Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி- மார்ச் 2009

டாக்டர்.ஜெயபிரகாஷ் கர்தம்: நெருப்பின் தகிப்பை சாம்பல் மட்டுமே அறியும்
நேர்காணல்: முனைவர் நிலான்சு குமார் அகர்வால்

டாக்டர்.ஜெயபிரகாஷ் கர்தம் உத்திரபிரதேசம் கய்சாபாத்தில் வறுமை சூழ்ந்த தலித் குடும்பத்தில் பிறந்த சிறந்த தலித் எழுத்தாளர். கட்டுமான நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளிலும் கடைநிலை ஊழியராகப் பணியாற்றத் தொடங்கிய இவர் பின்னர் மத்திய மாநில அரசு வங்கிகளில் பல்வேறு பதவிகளை வகித்தார். இந்திய அரசியல் அலுவல் மொழி சேவைத்துறையில் துணைச்செயலராகப் பணியாற்றியுள்ளார். தற்போது இந்திய உயர்மட்ட ஆணையத்தில் இரண்டாம் நிலைச் செயலராகப் பணியாற்றுகிறார். மேலும் 1999 முதல் “தலித் சாகித்யா” என்கிற காலாண்டிதழின் ஆசிரியராகச் செயல்பட்டு வருகிறார். இந்திய மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பதினைந்துக்கும் மேற்பட்டோர் இவரது படைப்புகள் குறித்து எம்.பில்., பி.ஹெச்டி., ஆய்வுகளைச் செய்துள்ளனர். முனைவர் நிலான்சு குமார் அகர்வால் ரேபரேலியிலுள்ள பெரோஸ் காந்தி கல்லூரியின் மூத்த ஆங்கில விரிவுரையாளர் ஆவார்.

தமிழில் : கண்ணன்- காளிங்கராயன்

தலித் மக்களின் பிரச்சனைகள் குறித்து பற்றியெரியும் பல்வேறு வினாக்களை உரத்து எழுப்பியதன் மூலமும், அது குறித்து இந்தப் பெரும்பான்மைச் சமூகத்தின் உறக்க நிலையைக் கலைத்து விழிப்புற வைத்ததின் மூலமும் தனக்கான தனியிடத்தை இவ்வுலகில் தலித் இலக்கியம் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்பதே உண்மையாகும்..... உண்மையில் தலித் இலக்கியம் நீண்டகாலமாய் நிலவிவந்த பேரமைதியையும் இலக்கியத்தின் உயிர்ப்பற்றத் தன்மையினையும் தகர்த்தெறிந்து அதற்கு உயிர்ச்சூட்டினையும் முன்னோக்கிய பார்வையையும் வழங்கியிருக்கிறது. அந்தவகையில் தலித் இலக்கியத்தின் பயணம் ஒளிரும் எதிர்காலத்தை தன்னகத்தே கொண்டுள்ளது எனலாம்.

நிலான்சு: காலங்காலமான ஆதிக்கசாதியினரின் சுரண்ட லுக்கு எதிரான கொதிப்புமிக்க மனநிலையினையே தலித் இலக்கியம் தன்னளவில் வெளிப்படுத்துகிறது எனலாம். எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத அர்த்தமற்ற ஆனால் நீண்டகாலமாய்த் தொடர்ந்து நிலவும் தீண் டாமை எனும் வன்கொடுமைக்கு எதிராக எரிமலையாய் வெடித்துக் கிளம்பியதுதானே இவ்வகை இலக்கியம்! இந்திய மனவியலின் நனவிலி அடுக்குகளில் நுழைந்து உறைந்திருக்கிறது தீண்டாமைப்பேய். அதை அகற்றுவ தென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இந்திய மனதின் சாதிய உணர்வுகளை வேரறுத்திட ஒரு நீண்டகால இயக்கத்தினூடாக தலித் இலக்கியம் உதவிடக்கூடும். அறிவு நேர்மையோடு சொல்வதென்றால் விளிம்புநிலை யினரின் இவ்விலக்கியம் இந்திய இலக்கியப் பரப்பில் தனக்கான தனியுயர் இடத்தைப் பெற்றிருக்கிறது என்றே கூறலாம். இவ்விலக்கியத்தின் இன்றைய நிலை என்ன? அதன் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? இதை இன்னும் வளர்த்தெடுப்பதற்கான உத்திகள் என்ன? தங்களது ஆலோசனைகளைக் கூறுங்கள்!!

