Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி 2006
பிறிதொரு கனவு

எஸ். காமராஜ்

ஜெனிபா பூஜைக்கு கிளம்பிவிட்டாள். அந்தக் கதவில்லாத ஓட்டு வீட்டிலிருந்து குனிந்து வெளியே வந்து நின்றாள். கையிலிருந்த வெள்ளைநிற நெட்டை தலைக்கு முக்காடு போட்டு சரிபார்த்துக் கொண்டாள். தெருமுனையிலிருக்கிற வீட்டிலிருந்து இன்னும் சிலேட்டா வெளியே வரவில்லை. சிலேஷ்ட மேரி என்கிற அந்தப்பெயரை எல்லோரும் சிலேட்டா என்றுதான் கூப்பிட்டார்கள். அந்தச் சிலேட்டாவும் இவளும் தூங்குகிற நேரம் போக எல்லா நேரமும் ஒன்றாகவே இருந்தார்கள். மனதுக்குப் பிடித்தவர்கள் வரிசையில் நண்பர்களுக்கு ஒதுக்கப்பட்ட முதலிடத்தை எந்த மாற்றத்தாலும் மறுதலிக்க முடியவில்லை. நட்பின் ருசியறியாதவர்கள் இன்னும் பிறக்காதவர்கள் மட்டுமே. “வானம் எனும் வீதியிலே குளிர் வாடை எனும் தேரினிலே” பாட்டு கோபுர உச்சியிலிருந்து ஓடிவந்து மேகங்களினூடாக நகர் முழுக்கப் பரவிக்கொண்டிருந்தது. இன்னும் ஒரே பாட்டு “ஏசு ரட்சகர்” எல்.ஆர்.ஈஸ்வரி பாடி முடிக்கும்போது பூஜை ஆரம்பித்து விடும். ரிக்ஷாக்கள் ஸ்கூட்டர்களைத்தவிர தெருச்சனங்களின் நடமாட்டம் இல்லை. எல்லோரும் கோயிலுக்குள் போயிருப்பார்கள். உள்ளே கெபியின் நிழலிலும் வாசல் படியிலும் தங்கள் சிநேகிதர்களோடு நின்றுகொண்டே பேசிக் கொண்டிருப்பார்கள். பெரிய வேப்ப மரம் கன்னகரேரென்று ஐம்பது வருட நினைவுகளோடு நின்று கொண்டிருக்கும். அதன் நிழலில் உட்கார்ந்து கொண்டால் பெரிய கேட் தெரியும். அங்கிருந்து பூஜைக்கு வருகிற ஆட்களைப் பார்த்துக் கொண்டே ஏதாவது பேசிக்கொண்டிருக்கலாம். அதே இடங்களில் உட்கார்ந்து கொண்டுதான் இவர்களின் அக்காமார்களும் அம்மாமார்களும் பாட்டிமார்களும் காலங்காலமாய் பேசிக் கொண்டிருந்தார்கள்.

எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் இவர்களிருவரும் தான் முதல் ஆளாய் போயிருப்பார்கள். இவர்கள் போவதற்கு முன்னமே பிச்சைக்காரர்கள் வந்து தங்களின் வரிசைப்படி உட்கார்ந்திருப்பார்கள். அவர்களின் கைகளில் ஜெபமாலைகூட இருக்கும். அவர்கள் வெள்ளிக்கிழமைகளில் இருக்கங்குடி ஆற்றுமணலிலும் கையில் வேப்பங்குலைகளோடு உட்கார்ந்திருப்பார்கள்.

மறுபடியும் குனிந்து வீட்டுக்குள் போனாள். தெருவடைத்துக் கொண்டு மணக்கிற கறிக்குழம்பின் வாசம் அடுப்பிலிருந்து அதிக நெருக்கமான வாசனையை அள்ளி வீசிக்கொண்டிருந்தது. அம்மையின் கை அரிசியை அலசிக்கொண்டிருந்தது. கொஞ்சம் அள்ளி வாயில் போட்டாள். அடுப்புப்பக்கம் போய் அணைந்து விட இருந்த தீ விறகை உள்ளே தள்ளி விட்டாள்.

