Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி- மார்ச் 2009

ஜார்ஜ் ஷூ புஷ்
எஸ்.வி.ராஜதுரை

மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றிய பரபரப்புச் செய்திகள் சற்று ஓய்ந்துவந்த சமயத்தில்,குறைந்த அளவு ஒரிரு நாள்களுக்காவது தொலைக்காட்சி சேனல்களுக்குத் தீனி போடக்கூடிய மற்றொரு நிகழ்ச்சி நடந்தது. அது, சர்வதேச பயங்கரவாதியான ஜார்ஜ் புஷ் தொடர்பான நிகழ்ச்சி; அரபு உலகம் முழுவதையும் மட்டுமின்றி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்மீது வெறுப்புகொண்டுள்ள உலக மக்களையும் எண்ணற்ற பத்திரிகை யாளர்களையும் 2008 டிசம்பர் 14 அன்று மகிழ்ச்சிப்பெருக்கில் ஆழ்த்திய நிகழ்ச்சி. இராக்கைப் பல இலட்சம் மக்களின் சவக்குழி யாக்கியுள்ள ஜார்ஜ் புஷ்ஷின் எட்டாண்டு சாதனைகளுக்கான கல்லறை வாசகமாக அமைந்தது அந்த நிகழ்ச்சி. ஒருவரை மிகவும் அவமதிக்கின்ற செயல் என அரபு உலகத்தால் கருதப்படுவதாக நியூ யார்க் டைம்ஸ் முதல் நக்கீரன்வார ஏடுவரை வர்ணிக்கப்பட்ட அந்தச் செயலை மேற்கொண்டவர் நெஞ்சுரம் மிக்க இளம் பத்திரிகை யாளர். அந்த நிகழ்ச்சியின் வீடியோப்படம் ஜார்ஜ் புஷ்ஷின் மரணத்திற்குப் பிறகும் நெடுங் காலம் மக்களின் மனத்தில் பதிந்திருக்கும்.

இந்திய மக்கள் அனைவராலும் நேசிக்கப்படுவராக மன்மோகன் சிங்காலும், மிக நீண்டகாலம் இராக்கிற்கும் இராக்கிய மக்களுக்கும் பக்கபலமாக நின்றவராக இராக்கிலுள்ள பொம்மை அரசாங்கத்தின் பிரதமர் நூர் அல்-மாலிக்கியாலும்,இராக்கை விடுதலை செய்வதிலும், ஜனநாயகம், மனித உரிமைகள், சுபிட்சம் ஆகியவை இராக்கில் படிப்படியாக வந்து சேர்ந்த இந்த நாளை நாம் அடைவதிலும் நமக்கு உதவி செய்தவராக இராக்கியக் குடியரசுத் தலைவர் ஜலால் தாலிபானியாலும் போற்றப் பட்டுள்ள ஜார்ஜ் புஷ் மீது 29 வயதுத் தொலைக்காட்சிப் பத்திரிகையாளர் முன்டாதர் அல்-ஸெய்தி (Muntadhar al Zaidi ) ஓராயிரம் சொற்களை தனது காலணிகள் (Shoes) மூலம் உலகிற்கு அறிவிக்கச் செய்தார். எனினும், புஷ்ஷின் மீது காலணிகளை எறியும் போது அவர் கூறிய வார்த்தைகள் இவை மட்டுமே: இது உனக்கு விடை கொடுத்தனுப்பும் முத்தம், நாயே. இது விதவைகளும் அனாதைகளும் இராக்கில் போரில் கொல்லப்பட்ட வர்களும் தரும் முத்தம். இராக்கை விடுதலை செய்த, அந்த நாட்டு மக்களுக்கு ஜனநாயகம், சுபிட்சம், மனித உரிமைகள் ஆகியவற்றைக் கொண்டு வந்த ஜார்ஜ் புஷ்ஷும் சரி, பிற அமெரிக்க, ஐரோப்பிய அரசியல் தலைவர்களும் உயர் இராணுவ அதிகாரிகளும் சரி, இராக்கிற்குள் ஒருபோதும் பகிரங்க மாக நுழைந்தது கிடையாது. அவர்கள் வந்து சேரும் நாளும் நேரமும் எப்போதுமே இரகசியமாக வைக்கப்பட்டிருக்கும். பாக்தாத் விமான நிலையத்திலுள்ள மிகப் பெரும் அமெரிக்க இராணுவத் தளத்திற்கு அவர்கள் மிக கமுக்க மாகவே வந்து சேர்வர். பின்னர் எண்ணற்ற ஆயுதமேந்திய படை வீரர்கள் புடைசூழ ஹெலிகாப்ட ரில் ஏறி, பெருமளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதும் பாக்தாத் நகரின் பசுமை வலயம் (Green Zone) எனச் சொல்லப்படுவதுமான பகுதிக்குள் நுழைவர். சிலமணி நேரத்திற்குப் பிறகு பத்திரிகையாளர்கள் கூட்டத் தில் பேசுவர். அன்று யார் இராக்கியத் தலைவர்களாக இருக்கி றார்களோ அவர்களில் ஒருவரின் தலைமையில் அந்தக்கூட்டம் நடத்தப்படும். இராக்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள் ளன, சதாமின் ஆதரவாளர்களின் அச்சுறுத்தல் இனி ஏதும் இல்லை, நாட்டில் அமைதி திரும்பிக் கொண்டிருக்கிறது என்பன போன்ற வழக்கமான பொய்களை அவர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறுவர். அமெரிக்கக் கூட்டணிப்படைகளும் இராக்கிய பொம்மை அரசாங்கமும் நிகழ்த்திய இத்தகைய சாதனை களை அறிந்து கொள்ளத் தவறிய பத்திரிகையாளர்களைக் கடிந்து கொள்வர்.

