Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி - மார்ச் 2007
உத்திரபிரதேசத்தின் தலித் அரசியல்

சொ. பிரபாகரன்

வர்ணம், சாதியம் என்பவை பல்லாயிரமாண்டுகளாக இந்தியாவைப் பிடித்தாட்டும் பிற்போக்கான கோட்பாடுகளாகும். உலகிலேயே இந்தியாவில் மட்டுமே இந்தப் பிற்போக்குத்தனம் சாபமென ஒட்டிக்கொண்டு, நம்மை முழுவீச்சுடன் வளரவிடாமல் முட்டுக் கட்டைப் போட்டுக் கொண்டுள்ளது. இந்து மதமும், வேதமும் இந்தச் சாதிய,வர்ணமுறையைப் புனிதப்படுத்துவதினால்,அதற்கு எப்போதும் ஒரு சமூக அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது. சாதிய அடுக்குமுறையில் கீழ் தட்டில் இருக்கும் அடிப்படை பாட்டாளிகளான தலித்கள் போல், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் நசுக்கப்பட்ட மக்களை உலக சரித்திரத்தில் எங்கும் காண முடியாது. இதிலிருந்து மீண்டு அதிகாரத்தைப் பெறுவதற்கான தலித் அரசியலுக்கு உத்திரபிரதேசம் முன்மாதிரியாக இருக்கமுடியுமா?

உ.பி.யில் தற்போதைய தலித் அரசியலைப் புரிந்து கொள்ள, சுருக்கமாகவேனும் நமக்கு தெரிந்திருக்க வேண்டியவை:
1.சுதந்திரத்திற்குப் பின்னான உ.பி. தலித் அரசியல் வரலாறு 2. உ.பி.யின் சாதிவாரி மக்கள் பிரிவுகள்.

சுதந்திரத்திற்குப் பின்னான உ.பி. தலித் அரசியல் வரலாறு:
தலித்கள் காங்கிரசின் வலுவான ஆதரவாளர்களாகவே இருந்தனர். தமக்கு விடுதலையை,பொருளாதார மேம்பாட்டை,சுதந்திரப் போராட்டத்தில் முன்னணிப் பாத்திரம் வகித்த காங்கிரஸ்தான் பெற்றுத்தர முடியும் என நம்பினர். நேரு தலைமையிலான காங்கிரசின் சோசலிசம் என்ற முழக்கம் அவர்களைப் பெரிதும் ஈர்த்தது; இடதுசாரிகளுக்கும் தலித்களிடம் ஆதரவு இருந்தது. உ.பி.யில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை இடதுசாரி சட்டசபை உறுப்பினர்கள் தலித்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் அரசியல் அதிகாரத்தைப் பெறாமல் இடதுசாரிகளால் தங்களுக்கு எதுவும் செய்ய முடியாது என்பதையும், இடதுசாரிகள் உ.பி.யில் அதிகாரத்தைப் பிடிப்பதற்கு சமீபத்தில் வாய்ப்பில்லை என்பதையும் உணர்ந்த பின்னர்,தலித்கள் தமது பெரு வாரியான ஆதரவை இடதுசாரிகளுக்குத் தரவில்லை.

சுதந்திரத்திற்குப் பிறகான வடஇந்தியாவில் தலித் அரசியல் இருவிதமான அம்சங்களைப் பிரதிபலித்தன. (அ)அம்பேத்கர் சித்தாந்தவாதிகளின் எழுச்சி: ஆரம்பத்தில் வந்த அம்பேத்கர் சித்தாந்த ஆதரவாளர்கள், கல்வியும், கிளர்ந்து எழுதலும்தான் தம் இனத்தை முன்னோக்கி வளர்க்கும் என்று கருதினர். அப்படி கிளர்ந்தெழுந்தவர்கள் சிறந்த தலித் இலக்கியங்களை வளர்த்தெடுத்தார்கள். அவர்களது குரல்கள் தலித்தின் ஆன்மாவாக ஒலித்தன; பெரும் கலகக்காரர்களாய் இருந்தனர்; தத்துவார்த்தரீதியில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தினர்.
இருந்தாலும்,அரசியல்ரீதியில் இம்மாதிரியான நடவடிக்கை பெரும் பயனை விளைவிக்கவில்லை. மராட்டியத்தில் தலித் சிறுத்தைகள் ஏற்படுத்திய அளவுக்குக் கூட உ.பி.யில் கலாச்சார பாதிப்புகளை ஏற்படுத்த முடியவில்லை. உ.பி. வலுவான நிலபிரபுத்துவ கலாச்சாரத்தைத் தக்கவைத்துக் கொண்டதாலும், முதலாளித்துவ கலாச்சாரம் வலுவாக உ.பி.யில் வளராததும் தான் இதற்குக் காரணம். இருந்தாலும் இந்த படித்த,அறிவுஜீவி தலித்களிடம் இருந்து உ.பி.க்கேயான ஒரு இரசாயன மாறுதல் வேறுவிதமாக கன்ஷிராம் மூலம் தோன்றியது.

(ஆ) மேல்சாதி கட்சிகளின் பாதுகாப்புக் குடைக்குள் பத்திரமாய் அடைந்து கொள்வது: ஜெகஜீவன்ராம்தான் இந்தவகையில் பெரும் அறுவடை செய்தார்; மத்தியில் பலவருடங்களாக முக்கிய இலாகாவான பாதுகாப்பை கையில் வைத்துக்கொண்டு, தொடர்ந்து தலித்கள் காங்கிரசுக்கு விசுவாசமாக இருக்கும்படி பார்த்துக்கொண்டார். இப்போது ஷிண்டே, வீரப்ப மொய்லி, பாரதிய ஜனதா பங்காருவையும் இப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். ஷிண்டேயோ, வீரப்ப மொய்லியோ, கே.ஆர்.நாராயணனைப் போல மற்றுமொரு தலித் குடியரசுத் தலைவராய் வரக்கூடிய வாய்ப்புகளுடன் இருக்கிறார்கள். ஆனால் இந்தவகை அரசு அதிகாரம் ஆளும் வர்க்கத்தைத் தாங்குவதாய் இருந்ததேயொழிய தலித் மேம்பாட்டுக்கு உதவுவதாக இல்லை; தலித்களுக்கு அவ்வப்போது அறிவிக்கப்படும் சில்லறைச் சலுகைகள் கூட உ.பி. தலித்களுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் யதார்த்தம்.

