Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி 2006
சுடரினுள்ளே

விமலன்

வணக்கம் நண்பனே, இறந்து போன உனக்கு கடிதம் எழுதுவதென்பது அவ்வளவு பெரிய தேசவிரோதச் செயலா என்ன? எல்லோரும் சொல்கிறார்கள் என இல்லை, பலர் சொல்கிறார்கள். பரவாயில்லை, சொல்லிவிட்டுதான் போகட்டுமே, அந்த தேசவிரோதச் செயலை செய்து விட்டு போகிறேன். என்ன கொஞ்சம் லாஜிக்கலாய் இடிக்கும். விடு நண்பா இங்கே லாஜிக்கலாய் எதுதான்...?

நண்பர் ராமாராஜ்தான் சொல்வார் அடிக்கடி ‘போயிகிட்டே இரு’ என... எங்கு போய் எதில் முட்டி, எப்படி... என்றால் ‘ஏய் போ மயிரு அந்த மானிக்க’ என்பார். உன்னைப் போல பழக்கமானவர் இல்லை அவர். நான் பணிபுரியும் அலுவலக நிமித்தப் பழக்கம். அப்புறம், தொழிற்சங்கம், இயக்கங்கள், பொறுப்பு இப்படியான நண்பர் அவர்.

என்ன... உன்னை டேய் என்று அழைப்பேன், அவரை அவர், இவர் என்கிற ர்ர்ரன்னா... உச்சரிப்பு முறைகளில்தான், என்னைவிட அவர் ஐந்து வயது மூத்தவர். பையன் கல்லூரிக்குப் போய் வருகிறான். மற்றபடி படிக்கிறானா என அவரையும், அவனையும் நேர்காணல் நடத்தி கேட்டு விடுவதே சாலச் சிறந்தது.

Vimalan நேர்காணல் என்றால் மாடிப்படி கைப்பிடி மீது சாய்ந்தபடியும், வான் ஆராய்ச்சி செய்த மாதிரியும் இன்னும், இன்னுமான சில பல போஸ்களில் நிற்க வேண்டுமோ? அப்படியானால் அவருக்கு அதெல்லாம் தெரியாது விட்டுவிடுங்கள் பாவம்.

அவர் என்னைப்போல நயந்த மனுசன், எங்களது சீனியர் ஆபிஸர் ஒருநாள் எங்களிடம் சொன்னார். ‘நீங்க ரெண்டு பேரும்.............க்கு லாயக்கில்லாத ஆளுங்கப்பா’ என்றார். அவர் எதை நினைத்து சொன்னார் எனத் தெரியவில்லை. உண்மையில் நாங்கள் அப்படித்தான், உருப்பெற்றுத் தெரிந்தோம்.அப்படியான உருப்பெறலுக்குப் பெயர், இளிச்சவாயன், அப்புராணி, பிழைக்கத் தெரியாதவன், ஃப்ளாக் அண்ட் வொய்ட் என்கிறார்கள். அப்படி இருப்பது சம்பந்தப்பட்ட எங்களிருவருக்கும் வேண்டுமானால் நஷ்டமாக இருக்கலாம். மற்றபடி யாருக்கும் எந்தவித கெடுதலும் இல்லைதானே, அப்புறம் ஏன் அப்படி... அது ஒருவிதமான தாழ்த்தி சொல்லல் போலிருக்கிறது. அதனுள்ளேயே தன்னை உயர்த்தி கெட்டிக்காரத்தனமாய் காட்டிக் கொள்ளும் சுயநலமும் இருக்கிறதே.

இப்படியெல்லாம் சுயநலமற்று, சக மனிதனை இப்படி கோணக்கண்ணாக பார்க்கும் பார்வையற்றுத் திரிகிற என் போன்றவர்களுக்கு மகேந்திரன் அப்படித் தெரிகிறானோ? நாங்கள் வசிக்கும் ஏரியாவில்தான் அவனது வீடும். தப்பு தப்பு கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன் அவன் வசிக்கும் ஏரியாவில் தான் நாங்கள் வசிக்கிறோம். அவன் அவர்களது ஜாதியில் இப்போது ‘பெரிய ஆள்’. ஆள் படை, அம்பு, தாட், பூட், ஜபர்தஸ்து எல்லாமே இப்போது அவனிடம் இருக்கிறது எக்ஸ்பயரி டேட் முடியாமல்.

