Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி - மார்ச் 2008

உங்களை என் முகத்தைப் பார்க்கும்படி செய்த கதை
அழகிய பெரியவன்

நமது நாட்டில் தேவையற்று எழுதப்படுகின்றன பல ஆயிரம் பக்கங்களும், அதை தேவையற்று படிக்கின்ற பல ஆயிரம் கண்களும் நினைவுக்கு வருகின்றன. குலப்பெருமையும், தற்பெருமையும், அதிகாரப்பரவல் கருத்தும் ஓயாமல் இங்கே சொல்லப்படுகின்றன. அப்படியானால் பெருமிதம் ஏதுமற்ற எளிய கதைகள் இவற்றுக்கு எதிராக சொல்லப்பட வேண்டியவைதான். இங்கு சொல்லப்படாமல் தடுக்கப்பட்டிருக்கிற, அல்லது விடப்பட்டிருக்கிற, அல்லது அவசியமற்றது என்று சொல்ல வைக்கப்பட்டிருக்கிற பல கதைகளில் ஒன்றுதான் என்னுடைய கதையும். ஆகவே அதை சொல்லத் தொடங்குகிறேன்.

1.பீடிகை

முதன்முறையாக கதைக்குள் புகுந்து ஒளிந்துக் கொள்ளாமல் என் கதையை அப்பட்டமாக தொடங்குகிறேன்.

சில வருடங்களாகவே நண்பர்கள் பலரும், என் சுயசரிதையை எழுதச்சொல்லி என்னை கேட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். அவர்களுக்கு தமிழில் தலித் சுயசரிதையின் பஞ்சத்தை போக்கிவிட வேண்டும் என்று ஆசை. எனக்கோ மனதில் குரங்குக் குட்டியைப்போல இறுக்கமாய் தழுவிக்கொண்டிருக்கும் தயக்கம். எனக்கு மிக நெருக்கமான நண்பர்களிடம் விசயத்தை சொன்னபோது வேண்டாத வேலை என்றார்கள். என் மனைவியோ, சுயசரிதை எழுதுவதற்கு அவசியமே இல்லை என்று சொல்லி விட்டார். “ஒரு நாவலை புதுசா எழுதறதெ விட்டுட்டு கிழக்கட்டை மாதிரி என்ன இது சுயசரிதையை எழுதினு?” ஒரு வகையில் பார்த்தால் இதுவும் சரியென்றே தோன்றியது.

இதுவரையில் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ள என் நேர்காணல்கள் பலவற்றிலும் என் வாழ்க்கைக் குறிப்புகள் பலவும் இடம் பெற்றிருக்கின்றன. என் நாவலிலும், சிறுகதைகளிலும் புனைவுகளாக என் சுயசரிதைக்குறிப்புகள் இருக்கின்றன. பல கதை மாந்தர்கள் என் சாயலிலோ, என் மூதாதையர் சாயலிலோ கூட இருக்கிறார்கள். ஆனாலும் கூட சிலவற்றை சொல்லத் தோன்றுகிறது. இன்னும் முழுசாக சொல்லி முடித்துவிடவில்லை என்ற நிறைவின்மை. வாழ்வின் கணங்களை முழுதும் சொல்லிவிட இன்னொரு வாழ்க்கைத்தான் வேண்டும்.

வயதானவர்கள்தான் தன் கதையை எழுத வேண்டும். சொந்தக்கதையை எழுதுவதற்கு அப்படி ஒன்றும் முக்கியத்துவம் இல்லை என்ற கருத்துக்கள் வெயில் காலத்துச் சூறைக்காற்றாய் என்னை தூக்கிக் கொண்டு சுழல்கின்றன. நான் தடுமாற்றத்தோடு நினைத்துக்கொள்கிறேன். என்னைப் பற்றி சொல்வதற்கு ஏதேனும் இருக்கிறதா? இருக்கிறது என்கிறது மனம். பின் அதுவே திரும்பி அப்படி என்ன இருக்கிறது என்றும் கேட்கிறது.

நான் மிகமிகத் தொன்மையான தமிழ்க்குடியில் பிறந்தேன். அது பறைக்குடி. துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகிய நான்கு குடிகள்தான் தமிழின் மிகத் தொன்மையான குடிகள் என்று புறநானூற்றுப்பாடல் ஒன்று சொல்வதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். பறையன் தவிர்த்த பிற குடிகளைப்பற்றி இன்று எந்தத்தகவலும் இல்லை. ஆனால் இன்றும் பறைக்குடி இருக்கிறது. உலகின் மூத்தக்குடி என்பதற்கான எந்த பெருமைகளும் அற்று.