“சிலேட்டா இன்னும் வரலியா”அம்மை கேட்டாள். “வல்ல, எம்மா இன்னைக்காச்சும் நீ வரக்கூடாதா” “எதுக்கு ..... நீதா போறயில்ல”

குடும்பத்தோடு பூஜைக்குப்போனதும், கோயில் பிரகாரத்து மணல் வெளிப்பரப்பில் ஜெனிபா கால் வலிக்க ஓடித்திரிந்ததும், அங்கு கண்டெடுத்த சிப்பிகளை அரிய பொருளாக சேர்த்து வைத்ததும், நேற்று நடந்தது போலிருந்தது. அப்போதெல்லாம் போட்டு விடுகிற துவைத்த துணிகளை அசிங்கப்படுத்தி கழற்றி எறிந்து விட்டு எப்போதும் உள்ளாடையோடு அலைவாள். அப்படியே அப்பனின் மேல் கால் போட்டுத் தூங்கிப்போவாள். அவள் பெரிய மனுசியானால் சடங்கு நடத்தக்கூடாதென்றும், டீச்சருக்குப் படிக்கவைத்து கான்வெண்ட் பள்ளிக்கூடத்திலே வேலை வாங்கித் தரவேண்டும் என்பதெல்லாம் பின்னிரவு நேரத்துக் கனவுப்பேச்சாக இருக்கும். பேசி பசியெடுக்க, சாமமான பின்னால் பேருந்து நிறுத்தத்துக்குப் போய் டீயும் பன்னும் வாங்கி வந்து தின்னத் தருகிற கணங்கள் குளிர் நினைவுகளாக வந்துபோயின. எப்போதும் ஒட்டிக்கொண்டு கிடந்த ஜெனிபா எப்போதாவது கூட நடக்க மாட்டாளா என்று ஏங்க வைக்கும் பெரியவளாகிவிட்டாள். கொஞ்ச நேரம் அரிசி அலசுவதை நிறுத்திவிட்டு முகட்டைப் பார்த்து வெறித்தாள். இன்னமும் அந்த பேச்சு நீடித்தால் அங்கேயே நின்றிருந்தால், இந்த ஞாயிறும் கண்ணீரில் கழிந்து போகும் அபாயமிருந்தது.

“எங்க அம்ம இன்னுங் கொமரி மாதிரியே இருக்கா” கன்னத்தை பிடித்து செல்லங்கொஞ்சவும் குளிர்ந்து போனாள். அவள் நினைவுப் புதைகுழிக்குள் இறங்கும் போதெல்லாம் ஜெனிபா தனது குளிர்ந்த கைகளால் விருட்டென்று இழுத்து வெளிக்கொணர்ந்து விடுவாள். அதற்கு அவள் பிரயோகிக்கும் உபாயங்கள் நாடகத்தன மானதாக இருக்கும். மிக வலிந்து சுவாரஸ்யமில்லாத ஊர் விஷயங்கள் சொல்வாள். திருப்பலி பூஜையில் பாடுகிற “தூயவர், தூயவர்” பாட்டுக்கு விரல்களை இதழ்களாக்கி, பூ விரிகிற பாவனை யோடு, நடனமாடிக் காண்பிப்பாள். புதிய திரையிசைப் பாடல்களுக்கு சரோஜாதேவி மாதிரியும், ஜெயலலிதா மாதிரியும் அபிநயம் பிடிப்பாள். பாதிரி அந்தோணி குரூசை போல குரலை இறுக்கமாக்கிக் கொண்டு, இரண்டு கைகளையும் நெஞ்சுக்கு நேராகக் கால்மடிப்பு மடித்து நீட்டிப் “பிதா, குமரன், பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென், பிதாவே இதோ அடுப்புக்குப் பக்கத்தில், மாட்டுக்கறியை மணக்க மணக்க கொதிக்கவிட்டுக் கொண்டிருக்கும் ரெபேக்காள் என்கிற ரேவக்காவை ஆசிர்வதியும். அவள் வெறும் காக்கிலோ கறியை எடுத்து அதைப் பாதி தெருவுக்குப் பங்கிட்டுக் கொடுக்கிறாள். ரெண்டப்பத்தையும் ஒரு மீன் துண்டையும் நீர் கூடை கூடையாய்ப் பெருகச் செய்தீரே அது போலவே” சொல்லும்போது அவள் முகத்தில் ஒரு பேரிறுக்கம் குடிகொள்ளும்.
ஆனால் வீட்டிலிருப்பவர்கள்,”சாமியக்கேலி பண்ணாதே” என்று அதட்டுவார்கள். அதைச் சட்டை செய்யாமல் “திராட்சை ரசத்தை எடுத்து, இதை எல்லோரும் வாங்கிப் பருகுங்கள், இது யேசுவின் திரு ரத்தம்” சொல்லிக்கொண்டு, கொதிக்கிற குழம்பில் ஒருகரண்டி சாறு எடுத்து பாதிரியார் குடிக்கிற மாதிரியே குடிப்பாள். ஒரு துணியை எடுத்து பதவிசாக மடித்து அமைதியாக உதடு துடைத்துக் காண்பிப்பாள். அதைப்பார்க்கிற அம்மை தன்னை மறந்து சிரித்துவிடுவாள்.

