Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி - மார்ச் 2008

‘எதிர்மறைப் பாகுபாடு’ என்றொரு கூக்குரல்: பி.சாய்நாத்
தமிழில்: சாமி
.

அண்மைக்காலத்தில், இந்திய மேல்தட்டு வர்க்கத்தினரின் குறிப்பிடத்தக்கதொரு சாதனை யாதெனில் ‘சாதி’க்குப் புது மெருகூட்டி அதன் பேரிலான சண்டையைச் சமத்துவத்துக்கான போராட்டமாகச் சித்தரித்ததுதான். அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திலும், அதைப்போன்ற பிற நிறுவனங் களிலும் அரங்கேற்றப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் இதற்கு மிகச் சிறந்த எடுப்பான சான்றுகள். ஒருகாலத்தில் சாதி பாராட்டுவதே அசிங்கம் என்றிருந்த நிலை இன்று அடியோடு மாறிவிட்டது. (“சாதியா, அது 50 ஆண்டுகளுக்கு முந்தைய அரதப் பழங்கதை, இன்று அது எங்கே இருக்கிறது?”).

இன்று அந்த மேட்டுக்குடியினர் சாதிச் சனியனால் இந்தத் தேசம் சாகடிக்கப்பட்டு வருவதாகவும், அதன் பாதிப்பு மேல்சாதியினர்க்கு மட்டுமே என்றும் உரக்கக் கத்துகிறார்கள். தங்களின் ‘பிறப்பிலே’யே- மரபணுக்களிலேயே தகுதியையும் திறமையையும் ‘வரமாகப்’ பெற்றிருப்பதால் இதுகாறும் தங்களுக்கு மட்டுமே உரித்தாகி உறுதிபடுத்தப்பட்டிருந்த உயர்கல்வி வாய்ப்புகளையும், உயர்பதவிகளையும் பறிக்கக் கிளம்பிவிட்ட கீழ்ச்சாதிக்காரர்களே அவர்களின் எதிரிகள்.

இதுவொரு ‘மகிழ்ச்சியளிக்கும்’ சூழல்தான். நீங்கள் மிக வெளிப்படையாக கூச்சநாச்சமின்றி சாதியம் பாராட்டலாம். அது குறித்து மிகுந்த பெருமை கொள்ளலாம். ஏனெனில் நீங்கள் சமத்துவத் திற்காக, சாதியற்ற சமூகத்திற்காகவே அதனைச் செய்கிறீர்கள், சத்தியமும், நீதியும் உங்கள் பக்கமே, அதைவிட முக்கிமாக ஊடகங்கள் உங்களின் பக்கம், ஏ.ஐ.ஐ.எம்.எஸ். போராட்டம் ஊடகங்களால் எவ்வாறு ‘கண்டு கொள்ளப்பட்டது கையாளப்பட்டது, சித்தரிக்கப்பட்டது என்பது உங்கள் நினைவில் இல்லை?

‘எதிர்த்திசை நோக்கிய பாரபட்சம்’ என்ற (இதை மேல்சாதிகள் படும் ‘துயர்’ எனப் புரிந்துகொள்க!) கருத்து இப்போது வேகமாகப் பரவி வருகிறது. ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ எனும் அமெரிக்கப் பத்திரிகையில் வெளியான இந்தியாவைப் பற்றிய விசித்திரமான செய்திக் கட்டுரை ஒன்றில் இது பற்றி விரிவாகப் பேசப்பட்டுள்ளது. இந்த ‘எதிர்பாரபட்சத்தால்’ பாதிக்கப்பட்ட ஒருவரைப் பற்றிய வாஞ்சையுடன் அக்கட்டுரை இப்பிரச்னையை அலசுகிறது. (“வாய்ப்புகள் தலை கீழாய் மாறியதால் தவித்து தனிமைப்படும் இந்திய பிராமணர்கள்” டிசம்பர் 2007), “இன்றைய இந்தியாவில் உயர் சாதிக்குரிய தனிச்சலுகைகள் குறைந்து வருகின்றன. இக்கட்டுரையின் கதா நாயகனின் தந்தை அவரது தாத்தாவை விட மிகவும் தாராளமான முற்போக்கான கருத்துடையவர், ஏனெனில் தனது அண்டை அயலார் கீழ்ச்சாதிக்காரர் ஆயினும் அவர்கள் தன் முன் எதிர்ப்படுகிறபோது காலணிகளைக் கழற்ற வேண்டியதில்லை. இது எவ்வளவு மெச்சத்தக்கது! அவர்கள் தங்களின் செருப்புகளைக் கால்களிலேயே மாட்டியிருக்கலாம், கழற்ற வேண்டியதில்லை!