கருப்பினத்தவரைப்போல, செவ்விந்தியர்களைப் போல, அபாரிஜின்களைப்போல, பழங்குடியினரைப் போல தொன்மையான தமிழ்ச்சாதிதான் பறைக்குடியும். தொன்மையும், பழமையும் மனிதர்களால் எப்போதும் இழிவு செய்யப்படுகின்றன. அவற்றுக்கு மதிப்பில்லை. புதிதாக தோன்றும் இனங்கள் தமது இருப்பை நிலைப்படுத்திக்கொள்ள தொன்மையை கீழாக்குகின்றன. இழிவுபடுத்துகின்றன. அல்லது அழிக்கின்றன. பறைக்குடிக்கு இந்த அழிம்பு தொடர்கிறது.

எல்லா சமூகக் குழுக்களும் தம்முடைய வரலாறு என்று ஒன்றை தொடர்ந்து உருவாக்குகின்றனர். இந்த வரலாறுகள் தமது சாதியை புனிதமானதாகவும், உயர்ந்ததாகவும் சமூகத்திலே நிலைநிறுத்திக் கொள்வதற்கு உதவுகின்றன. இப்படி எல்லா சாதிகளும் தமக்கென்று உருவாக்கும் மேன்மையான வரலாறுகளை வைத்துக்கொண்டு, சரி, நாம் எல்லோருமே உயர்ந்தவர்கள்தான் என்ற உயர்சமத்துவ நிலை இங்கே உருவாவது இல்லை. உயர்வு என்று சொல்வதற்கு தாழ்வு என்ற ஒன்றையும் இணைத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. இதைதான் சாதிய மேன்மையைக் கூறும் வரலாறுகள் செய்கின்றன. மேல்நிலையாக்கம் கீழ்நிலையாக்கம் என்ற இரு எதிர்மைகள் சீட்டுக்கட்டுகளைப் போல மாற்றி மாற்றி அதிகார விளையாட்டில் அடுக்கப்பட்டு வருகின்றன.

பறைக்குடிக்கு இப்படி ஏதாவது ஒரு மேல்நிலையாக்கத் கதை உண்டா என நான் தேடியபோது தான் இந்தக் கதை கிடைத்தது. வயது முதிர்ந்த உறவுக்காரக் கிழவர் ஒருவர் இதை எனக்குச் சொன்னார். அவர் பெயர் சாமன்.

2. சாமன் சொன்ன கதை

முன்னொரு காலத்தில் சிவன் மந்தை மந்தையாக மாடுகளை வளர்த்து வந்தானாம். அந்த மாடுகளைப் பார்த்துக் கொள்வதற்கு ஒருவன் பொறுப்பாக இருந்தானாம். மாடுகளுக்கு மேய்ப்புக்காட்ட வேண்டும். தண்ணீர் காட்ட வேண்டும். பத்திரமாக ஓட்டி வந்து பட்டியிலே அடைக்க வேண்டும். நோய்நொடியில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அயலாரிடமிருந்தும், விலங்குகளிடமிருந்தும் பாதுகாப்பு செய்யவேண்டும். இத்தனை வகையான வேலைகளையும் அந்த மேய்ப்பன்தான் செய்ய வேண்டும்.

இப்படி நடந்துக் கொண்டிருந்தபோது, தினமும் சிவன் வருவானாம். மேய்ப்பனிடம் மாடுகளைப்பற்றி விசாரிப்பானாம். பிறகு பட்டியை ஒரு சுற்று வந்துவிட்டு தனக்கு தேவையான, கொழுத்த மாடு ஒன்றை தேர்ந்து எடுப்பானாம். தேர்ந்து எடுத்த கொழுத்த மாட்டிலிருந்து தொடைக் கறியாகப் பார்த்து தேவையான அளவுக்கு அறுத்து எடுத்துக்கொள்வானாம் சிவன். அவன் அப்படி அறுத்து எடுத்துக்கொண்ட பிறகு மாட்டின் தொடை பழைய மாதிரியே கூடிவிடுமாம். இதுவெல்லாம் அந்த மேய்ப்பனுக்கு முன்பாகவே நடக்கும். மேய்ப்பனுக்கு மாட்டின் கறி தின்ன பெருத்த ஆசை. சிவனைப் போலவே நாவிலே எச்சில் ஊறும். ஆனால் சிவனோ தரமாட்டான்.

