Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி - மார்ச் 2007
ஊற்றெடுக்கும் காலம்
- எஸ்.செந்தில்குமார்

பட்டு முதன்முதலாக தான் உடுத்திய வெந்தயக்கலர் புடவையை மடித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு காரணமற்று புடவைகள் மீது எரிச்சலும் வெறுப்பும் கூடியது. எல்லா புடவைகளும் தனக்கு ஒரேமாதிரியான தோற்றத்தையே தருகின்றன என நினைத்தாள் பட்டு. அவளின் வயலட் நிறப்புடவையில் பெரிது பெரிதாகப் பூத்திருந்த மஞ்சள் பூக்கள் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தன. அவளது வயிற்றுப் பகுதியிலும் கால்பகுதியிலும் பூத்திருந்த அப்பூக்கள் நேரிடையாகவே கேட்டுவிடத்தான் ஆசைகொண்டது போல. பூக்களுக்குத்தான் கேட்பதற்கு பயமோ வெட்கமோ கிடையாது. அந்தப் பூக்களெல்லாம் சேலை நெய்யும் போதே பூத்திருந்ததுதான். பட்டுதான் பூக்காமல் இருக்கிறாள். பட்டுவைப்பற்றி எப்படியோ தெரிந்து வைத்திருந்தன சேலையில் இருந்த பூக்களும் கொடிகளில் பூத்திருந்த பூக்களும்.

அவள் தன் நரை முடிகளை கருநிற முடிகளுக்குள் மறைத்து மறைத்து வைத்து நெற்றியிலிருந்து வழிந்து கிடக்கும் கூந்தலை அழகு செய்திருந்தாள். குதிரைஜடை போட்டுக் கொண்டு நரை விழாத தனது இளமைகாலத்தில் நடந்த பாதைதான் இப்பொழுதும் அவள் அன்றாடம் நடந்து வரும் பாதையாக இருந்தது. பாதைகளும் பாதைகளின் உருவங்களும் மாறிவிடுவது போல எதுவும் விழத் தொடங்கிவிட்டதை உணர்ந்திருந்தாள் பட்டு.

இரிஷிப் பெண்ணான தன்னை கேலி செய்வது தற்பொழுது நின்றுவிட்டது அவளுக்கு நிம்மதியாக இருந்தது. பருவம் அடையாத உடலின் வேதனையை சொல்லி விட இயலாது. தெருப்பெண்களும் ஊர்ப்பெண்களும் தங்கள் வீட்டுச் சடங்கிற்கு அவளை அழைக்கும்போது நொறுங்கிவிடுகிற மனம் தேறியெழ தினங்கள் கழிய வேண்டி இருந்தது. அவளுடைய நடையின் தீவிரமும் வேகமும் மட்டுப்பட்டு நிதானித்துக் கொண்டது.

யாரும் பின்தொடர்வதும் கவனிப்பதும் இல்லையென்றபோது தான் ஏன் வெங்குவெங்கு என்று நடக்கவேண்டுமென நடையை சுருக்கிக்கொண்டாள். பட்டுவின் வயதில் அவளது தோழிகள் மூவரும் சடங்காகி திருமணம் செய்து இரண்டிரண்டு பிள்ளைகளாகப் பெற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். அருகாமை கிராமங்களிலும் நகரங்களிலும். பட்டு அவள் பிறந்த வீட்டிலேயே இருக்கப் பிரியப்பட்டவளாக ஊரில் இருந்தாள். அவளது சகோதரன் சின்னவன் நகரத்தில் லாட்டரிச்சீட்டு விற்பவனாக வாழ்ந்து கொண்டிருந்தான். பூட்டான் சிக்கீம் கஞ்சன் ஜங்கா மனிப்பூர் அஸ்ஸாம் தமிழ்நாடு தீபாவளி பம்பர் பொங்கல் சிறப்புக் குலுக்கல் என்று பஸ் ஸ்டாண்டிலும் தெருவிலுமாகச் சுற்றி விற்றுப் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தான்.