அவளைச் சிரிக்க வைக்கவும், திசை திருப்பவும்தான் இந்த துடுக்குத் தனம் என்பதையும் அம்மை அறிவாள். துடுக்குத்தனம் அவளுக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஒவ்வொரு கிறிஸ்துமஸ்ஸீக்கும் பூஜை முடிந்த அந்த அகால இரவு ஒருமணிக்கு தெருவே விழித்திருக்கும். ஒலிபெருக்கியை அலற விட்டுக்கொண்டு ஆளாளுக்கு நடனமாடுவார்கள். அதில் எப்படியும் ஜெனிபாவின் நடனமும் இருக்கும். ஆறு வயசிருக்கும்போது முதன்முதலாக ஆடினாள். சுற்றியும் தெருவே, வட்டமாய் மொய்த்துக் கொண்டிருக்க ஒவ்வொரு கண்ணும் தன்னைத்தான் பார்க்கிறது, தன் நடன அசைவுகளுக்கு ஆரவாரம் செய்கிறது, என்னும் நினைப்பில் மிதந்து மிதந்து ஆடுவாள். பள்ளிக்கூடக் காலங்களில் விளையாட்டிலும், நடனத்திலும் பெரிய பேர் வாங்கினாள். அந்த திரைப்படப் பாடல் பிரபலமாகியிருந்த அந்த நேரத்தில் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலுள்ள எல்லாப் பள்ளி ஆண்டுவிழாவிலும் இடம் பிடித்தது. பள்ளிக்கல்வி இயக்குனரின் ஆணையில்லாமலே அந்த வருட பாடத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தது. முன்னதாக சிறப்புப் பயிற்சி பெற்று ஆட இருந்த ஜவுளிக்கடை ஆறுமுகச்சாமி மகள், அதீத சுகவீனம் காரணமாக ஆண்டுவிழாவில் ஆடமுடியாமல் போனது. அதற்குப்பதிலாக வேண்டா வெறுப்பாக ஜெனிபா நியமனம் ஆனாள். கடைசி நிமிடம் வரை டைபாய்டு ஜுரத்தில் படுத்துக்கிடக்கும் தேன்மொழி எழுந்து வந்து விடுவாளோ என்னும் பயத்தோடே காத்துக்கிடந்தாள். ஆண்டு விழாவுக்கு முந்தினநாள்கூட பைன் ஆர்ட்ஸ் டீச்சர், தேன்மொழியைப் பார்த்து வரச்சொல்லி ஆள் அனுப்பியது இவளுக்கு தெரிந்த போது நிச்சயமாக அந்த கனவு கை நழுவிப்போகும் அபாயம் துரத்திக் கொண்டேயிருந்தது. அந்தப் பயத்தோடே ஆண்டுவிழாவும் வந்தது.

காரிலும், ஸ்கூட்டர், பைக்குகளிலும் வந்திறங்கிய கூட்டம் பள்ளிக்கூட வளாகத்தை நிறைத்திருந்தது. பிரம்பும் சாக்பீஸீம் நட்டு வைத்திருந்த பள்ளி வளாகமெங்கும் பூக்களும் சந்தோசமும் முளைத்துக் கிடந்தது. மாணவிகள் தாய் தந்தையரோடு அமர்ந்து ஒவ்வொரு டீச்சரையும் அடையாளம் காட்டினார்கள். உட்கார்ந்த இடத்திலிருந்தே வகுப்பறையை தம்பி தங்கைகளுக்கு அறிமுகப் படுத்தினார்கள் தகர நாற்காலிகளைத் தாண்டிக் குதித்தோடிய குதூகலங்கள் கேம்ஸ் டீச்சரைப் பார்த்தவுடன் குலுங்கி நின்று போனது. ஜெனிபாவும் அம்மையைத் தேடினாள். அந்தப் பெருங்கூட்டத்தில் சாயம்போன ரவிக்கையும், சந்தோசம் தொலைந்து போன முகமும் கொண்ட அம்மையைக் காணவில்லை. எத்தனைப் பெரியக் கூட்டத்திலும் தாயின் இருப்பையும், எவ்வளவு தூரத்திலும் கன்றுக்குட்டியின் கனைப்புச் சத்தத்தையும், துல்லியமாய் கண்டுகொள்கிற நுணுக்கம் விலங்குகளிடமிருந்தே மனித இனத்திற்கு தொற்றிக் கொண்டு வந்திருக்கிறது. கிளம்புகிற நேரத்தில் எவ்வளவோ கெஞ்சியும் வர மறுத்தவளை எதோவொரு குருட்டு நம்பிக்கையில் எதிர்பார்த்தாள். அதிசயம் எதுவும் நடந்து அம்மை வந்துவிட வேண்டினாள். புளியம்பட்டி அந்தோணி யாரையும், நென்மேனி இஞ்ஞாசியாரையும் மன்றாடிக் கெஞ்சினாள். மன்றாட்டுதலுக்கு யாரும் செவி சாய்க்கவில்லை. விதவிதமாய் அரிதாரம் பூசிக்கொண்ட சக மாணவிகள், கடவுள்களாகவும் நடனமாதர்களாகவும், தேசத்தலைவர்களாகவும், அவரவர் அப்பாக்களோடும் அம்மாக்களோடும் உட்கார்ந்திருந்தார்கள். அதைப்பார்த்ததும், தொண்டை கமறலெடுத்தது, கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

