Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2006
அகதி வாழ்வு

ச.பாலமுருகன்

தமிழகத்தின் தென்பகுதி வரைபடத்தில் உடைந்துபோன கண்ணாடித் துண்டின் சிதறலாய்க் கிடக்கிறது இராமேஸ்வரம் தீவு. இத்தீவுச்சில்லின் கூர்முனைக்கு பெயர் அரிச்சல்முனை. இலங்கையின் தலைமன்னார் பகுதியுடன் இணைந்திருப்பது போன்ற தோற்றம் தரும் பகுதி. கடலின் உட்பகுதியில் ஆங்காங்கே நிச்சயமற்ற சில மணல் திட்டுகளாலும் புதைமண் பகுதியினாலும் சூழப்பட்ட இக்கடற்கரைப் பகுதியில் இராமேஸ்வரத்திற்கு அப்பால் தனுஷ்கோடி கடற்கரை சோதனைச் சாவடிவரை தார்ச்சாலை உள்ளது. இச்சாலையின் இருபுறமும் கடற்கரை உள்ளது. பல சமயங்களில் காற்றின் வேகத்திற்கேற்ப மணல் சாலையினை சூழ்ந்து கொள்ளும். பாம்பன் பாலம் வருவதற்கு முன் ராமேஸ்வரம் பகுதியில் பயணத்திற்கு குதிரை வண்டி பயன்படுத்தப்பட்டு தற்போது அனாதைகளாக விடப்பட்ட குதிரைகளின் சந்ததிகள் சுதந்திரமாய் சுற்றித்திரியும் வெளியாகவே இக்கடற்கரை உள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் பயணத்தில் வரும் தனுஷ்கோடி சோதனைச் சாவடியோடு சாலை முடிவடைகிறது. அதற்குப் பின் மணல் பகுதியில் செல்ல பெரிய வாகனங்கள் பயன்படுத்தப் படுகின்றன. அங்கிருந்து ஏழு கிலோமீட்டர் தூரப் பயணத்தில் அரிச்சல் முனை.

ஈழத் தமிழர்களின் எல்லையற்ற சோக வாழ்வின் ஒருபுற கரையாகவே அரிச்சல் முனை உள்ளது. தினந்தோறும் இருள் விலகாத காலை வேளையில் இம் முனையின் மணல் திட்டுகளில் தங்களின் கால்களைப் பதித்து அகதிச் சுவடுகளுடன் புதிய சூழலை எதிர்கொள்கின்றனர் ஈழத் தமிழர்கள்.

அரிச்சல் முனைக்கு அகதிகள் வருவது பத்திரிகைகளின் வழக்கமான தினசரி செய்தியாகிவிட்டது. ஆனால் நேரில் நாம் அவர்களை எதிர்கொண்டால் அது நம்மீது சுமத்தப்பட்ட பெரும் சுமையாகவே கருதத் தோன்றும்.

தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களின் அகதி முகாம்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட உண்மையறியும் குழுவில் நானும், அ.மார்க்ஸ், புதுவை சுகுமாறன், வழக்குரைஞர் ரத்தினம், கோச்சடை, சங்கரலிங்கம், தமயந்தி உள்ளிட்ட இருபது தோழர்களுடன் அரிச்சல் முனைக்கு அதிகாலையில் செல்வதற்காக இராமநாதபுரத்திலிருந்து கிளம்பினோம். நாங்கள் போகும் போது நன்கு விடிந்துவிட்டது. தனுஷ்கோடி சோதனைச்சாவடியில் சீருடையணியாத காவலர்கள் ஒரு கூட்டத்தை விசாரித்துக் கொண்டிருந்தனர். குழந்தைகள் கடலின் அலைகளில் கால்பதித்து விளையாடிக்கொண்டிருந்தனர். ஒரு பெண் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். அவருக்கு முன்னே பெரிய பைகள் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்தன. அவரது பெயர் கிற¤ஸ்டியானா. சில இரவுகள் தூங்காத அப்பெண்ணின் வெளிறிய கண்களில் முழுவதும் நிரம்பியிருந்தது பீதியும் நம்பிக்கையின்மையும்.

இலங்கையின் தலை மன்னார் பியர் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த கென்னடி ஜோஸ் என்பவரின் மனைவி அவர். இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே முறிந்துபோன சமாதானப் பேச்சுக்குப் பின் மீண்டும் அவர்களுக்குள் குடிகொண்டது மரண பீதி. இராணுவ வாகனங்களின் சப்தம், தூரத்தில் எழும் வேட்டுச் சப்தம் இவை அனைத்தும் தினந்தோறும் மரணம் பற்றிய அச்சத்தைத் தருவதாகவே இருந்தன. சில மாதங்களுக்கு முன் அவர்களின் பகுதிகளுக்கு இலங்கை ராணுவம் வந்தது. அவர்களைப் பற்றி விசாரித்தது. ‘நாங்கள் மீன் பிடித்தொழில்தான் செய்கிறோம், வேறு போராட்ட இயக்கங்களுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை’ என அப்பகுதி மக்கள் சொன்னார்கள். ஆனால் இலங்கை இராணுவ அதிகாரிகள் அலட்சியமாக, ‘‘இருந்துக்கிட்டுப் போங்க. ஆனால் எங்கள் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் தொடுத்தால் நாங்கள் உங்க எல்லோரையும் சுட்டுக் கொன்றுவிடுவோம். விடுதலைப்புலிகளைப் பற்றி அவர்கள் நடமாட்டம் பற்றி நீங்கள் எங்களுக்கு உளவு சொல்லனும்’’ என்றனர்.