“பட்டு மேல் பட்டுடுத்தி பட்டணம் போகிறவளே உன் பட்டின் விலை என்னடி” என்று கேலியும் சிரிப்புமாக தோழிகளுடன் கழிந்த வாழ்வு தன் சிறுவயதில் வாய்த்தது பட்டுவுக்கு. அவளுடன் படித்தவர்கள் ஒவ்வொருவராக உலக்கைகளுக்கு முன்னால் அமர்ந்துகொள்ளத் தொடங்கியபொழுது பட்டுவுக்கு மட்டும் அப்படி அமர்ந்து கொள்ளும் காலம் கனிந்து வரவேயில்லை. அவள் வயதுக்கு வராமல் இருப்பதைக்கண்டு துக்கம் கொள்ளாதவர்கள்தான் யார். தவமிருந்து திருமணம் செய்து கொள்ளப்போகிற மாப்பிள்ளைமார்களின் வேதனை யாருக்குத் தெரியும். பட்டைத் திருமணம் செய்து கொண்டு போய்விட வேண்டுமென்ற ஆசையோடு காத்திருந்த உறவினர்கள் மாவிளக்கு வைத்து கோவில் கோவிலாகச் சுற்றி வந்தார்கள். கண் திறக்காத கற்களாகவே நின்றுவிடுகின்றன தெய்வங்கள். மந்தைவெளியில் காவலுக்கு நிற்கின்ற சாமிகள்கூடப் பட்டின் வேண்டுதலைக் கேட்பதே இல்லை.

பட்டு தனது காலங்களை வேதனைகளால் கடந்து வந்து விட்டபின்பு இனி துக்கம் கொள்ளவும் நினைத்து ஏங்கவும் ஒன்றுமில்லையென தன்னை மறந்துபோனாள். அவளது இளமைக்காலங்களில் நடந்த ஒன்றையும் ஞாபகங்களில் வைத்துக்கொள்ள விரும்பாமல் மறந்து விட்டாள். ஒரு வழமைக்கென அவளை திருவிழாக்களின் முதல்நாளில் “தானானே தானானானே தனனானே தானானே. முளைப்பாரி நான் சுமந்து முல்லையாத்துல நிற்கிறேன்” எனப் பாடவைத்து குமருகளாகப் போகும் குமரிகளைக் காலில் விழவைத்தனர். பெற்ற தாயுக்கும் படைத்தவனுக்கும் கூடத் தெரியாது பூப்பெய்வது.

பட்டு கண்ணால் மட்டும் கண்டு சொல்லிவிடுவாள். குமரிகளைப் பார்த்தவுடன் இந்தப்பொழுதில், இந்த நாளில் என்று. குமரிகளின் சந்தேகங்களை ஊரில் அவளை விட்டால் யாரும் தீர்த்து வைக்கவே முடியாது. மூன்று நான்கு பிள்ளைகளைப் பெற்றவள்கூட மறந்து போயிருப்பாள் மருந்துகளை. பட்டு நினைவில் வைத்து நடமாடிக் கொண்டிருப்பது குழந்தைகளையும் குமரிகளையும்தானே.

ஊரிலிருந்து யாரும் அவளைத் தேடி வந்தது கிடையாது. என்றாவது கேதம் சொல்ல வருபவன் அவள் இல்லத்தைக் கடந்துபோகும் முன் வேப்பமரத்தின் நிழலில் அமர்ந்து கொண்டு தாகம் தீர்க்கவென நீர் வாங்கி அருந்தி விட்டுச் செல்வான். சென்றமுறை வரும்போது வைத்து விட்டுச்சென்ற வேப்பமுத்துக்கள் அதே இடங்களில் வைத்து இப்போதும் யாரும் எடுக்காமல் இருப்பதைக் கண்டு மேலும் சில வேப்பமுத்துக்களை வேறு இடங்களில் வைத்துவிட்டுச் செல்வான். பட்டு அவனுக்கு நீர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு வீட்டிற்குள் சென்று விடுவாள். அவளிடம் பேசுவதற்கு ஆண்களுக்கு தயக்கமாகவே இருந்தது. தயக்கமில்லாத ஆண்களென யாரேனும் இருக்கிறார்களா என்று அவளுக்குத் தெரியாது. தனக்கு குமரியாகும் பாக்கியம் இல்லையென இரிஷிப் பெண்ணாகவே வாழ்ந்து இறந்து போகப்போகிறோமென தெரிந்துகொண்ட நாளில் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாமென வேண்டினான்.