Girl

ஆண்டுவிழாவின் சம்பிரதாயங்கள் ஆரம்பமானது. தாளாளரின் நீண்ட பேச்சுக்கு ஆசிரியைகளும், பிரமுகர்களும் கை தட்டினார்கள். சிறப்பு விருந்தினர் பேசி முடிக்குமுன் ஆரம்பப்பள்ளியிலிருந்து ஆட வந்திருந்த குழந்தைகள் தூங்கிவிட்டிருந்தன. மேஜை நாற்காலிகள் அகற்றப்பட்டு, அரங்கம் வண்ண ஒளிகளால் நிரம்பியதும் பள்ளி வளாகமே உற்சாக நிறத்துக்கு மாறியது. ஒவ்வொரு நிகழ்ச்சி அறிமுகத்துக்கும் பெற்றோரும், உற்றாரும் கையலி எழுப்பினார்கள். ஆறாம் வகுப்பு மாணவி ஜெனிபர்’அறிவிக்கப்பட்டபோது அரங்கத்தின் கடைசியிலிருந்து யாரோ கைதட்டினார்கள். அது சிலேட்டாவாகவோ இல்லை தெருப்பிள்ளைகளாகவோ இருக்கலாம். அசிரத்தை யோடு சலசலத்திருந்தது கூட்டம். இருபது வயலினின் கணத்த ஒலி யோடும் தபேலாவும் ஆண்குரலும் இணைந்து ஜதி சொல்லும் அந்தப் பாட்டு ஆரம்பித்தது. ஒரு விறுவிறுப்பான பாடலின் முடிவு போலிருக்கும் தொடக்கம்.

மந்தமான வெளிச்சமும், லேசான வாடைக்காற்றும் வீசுகிறபோது திடுதிடுவென இடி முழங்குமே அதுபோல. அந்த இசைக்கு, சூறைக்காற்றில் இழுத்துவரப்பட்ட ஒரு சேலைத்துணியைப் போல் அரங்கமெங்கும் அலைந்தாள். அந்த ஆரம்ப இசை சட்டென மொத்தமாய் நின்றுபோகும்போது அரங்கத்தின் மையத்தில் ஒரு சோகச்சித்திரமாய் நின்றிருந்தாள். ஜானகியின் உருக்கமான குரல் “அழகு மலர் ஆட” என்று மீண்டும் ஆரம்பிக்கும்போது மிகச்சரியாக உதடசைத்துக் கொண்டு காலையும் கையையும் ஆட்டினாள். ஷெனாயின் நாதம் இடையிடையே வரும்போதெல்லாம் உடலை தளர்த்திக் கொண்டு, மழையில் நனைந்த கோழிக்குஞ்சுபோல் நின்று கொள்வதும், தத்தீந்த்த, தத்தீந்த்த ஜதிச்சத்தம் வரும் போதெல்லாம் கைதேர்ந்த சிலம்பாட்டக்காரனைப் போலவும், சாமியாடிகளின் சிலிர்ப் போடும் தங்குதங்கென்று குதித்தாள். அந்தப் பெருங்கூட்டம் இசையனுபவத்தை நடன அசைவுகளோடு உள்வாங்கி உறைந்து போயிருந்தது. நடன இலக்கணத்துக்குள் வரையறுக்க முடியாத அந்த அசைவுகளில், நிருத்தம், முத்திரை, அடவுகள் எனும் மூலக் கூறுகளில்லையென்றாலும், சோகமும்,கோபமும், ஆற்றாமையும் துல்லியமாக உணர்த்தப்பட்டிருத்ததை கூட்டம் அமைதியாக ஏற்றுக்கொண்டிருந்தது. அகல விரிந்த கண்களும், நெரிந்து சுருங்கிய புருவங்களும் ஜெனிபா போன திசையெல்லாம், தொடர்ந்தது. சிறப்பு விருந்தாளி, செல்லமாக முதுகில் தட்டிக் கொடுத்தார். யாரிந்தப் பெண், எந்த தெரு என விசாரிப்புகள் நடந்து கொண்டிருந்தது. தெருவைத் தெரிந்துகொள்வதில் மனிதர்களுக்கிருக்கிற அக்கறை பெரும் உள்நோக்கம் நிறைந்தது. அடுத்தவரின் புற அடயாளம் கண்டுபிடிக்கிற ஆவல் சூழ்ச்சிக்காரர்களின் கண்டு பிடிப்பு. ஜெனிபா நேராக வீட்டுக்குப் போனாள். தெருவே அவளை வேடிக்கை பார்த்தது. அதற்குள் அவள் நடனம் பிரபலமாகி விட்டதென உள்ளுக்குள் இனிப்போடு வீட்டை நெருங்கினாள். வீடு இருட்டாக கிடந்தது. அம்மையைக் கூப்பிட்டாள். பதிலில்லை. ஆனால் ஆளிருப்பதுபோலத் தெரிந்தது. அது குறித்து ஆராயாதபடிக்கு நடன சந்தோசம் நிறைந்திருந்தது. ஒரு வேளை தனக்குத் தெரியாமலே ஆண்டுவிழா பார்க்க வந்திருப்பாள் என்று நினைத்துக்கொண்டு அப்படியே, சிலேட்டாவைத் தேடிப் போனாள். நெடுநேரம் பேசிக்கொண்டும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டும் பொழுது போனது.