ஆனால்,இராக்கில் அமெரிக்கக் கூட்டணிப் படைகளுக்கும் பொம்மை அரசாங்கத்திற்கும் எத்தகைய பாதுகாப்பு இருக்கிறது, எத்தகைய அச்சுறுத்தல்கள் இருக்கின்றன என்பதை, பத்திரிகையளார் கூட்டங்கள் நடத்தப்படும் விதமே அம்பலப் படுத்திவிடும். எடுத்துக்காட்டாக, சிலமாதங்களுக்கு முன் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூன் ( Ban Ki-Moon), பாக்தாதில் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில், இராக்கில் பாதுகாப்பு நிலைமை களின் ஏற்பட்டுள்ள மேம்பாட்டை வானளாவப் புகழ்ந்து கொண்டிருந்த சமயத்தில்தான், பத்திரிகையாளர் கூட்டம் நடந்த இடத்திற்கு மிக அருகில் ஒரு எறிகணைக் குண்டு வெடித்தது. பிளாஸ்டிக் பூக்கள் அடுக்கப்பட்டிருந்த இடத்திற்குக் கீழே அவர் உடனடியாகப் பதுங்கிக் கொண்டார்.

2008 நவம்பரில் நடந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் தேர்தலில் ஜார்ஜ் புஷ்ஷின் குடியரசுக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட ஜான் மெக்வெய்ன், அமெரிக்க வாக்காளர்களைத் திருப்திப் படுத்தும் பொருட்டு, பாக்தாத் நகருக்கு வந்து, பத்திரிகையாளர் கூட்டமொன்றில் பேசினார். அவரும், இராக்கில் பாதுகாப்பு நிலைமைகள் மேம்பாடு கண்டி ருப்பதாக,அமெரிக்கத் தொலைக் காட்சி சேனல்களுக்கு அங்கிருந்தே பேட்டி கொடுத்தார். அப்போது அவருடன் வந்திருந்த குடியரசுக் கட்சி அலுவலர்கள், பாக்தாதிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் ஜான் மெக்வெய்னுடன் அங்கு உட்கார்ந்திருக்கும்போது தலைக் கவசமோ (Helmet), குண்டு துளைக் காத உடல் கவசமோ அணிந்திருக்கக் கூடாது என்று கூறினர். ஏனெனில் அவற்றை அவர்கள் அணிந்து வந்தால், இராக்கில் அமெரிக்கக் கூட்டணிப் படையின் இராணுவ நடவடிக்கைகள் முழு வெற்றி யடைந்து வருகின்றன, சதாமின் ஆதரவாளர்களாலோ பிற கிளர்ச்சி யாளர்களாலோ எந்த அச்சுறுத்தலையும் செய்ய முடியவில்லை என்று ஜான் மெக்வெய்ன் தொலைக்காட்சி சேனல்களிடம் கூறியது பொய் யாக்கப்பட்டு விடும்!. ஆனால், தலைக்கவசமோ உடல் கவசமோ இல்லாமல் வருவது எவ்வளவு ஆபத்தானது என்பதை நன்கு உணர்ந்திருந்த அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கு குடியரசுக் கட்சி அலுவலர்கள் வைத்த கோரிக்கை மிகுந்த எரிச்சலை உண்டாக்கி யிருந்தது. அதேபோல, அமெரிக்கக் குடியரசுத் துணைத்தலைவர் டிக் செய்னியின் அலுவலர்கள், அவர் பாக்தாதின் பசுமை வலயத்திற்கு வரும் ஒவ்வொரு முறையும், அபாயச் சங்குகள் ஒருபோதும் ஒலிக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் எனத் தூதரக அதிகாரி களிடம் வைத்த கோரிக்கையும்கூட அந்த அதிகாரிகளுக்கு எரிச்சலைத் தந்திருந்தது. ஏவுகணைகளோ, எறிகணை குண்டுகளோ பசுமை வலயத்திற்குள் வந்து விழுவதற்கு ஏழு அல்லது எட்டு நொடிகளுக்கு முன் அந்த அபாய சங்கு ஒலிக்கும். அதைக் கேட்டவுடன் அவரவர்கள் தங்கள் தோலைக் காப்பாற்றிக் கொள்ள பாதுகாப்பு இடங்களுக்கு ஓடி தப்பித்துக் கொள்ளலாம்.