முந்தியெல்லாம் பார்க்கும்போது போனால் போகிறதென்று ஒரு சிரிப்பு சிரிப்பான். இப்பொழுது அதுவும் மிஸ்ஸிங். சரி இதெல்லாம் ஒருவித லெவல் மெய்ன்டனிங்தானே? கடை வைத்திருப்பான் போலும், புத்தம் புதிய ஊதாக்கலர் சூப்பர் எக்ஸ்.எல்.ஹெவி டியூட்டி வண்டியில் லோடுடன் பார்க்கலாம். ஆனால் வாழைப்பழத்தார் ஏற்றி வந்து நான் பார்த்ததே இல்லை. ஒருவேளை அவனது கடையில் வாழைப்பழ வியாபாரம் இல்லையா? ‘அல்லது’ வாழைப்பழம் சாப்பிடுபவர்கள் அவனது கடைக்கு வருவதில்லையா? அல்லது... போதும் விடு, விட்டால் அல்லது போட்டே பக்கங்களை நிரப்பிவிடுவாய் என நீ சொல்வதாய் உணர்கிறேன்.

ஆனால் உனது மறைவிற்குப் பிறகு பிறந்த மகனுக்கு மகேந்திரன் உனது பெயரைத்தான் வைத்திருக்கிறானாமே? மகேந்திரன் மட்டுமா. கே.என்.எஸ், சந்திரசேகர், குட்டி முருகேசன், பால்துரை, அசட்டுச் சீனி, கண்ணன், சாதாச் சீனி, உலகு.... மற்றும் பலரை மறக்க முடியுமா நம்மால்?

மறக்கும்படியா செய்திருக்கிறார்கள். அதிலும் இந்த கண்ணன் செய்த கூத்து இருக்கிறதே... கொடுமை போ, அந்த இருபத்தி இரண்டின் வாலிபத்தில் இரவு படுக்கச் சென்றபின் அடிக்கடி சிறுநீர் வருகிறதே என்று நூலைக் கட்டிக் கொண்டு படுத்து விட்டான். நடுராத்திரி ஒண்ணுக்கிருக்க விழித்தவன் முடியாமல் வேதனையோடு நெளிகிறான்.

பாத்ரூம் லைட் எரிந்து கொண்டிருக்கிறது. இவன் பாத்ரூமிற்கும், வீட்டிற்குள்ளுமாய் நடை போட்டுக் கொண்டு திரிகிறான். இடையிடையே நடைபெற்ற நூல் அவிழ்க்கும் முயற்சி, ம்ஹீம் முடியவில்லை. வலி பொறுக்கமாட்டாமல் தனது தம்பியை எழுப்பவும், அம்மா எழுந்துவிட்டாள். உடனே கே.என். எஸ்.ஐ வரச் சொல்லி இருக்கிறார்கள். கே.என்.எஸ் வருவதற்கு முன்பாகவே அக்கம் பக்கம் கூடிவிட்டனர்.

கே.என்.எஸ். வந்து பிளேடால் பதமாக நூலை அறுத்து எடுத்து விட்டிருக்கிறான். அன்றிலிருந்து ஒருவாரம் அவன் தெருவில் தலை நிமிர்ந்து நடப்பதில்லை. தெருமுனை வரை தலையை நிமிர்த்திக் கொண்டு வருபவன் தெருவுக்குள் நுழையும்போது தலையை தொங்கப் போட்டுக் கொண்டு விடுவான். அப்படி ஒரு ஏற்பாடான அனிச்சைச் செயலுக்கு உட்பட்டு இருந்தவன்தான் இப்போது ரயில்வே போலீஸில் இருக்கிறான். ரயிலின் முனையில் எல்லாம் அவன் நூல் கட்டி... ம்ஹீம். அதெல்லாம் இல்லை இப்போது.

அசட்டுச் சீனி ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டு சென்னையிலேயே செட்டிலாகிவிட்டான். உலகநாதன் போலீஸ் வேலை பார்க்கிறான். எப்போதாவது பார்ப்பேன். குட்டி முருகேசன் தான் படித்த டெக்ஸ்டைல் சூப்பர்வைசிங் படிப்பிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத வேலையாக பெட்ரோல் பங்க்கில், எல்லோரும் அப்படித்தானே?

