வரவில்லை. நல்ல உடற்கட்டுடன் உள்ள பெண்... ஆச்சரியமாய் இங்கே வந்திருக்கிறாள்.

வாழ்க்கையினுடைய போக்கு... அவள் யார்? ஒரு துணையுமில்லாமல் எங்கிருந்து வந்தாள்? அந்தக் கண்ணீருக்குக் காரணம் என்ன? அவன் தனக்குத்தானே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டான். ஒன்றன் பின் ஒன்றாக பல சிரெட்களைப் புகைத்துத் தள்ளினான். அப்படியே உட்கார்ந்து உறங்கிப் போனான். பிறகு, கண்களைத் திறந்து பார்த்த பொழுது, பொழுது புலர்ந்திருந்தது.

எழுந்து உட்கார்ந்தான். அறைக்குள் அவன் அங்கும் இங்கும் நடக்கும் சத்தம் கேட்டு சாரதா கதவைத் திறந்தாள்.

கோபிநாதன் வணக்கம் சொன்னான்.

‘குட்மார்னிங்ஸ்’

‘குட்மார்னிங்ஸ்’

‘சுகமாய் தூங்கினீர்களா?’

‘தூங்கினேன்’

‘குளிக்க வேண்டுமென்றால்-’ அவன் சென்று சோப்பும், எண்ணையும், துண்டையும் எடுத்துக் கொடுத்தான். ஒரு குச்சியும், காகிதத்தில் கொஞ்சம் உமிக்கறியும். குளியலறையைச் சுட்டிக் காட்டினான். அதற்குப் பிறகு அவன் ‘தெர்மோஃபிளாஷ்க்’கை எடுத்துக் கொண்டு போய் காபியும் ஒரு பெரிய கட்டுப் பலகாரமும் வாங்கிக் கொண்டு வந்தான். அவள், குளித்துவிட்ட அவள் உடைகளை அணிந்து நின்றுகொண்டிருந்தாள். அவனும் சென்று குளித்து விட்டுவந்த பிறகு, இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிட்டார்கள். அப்பொழுதுதான் அவன் அவள் முகத்தை நன்றாக பார்த்தான். அது அளவுக்கதிகமாய் வெளுத்திருந்தது. அதற்கான காரணத்தை அவன் ஆராயவில்லை. அலுவலகத்திற்குப் போக வழக்கத்தைவிட நேரத்திலேயே தயாரானான். வழக்கத்திற்கு மாறாக அன்று அவன் ‘சூட்’ அணிந்து கொண்டான். தவிட்டு நிறத்திலுள்ள சூவும், வெள்ளை கால்சராயும், வெள்ளை சட்டையும் பிளேசர் கோட்டும். அவள் என்ன செய்யப் போகிறாள் என்று கேட்டான்.

‘நீங்க எங்கே போக வேண்டும்?’

அவள் பதில் சொல்லவில்லை. அது மட்டுமின்றி, அவள் கண்கள் நிறைந்து ஒழுகத் தொடங்கின.

அவன் கேட்டான்.

‘எதற்கு அழுகிறீர்கள்?’

அவள் தலைகுனிந்து உட்கார்ந்தபடி சொன்னாள்.

‘சும்மா’

‘நேற்று இராத்திரி எங்கிருந்து வந்தீர்கள்?’

‘ஆசுபத்திரியிலிருந்து’

‘நர்சா’

‘இல்லை’

‘டாக்டரா?’

‘இல்லை’

‘படிக்கிறீர்களா?டு’

‘இல்லை’

‘ஏதாவது வேலை இருந்திருக்கும்?’

‘இல்லை’

‘சொந்த ஊர் எது?’

‘அவள், ஊர் பெயரைச் சொன்னாள்.

‘...................’

எழுபது மைல் தூரத்திலுள்ள ஊர்.

‘அங்கே என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?’

‘படித்துக் கொண்டிருந்தேன்’

‘என்ன?’

‘பி.ஏ.’

‘அப்பா அம்மா இருக்கிறார்களா?’

‘இருக்கிறார்கள்’

‘அப்பா சும்மா இருக்கிறார்களா?’

‘இருக்கிறார்கள்’

‘அப்பாவிற்கு என்ன வேலை’

‘பள்ளிக்கூட தலைமையாசிரியர்!