பத்திரிகையாளர்கள் பெரும்பாலா னோருக்கு எரிச்சல் தரக்கூடியது என்னவென்றால், பசுமை வலயத் திற்கோ, அமெரிக்க அல்லது பிரிட்டிஷ் இராணுவ முமாம் களுக்கோ வருகை தரும் வெளி நாட்டுத் தலைவர்கள் எல்லோரும் இராக்கிலுள்ள யதார்த்த நிலைமை களைப் பற்றித் தங்களுக்கும் கொஞ்சம் தெரியும் எனப் பீற்றிக் கொள்வதும், இராக்கிலுள்ள பெரும் பான்மையான மக்கள்- சதாம் ஹுஸெய்னை வெறுப்பவர்களும் கூட-அமெரிக்காவின் தலைமை யிலான ஆக்கிரமிப்பைக் கடுமை யாக எதிர்க்கிறார்கள் என்பதைச் சிறிதுகூடப் புரிந்து கொள்ளாமல் தத்தம் நாடுகளுக்குத் திரும்பிச் செல் வதுமாகும். அமெரிக்க ஆதரவாளர் என்று கருதப்படுபவரும் இராக்கிய வெளியுறவு அமைச்சருமான ஹொய்ஷ்யர் ஸெபாரி (Hoyshyar Zebari, அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பே அனைத்துத் தவறு களுக்குமான தாய் என்று கூறியது பாக்தாத் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இராக்கில் அமெரிக்கக் கூட்டணிப் படைகளின் ஆக்கிரமிப்பு என்பது ஏதோ பழைய வரலாறு போல ஆகி விட்டது. இருப்பினும், அது நமக்கு இன்றும் பொருத்தப்பாடு உடைய பாடங்களைப் புகட்டுகிறது. அல்-ஸெய்தி வீசிய காலணிகள் தன் மீது விழாதபடி ஜார்ஜ் புஷ் குனிந்து கொண்டு சமாளித்த அதேநாளில் தான் (அவருக்குப் பின்னால் இராக் கியப் பிரதமர் நின்று கொண்டிருந் தார்), பிரிட்டிஷ் பிரதமர் ஜார்ஜ் பிரவுன் பாகிஸ்தானின் குடியரசுத் தலைவர் ஆஸிப் அலி ஸர்தாரியைச் சந்தித்து மும்பைத் தாக்குதல் குறித்தும் ஆப்கன் நிலவரம் குறித்தும் பேசிக் கொண்டிருந்தார். இராக்கியப் பிரதமர் நூருல் அல்-மாலிக்கையைப் போலவே பாகிஸ்தான் குடியரசுத் தலைவரும் அரசியல்ரீதியாக பலகீன மாக இருப்பதாலும், மும்பைத் தாக்குதல் தொடர்பாகவும் பாகிஸ் தானின் எல்லைப் பிரதேசங்களில் உள்ள தாலிபான் ஆதரவு ஜிஹாதிகள் தொடர்பாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையான நடவடிக் கைகள் மேற்கொள்ளவேண்டும் என ஜார்ஜ் பிரவுனும் கோண்டலீஸா ரைஸும் சுட்டுவிரலை நீட்டி அவரை மிரட்டி வருவதாலும், பாகிஸ்தானிய மக்கள் அவரையும் அமெரிக்காவின் கைப்பாவையாகவே கருதுவதில் வியப்பில்லை. அது மட்டுமல்ல, பாகிஸ்தானின் கிழக்குப் பகுதி யிலிருந்து இந்தியாவும்,மேற்குப் பகுதியிலிருந்து அமெரிக்க-இந்திய ஆதரவு ஆப்கானிய அரசாங்கமும் மட்டுமல்லாது,பாகிஸ்தானியப் பிரதேசங்களிலுள்ள ஜிஹாதிகள் முகாம்கள் எனச் சொல்லப்படுவதன் மீது குண்டு வீசும் அமெரிக்க விமானங்களும் சேர்ந்து பாகிஸ்தான் முழுவதயும் இராணுவ முற்றுகைக் குள்ளாக்கியுள்ளன என்னும் எண்ணத்தை பாகிஸ்தான் மக்களி டையே பரவலாக உண்டாக்கியிருக் கின்றன. அதனால்தான், பாகிஸ் தானில் அமெரிக்க எதிர்ப்பு என்பது இந்தியாவிலுள்ள எதிர்ப்பைவிட பன்மடங்கு அதிகமாக உள்ளது.