ஜெ.பி: தலித் இலக்கியம் தற்போதைய இந்திய இலக்கியப் பரப்பின் மையப்புள்ளியாய் ஆகியிருக்கிறது. பல்வேறு எழுத்தாளர்களும் விமர்சகர்களும் ஒப்புக் கொள்ளத் தயங்கினாலும்கூட, தலித் மக்களின் பிரச்சனை கள் குறித்து பற்றியெரியும் பல்வேறு வினாக்களை உரத்து எழுப்பியதன் மூலமும், அதுகுறித்து இந்தப் பெரும் பான்மைச் சமூகத்தின் உறக்க நிலையைக் கலைத்து விழிப்புற வைத்ததின் மூலமும் தனக்கான தனியிடத்தை இவ்வுலகில் தலித் இலக்கியம் தக்கவைத்துக் கொண்டுள் ளது என்பதே உண்மையாகும். தற்போது தலித் இலக்கியப் பிரதிகள் பல்வேறு பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவிலும் பிற வெளிநாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.உண்மையில் தலித் இலக்கியம் நீண்டகாலமாய் நிலவிவந்த பேரமைதியையும் இலக்கி யத்தின் உயிர்ப்பற்ற தன்மையினையும் தகர்த்தெறிந்து அதற்கு உயிர்ச்சூட்டினையும் முன்னோக்கிய பார்வையை யும் வழங்கியிருக்கிறது. அந்தவகையில் தலித் இலக்கியத் தின் பயணம் ஒளிரும் எதிர்காலத்தை தன்னகத்தே கொண்டுள்ளது எனலாம்.

நிலான்சு: சமூகத்தில் ஒடுக்கப்பட்ட இலக்கியம் என்கிற வகையில் தலித் இலக்கியத்திற்கும் அமெரிக்க கறுப்பிலக் கியத்திற்கும் ஒப்புமைகள் ஏதேனும் உண்டா? அல்லது இவை இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டனவா?

ஜெ.பி: தலித் இலக்கியத்திற்கும் அமெரிக்க கறுப்பு, ஆப்பிரிக்க நீக்ரோ இலக்கியத்திற்கும் ஒற்றுமைகள் உண்டு. ஆனால் கறுப்பு, நீக்ரோ இலக்கியங்களில் காணக் கிடைக்காத சில குறிப்பான தன்மைகளும் தலித் இலக்கி யத்திற்கு உண்டு. தலித் இலக்கியம் சாதியத்திற்கும் தீண்டாமைக்கும் எதிரானது. கறுப்பர்களும் நீக்ரோக் களும் இனரீதியான வேறுபாட்டினை ஒதுக்குதலை எதிர்கொண்டவர்கள். இந்திய தலித்துகளைப் போல அவர்கள் தீண்டத்தகாதவர்கள் அல்லர். தலித் இலக்கியம் கறுப்பு நீக்ரோ இலக்கியத்தைக் காட்டிலும் போர்க்குணமும் எதிர்ப்பாற்றலும் கூர்மையும் கொண்டு விளங்குவதற்கான காரணம் அதுவேயாகும்.