“நானும் சாப்பிடுவேன். எனக்கும் மாட்டுக்கறி வேணும்” “அது அமிர்தம். நீ சாப்பிடக்கூடாதது”-இப்படி விவாதங்கள் நடக்கும். ஏமாற்றத்திலும் ஆசையிலும் உளைந்தபடி இருந்த மேய்ப்பன் ஒரு நாள் துணிந்து விட்டான். ஒருநாள் சிவன் போய்விட்டபிறகு, ஒரு கொழுத்த மாட்டை பிடித்து தொடைக்கறியை அறுத்து எடுத்துக்கொண்டான். சிவன் அறுத்தபோது கூடியதுபோல தொடை கூடவில்லை. மேய்ப்பனுக்கு கலக்கமாய் இருந்தது.

சிவன் வந்தானாம். அவன் பார்த்தபோது அறுபட்டு கூடாத மாடு இருந்ததாம். சிவனுக்குக் கோபம். அவன் மாடுகளை காவல்புரிகிறவனை அழைத்து கேட்டானாம்: “நீ என் சொல்லை மீறி அறுத்த மாட்டுக்கறி எங்கே?”. காவலாளி பதில் சொல்லாமல் கறியை மறைத்துக்கொண்டு நின்றானாம். “மாட்டுக்கறியை அறுத்து மறைத்ததால் நீ மறையன்” என்று சிவன் சொல்லி காவலாளியை விலக்கிவிட்டானாம். மறையன் என்ற சொல் பறையனாகிவிட்டதாம் நாளடைவில்.

அருந்ததியர்களின் பூர்வகதை, இந்தியாவின் பல பகுதிகளும் வழங்கும் கதைகள், அம்பேத்கரின் ஆய்வு எல்லாமே சாமனின் கதையைப்போலsத்தான் இருக்கின்றன. மாட்டுக்கறியை ஒருசாரார் தின்றது. ஒரு சாராருக்கு மறுத்தது. மறுக்கப்பட்டவர்கள் தின்றபோது விலக்கப்பட்டது. அல்லது கறி சாப்பிடுவதில் உண்டான அரசியல்.

3. கள்ளி மரங்கள் நிறைந்த எனது ஊர்.

வேலூர் மாவட்டத்தில்தான் என் சிற்றூர் இருக்கிறது. பேரணாம்பட்டிற்கு அருகில் இருக்கும் கள்ளிச்சேரி. கள்ளிப்பேட்டை என்று அதை இப்போது நாகரீகமாக அழைக்கின்றனர். நான் ஆறாவது அல்லது ஏழாவது படிக்கும்வரை அந்த கிராமத்தில்தான் இருந்தோம். பிறகு அங்கிருந்து கூப்பிடு தொலைவில் உள்ள இலாலா பேட்டைக்கு குடிபெயர்ந்தோம். பின்பு நான் அங்கிருந்தும் பெயர்ந்து என் பாட்டி ஊரான ஆம்பூருக்குச் சென்றேன். என் பிள்ளைப்பருவம் இவ்வாறு பல்வேறு ஊர்களில் கழிந்தது. இப்போது இருப்பது இலாலாபேட்டையில்.

வேலூரிலிருந்து கிளம்பினால் ஒன்றரை மணிநேரத்தில் பேரணாம்பட்டுக்கு வரலாம். பேரணாம்பட்டில் எங்கு நின்று பார்த்தாலும் மலையின் முகடுகள் தெரியும். பெரிய அரண்களைக் கொண்ட ஊர் என்பதால் பேரணாம்பட்டு என்று பெயர் உண்டானது போலத் தெரிகிறது. முசுலீம்கள் அதிகம். ஆதிக்கச் சாதிகளாக பலர் உண்டு. நாயுடுக்களும், ரெட்டிக்களும் அதிகம். நிலமிருப்போரும் அவர்கள்தான். முசுலீம்களுக்கும் நிலம் உண்டு. அவர்கள் தோல் பதனிடும் தொழிற்சாலைகளையும் நடத்துகிறார்கள்.

பேரணாம்பட்டு ஒரு எல்லையோர சிறு நகரம். ஆந்திர, கர்நாடக மாநில எல்லைகள் அடுத்தடுத்து வரும். கோலார் தங்கவயலுக்கு எங்கள் ஊரைக் கடந்து எதிர்படும் கிழக்குத் தொடர்ச்சிமலையை ஏறிக் கடக்கவேண்டும்.