ஏன் வீட்டுக்குப் போகவில்லை என்று அவளும் கேட்கவில்லை. ஜெனிபா கிளம்பும்போது, வீட்டிலிருந்து யாரோ கிளம்பிப்போனது மாதிரி தெரிந்தது. அதன்பிறகு கொஞ்ச நேரங்கடத்திவிட்டு அந்த ஆளில்லாத் தெருவில் நடந்தாள் அப்பன் தள்ளாடித்திரிந்த அதே தெருவில்.

ஒரு பெரிய ஸ்பேனரைக் கிடத்திப்போட்டது மாதிரியான வடிவம் கொண்டது அந்த தெரு. தொடக்கமும் முடிவும் அகலமாகவும் வரவர சுருங்கி ஒரு சைக்கிள் ரிக்சா மட்டும் கடந்து போகக்கூடிய சந்தாக மாறிப்போகும். தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கிளைவிட்டு தெருவாகி ரயில்வே பீடர் ரோட்டில் போய் முடிகிற அந்தத் தெருவின், தெற்கில் ஆரம்பித்து முடிகிறவரைக்கும், பெரிய வேதக்கோயிலின் மதில் சுவர் நீண்டிருக்கும். நகரத்தின் சாக்கடைக் கால்வாய் ஓடிக்கொண்டிருக்கும். ஒன்னு தெரியுமா, எல்லா நகரங்களிலும் கழிவுகள் சூழ்ந்திருக்கும் தெருக்களில்தான் கடைசிக்குடி மக்கள் காலம் கழிக்கவேண்டும் என்கிற நியதி இருக்கும். அது எந்த கடுமையான சட்டங்களும் இல்லாமல் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். இரண்டாயிரம் ஆண்டுகளாக கர்ப்பகிரகங்களுக்குள் நுழையவிடாமல் ஒதுக்கப்பட்டவர்களை, “தூரம் அபசர ரே சண்டாள”என்று தெருமுனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டவர்களை. அகல விரித்த கைகளோடு கனிந்துருகும் கண்ணொளியோடு “வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் இளைப்பாறுதல் தருகிறேன்” என அழைத்ததும், தயங்கித்தயங்கி நுழைந்தார்கள். அவர்களின் பாதங்கள் வெள்ளைப்பாதிரியார்களின் விசாலமான பங்களாவுக்குள்கூட நடமாடுகிற பெரும் பாக்கியம் அடைந்தது. அந்த கருப்புக்கால்களுக்கு சொந்தக்காரர்களான கருப்பணன், மாடன், பூச்சன்களெல்லாம் அந்தோணி, சகாயம், விசுவாசம் ஆக மாறிப்போனார்கள். அந்தச்சந்ததியில் வந்த சகாயத்துக்கு கை வண்டியிழுக்கிற உத்யோகம் பருத்தி மாலில் இரவும் பகலும் காத்துக்கிடப்பான். சதா பீடிப்புகையும், கஞ்சா நாத்தமும் சூழ்ந்திருக்கும் சகாக்களோடு முதலாளிகளின் பெருமையைப் பற்றியும், தொழிலாளிகளின் வீட்டுக்கதைகளைப் பற்றியும் பேசிக் கிடப்பார்கள். ரயில்வே கேட்டைத்தாண்டிய வேலிமறைவில் சாராயக்கேன்கள் இவர்களின் வருகைக்காகக் காத்துக்கிடக்கும். மோகன் பெட்டிக்கடையில் பட்டை ஊறுகாயை வாங்கிக் கொண்டு போகிறவர்கள் கடன் சொல்லியாவது தினம் ரெண்டு கிளாஸ் ஏத்திக்கொண்டு தான் வீடு திரும்புவார்கள். அறுவடைக் காலங்களில் சுத்துப்பட்டியிலிருந்து மிளகாய்,பருத்தி பயறு சோளம் என்று வண்டி வண்டியாய் வந்திறங்கும்.அப்படியான நாட்களிலும் லாரிகள் அதிகமாக வரும் காலங்களிலும் கை நிறைய காசு புழங்கும். அப்போதெல்லாம் நாய்க்கர் கடையில் சாப்பிட்டுவிட்டு, ராப்பகலாய் வீட்டுக்குப் போகாமல் பேட்டையிலேயே தங்கிவிடுவார்கள். எல்லா லோடுமேன்களின் குடும்பங்களிலிருந்து பிள்ளைகளும் மனைவிகளும் சோத்துக்கு காசு வாங்க வருவார்கள். ஜெனிபாவும் வருவாள். ஒரு கையில் கொக்கியையும் மறுகையில் நுனியையும் பிடித்துக்கொண்டு நூறு கிலோ மூடைகளை அனாயசமாகத் தூக்கிப் போடுவார்கள். வயிறுகளில் வரி விழுந்து ஒட்டிப் போயிருக்கும்.