நாம் எதை உரிமை, எதைப் பாகுபாடு என்று கருதுகிறோம் என்பதை பொறுத்ததே இந்தப் பார்வை. பல பேரைப் போன்றே இந்தக் கட்டுரையின் கர்த்தாவும் இந்த இரண்டையும் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு என்ற ஒரேயொரு விஷயத்திற்குக் குறுக்கிவிடுகிறார். வேறெந்த வடிவத்திலும் அவை இத்தகையோர்க்குப் புலப்படுவதில்லை, ஆனால் எதார்த்த உலகில் இவ்விரண்டுக்கும் (உரிமைக்கும்- பாகுபாட்டுக்கும்) எத்தனையோ வடிவங்கள். தலித் பிள்ளைகள் பள்ளிகளில் படும் சித்திரவதையும், அவமானமும் தவிர்க்க இயலாத இயல்பானதொரு வழக்கமான நடவடிக்கை என்பதாக இருக்கிறது. இதனாலேயே பலர் பள்ளிக்குச் செல்வதைப் பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். வகுப்பறைகளிலும், மதிய உணவு மையங்களிலும் அவர்கள் தனித்து ஒதுக்கிவைக்கப்படுகின்றனர், இந்த அவலம் இது காறும் தமது பிறப்புரிமைகளாக அனுபவித்து வந்தவர்களுக்கு- சிறப்புச் சலுகைகளை இன்று “இழக்க நேரிட்டுள்ள”வர்களுக்கு ஏற்படுவது இல்லை.

பொதுக்குழாயில்/ பானையில் இருக்கும் தண்ணீரைக் குடித்த ‘பாவத்திற்காக’ உயர்சாதிப் பிள்ளைகள் தமது ஆசிரியரிடம் உதைபடுவதில்லை, அல்லது மிகவும் சுட்டிப் பிள்ளைகளாக, கெட்டிக்காரர்களாக இருக்கிற காரணத்திற்காக கிராமப் புறப்பள்ளிகளில் அவர்களின் முகத்தில் அமிலம் ஊற்றப்படுவதில்லை, அல்லது அவர்கள் செல்லும் கல்லூரிகளிலும், தங்கிப் படிக்கும் விடுதிகளிலும் உணவு பரிமாறும் அறைகளிலும் ஒதுக்கிவைக்கப்படுவதில்லை. பாகுபாடு என்பது தலித் பிள்ளைகளை ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வோர் இடத்திலும் படாதபாடு படுத்துகிறது, பணிபுரியும் இடங்களில் தலித்துகள் படும் துயரம் போல.