கிறித்தவ மறைப்பணியாளர்களின் கேந்திரமாகவும் பேரணாம்பட்டு இருந்திருக்கிறது. கிழக்குத் திசையிலிருந்து பேரணாம்பட்டுக்குள் நுழையும்போது பெரும் மரங்களும் நடுவிலே ஒரு பங்களா இருக்கிறது. அதை 1800க்கு முன்பு அங்கு கட்டியது பெட்ரம் என்ற வெள்ளை மறைப்பணியாளர். அவருக்குப்பிறகு கிரெம் என்ற வெள்ளை மறைப்பணியாளர் அங்கு இருக்கிறார். அவர்கள் பங்களா கட்டி இருந்ததினால் அந்த இடத்துக்கே பங்களா மேடு என்றும் பெயர் வந்துவிட்டிருக்கிறது.

இந்த மறைபணியாளர்களைப் பற்றி ஊரில் கதை கதையாகச் சொல்லுவார்கள். நேரம் கிடைக்கிற போதெல்லாம் கிராமத்துக்குள் வருவார்களாம் அவர்கள். பிள்ளைத் தாய்ச்சிகளுக்கும், நோயாளிகளுக்கும், குழந்தைகளுக்கும் மருந்துகளைத் தருவார்களாம். துணி வகைகள், போர்வை, கோதுமை, பால்பவுடர் போன்ற பொருட்களையும் தருவ துண்டாம். லாலாபேட்டையில் ஒருவருக்கு காசம் இருந்திருக்கிறது. அப்போது காசம் குணப்படுத்த முடியாத கொடிய நோய்களில் ஒன்று. காசம் வந்த அந்த மனிதன் இருமி, மயங்கிக்கிடந்தானாம். அவன் வீட்டாருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நாட்டு வைத்தியமும், மந்திரங்களும் பலிக்கவில்லை.

கிரெம் அந்தச் சமயம் பார்த்து ஊருக்குள் வந்தாராம். அந்த மனிதனை தனது காரில் தூக்கிப் போட்டுக்கொண்டுப் போய் ஆம்பூரிலே இருக்கும் பெதஸ்தா மருத்துவமனையில் சேர்த்துவிட்டாராம். இந்த பெதஸ்தாவும் வெள்ளை கிறித்தவ மறைபணியாளர்கள் கட்டியதுதான். காசநோயிலிருந்து தேறிய அந்த மனிதன் கொழுகொழு வென்று திரும்பி வந்தானாம். ஊரே வாயடைத்துப்போய் அவனைப் பார்த்ததாம். நான் கூட அந்தக் கிழவனை பார்த்திருக்கிறேன். முறுக்கு மீசையுடன் நெடுநெடுவென்று, செக்கச்செவேல் என இருப்பான். கூர் நாசி இருக்கும் அவனுக்கு. நோயிலிருந்து மீண்டு வந்தபோது அவ்வளவு சிவப்பாக இருந்தானாம். அதனால் ‘வெள்ளைக்காரன்’ என்ற பட்டப் பெயரே அந்தக் கிழவனுக்கு நிலைத்துவிட்டிருக்கிறது.

இப்படி வெள்ளை கிறித்தவ மறைப் பணியாளர்கள் செய்த உதவிகளால் தலித்துகள் பலர் கிறித்தவத்திற்கு மாறியிருக்கிறார்கள். முழு கிராமமே கிறித்தவர்களாக மாறியிருக்கிறது. இந்தப்பக்கம் கிறித்தவ சமயப்பணி செய்தவர்கள் லுத்தரன் சபையினர். மார்ட்டின் லுத்தர் எனும் ஜெர்மானிய சமயப் புரட்சியாளரால் உருவான புராட்டஸ்டன்ட் எனும் பிரிவை சேர்ந்தவர்கள். மருத்துவமனைகளை கட்டியதோடு பள்ளிக்கூடங்களையும் தொடங்கினார்கள் அவர்கள்.

பங்களாமேட்டிலே ஒரு வனக்காவலர் ஓய்வு இல்லமும் இருக்கிறது. அந்தக் காலத்திலே அந்த ஓய்வு இல்லத்தில் இருந்த வெள்ளை அதிகாரியும், கிறித்தவ மறைப்பணியாளரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டிருப்பார்களாம். வனக்காவலர் இல்லத்திலிருந்து கொஞ்சம் கீழிறிங்கி நடந்தால் சாலையை ஒட்டியதுபோல ஒரு சத்திரம் இருக்கும். நவாப்புகளால் கட்டப்பட்ட அது இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது.