பிரித்து வைக்கமுடியாத நிழலைப் போன்ற துக்கத்துடன் தானிருக்கும்போது பலராமன் எதைப் பொருட்டாகக் கொண்டு தன்னைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறான் என விலகிக்கொண்டாள். பலராமன் அவளின் அழகிலும் அவளது துக்கத்திலும் தவித்து நின்றான். அவனால் மேலும் சிலநாட்கள் மட்டுமே ஊரில் இருக்க முடிந்தது. அவளைப்பார்த்துக் கொண்டே இருக்க முடியாமல் மிலிட்டரிக்குச் சென்று சேர்ந்துவிட்டான். பட்டுவின் மேல் ஆசைகொண்டவர்கள் பலரும் அவனைப் போல ஊரைவிட்டு மிலிட்டரிக்குச் சென்று விட்டார்கள்.

பட்டு வெள்ளிக்கிழமைதோறும் இறந்த தனது தாயின் நினைவாக வீட்டில் விளக்கேற்றி சாமி கும்பிட்டாள். பட்டுவின் அம்மா அவள் மீது பிரியமாக இருந்தாள். அவளுடன் சேர்ந்து தான் ஆற்றுக்கு நீரை எடுக்கவும் துணிகளைத் துவைத்துக்கொண்டு வரவுமெனப் போவாள். ஆற்றில் குளிக்கவும் துவைக்கவும் அவளைப் பழக்கம் செய்தது அவளது அம்மாதான். ஆற்றின் கரைகளில் உயர்ந்து வளர்ந்திருந்த செம்பருத்தியும் ஆவாரம் பூக்களும் இன்றும் பூத்தபடிதான் இருந்தன. அம்மாவுடன் சென்ற அன்றைய தினம் வற்றிய நீரோடு காய்ந்த மணலோடு கிடந்தது ஆறு. ஆற்றில் இறங்கி நடந்தார்கள். மணலில் நடப்பதற்கு பட்டுவிற்கு பழக்கம் இல்லை. மேலே காய்ந்து சூடேறியிருந்த மணலில் காலை வைத்ததும் உள்ளே இருந்த தண்ணீர் காலில் ஒட்டிக் கொண்டது. நடந்தபடியே நீர் ஓடிக்கிடக்கும் இடத்திற்குச் சென்றார்கள். இரண்டு மூன்று குடும்பங்கள் அழுக்குத் துணிகளைக் கொண்டு வந்து துவைத்துக் கொண்டிருந்தார்கள்.

அங்கிருந்த பிள்ளைகள் எல்லோரும் மணலில் விளையாடியபடி இருந்தனர். பட்டு விளையாடாமல் அவளது அம்மாவுடன் இருந்தாள். துணி துவைத்துக் கொண்டிருப்பதையே பார்த்துக் கொண்டிருந்தாள். வெயில் ஏறியபடி இருந்தது. துவைத்துக் கொண்டிருந்தவர்கள் துவைத்த துணிகளைக் காயப்போட்டுக் கொண்டிருந்தனர். பட்டுவின் அம்மா துணி துவைப்பதில் ஆர்வமாக இருந்தாள். மணலின் வெப்பமும் சூடேறிவரும் வெயிலும் ஈரமான நீருக்கு ஏதுவாக இருந்தது. பட்டுவிற்குப் பசியெடுக்கத் தொடங்கியது. விளையாடிக் கொண்டிருந்தப் பிள்ளைகள் ஊற்றுநீர் வரும் காலம் இதுவல்ல என்றும் அப்படியே நீர் வேண்டுமென்றால் பிரயாசைப்பட்டு ஆழமாகக்குழி தோண்ட வேண்டுமெனவும் இல்லையென்றால் ஆற்றின் பாதையிலேயே ஏதாவது வேறு இடத்தில் தோண்டினால் வருமென்றும் அப்படி பெருகிவரும் நீர் குடிப்பதற்கு சுவையாக இருக்குமெனப் பேசிக்கொண்டார்கள்.