கன்ஷிராமும்,அவர் உ.பி. தலித் அரசியலுக்காற்றிய பங்களிப்பும்: இக்காலகட்டத்தில்தான், பஞ்சாப் ஹோசியார்பூரில் பிறந்த, கன்ஷிராம் டெல்லியில் அறிவியல் அலுவலராய் பணிக்குச் சேர்கிறார். அம்பேத்கரின் படிப்பினைகளால் பெரிதும் கவரப்பட்டு, தலித்களைத் தமது சொந்தக்கால்களால் நிற்கவைக்க ஏதாவது செய்ய வேண்டும் என முயன்றார். அவர்தான் வேறு எந்த தலித் தலைவரையும்விட தலித்களின் அரசியல் சக்தியைக் குறித்து சரியான முடிவுக்கு வந்தவர் எனச் சொல்லலாம். முதலில் பின்தங்கிய, மற்றும் சிறுபான்மை மத்திய ஊழியர் பெடரேஷன் (Backwards and Minorities central Employees’ Federation - BAMCEF- பாம்செப்) எனும் அமைப்பை ஆரம்பித்தார். அதனுள்ளே தலித்கள்தான் பெருமளவில் வந்தனர். பாம்செப் நிதியுதவியும் ஊழியர் பலமும் தர,அவர்களது முதல் அரசியல் கட்சியான தலித் சோசித் சமாஜ் சங்கர்ஸ் சமிதி (Dalit Soshit Samaj Sangharsh Samiti-DS4) தொடங்கப்பட்டது. DS4 பஞ் சாபில் 1985 சட்ட சபை தேர்தலில் போட்டியிட்டு 4% வாக்குகளை வாங்கியது. DS4 தான் பின் பகுஜன் சமாஜ் கட்சியாக உருமாறுகிறது. அப்போது அவர் மராட்டியத்திலுள்ள தலித் சிறுத்தைகள் அமைப்பு போன்று செயல்பட்டால் போதாதென்றும்,தலித் சிறுத்தைகள் அமைப்பு மராட்டியத்தில் சிறப்பாக வர முடியாததற்கு காங்கிரஸ் கட்சியே காரணமென்றும்,ஆகவே முதலில் காங்கிரஸை களத்தில் வீழ்த்தி,அதன் தலித் வாக்குகளை வெல்லாமல் ஒன்றும் செய்ய முடியாதென்றும் கன்ஷிராம் கண்டுணர்ந்தார்.

உ.பி.யில் குண்டர் கலாச்சாரத்தின் துவக்கமும், காங்கிரஸ் வீழ்ச்சியும்: 1980 வரை, தேர்தலின்போது இலஞ்சம் கொடுத்து வாக்கு பெறும் முறைகேடுகள் உ.பி.யில் நடந்திருந்தாலும், பெரும் குண்டர் கலாச்சாரம் பரவவில்லை. சாதிய அரசியல்கூட முனைப்பாக இல்லை. இந்திரா தோற்று மறுபடியும் வெற்றி பெற்றபோது உருவாக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ்தான் உ.பி.யில் குண்டர் கலாச்சாரத்தை அரசியலில் நுழைத்தது.
இளைஞர் காங்கிரஸ் ஆதரவில்,சஞ்சய் காந்தி இந்திராவிற்குக் கூட சவால்விடும் அளவுக்குச் சென்றார்.

அப்போது காங்கிரஸின் உயர்சாதி வாக்குகளை அபகரித்துக் கொண்டு வளர்ந்த, பாரதீய ஜனதா ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ்.காரர்களை குண்டர் கலாச்சாரத்திற்குப் பயன்படுத்த முயன்று கொண்டிருந்தது. அப்போது எழுந்த மண்டல் அரசியலை கன்ஷிராமும் முலாயம்சிங் யாதவும் தத்தமது கட்சியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டனர். உயர்சாதியினரில் பெரும்பாலோர் காங்கிரஸிலிருந்து பாரதீய ஜனதா கட்சிக்கும், தலித்களில் பெரும்பாலோர் பகுஜன் சமாஜ்க்கும்,முஸ்லீம்களில் பெரும்பான்மையோர் பகுஜன் மற்றும் சமாஜ்வாதி கட்சி களுக்கும் போய்விட,காங்கிரஸ் அத்தனை ஆதரவுத் தளங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து தனது பழைய பொலிவை இழந்தது.

கன்ஷிராமும் மாயாவதியும்: கன்ஷிராம் சிறந்த ஒருங்கமைப்பாளர்;ஆனால் அவரால் படித்த தலித்கள் மத்தியில் மட்டுமே தொடர்பு வைத்துக்கொள்ள முடிந்தது. அவரது மேடைப்பேச்சு படுமோசமாகவும் தொடர் பற்றதாகவும் இருக்கும். அதை நிவர்த்திக்க அவருக்குக் கிடைத்த பொக்கிஷமே மாயாவதி. அப்போது தில்லிக்கு அருகிலுள்ள காஷியாபாத்தில் ஒரு பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்; தனது 20-30 வயதுகளில் இருந்த அவர்,அப்போதைய இளம் தலைமுறையைச் சார்ந்தவர். பொதுக்கூட்டங்களுக்கு முக்கியத்தலைவர்கள் வந்து சேரும்வரை மக்கள் கூட்டத்தைத் தக்க வைப்பதற்காக தற்காலிக பேச்சாளராக கட்சிக்குள் பேச ஆரம்பித்தவர்,சீக்கிரம் அவரே கட்சியின் பெரும்தலைவர்களில் ஒருவராகிவிட்டார்.

மாயாவதி 80-களில் உ.பி தேர்தலில் களமிறங்கிய போது,கடுமையாகத் தோற்றாலும், அந்தத் தேர்தல் களத்தைத் தலித்கள் குறித்த கருத்தைப் பரப்பு வதற்கான மேடையாகப் பயன்படுத்திக் கொண்டார். 1989-ல் வி.பி.சிங்கை எதிர்த்து அலகாபாத்தில் காங்கிரசுக்கு அடுத்தபடியாக மூன்றாம்நிலையில் கணிசமான ஓட்டை கன்ஷிராம் வாங்கியபோதுதான்,உ.பி.யில் தலித்களின் அரசியல் முக்கியத்துவம் வெளியே தெரியத் துவங்கியது. தலித்களின் பின்னும் ஒரு பெரும் அரசியல் அதிகாரம் இருப்பது உலகுக்குப் புரிய ஆரம்பித்தது.