எனக்கு காடுகள்தான் மனதோடு உறவாடுகிற நண்பர்கள். ஊரைச் சுற்றியிருக்கும் காட்டுப்பகுதிகளில் நான் தனிமையில் கழிக்கும் இடங்கள் பல இருக்கின்றன. நால்திசையிலும் விரவி இருக்கும் அவை மனித சஞ்சாரத்துக்கு சற்றே விலகியிருப்பவை. காடு, பெரும்பாறை, ஆறு, ஓடை இப்படி அதன் வகைப்பாடுகள். பெரும்பாறையில் ஆயிரம் பேருக்கும் மேல் உட்காரலாம். வானத்தை எட்டிப் பிடிக்கலாம் அங்கே. மலைகிராமத்துக்குப் போகும் வேறொரு இடத்திற்கு அருகிலே சீத்தாம்மாள் காலடி இருக்கிறது. சீதை இந்தக் கானகம் வழியாக தன் துணைவனோடும், கொழுந்தனோடும் போனாளாம். சனங்கள் சொல்லிக் கொள்கிறார்கள். ஒரு மனிதன் உட்கார்ந்திருப்பது போல பின்புற தடமும், காலடிகள் இரண்டின் தடங்களும் பாறை யொன்றில் பதிந்திருக்கின்றன.

எந்தக் கல் தச்சன் அப்படி செதுக்கியிருப்பான் தெரியவில்லை. பாறை இளகியிருந்த போது யாராவது அங்கே போய் உட்கார்ந்திருப்பார்களோ, புரியவில்லை. அந்தக் கணத்தின் பொழுது. அந்த நேரத்தில் சூரியனோ, நிலவோ வழங்கும் வெளிச்சம். அந்த குணத்தின் வானப் பின்னணி. அப்போது மரங்களும் மலைகளும் பறவைகளும் மனிதர்களும் ஊரும் கொள்ளும் அழகு. மனதை விட்டு அகலாத நிலக்காட்சிகளாய் இப்படி சில பதி கின்றன. பங்களாமேட்டில் மேற்கை பார்த்தது போல் இறங்கும் சாலை. சாலை தாழும் இடத்தில் நின்றிருக்கும் முற்றிய கருவேல மரத்தின் பின்னணியில் எதிர்மலை தெரியும்.

களைத்த சூரியன் மலைக்குள் இறங்கும் காட்சியை அம்மரத்தின் ஊடே பார்க்க வேண்டும். அப்படியொரு மாலையின் அழகை பார்க்க முடியாது. மனம் ஏகாந்த மோனம் பூணும்போது இந்தச் சாலைகளின் ஊடே வெகுதூரம் நடப்பதுண்டு நான். நூற்றுக்கணக்கான குருவிகள் வந்த டையும் நெடுஞ்சாலை பூவரசு, புராதன கட்டிட அழகுடன் இருக்கும் வீடுகளைக் கொண்ட சில முஸ்லீம் தெருக்கள். விரும்பிப் பருகும் தேநீர்கடை இருக்கும் இடம். இப்படி ஊரில் மனதுக்கு பிடித்த இடங்கள் பல உண்டு.

கள்ளி மரங்கள் நிறைந்த மலையின் அடிவாரத்தில் கள்ளிச் சேரி இருக்கிறது. கள்ளி மரங்கள் மட்டுமின்றி சீத்தாப்பழ மரங்களும், தனக்கன் மரங்களும், காரைச்செடி புதர்களும் கூட மலை முழுக்கவும் மண்டியிருக்கும். அப்படி இருக் கும் எதிர் மலையை ஏறிக்கடந்தால் அலையலையாய் மலைத்தொடர் விரியும். நடுநடுவே ஏரிகளும், குளங்களும் உண்டு. நான் சிறு வயதில் பார்த்த கிராமம் இன்றில்லை. சிறுவயதில் எல்லாமே பெரியவைகளாகவும், விசேடமானவைகளாகவும் தெரிகின்றன. காலம் செல்லச் செல்ல வியப்பு மறைந்து நிலைத்தன்மை வந்துவிடுகிறது.

பங்களா மேட்டில் இருந்து மேற்கை பார்த்தமாதிரி ஒரு சாலை மலையை ஊடறுத்துப்போகிறது. அந்த சாலையை மய்யமாகக் கொண்டே கள்ளிப்பேட்டையும் உருவாகியுள்ளது. அந்தச் சாலையே கிராமத்தின் முதன்மை வீதி. அதைப் போன்றே பிறிதொரு நீண்ட தெரு இன்னொரு பக்கம் உண்டு. அது கிராமத்தை நெடுக பகுக்கும். இந்த இரு வீதி களுக்கு இடை இடையே குறுக்குச் சந்துகள். ஒரு ஏணியைப் போன்றது ஊரின் வரைபடம்.