பட்டு நீர் பருகவென தான் இருந்த இடத்திலேயே குழி தோண்ட ஆரம்பித்தாள். உள்ளங்கையளவு அகலத்தில் அவள் தோண்ட ஆரம்பித்த இடத்தில் மணலும் நீருமாக சொதசொதத்து இருந்தது. உள்ளங்கை மணிக்கட்டுவரை நுழையும்படி ஆழமாகத் தோண்டிய போது பட்டுவின் நகக்கண்களும் விரல்களும் வலி காணத் தொடங்கின. குறுமணல்கள் சில நகங்களினுள் நுழைந்துவிட்டன. இனி ஊற்றெடுக்காது என முடிவு செய்தவளாக ஓடிக் கொண்டிருக்கும் நீரில் கைகளைக் கழுவப் போனாள். பட்டுவின் அம்மா அவளை மேலும் தோண்டச் சொன்னாள். பட்டுத் தனக்கு கை வலிக்கிறது நீ வேண்டுமானால் தோண்டி நீர் குடி என வலியால் சொன்னாள். பட்டுவின் அம்மா துவைத்துக் கொண்டிருப்பதை விட்டு ஊற்றுநீர் குடிக்கும் தாகத்தில் அவளருகே வந்தாள். பட்டுவின் அம்மா அவள் தோண்டிப் பாதியிலேயே விட்ட இடத்தில் மேலும் தோண்ட ஆரம்பித்தாள்.

ஊற்றுநீர் குமிழ் விட ஆரம்பித்தது. அது பெருகிப்பெருகி குழி நிறைந்துவந்தது. பட்டுவை அழைத்து தனது முந்தானையால் நீரின்மேல் படர்த்திக் குடிக்கச் சொன்னாள். பட்டு ஆர்வமாக நீரை மண்டியிட்டுக் குடித்தாள். நீர் சுவையோடு இருப்பதாக உதட்டை துடைத்துக் கொண்டே சொன்னாள். அவளது அம்மாவும் பட்டுவைப் போல குனிந்து நீரைக் குடித்தாள். அதற்குப் பிறகு அவர் கள் என்றுமே ஆற்றுக்குச் சென்றது இல்லை. வேட்டைக் கருப்பன் நிற்கும் ஆற்றங்கரையோரம் சடங்காகாமல் இருக்கும் பிள்ளைகள் போகக்கூடாது என சொல்லி விட்டார்கள். பட்டின் கனவில்கூட ஆறும் குமிழ் உடையும் ஊற்றும் அதற்குப்பிறகு வந்ததே இல்லை.

பட்டு இந்த வெள்ளிக்கிழமை விளக்குப் பொருத்திக் கொண்டிருந்தபோது ஊரிலிருந்து சின்னவன் வந்தான். அவன் வந்து நின்ற வேகமும் முகத்தில் தெரிந்த படபடப்பும் பட்டுவிற்கு சந்தேகமாக இருந்தது. ரங்கநாயகி ஆளாயிட்டாள் என்றுதான் நினைத்தாள். நினைத்ததோடு கேட்டும் விட்டாள். சின்னவன் தன் அக்காள் கேட்டதும் அழத் தொடங்கிவிட்டான். அவனை சமாதானப்படுத்தவும் நிதானப்படுத்தவும் அமரச்செய்து தாகம் தீர்க்கவென நீர் தந்தாள். அவனது அழுகை நின்று விசும்பலாக மாறத் தொடங்கி இருந்தது. சின்னவன் தண்ணீரைக் குடித்தான். தனது பூர்வீக ஊரின் சுவை இப்போதும் இருப்பதை அறிந்தான். பட்டுவின் வீட்டிற்கு இரண்டு பெண்கள் பழைய சேலை ஒன்றை கொண்டு வந்தார்கள். சின்ன வனைப் பார்த்ததும் “எப்பண்ணே வந்தே” என்று கேட்டார்கள். அவன் பதில் சொல்லிவிட்டு ஊரிலிருந்து வாங்கிக்கொண்டு வந்த இனிப்பு மிக்ஸரை வைத்து விட்டு வாசல் பக்கமாக உள்ள வேப்பமரத்திற்கு வந்தான்.

பெண்கள் இருவரும் அவன் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்து கொண்டார்கள். பட்டு அவர்களின் கையிலிருந்த சேலையையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆளாகாமல் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கும் பிள்ளைகளுக்கென்று பட்டுவிடம் அவளது சேலை ஒன்றை வாங்கிப் போய் கட்டிவிட்டு ஒரு இரவு முழு வதும் கட்டிய சேலையுடன் படுத்துறங்கினால் ஆளாகி விடும் பொழுது கூடிவருமென நம்பியிருந்தனர் ஊர் பெண்கள். நேற்று முன் பட்டுவிடமிருந்து சேலை ஒன்றை வாங்கிச் சென்ற பெண்களில் ஒருத்தியின் மகளுக்கு வயது கூடிக்கொண்டே போனது. அவள் வயதுப் பிள்ளைகள் ஆளாகிவிட்டார்கள் என்ற கவலையில் பட்டுவிடம் சேலை வாங்கவென வந்தாள்.