2. உ.பி.யின் சாதிவாரி மக்கள் பிரிவுகள்: உ.பி மக்களை நான்கு பெருவாரியான தலைப்பின் கீழ் பிரிக்கலாம்.
1. பிற்படுத்தப்பட்டோர் (40-45%)
2. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் (21%)
3. உயர்சாதி இந்துக்கள் (16-19%)
4, முஸ்லீம்கள். (18-20%)

1. பிற்பட்டோரில் யாதவர்களே பெரும்பான்மையோர். உ.பி. மக்கள்தொகையில் யாதவர் 30-34%. யாதவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் சமாஜ்வாதி கட்சியின் அனு தாபிகள். பெரும்பான்மையினராய் இருப்பதினால், உருக்குப்போன்ற ஒற்றுமையைச் சாதியடிப்படையில் சமாஜ்வாதியினால் கட்ட முடியவில்லை என்பதுதான் யதார்த்தம். யாதவராகிய தற்போதைய உ.பி. முதல்வர் முலாயம்சிங் யாதவ், லோஹியா சோசலிசத்தால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்குள் வந்தவர்; பிற்பட்டோர் சாதிய அரசியலையும் லோஹியா சோசலிசத்தையும் கலந்து, ஒருவகையான அரசியலை உ.பி.களத்தில் செய்து கொண்டுள்ளார். இதுதவிர்த்து, பிற்பட்டோரில் முக்கியமானவர்கள் குர்மி, லோடி சமூகத்தவராவர். முன்னாள் முதல்வர் கல்யாண்சிங்கும், பாரதிய ஜனதாவில் இருந்து வெளியேற்றப்பட்ட உமாபாரதியும் லோடி சாதியினர்.

தாழ்த்தப்பட்ட,பழங்குடியினர் மொத்த ஜனத்தொகையில் 21%. இவர்களில் சுமார் 51% சமார் என்ற தாழ்த்தப்பட்டோர். தோல் பதனிடுவதே இவர்களுக்கான தொழிலாக இருந்துள்ளது. மாயாவதி இந்த சமார் சாதியினர் தான். சமாருக்கு அடுத்து பாஸி வலிமையான சாதியினர். ராம் விலாஸ் பாஸ்வான் இச்சமூகத்தைச் சார்ந்தவர். பொருளாதார,கலாச்சாரரீதியிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்திலேயே முன்னேற்றம் அடைந்தவராய் பாஸிகள் உள்ளனர். இவர்கள் இதற்கு முன்னர் நிலச்சுவான்தார் களுக்கு உடந்தையானவர்களாக இருந்துள்ளனர். பொதுவாக தாழ்த்தப்பட்டோரில் பெரும்பான்மையினர் உ.பி மொத்த மக்கள் தொகையில் சுமார் 15-16% மக்கள் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்குதான் வாக்களிக்கிறார்கள். ஆனால் சமார்களாலேயே தீண்டத்தகாதவராய் ஒதுக்கப்படும் சோன்கர், தானுக் (பிரசவம் பார்ப்பவர்கள்), வால்மீகி (துப்புரவு செய்பவர்கள்) போன்றோர் பகுஜன் சமாஜ் கட்சியிலுள்ள சமார் மேலாண்மைக்கு எதிர்நிலை எடுத்து,பாரதிய ஜனதா ஆதரவாளர்களாய் இருக்கிறார்கள்.

சோன்கர்கள் சில்லறை வியாபாரிகளாய் முன்னேறி தற்போது பொருளாதாரரீதியிலும் முன்னேறி உள்ளனர். வியாபாரம் பார்ப்பதால் தம்மை பனியாக்களுக்கு சமமாய் மதிக்கவேண்டும் என கோருகிறார்கள். அது தங்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் மூலேமே கிடைக்கும் என எண்ணுகின்றனர். பாரதிய ஜனதா தூண்டிவிடும் கலவரங்களில், சோன்கர் இளைஞர்களே முன்னிலை வகிப்பதாக ஒரு கருத்துண்டு. சமீபத்தில் முஸ்லிம்களுக்கும் சோன்கர்களுக்கும் லக்னோவில் அமீனாபாத்தில் நடந்த கலவரம் குறிப்பிடத்தக்கது. மேலும் சமாரின் மேலாண்மையை ஏற்றுக்கொள்ளாத டோபி (துணி சுத்தம் செய்பவர்கள்) போன்ற பல தாழ்த்தப்பட்ட சாதியினர் (மக்கள் தொகையில் 3-4% சதம் அளவுக்கேயான சிறுபான்மையினர்) எதிர்நிலை எடுப்பதால் இவர்களது வாக்கு தற்போது பாரதிய ஜனதாவுக்குச் செல்கிறது.

உ.பி மக்கள்தொகையில் 12-13% உள்ள பிராமணர்களை சேர்த்து உயர்சாதி இந்துக்கள் 16-19%. அதாவது உயர்சாதி இந்துக்களில் சுமார் 75% பிராமணர்களாய் இருப்பதால்,உயர்சாதி அரசியலைத் தீர்மானிப்பதில் அவர்களால் ஒரு திட்டவட்டமான பாத்திரத்தை வகிக்க முடிகிறது. இது தவிர்த்து பனியா,ஷத்திரியர்களான டாகூர் போன்றோர் உயர்சாதியினர் என்றாலும்,பனியாக்களின் தொகையே இவைகளில் அதிகம். உயர்சாதி இந்துக்கள் முதலில் காங்கிரஸ் அனுதாபிகளாகவும், தற்போது பாரதிய ஜனதாவின் அனுதாபிகளாகவும் பெரும்பாலும் உள்ளனர். முன்பு உயர்சாதியினராய் இருந்த ஜாட்டுகள் தற்போது தமது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி,அஜய்சிங் உதவியால், பிற்படுத்தப்பட்டோராய் மாறியுள்ளனர். இப்படி சில உயர்சாதிகள் இடஒதுக்கீட்டுப் பயனை அனுபவிப்பதற்காக,தம்மை பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி வெற்றியும் பெற்றுள்ளனர்.