எனினும் சுபோத் வர்மா அவர்கள் குறிப்பிடுவதைப்போல (தி டைம்ஸ் ஆப் இந்தியா, டிச 12, 2006) இவ்வளவு இடர்பாடுகளுக்கு இடையிலும் அவர்களின் சாதனைகள் மிகவும் மெச்சத்தக்கவை, 1961க்கும் 2001க்கும் இடையே மற்றபகுதி மக்களிடையே இரட்டிப்பாக வளர்ந்த படிப்பறிவு தலித்துகளிடையே நான்கு மடங்கு ஆனது. ஆம், அவர்களின் கல்வி மிகவும் அடிமட்ட நிலையில் இருந்தே ஆரம்பமானது என்ற பின்னணியை நாம் மறந்துவிடக் கூடாது. ஆனால், தினந்தோறும் அவர்கள் சந்தித்த சகிக்கவொண்ணா இடைஞ்சல்களுக்கு மத்தியில் இது சாத்தியமாகி இருக்கிறது என்பதையும் நாம் மறக்கலாகாது, ஆயினும், இது அவர்களின் செல்வச் செழிப்பில் அப்படி எதிரொலிக்கவில்லை.

தி வால் ஸ்டீரீட் ஜர்னலில் வந்த அக்கட்டுரை பிராமணர்களில் சரி பாதிப்பேரின் மாதவருமானம் நூறு டாலர்களை (அதாவது, நாலாயிரம் ரூபாயை)த் தாண்டவில்லை என்கிறது. (அதில் உள்ள அட்டவணைப்படி தலித் குடும்பங்களில் 90 சதம் இதே நிலையில்தான்), ஆனால் இக்கட்டுரையாளர் முறைசாராத் தொழில்கள் தொடர்பான தேசிய ஆணையத்தின் அறிக்கையை அறிந்திரார் போலும்! அதன்படி 8கோடியே 36 லட்சம் இந்தியர்களின் தினசரி வருமானம் வெறும் ரூ 20 (அல்லது 50 சென்ட்) மட்டுமே, அதாவது மாதம் சுமார் 15டாலர்கள்.

இந்த வட்டத்துக்குள் வருவோர் யாரெனில் தலித்துகள் மற்றும் பழங்குடியினரில் 88 சதமும், இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லீம் மக்களுமே. பிராமணர்களிலும், இதர உயர்சாதிக்காரர்களிலும் கூட வறுமையில் வாடுவோர் உள்ளனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் அதைக் காரணமாகக் கொண்டு “எதிர் மறைப் பாகுபாடு” எனச் சித்தரிப்பது இங்கே செல்லாது.இன்னும் சொல்லப் போனால் அதே கட்டுரையில் கண்டுள்ளது போன்று “பிராமணர்களின் கல்வி வாய்ப்பும், ஊதியமும் பிறரைவிடச் சிறப்பாகவே உள்ளன”.

வேடிக்கை என்னவெனில், இதே பத்திரிகை இக்கட்டுரை வெளிவந்த இருநாட்களுக்கு முன்னர்தான் ஓராண்டுக்கு முன்பு கயர்லாஞ்சியில் ‘அரங்கேறிய’ அந்த அட்டூழியம் பற்றிய மிகச் சிறந்த முறையில் விவரித்திருந்தது, அதை வரைந்த இன்னோர் இதழியலாளர் அந்த விதார்பா கிராமத்தைச் சேர்ந்த போட்மாங்கே குடும்பத்தின் பொருளாதார அந்தஸ்தும் அதை அடைவதில் அது பெற்ற வெற்றியும் அவ்வூரில் ஆதிக்கச் சாதியினரிடையே ஏற்படுத்திய வயிற்றெரிச்சலே அக்கொடுமைக்குக் காரணம் என்கிறார். அதே மூச்சில் “தொடர்ச்சியான வளர்ச்சி கண்ட இந்தியப் பொருளாதாரம் தலித்துகள் உள்ளிட்ட பரம ஏழைகளின் வாழ்வில் ஏற்படுத்திய பிரமிக்கத்தக்க மலர்ச்சியின் அடையாளம்” என அதை வர்ணிக்கிறார். இது இந்தியாவின் பிற ஆதிக்கச் சாதிகளின் விஷயத்திலும் உண்மையன்றோ? தலித்துகள் மட்டுமே அதன் பயனாளிகள் என்பது சரியா?