அவர்கள் சென்றதும் தனது சகோதரன் அமர்ந்திருந்த மரத்தின் நிழலுக்கு வந்தாள். “ஏவாரம் நல்லா நடக்குதாடா” என்று கேட்டாள். “நடக்குது அக்கா” என்று சொல்லியவன் தனது சிவப்பேறிய கண்களால் அவளை நிமிர்ந்து பார்த்தான். பட்டுவின் தலைமுடி நரைத்துப் போயிருந்தது. சகோதரியின் முகச்சாயலில் இருக்கும் தனது மகள் ரங்கநாயகியின் நினைவில் சின்னவன் இருந் தான். ரங்காவுக்கும் பட்டுவுக்கும் ஒரேமாதிரியான பதார்த்தங்கள் தின்பதற்குப் பிடித்திருந்தன. அவர்களுக்குக் கலர்பூந்தி கலந்திருக்கும் மிக்சர் பிடித்திருந்தது. ரங்கநாயகி ஏழாவது முடித்து எட்டாவது படித்துக் கொண்டிருந்தாள்.
கால்பரிட்சை கூட முடிந்துவிட்டது. ஊரில் ரங்குவை அவளது தெருவிலுள்ளவர்கள் ஏழாவது முழுப்பரிட்சை லீவிலேயே ஆளாகிவிடுவாள் என காத்திருந்தனர். அவளுக்கு அடுத்துதான் முத்துமாரி சடங்காவாள் என்று பேசிக்கொண்டனர். இரண்டு பேருமே ஏழாவது முழுப்பரிட்சை லீவில் பூப்பெய்தவில்லை.

ஆனால் எட்டாம் வகுப்பு சேர்ந்தவுடன் முத்து ஆளாகிவிட்டாள். முத்துமாரியின் தொடைகள் நனைய வயிற்றுவலியோடு வீடு திரும்பிய ஒரு பிற்பகல் நேரம் தெருவிலுள்ளவர்கள் அவளை கண்டுகொண்டனர். முத்துமாரியும் ரங்கநாயகியும் ஜீவா டீச்சரிடம்தான் படித்தார்கள். ரங்குவை முத்துமாரி முந்திக்கொண்டதை அவர்கள் அன்று பேசினார்கள். முத்துமாரியின் அம்மா ரகசியமாக யாரோ ஒரு இரிஷிப் பெண்ணிடம் சென்று அவளது சேலையை வாங்கிக் கொண்டு வந்ததாகவும் ஒரு இரவு முழுக்க முத்துமாரி அதனை யாருக்கும் தெரியாமல் கட்டிக்கொண்டு உறங்கியதாகவும் அதன் பிறகுதான் அவள் சடங்காகி உட்கார்ந்தாள் என தெருவில் பேசினார்கள். ரங்குவின் அம்மாவுக்கு முன்னிருந்த பயமும் வேதனையும் கூடிவிட்டது. தன் கணவனின் வீட்டில் ஒரு பெண் பூப்பெய்யாமல் இரிஷிப்பெண்ணாக அவர்களது வாழ்நாளில் இருந்து வருவதுபோல தன் மகளும் இருந்து விடுவாளோ என்று பயந்தவளாக இரவு முழுதும் உறங்காமல் இருந்தாள்.

அவள் தனது கணவனிடம் ரங்குவிடம் ஏதேனும் கனவுகள் தோன்றியதா எனக் கேட்டுக்கொண்டே இருந்தாள் கடந்த ஒருவாரமாக. லாட்டரி சீட்டுகளை விற்றுவிட்டு குதிங்கால் வலியோடும் மூத்தரக்கடுப்போடும் வீடு திரும்புபவன் கனவு வருமென நினைத்து உறங்குவதில்லை. கனவுகளுக்கென அவள் சில பலன்களை தெரிந்து வைத்திருந்தாள். ரங்கநாயகிக்கும் அவளது அம்மாவுக்கும் அன்றைய இரவில் உறக்கம் கொள்ளவே முடியவில்லை. அம்மாவுக்கும் மகளுக்கும் பயமும் ஆர்வமும் கூடிவிட்டது. ரங்குவின் ஆர்வமும் பயமும் அவளை நிம்மதி கொள்ளச் செய்யவில்லை. அவள் தன்னை சோதித்தவளாகவே இருந்தாள். முத்துமாரியிடம் அவள் பேசும்போதும் அவளைக் கவனித்த வளாகவே இருந்தாள்.

