Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி - மார்ச் 2008

அதிகாரச் சந்தையில் கவிதை விநியோகம்
குட்டி ரேவதி

நாம் தொடர்ந்து விவாதித்து வரும் உடல்மொழியும் உடலரசியலும் மேலைத்தேயங்களில் புழங்கும் அர்த்தங்களோடும் கருத்தாக்கங்களோடும் நெருக்கிப் பார்த்தும் பொருத்திப் பார்த்துமே புரிந்துகொள்ளப்படுகின்றன. நீண்டகாலமாகவே இலக்கிய வடிவங்கள் எல்லாமே அவ்வாறே ஒப்புமைப்படுத்திப் பார்க்கப்பட்ட சூழலில் எழுந்ததே இன்றைய நவீன இலக்கியமாகவும் கொள்ளப்படுகிறது. அவ்வாறே இங்கு உருவாக்கப்படும் கருத்தாக்கங்களும் மேலை வடிவங்களைத் தமது சட்டையாக அணிந்துகொள்கின்றன. சுயமாக அவை எழும்ப முடியாதபடிக்கு அவற்றின் மீது போர்த்தப்பட்டிருக்கிறது கனமான போர்வை.

சமீபத்திய அரசியலும் சரி, இன்றைய வரலாறாகிய சுதந்திரப் போராட்டங்களின் போதான அரசியல் சம்பவங்களும் சரி, எவ்வாறு இந்தியா மதவாத நாடாகவும், மதவாத வன்முறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் ஆதிக்கத்திற்கும் சாதியத்தை ஒரு தந்திரோபாயமாக பயன்படுத்திக் கொண்டது என்பதை வெளிச்சம் காட்டி விளக்குகின்றன. ஆக, மேலைநாட்டு இயங்கள், சாதியத்தின் முன்னே சுருண்டு போகக்கூடியன. பால்நிலையை விவாதிக்கும் கருத்தாக்கமாய் இருப்பினும், பண்பாட்டை விளக்கும் கருத்தாக்கமாய் இருப்பினும் மேலைநாடுகளில் உதித்தவை அந்தந்த நாடுகளுக்கானவையே. அவற்றின் இயங்குதளம், நம் இந்தியச் சூழலாயிருக்க முடியாது.

நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதுபவர்களும் கூட, ஏதோ ஒருவழிப்பாதையைப் போன்ற பயணத்தை இலக்கியம் மேற்கொண்டதாக விவரிக்கின்றனர். ‘தலித் இலக்கியம்’ என ஒற்றைச் சொல் அடைமொழியுடன் ஒரு வகைப்பாட்டினை உருவாக்கி விட்டு அதையும் கடந்து அடுத்த இலக்கிய வகையறாவில் நம்பிக்கை வைத்து வாடியிருக்கும் ஒரு மனோநிலையை எழுப்பு கின்றனர். ஆனால் இவர்களின் வரலாற்று அக்கறைகள் விஷமத்தனமானவை. ஒரு கொடுங்கோலனுடையதைப் போன்றவை.

பரவலாக இயங்கிவந்த ஒரு சாதியச் சமூகத்தில் சாதிமறுப்பை முன்மொழிய வேண்டியதும் அதற்காகப் போராடுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கானவை என்பதான மனோபாவத்துடன் வரலாற்றையும் விமர்சனத்தையும் அணுகும்போது, மேலை நாட்டு இயங்களின் புலமையும் அடைவுகளும் பெருமளவில் இவர்களுக்குக் கைகொடுக்கின்றன என்பதே உண்மை. வரலாற்றின் ஒரு காலகட்டத்திலிருந்து முன்னேறி நகர மறுக்கும் இவர் களின் பிடிவாதம் அதிகாரப் பேராசை கொண்டது. மொழியும் எழுத்தும் வரலாறும் எம்முடையதே எனக் கொக்கரிக்க எல்லா மேலைநாட்டுக் கருத்தியலாளர்களின் குரல்களையும் பயன் படுத்துவர். தொடரும் விவாதங்களில் இது வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