அதன் பின்னிட்டு அங்கும் இங்கும் வரும் செய்திகள் அனைத்தும் அவர்களுக்கு தினந்தோறும் பீதியை ஏற்படுத்தியது. வங்காள விரிகுடாக் கடல்பகுதியில் சுற்றித் திரிந்த இலங்கை ராணுவம் கரையில் ஒரு வீட்டில் புகுந்து, அவ்வீட்டிலிருந்த கணவன், மனைவி மற்றும் நான்கு வயது சிறுவன், நான்கு மாதக் குழந்தையென நான்கு பேரையும் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றது. பேசலைப் பகுதியில் இராணுவத்திற்கு பயந்து தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த பொதுமக்கள் மீது எறிகுண்டை வீசியது இராணுவம். பலர் இறந்தனர். குழந்தைகள் இளம் சிறார்கள் ஒருநாள் போராளியாக மாறக்கூடும் என இராணுவம் சந்தேகப்படும், பாலியல் வக்கிரத்திற்கு என்றாவது ஒருநாள் இளம்பெண்கள் பலியாக்கப்படலாம். குழந்தைகளை எத்தனை நாளுக்குத்தான் அந்த தாய் பாதுகாக்க முடியும். அவர்களின் ஒரே நம்பிக்கை உயிரைக் காப்பாற்ற அந்த மண்ணிலிருந்து ஓடவேண்டும். பதினைந்துமைல் கடலுக்கு அப்பால் தமிழ்நாட்டின் அரிச்சல் முனை உள்ளது.

தன் சொந்த மண்ணில் சூழ்ந்திருக்கும் இரத்த வாடையிலிருந்து ஓடவேண்டும். அவர், தான் அதுவரை சேமித்து வைத்திருந்த நகைகளை விற்றுப் பணமாக்கினார் கிறிஸ்டியானா. குழந்தைகளின் பள்ளிச் சான்றிதழ்களையும் சில துணிகளையும் எடுத்துக் கொண்டார்கள். சில தொடர்புகள் மூலம் கடல் கடந்து விடும் படகோட்டிகளை அறிந்து கொண்டார்கள். ஒருவருக்கு ஏழாயிரம் ரூபாய் பணம் தரவேண்டும். அதுவும் எப்போது வேண்டுமானாலும் கடலில் இலங்கை இராணுவம் ரோந்து சுற்றாத சமயம் பார்த்து கடக்க வேண்டும். எனவே அதற்கு தயாராக ஒரு கடற்கரை காட்டுப்பகுதியில் வந்து இரண்டு மூன்று நாட்கள் தங்க வேண்டும். கிருஸ்டியானா£வைப் போல சில குடும்பங்கள் குழந்தைகளுடன் அப்பகுதியில் தங்கியிருந்தன. ஒருநாள் இரவு படகோட்டி அனைவரையும் கிளம்பச் சொன்னான். கடலில் கரையை உற்று நோக்கியபடியே படகில் ஏறினார்கள். கடலில் எதுவும் நடக்கலாம். இலங்கையில் தமிழர்கள் கடந்த பல வருடங்களாகவே அந்த நிலைக்கு தொடர்ந்து உள்ளாக்கப்பட்டார்கள். மரணம் பல சமயங்களில் அவர்கள் அறிந்ததும் உணர்ந்ததுமாகவே இருந்தது. கடலில் படகுகளில் எவ்விதமான சிறு வெளிச்சமுமின்றி நிலவொளியில் பயணித்தனர். தூரத்தில் இலங்கைக் கடற்படையின் படகு போன்ற எதுவேனும் தட்டுப்படுமாயின் படகின் சப்தம் தங்களை காட்டிக் கொடுத்துவிடும் என படகின் மோட்டாரை நிறுத்திக்கொண்டவுடன் பின் எதுவுமில்லை என உறுதிபடுத்திய பின்பு பயணம் தொடங்கும். ஆழ்கடல் பகுதியில் ராணுவம் கண்காணிப்பில் உள்ளதால் கரைப்பகுதியின் ஓரமாக- தீவுப்பகுதி மண்தட்டு ஓரமாக பயணம் செய்தனர். படகிலிருந்து சிறு சப்தமும் வராமல் குழந்தைகள் மூவரையும் அணைத்தபடியே கிறிஸ்டியானா வந்தார்.