உ.பி.மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 18-20%. இவர்களிலும் உயர்சாதி,தலித் என இருபிரிவினர் உள்ளனர். ஷியா,சன்னி என்ற அம்சத்தைவிட உயர்சாதி, தலித் முஸ்லிம் என்ற அம்சமே உ.பி. அரசியலில் முக்கிய அம்சமாக விளங்குவதாக அரசியல் வல்லுனர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

ஷேக், சையத், பத்தான்,வார்சி போன்ற உயர்சாதி முஸ்லிம்கள், ஷரிசாம் (முடிதிருத்துனர்),தர்ஷி (தையல்காரர்),ஷிலாகா (நெசவாளர்), ஷார்தோஷி போன்ற தாழ்த்தப்பட்ட தலித் முஸ்லிம்களுடன் எந்த பந்தமும் வைத்துக் கொள்வதில்லை; குறிப்பாக திருமண உறவு கண்டிப்பாக இருக்காது. உயர்சாதி முஸ்லிகள் சமாஜ்வாதிக்கும், தலித் முஸ்லிம்கள் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் ஆதரவாக இருந்தாலும்,பகுஜன் சமாஜ் தான் பெரும்பான்மையான முஸ்லிம் வாக்குகளைப் பெறுகிறது. முஸ்லிம் லீக் முஸ்லிம்களிடம் கலாச்சாரப் பணிகளை மட்டும்தான் செய்ய முடிகிறது;அது இன்னும் ஒரு அரசியல் கட்சியாக இங்கு பரிணமிக்கவில்லை. தங்களுக்கும் இடஒதுக்கீடு மூலம் பயன் தரவேண்டும் என்ற தலித் முஸ்லிம்களின் கோரிக்கையை பாரதிய ஜனதாவிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்க்கின்றனர்.

உ.பி.யில் எந்த தேர்தலிலும்,மொத்த வாக்குகளில் 25-27% வாக்குகளை பெறுகிறவர்களே வெற்றி பெறலாம் என்பதே நிலைமை. வழக்கமாய் 60% மக்களே வாக்களிக்கிறார்கள். ஏற்கனவே 15-16% வாக்குகள் வாங்கும் நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி உள்ளது. (அதுவும் அத்தனை தலித்களும் வந்து வாக்களித்தால்தான்..) இது தவிர்த்து முஸ்லீம் வாக்குகளில் கணிசமான பகுதி கிடைக்கும். அதையும் தவிர்த்து சில சதவீத வாக்குகளை மற்ற அணிகளிடமிருந்து பிரித்தால்தான் அதிகாரத்தை பகுஜன் சமாஜ் கைப்பற்ற முடியும்; அல்லது குறைந்த பட்சம் ஒரு ஸ்திரமற்ற அரசியல் நிலை ஏற்பட்டால் கூட போதும்,தலித்கள் தங்களது அரசியல் செல்வாக்கை அரசு அமைப்பதில் காட்டிவிட முடியும் என்பதுதான் வாய்ப்பாடு. இது தலித்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று சொல்லமுடியாது; சமாஜ்வாதி,பகுஜன் சமாஜ்,பாரதிய ஜனதா என்ற மூன்று அணிக்குமே பொருந்தும் ஒரு நிலையாகும். ஆகவே அடுத்த அணியிலிருந்து சில சதவீத வாக்குகளைப் பிரிப்பது அனைவருக்கும் மிகவும் அவசியமாகிறது.

தற்போது உ.பி.யின் நான்கு பெரும்பான்மையான அணிகளிலுமே மத,சாதிய மாச்சரியங்களுக்கு மசியாத மக்கள் இருக்கதான் செய்கிறார்கள்;அப்போதைய எரியும் பிரச்னைகளின் அடிப்படையிலான இப்படியானவர்களின் வாக்குகள்தான் எந்த அரசு அமையும் என்பதை தீர்மானிக்கின்றன. ஆகவே இப்பகுதியினரைக் கவரும் வண்ணம்,அனைவரும் இங்கே மத, சாதி சார்பற்ற ஒரு அரசியலை வெளிப்படையாக பேச வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகையால் யாரும் வெளிப்படையாக தம்சாதிக்கு வாக்கு கேட்பதில்லை.

அது மறைக்கப்பட்ட வேண்டுகோள்;அனைத்து மத,சாதிய கட்சிகளும்,ஒரு ஏமாற்று மதச்சார்பின்மையை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. உள்ளே சாதியடிப்படையிலும்,வெளியே மத,சாதிய சார்பின்மைபோலும் இருமுகம் தரித்து நடக்கும் இந்தத் தேர்தல் நாடகத்தில், எந்த அடையாளமும் இல்லாது போன காங்கிரஸ் உதிர்ந்து போனதில் எந்த ஆச்சரியமும் இல்லை; நேருவின் அடையாளத்தையும்,பழைய நீர்த்துப்போன சக்தியின் கொஞ்ச நஞ்சத்தையும் வைத்துக்கொண்டு சில இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெறமுடிகிறது. அதுவும் கொஞ்சங் கொஞ்சமாக காலியாகிக் கொண்டுதான் வருகிறது.

மாயாவதியின் அரசியல்: கன்ஷிராம், மாயாவதியின் அரசியல் என்பது பகுஜன் சமாஜ் கட்சியை பெருவாரியாக உ.பி.யில் வெற்றிபெறச் செய்ய முயல்வது; அல்லது தொடர்ந்து வேண்டுமென்றே அரசியல் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துவது. பகுஜன் தனது 20% ஆதரவு தளத்தை வைத்துக்கொண்டு,பெருவாரியாய் வெற்றி பெறுவதை உறுதி செய்யமுடியாது. உயர்சாதி இந்துக்களின் ஆதரவை வைத்துக்கொண்டு,பாரதிய ஜனதாவும் தனிப்பெரும் கட்சியாக உ.பி.யில் ஜெயிக்க முடியாது. ஆகவே எப்படியாவது யாரும் தனித்து ஆட்சியமைத்து விடாதபடி ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்க வேண்டும். தனித்து ஆட்சியமைக்க வாய்ப்புள்ள சமாஜ் வாதியை அதிக இடம் வெற்றி பெறாதவாறு தடுப்பதெப்படி என்பதே மாயாவதியின் அரசியல் உத்தியாகும்.

உ.பி. அரசியல் என்ற சீட்டு விளையாட்டில் தலித் சீட்டை சிறந்த துருப்பாக பயன்படுத்த,குறைந்தபட்சம் நிச்சய மற்ற அரசியல்தன்மை நிலவவேண்டும். பஞ்சாபில் தலித்கள் 29% இருந்தும், கன்ஷிராமினால் இப்படிப்பட்ட நிச்சயமற்றதன்மையை அங்கே உருவாக்க முடியவில்லை. ஆனால் உ.பி. யில் தலித்கள் 21% மட்டுமே இருந்தும் மாயாவதியால் இப்படிப்பட்ட நிச்சயமற்ற தன்மையை உருவாக்க முடிந்துள்ளது. அதுதான் மாயாவதி அரசியலின் மந்திரக் கண்ணியாகும்.