கனவுகளில் பழைய துணியோ வீடோ தீப்பற்றி எரிந்தால் அக்கனவைக் காண்பவர்களின் வீடுகளில் யாரேனும் பிள்ளைகள் பூப்பெய்து விடுவார்களென நம்பியிருந்தாள் ரங்குவின் அம்மா. அடுப்பின் முன்னமர்ந்து கொண்டு அவள் அக்கனவைப் பற்றியேதான் யோசித்துக் கொண்டிருந்தாள். தன் கணவனை அனுப்பி பட்டுவிடம் சேலை வாங்கி வர முடிவுசெய்தவளாக அவனை அனுப்பிய போது அவள் மனம் சமாதானம் கொள்ள முடிந்தது. வீட்டிற்கு வந்து அவளிடம் சேலையை கேட்டபோது பட்டுவும் வேதனை கொண்டவளாகவும் தன்னைப் போலவே தனது சகோதரனின் பிள்ளையும் இருந்துவிட தலையில் எழுதியிருந்தால் என்ன செய்வது என வேதனையை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருந்தாள். அவளது துக்கம் அவளுடன் நிழலைப்போல இருக்கிறது. தன்னை இன்னமும் உதாரணங்கொண்டு பேசுபவர்களில் தனது சகோதரனின் குடும்பமும் ஒன்றாகிப் போனது இன்னமும் வேதனையானது அவளுக்கு.

அன்று அவள் பெரிய அவரையையும் சின்ன வெங்காயத் தினையும் முழுசாகப் போட்டு சாம்பார் வைத்திருந்தாள். சின்னவன் விரும்பிச் சாப்பிடும் எதுவும் இன்று இல்லையென்ற போதிலும் அவள் பசிக்கென உண்டு பின் உறங்கி எழுந்தாள். அவன் ஊருக்குப் போகும்போது அவள் தனது சேலைகளில் ஒன்றை அவன் கேட்காமலேயே தந்து அனுப்பினாள். அவன் வாங்கிக்கொண்டு அந்த ஊரில் பேருந்து நிற்குமிடத்தற்கு நடந்தான். அந்த சேலையில் சலவை செய்த வாசனையும் நிறைய்ய பூக்களும் இருந்தன. பட்டுவிற்கு அன்றிரவு கனவு வந்தது. தினந்தோறும் வரும் கனவுதான். தன்னிடம் சேலையினை வாங்கிச் செல்பவர்கள் சேலையுடன் கனவையும் வாங்கிக் கொண்டுச் சென்று கனவு கண்டுத் திரும்ப வருகிறார்களென நினைத்தாள்.

சேலை கொண்டுவரும் சிலநேரங்களில் வாசனைகூட அவர்களில் யாரிடமேனும் கசிந்து கொண்டிருப்பதை நுகர்ந்திருக்கிறாள். காலங்களில் பூப்பெய்திடும் பெண்கூட பூப்பெய்திட்ட பின் பட்டுவின் சேலையை உடுத்திக்கொள்ள ஏனோ ஆசைப்படுகிறாள். சேலை உடுத்திக்கொண்ட சகோதரனின் மகளும் இன்று இரவு காணப்போகும் கனவும் தனக்குள் இரவுதோறும் நிகழ்ந்து கொண்டிருக்கும் கனவும் ஒன்று என நினைத்தவளாக இருந்தாள் பட்டு.