நிலான்சு:ஆதிக்கவாதிகளின் கைகளிலுள்ள இலக்கியப் பிரதி ஒடுக்கப்பட்டவர்களை கட்டுப்படுத்திட உதவும் கருவியாகவே பயன்பட்டு வருகிறது. மேற்குலகின் பிரதி களிலிருந்து காலனிய வேலைத்திட்டத்தை தோண்டி யெடுப்பதாகவே பின்காலனிய விமர்சகர்களின் செயல் பாடுகள் அமைந்தன. தன்னிலைகளின் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, பேரரசுகளின் கை களிலிருந்த ஆயுதமாகவே மேற்கின் இலக்கியப் பிரதிகள் இருந்தனவென்று அவர்கள் நம்பினார்கள். அதுபோலவே பெரும்பாலான இலக்கியப்பிரதிகளில் ஊடாடியிருந்த ஆணாதிக்கக்கூறுகளை பெண்ணிலைவாதிகளும் வெளிப் படுத்தினார்கள். அந்த வகையில் நம் இந்திய இலக்கியப் பிரதிகளில் செயல்படும் தலித்துகள் குறித்த அவதூறான முடிவுகளை வெளிக்கொணர வேண்டிய தேவை கூடுத லாக உள்ளதென்று நீங்கள் நினைக்கிறீர்களா? தலித் சிந்தனையாளர்கள் இத்தகைய பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்களா?

ஜெ.பி: இதுவரையிலுமான இந்திய இலக்கியம் என்று சொல்லப்படுவது தலித்துகளை அடக்கவும் ஒடுக்கவும் சுரண்டவுமே சாதி இந்துக்களால் எப்போதும் பயன் படுத்தப்பட்டு வருகிறது என்பது ஒரு நிறுவப்பட்ட உண்மையாகும். மதபோதை ஏற்றப்பட்டு, கடவுளின் பேராலும் விதியின் பேராலும் தலித்துகள் சுரண்டப்பட்டு வந்தனர். கடமையைச் செய்! பலனை எதிர்பார்க்காதே! எனும் கீதையின் தத்துவத்தைச் சொல்லிச் சொல்லி அவர் களை எதிர் கேள்வி கேட்கவிடாமல் கடுமையான பணி களைச் செய்ய வைத்தனர். ஆண்டைகள் கொடுப்பதை மகிழ்ச்சியுடன் ஏற்க வேண்டும். ஏனெனில் அதுவே கடவுளின் விருப்பம் என்பதாகக் கற்பிக்கப்பட்டது.

நிலான்சு: படைப்பிலக்கியம் தவிர்த்த ஓவியம், நாடகம் மற்றும் இசை போன்ற வேறு கலைத்துறைகளில் தலித் உணர்வுகள் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளனவா?

ஜெ.பி: நிச்சயமாக! தலித் நாட்டியப் பள்ளிகள் இருக்கின் றன. தலித் நாட்டுப்புற கலைஞர்கள், பாடகர்கள், இசை ஞர்கள் மற்றும் ஓவியர்கள் எனப் பலரும் மிகச் சிறந்த முறையில் தமது படைப்புகளில் தலித் உணர்வினை வெளிப்படுத்தி வருகின்றனர். சமத்துவமின்மைக்கும் சுரண்டலுக்கும் எதிரான தமது வலுவான குரல்களைப் படைப்புகளின் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

நிலான்சு: தலித்துகளால் எழுதப்படும் தலித் இலக்கியத் திற்கும் தலித்தல்லாதவர்களால் தலித்துகள் பற்றி எழுதப் படும் இலக்கியத்திற்கும் நீங்கள் என்ன வேறுபாட்டைக் காண்கிறீர்கள்?