ஒப்பீட்டளவில் முற்போக்கானதாகவும் நவீனமாகவும் கருதப்படும் தீவிர இலக்கியம், கேளிக்கை வகை இலக்கியம், ஊடகம் ஆகியவற்றிலிருந்து மிகுந்த இடைவெளியினுடனே இயங்கக்கூடியது. ஆகவேதான் முழுக்கமுழுக்க கேளிக்கை ஊடகமாகச் செயல்படும் ‘திரைப்படத்திற்கு’த் தனது ஆளுமையைச் சமர்ப்பிக்கத் தயாராயிலாத இலக்கிய ஆளுமைகள் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்துவிட்டன. இந்நிலையில் குஷ்புவின் கற்பு குறித்த கருத்து வெளிப்பாட்டுடன், பெண் கவிஞர்களின் உடலரசியலை இணைத்துப் பார்க்கும் பொருத்தப் பாட்டு மனோநிலையையும் வெகுஜன, பொழுதுபோக்குச் சார்புடைய மனோநிலையாகவே கருதப்படவேண்டும். அல்லது இலக்கிய வடிவங்களின் தீவிரச் செயல்பாடுகளின்மீது அக்கறை யற்ற மனோநிலையாகக் கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு காலமும் பெண்மீது சுமத்தப்படும் ஒரே நிர்ப்பந்தம், சமூகம், அரசியல், பண்பாடு மீறி அவள் பாலிய உறுப்புகளைக்கூட உடல் இச்சை சார்ந்து பயன்படுத்திவிடக் கூடாது. மொழியில் அவற்றிற்கான முகாந்திரங்களைக் கண்டுணரக்கூடாது என்பதாகவே இருக்கிறது.

உடலரசியல் என்பதுகூட காமம், விரகதாபம், கற்பழிப்பு தொடர்பானவற்றையே உடலுறுப்புகள் வழியாகக் குறிப்பிடுவது என்பதாகப் பெண் உடல்வெளியைக் குறுக்குவதில் ஆதிக்கச்சாதி ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் தலைப்பட்டுள்ளதில் வியப்பில்லை. தனக்கெனக் காலூன்ற நிலம் அல்லது வெளி அளிக்கப்படாத பெண்ணாகவோ, உடல்கூறுகள், இயங்கும் தத்துவம் மற்றும் அவை சார்ந்த விழிப்புணர்வு பெறாத பெண்ணாகவோ பெண்படைப்பாளி பார்க்கப்படுவதில்லை. மாறாக, கேளிக்கை ஊடகங்களில் வெளிப்படும் பாலியல் நடவடிக்கைகளையும் இடம்பெறும் மலினமான படிமங்களையும் பெண்கவிஞர்களின் அரசியல் நிலைப்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்குமளவிற்கு மலினமான சமூகஞானம் பெற்றவர்களாய்த்தாம் இருக்க வேண்டும் இவர்கள்.

கவனத்தில் கொள்ளவேண்டிய இன்னொரு முக்கியமான அரசியல் நிலை, வேறுபட்ட கருத்தியற் குழுமங்கள் தீவிர வடிவம் பெறுகின்றன. தமிழ்த்தேசியம், புனிதவகை நவீன இலக்கியம், இந்துத்துவம், இந்து மதத்திலிருந்து வேறுபட்டது என மொழியும் அறிவுஜீவிதம், பெண்ணியத்தை ஆண்களின் அதிகாரத்தை வெல்லக் கொண்ட உபாயம் என வடிவெடுத்த கருத்தியம். மேற்கண்ட இவை எல்லாமே நேரடியாகவோ மறை முகமாகவோ ஆணாதிக்கத்தையே வலியுறுத்துவதோடு சாதி நிறுவனத்தைப் பேணுவதற்கு ஆணாதிக்கத்தைத் தந்திரோபாய மாகவும் கையாண்டது எனலாம். இந்த வேறுபட்ட மையங்கள் எல்லாம் ஒன்றுபடும் பொதுப்புள்ளிகள் சாதியப் பேணுதலும் ஆணாதிக்க ஒழுகுமுறையுமே. இக்கட்டத்தில் உடலரசியலைப் பேசப் பொதுவான வரலாற்று நெறிகளைப் பின்பற்ற முடியாது. ஏனெனில் யாருக்கான அல்லது யார் தரப்பிலிருந்து புனையப் பட்ட வரலாறு என்பது கேள்வியாக்கப்பட வேண்டும்.