பல சமயம் பக்கவாட்டு கடல் அலைகள் படகுகளை கவிழ்த்து விடுவதும் உண்டு. கடந்த ஒரு மாதத்திற்கு முன் அரிச்சல் முனைக்கு தப்பி வந்த அகதிகளின் படகு பக்கவாட்டு அலைகளால் கவிழ்த்தப்பட்டது. தன் கண்முன்னே தாய் மூழ்கிப்போனாள், தந்தையை தம்பியை காப்பாற்றச் சொல்லிவிட்டு மூழ்கிப் போனாள் சகோதரி. படகுகளைப் பிடித்து தத்தளித்தவர்களின் கால்களில் தரை தட்டுப்பட்டது. அப்போதுதான் அது திட்டான பகுதி என்பதை உணர முடிந்தது. ஆனாலும் ஆறு பெண்கள் படகுக்குள் இறந்து கிடந்தார்கள். பலரின் சடலம் கிடைக்கவில்லை. அகதிகளிடமிருந்து வரும் செவி வழிச் செய்தியாக அவர்களில் சிலரது சடலம் இலங்கை கடற்பகுதியில் ஒதுங்கியதாகவும் பேசப்பட்டது. சில நேரங்களில் அவசரமாக மணல் திட்டுகளில் இறக்கிவிட்டுவிட்டு படகோட்டிகள் படகை ஓட்டிச் சென்று விடுவார்கள். கடலில் அலைகள் அதிகமாக இருக்கும் போது கடல் நீர் உயர்ந்து மணல் திட்டை மூழ்கடிக்கும். ஆக கரை சேரும் வரை எதுவும் உத்திரவாதமில்லை. கடவுள், விதி என எது ஒன்றையாவது நம்பித்தான் பாக் சலசந்தியில் தொடர்கிறது ஈழத் தமிழர்களின் அகதி நிலைத் தொடக்கமான அந்த படகுப்பயணம்.

அன்று கிறிஸ்டினாவின் குடும்பத்தவர் வந்த படகு எவ்வித பெரும் அச்சுறுத்தலையும் சந்திக்கவில்லை. விடியும் நேரத்தில் அரிச்சல் முனை கரையில் அவர்களை இறக்கிவிட்டுவிட்டு வேகமாக திரும்பியது அவர்கள் வந்த படகு. இலங்கை இராணுவத்தினர் அகதிகளை நடுக்கடலில் கண்டால் துப்பாக்கியால் சுடுவார்கள். ஆனால் இந்திய கடற்படையினர் கடல் காவல் படையினர் அவ்விதம் நடந்து கொள்வதில்லை. அதேசமயம் படகோட்டிகள் அகப்பட்டால் அவர்களை சிறப்பு அகதி முகாமுக்கு அனுப்பி விடுவார்கள் அல்லது கடவு சீட்டு இன்றி பயணம் செய்ததற்காக சிறையில் அடைத்து விடுவார்கள். மண்டயம் அகதி முகாமில் தங்கியுள்ள மகேஸ்வரி தன் கணவன் ராஜு படகோட்டியாக இருந்தால் அவரின் நடத்தையில் சந்தேகப்பட்ட க்யூ பிரிவு காவல் துறையினர் அவரை செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமுக்கு மாற்றிவிட்டனர். சிறப்பு முகாம் என்பது ஏறக்குறைய ஒரு சிறை போன்றதுதான். எப்போதும் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் என்ற நிலையில் இச்சிறப்பு முகாம்களில் அடைக்கப்படுகின்றனர். தமிழகத்தின் 24 மாவட்டங்களில் உள்ள 101 அகதி முகாம்களில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் இவ்விதமான சிறப்பு முகாம்கள் உள்ளன. தற்போது செங்கல்பட்டு முகாமில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் கடற்கரைப் பகுதியில் குறிப்பாக இராமேஸ்வரத்தை சுற்றியுள்ள கடற்பகுதிகளில் படகுகளில் புலம் பெயர்ந்து அகதியாக தமிழர்கள் வரும்போது அவர்கள் முதல் கட்டமாக அப்பகுதி காவல் துறை மற்றும் க்யூ சிறப்புத் துறை காவலர்களால் விசாரிக்கப்படுகின்றனர். அகதிகளாக வருபவர்களின் கைகால்களில் உள்ள குண்டு காயத் தழும்புகள் மற்றும் இராணுவ பயிற்சி எடுக்கும் போது ஏற்படும் கை, கால், முட்டியில் உள்ள காப்பு தழும்புகள் போன்றவற்றை பார்க்கும் காவல் துறையினர் அவ்விதம் உள்ளவர்களை தனித்த முறையில் விசாரிக்கின்றனர். அவர்களை ஈழப் போராளிகள் என்று காவல்துறை அடையாளப்படுத்துகிறது. அதன்பின்பு அடுத்தக் கட்ட விசாரணைக்கு எல்லா அகதிகளும் அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். அரிச்சல் முனையில் இறங்கிய அகதி நிலை எய்திய மக்கள் தனுஷ்கோடி காவல் நிலையத்தில் விசாரிக்கப்படுகின்றனர். அதன்பின்பு அவர்கள் மண்டபம் பகுதியில் உள்ள அகதி முகாமுக்கு மாற்றப்படுகின்றனர். இந்த முகாம் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய அகதிகள் மற்றும் பர்மாவிலிருந்து இலங்கை வழி வந்தவர்கள் தங்கும் தற்காலிக முகாமாகவே இருந்துள்ளது.