ஜெ.பி: ராம்னிகா குப்தாவினால் தொகுத்து வெளியிடப் பட்ட இந்தி தலித் சிறுகதைத் தொகுப்பிற்கு புகழ்பெற்ற இந்தி விமர்சகர் டாக்டர்.மானேஜர் பாண்டே எழுதிய முன்னுரையிலுள்ள “நெருப்பின் தகிப்பை சாம்பல் மட்டுமே உணர முடியும்” என்ற சொல்லை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். துயரத்தின், வெறுப்பின், அவ மரியாதையின், அநீதியின் சமத்துவமின்மையின் மற்றும் தீண்டாமையின் நெருப்பில் வெந்தெரிவதால் அந்நெருப் பின் தகிப்பை தலித்துகளால் மட்டுமே உணரமுடியும் என்பதையே இது சுட்டுகிறது. தலித்தல்லாதவர்களுக்கு இத்தகைய அனுபவம் கிடையாது. தலித்தல்லாதவர்கள் பெற்றிடாத வேறுபட்டதொரு வாழ்வனுபவத்தை தலித் துகள் கொண்டுள்ளனர். இதனால் தலித் எழுத்தாளர்கள் மட்டுமே தமது அனுபவங்களை ஆற்றலுடன் வெளிப் படுத்தமுடியும். மற்றவர்களால் அது முடியாது. தலித் ஆதரவு எழுத்தாளர்கள் தலித்துகள் மீது பரிவு காட்டலாம். அவர்களின் நலம் விரும்பிகளாக இருக்கலாம். ஆனால் தலித்துகள் குறித்த அவர்களது அனுபவங்கள் சொந்த அனுபவங்கள் அல்ல! அவர்கள் தலித்துகள் மீதான துன்புறுத்தல்களின் சுரண்டல்களின் பார்வையாளர்கள் மட்டுமே! பாதிக்கப்பட்டோர் அல்ல! இந்த வேறுபாடு தான் தலித்துகளால் எழுதப்படும் தலித் இலக்கியத்திற் கும், தலித் அல்லாதவர்களால் எழுதப்படும் தலித் பற்றிய இலக்கியத்திற்கும் உள்ள வேறுபாடாகும். ஆகவே தலித்துகளால் அவர்களின் வாழ்வனுவபங்களின் அடிப் படையில் படைக்கப்படும் இலக்கியமே தலித் இலக்கியம் ஆகும்.

நிலான்சு:ஆங்கிலம் உலகலாவிய மொழியாக ஆகியி ருக்கிறது. பிராந்திய மொழிகளில் படைக்கப்படும் தலித் இலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட் டால் அது நிச்சயமாக இந்த நவீன இலக்கியத்திற்கு கடும் உற்சாகத்தை அளிக்கும். ஏனெனில் தலித் எழுத்தாளர்கள் பிறநாடுகளின் பெரும் வாசகர்களை சென்றடைவர். உங்களுடைய படைப்புகளில் ஒன்றுகூட நி.கீ. பிரிக்ஸால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஒரு குறிப்பிட்ட படைப்பின் ஆங்கில மொழி பெயர்ப்பு எப்படி வாசகத்தளத்தை அதிகரிக்கும் என்பதை நீங்கள் நிச்சயமாக கண்டிருப்பீர்கள். தலித் இலக்கியங் களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன?

ஜெ.பி: தலித் இலக்கியம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க் கப்படும்போது அது தம் கருத்துக்களை இந்தியா மட்டு மின்றி உலகம் முழுவதுமுள்ள மிகப் பெரும்பான்மை யான மக்கள்திரளிடம் கொண்டு சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை! இந்த உலகமயச்சூழலில் தலித் பிரச்ச னைகளும் உலகமயமாக்கப்பட வேண்டும். தலித்துக ளின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்த புரிந்துணர்வை இச்சமூகத்தில் உருவாக்குவதுதான் தலித் இலக்கியத்தின் முதன்மை இலக்கு! இந்தி மற்றும் பிற பிராந்திய மொழி களிலுள்ள தலித் இலக்கியங்கள் ஆயிரமாயிரமாண்டு காலமாய் நிலவும் மௌனத்தை உடைத்தெறிந்து உணர் வூட்டிக் கொண்டிருக்கின்றன. தலித் இலக்கியத்தை ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் மொழி பெயர்க்க பொறுப்புமிக்கவர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். தற்போது சில சிறுகதைகளும் கவிதைகளும், புதினங்கள் மற்றும் சுயசரிதைகளும் ஆங்கிலம், பிரஞ்ச், ஜெர்மன், பிற அன்னியமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. எனது சில சிறுகதைகளும் கவிதைகளும்கூட ஆங்கிலத் தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன. ஆனால் இத்திசையில் செய்யப்பட்டுள்ள முயற்சிகள் போதுமானவையல்ல! இன்னும் கூடுதலான முயற்சிகள் தேவைப்படுகிறது. உலக அளவில் பல்வேறு பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டத்தில் தலித் இலக்கியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அக்டோ பர் 2006இல் ஃபிராங்க் பர்ட் உலகப் புத்தகக் கண்காட்சிக்கு நான் சென்றிருந்த போது அங்கே பான், ஹம்பர்க் போன்ற உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் தலித் இலக்கியங்கள் குறித்து கற்பிக்கப்பட்டு வருவதையும், மாணவர்கள் சிலர் தலித் இலக்கியம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருப் பதையும் அறிந்து மிகவும் வியப்படைந்தேன்! உண்மை யில் உலகம் முழுவதுமுள்ள பல்கலைக்கழக மாணவர் களையும், அறிஞர் பெருமக்களையும் தலித் இலக்கியம் ஈர்த்திருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி,கொரியா போன்ற நாடுகளில் உள்ள பல்வேறு அறிஞர்களும் இந்திய தலித் இலக்கியங்கள் குறித்த ஆய்வு களில் ஈடுபட்டிருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் ஆய்வு மாணவர்கள் பலரும் தத்தமது தலித் இலக்கிய ஆய்வுகள் தொடர்பாக என்னை சந்தித்துப் பேசினர். இந்த அறிஞர்களும், இவர்களைப் போன்றோரும் சர்வதேச அளவில் பல்வேறு அமைப்புகளின் மூலம் தலித் இலக்கியங்களுக்காக வாதிட்டும், தங்களது குரல்களை உரத்து எழுப்பியும் வருகிறார்கள்.