சின்னவன் ஊருக்கு வந்து சேர்ந்தபோது ரங்கநாயகி வேகவைத்த கப்பங்கிழங்கை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவன் யாருக்கும் தெரியாமல் தான் கொண்டு வந்த பட்டுவினுடையப் புடவையிருந்த மஞ்சள்பையை மனைவியிடம் தந்தான். அவள் புடவையிலிருந்த பெரியப் பூக்களைப் பார்த்து ஆச்சரியம் கொண்டவளாக மரப்பெட்டியில் வைத்துப் பூட்டினாள். சேலையிலிருந்து பூக்களெல்லாம் உதிர்ந்துவிடக் கூடாதென்ற பந்தோபஸ்து அவளிடம் இருந்தது. சேலையை அப்படியே ஏந்தலாக கைப்பிள்ளையை வாங்கிக்கொள்வதுபோல வாங்கிக் கொண்டதும் மரப்பெட்டியில் வைத்ததும் சின்னவனுக்கு எரிச்சல் தந்தது. பழைய சேலை தானே அதற்கு ஏன் இப்படி பதட்டம் கொள்கிறாளென. அவனும் ரங்குவுடன் சேர்ந்து கப்பங்கிழங்கை சாப்பிட்டான்.

ரங்கு தன் அப்பாவிடம் இரட்டை வாய்க்காலுக்கு இந்த விடுமுறையிலாவது தன்னை அழைத்துக் கொண்டுப் போக வேண்டுமெனக் கேட்டாள். சின்னவன் இன்றும் வியாபாரத்திற்கு போகவில்லை. நாளைக்கும் போகவில்லையென்றால் யாரிடமாவது கடன் வாங்க வேண்டியதுதான் என நினைத்தவனாக “யாராவது துணி துவைக்க போகும்போது நீயும் கூடப் போ” எனச் சொன்னான். அவள் சரி என்று வீட்டினுள்ளிருந்த தனது அம்மாவை பார்த்துக்கொண்டாள்.

இன்று செவ்வாய்கிழமையாக இருக்கிறது. செவ்வாயும் வெள்ளியும் தெய்வத்திற்கு உகந்தநாளென பட்டுவிடம் வாங்கிக்கொண்டு வந்த சேலையை வீட்டில் உள்ளறையில் வைத்துக் கட்டிவிட்டாள். வீட்டின் உள்ளறை வெளிச்சத்தில் ரங்கநாயகியைப் பார்ப்பதற்கு குள்ளமாக இருந்தபோதிலும் அழகாகயிருந்தாள். ரங்கு அம்மாவின் அருகாமையில் படுத்துக்கொண்டாள். அன்றைய இரவு தாயும் மகளும் அருகருகே படுத்துக் கொண்டவர்களாகத் தூங்கினார்கள். பட்டுவின் சேலையிலிருந்தப் பூக்களெல்லாம் பார்த்தபடி இருந்தாள் ரங்குவின் அம்மா.

முத்துமாரிக்கு செய்து தந்த அரிசிப்புட்டும் வாழைப்பழமும் தின்பதற்கென ரங்குவுக்குத் தந்தது இன்னமும் தட்டிலிருந்தது. பச்சைவாழை வாசமும் நல்லெண்ணையில் ஊறிய அரிசிப்புட்டின் வாசமும் வீடு நிறைந்திருந்தது. ரங்கநாயகி காலையில் சாப்பிட்டுக் கொள்ளலாமென எடுத்து வைத்திருந்தாள். காலையில் இரட்டை வாய்க்காலுக்குப் போனால் ஆற்றின்கரையில் அமர்ந்துகொண்டு சாப்பிடலாமென ஆசைகொண்டாள். அவள் அப்படியே உறங்கிவிட்டாள்.

ஒருமலர் மொக்கவிழ்கிறது. மெல்ல மெல்ல அதன் இதழ் விரிகிறது. அதன் வாசனையில் தனக்கு மயக்கம் வருவதைப் போன்று உணர்ந்தாள் ரங்குவின் அம்மா. ஒரு மலர் என்பது இரண்டாகப் பிறகு எண்ணற்றப் பூக்களாக அவள் பார்க்கும் இடமெல்லாம் பூத்து நிற்கிறது. தன் வீட்டில் தான் இத்தனை பூக்களா என அவள் சுற்றும் முற்றும் பார்க்கிறாள். அவள் தான் நிற்குமிடம் எதுவென்றுத் தெரியாமல் இருக்கிறாள். பிறகு அது ஒரு ஆற்றங்கரை என முடிவு செய்தாள்.