‘வீட்டில் கோபித்துக் கொண்டு வந்து விட்டீர்கள் இல்லையா?’

அதற்கு அவள் பதில் சொல்லவில்லை.

‘ஊருக்குத் திரும்பிப் போக வேண்டுமா?’

‘வேண்டாம்.’

‘வேறு எங்கே போக வேண்டும்?’

‘எனக்குத் தெரியவில்லை, போவதற்கு ஓரிடமும் இல்லை.’

அவன் மௌனமாகிவிட்டான். பெண். வஞ்சிக்கலாம். ஏமாற்றலாம். ஆபத்தை உண்டாக்கலாம். திருடலாம்.... என்ன செய்ய போகிறாள்? .....
பைத்தியக்காரியோ? அல்லது.... ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. ஏனெனில் அவருடைய குரலில் சத்தியம் இருந்தது. சிறிது நேர யோசனைக்குப் பிறகு கோபிநாதனுடைய எதிர்காலத் திட்டங்களை தயாராக்கினான். கடவுளே... பெரும் மக்கள் கூட்டத்திற்கு முன் வாழ்க்கையில் முதன் முதலாய் பிரசங்கம் செய்யப் போகும் ஒருவனுடைய வெட்கமும் நடுக்கமும் தோன்றியது.

‘நான் சொல்லப் போவதைக் கவனமாகக் கேட்க வேண்டும்,’ அவன் சொன்னான். உனக்கு என்னையும் எனக்கு உன்னையும் பழக்கமில்லை. மகா பிரபஞ்சம். நேற்று இரவுதான் நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டது. உனக்கு அப்பா அம்மா இருக்கிறார்கள், வீடும் இருக்கிறது. இருந்தாலும் போவதற்கு ஓரிடமும் இல்லை என்று சொல்கிறாய். அதற்கான காரணத்தை நான் கேட்கவில்லை. நீ எப்பொழுதும் என்கூடவே இருக்க வேண்டும். என்று கேட்டுக் கொள்கிறேன்.’

அமைதி. கடைசியில் அவள் அமைதியைக் கலைத்தாள்.

‘நான் எப்படி இங்கே இருக்க முடியும்?’

அவனுக்கு மகிழ்ச்சி.

‘என் மனைவியாக! நான் உன்னை நேசிக்கிறேன். இந்த நிமிடமே உன்னை நான் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறேன்.’

‘திருமணம்?’ அவள் திடுக்கிட்டாள். அவன் சொன்னதன் பொருள் சரியாகப் புரியாதவளைப் போல மறுபடியும் கேட்டாள்.

‘திருமணமா?’

‘ஆமாம். நான் உன்னை நேசிக்கிறேன்!’

அவள், பதற்றம் இல்லாமல் அவன் கண்களை உற்றுப் பார்த்தாள்.

‘நீங்கள் நல்ல மனிதர்’ துக்கத்துடன் அவள் சொன்னாள். உங்களைத் திருமணம் செய்து கொள்ள முடியாத பாவி நான். நான் நல்லவளில்லை’

ஓ, அது பரவாயில்லை. நான் அவ்வளவு பெரிய மகாத்மாவொன்றுமில்லை!

‘ஆனால், நான் உங்களை வஞ்சிக்க விரும்பவில்லை.’

‘இதிலென்ன வஞ்சனையிருக்கிறது’

‘உங்களுக்கு என்னைப் பற்றித் தெரியாது’

விளக்கிச் சொல்ல வேண்டிய தருணம், அவன் விளக்கினான். தத்துவம் நிறைந்த ஒரு கம்பீரம் பிரசங்கம்.

ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முடியாத இரண்டு பிரிவைச் சேர்ந்த படைப்புகள். ஒவ்வொருவருடைய இதயத்திலும்
யாரால் எப்படி எட்டிப் பார்க்க முடியும்? கெட்ட கிரகமான ஒரு கோட்டை போன்றதல்லவா மனித உடல். அதற்குள் இருக்கும் ஆத்மாவைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. இருந்தாலும் கண்கள் அந்த ஆத்மாவினுடைய சன்னல்கள் என்று நான் நம்புகின்றேன். அவை மூலம் நான் உன்னுடைய அழகான ஆத்மாவைக் காண்கின்றேன். அதை நான் என்னை விட அதிகமாக நேசிக்கிறேன்.