படிப்பு ஒன்று, கிடைப்பது ஒன்றாய்த்தானே இருக்கிறது. கைப்பற்றிக் கொள்ளும் அவசரங்களில் இப்படியும், கே.என்.எஸ். உள்ளூரிலேயே ஒரு தனியார் மில்லில். பற்றாக்குறை சம்பளத்தில் பிள்ளைகளை உயர்படிப்பு படிக்க வைத்துவிட்டு மிகவும் சிரமப்படுகிறான். அண்மையில் அவரது தாயார் இறந்துவிட்டார் எனக் கேள்வி.

அவனும் நெஞ்சு வலி வந்து மிகவும் சிரமப்பட்டு மீண்டு வந்ததாய்ச் சொன்னார்கள். பின்னே, ஊரிலுள்ள சிகரெட்டையெல்லாம் குத்தகைக்கு எடுத்திருந்தால்... பால்துரை நம் தேசத்தின் மரபு வழுவாத முக்கியத் தொழிலான குடுக்கல், வாங்கலில், வட்டிக்கு கொடுத்து வாங்குவதற்கு நிலவும் பல பெயர்களில் அதுவும் ஒன்று. ஆள் ரொம்பவும் மெலிந்து விட்டிருக்கிறான். இடையில் மஞ்சள் காமாலை வந்து ஹெபிடிடைஸ் - பி -யால் பாதிக்கப்பட்டு உடல் தேறி வந்துள்ளான்.

எம்.80 தான் அவனது வாகனம். தினமும், காலையிலும், மாலையிலும் தொழில் நிமித்தமாய் அவன் வண்டியில் பறப்பதைக் காணலாம். சந்திரசேகர் பொது வாழ்க்கையில் செட்டிலாகிப் போனான்.

இவர்கள் எல்லோருக்குமே திருமணம் ஆகிவிட்டிருந்தது. அது ஒரு இனிய விபத்தும், தேவையும்தானே? விடு நண்பா, அனேகமாக எல்லோருக்கும் ஆண், ஒன்றும், பெண் ஒன்றுமாய் குழந்தைகள், பிள்ளைகள். இதில் பலர் தங்களது பெண் பிள்ளைகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்தியிருந்தார்கள். இன்றைய சமூகத் தேவைகளில் அப்படி ஒன்று நடத்துவது அவர்களுக்கு அவசியம் என்றே படுகிறது. எங்களது ஏரியாவில் ஒருவர் தனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவிற்கு ஒரு பெரிய இங்கிலீஸ் மீடியம் ஸ்கூலை பிடித்து விழாவிற்கு வருகை தரும் முக்கியஸ்தர்கள், உறவினர்கள், நண்பர்கள் இவர்களுக்கு தனித்தனியாக ஆர்ச் வைத்திருந்தார்.

இப்படி எல்லாம் நடப்பதை பார்த்து சாதாச்சீனி சொல்வான். காசு இருக்கறவன் செய்யிறான், காசில்லாதவன் கௌரவமா கையைக் கட்டிக்கிட்டு நின்னு வேடிக்கை பாக்கணும் என்பான். ஆனால் அவர்களது கௌரவம் கட்டிய ஆர்ச்சிலும், பந்தியில் மிஞ்சும் பதார்த்த அயிட்டங்களிலும் இருப்பதாக காண்பித்துக் கொண்டார்கள்.

அப்படியான காண்பித்தலுக்கு மத்தியிலும் நமது நட்பு அறுந்து விடாத கன்னிச் செயினாகத்தானே, அப்போதெல்லாம் எது நண்பனே, ஏப்பாங், உப்பாங், ஜப்பாங்.... அது நமக்குத் தெரியவும் செய்யாது. ஆனால் அந்த ரிதமான அழைப்புக் குரல் இல்லாமல் கூடினோமே ஆனந்தா ஹோட்டலில்.உண்மையில் அந்த டீ மாஸ்டரைத்தான் பாராட்ட வேண்டும். நமது தலைகள் தெரிந்ததும், பத்துப்பேர் மொத்தமாகப் போனாலும் ஒன் பை டூவாக டீப் போட்டுத் தருவாரே, அவ்வளவு சடுதியாய், அந்த மாயவித்தை அவரைத் தவிர யாருக்கும் வராதுதான். அதிலும் தீப்பிழம்பு ராஜேந்திரனை பார்க்க வேண்டுமே, தனக்குரிய டீயையும் குடித்துவிட்டு வேறு யாருடைய டீயையாவது எடுத்து கையில் வைத்துக்கொள்வார். அவ்வளவு புயல் வேகம் அவரிடம். டீக்குடித்தலில் மட்டுமென இல்லை எல்லாவற்றிலும் இருந்தது.