கால்களிலும் கைகளிலும் சதை திரண்டிருக்க முதுகில் இரண்டு புஜத்திற்குக் கீழும் கன்னங்கரேலென்று பானைக்கரியை தடவியதுபோல் காய்ப்பு ஏறியிருக்கும். அவர்களை வைத்த கண் வாங்காமல் வேடிக்கை பார்ப்பாள். வியர்வை வடிந்த நாற்றத்தோடு வந்து சகாயம் கன்னத்தைப் பிடித்துக்கொஞ்சி விட்டு சோத்துக்கு ரூவாயும், அவளுக்கு தனியாக வாங்கித் திங்க அஞ்சு ரூவாத்தாளும் தருகிற சகாயம். ரோசாப்பூ என்றுதான் கூப்பிடுவான், எவ்வளவு தூரமானாலும் தூக்கித் தோளில் வைத்துக் கொள்வான். பஸ்ஸில் போகும்போதுகூட அவளைத் தன் மடியிலிருந்து இறக்கமாட்டான். பள்ளிக்கூடம் போகாததற்கு அம்மை அடிக்கப்போக நாயை அடிக்கிற மாதிரி அடித்துக் கிடத்திவிட்டுப் போனவன்.

அவனுக்கென ஞாயிற்றுக்கிழமைகளில் தனியாக ஈரல் எடுத்து வறுத்து வைக்க வேண்டும். அதை ஒரு தூக்குச்சட்டியில் எடுத்துக்கொண்டு போய், வேண்டாகுளம் கம்மாயில் ரெங்கசாமி, காளப்பாண்டி, மாரீஸ்வரன், அய்யாச்சாமி என்கிற அய்யர் ஆகியோரோடு மூக்கு முட்ட குடித்துவிட்டு வருவான். ரயில்வே பீடர் ரோட்டிலிருந்து தெருவில் காலெடுத்து வைத்தவுடன், பதினாலு கட்டைச்சுதியில் பாட்டுப் பாடுவான், ரோட்டிலிருந்து வீட்டுக்கு கேட்கும். எல்லாம் எம்ஜிஆரின் தத்துவப்பாடல்கள். “ஆண்டவன் உலகத்தில் முதலாளி” பாட்டை மட்டும் சரியான சுதியில், கேட்கிற யாரும் உருகிப்போகும் வசியக் குரலில் பாடுவான்.” கல்லைக் கனியாக்கும் தொழிலாளி கவனம் ஒருநாளில் திரும்பும்” வரிகளில் நம்பிக்கையும் குரலும் கெட்டியாகும்.