சாரதா கதறி அழுதாள்

‘நான் கெட்ட பெண்’

கோபிநாதன் வாய்விட்டுச் சிரித்தான்.

நீ எப்படிக் கெட்டவள் ஆனாய்? உடலில் ஏதாவது அழுக்குப் பட்டு விட்டதா?

இருவர் கண்களும் சந்தித்துக் கொண்டன. அவள் சங்கடத்துடன் சொன்னாள்.

‘இந்த உலகத்தில் எனக்கு எந்தவொரு ஆதரவும் இல்லை. நீங்கள் எனக்கு அனைத்தையும் கொடுப்பதாகச் சொல்கிறீர்கள்.... மிகக் குறுகிய நேரப்
பழக்கத்தை வைத்து நீங்கள் என்னை நேசிப்பதாகவும் என்னை திருமணம் செய்து கொள்வதாகவும் சொல்கிறீர்கள்...’

சே, சொல்வதா? செயலில் காட்டவும் தயாராய் இருக்கிறேன். மிகக் குறுகிய நேரப் பழக்கம் என்று சொன்னால் - வாழ்க்கையே மிகக் குறைந்த
நேரம் மட்டும்தானே இருக்கிறது? அதற்கிடையில் திருமணத்தைப் பற்றி இவ்வளவு தூரம் தலை புகைந்து யோசிக்க என்ன இருக்கிறது?’

‘இருந்தாலும்....’

‘இருந்தாலும் - என்ன?’

‘என் கடந்த காலம்!’

‘ஓ! அது பராவயில்லை. எனக்கும் இறந்த காலம் இருக்கிறதில்லையா? அங்கு பல குழப்பங்கள் காணப்படும்! இரண்டையுமே நாம் மறந்து
விடலாம். பிறகு, வாழ்ந்து கொண்டுள்ள இந்த நிகழ்காலத்தில் உள்ளனவற்றை, ஒருவருக்கொருவர் அறிவித்தும் நம்பியும் நேசித்தும்-

‘உங்களுக்கு ஒன்றும் தெரியாது!’ அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள். கதறி அழுதபடி சொன்னாள்.’ நான் ஆஸ்பத்திரியில் இருந்து ஒரு
குழந்தையைப் பிரசவித்தேன்!’ நீண்டநேர அமைதிக்குப் பிறகு அவன் கேட்டான்.

‘அந்தக் குழந்தை எங்கே?’

‘இறந்து விட்டது’

‘கணவன்?’

‘நான், திருமணம் ஆகாதவள்?’

‘குழந்தையினுடைய அப்பா?’

‘என்னுடன் படிக்கும் ஒருவர்.’

‘அவன் எங்கே?’

‘ஆனர்சுக்குப் படிக்கிறான்’ அவருடைய எதிர்காலத்தைப் பார்க்க வேண்டியுள்ளது என்று சொன்னார்’

‘ என்ன எதிர்காலம்?’

‘அவர் ஒரு கவிஞர். பல புத்தகங்கள் எழுதியுள்ளார். கடந்த வாரம் அவருடைய தேர்வு தொடங்கியுள்ளது. அதில் தேர்ச்சியடைந்து விட்டால்
கல்லூரியிலேயே வேலை கிடைக்கும்’

‘கவிஞருடைய பெயர்?’

அவள் அந்தக் கவிஞருடைய பெயரைச் சொன்னாள்.

‘...............’

‘அந்த நாட்டுப் பற்றுள்ளவர்?’

‘ஆமாம், சாரதா தொடர்ந்தாள், ‘நான் அவருடைய கவிதைகளைப் படிப்பேன். அப்படி இருக்கும் பொழுது அவர் எங்கள் வீட்டிற்கு முன்புறம்
உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கினார். நான் அவருடைய ஒரு புத்தகத்தைப் பற்றிக் கேட்டு ஒரு குறிப்பெழுதிக் கொடுத்தனுப்பினேன். அப்படி எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. காதலானது... தெய்வீகக் காதல்... அழிவில்லாதக் காதல். எங்களுக்குள் பல கடிதப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. அவர் கெட்டகுணம் உள்ளவர் என்று என் தோழிகளில் சிலர் சொன்னார்கள். ஆனால், அவருடைய கவிதைகள் எல்லாம் காதலின் மேன்மையை வாழ்த்திக் கொண்டுள்ளவயாய் இருந்தன.