தினசரி காலையில் நியூஸ் பேப்பர் போடுவார். அந்த நேரங்களில் அந்த பெயிண்ட் போன சைக்கிளில் அவர் செய்யும் வித்தையும், விரையும் வேகமும் சைக்கிளோடு சைக்கிளாய் அவர் மாறிப் போகும் மாயக்காட்சியும்.... ரத்தினக் கம்பளம் இல்லாமலேயே பறப்பார் சைக்கிளில்.

அப்படியான புயலும், நீயும் நானும்தானே அன்று இரவு ஆனந்தா ஹோட்டலில் டீ சாப்பிட்டோம் கடைசியாக, நான் வழக்கம்போல டீக்கடையில் நின்றிருந்தேன் தோளில் பையுடன், அப்போது வெளியூரில் வேலை பார்த்தேன். அப்போதுதான் நீ வருகிறாய் களைப்பாக, இரண்டுபேரும் டீ சாப்பிடுகிறோம். அந்நேரம் தீப்பிழம்பு ராஜேந்திரனும் வருகிறார்.

வழக்கம்போலவே டீ சாப்பிட்டு வேலை இருப்பதாய் போய் விடுகிறார். அப்படியே டீ சாப்பிட்டுவிட்டு நகர்ந்தோம். நூறடி தூரம் சைக்கிளில் விரைந்திருப்போம். அப்போதுதான் சொன்னாய் மதியத்துலயிருந்து ஒண்ணும் சாப்புடல என்றாய். அப்படியே சைக்கிளில் ரிவர்ஸ் கியர் போட்டு வருகிறோம் அதே ஆனந்தா ஹோட்டல்.

இட்லியோ, புரோட்டாவோ சாப்பிட்ட ஞாபகம். ஆனால் நண்பனே அப்போதுதான் உன் கண்களின் ஓரம் துளிர்த்த ஈரத்தை பார்த்துவிட்டேன் உனக்குத் தெரியாமலேயே, நான் பார்த்துவிட்டதை நீயும் பார்த்துவிட்டாயோ என்னமோ ‘வீட்ல சண்ட, எப்பையும் போல அண்ணி வஞ்சிட்டாங்க, கொஞ்சம் வாய் வார்த்தை முத்திப்போச்சு, அம்மா இல்லாத வீட்ல அவுங்கள அந்த ஸ்தானத்துல வச்சி பாத்தது எங்க தப்புதான். அத அவுங்க சாதகமாக்கிட்டு... அண்ணன் ஓரளவுக்கு மேல எதுவும் பேசுறதில்ல. ரவுடி, உருப்படாதவன், எங்கிட்டாவது போய் செத்து ஒழி, தண்டச்சோறுங்கிற அளவுக்கு வார்த்தைகள் தடிச்சுப் போச்சு.

அதுவும் தினமும் தட்டுல சோத்த போட்டு வச்சதுக்கு அப்புறம் தான் இந்த மாதிரி நானும் இன்னைக்கி மத்தியானம் கோபமா பேசிட்டேன்... ஒரே சண்டை வீட்ல. சைக்கிள எடுத்துட்டு கௌம்பிட்டேன் கோபமா. எங்க அப்பா சொல்லி கூட கேக்கல. அவரயே ஒரு பொருள் மாதிரிதான் வச்சிருக்காங்க எங்க வீட்டுல... என ஆரம்பித்து நீ கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் வந்ததற்கான காரணத்தைச் சொன்னாய்.