இந்நிலையில் தமிழ்ச்சூழலில் எழும் பெண்ணிய எழுத்து எதிர் கொள்ளும் விமர்சனங்களைவிட மேற்கண்ட வகைப்பாடுகளைச் சார்ந்த அவதூறுகளே அதிகம். பெண்கவிஞர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லையும் பகுத்துச் சமூக, அரசியல், பண்பாட்டுத்தளங்களில் ஆய்வு செய்யப்படுவதுபோல வரலாற் றில் ஆண் ஆக்கங்கள் செய்யப்பட்டிருந்திருக்காது. பெண்கள் தங்களுடைய பாடுகளைச் சொல்லவே அவயவங்களைக் குறிப்பிடுகிறார்கள். அவ்வயவங்களுக்குள் பல நூற்றாண்டுகளின் பெண்வரலாறு நினைவுகளாகவும், உணர்ச்சிகளாகவும் ஒளிந்திருக்கிறது.

வெறும் இன்பங்கள் நுகர்வதற்காகவே உடல் என்ற எண்ணத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துபவை போலியான விமர்சனங்களே. பெண்உடல், ஆணின் தத்துவங்களால் அங்க ஹீனப்படுவதையும், வன்முறை, ஒடுக்குமுறைக்கு ஆளாவதையும் எதிர்க்க, உடலைப் பாதுகாக்க இப்பிரச்சினைகளினால் உடல் கொள்ளும் தாக்கங்களைப் படிமங்களாக்கி நாம் முன்வைக்க வேண்டும். ஆணின் பழைய பஞ்சாங்கத் தத்துவங்களையெல்லாம் பெண்ணின் மொழியை, எழுத்தை உரசிப்பார்க்கும் உரை கல்லாகவோ, அளவுமானியாகவோ பயன்படுத்துவதை வெறும் இலக்கியப்புலமையாகப் பார்க்காமல், ஆதிக்கத்தடித்தனம் என்றுதான் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது.

கவிதை திறந்துகொடுக்கும் கற்பனைவெளிகளும், வாசகமனம் சார்ந்த முடிவுகளும்தாம் கவிதையின் சிறப்பும் கூட ஒரு சொல்லை ஓர் அர்த்தத்தின் நிழல் சார்ந்த சொல்லாக மட்டுமே விளக்குவது கவிதையில் சாத்தியமுமில்லை என்பதைக் கவிதையின் நுகர்ச்சிக்கு ஒப்புக்கொடுக்கும் வாசகமனம், ஏன் கவிமனமே அறியும். இந்நிலையில்தான் சில ஒற்றைச்சொற்கள் நாவிலும் நெஞ்சிலும் நினைவிலும் சுழன்று சுழன்று கொள்ளும் ஒருபடித்தான பண்பாட்டு அசைவை, அரசியல் சாயத்தை, கவிதை இயக்கத்திற்கு எதிரான ஒரு செயல்பாடாகப் பார்க்கவேண்டியிருக்கிறது. சொற்கோர்வைகளாகக் கவிதை அணுகப்படாமல், அந்நுண்ணிய அறிவைக் கைகொள்ளும் தகைமையின்றி, சொற்களாய்ப் பிரித்து எலும்புகளை ருசி பார்க்கும் மனோபாவத்துடன் கவிதையை அணுகும்போது மொழியின் மீதான, வழியான வன்முறை மனிதன் இன்று நேற்று தொடங்கியதில்லை என்பதை நினைவுகூர வேண்டியிருக்றிது. அவரவர் சிந்தனைவெளியின் அளவுக்கு விரித்துநோக்கும் வெளியைக் கொண்டது கவிதை என்று எளிய வாசகமனமும் அறியும்.