ஊரில் வேறு சாதிக்காரர்கள் யாரும் கிடையாது. எல்லாரும் தலித்துகள்தான். மலை அடிவாரத்திலிருந்து வரும் கொடி வழி கல் பாவிய தெருவாக கீழிறிங்கி கிராமத்துக்குள் சேரும் இடம்தான் நடுத்தெரு. அங்கே ரட்சை உண்டு. மெலிந்த பூவங்காய் மரமொன்று அங்கிருந்தது. அங்கே மிக உயரமான திண்ணையோடு ஒரு ஓட்டுவீடு உண்டு. அந்தத் திண்ணையை தன் சாய்மானமாக்கிக் கொண்டு ஒரு கிழவி தோசை சுடுவாள். காலையிலேயே முகம் கழுவிக்கொண்டு பத்து பைசாவுடன் அங்கு இருப்போம் நாங்கள். நாலணாவுக்கு மூன்று தோசை தருவாள். பிறகு ரூபாய்க்கு நாலு தோசை என்றும் ஆனது. தோசைக்கு கடைஞ்சல், பண்ணைக்கீரை போன்ற குழம்புவகைகள்.

இரவிலே அந்தத் தெருவில்தான் துணி ஏலக்காரர் வந்து பெரிய விளக்கொளியில் கடை விரிப்பார். மாலையிலேயே அவர் தெருத்தெருவாய் துணி ஏலத்தை அறிவித்து வருவார். ஈசான மூலையில் மாரியம்மன் கோவில். அதன் அருகி லேயே கிறித்தவக்கோயில். எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் தான் ஊர்க்கிணறு. ஒன்றிரண்டு அபலைகள் அதில் உயிர் விட்டிருக்கிறார்கள். பாதாள கொலுசு போட்டு ஒரு கன்னியின் பிணத்தை இழுத்ததை ஒருமுறை நான் அங்கு பார்த்தேன். என் சித்தப்பாவும், பக்கத்து வீட்டுக்காரரும் பன்றிகளை வளர்த்தனர். பன்றிகள் உறுமலும், நடுஇரவில் கேட்கும் கிணற்று ராட்டின சத்தமும் தூக்கத்தை கெடுக்கும். பீதியைக் கிளப்பும்.

வீட்டின் பின்புறம் பெரிய நிலம். நிலத்தைக் கடந்தால் ஆறு. ஆற்றின் மறுகரையில்தான் பல ஏக்கர் கொண்ட பெரு நிலமொன்றை சரோஜா அத்தையும் சின்னக்கண்ணு மாமாவும் குத்தகைக்கு உழுது வந்தனர். குளிக்கவும், துணி துவைக்கவும், அடுப்புக்கு சுள்ளி பொறுக்கவும் அங்கு போவதுண்டு.

அறுவடை முடிந்த காலங்களில் வீட்டின் பின்புற நிலத்தில் கிடை போடுவார்கள். நிலம் முழுக்க ஆடுகள் மேயும். குட்டிகளை மூடிவைக்க பெரிய மூங்கில் கூடைகள் ராட்சத ஆமைகள் போல கிடக்கும். துவரை அறுத்தாலும் அந்த நிலத்தில்தான் களம் போடுவார்கள். காவலிருக்கும் மசிக்கத்தான் தாத்தன் காலையிலேயே குளிர் கொளுத்துவான். எழுந்ததும் நான் அங்கு ஓடுவேன்.

வீடுகள் எல்லாம் மண் வீடுகள். செம்மண் உருண்டைகளை அடுக்கி வைத்து எழுப்பியவை. மழை வழிந்து அந்தச் சுவர்கள் மழுங்கி மழுங்கி ஒரு வடிவத்துக்கு வந்திருக்கும். மாலையில் வெயில் பிரகாசமாக இருக்கும்போது செம்மண் சுவர்கள் தகதகத்து கிராமமே செந்நிறத்தில் தெரியும். இப்போது கிராமத்தில் மண்சுவர் வீடுகள் அருகிவிட்டன. கிராமம் முகம் மாறிவிட்டது.

எனக்கு புதிராகவும் வியப்பாகவும் தெரிந்த வீதிகளும் சந்துகளும் இன்று சாதாரணமாய் தோன்றுகின்றன. புதுப் பெண் பழைய மனைவியாகிவிட்டாள். எப்போதாவது கள்ளிப்பேட்டைக்கு போகிறபோது அது என்னை வசீகரிப்பதில்லை. கிராமம் என்று ஒரு மனநிலை அவ்வளவே.