வார வட்டி கொடுத்து வாங்கும் ரோசம்மையிடம் வம்புச் சண்டையிழுத்து அடிபட்டு வேட்டிசட்டை கிழிந்து வருவான். அந்த நேரத்தில்கூட ஜெனிபருக்குப் பிரியமான கருப்பட்டிச் சேவை டவுசர் பையில் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்ப்பான். உளறிக்கொண்டும், வேட்டித்துணி ஒதுங்கி, வாய் பிளந்து தூங்கிப் போவதுமாக கழிந்து போகும் அப்பனின் ஞாயிற்றுக் கிழமைகளை நினைத்தாலே தொண்டைக்குள் கருப்பட்டிச்சேவு கசக்கும். ஆனாலும் பல நூறு முறை பார்த்து பழகிப்போனதால் அதுவும் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி மாதிரியான ஒரு நிகழ்ச்சியாகிப் போனது. வாசலுக்கு முன்னாலும், வீட்டுக்கொல்லையிலும் நாறிக்கொண்டிருக்கிற சாக்கடையைப் போல், சாராய நெடியும் இயல்பானதாகிப் போனது.

அப்படியரு ஞாயிற்றுக்கிழமையில் அன்னையே ஆரோக்கிய அன்னையே என்று ஜேசுதாசின் குரலொலித்துக் கொண்டிருந்தபோது தெருவெங்கும் ஆணும் பெண்ணும் எதிரும் புதிருமாக அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். அது ஒரு அசாதரண பரபரப்பு குடி கொண்டிருந்த ஓட்டம். என்னவெனத் தெரியாமல் பதற்றம் மட்டும் தொற்றிக்கொள்ள ஒவ்வொருவராய் ஓட ஆரம்பித்தார்கள், ‘சாராயம் குடிக்கப்போன இருவதுபேர் செத்துப்போனார்கள், இல்லை ரெண்டு பேர் மயங்கிக் கிடக்கிறார்கள், ரெண்டு ஜாதிக்கும் மீண்டும் சண்டை. வெட்டுப்பட்டுக் கிடக்கிறார்கள்’ இப்படியான யூகங்களும் புரளிகளும் நகர் முழுக்கப் பரவி பற்றியெரிந்து கொண்டிருந்தது. வீட்டுக்கு வந்து அப்பனைத் தேடினாள். அப்படியே வெளியேறி வீதி தாண்டி, ரோடுதாண்டி ஓடினாள். அந்தோணியார், இஞ்ஞாசியார், செவத்தியார், அமலோற்பவ அன்னை, கருணைக்கடல் மீட்பின் தேவன், இருக்கங்குடி மாரியம்மா எனத் தெரிந்த கடவுள்கள் எல்லோரையும் இறைக்க இறைக்கக் கூப்பிட்டாள், என் அப்பா மட்டும் பிழைத்திருக்க வேண்டுமென வேண்டிக்கொண்டே ஓடினாள். கரை முழுக்க ஜனங்களின் கூட்டமும், தவிப்போடிக் கிடந்த கண்மாயில் வேலிக்கரடுக்குள் போகவும் வரவுமான, களேபரக் கூட்டம் விலக்கி ஓடினாள். அங்கே ரேவக்காள் சகாயத்தை மடியில் கிடத்திக்கொண்டு வான் நோக்கி கைகளை உயர்த்தினாள். அது நீண்டு போய் ஆகாயம் துளைத்து, துழாவித் தேடி வெறுமனே திரும்பி வந்தது. மிதமிஞ்சிய போதையில் தெருச்சாக்கடைக்குப் பக்கத்திலும், அடுப்படிக்கு எதிரேயுமாக வாய்பிளந்து கிடந்த அப்பனின் துக்கச் சித்திரம் நிரந்தரமாகிப் போனது. அதன்பிறகு இரவைவிட பகலிலேதான் அதிகமான இருட்டு அடர்ந்திருந்தது. அடுப்புப்பக்கமே போகாமல் அழுகையிலும், முகட்டை வெறித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதிலுமே அம்மைக்கு அநேக ஞாயிற்றுக்கிழமைகள் கடந்து போனது. ஞாயிற்றுக் கிழமைகள் இல்லாத வாரம் வராதா என்றிருந்தது ஜெனிபருக்கு.