இம்முகாமில் அகதிகளுக்கென ஒரு சிறப்பு வட்டாச்சியர் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு கொண்டு வரப்படும் அகதிகளுக்கு பதிவு செய்யப்பட்டவுடன் படுக்க ஒரு கோரைப் பாய், மற்றும் ஒரு சில பாத்திரங்கள் வழங்கப்படுகின்றன. அவர்களுக்கான ரேசன் வாங்கும் கார்டு வழங்கப்படுகிறது. அதன் பின்பு மீண்டும் இந்த அகதிகள் க்யூ மற்றும் சிறப்பு பிரிவு விசாரணைக்கு கட்டாயம் உள்ளாக்கப் படுகின்றனர். மண்டபம் முகாமில் முன்பு கலையரங்கமாக இருந்த ஒரு அரங்கம் கதவுகள் சாத்தப்பட்டு சிறைக்கூடமாக மாற்றப்பட்டுள்ளது. அகதியாக வந்தவர்கள் இங்கு காவல் துறையின் விசாரணைக்கு முப்பது நாட்கள் வரை வைத்திருக்க மத்திய அரசின் ஆணை அனுமதிக்கிறது. பலர் இந்த சிறிய கலையரங்கப்பகுதியில் அடைக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் சேர்த்து ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது. சுகாதாரமும், சுதந்திரமும் இவ்விசாரணையில் இல்லை.

சந்தேகப்படாதவர்களை இரண்டு மூன்று நாட்களில் சாதாரண பகுதிக்கு மாற்றி வீடுகளை ஒதுக்கி விடுவதாகவும் ஆனால் போராளி தொடர்பு அல்லது வேறு சந்தேகப்படும் நபர்களையே காவல்துறை விசாரிப்பதாகவும் நாங்கள் சந்தித்த தமிழக அகதிகள் உதவி இயக்குனர் ஜெயக்குமார் தெரிவித்தார். நாங்கள் மண்டபம் முகாமை சுற்றி பார்க்கும்போது அந்த சுருள் கதவு அடைக்கப்பட்டிருந்த கலையரங்கில் கவலையும் விரக்தியும் தோய்ந்த முகத்துடன் பலர் அமர்ந்திருந்ததை காண முடிந்தது. ஒருவர் தொடர்ந்து அங்கேயே பதினைந்து நாட்களுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். சிறப்பு காவல் துறையினர் விசாரணை எல்லாவற்றையும் அதிகமாக சந்தேகப்படுவதாகவே இருந்துள்ளது. இக் கண்டத்திலிருந்து தப்பினாலேயே அகதிகளுக்கு நிம்மதி பெரு மூச்சு வரும். இல்லையேல் போராளி தொடர்பு என்ற முத்திரையுடன் சிறப்பு முகாம் என்ற சிறைக்களுக்கே செல்ல வேண்டும்.

இலங்கையின் ஈழ விடுதலைப் போராட்டத்தில் பொதுமக்களில் பலர் குண்டுக் காயம் பட்டனர். பல இயக்கங்களில் தங்களின் உயிர் பிழைக்கவும் சுயமரியாதை காக்கவும் சிங்கள இன வெறி இராணுவத்திற்கு (இலங்கை இராணுவத்தில் தமிழர்கள் இல்லை. அனைவரும் சிங்களர்களே) எதிராகப் போராடிய இளைஞர்கள் பலர் இயக்கங்களை விட்டுவிட்டு வெளியேறி உள்ளனர். பல போராளி இயக்கங்கள் கலைக்கப்பட்டும் உள்ளன. தமிழகத்தில் ஈழப் போராளி தொடர்பை தவிர்க்க எடுக்கப்படும் காவல்துறையின் எச்சரிக்கை நடவடிக்கை, மருந்தாக இருக்க வேண்டுமேயன்றி அதுவே நோயாக மாறிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை அரசுக்கும் தேவை. ஏனெனில் சர்வதேச மனித உரிமை சாசனம் தன் பிரகடனத்தில் போர்ச்சூழலில் தன் உயிரை காப்பாற்ற பக்கத்து நாட்டின் மண்ணில் தஞ்சம் பெறும் உரிமையை மனித உரிமை என அங்கீகரிக்கிறது. அகதிகளை கண்ணியத்துடன் நடத்துவது உலக நாடுகளின் கடமை என வலியுறுத்தியுள்ளது. மண்டபம் அகதி முகாமினைப் பார்வையிட அரசிடம் கோரிய அனுமதி முதலில் மறுக்கப்பட்டு பின்னரே எங்களுக்கு வழங்கப்பட்டது. நாங்கள் அகதிகள் முகாமுக்குள் செல்லும்போது புதிதாக வந்திருந்த பல குடும்பங்களைச் சார்ந்தவர்கள் தங்களுக்கு அரசு வழங்கியிருந்த கோரைப்பாயை தரையில் விரித்து அதில் தங்களின் பயணப் பைகளை வைத்து உட்கார்ந்திருந்தனர். சிலர் தங்களின் பதிவுக்காக காத்திருந்தனர். பலர் புதிதாக வந்திருக்கும் தன்னைப் போன்றவர்களிடம் தங்கள் ஊரில் தாம் எதிர்கொண்டவற்றை பேசிக்கொண்டிருந்தனர்.