நான் அவரை முழுவதுமாக நம்பினேன். நாங்கள் பல உறுதிமொழிகளை சொல்லிக் கொண்டோம். இவ் உலகம் உள்ளவரை... உறுதி மொழிகள்...
இரவு நேரங்களில் பல முறை அவர் எங்கள் வீட்டு சுவர் ஏறிக்குதித்து உள்ளே வருவார். தோட்டத்தில் உள்ள மாமரத்திற்குக் கீழ்...

‘நான் அனைத்தையும் இரகசியமாய் வைத்துக் கொண்டேன். தோழிகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். ஊர் முழுவதும் தெரிந்து விட்டது.
நான் வீட்டை விட்டு, அனைத்தையும் விட்டு வந்து ஆஸ்பத்திரியில் அபயம் தேடினேன். நான், அவருக்கு மூன்று கடிதங்கள் அனுப்பினேன்.
மூன்றாவது கடிதத்திற்கு, அவர் பெயரைக் குறிப்பிடாமல், ஒரே ஒரு வார்த்தையில் பதில் எழுதினார். ‘என் எதிர்காலத்தைப் பார்க்க
வேண்டியுள்ளது.’ என்னிடம் பணம் இல்லை. முந்தா நாள் இரவு நான் ஆஸ்பத்திரியில் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தேன். சன்னல் வழியாகக் கீழே குதிக்கத் தயாரான பொழுது கேட்ட பீட் போலீசினுடைய விசில் என்னை பயப்படுத்தியது. அப்படி நான் உயிர் பிழைத்தேன். ஆஸ்பத்திரியில் இருந்து வெளியில் வந்து இலக்கில்லாமல் நடந்து கொண்டிருந்தேன். மதியம் வரை நடந்தேன். மழையில் நனைந்தேன். விறைந்து விழுந்து விடுவோம் என்று தோன்றிய பொழுதுதான் இங்கே வந்து நின்று கொண்டேன்.

‘இவ்வளவுதானே.’ கோபிநாதன் சொன்னான. பரவாயில்லை. வாழ்க்கை துன்பப் படுவதற்காக உள்ளதல்ல. உனக்கு ஒரு கெடுதல் நடந்து விட்டது. பல திருமணமாகாத பெண்களுக்கும் ஏற்படுவதுதான் இது. குறிப்பாகக் கல்லூரிப் பெண்களுக்கு... அதற்கும் மேல், நாம் நினைப்பது போல் யாரும் அவ்வளவு நல்லவர்களாக இருப்பதில்லை. இதில் ஆண் பெண் வித்தியாசமில்லை. இனி இதைப்பற்றி நினைத்து வேதனைப்படுவதால் ஒரு பலனுமில்லையல்லவா. மகிழ்ச்சியாக இரு. நான் சென்று உனக்கு வேண்டிய துணிமணிகளை வாங்கிக் கொண்டு வருகிறேன்.

‘எதற்கு?’

‘ நீ என் மனைவியாகி இங்கே இருக்கும் பொழுது சில உடைகள் வேண்டுமல்லவா? எப்பொழுதும் என்னுடைய வேட்டியையும், துணியையும்
அணிந்து கொண்டு வாழமுடியாது,’

‘வேண்டாம். இந்தத் திருமணம் நல்லதல்ல. உங்களுடைய அப்பா அம்மா - சகோதரன் சகோதரிகள் - உங்களுடைய நண்பர்கள் - அவர்களுக்கு
இது பிடிக்காது.