மாயாவதி தனது கட்சியின் நிதியையும்,வெற்றி பெறும் வாய்ப்பையும் பெருக்கச் செய்த தந்திரங்கள் கேள்விக்குரியன. பகுஜன் வெற்றி பெற வாய்ப்புள்ள இடங்களில் தங்கள் சின்னத்தில் நிற்க மற்ற சாதியினருக்கும் மாயாவதி வாய்ப்பளித்தார்;அது சாதிச்சார்பின்மை என்ற நோக்கத்தினால் அல்ல;அப்படி மற்ற சாதியினருக்குத் தரப்படும் இடங்களை ஏலம் விட்டு,அதிக விலை கொடுப்பவர்களுக்கே தரப்படுகிறது.
இதனால் பகுஜன் சார்பில் நிற்கும் அவ்வேட்பாளர் இக்கட்சியின் வழக்கமான ஓட்டுடன், தனது சொந்த சாதியின் ஓட்டையும் சேர்த்து வெற்றிபெற நிறைய வாய்ப்புகள் உள்ளவராக ஆகிறார்;




கூடுதலாக கட்சிக்கு நிதியும் கிடைக்கிறது; கட்சியின் தேர்தல் இயந்திரம் எந்த பளுவும் இன்றி எளிதாக ஓடுகிறது. ஒருவேளை ஜெயித்த வேறுசாதி வேட்பாளர் கட்சிக்குத் துரோகம் இழைக்க முயன்றால்,‘கட்சிதாவல் தடைச்சட்டத்தை’ப் பயன்படுத்தி, வெற்றி பெற்றதையே செல்லாததாக்க முடியும்; மறுபடியும் அச்சீட்டு ஏலத்துக்கு விடப்பட்டு மேலும் கட்சிக்கு நிதி கிடைக்க வழி செய்யப்படும். இது தலித் அரசியலுக்குச் சித்தாந்த ரீதியில் கறையாக படிந்துவிட்டது. அதிகாரத்தைப் பெற எதையும் விலையாய் கொடுக்கலாம் என்ற நிலையை உருவாக்கியது. பல மாபியா,குண்டர்களும் அரசியல் ஆதரவு வேண்டி இருப்பதால், மாயாவதி கட்சிக்கு வந்து ஏலத்தில் ஜெயித்து, சட்டசபை உறுப்பினர்களாக முயற்சித்தார்கள்.

இப்படி வெற்றிகரமாக செயல்பட்டு, மாயாவதி 3 முறை முதல்வராகிக் காட்டியுள்ளார். அப்போது அரசு இயந்திரத்தை தலித்களுக்கு சாதகமாய் பயன்படுத்தியதை மறுக்கமுடியாது. கிராம ஸபாவின் தரிசு நிலங்கள், நில மற்ற தலித்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. தலித் கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்க வகை செய்யப்பட்டது. கூடவே தலித்களுக்கு பாதுகாப்பும் கிடைக்க ஏற்பாடு செய்தார். இருப்பினும், மாயாவதிதான் விரும்பிய போது அரசை கவிழ்த்து மறுதேர்தலுக்கு முயலும்போது,அவர் ஏமாற்றத்தையே சந்திக்க வேண்டியிருந்தது. பணம் கொடுத்து சீட்டு வாங்கியவர்கள் மொத்தமாக அடுத்து அரசமைக்க வாய்ப்புள்ள அணிக்குத் தாவிவிடுகிறார்கள்.

மொத்தமாக தாவும்போது, எளிதில் ‘கட்சித்தாவல் தடை சட்டத்தை’ பிரயோகிக்க முடிவதில்லை. ஒருதடவை பாரதிய ஜனதாவும், தற்போது சமாஜ்வாதியும், பகுஜனில் இருந்து வாங்கப்பட்ட சட்டசபை உறுப்பனர்களின் உதவியுடன் ஆட்சியை முழுமையாக நடத்தின. இருப்பினும் வர்க்கப் பார்வை இல்லாததால் மாயாவதி ஆட்சியிலும்கூட, சீரான நிலச்சீர்திருத்தம் நடைபெறவில்லை. தலித்,தலித் பெண்களுக்கு எதிரான அடக்கு முறை, வன்கொடுமை நின்றபாடில்லை.
தெளிவான சித்தாந்தமும் உட்கட்சி ஜனநாயகமுமின்றி, அதிகாரம் பெற எவ்வித நீக்குப் போக்கான நிலையையும் கடை பிடிக்கலாம் என்பதின் விளைவு இது எனலாம்.

மிகவும் எளிமையான தலித்களை காங்கிரஸ் கவர்ந்ததற்கு முக்கிய காரணமே காந்தியின் எளிமைதான். கன்ஷிராமும், மாயாவதியும் எளிமையாகத்தான் இருந்தார்கள். ஆனால் சீக்கிரமே அரசியல் வெற்றி அவர்களது தனிப்பட்ட தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளும் ஆவலைத் தூண்டியது. அரண்மனை போன்ற கட்சி அலுவலகங்களும் தலைவர்களுக்கு ஆடம்பரமான வீடுகளும் கட்டப்பட்டன; ஏக்கர் கணக்கில் பண்ணைகள் சொந்தமாக்கப்பட்டன. இந்த ஆடம்பரத்தைப் பார்த்து, இவர்கள் தங்கள் தலைவர்கள்தானா என்று தலித்கள் பயந்து விடும்படி கலாச்சாரச் சிக்கலைக் கொண்டு சேர்த்தது. இந்த ஆடம்பரமும், நிதியும் தலித்களை பாதுகாக்கும் என மாயாவதி நம்ப வைத்திருப்பதுதான் அவரது வெற்றி. இருந்தாலும் தலித்கள் இதைச் சந்தேகத்துடனே பார்க்கிறார்கள். மாயாவதியின் மேலுள்ள ஊழல் புகார்கள், வழக்குகள் போன்றவை,அவரை தலித்களுக்கு எதிரான அரசியல் நிலைபாடு எடுக்குமாறு நிர்பந்திக்க வாய்ப்புள்ளது.