ஒரு தேசிய இனம் அமைதியான வாழ்வுக்காகவும், உயிர் பிழைக்கவும் உலகின் உன்னதமாக எல்லாவற்றையும் இழந்து தப்பிவரும் நிலையின் கொடூரம் விவரிக்க முடியாதது என்பதை நேரில் காணும்போதே ஆழமாக அறியமுடிகிறது. மண்டபம் முகாம் சுமார் நான்காயிரம் பேர் வசிக்கக் கூடிய அளவு இடவசதியான முகாமாகும். இம்முகாமிற்குள் மருத்துவமனையும் செயல் படுகிறது. முகாமில் அகதிகள் வருகை பதிவு கண்காணிக்கப்படுகிறது. பத்துக்கு பத்து சதுரஅடி கொண்ட வரிசையான வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வரிசைக்கும் வீட்டின் பின்புறம் தள்ளி கிணறு மற்றும் கழிப்பறைகள் உண்டு. ஆனால் இக்கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத அளவு பாழடைந்து கிடக்கின்றன. மண்டபம் முகாமின் ஆரோக்கிய சூழலை இக்கழிப்பிடங்கள் கேள்விக்குள்ளாக்குகின்றன. ஈழத்தமிழர்களின் வாழ்நிலை பண்பாடு நம் பழைய சேர நாட்டு தமிழர்களான மலையாளிகளின் பண்பாட்டுடன் ஒத்துப்போவதாகவே உள்ளது.

கேரளாவைப் போல ஈழத்தில் சிறு குடிசை வீட்டில் கூட ஒரு தனிக் கழிப்பறை கட்டிக் கொள்வது வழக்கமாகும். ஆனால் பாழடைந்து கிடக்கும் மண்டபம் முகாம் கழிப்பறைகளால் பெண்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். கடற்கரைப்பகுதி மற்றும் புதர் பகுதிகளில் சென்று மலம் கழிப்பது ஆபத்தானதாகவும் வேதனைமிக்கதாகவுமே பெண்கள் கருதுகின்றனர். பொதுவாக தமிழகத்தில் உள்ள நூற்றி ஒரு அகதி முகாம்களிலும் கழிப்பறை வசதி எதுவும் இல்லாத நிலையே உள்ளது. பொதுக் கழிப்பறைகள் என்ற பழைய கண்ணோட்டத்திற்கு பதிலாக ஒவ்வொரு வீட்டிற்கும் வீட்டின் பின்பகுதியில் தனிக்கழிப்பறை கட்டி தருவது என்பதே பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் நீண்டகால பயன்பாட்டிற்கும் ஏற்புடையதாக இருக்கும். மண்டபம் முகாமில் அகதிகள் குடியிருப்பு மட்டுமல்ல மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் குடியிருப்பில் கூட கழிப்பறை வசதியின்றியே உள்ளது.

மின்சாரம் ஒவ்வொரு வீட்டிற்கும் மாலை 6 மணியிலிருந்து காலை 6 வரை ஒரு குண்டு பல்பு எரிய வழங்கப்படுகிறது. வேறு பயன்பாட்டுக்கு மின் உபயோகம் கிடையாது. தேவைப்படுபவர்கள் பணம் செலுத்தி மின் இணைப்பு பெற வேண்டும். நாங்கள் மண்டபம் சென்றிருந்த தினத்திற்கு முந்தைய நாள் இம் முகாம் மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியிருந்தார்கள். மண்டபம் பகுதியில் அகதிகள் மறுவாழ்வுக்காக பாதிரியார் ஒருவர் தொண்டு நிறுவனம் நடத்தி வருகின்றார். மாலை வேலைகளில் பள்ளி குழந்தைகளுக்கு டியூசன் எடுப்பதும் உண்டு. அவ்வாறு டியூசன் படிக்க வந்த ஒரு சிறுவன் தன் செல்போன் மற்றும் கேமிராவை திருடிவிட்டதாக சந்தேகித்து அப்பாதிரியார் மண்டபம் காவல் துறையில் புகார் செய்துள்ளார். சந்தன வீரப்பனை பிடிக்க நியமிக்கப்பட்ட அதிரடிக்கபடையில் பணியாற்றி பதவி உயர்வு பெற்றிருந்த மாறன் என்ற அந்த ஆய்வாளர் அச்சிறுவனையும் அவர்கள் பெற்றோரையும் இரண்டு நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்து தாக்கி சித்திரவதை செய்திருப்பது தெரிய வந்ததும் முகாமிலுள்ள அகதிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். அதன் பின்பே அதிகாரிகள் இப்பிரச்னையில் தலையீடு செய்துள்ளனர். எங்களுடன் முகாமை சுற்றிக் காட்ட வந்திருந்த அரசு ஊழியர் ‘‘நேற்று சாலை மறியலில் இந்திய நாய்களே என திட்டுகிறார்கள்’’ என்றார். ‘‘சிறுவனைப் பிடித்து அடித்து சித்ரவதை செய்துள்ளது காவல்துறை. பாதிக்கப்பட்டவர்கள் திட்டாமல் இந்தியர்களுக்கு புகழாரம் சூட்டுவார்களா?’ என்று நாங்கள் கேட்டபோது அவர் ‘‘சரிதான்’’ என்று மழுப்பிக் கொண்டார்.