வர்மா அவர்கள் குறிப்பிடுவதைப் போன்று தலித்துகளில் கிராமப்புறத்தில் 36 சதமும், நகர்ப்புறத்தில் 38 சதமும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் அனைத்துச்சாதி மக்களுக்குமான இந்தப் புள்ளிவிவரம் கிராமப்புறத்தில் 23 சதம், நகர்புறத்தில் 27 சதம் என்பதை இங்கே நினைவில் கொள்க! (வறுமை குறித்த அதிகாரபூர்வக் கணக்கீடும், புள்ளி விவரங்களும் கொஞ்சமும் நம்பத்தகுந்தவை இல்லை என்பது வேறுகதை) தலித்துகளில் கால்பகுதியினர்க்கு ஓராண்டில் ஆறுமாதங்கள் கூட வேலை கிடைப்பதில்லை. இவர்களில் பெரும்பாலர் நிலமற்றவர்கள், இவர்களில் பாதிப் பேரின் குடும்பங்களுக்கு மாத வருமானம் 50 டாலர் கிடைத்தால் அதுவே ஒரு பெரும் புரட்சிதான்!

இதை நாம் சந்தித்தே தீரவேண்டும், இந்தியாவின் ஊடகங்களில் பெரும்பாலானவை வால் ஸ்டீரீட் ஜர்னலின் ‘எதிர்மறைப் பாகுபாடு’ எனும் கருத்தை அப்படியே எதிரொலிக்கின்றன. புனேயில் அண்மையில் நடந்த பிராமணர் மாநாட்டைப் பார்த்தீரா? சாதி அடிப்படையில் வெளிப்படையாக நடைபெற்ற அந்த மாநாட்டில் பெயர்களின் இறுதி ஒட்டுகளின் பேரில் அடையாளம் காணப்பட்ட சாதி உட்பிரிவுகளுக்கு தனித்தனியே அந்தந்த குழுக்கள் அல்லது வகுப்புகளுக்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சாதிய அடையாளத்தை அதற்குமேல் உங்களால் குறிப்பிட்டுக் காண்பிக்க முடியாது. இத்தகைய விஷயம் எதுவும் நமது ஊடகங்களின் கண்களுக்குப் புலப்படுவதே இல்லை. ஏறத்தாழ அதே சமயத்தில் மராத்தாக்களும் ஒரு விமரிசையான கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர். மராட்டியத்தின் ஆதிக்கச் சாதி அது. அவர்கள் சாதியின் பேரிலான இட ஒதுக்கீட்டை கோருகின்றனர், அதுவும் அசாதாரணமானதாக இந்த ஊடகங்களின் கண்களுக்குப் படவில்லை.

ஆனால் தலித்துகளின் கூட்டங்களை மட்டும் சாதிய இனவெறிக் கண்ணோட்டத்திலேயே இவை விமர்சிக்கின்றன. தலித்துகள் ஒரே சாதியினர் இல்லை என்பதுடன் பன்னெடுங்காலமாகத் தீண்டாமைக் கொடுமையை அனுபவித்து வரும் பல சமூகக்குழுக்களின் ஒட்டுமொத்த அடையாளமே அந்த ‘தலித்’ என்பது என நன்கு தெரிந்திருந்தும் இத்தகைய விமர்சனம்! ஆண்டுதோறும் டிசம்பர் 6 அன்று மும்பையில் நடைபெறும் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்ச்சியை மிகுந்த அச்ச உணர்வுடனேயே அப்பத்திரிகைகள் அணுகுகின்றன. ‘காட்டுக் கூச்சல் போட்டுவரும் அந்தக் கும்பலால்’ நேரும் பாதிப்பையும், பிரச்னைகளையும் மும்பை மாநகர் முணுமுணுப்பின்றி ‘சகித்திட’ வேண்டி உள்ளதே! போக்குவரத்து பாதிப்பு, சட்ட ஒழுங்குச் சவால், சிவாஜி பூங்காவில் காற்று வாங்கும் சீமான்களின் வெளி யேற்றம் (தங்களின் அமைதியான சூழலுக்கு ‘ஆப்பு வைக்கும் அரா ஜகக் கூட்டத்தைக்’ கண்டு அஞ்சி) எல்லாவற்றுக்கும் மேலாக, சுகாதாரப் பிரச்சனை, இதைக் குறிப்பிடத் தவறுவதே இல்லை. ஏன் தெரியுமா? அவர்களுக்கெதிரான சாதியப் பார்வையை மேலும் கெட்டிப்படுத் துவதே இதன் உள்நோக்கம். ‘ஆம், ‘நாம்’ ‘அவர்களை’ அசுத்தமானவர்களாகவே பார்த்திட இது அவசியமாகிறது’!