4. இரண்டாம் பாட்டான் கதைக்காரன்

என்கதையைச் சொல்லாமல் உன் கதையைச் சொல்லாதே என்று என்னை மிரட்டுகிறான் நடுவுலான். அவன் என் அப்பாவைப் பெற்ற பாட்டன் சின்னப்பனின் தந்தை.

என் எதிரில் வந்து சம்மணமிட்டு உட்கார்ந்து தொண்டையை செருமிக்கொள்கிறான். தன் நீண்டமுடியைப் பிரித்து கைநுழைத்து சிக்கெடுக்கிறான். அவன் ஒரு மாபெரும் கதைக்காரன். நடுவுலானின் தந்தையும் என் முப்பாட்டனுமானவன் ஒரு மந்திரக்காரனாம். அவனிடம் எல்லா மனிதர்களும் பயந்து நடுங்கியிருக்கின்றனர். அவன் செய்த மந்திரம் எதுவோ ஒன்று தவறிப்போய், அவன் வம்சத்தில் தலைச்சன் பிள்ளைகள் நெடுங்காலம் தங்காமல் இருந்ததாக பெண்கள் சொல்கிறார்கள். முப்பாட்டன் மந்திரக்காரனுக்கு மூன்று பிள்ளைகள். பெரியவன், நடுவுலான், கருப்பன். அவன் பெற்ற பெண் பிள்ளைகள் குறித்து விவரமில்லை. இல்லையெனில் அவன் பெண்ணே பெறவில்லை என்றும் சொல்லலாம் எனத் தோன்றுகிறது.

நடுவுலான் மிக உயரமானவன். நீண்ட கைகள். இப்போதெல்லாம் யாரும் அந்தத்தண்டி உயரமில்லை என்கிறது ஊர். அவனுக்கு முதல் மனைவி நிலைக்கவில்லை. அவள் செத்துப்போனதும் கட்டிக் கொண்டவள் தான் துருகத்தாள். துருகத்தாளின் ஊர் துருக்கம் என்பதால் அவள் பெயரே அதுவானது. அவள் நாகன் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுக்கு பேரணாம்பட்டு பக்கம் நடுவுலானுக்கோ பூர்வீகம் நாவிதன்பட்டி. அது மேல்பட்டி பக்கம் இருக்கிறது. பேரணாம்பட்டியிலிருந்து மூன்று, நான்கு காத தூரமிருக்கும். கிழவி செவசெவவென்று தாட்டிமமாக இருப்பாள் என்று சொல்கிறார்கள். அந்தப் பாட்டியைப் பற்றி சொல்ல ஆளில்லை. அவர்களிடம் விவரமுமில்லை.

“புருஷனுக்கு பயிந்து நடந்துனு, காடு கரைக்கு வேலைக்கு போயினு இருந்தாள். உன்னுமென்ன அவளப்பத்தி?” கிழவனுக்கு வயசாகி இருந்தபோதும் அவனிடம் அடிபட்டிருக்கிறாள் துருவத்தாள். வளையல் போடாமல் அவனுக்கு சோறு போட்டதற்காக அவன் அவளை அடித்திருக்கிறான்.

நடுவுலான் மாலையானால் தன் சினேகிதக்காரன் அய்யாக் கண்ணுவுடன் வீட்டு வாசலிலோ, ஏதாவது ஒரு திண்ணையிலோ அமர்ந்து கொண்டு கதை போடுவான். எண்ணற்ற கதைகள். விடுகதைகள். ஒரே கதையை மூன்றுநாள்கூட தொடர்ந்து சொல்லும் அளவுக்குப் பெரிய கதைகள். ஆனால் விடுவிக்கமாட்டான். அவன் வாசலில் பெண்களும், ஆண்களும் நிறைந்திருந்து இருக்கிறார்கள் இப்படி இதனாலேயே பலருடன் சினேகம்.