பாகிஸ்தானிய மண்ணிலிருந்து இயங் கும் பயங்கரவாத அமைப்புகளைக் கண்டனம் செய்தால் போதாது, அவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜார்ஜ் பிரவுனும் கோண்டலீஸா ரைஸும் சொல்வதை ஸர்தாரி அப்படியே ஏற்றுக்கொண்டாலும், அவரால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடி யாது. ஏனெனில் உண்மையான அதிகாரம் அவரிடம் இல்லை. அப்படியே இருந்தாலும் அவரால் அமெரிக்க, பிரிட்டிஷ் விருப்பத்தை நிறைவு செய்ய முடியாது. ஏனெனில், மிகப் பெருமளவிலான இராணுவ படைபலத்தையும் ஆயுத பலத்தையும் கொண்டு பாக்தாதில் அல்-கெய்தாவை அழிக்க முடிய வில்லை. அந்த அமைப்பு கிட்டத் தட்ட ஒவ்வொரு நாளும் தற்கொலைக் கார் குண்டுத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தின்படி,பாகிஸ்தான் அரசாங்கம் லஷ்கர்-இ-தொய்பா வின் அறக்கட்டளையான ஜமாத்-உத்-தாவாவை தடை செய்வதற்கு ஒருவாரத்திற்கு முன் லாகூரிலுள்ள அந்த அறக்கட்டளையின் தலைமை யகத்திற்குச் சென்ற அமெரிக்க அரசியல் ஆய்வாளர் பேட்ரிக் காக்பர்ன், அந்த அமைப்பின் உறுப்பினர்கள் தங்களது நடவடிக்கைகளை யாராலும் முடக்கி வைக்க முடியாது என மிகுந்த தன்னம்பிக்கையுடன் தன்னிடம் கூறியதாகச் சொல்கிறார்.

ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கக் கூட்டணிப்படைகளுக்கும் நேட்டோ படைகளுக்கும் தேவை யான பொருள்களை பாகிஸ்தானி லிருந்து எடுத்துச் செல்லும் சப்ளை மார்க்கத்தையே துண்டித்துவிடுமள விற்கு தாலிபான்கள் அந்தப் பகுதி யில் வலுப்பெற்றிருக்கிறார்கள். அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பாரெய்ன் அபேர்ஸ் என்னும் ஏடு, உலகில் செயலிழந்துபோன அரசு களின் (Failed States) பட்டியலை அவ்வப்போது வெளியிடுகிறது. தற்சமயம் பாகிஸ்தான் அந்தப் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.ஆனால்,பேட்ரிக் காக்பர்ன் கூறுவது போல,செயலிழந்த அரசு என்பதன் பொருள் அந்த அரசு உள்ள நாடு பலகீனமானது என்பதோ, அந்த நாட்டின் சமுதாயம் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் ஆற்றலை இழந்துவிட்டது என்பதோ அல்ல. மாறாக, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை படு தோல்வி அடைந்தது, செயலிழந்த அரசுகள் என அது பட்டியலிட்ட லெபனான், சோமாலியா,இராக் ஆகியவற்றில்தான். இராக்கில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக ஏற்பட்ட சிறு மாற்றம் என்னவென்றால் பாக்தாதிற்கு ஜார்ஜ் புஷ்ஷும் இஸ்லாமாபாத்திற்கு ஜார்ஜ் பிரவு னும் மேற்கொண்ட பயணங்களை அவர்கள் விரைவாக முடித்துக் கொண்டு வீடு திரும்பியதுதான்.