இந்நிலையில்தான் தற்போதைய சில தீவிர இலக்கியப் பிறழ்வுகள் எவரது பிரக்ஞையுள்ளும் பதியாமல் போவதைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. முற்போக்கு எழுத்தாளர்கள் எனப்படுவோர் ‘கவிதை, செத்துப்போகக் கூடியது’ என முன்னுணர்ந்து அறிவித்துள்ளதும், கவிஞர்கள் தம் ஆளுமையின் செப்பம் வெளிப்படுத்தாது ஒரு மடத்தின் கீழ் நூறு கவிஞர்களாய்க் கூடி கவிதை வாசித்து வந்ததும், வாசகனின் கவிதைநுகர்வைவிட, விமர்சகனின் இலக்கிய ஞானத்தினும் கவிஞனின் இறை யாண்மையைச் சந்தேகிக்க வைக்கிறது. உண்மையில் இப்போது தான் வெளிப்பட்டிருக்கிறது. கவிஞன் அலைந்து திரிவது பிராபல்யத்திற்கும் பிராப்தத்திற்கும்தான் என்பது.

திராவிட அரசியல் காலகட்டத்தின் முக்கியமான பெரும் இலக்கியவாதியாகக் ‘கட்சித் தலைவரும் ஆட்சித்தலைவருமான ஒருவர்’ போற்றப்பட்டு வருவதன் வழி தீவிர நவீன இலக்கியத் தளம் எவ்வாறு புறக்கணிப்புக்கும் உதாசீனத்திற்கும் உள்ளாகி வருகிறது என்பதை அறிவோம். ‘கவிப்பேரரசுகள்’ தமது திரைப்பட அங்கீகாரம் மீதான குற்றவுணர்வைப் போக்கிக் கொள்ள நவீனக் கவிஞர்களைக் கூவி அழைத்து விருது அளித்த தன் மீதான நவீன இலக்கிய அங்கீகார மோகத்தையும் அறிவோம். இந்நிலையில் ஒரு செம்மாந்தநிலையைப் படைப்பின் வழி முன்வைப்பதாய்ச் சொல்லித் திரிந்த கவிஞர்கள் அதிகார மடத்திற்குள் அடைக்கலம் புகுந்ததன் தேவை என்ன? இவ்விழிவு நிலைக்கு எந்தக் கவிஞரின் அதிகாரம் துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது? தூண்டில் புழுவாய் மீனாய் அகப்பட்டவர்கள் யார்?

கவிஞர்கள் சமீபகாலங்களில் தொடர்ந்து அச்சத்துக்குள்ளாகி வந்திருக்கின்றனர். திரைப்படப் பாடலாசிரியனுக்குச் சமதையான புகழும் அரசவை அங்கீகாரங்களும் அவர்களை நிலை தடுமாற வைத்திருக்கின்றன. அவ்வாறே தலையணை அளவில் வந்திறக்கப்பட்ட நாவல்களை நோக்கி வாசகர்கள் கண்களை நகர வைத்ததும் ஒரு நவீனக்கவிஞன் கைகொள்ளவேண்டிய அணுகு முறைகள். இலக்கணங்கள் எல்லாம் தொடர்ந்து சஞ்சலத்துக் குள்ளாகியிருக்கின்றன. மறைஞானமாய் இலங்கும் கவிஞன், புகழின் காலில் அடிபணிவதை இந்தக் காலம் சந்தித்திருக்கிறது. உறையவைக்கும் அதிர்ச்சியான சம்பவங்களாகவே இவற்றைப் பார்க்கிறேன். இதற்கு நிறைய பின்புலக் காரணங்களும் உண்டு.

பெரும்பான்மையான கவிஞர்கள் மொழி, அரசியல், வரலாறு குறித்துத் தாம் அடையவேண்டிய அறிவைப் புறக்கணித்தே வந்துள்ளனர். தானே முளைத்த சுயம்புவாக, வேறெந்தக் கண்ணிகளோடும் தன்னை இணைத்துக்கொள்ளாத இறுமாந்த நிலையில் அதுவே ஒரு கலைஞனின் இலக்கணம் என வரையறுக்கின்றனர். ‘கவிதைகள் மொழி குறித்த அவதானிப்பைக் கொண்டிருக்க வேண்டியதில்லை, மேலும் அரசியல் உணர்வைத் தீண்டக்கூட வேண்டியதில்லை’ என்பது இவர்களின் வரையறைகள். இதற்குக் காரணங்கள் உண்டு.