இது எல்லோரது வீட்டிலும், நடக்கக் கூடிய பிரச்சனைதான். என்ன பிரச்சனையின் தன்மையையும், நபர்களையும் பொறுத்து கொஞ்சம் மாறுபடும். வீட்டுக்கு வீடு வாசப்படி. ஆனால் நண்பனே வீட்டில் நடந்த அத்தனைக்கும் மத்தியிலும் கூட தெருவிலும், சக மனிதர்களிடமும், நண்பர்களிடமும் நல்ல பெயர் வாங்கியிருந்தாய்தான். மாமா, அண்ணன், தம்பி என அனேகர் உள்ளங்களில் இதயத்திற்கு அருகாமையாக குடியிருந்தாய். அதற்கெல்லாம் யாரும் வாடகை வசூலித்தாய் ஞாபகம் இல்லை எனக்கு, அப்படியே கேட்டிருந்தாலும் கொடுக்க நீ எங்குதான் போவாய்.

இந்தியக் குடும்பங்களில் உள்ள பெரும்பான்மையான இளைஞர்களை மென்று தின்று கொண்டிருந்த வறுமைதான் உன்னையும்... அந்த வறுமையிலும்கூட உன்னிடம் வாடாத சிரிப்பும், அரவணைத்த நண்பர்களுடனான பழக்கமும். அந்த பழக்கம்தானே உன்னை சகலரிடமும் நெருங்க வைத்தது. உனது உருவத்தை அவர்களது இதயங்களில் பச்சை குத்தி அல்லவா வைத்திருந்தாய்.

அடேயப்பா, அந்த 45 வயதான நம் ஏரியாவின் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, அரசியல் பிரமுகரை சிரிக்க வைத்த பெருமையும், உலக சாதனையும், உன்னையன்றி வேறு யாரைச் சேரும் நண்பனே. இப்படி சிரிக்க மறந்து, அடுத்தவர்களிடம் பேச மறந்து இன்னும் ஏகப்பட்டதை மறந்து திரிந்த கை, கால் முறைத்த மாமிச மலைகளை எந்தவித சிறப்புப் பிரார்த்தனை கூட்டமும் இன்றி, பேசவும், சிரிக்கவும், மனம் திறக்கவும் வைத்து அவர்களை வசீகரித்தாய் நீ.

அந்த வசீகரத்திலும், உனது பழக்கத்திலும் எப்பொழுதும் மின் அதிர்வாய் ஓடிக் கொண்டிருக்கும், கலகலப்பும், மனத் திறப்பும் உன்னை நண்பர்கள் வட்டாரத்தில் இறுக்கமாக இருத்தி வைத்திருந்தது.

அப்படியான மனந்திறத்தல் நிகழ்ந்த நாளின் அந்தி மயங்கிய பொழுதில் ஆனந்தா ஓட்டல் சாப்பாட்டு மேஜையில் நீ சொன்னாய் நண்பனே, இன்னும் ஒரு வாரத்துல திருநெல்வேலியில ஒரு பிரைவேட் மில்லுல வேலைக்கு சேரணும் என்றாய். அந்தப் பேச்சோடு சாப்பிட்டு முடித்து கை கொடுத்து பிரிந்தபோது எனக்குத் தெரிந்திருக்கவில்லை நண்பா, அடுத்து உன்னை பார்க்க முடியாமல் போகும் என.

சடுதியில் நிகழும் மரணங்கள் யாரையும் நிலை குலைத்து விடுகிறதுதான் நண்பனே, நாம் இருவரும் பிரிந்த இரவு நீ சாலை விபத்தில் இறந்து போனதாய் மறுநாள் மாலை நியூஸ் பேப்பரை பார்த்து தெரிந்து கொண்டேன் நண்பா.

உனது சாவு செய்தி கேட்டு நமது ஏரியாவில் பெரும்பான்மை யோர் துக்கத்தில் ஆழ்ந்து போனார்கள் என உனது சவ ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் சொன்னார்கள். குழுமியிருந்த ஜனத்திரளில் தாய்மார்களின் கூட்டம் கொஞ்சம் அதிகம் எனவும் சொன்னார்கள்.

அப்படியாய் இறந்த பின்பும் வாழும் உன் நினைவுகள். 1962 ல் திருச்சியில் பிறந்து 1993 - செப்டம்பரில் மரித்துப் போனதாய் பதிவு செய்யப்பட்டும், நினைவு கூறப்பட்டும்.

அன்புடன்
நண்பன்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com