பாகிஸ்தானிலுள்ள தீவிரவாதிகளை ஒடுக்கும்படி ஜார்ஜ் பிரவுன் சொன் னதை ஏற்றுக்கொண்டு பாகிஸ் தானியக் குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுத்தால், அது பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அடிபணிந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றே பாகிஸ்தானிய மக்களால் கருதப்படும். இராக் ஆக்கிரமிக்கப் பட்ட இந்த ஐந்தாண்டுக் காலத்தில், ஜார்ஜ் புஷ்ஷைப் பற்றி இராக்கிய மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை முதன்முதலாக மிகத் தெளிவாக உணர்த்தியவை அந்த ஒரு ஜோடிக் காலணிகள்தான். புஷ் மீது காலணி வீசப்பட்டதை வீடியோ பதிவுகள் மூலம் பார்த்தவர்கள், அவர் அந்தக் காலணிகள் தன்மீது படாதபடி சமாளித்துக் கொண்டார் என்றாலும் அந்த சில நொடிகளில் அவரது முகத்தில் படர்ந்த பீதி யுணர்வைப் பார்க்கத் தவறியிருக்க மாட்டார்கள். சம்பவம் நடந்த பிறகு- அதாவது காலணி வீசிய பத்திரிகையாளரைப் பாதுகாப்புப் போலிஸார் அடித்து நொறுக்கிக் கண்காணாத இடத்திற்குக் கொண்டு சென்ற பிறகு - புஷ்ஷால் ஜோக் அடிக்கவும் முடிந்திருக்கிறது: அது பத்தாம் எண் அளவுடைய காலணி. எனினும், ஜார்ஜ் புஷ்ஷுக்கு ஏற்பட்ட அவமானத்தை மூடி மறைப்பதற்காக அமெரிக்க, ஐரோப் பிய மின்னணு ஊடகங்கள், சதாம் ஹுஸெய்னின் சிலையை அமெரிக்க ஆதரவாளர்கள் (அவர்கள் சில நூறுபேர் கூட இருக்கமாட்டார்கள்; ஆனால் ஊடகங்களின் காமிராக்கள், ஆயிரக்கணக்கான இராக்கியர்கள் அங்கு இருந்தது போன்று ஒரு குறிப் பிட்ட கோணத்தில் படம் பிடித்தன) அகற்றி, அதன் தலையை உடைத்து நொறுக்கி, சிதைக்கப்பட்ட அந்தச் சிலையைத் செருப்பால் அடித்த பழைய வீடியோக் காட்சிகளைத் திரும்பத் திரும்பக் காட்டின.