‘அவர்கள் யாரும் உன்னைத் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை! அப்பா அம்மா - எனக்கு அம்மா மட்டும்தான் இருக்கிறாள். அவள் என் சம்மதத்தைக் கேட்காமல் வேறொரு ஆளைத் திருமணம் செய்து கொண்டு விட்டாள். சகோதரர்கள் இல்லை. ஒரு சகோதரி இருக்கிறாள். அவளும் திருமணம் செய்துகொண்டு போய் விட்டாள். சுருக்கத்தில், இப் பரந்த உலகத்தில் நான் மட்டுமே தனியாக இருக்கிறேன். சொத்தும் இல்லை. நான் இன்டர்மீடியம் வரை படித்துள்ளேன். எனக்கு சொந்தம் என்று உள்ளது பத்திரிக்கைதான். அலுவலகத்தில், பியூன், மேலாளர், பத்திரிக்கை ஆசிரியர் - எல்லாம் நான்தான். இவ்வளவு தான் என் வாழ்க்கைச் சரித்திரம். தடையன்றும் இல்லையல்லவா.’

‘ஆனால், என் இதயத்தில் காதல் இல்லை. என்னால் யாரையும் காதலிக்க முடியாது!. என் இதயம் சூனியமாக இருக்கிறது!’

‘என் மேல் உனக்கு நம்பிக்கையிருக்கிறதா?’

இரு கன்னங்களிலும் கண்ணீர் ஒழுக்கிக் கொண்டு அவள் மௌனமாய் சம்மதித்தாள்.

ரெஜிஸ்ட்ராருக்கு முன்னால் அவர்கள் இருவரும் கணவன் மனைவி ஆனார்கள். ஒன்றாக உட்கார்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார்கள். அந்த
போட்டோவை பத்திரிக்கையில் போட்டார்கள். பத்திரிக்கையின் பிரதிகளை கவிஞருக்கும், சாரதாவின் அப்பாவிற்கும் அனுப்பி வைத்தார்கள். சாரதாவினுடைய பெற்றோர் கோபிநாதனையும் சாரதாவையும் வந்து பார்த்தார்கள். ஆசிர்வாதம் செய்துவிட்டுச் சென்றார்கள். அப்பொழுது கோபிநாதன் அந்தக் கவிஞரை சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அவ்வூரில் ஒரு பெரும் இலக்கியக் கூட்டம் நடைபெற்றது. அதற்கு கவிஞர்தான் தலைமை தாங்கினார். கோபிநாதனும் அதில் ஒரு பேச்சாளனாகக் கலந்து கொண்டான். கூட்டம் முடிந்து பல மாலைகளைச் சுமந்தபடி அலட்சியப் புன்னகை செய்தபடி அந்தக் கவிஞர் கோபிநாதனிடம் கேட்டார்.

‘உங்கத் திருமணம் சில நாட்களுக்கு முன்புதான் நடந்தது இல்லையா?’

கோபிநாதன் சொன்னான்.

‘ஆமாம்’

‘அந்தப் பெண்ணை உங்களுக்கு முன்பே தெரியுமா?’

‘தெரியாது’

‘அவள் எழுதிய பல காதல் கடிதங்கள் ஒருவரிடம் இருக்கின்றன.’

‘காதல் கடிதங்கள் விற்பவராய் இருப்பார்!.... எப்படியிருந்தாலும் அந்த விவரத்தை சாரதா என்னிடம் சொல்லியிருக்கிறாள்.’

‘திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுக் கொணட விவரத்தையும் சொல்லியிருப்பாள் இல்லையா?’

‘எல்லாம் சொன்னாள்.’

‘அவள் ஒரு செகண்ட் ஹேண்ட் கூட்ஸ் என்று சொன்னாள் இல்லையா?’ கவிஞர் அழகாகச் சிரித்தார். கோபிநாதன் புன்னகை செய்தான். ‘அந்த விவரத்தையும் சொன்னாள்.’

கோபிநாதன் தொடர்ந்தான். ‘அவளை அந்த நிலைக்குக் கொண்டு வந்த அந்தக் காதலன் கவிஞருடைய பெயரையும் சொன்னாள்.’

இருண்ட முகத்துடன் கவிஞர் பார்த்தார். புன்னனையுடன் கோபிநாதன் விடை பெற்றுக் கொண்டான்.