முத்துமாரி தந்த அரிசிப்புட்டை எடுத்துக்கொண்டு வராமல் போனதற்கென வருந்தியவளாக வீட்டிற்குச் சென்றுத் திரும்பலாமா என யோசிக்கிறாள் ரங்கநாயகி. அவளது அம்மா பூக்களை பறித்துக் கொள்ளலாமா என ரங்குவிடம் கேட்கிறாள். அவள் ஏற்கனவே பறித்து வைத்திருந்த பூக்களையெல்லாம் காட்டினாள். இத்தனை பூக்களும் எங்கிருந்தன என்று ரங்குவிடம் அவளது அம்மா கேட்டாள். அவளுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.

கனவை நினைத்துக்கொண்டே தான் காலையில் எழுந்தார்கள் அம்மாவும் பிள்ளையும். ரங்கநாயகியைப் பார்ப்பதற்கு மாரி காலையிலேயே வந்திருந்தாள். ரங்குவின்கண்களில் மலர்ந்திருந்தப் பூக்களைப் போன்ற அந்தக் கனவை மாரி கண்டுகொண்டாள். தனக்கும் தினந்தோறும் விடியும்போது கண்களில் நேற்றைய இரவு கண்ட கனவு ஒட்டியிருப்பதுபோல உணர்வாள் கண்ணாடியில் முகம் காணும்போது. பிறகு வெட்கத்துடன் தான் தலைகுனிந்தபடி நடப்பாள். ரங்குவுக்கும் அப்படி கண்கள் ஒளிர்ந்ததைப் பார்த்ததும் இருவரும் வெட்கம் கொண்டு தலைகவிழ்த்திக் கொண்டனர். வெட்கத்தில் யாரும் யாருடனும் பேசிக்கொள்வதே கிடையாது போல.

ரங்கு அன்று முழுக்க வெட்கத்துடனேயே இருந்தாள். ஏன் தனக்கு யாரைப் பார்த்தாலும் வெட்கம் வெட்கமாக வருகிறது. முன்புபோல இருக்க முடியவில்லை என மாரியிடம் கேட்டாள். அவளுக்கும் அந்த சந்தேகம் எப்போதிருந்தோ இருந்தது. அவளும் தனக்கும் வெட்கம் எப்போது பார்த்தாலும் இருந்துகொண்டு இருக்கிறது. தூங்கினால்கூட என்னிடமிருந்து செல்ல மறுக்கிறது என்றாள். அவர்கள் வெட்கத்தைப் பற்றி மேலும் ஒன்றும் பேசாத வர்களாக விளையாடத் தொடங்கினார்கள். அரிசிப் புட்டில் சிகப்பு எறும்புகள் சேர்ந்துவிட்டன.

வெயிலில் வைத்தால் எறும்புகள் போய்விடுமென ரங்குவின் அம்மா புட்டு இருக்கும் தட்டை கொண்டு வந்து வைத்தாள். ரங்குவை அவளது அம்மாவும் அவள் ரங்குவையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டார்கள். இருவரும் மலர்ந் திருந்த பூக்கள் வரும் அந்தக் கனவை நினைத்துக் கொண்டார்கள். கனவுகளை பகல்பொழுதில் நினைத்துக் கொள்வது வெட்கத்துடன் கூடிய சந்தோசம் போல. அவளது அம்மாவும் வெட்கத்துடனேயே வீட்டிற்குள் சென்றாள். வீட்டின் உள்அறையில் ரங்குவின் அம்மா பட்டுவிடமிருந்து வாங்கிய சேலையை உதறி மடித்து மரப்பெட்டியில் வைக்கத் திறந்தபோது இரண்டு பூக்கள் இலையுடன் இருந்ததைக் கண்டு ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டு நின்றாள்.

அதே போன்ற பூக்களைத் தான் அவள் நேற்று இரவு கனவில் ரங்குவிடம் பறித்துக் கொள்ளலாமா என கேட்டிருந்தாள். பூக்களை கையில் எடுக்க நினைத்தபோது அவள் அறியாமலேயே தான் ஆற்றங்கரையில் நிற்பது போலவும் வீட்டினுள் ஆறு சப்தத்துடன் ஓடிக்கொண்டிருப்பது போலவும் உணர்ந் தாள். கண் மூடித்திறப்பதற்குள்தான். பிறகு வீட்டின் வெக்கையும் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த தனது மகளின் குரலும் அவளை மீட்டது. பூக்களை எடுக்காமல் மரப்பெட்டியில் சேலையை வைத்துவிட்டு மூடிவிட்டாள். அதன் பிறகு அவள் என்றும் திறந்து சேலையை எடுக்கவே இல்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com