ஜார்ஜ் புஷ் போன்ற ஆக்கிரமிப் பாளர்கள் மீது காலணிகளை வீசும் நிகழ்ச்சிகள் அரபு உலகத்தில் முன்பே நடந்திருக்கின்றன. 2000ம் ஆண்டு செப்டம்பர் மதம் 28ம் நாள், இஸ்ரேலியப் பிரதமர் தேர்தலில் போட்டியிட்ட ஏரியெல் ஷாரோன், முஸ்லிம்கள் தங்களது மிகப் புனித ஸ்தலங்களில் ஒன்று எனக் கருதும் அல்-அஸ்கா மசூதிக்குள் (ஜெருஸ லேம் நகரில் உள்ளது) சென்று வர முடிவு செய்தார். அதாவது முஸ்லிம் களின் சமய நம்பிக்கையை வேண்டு மென்றே புண்படுத்துவதும் அவர் களுக்கு ஆத்திரமூட்டுவதும் தான் அவருடைய நோக்கம். அந்த மசூதியைப் பார்ப்பதும் அங்கு என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதும்தான் தனது விருப்பமேயன்றி வேறு நோக்கங்கள் ஏதும் தனக்கு இல்லை என அவர் கூறியதை விவேகமுள்ள எந்த முஸ்லிமாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ஏனெனில்,1990களில் இஸ்ரேலியர்கள் அந்த மசூதியின் சுற்றுச்சுவர்களை நாசமாக்குவதற்குக் குறைந்தது இருமுறை முயன்றனர்; இஸ்ரேலியத் துருப்புகள் பலமுறை அந்த மசூதி வளாகத்திற்கு வந்து தொழுகை நடத்திக் கொண்டவர்கள் பலரைச் சுட்டுக் கொன்றிருக்கின் றன; அந்த அக்கிரமங்களை எதிர்த்துப் போராடிய நூறு பாலஸ் தீனர்கள் இஸ்ரேலியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆகவே,பாலஸ்தீனர்கள், ஏரியெல் ஷாரோனின் விருப்பத்தை நிறைவு செய்ய விரும்பவில்லை. ஷாரோனும் விடுவதாக இல்லை. ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரே லியத் துருப்புகள் இரப்பர் தடவிய ரவைகள் நிரப்பப்பட்ட துப்பாக்கி கள், கண்ணீர்ப்புகை குண்டுகள், கலவரத் தடுப்பு சாதனங்கள் ஆகிய வற்றுடன் வந்து சேர்ந்தன.அந்த மசூதிக்கு தொழுகைக்காக வந்த பாலஸ்தீனர்களிடம் இருந்த ஒரே ஆயுதம் அவர்களது காலணிகள் தான். இஸ்ரேலியத் துருப்புகள் மீது அவர்கள் காலணிகளை வீசி எறியும் காட்சிகளைக் கொண்ட வீடியோப் படங்கள் உடனடியாக இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள் அனைத்திலுமுள்ள மக்க ளாலும் அரபு உலக மக்களாலும் பார்க்கப்பட்டன. அல்-அக்ஸா மசூதிக்கு ஷாரோன் வரப் போவ தற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக் கணக்கான பாலஸ்தீனர்கள் ஆங்காங்கே திரண்டனர். இஸ்ரே லியப் படைகள் ஒன்றிரண்டு நாட் களில் டஜன்கணக்கான பாலஸ்தீனர் களைச் சுட்டுக்கொன்றன.இது ஓராண்டுக் காலம் நீடித்த வன் முறைப் போராட்டத்திற்கு வழி வகுத்தது.அல்-அக்ஸா மசூதி யிலிருந்து திரும்பிச் சென்ற ஷாரோன், அங்கு எந்த ஆத்திரமூட் டலும் நடக்கவில்லை என்று பாசிச வாதிகளுக்கே உரிய பச்சைப் பொய்யைக் கூறினார். ஆனால்,காலணிகளைத் தங்கள் எதிரிகள் மீது ஆயுதங்களாகப் பயன் படுத்துவது அல்லது அவர்களை அவ மானப்படுத்த அவர்கள் மீது செருப்பு எறிவது அல்லது செருப்பால் அடிப் பது என்பது அரபு உலகத்துக்கு மட்டுமே உரிய பண்பாடு என்று கூறு வது சரியல்ல. நமது நாட்டிலும்கூட செருப்பால் அடிப்பது ஒருவரை மிக வும் அவமானப்படுத்தும் செயலாகக் கருதப்படுகிறது. சாதி இந்துக்களா லும் பார்ப்பனியச் சக்திகளாலும் அண்ணல் அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு செருப்பு மாலைகள் போடப்படுவது நாம் அறியாத தல்ல. மேற்குநாடுகளில் அழுகிய முட்டைகளையும் அழுகிய தக்காளிகளையும் வீசுவது வழக்கம்.