எதார்த்த உலகைச் சற்று எட்டிப் பார்ப்போம்! தங்களின் சாதி மாறித் திருமணம் செய்து கொண்டதற்காகக் கண்கள் நோண்டப்பட்டுக் குருடாக் கப்பட்ட உயர்சாதிக்காரர்கள் எத்தனைபேர்? மராட்டியத்தின் நந்தேத் வட்டாரத்தைச் சேர்ந்த சதேகவன் எனும் ஊரைச் சேர்ந்த சந்திரகாந்த் எனும் இளைஞனைக் கடந்தவாரம் ஏன் இக்கொடுமைக்கு அவன் ஆளானான் எனக் கேளுங்கள் நிலத் தகராறு அல்லது இதர சச்சரவுகளால் எத்தனை உயர்சாதிக் குடியிருப்புகள் எரியூட்டப்பட்டன? இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன? ‘கோயில் நுழைவு’ எனும் ‘குற்ற’ச் செயலுக்காக தம் கை, கால்களையும் ஏன் உயிரை யும் பறிகொடுத்த உயர்சாதிக்காரர் எத்தனை பேர்?

ஊருணியில் நீரெடுத்ததற்காக உயிரோடு கொளுத்தப்பட்ட, உதைத்துத் துவைக்கப்பட்ட பிராமண, தாகூர் சாதியினர் எத்தனைப்பேர்? “தங்களின் உரிமைகளைத் தற்போது கொஞ்சம் கொஞ்சமாய்த் தொலைத்துக் கொண்டிருக்கும்’ அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த எத்தனைப்பேர் குடிநீருக்காக நான்கு கிலோமீட்டர் கால்கடுக்கப் போய் வருகிறார்கள்? மேல்சாதிகளில் எத்தனை ஊருக்கே வெளியே ‘ஒதுக்கப்பட்ட’ இடங்களில் ஒண்டி வாழ்கின்றன? உள்ளூரிலேயே ஒதுக்கிவைக்கப்படும் நிறவெறிக் கொடுமையை எதிர்க்கத் துணிவின்றி ஆண்டாண்டு காலமாய் அடங்கிக் கிடக்கின்றன? இதுவன்றோ பாகுபாடு? இது போன்ற எதையும் வால் ஸ்ரீட் ஜர்னல் நிருபர் கண்டுகொள்ளார். அவரால் என்றும் இதனை ஆய்வு செய்யவே இயலாது.

2006இல் தலித்துகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட பல்வேறு குற்றங்கள், அட்டூழியங்கள் ஆகியனவற்றை தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகம் பட்டியலிட்டுள்ளது. சிவில் உரிமைகள் காப்புச் சட்டத்தின்கீழ்ப் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 40 சதம் கூடியது. 2005ஐ விட அதிக மாக தலித்துகளுக்கு எதிரான கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், கடத்தல் சம்பவங்கள் நடந் துள்ளன. தீவைப்பு, கொள்ளை, வழிப்பறி என அவர்களுக்கு எதிரான எல்லாவகைக் குற்றங்களும் மிகவும் அதிகரித்துள்ளன.