அகதிகளுக்காக தமிழக அரசு, குடும்பத் தலைவருக்கு இரண்டு வாரத்துக்கு ரூ.100 வீதம் மாதம் ரூபாய் 200 வழங்குகிறது. குடும்பத்தின் அடுத்த வயது வந்தவர்களுக்கு மாதம் ரூ.145 வழங்கப்படுகிறது. பனிரெண்டு வயதுக்குள் உள்ள குடும்பத்தின் முதல் குழந்தைக்கு மாதம் ரூ.45 ம் அடுத்த குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ரூ.22 மட்டும் வாழ்வூதியமாக வழங்குகிறது. இத் தொகையானது இன்றைய சூழலில் எவ்வித அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றாது. இத்தொகையினை இன்றைய விலைவாசி நிலைக்கேற்ப சில மடங்கு உயர்த்தித் தர வேண்டியது அவசியமாகும். தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள அகதி முகாம்களில் 54000 மக்கள் இருப்பதாக அரசு கூறுகிறது. இவ் எண்ணிக்கை சுமார் ஒரு இலட்சம் இருக்கலாம். ஆனால் இவர்களின் வாழ்விடங்களில் மின்சாரம், குடிநீர், கழிப்பிட வசதி போன்றவை போதுமானவையின்றி துன்பப்படும் நிலையே உள்ளது.

தாங்கள் உயிர் பிழைக்க அனுமதி தந்துள்ள அரசிடம் போராடி பெற முடியாத நிலையில் கிடைப்பதை பயன்படுத்திக் கொண்டு தங்கள் பூமியில் ஒருநாள் யுத்தம் ஓயும் என்ற நம்பிக்கையுடன் வாழ்வதே அகதிகளின் மனநிலையாக உள்ளது. ஆனால் நம் அரசியல் கட்சிகள் சமூக இயக்கங்கள் இவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகும். ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு பின் ஈழத்தமிழர்கள் அனைவரையும் குற்றவாளிகளாகவும் தீவிரவாதிகளாகவும் பார்க்கும் பாதகமான மனநிலை இங்கு உள்ள அரசியல் சூழலில் மாற்றப்பட்டுள்ளது. அகதி முகாமுக்கு சென்று அவர்களின் குறைகளை கேட்டு களைய எந்த ஒரு அரசியல் தலைவர்களும் கட்சிகளும் தயாரில்லாத ஒரு நிலையே தொடர்கிறது. அகதி நிலைக்கு தள்ளப்பட்ட தமிழர்களுக்கும் கண்ணியமான வாழ்க்கைச் சூழலை உத்திரவாதப்படுத்துவது சனநாயகப் பண்பின் அடிப்படை ஆகும்.

சீனாவிலிருந்து தலாய்லாமாவின் தலைமையில் வெளியேறிய திபெத்தியர்கள் நம் நாட்டில் ஒரு இலட்சம் பேர் அகதிகளாக உள்ளனர். இவர்களின் ஒரு குடியிருப்பு ஈரோடு மாவட்டம் தாளவாடியை ஒட்டிய கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ளது. இம்மக்களுக்கு சொந்த குடியிருப்பு மற்றும் ஆரோக்கியமான சூழலை தந்துள்ளது நம் அரசு. அந்த அகதிகள் குடியிருப்புகளுடன் ஒப்பிடும்போது நம் ஈழத் தமிழர்களின் குடியிருப்புகள் மிக கொடுமையானவை. முறையான கூரையில்லாத, கழிப்பறை வசதியற்ற எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள குடியிருப்புகளை மாற்ற குரல் கொடுப்பது விடுதலைப்புலி ஆதரவு குரலல்ல என்பதை அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள மறுக்கின்றன. அகதித் தமிழர்கள் வாக்களிக்கும் தகுதியில்லாதவர்களாக இருப்பதால்கூட அவர்களை கண்கொண்டு பார்க்க பெரும்பான்மையான கட்சிகள் மறுக்கலாம்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக அரசு அவர்களுக்கு வழங்கி வந்த பல சலுகைகளை திரும்பப் பெற்றுள்ளது. ஈழ அகதிகளின் குழந்தைகள் தொழில் நுட்ப கல்விக்கான நுழைவுத் தேர்வு எழுதாமல் நேரடியாக தேர்வுக்கு 2சதவிகிதம் சீட்டுக்கள் ஒதுக்கப்பட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல தமிழகத்தில் நடைபெறும் தொழில்நுட்ப கல்வி நுழைவுத் தேர்வுகளில் ஈழ அகதிகளின் குழந்தைகள் எவ்வளவு கூடுதல் மதிப்பெண் பெற்றிருந்தாலும் பங்கேற்கவும் இயலாது. எனவே தமிழகம் முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளாக பள்ளி இறுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள எழுபதுக்கும் மேற்பட்ட ஈழ அகதி மாணவர்கள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு தமிழகத்தில் ஒதுக்கப்பட்ட 25 மருத்துவர் மற்றம் 25 பொறியாளர் கல்வி இடங்கள் தற்போது மறுக்கப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளில் இம் மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியாத சூழல் உள்ளது. கல்வி என்பது தனியார் கல்லூரியில் மட்டுமே சாத்தியம் என்ற நிலை இவர்களுக்கு உருவாகியுள்ளது.