ஜார்ஜ் புஷ் மீது காலணிகளை வீசிய அல்-ஸெய்தி,எகிப்திலுள்ள அல்-பாக்தாதியா தொலைக்காட்சி சேனலின் நிருபராகப் பணியாற்றி, அமெரிக்கக் கூட்டணிப் படைகள் பாக்தாதில் நடத்திய அழிவு வேலை களைப் பதிவு செய்தவர். அவரும் அவர் பணியாற்றும் தொலைக் காட்சி சேனலை நடத்துபவர்களும் ஸன்னி முஸ்லிம்கள். பாக்தாதில் ஷியா உழைக்கும் மக்கள் வசிக்கும் பகுதியும் ஷியா கெரில்லாப் படைத் தலைவர் முக்தாதா அல்-சதரின் செல்வாக்கின் கீழ் இருப்பதுமான சதர் நகர்ப்பகுதியில் 2008ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் ஆக்கிர மிப்புப் படைகள் ஏற்படுத்திய நாசங் களைப் பதிவுசெய்து அந்தத் தொலைக்காட்சி சேனலில் ஒளி பரப்ப வைத்தவர். ஜார்ஜ் புஷ் மீது அவர் காலணிகளை வீசிய குற்றத்திற் காக, அவர் அடித்துத் துன்புறுத்தப் பட்டு சிறையில் அடைக்கப்பட் டதை எதிர்த்து பாக்தாதிலுள்ள ஷியா, சன்னி முஸ்லிம்கள், கிறிஸ்து வர்கள் எனப் பலதரப்பட்டோ ரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சதர் நகரத் திலுள்ள ஷியாக்கள் அனைவரும் கறுப்புடை அணிந்து தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். ஸன்னி முஸ்லிம்களின் கட்டுப்பாட்டிலுள்ள பல்லுஜாவில் நடந்த ஆர்ப்பாட் டத்தை ஒடுக்க வந்த அமெரிக்கத் துருப்புகள் மீதும் காலணிகள் வீசப் பட்டன. அந்தத் துருப்புகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்தார்.

அல்-ஸெய்தி, இராக்கிலுள்ள முஸ்லிம்கள் பெரும்பாலானோரால் போற்றப்பட, இராக்கிய பத்திரிகை உலகமோ, பத்திரிகையாளர்கள் கடைபிடிக்கப்பட வேண்டிய கண்ணியம் பற்றிப் பேசியது. புஷ் மீது காலணி வீசிய அல்-ஸெய்தியைக் கீழே தள்ளி மடக்கிப் பிடித்தவர் ஒரு இராக்கியப் பத்திரிகையாளர்தான். அவரது கை கால் எலும்புகள் ஜார்ஜ் புஷ்ஷின் கண் எதிரேயே உடைக்கப்பட்டன.

மேற்குலகின் முன்னணிப் பத்திரிகைகளும்கூட பத்திரிகை தர்மம் பற்றிப் பேசின.அவர்கள் பேசும் பத்திரிகை தர்மம் அநீதி இழைத்தவரையும் அநீதி இழைக்கப் பட்டவரையும் ஒரே தராசின் இரு தட்டுகளில் சமஎடை யுள்ளவர் களாகக் காட்ட முயல்கின்றன. எனினும், முன்னாள் இடதுசாரியும் செ குவேராவைப் போற்றுபவ ருமான அல்-ஸெய்தி அரபு நாடு களில் மட்டுமின்றி அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் ஒடுக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புக் கும் ஆளான நாடுகளில் மட்டு மின்றி, துருக்கி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் மாபெரும் வீரராகக் கருதப்படுகிறார்.அவரைப் போலவே, அவர் வீசிய காலணி களும் உலகப் புகழ்பெற்றுவிட்டன. சவூதி அரேபியக் கோடிசுவரர் ஒருவர், அந்தக் காலணிகளை ஒரு கோடி அமெரிக்க டாலருக்கு வாங்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.அது மட்டுமல்ல, அந்த வகை காலணிகளைத் தயாரிப்பது நாங்கள்தான் என்று பல காலணி தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு உரிமை கொண்டாடுகின்றன.

செ குவேராவின் உருவப் படங்கள்,வணிகப்பொருட்களின் விற்பனைக்காகப் பயன்படுத்தப் படுவதை நாம் அறிவோம். ஆயினும்,வணிகச் சக்திகளால் ஒரு போதும் அவரைத் தன்வயமாக்கிக் கொள்ள முடியாது.அமெரிக்க-ஜியோனிஸ ஒடுக்குமுறைகளி லிருந்து விடுதலை அடையப் போராடும் பரந்துபட்ட அரேபிய மக்கள் அல்-ஸெய்தியை ஒரு போதும் விற்பனைப் பொருளாகப் பார்க்கமாட்டார்கள். மாறாக, ஒடுக்குமுறையாளர்கள் மீது காலணிகளை வீசுவதை தங்களது போராட்டங்களின் இன்னொரு வடிவமாகத் தொடர்ந்து கடைபிடிப்பார்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com