நிலான்சு:இந்தியப் பல்கலைக்கழகங்களின் பாடத்திட் டத்தில் தலித் இலக்கியத்தினை அறிமுகப்படுத்தும் பணிகள் எந்த அளவில் உள்ளன? உங்களது இலக்கியப் பணிகள் ஏதாகிலும் பல்கலைக்கழகங்களில் பாடத் திட்டத்திற்கு முன்மொழியப்பட்டுள்ளதா?

ஜெ.பி: எழுத்தாளர்களின் பணி எழுதுவது மட்டுமே என்று நான் கருதுகிறேன். அது சமூகச்சூழல் மற்றும் இலக்கியம் ஆகியவற்றின் மீது ஏற்படுத்தும் மாற்றங்களை மதிப்பீடு செய்வதும், பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்து வதும் மற்றவர்களின் வேலை! பல்கலைக்கழகங்களில் தலித்துகள் முக்கிய பொறுப்புகளில் இல்லை. ஆதலால் தலித் இலக்கியங்களை பல்கலைக்கழக பாடத்திட்டங் களில் இடம்பெறச் செய்யும் நிலையில் அவர்கள் இல்லை. மேலும் அவர்கள் பல்கலைக்கழக பாடத் திட்டக்குழுவில்கூட உறுப்பினராக இல்லை. ஆனால் நாங்கள் அவை தொடர்பாக தேசிய அளவில் பல்வேறு தளங்களில் நடைபெறும் கருத்தரங்குகள், விவாதங்க ளில் பங்கேற்று எமது குரல்களை உரத்து எழுப்புகிறோம். எனது இலக்கியப் பணியைப் பொறுத்தவரையில் ஹைத ராபாத், சிவாஜி, மும்பை, கொச்சி பல்கலைக்கழகங் களில் கலை முதுவர் மற்றும் தத்துவ முதுவர் பட்டப் படிப்புகளுக்கான பாடத்திட்டத்தில் சாப்பர் என்கிற எனது நாவல் சேர்க்கப்பட்டுள்ளது. எனது சில சிறுகதைகளும், கவிதைகளும் இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்திலும், பிற பல்கலைக்கழகங் களின் கலை இளையர் மற்றும் கலை முதுவர் பாடத் திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளன.

நிலான்சு : உங்களைப்பற்றி சில அறிவர்கள் முனைவர் பட்ட ஆய்வுகளைச் செய்து எழுதியுள்ளனர். இந்த ஆய்வு களில் உங்களது படைப்புகள் மற்றும் ஆளுமைகள் எந்த வகையில் விரித்துக் காட்டப்பட்டுள்ளன?