இன்றைய நவீன அரசியலோடு பொருத்தப்பாடு இல்லாதவர்களாக இவர்கள் தம்மை வைத்துக்கொள்ளும் ஆதிக்க மனநிலை தான். நவீன அரசியல் கருத்தியல்கள் சமூகநீதியை நோக்கியும், உறவுகளுக்கிடையே அறம்பேண வேண்டிய சமூக அறம் நோக்கி யும் பெருவீச்சுடன் வளர்ந்துள்ளன. இக்கருத்தியல்கள் அதிகாரப் படிநிலையைக் குலைப்பதும் வரிசையை மாற்ற முனைவதும் இவர்களுக்கு அரசியல் உணர்வு குறித்த எரிச்சலைக் கொடுக்கிறது. மேலும் மேலைத்தேயத்தில் உருவாகிய ‘புனித இலக்கியங்கள்’ போன்றவற்றையே உருவாக்கிடவேண்டும் என்பதை ஒரு தர நிர்ணயமாக வைத்து, அதன்வழி இலக்கியங்களை, இலக்கியவாதிகளை மதிப்பிடும் பணியைச் செய்கின்றனர். ஆனால் இவர்களின் படைப்புகளில் அரசியல் சார்ந்த புளகாங்கிதங்கள் இல்லாமலில்லை. அவையெல்லாம் அவர்களின் உணர்வெழுச்சிக்குப் போதுமானவையாகவும் ஊக்கப்படுத்துவதாகவும் இருக்கின்றன.

‘அரசு அதிகார’த்தையும் இலக்கிய நுண்மையையும் ஒன்றுக் கொன்று மோதவிடுதலும் ஒன்றைவைத்து மற்றொன்றை தரம் மதிப்பிடலும் இன்று மேலோங்கி நிற்கிறது. இதுவே இலக்கியத் தரம் மலினமடைதலுக்கு அறிகுறி. அரசு அதிகாரத்தின் சமரசத்திற்கும் உவப்பிற்கும் உகந்த இலக்கியவாதிகளை அரசவைப் படைப்பாளிகளாக்கி மகிழ்வதன் நீட்சி, உண்மையான சமரசமற்ற படைப்பாளிகள் ஒதுக்கப்படுவதும் மக்களின் பார்வையிலிருந்து புறக்கணிக்கப்படுவதும், அரசு அதிகாரத்தின் நிர்ப்பந்தங்களை இலக்கியவாதிகள் ஏற்பதன் மூலம் தமது படைப்பாளுமையை அடகுவைக்கின்றனர். அரசு அதிகாரம் கிடைத்ததன் வழி சில இலக்கியவாதிகள் இலக்கிய அதிகாரம் கிடைத்துவிட்ட தாயும் செயல்படுவதைப் பார்க்க முடிகிறது. அரசு அதிகாரத்தின் மூர்க்கமாக இயங்கும் தன்மை பற்றி இவர்கள் கிஞ்சித்தும் கவலை கொள்பவர்களாக இல்லை.

அதிகாரமையங்கள் ஆங்காங்கே உருவாகிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் கவிஞன் தன் அடையாளத்தை என்னவாக வெளிப்படுத்துகிறான் என்பதே ஒரு சமூகப் பிரச்சனைதான். இக்கட்டுகளையும் நெருக்கடிகளையும் சுயத்தின் எல்லைக்குள்ளோ சுயத்தை விரிவடையச் செய்வதாலோ சந்திக்க ஒரு கவிஞன் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்வது கவிதையாக்கப் பணியிலும் முக்கிய அங்கம் வகிக்கிறது. இது அதிகபட்ச நேர்மையையும் ஊக்கத்தையும் வேண்டுவதால் கவிஞர்கள் இந்த அறந்செயல்பாட்டில் முழுமையும் ஈடுபடவேண்டியது அவசியம். ஒரு பயிர் தான் உறிஞ்சும் நீர், வேரூன்றிய மண், சூழல், பராமரிப்பின் தன்மை என எல்லாவற்றையும் அவற்றின் சாயல்களையும்தாம் தனது இலட்சணங்களாகக் கொண்டிருக்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com