மாயாவதி ஏன் சமாஜ்வாதியுடன் கூட்டு வைத்துக் கொள்ளவில்லை? கூட்டு வைத்துக்கொண்டால் அக்கூட்டணி எளிதில் ஜெயிக்கும் என்றாலும்,என்றுமே சமாஜ்வாதியின் வாலாகத்தான் பகுஜன் சமாஜ் இருக்க வேண்டியிருக்கும். அவர் எதிர்பார்க்கும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்க முடியாது. அந்த நிச்சயமற்ற தன்மை வரவில்லையெனில்,பகுஜன் சமாஜ் விரும்பும் அரசியலின் வாசலைத் திறக்கும் ‘மந்திரச்சாவி’ அதன் கைகளில் சிக்காமல் போய்விடும்.

ஏன் மாயாவதி பாரதிய ஜனதாவுடன் தேர்தலுக்கு முன்பே கூட்டு வைத்துக் கொள்வதில்லை? அப்படி வைத்தால் அக்கூட்டணிக்கு பல ஆபத்துகள் உண்டு. மாயாவதியை ஆதரிக்கும் முஸ்லீம்கள், சமாஜ்வாதிக்கு மாற்றி வாக்களிக்கலாம்; சமார் மேலாண்மையை ஏற்றுக் கொள்ளாமல் பாரதிய ஜனதாவுக்கு வாக்களிக்கும் தலித்களும் சமாஜ்வாதிக்கு மாற்றி வாக்களிக்கலாம். யாதவர் சாதிக்கு இப்பெரும் கூட்டணியால் ஆபத்து எனக் கருதினால், வழக்கமாய் சமாஜ்வாதிக்கு வாக்களிக்காத யாதவர்களும் சமாஜ்வாதிக்கு வாக்களிக்கலாம். இது, இந்த இரண்டு கட்சிகளையும் தோற்கடித்து சமாஜ்வாதி வலிமையான கட்சியாக வளர வழிவகுக்கும். தற்போதைய அரசியல் தந்திரம் என்பது, மூன்று தனித்தனி அணியாக போட்டியிடுவது.

ஆனால் எங்கு பாரதிய ஜனதா வெற்றி பெற அதிக வாய்ப்பும், மாயாவதி கட்சி வெற்றி பெற குறைவான வாய்ப்பும் இருக்கிறதோ அங்கே - வெளிப் படையான தேர்தல் உடன்படிக்கை இல்லையெனினும்- மாயாவதி கட்சியினர் பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்து, சமாஜ்வாதி வெற்றிபெறாமல் பார்த்துக் கொள்வது. அது போல பகுஜன் சமாஜ் வெற்றி பெற வாய்ப்புள்ள இடங்களில், பாரதிய ஜனதாவினர் பகுஜனுக்கு வாக்களித்து, சமாஜ்வாதி வெற்றிபெறாமல் பார்த்துக் கொள்வார்கள். இதனால் சமாஜ்வாதி தனிப்பெரும்பான்மை பெற்று விடாமல் தடுப்பதுதான்,பாரதிய ஜனதா,பகுஜன் சமாஜ் கட்சிகளின் அரசியல் ராஜதந்திர விளையாட்டு.

ஏன் பாரதிய ஜனதாவும்,சமாஜ்வாதியும் கூட்டு வைத்து, பகுஜனை ஒழித்துக்கட்ட முயல்வதில்லை? கூட்டணி வைத்தால்,சமாஜ்வாதியின் முஸ்லிம் ஆதரவாளர்கள் பகுஜன் பக்கம் சாய்வர். இதனால் பாரதிய ஜனதாவுக்கு எந்த நஷ்டமுமில்லை;இருப்பினும் சமாஜ்வாதி தலைமையிலான ஆட்சி அமைவதுடன்,பாரதிய ஜனதா அதன் பின்னால் இருந்து பிடில்தான் வாசித்துக் கொண்டிருக்க முடியும் என்பது அதற்கு ஏற்புடையது அல்ல. கூடவே மண்டல் பரிந்துரைகள் பிரமாதமாக அமலாக்கப்படும். பின்தங்கிய சமூகத்தினர் முன்னேறி வருவது, உயர் சமூகத்தினரை சமுதாயத்தின் பலமட்டங்களில் கேள்விக் குள்ளாக்கும். உயர்சமூகத்தினர் இவ்வளவு காலமாக தக்கவைத்துள்ள அதிகாரம் அனைத்தும் பிற்பட்டோர் குறிப்பாக யாதவர் கைகளுக்குச் சென்றுவிடும்.

இதை உயர்சமூகத்தினரால் எக்காரணம் கொண்டும் சகித்துக் கொள்ள இயலாது. உ.பி. அரசியலைப் பொறுத்தவரை பகுஜன் சமாஜைக் காட்டிலும் பாரதிய ஜனதாவுக்கு ஆபத்தானது சமாஜ்வாதியே. கூடவே தலித்களை நடத்துவதில், உயர்சாதியினர் கூட நீக்குப்போக்கான போக்கை அனுசரிக்கக் கூடியவர்கள். ஆனால் பிற்பட்டோர்தான் மிகவும் முரட்டுத்தனமாகவும் அவமானப்படுத்துபவர்களாவும் இருக்கிறார்கள். அதுவே கலாச்சாரரீதியில் கூட, பாரதிய ஜனதாவும், பகுஜன் சமாஜ் கட்சியும் தேர்தலுக்குப் பிறகான ஒரு கூட்டணியை அது நிரந்தரமற்றது என்றாலும் ஏற்படுத்திக் கொள்வதற்கு வசதியானது போல் ஆக்கிவிடுகிறது. ஆனால் இப்படி நிரந்தரமற்ற கூட்டணியை அமைப்பதுகூட, முஸ்லிம் வாக்குகளைப் பாதிப்பதால், பாரதிய ஜனதாவுடன் உள்ள முரண்பாட்டை அவ்வப்போது தெளிவாகக் காட்டும்படியான காரியத்தில் பகுஜன் இறங்க வேண்டியுள்ளதால், ஒரு நிரந்தர உறவை ஏற்படுத்திக் கொள்ள முடிவதில்லை.