ஜெ.பி: எனது இலக்கியப் பணிகள் மற்றும் வாழ்க்கை குறித்த இதுவரை 15 பேர் ஆய்வு செய்துள்ளனர். பெரும் பான்மையான ஆய்வுகள் இந்தியின் முதல் தலித் இலக்கி யமாகக் கருதப்படும் எனது நாவலான சாப்பர் குறித்துதான் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிலர் எனது கவிதைகள் மற்றும் சிறுகதைகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளனர்.

நிலான்சு: தலித் சாகித்யா ஆசிரியர் என்கிற வகையில் தலித் இலக்கிய மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் அதன் எந்தெந்தப் பகுதிகளில் கவனம் குவிக்க வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?

ஜெ.பி: தலித்துகளின் அரசியல், சமூக, பொருளாதார, மதரீதியான பின்தங்கிய நிலைகள், அவர்கள் மீதான சுரண்டல் ஆகியன குறித்து உணர்வூட்டி சமூகத்தின் பொது மனசாட்சியில் தலித்துகள் குறித்து நேர்மறையான கருத்துகளை உருவாக்குவதுதான் தலித் சாகித்ய வர்ஷிகி ஆண்டிதழின் ஆசிரியரான எனது முதன்மை அக்கறை! இவ்வாண்டிதழின் மூலம் தலித்துகளிடையே நிலவும் கல்வியறிவின்மை, வேலையின்மை, வறுமை மற்றும் பிற சமூகப் பின்னடைவுகளுக்கான வேர்க்கால்களைக் கண்ட றிவதுதான் எனது முதன்மை நோக்கம்! குரலற்றவர் களுக்காக குரலெழுப்புவதும், உணர்வற்றவர்களுக்கு உணர்வூட்டுவதும் அதேவேளையில் தலித்துகளின் அடிப் படை உரிமைகளை ஏற்று மாந்தத்தன்மையோடு அவர் களை நடத்திட வேண்டி ஆதிக்க சாதியினரை எச்சரிப்ப தும் தான் எனது வேலை! இது தலித் சமூகத்தின் முன்னேற் றம் மற்றும் வளர்ச்சிக்கானதாகும். தலித்துகளின் சுதந்திரமும் கௌரவமும் மதிக்கப்பட்டாக வேண்டும்.

நிலான்சு: தலித் உணர்வுகளுக்கு அப்பால் உங்களது எழுத்துக்களின் பிற உள்ளீடுகள் எவை?

ஜெ.பி: தலித் உணர்வுகள் தவிர்த்து பல்வேறு பிரச்சனை கள் குறித்தும் எழுதியுள்ளேன். ஆனால் எனது முதன்மை யான கவனக்குவிப்பு எப்போதும் சமூகப் பிரச்சனைகள் குறித்துதான்!

நிலான்சு: நீங்கள் குழந்தைகளுக்கான ஒரு சில இலக்கி யங்களையும் படைத்திருக்கிறீர்கள். அந்தப் புத்தகங் களும் தலித் உயர்வுகளை வெளிப்படுத்துகின்றனவா? அல்லது பிற அடையாளங்கள் ஏதாவது உள்ளனவா?

ஜெ.பி: இல்லை! அந்தப் புத்தகங்கள் எல்லாம் அறிவியல் மற்றும் அறிவியல் அணுகுமுறை போன்ற பொதுச் செய்தி கள் பற்றியனவாகும். ஒருநூல் ஒரு துறவியைப் பற்றியது. மற்றொன்று மாபெரும் அறிவியல் மேதை சி.வி.ராமன் குறித்தது. மேலும் எனது நாவலான சம்ஷான் கா ரகஸ்யா சாமியார்கள் சிலரால் குழந்தைகள் கடத்தப்படுதல் மற்றும் அவர்களின் ரத்தம், உடல் உறுப்புகள் பதுக்கப்படு தல் பற்றியதாகும். சில புத்தகங்கள் பௌத்தக் கதைகளை அடியொற்றியவை.

நிலான்சு:நீங்கள் உதிரித் தொழிலாளியாகப் பணியாற்றி யுள்ளீர்கள். தற்போது இந்திய உயர்மட்ட ஆணைய மொன்றில் இரண்டாம்நிலைச் செயலராகப் பணியாற்று கிறீர்கள்.உங்களது தொழில்ரீதியான வளர்ச்சி அசாதாரண மாக உள்ளது. இத்தகைய அதிதீவிர வளர்ச்சிக்கான காரணங்கள் என்னென்ன?