ஈழத்தமிழர்கள் சிலர் இலங்கையிலிருந்து நேரே தமிழகம் வராமல் வேறு நாட்டிற்கு சென்று தமிழகம் திரும்பியுள்ளனர். பலர் அகதிகளாக இருந்துவிட்டு வேறு வெளிநாடுகளுக்கு சென்று மீண்டும் தமிழகம் திரும்பியுள்ளவர்கள். ஆனால் இவர்களை தமிழக அரசு அகதிகளாக கருதுவதில்லை. இவர்களை வெளிநாட்டவர் என்று கருதுகிறது. இவர்களை பல சமயம் உரிய அனுமதியின்றி தங்கியுள்ள வெளிநாட்டவர் என கருதி இந்திய வெளிநாட்டவர் சட்டபடி சிறைபடுத்துவதும் தொடர்கிறது.

கணவன் வீட்டில் மனைவி வாழும் பண்பாட்டு சூழலில் தமிழகத்தின் முகாம்களில் உள்ள ஆண்கள் இங்குள்ள பெண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களுடன் முகாம்களில் வாழும் நிலையில் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை ஈழ அகதி குழந்தைகளாக கருதி உரிய ரேசன் மற்றும் சலுகைகளை இதுவரை அரசு வழங்கி வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக அச்சலுகை மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அகதிகளுக்கான அடையாள அட்டை மற்றும் பிற ஆவணங்களிலிருந்து அக்குழந்தைகளின் பெயரை நீக்கும் பணியினை வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சர்வதேச சட்டங்களின் படி ஒரு குழந்தைக்கான குடியுரிமை அதன் தாய், தந்தையரின் நாடுகள் அல்லது பிறந்த நாடு ஆகிய இடங்களை பொறுத்து முடிவு செய்யப்படுகிறது. இச்சூழலில் மேற்கண்ட குழந்தைகளை இந்திய குடிமக்கள் எனக்கருதி அரசு அவர்களுக்கு வழங்கிய சலுகைகளை இரத்து செய்துள்ளதா? என நாம் கேள்வி எழுப்பியபோது, அரசு வருவாய் அதிகாரிகள் தங்களுக்கு எதுவும் தெரியாது தற்போது அக்குழந்தைகள் பெயர் நீக்கம் மட்டுமே செய்ய உத்திரவு வந்துள்ளது எனக் கூறுகின்றனர். ஆனால் முகாம்களில் உள்ள ஈழ மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தற்போது ஈழ அகதி உரிமையும் மறுத்தும், இந்திய குடியுரிமையும் மறுத்து நாடற்றவர்களாகவும், அடையாள மற்றவர்களாகவும் ஆக்கும் சூழல் எழுந்துள்ளதாக கூறுகின்றனர். இது குறித்து அரசு தெளிவாக விளக்க வேண்டும். இக்குழந்தைகளை நம்மவர்கள் என அங்கீகரித்தால் கூட அவர்களை அகதி தகப்பனின் குழந்தைகள் என்பதை கருதி உரிய சலுகைகள் வழங்கப்பட வேண்டியது அவசியம்.

1951-ம் ஆண்டு ஐக்கிய நாட்டுச் சபையானது ஜெனிவாவில் அகதிகளுக்கான மாநாட்டு வரைவை வெளியிட்டது. மேற்கண்ட மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் இவ்வுடன்படிக்கையில் கையப்பமிட்டனர். அன்றைய காலகட்டத்தில் பல கம்யூனிஸ்ட் நாடுகளிலிருந்து அகதிகளின் வெளியேற்றம் அதிகமாயிருந்தது. அவ்வகதிகளை ஏற்றுக்கொள்ள எதிர்முகாமில் உள்ள நாடுகள் தயாராகவேயிருந்தன. அணிசேரா கொள்கையை கடைபிடித்து வந்ததாக அறிவித்த இந்திய அரசு மேற்கண்ட அரசியல் காரணங்களால் அகதிகளுக்கான ஜெனிவா உடன்பாட்டில் கையப்பமிடவில்லை. ஆனால் பல அரசியல் நிகழ்வுகளுக்கு பின்பும் தொடர்ந்து தன் பழைய செல்லரித்துப்போன நிலைபாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. ஜெனிவா மாநாட்டு வரைவானது அகதிகள், தான் அடைக்கலம் புகும் நாட்டில் ஆரம்பக் கல்வி பெறும் உரிமையையும், தன் அடிப்படை உரிமைகளுக்காக அந்நாட்டு நீதிமன்றங்களை பயன்படுத்தும் உரிமையையும் மற்றும் வேலை வாய்ப்புகளில் அந்நாட்டு குடி மக்களுக்கு இணையாக பங்குபெறும் உரிமையையும் அங்கீகரித்துள்ளது.