1980-களில் காங்கிரஸ் கட்சி சஞ்சய் காந்தியின் ஆசியுடன் ஆரம்பித்து வைத்த குண்டர் கலாச்சாரம், இன்று தொற்றுநோய் போல், அனைத்துக் கட்சிகளையும் உ.பி. யில் பீடித்துக் கொண்டுள்ளது. மபியாக்களுக்கும், குண்டர் தலைவர்களுக்கும் அரசியல் தேவைப்படுகிறது; அதுபோல அரசியல் தலைவர்களுக்கு குண்டர் தலைவர்களின் சேவை தேவைப்படுகிறது. அடிப்படையில் குண்டர் கலாச்சாரம், அந்தந்த சமுதாயத்தின் பாதுகாப்பை குண்டர் படைகளைக் கொண்டு உறுதி செய்வதான ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகமும், எதிர்க்குரலும் எழாமல் அமுக்கும் ஒரு சதிதான் குண்டர் கலாச்சாரம் எனலாம். பொதுவாக குண்டர் கலாச்சாரம் பொதுச்சொத்துகளைத் தனியார் பேரில் மாற்றவும்,வளம் கொழிக்கும் அரசு ஒப்பந்தங்களை கைப்பற்றவும் உபயோகிக்கப்படுகிறது. குண்டர் கலாச்சாரம் அரசியலை பெரும் முதலீடு செய்து நடத்தும் தொழிலாக மாற்றி, ஜனநாயகத்தைக் கருக அடிப்பதாக உ.பி.யில் மாறியுள்ளது.

உ.பி.யில் இழுபறியான அரசியல் நிலைமை இருந்த நேரத்தில் எப்படி இந்த சிக்கலைத் தீர்க்கப் போகிறீர்கள் என்று கன்ஷிராமை நிருபர்கள் கேட்டனர். “பாரதிய ஜனதா கட்சியுடனும் போகமாட்டோம்; சமாஜ்வாதியுடனும் போகமாட்டோம். இருவரும் மனுவாதிகள். ஒன்று கட்டுவிரியன் என்றால், மற்றொன்று ஐந்துதலை நாகம்,” என்றார். சொன்ன 48 மணிநேரத்தில், பாரதிய ஜனதாவுடன் ஒரு கூட்டை ஏற்படுத்திக்கொண்டு, மாயாவதி உ.பி.யின் முதல் தலித் முதலமைச்சராய் ஆகியிருந்தார். நிலையற்ற அரசியல் தன்மையைப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் பாதையை வகுக்க,உ.பி. பகுஜன் தலைவர்களை போல வேறு யாரும் திறன் பெற்றிருக்கவில்லை என்பது உண்மையே.

ஆனால் இம்மாதிரியான அதிரடி முடிவுகளை ஜனநாயகப்பூர்வமான ஒரு கட்சியை நடத்தினால் எடுக்க முடியாது; ஆகவே உ.பி. அரசியலை நடத்த குறைந்தபட்சம் கேள்வி கேட்க முடியாத மரியாதையுடன் ஒரு தலைவர் வேண்டும். இருப்பினும் இதை நேர்வழி என்று சொல்லமுடியாது; மாயாவதியின் அரசியல் எதிரிகள் அப்பட்டமான சந்தர்ப்பவாதம் என்பர். இருந்தாலும் தலித்கள் அரசியல் அதிகாரம் பெற இதுதான் ஒரேவழி என்கிறார்கள் மாயாவதி ஆதரவாளர்கள். ஆனால் இப்படியொரு வெற்றியை பஞ்சாபிலோ பீகாரிலோ மகாராஷ்டிரத்திலோ வேறெங்குமோ பகுஜன் ஏன் பெற முடியவில்லை? நிலையற்ற அரசியலை உருவாக்க முடியாததே காரணம்.

தமிழகத்தோடு ஒப்பிடுகையில் தலித்களுக்கு உ.பி. அரசியலில் அதிகாரத்திற்கான வெளி கூடுதலாகவே கிடைத்திருக்கிறது எனலாம். அதற்குக் கண்டிப்பாக கன்ஷிராம், மாயாவதியின் அரசியல்முயற்சி ஒரு காரணமாய் அமைந்துள்ளது. இருப்பினும் தலித்களின் மீதான அடக்குமுறை என்பது தமிழகத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது.

15-49 வயதுக்குட்பட்ட படிப்பற்ற மணமான பெண்கள்

சாதி தமிழ்நாடு உ.பிரதேசம் இந்தியா

தலித் 64.1 % 85.0% 73.0%


கீழ்அடுக்கிலுள்ள மணமான பெண்களின் படிப்பறிவு ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அளப்பதற்கான சரியான குறியீடாகும். 1998-99 நடந்த இக்கணக்கெடுப்பின் படி, உ.பி தலித்களது முன்னேற்றம் என்பது இந்திய சராசரி தலித்களின் முன்னேற்றத்தைக் காட்டிலும் பின் தங்கியுள்ளது என்றும், தமிழ்நாட்டில் தலித்களது வளர்ச்சி என்பது இந்த அடிப்படையில் கணிசமாய் வளர்ந்துள்ளது என்றும் தெரிகிறது. இருப்பினும் பாதிக்கும் மேற்பட்ட தலித்பெண்கள் கல்வியறிவற்று இருப்பது என்பது மிகவும் வெட்ககேடான விசயம்தான்.

என்ன செய்ய வேண்டும்? தாழ்த்தப்பட்டோர் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை, வர்க்கப் போராட்டத்துடன் இணைப்பதின் மூலம்தான் சாதிய வர்ணப் பிரச்னைக்குத் தீர்வு காணமுடியும். ஆகவே தலித் ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தலித்களது வளர்ச்சிக்கும் இடதுசாரிக் கொள்கையின் அடிப்படையில்தான் நிரந்தரத் தீர்வு காணமுடியும். அடிப்படைத் தொழிலாளிகளான தலித்பெருமக்களை வென்றெடுப்பது என்பதுதான் மற்ற எவரைக் காட்டிலும், இடதுசாரிகளின் முக்கியக் குறிக்கோளாய் இருக்கமுடியும். இதை எதிர் கொள்வதற்கான செயல்திட்டம்:

1.இடதுசாரிகளின் தனிப்பட்ட வளர்ச்சியை உறுதி செய்வது: தொழிலாளி வர்க்கத்திலேயே மிகவும் ஒடுக்கப்பட்டு சுரண்டப்படுபவர்கள் தலித்கள்தான். எனவே நிலச்சீர்த்திருத்தம் செய்யவும்,அனைத்துத் துறை களிலும் இடஒதுக்கீடு சரியாக அமலாக்கப்படவும், தலித் பிரதேசங்களுக்கு சிறப்புப் பொருளாதார மற்றும் அடிப்படை வளர்ச்சிக்கான கட்டுமானப் பணியைச் செய்யவும், தீண்டாமையை வேரறுக்கவும், பரம்பரைத் தொழில்களிலிருந்து விடுபட்டு கண்ணியமான மாற்றுத் தொழில்களில் ஈடுபடுவதற்கான சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டுச் சூழலை உருவாக்குவதற்குமான அனைத்துப் போராட்டங்களிலும் இடதுசாரிகள் பங்கேற்று தலைமை தாங்குவதை நோக்கிப் பணியாற்ற வேண்டும்.