ஜெ.பி: இதற்கு எனது விருப்புறுதி, தீர்மானகரமான நோக்கம் மற்றும் கடும் உழைப்பு ஆகியவற்றைத் தவிர்த்த வேறு பதில் ஏதும் என்னிடமில்லை. நான் கடுமையாக உழைத்தேன். 1976ல் எனது தந்தையார் இறந்தபோது என் வாழ்க்கையே இருண்டு போனது. அப்போது நான் 11வது வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனது குடும்பத்தில் நானே மூத்தவனாகையால் குடும்பத்தை நடத்திச் செல்வ தற்கு என் தாயாருக்கு துணை நிற்க வேண்டியதாயிற்று. எனவே பள்ளிக்கு போவதற்குப் பதில் 5 ரூபாய் கூலிக்காக வேலைக்குப் போகத் தொடங்கினேன். என்னிடம் நேரமும் ஆற்றலும் மட்டுமே இருந்ததால் அவற்றைப் பயன்படுத்தினேன். எனது சித்தப்பா ஹர்பால் சிங்கும் அவரது நண்பர்கள் முகுத்லால் தோமர் மற்றும் ஹக்கம் சிங் ஆகியோர் எப்போதும் எனக்குத் தூண்டுதலாகவும் ஊக்கமூட்டியும் வந்தார்கள். உணர்வுரீதியாக மட்டுமல் லாமல் பொருளாதார அடிப்படையிலும் அவர்கள் எனக்கு உதவியாக இருந்தனர். அவர்களின் உதவி இல்லை யென்றால் வாழ்வில் என்னால் எதையும் சாதித்திருக்க முடியாது. எனது கிராமத்திலிருந்த டாக்டர். தேவிசிங்கும், ராம்சகாய் என்பவரும் எனக்கு ஆதரவாக இருந்தனர். அவர்கள் எனக்கு வழிகாட்டினார்கள். நான் அவர்களின் சிந்தனையை செயல்படுத்துபவனாக இருந்தேன். நான் ஒரு பொறியாளராக வரவேண்டுமென்று விரும்பினேன். ஆனால் எனது கடுமையான சூழ்நிலை காரணமாக என் னால் இளங்கலை அறிவியல் படிப்பில் சேரமுடிய வில்லை. 1977ல்அறிவியல் பாடங்களுடன் இடை நிலைத் தேர்வில் வெற்றி பெற்றிருந்த போதும் என்னால் கல்லுரிக் கட்டணமான ரூ.140-ஐ கட்டமுடியவில்லை. அடுத்த ஆண்டான 1978ல் நான் எனது சித்தப்பாவின் பொருளாதார உதவியுடன் இளங்கலை வகுப்பில் சேர்ந்தேன். ஆனால் அது வெறுமனே பேருக்கு சேருவ தாக இருந்தது. என்னிடம் நல்ல துணிகள், காலணிகள் இல்லாததால் என்னால் கல்லூரிக்குச் செல்ல முடிய வில்லை. இந்த நேரத்தில்தான் நான் ஒரு இரும்புத் தொழிற்சாலையில் மாதம் ரூ.180க்கும், ஒரு வழக்கறி ஞரிடம் மாதம் ரூ.200க்கும் பணியாற்றினேன். மேலும் பல மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் எடுத்தேன். எனது வாழ்க்கையின் இந்த மோசமான சூழல் காரணமாக மற்ற மாணவர்களைப்போல படிக்கும் வாய்ப்பை நான் பெறவில்லை. 1980ல் முதன்முதலாக அரசுப்பணியில் விற்பனை வரித்துறையில் அலுவலக உதவியாளராகப் பணியேற்றேன். பின்னர் அத்துறை யிலேயே 1981ல் எழுத்தராகச் சேர்ந்தேன். 1984ல் அலகா பாத்தில் விஜயா வங்கியிலும், பின் 1988ல் அலுவலக மொழிச்சேவைக்கான மத்திய செயலகப் பிரிவில் மொழி பெயர்ப்பாளராகவும் சேர்ந்தேன். 1989ல் தேர்வெழுதி வணிக அமைச்சகத்தில் துணை இயக்குனரானேன். 1996ல் பதவி உயர்வில் கலாச்சாரத்துறையில் இணை இயக்கு னராகச் சேர்ந்தேன். பின்னர் ஊரக வளர்ச்சி அமைச்சகத் தில் பணிபுரிந் தேன். 2006ல் இணை இயக்குனராகப் பதவி உயர்வு பெற்றேன். ஆனால் அதேசமயம் இந்திய தூதரகத்தில் மொழி மற்றும் கலாச்சாரப் பிரிவில் இரண்டாம்நிலைச் செயலராகப் பணிபுரிய தேர்ந்தெடுக் கப்பட்டேன். ஆனாலும் எனது கல்வியைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். தத்துவம், இந்தி மற்றும் வரலாறு ஆகியவற்றில் முதுகலைப் பட்டத்தையும், இந்தியில் முனைவர் பட்டத்தையும் பெற்றேன்.1978ல் விமானப் படைப் பிரிவின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டேன். எனது தம்பிகள் சரியாகப் படிப்பில் கவனம் செலுத்தாததால் அவர்களை அருகிருந்து கவனிக்கும் பொருட்டு நான் அப்பணியில் சேரவில்லை. உத்திரபிரதேச மாநில பொது குடிமைப்பணித் தேர்வு களில் தேர்ச்சி பெற்றேன். முதல்முயற்சியில் நான் தேர்வு செய்யப்படாவிட்டாலும் இரண்டாவது முறை துணை அதிகாரியாகப் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டேன். ஆனாலும் அப்பணியை ஏற்க மறுத்துவிட்டேன்.