ஆனால் நம் நாட்டில் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தனிமனித சுதந்திரம் மற்றும் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், தான் விரும்பிய மத வழிபாட்டு உரிமை ஆகியவை இந்திய குடிமகன் இல்லாதவர்க்கும் பொருந்தும் என்று உள்ளதை தவிர வேறு உரிமைகளையோ அல்லது அகதி சூழலில் தங்கள் குறைகளை தீர்க்கும் அமைப்புக்களோ அகதி மக்களுக்கு அளிக்கப்படவில்லை. மேலும் உலகின் பிற நாடுகளில் அகதி மறுவாழ்வுக்கு சிறப்பாக செயல்படும் ஐக்கிய நாடுகள் சபையின் கமிஷன், அகதிகளுக்கான உயர்கமிஷன் செயல்பாடும் இங்கு வெகுவாக மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளது. தொடர்ந்து அகதிகளின் வாழ்வுரிமை மேம்பாடு குறித்து குரல் எழுப்பப்படும் போது அகதிகளுக்கான ஜெனிவா உடன்பாட்டில் இந்தியா ஒரு அங்கதினர் இல்லை எனக்கூறி தப்பிக்கும் நிலைபாடு உள்ளது. ஆனால் ஐ.நா. சபையின் அகதி உயர் கமிஷனில் (ஹிழிபிசிஸி) ல் செயற்குழுவில் இந்தியா ஒரு உறுப்பினராக உள்ளது. இருந்தபோதும் இந்திய அரசு 1951 அகதிகளுக்கான ஜெனிவா மாநாட்டு தீர்மானத்திலோ 1967ம் ஆண்டு அது குறித்து கொண்டு வரப்பட்ட செயல் திட்டத்திலோ தொடர்ந்து கையெழுத்திடாமலேயே உள்ளது.

1995-ம் ஆண்டு இலங்கையில் சட்டப்பேராசிரியராக பணியாற்றிய நிர்மலா சந்திரசேகரன் என்ற புலம் பெயர்ந்த பெண்மணியை 1946 வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் தொடர்ந்து அனுமதியின்றி இந்தியாவில் தங்கியிருப்பவர் என்ற குற்றச்சாட்டில் சிறைபடுத்தப்பட்ட நிகழ்வில் தேசிய மனித உரிமை ஆணையம் தலையீடு செய்தது. அதில் அகதிகளுக்கான அடையாள அட்டை உள்ளவர்களை வெளிநாட்டவர் சட்டத்தின்கீழ் கைது செய்யக்கூடாது என அரசுக்கு அறிவுரை வழங்கியது. மேலும் அகதிகளுக்கும் அடிப்படை மனித உரிமைகள் பாதுகாக்க அரசு முன் வரவேண்டும் என்று தேசிய மனித உரிமை தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அரசுக்கு அறிவுறுத்தியது. இந்திய அரசின் சட்டங்கள் எதுவும் அகதிகளுக்காக இல்லாத நிலையில் அகதி வாழ்வு என்பது உரிமையற்ற வாழ்வாக இம்மக்களுக்கு மாறியுள்ளது. தங்களின் தாயகம் போர்ச் சூழலில் சிக்கியுள்ள சூழலில் தங்களுக்கு தங்க அனுமதி தரும் அரசினை எதிர்த்து உரிமைகளை கேட்டால் மீண்டும் இலங்கைக்கு விரட்டப்படலாம் என்ற அச்சம் அகதி மக்களிடம் அதிகமாகவே உள்ளது. ஐ.நா சபையின் அகதிகளுக்கான உயர்கமிஷனர் அமைப்பு தொடர்ந்து இந்திய அரசு அகதிகளுக்காக சிறப்பு சட்டம் அமைக்க வலியுறுத்தும் நிலையில் தேசிய மனித உரிமை ஆணையம் தொடர்ந்து அகதி மக்களை மனிதத் தன்மையோடு நடத்த அறிவுறுத்தி வருகிறது. ஐக்கிய நாட்டுச் சபையில் நிரந்தர உறுப்பினர் இடம், ஐ.நா.பொது செயலாளராக இந்தியரை தேர்தலில் நிறுத்தும் ஆர்வம் போன்ற செயல்பாடுகள் மூலம் சர்வதேச அரங்கில் தன்னை முன்னிலைப்படுத்தும் இந்திய அரசு ஐ.நா. சபையின் மனித உரிமைகள் சார்ந்த மாநாட்டு வரைவான அகதிகளுக்கான ஜெனிவா மாநாடு மற்றும் பிற தீர்மானங்களை புறக்கணித்து வருவது வேடிக்கையானதாகும்.

இந்திய அரசு அகதிகளுக்கான சர்வதேச மாநாட்டில் பங்கேற்காமல் இருக்கலாம். ஆனால் உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் நம் நாடு பங்கேற்காத பல மாநாட்டு உடன்படிக்கைகள் மற்றும் சர்வதேச சட்டங்கள் நம் உள்நாட்டுச் சட்டங்களுக்கு முரண்பாடாக இல்லாத சமயம் அச்சர்வதேச சட்டங்கள் நம்மை கட்டுப்படுத்தும் என்று கூறியுள்ளது. எனவே நம்மை சுற்றியுள்ள ஈழ அகதி மக்களின் அகதி வாழ்வு மனித உரிமை பண்பாடும், கண்ணியமும் உள்ள வாழ்வாக இருக்க வேண்டியதை உத்திரவாதப்படுத்துவது அவசியமானதாகும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com