இரவில் எந்த நேரம் முழிப்புத் தட்டினாலும் அம்மை தூங்காத கண்களோடு உட்கார்ந்திருந்தாள். அந்த வழியாக பாரவண்டி தள்ளிக் கொண்டு போகிற சட்டைப் போடாத யாரைப் பார்த்தாலும் வீட்டுக்குள் ஓடிவந்து அப்பனின் புகைப்படம் பார்த்து அழுதாள். எல்லாம் கொஞ்சநாள்தான். வயிறும் வாழ்க்கையும் அந்த இடங்களில் வேறுவேறு விசயங்களையும், மனிதர்களையும் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போய்விடும். இப்போது அண்டை வீட்டாரோடு வாரம் ஒருமுறையாவது சண்டை போடுவது வழக்கமாகிப்போனது. அற்ப விசயங்களுக்காக துவங்கும் பேச்சுப்போரின் இறுதிச்செய்திகள் இடியென இறங்கும். பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பிரிதொரு ஆடவனோடு பிணைத்துப் போடுவார்கள். துக்கம் இருந்த இடத்தில் சண்டையும் சாடைப்பேச்சும் உட்கார்ந்து கொண்டது. அம்மையின் மேல் ஜெனிபாவுக்கு வெறுப்பு வந்தது. ஒரு வாரம் அம்மையிடம் முகங்கொடுத்துப் பேசவில்லை. அதனாலேயே சிலேட்டாவைத் தேடித்தேடி போனாள். படிப்பை நிறுத்தி விடுவது தவிர வேறு கதி யில்லாதபடிக்கு வறுமை அவளை பயோனியர் தீப்பெட்டி ஆபீசுக்குள் கொண்டுபோய் விட்டது. கொஞ்ச நாளைக்கு பள்ளிக் கூட வாசல் வழியே தீப்பெட்டி ஆபீஸ் போவது கேவலமாகத் தெரிந்தது. ஆனாலும் சிலேட்டாவோடு இருக்கிறதால் அது பெரிதாக தெரியவில்லை. அந்த தீப்பெட்டி ஆபீசிலும் பள்ளிக் கூடத்திலிருக்கும் பிள்ளைகளைக் காட்டிலும் அதிகமான அவளது தெருப்பிள்ளைகளிருந்தார்கள். இப்போது அங்கு போவது கொஞ்சம் கொஞ்சமாக பிடித்துப்போனது. அங்கு பிலவேந்திரன் இருந்தான். அவன் பார்வை கண்களுக்குள் ஊடுருவி நெஞ்சுக்குழிக்குள் கிச்சுகிச்சு மூட்டியது. வெறுப்பு இருந்த இடத்தில் பிலவேந்திரன் வந்து குடி கொள்ளும்வரை அம்மை மோசமானவளாகத் தெரிந்தாள். ஒரு சனிக் கிழமை இரவு பத்துமணிக்கு அம்மை வெளியூர் போனதறிந்த பிலவேந்திரன், திடுமென முன் தோன்றினான். பயமும் சந்தோசமும் கலந்ததில் அவளுக்கு நா வறண்டிருந்தது. சினிமாவில் போலில்லாமல் மூர்க்கமாகத் தொட்டான். நிஜத்தீண்டல் உணர்ந்தாள். அப்போது வாசலுக்கு வெளியே அருள் சித்தி சத்தம் கேட்டது. அம்மையின் பேர் சொல்லிக்கூப்பிட்டாள். இரண்டுபேரும் மூச்சை அடக்கிக் கொண்டு உள்ளிருந்தார்கள். இன்று வாசலிலிருந்து இவள் திரும்பிப்போனது மாதிரியே அருள் சித்தியும் போய்விட்டாள். இப்போதெல்லாம் சந்தோசத்தின் சுவடுகள் அம்மையின் முகத்தில் ஒழிந்து கிடந்தது. நல்ல சேலை உடுத்திக்கொள்வதிலும் ஓரளவு அலங்காரம் பண்ணிக் கொள்ளவும் நாட்டமிருந்தது. நடுநிசி தாண்டிய ஆழ்ந்த தூக்கத்தில் ஏதோ குசுகுசுப்புகள் அமானுஷ்யக் கனவுபோல் கேட்கிறது. இந்த மாற்றத்தின் காரணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. ஜெனிபாவின் முகம்பார்க்க கூசுகிற அம்மையைப்பார்க்க மிகவும் பாவமாக இருந்தது.

ஜெனிபாவுக்கென்று சிலேட்டா, தீப்பெட்டி ஆபீஸ், சினிமா, அப்புறம் கற்பனைகள், அந்த கற்பனைச்சாயலில் ஊடுருவும் பிலவேந்திரன் எல்லாம் இருந்தது. பேச விளையாட, பொழுது கழிக்க, கனவு காண, கொஞ்சம் கொஞ்சமாக அப்பனின் நினைவுகளை மறந்து போக-அம்மைக்கு என்ன இருக்கிறது... நினைக்க, நினைக்க அழுகை முட்டிக்கொண்டு வந்தது. வீட்டுக்குப்போய் அம்மையின் மடியில் படுத்தாள். இதென்ன கிறுக்குத்தனம் ... சொல்லிக்கொண்டே தலை வருடினாள்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com