நிலான்சு: மொரிஷியஸ் தீவில் தற்போது தாங்கள் மேற் கொண்டுள்ள பணி குறித்த தகவல்களைச் சொல்லுங் களேன். ஒரு எழுத்தாளராகிய உங்களுக்கு அது எப்படி உதவிகரமாக இருக்கிறது?

ஜெ.பி: கல்வி, கலாச்சாரம் மற்றும் இந்திய மொழிகளை வளர்ப்பது என்பதுதான் தூதரக அலுவலகத்தில் எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள வேலைகள்! மொரிஷியஸின் கல்வி மற்றும் சமூக, கலாச்சார நிறுவனங்களுடனும், அது தொடர்புடைய நபர்களுடனும் எனக்கு மிக நெருக்க மான கருத்துப் பரிமாற்றங்கள் உள்ளது. அத்தீவின் எழுத் தாளர்களோடு தொடர்ந்து உறவைப் பேணி வருகிறேன். இது எனது எழுத்துப் பணிகளைச் ஊக்கமாகச் செய்ய உதவுகிறது. மேலும் நான் பெரும்பாலான சமூக கலாச்சார விழாக்களில் பங்கெடுத்துக் கொள்வதோடு அவற்றில் உரையாற்றியும் வருகிறேன்.சில தருணங்களில் தூதரக அலுவலரின் உரைகளை தயாரித்து அளிப்பதும் உண்டு. இத்தகைய உரைகளை நிகழ்த்துவதற்கும், தயாரிப்பதற் கும் எனது எழுத்துலக அனுபவங்கள் பெரும் உதவி யாயிருக்கின்றது. பின்னாட்களில் இலக்கிய வடிவங் களில் பதியப்படவுள்ளவற்றிற்கான பல்வேறு அனுபவங் களாக இவை உள்ளன என நான் கருதுகிறேன். எழுதுவ தென்பது எப்போதும் எனது வாழ்வனுபவத்திற்கு உதவி யாகவே உள்ளது. தற்போதைய பணிக்கும், உதவி இயக்கு னராக நான் தேர்வு செய்யப்படுவதற்கும் எனது எழுத்து அனுபவம் மிக முக்கியமான பங்கு வகித்திருக்கிறது.

நன்றி : www.Counter currents.org, 18 june 2008


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com