அவன் கூத்தும் கட்டுவான். வெற்றிலைக்கிள்ள, வெற்றிலைக் கொடி கட்ட, கரும்புப்பயிர் உட்டை கட்ட, ஏர் ஓட்ட, அறுப்பறுக்க இப்படி போவார்கள் இருவரும். நடவுலான் நெருப்புக்குச்சி ஆச்சாரியிடம்தான் ஆண்டை வேலை செய்து வந்தான். ஆச்சாரிக்கு நான்கு அண்ணன் தம்பிகள். பல ஏக்கர் நிலம். எல்லாவற்றையும் பொறுப்புடன் பார்த்துக்கொள்வது நடுவுலான்தான். ஒரு சோடி மாடுகளுக்கு ஒரு வேலைக்காரன் என்று இருந்தாலும் நடுவுலான் அவர்களின் தலைமை வேலைக்காரன் போன்றவன். நடுவுலானும் துருகத்தாளும் இன்னும் இரண்டுபேர்களை வைத்துக்கொண்டு ஆச்சாரியின் நிலத்தில் பெரும் கிணறு ஒன்றை வெட்டினார்கள். அதில் நல்ல தண்ணீர் விழுந்தது. எப்போதும் வற்றாத ஊற்றுப் பாங்கு.

ஆச்சாரியின் நிலம், ஆச்சாரியின் குடும்பம், ஆச்சாரியின் சினேகிதம் என்று சுற்றிக் கொண்டிருந்த நடுவுலான் பிள்ளைகள் நால்வரையும் சரியாக கவனிக்கவில்லை. வீட்டைப் பார்க்கவில்லை. அவனுக்கு ஒரு கனவு உண்டு. நிலம் பிடிக்கும் கனவு. ஆச்சாரியுடன் பழகியதால் வந்ததோ, என்னவோ. கிழவியை விடாமல் கட்டிக் கொண்டு அலைந்து தன் ஊரிலிருந்து நான்கு மைல் தூரத்தில் ஒரு நிலம் பிடித்தான் நாற்பது ஏக்கர் நிலம். இருவரும் சேர்ந்துக்கொண்டு வேலிபோட்டார்கள். தினமும் கொஞ்சம் சுத்தம் செய்து நாற்பது ஏக்கரையும் பாங்கு பண்ணினார்கள். அந்த நிலத்தில் ஒரு கரடக்கம்பம் இருந்தது. அங்குதான் அவன் பூசைகள் செய்வான். கிழவி விளக்கேற்றுவாள்.

நிலத்தில் சோளம், கம்பு என்று விதைப்பான் நடுவுலான். தான் இல்லாத சமயங்களில் நிலத்தை பார்த்துக் கொள்ள செங்கல் அறுக்கும் ஒட்டர் குடும்பம் ஒன்றை அதில் வைத்திருந்தான். பிள்ளைகள் யாரும் அதில் உழுது பயிரிட வருவதில்லை. பாதிக்கும் மேல் களையும் புதரும் மண்டி யது நிலத்தில். சேர்ந்தார்போல பஞ்சகாலமும் வந்தது. மழை இல்லை. அத்தனை பெரிய நிலத்துக்கு தீர்வை வரி யையும் நடுவுலானால் கட்ட முடியவில்லை. ஒருநாள் மனதில் தீர்மானம் கொண்டவனாய் செங்கல் அறுக்கிறவனைக் கூப்பிட்டான்.

“இந்த நெலத்தை இனி நீயே வச்சிக்க. எம்புள்ளிங்கள நம்புனேன். அவனுங்களுக்கு அக்கறையில்ல. என்னாலும் இனிமேல்ட்டுக்கு உழைக்க முடியாது”

நிலத்தை பார்த்துவர போகும் போதெல்லாம் களியும் சோறுமாக செங்கல் அறுப்பவனின் வீட்டில் சாப்பிட்டு வருவான். ஒருநாள் அவன் நீட்டியத் தாளில் கைநாட்டு பதித்துவிட்டு, அவன் தந்த புது வேட்டி சட்டியை உடுத்திக் கொண்டு திரும்பிவிட்டான் நடுவுலான்.

“என்னாப்பா இது புது சோமம், சட்டெ துணி?” பெரிய மகன் கேட்டான். “நம்ம நெலத்தெ பாத்துக்கிறவன் வாங்கிக் குடுத்தான்”. அதோடு முடிந்தது நிலத்தின் வரவும், கனவும். நடுவுலான் செத்தபோது அவனுக்கு நூறை எட்டியிருக்கும் வயது. அதை தாண்டியுமிருப்பான் என்கிறார்கள் சிலர்.

அவனின் ஆண்டையும், சினேகிதனுமான நெருப்புக்குச்சி ஆச்சாரியின் பிள்ளைகள் அப்பன் சொல்லிப்போனதை நிறைவேற்ற வந்தார்கள். “நடுவுலான் செத்தா, அவன நீங்கதான் எடுத்துப் போடனும்”

நடுவுலான் பிள்ளைகள் மறுத்துவிட்டார்கள்.

தொடரும்....


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com