இராஜஸ்தானில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மானபங்கப் படுத்தப்படுவதை (குறிப்பாக இராஜஸ்தானில் நடந்தது) அனைவர்க்கும் கவலை அளித்ததும், சில நடவடிக்கைகளுக்கு இட்டுச் சென்றதும் நல்லதே. இந்த சுற்றுலாப் பயணிகளை விட அதிகமாக இதேபோன்ற கொடுமைகளை தலித்துகளும், பழங்குடிப் பெண்களும் அனுபவித்தாலும் அது அவ்வளவாகக் கண்டுகொள்ளப் படுவதில்லை. இதே இராஜஸ்தானில் நடந்த பாலியல் வன்கொடுமை குறித்த வழக்கு ஒன்றில் உயர்சாதிக்காரர் கீழ்ச்சாதிப் பெண்ணைக் கெடுத் திருக்க வாய்ப்பே இல்லை என நீதிபதி ஒருவர் அளித்த தீர்ப்பு எத்தனை பேருக்குத் தெரியும்?

அந்த மாநிலத்தில் 17 உயிர்களைப் பலிகொண்ட குமெர் படுகொலை தொடர்பாக ஏழாண்டுகளாகக் குற்றச்சாட்டு பதியப்படவே இல்லை. ஆனால் ஒரு வெளிநாட்டுப் பயணி தொடர்பான வழக்கில் 14 நாளில் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டு தீர்ப்பு வெளியானது. தலித்துகளுக்கு 14 ஆண்டுகளில் அத்தகைய தீர்ப்பு கிடைத்தால் அவர்கள் பெரும் பேறு பெற்றவர் ஆவர்! இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் இருப்பிடமான இன்றைய மும்பையில் நடந் ததை நினைவுகூர்வோம்.

மானபங்க வழக்கு ஒன்றில் 14 பேர் கைதாகி ஜாமீன் கிடைத்த பின்பும் 5 நாட்கள் சிறையில் அடைபட்டிருந்ததை லாட்டூர் அல்லது நந்தேத்தில் நடந்தவற்றுடன் சற்று ஒப்பு நோக்குங்கள்! லாட்டூரில் பாதிக்கப்பட்டவர் ஓர் ஏழை முஸ்லீம் பெண், நந்தேத்தில் கண்கொத்தப்பட்டுக் குருடாக்கப்பட்டவர் ஓர் ஏழை தலித் இளைஞன். பாதிக்கப்பட்ட பெண்ணுடைய சமூகத்தாரின் விடாமுயற்சி இல்லாமற் போயிருப்பின் லாட்டூர் வழக்கு மூடி மறைக்கப்பட்டிருக்கும்.

தலித்துகளுக்கு எதிரான பாகுபாடு அவர்கள் மண்ணுக்குப் போன பின்பும் அவர்களைப் பின் தொடர்கிறது. கிராம இடுகாடுகள் அவர்களுக்கு எட்டாத்தூரத்தில் இருக்கின்றன. மேல்சாதியினர் மறுப்புக்கு உள்ளாகும் இடத்தில் அவர்கள் புதைக்கப்பட்டால் அடுத்தநாள் அவர்களின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுத் துவம்சம் செய்யப்பட்டிருக்கும். ஆண்டுதோறும் இத்தகைய மற்றும் இதரவகைக் கொடுமைகள் பற்றிய விவரங்கள் அலுவலக ஆவணங்களில் அச்சேறிய வண்ணம் உள்ளன. “குறைந்துவரும் தனி உரிமைகளைக்” கண்டு கொதித்தெழும் உயர்சாதிக் காரர்களுக்கு இத்தகைய அநீதி என்றும் நேர்வதில்லை, “எதிர்மறைப் பாகுபாடு” எனக் கூச்சல் போடுகிறவர்கள் மேலே விவரிக்கப்பட்ட வக்கிரங்களுக்கு வக்காலத்து வாங்குவோரே எனில் தவறன்று.

நன்றி : தி இந்து 18-01-2008


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com