கவிஞரைப் பார்த்த விவரத்தை அவன் சாரதாவிடம் சொல்லவில்லை. எதற்காகவும் அவளை வேதனைப்படுத்தக் கூடாது. அதுதான் அவனுடைய மந்தரம். சாரதாவிற்கு ஒரு குறையும் இல்லை. உல்லாசம்தான். வீட்டு வேலை செய்வதிலும், சமையல் செய்வதிலும், பத்திரிக்கைகளை மடித்து அட்டை ஒட்டி முகவரிகள் எழுதுவதிலும் மூழ்கியிருந்தாள். ஆனால், அனைத்திற்கும் பின்னால், ‘என் இதயத்தில் காதலில்லை, என்னால் யாரையும் காதலிக்க முடியாது. என் இதயம் சூனியம்!’ என்னும் எண்ணம் இல்லையா?

கோபிநாதனுடைய அதி உணர்ச்சிகளுக்கு முன்னால் உயர்ந்து நிற்கின்ற கருங்கல் சுவர் போல் இருந்தன அவருடைய பேச்சுக்கள்.

மழையினுடைய ஒலியிலும் காற்றினுடைய முழக்கத்திலும் அவனுக்கு சாரதாவினுடைய பேச்சுக்கள் தான் கேட்டன! இப்பொழுது அவள் கேட்கிறாள், அவளை எதற்குத் திருமணம் செய்து கொண்டீர்கள் என்று?

அவன் எழுந்து, குடையை எடுத்து காகிதக் கட்டுடன் அச்சகத்திற்குப் போகத் தயாராகி அவளிடம் விவரம் சொல்லப் போன பொழுது அவள் ஏங்கி ஏங்கி அழுது கொண்டு எழுந்தாள். அவளை அள்ளி அனைத்து முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால், அவளுக்கு அவன்மேல் பாசம் இல்லையல்லவா!’

‘சாரதா, நான் அச்சகத்திற்குப் போய்விட்டு வருகிறேன்.’

அவள் கதறி அழுதபடி அலறினாள்,

‘போய்விட்டு வரும்பொழுது நான் இங்கே இருக்கமாட்டேன்’

‘எங்கே போகப் போகிறாய்?’

‘நான் எங்காவது போய்க் கொள்கிறேன். இல்லையென்றால் தூக்குப் போட்டு செத்துப் போகிறேன்.’

‘அப்படி செய்வதற்கு உனக்கு இங்கே என்ன துக்கம்?’

‘துக்கமா?’ அவருடய மார்புகள் கனமாய் அசைந்தன. ஒன்றுமில்லை’

மறுபடியும் அவள் நெஞ்சில் அடித்துக் கொள்ளத் தொடங்கினாள். கோபிநாதன் அவள் அருகில் சென்று அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

அவள் கர்ஜித்தாள்.

‘என்னைத் தொடாதீர்கள், நான் கெட்டுப் போனவள்’

‘கெட்டுப்போனவள்’ நீ ஏன் இப்படிப் பேசுகிறாய்?’

‘ஒன்றுமில்லை, நான் செத்துப் போகிறேன்.’

‘செத்துப் போகிறாயா? உனக்கு இங்கே என்ன துக்கம்? ’

‘ஒன்றுமில்லை, விக்கி விக்கி சொன்னாள், எனக்கு யாருமில்லை. வெறுத்துப்போன இந்த வாழ்க்கை எனக்கு சலித்துவிட்டது.’

‘உன்னை யார் வெறுத்தார்கள்?’

‘நீங்கள்’

‘கடவுளே’ கோபிநாதனுக்குத் திகைப்பாக இருந்தது. ‘நானா?’ வாய் திறந்தபடி நின்று விட்டான்.

‘ஆமாம், நிறைந்த கண்களுடன் மேல் மூச்சு வாங்கியபடி அவள் சொன்னாள், நீங்கள் என்னைக் கண்டகொள்வதே இல்லை.’

‘எனக்கா? உனக்குத் தானே என் மீது வெறுப்பு?’

‘எனக்கா? அவள் அவனுடைய பரந்த மார்பில் விழுந்து விக்கி அழுதாள்,’

‘நான்........... உங்களை........... என்............ கடவுளை விட...........’

நன்றி- வைக்கம் முகமது பஷீர்

1945ஆம் ஆண்டு எழுதப்பட்ட இக்கதை ‘பிறந்த நான்’ என்னும் பஷீரின் சிறுகதைத் தொகுப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com