சாதி முறையினால் ஏற்பட்டுள்ள வர்க்கப் பிளவை சரியாக புரிந்துகொள்ளாமல், இந்தியாவுக்கே யுரிய முறையில் பின்னப்பட்டிருக்கும் ஒரு போலி சமூக பொருளாதார குழுமைமுறை என்ற வரையறையை இடதுசாரிகள் கொண்டுள்ளதால், இடஒதுக்கீட்டை ஆதரித்தாலும் நடைமுறைப்படுத்துவதில் நியாயமாக நடந்துகொள்ளாமல் போகலாம் என்ற ஐயம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரிடம் உள்ளது. இதைப் போக்கி,தலித்களை இடதுசாரிகளாக மாற்றுவது என்பது முக்கியம். அடிப்படை தொழிலாளிகளான தலித்களது வர்க்க உணர்வுதான் உ.பி அரசியலில் எந்தவித புரட்சிகரமான மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும்.

2.ஒன்றுபட்ட முன்னணியை கட்டும் தந்திராபோயம்: உ.பி.யில் இடதுசாரிகள் பலவீனமாக உள்ளனர். பெரும் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் போது, தலித் கட்சி, அமைப்புகளை தமது முன்னணியில் இணைத்துக்கொள்ள முன்னுரிமை தரவேண்டும். சமூக ஒடுக்குமுறை, தலித்களுக்கான நிலம்,ஊதியம் போன்ற விஷயங்களுக்கு தலித் அமைப்புகளை இணைத்தும் இணைந்தும் போராட வேண்டும். சில தலித்அமைப்புகள் சாதியத் தத்துவத்தால் நிரம்பி வழியலாம்; இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் இருந்து வரும் சமூக ஒடுக்குமுறையினால் விளைந்தது என்பதையும், தலித்கள் சாதிரீதியாக அணிதிரள்வது சாதியத்திற்கு எதிராகத்தான் என்பதையும் புரிந்துகொண்டு விட்டு விலகாமல் தோளோடு தோள் நின்று போராட வேண்டும்; அதே சமயம் அவர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டு, தலித்களின் உண்மையான எதிர்காலம் இடதுசாரி அரசியலில்தான் உள்ளது என்பதைப் புரியவைக்க வேண்டும்.

இந்தக் கருத்தை மாயாவதி சரியாகப் புரிந்து கொண்டுள்ளதால்தான், அவர் இடதுசாரிகளைத் தவிர்த்து தனது அரசியலை நடத்த முயல்கிறார். அப்போதுதான் தனது தலைமையை தக்க வைத்துக் கொள்ளமுடியும் என நினைக்கிறார்; இருப்பினும் இடதுசாரிகள் தலித்களிடையே இன்னும் கடுமையாக உழைத்தால், அதன் மற்ற தலைவர்களையும் தொண்டர்களையும் தங்களது பின்னால் திரட்ட முடியும் என்பதே உண்மை. இடதுசாரிகள் பொருளாதார கோரிக்கைகளை முன்வைத்து, சமூக ஒடுக்குமுறையை கையில் எடுக்காமல் விட்டுவிடுவார்கள் என்ற தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களது நியாயமான சந்தேகத்திற்கு இடதுசாரிகள் தங்கள் செயல்பாட்டின் மூலம் விடையளிக்க வேண்டும்.

3.கலாச்சாரப் புரட்சி: பல்லாயிரமாண்டுகளாக இந்தியாவில் சாதி புரையோடிப் போய், சில கலாச்சார முன்னபிப்ராயங்களை சமூகத்தில் தோற்றுவித்துள்ளது; அந்த அபிப்ராயங்கள் வர்க்க உணர்வு வளர்வதையும், வர்க்கப்போராட்டம் நடப்பதையும் வெகுவாக பாதித்து, உற்பத்தி உறவுகளில் பாரிய மாற்றம் ஏற்படுவதைத் தடுக்கின்றன. இந்து மதவாத கோட்பாட்டுடன் இணைந்து, இந்தியாவிற்கே உரித்தான உடைக்க முடியாத ஒரு சமூக கலாச்சார மரபை அது ஏற்படுத்தியுள்ளது. இந்தியத் துணைகண்டம் ஆட்சிகளுக்கெதிரான கிளர்ச்சிகளையும், போராட்டங்களையுமே கண்டிருக்கிறது. ஆனால் ஒருபோதும் ஒரு புரட்சியைக் கண்டதில்லை. அனைத்து வெற்றிகரமான போராட்டங்களும், கிளர்ச்சிகளும் பழைய நடைமுறையுடன் சமரசம் செய்து கொண்டுள்ளன. ஆகவே இங்கே நிலவும் வர்க்கசாதிய உறவுகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு, வர்க்கப் போராட்டத்தை அறிவுஜீவிதமான மற்றும் கலாச்சாரப் பூர்வமான இயக்கத்துடன் இணைத்து மேற்கொள்ள வேண்டியுள்ளது.

சமத்துவத்தை முன்னிபந்தனையாகக் கொண்ட ஒரு நாகரீகப்பெயர்வுக்கு சமூகத்தை அழைத்துச் செல்வதற்கான போராட்டத்தில் முதலில் வெற்றி கொள்ளப்பட வேண்டியதாய் சாதியமே மறிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுடைய வளர்ச்சியுறாத வர்க்க உணர்வுதான் எந்தவொரு புரட்சிகரமான தத்துவத்தின் முன்னேற்றத்திற்கும் பெரும் தடையாக நீடிக்கிறது.
இப்படியானதொரு சாதிய நாகரிகத்துடன் பணிபுரியும்போது ஏற்படக்கூடிய சிக்கல்களை அறிந்துணர்ந்தும், ஒப்புக்கொண்டும் ஒரு மாற்று தொலைநோக்குப் பார்வையை முன்வைத்து போராடும் பொறுப்பு இடதுசாரிகளுக்கே உள்ளது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com