Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜனவரி 2006
நீதிபதி எஸ்.ஜெ. சதாசிவா குழு அறிக்கையும் அரசும், அதிரடிப்படையும்

ச.பாலமுருகன்

அம்மா, அப்புறம் அவர்கள்
குழந்தைகளை சித்திரவதை செய்தனர்
அந்த பிஞ்சுகளின் எலும்புகளை நசுக்கினர்
பின் மின்சார அதிர்வுகளை
உடலெங்கும் கொடுத்தனர்
இது மணிக்கணக்கிலும், நாள் கணக்கிலும்-
எல்லையற்று நீண்டது, அம்மா

பின் என்னை சுற்றிலும்
அவர்களின் கூர் அலகுகள் கொத்த தயாரானது அம்மா,
அப்புறம் கரிய இருட்டின் இருட்டு
அளவற்ற துயரத்துடன் என்னை கவ்வும் மயமயப்பில்
என் பித்து பிடித்த உலகம் அழத்துவங்கியது
அம்மா,
அப்புறம் நான் கதறினேன். என் வாழ்வில் நான்
எப்போதும் கதறிடாத வெறியுடன், அம்மா,
என் குழைந்து போன தெளிவற்ற இறுதி
வார்த்தைகளுடன், அம்மா,
அப்புறம் எல்லையற்ற துயரத்துடன்
குழந்தைகளும் அலறினர், அம்மா,
பின் நான் அலறினேன், அம்மா,
என் வாழ்வில் நான் எப்போதும்
அலற முடியாத அளவு....

-மரியா யுகினியா பிராவோ கால்டிராரா,
சிலி.

அரச வன்முறை அதன் அதிகாரவெறியுடன் தலை விரித்தாடும் போது சிறு எதிர்வினையேனும் சிவில் சமூகத்திலிருந்து வெளிப்படுவதன் மூலமே சனநாயகம் என்ற ஒன்றையும் மனித உரிமைகளையும் நாம் உயிர்பிழைக்க வைக்க இயலும். நம் சமூகம் சட்டத்தின் ஆட்சி வழி நடப்பதாகவும் சமூகம் எப்போதும் ஒரு நேர்க்கோட்டு பாதையில் பயணிப்பதாகவும் தானுண்டு, தன் வேலை உண்டு என ‘பொறுப்புடன்’ வாழும் வாழ்க்கையை நாம் பின்பற்றி வருகின்றோம். நம் கல்வி, குடும்பம் எல்லாவற்றிலும் இந்த பொறுப்பான வாழ்க்கை மறு பிரதிபலிப்பு செய்ய நமக்கு சொல்லித் தரப்படுகிறது.

Tribes சமகாலத்தில் நமக்கு பக்கத்தில் வாழும் மக்களுக்கு நிகழும் பல உண்மைகளை முயன்று அறிய முற்பட்டால் நம் வாழ்வை சூழ்ந்திருந்த அந்த நிம்மதியான கானல் வட்டம் மறைந்து போவதைக் காணலாம். உண்மைகள் நமக்கு வேறுவகையான வாழ்க்கையை, மக்களை காட்டுவதை நாம் எதிர்கொள்ளலாம்.

தமிழக கர்நாடக எல்லைப்பகுதி மாவட்டங்களில் அதனை சார்ந்த மேற்குத்தொடர்ச்சி மலை கிராமங்கள் போன்றவை கடந்த 1990 முதல் 1997 வரை சந்தனக் கடத்தல் வீரப்பனின் நடமாட்டம் நிறைந்த பகுதிகளாகும். 1993-ம் ஆண்டு தமிழக கர்நாடக அரசுகள் வீரப்பனைப் பிடிக்க கூட்டு அதிரடிப்படை என்ற சிறப்பு இலக்குப் படையை உருவாக்கியது. இப்படையினருக்கு மற்ற காவல் துறையினரைவிட கூடுதலான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. வீரப்பனின் கூட்டாளிகளை குறைப்பதற்காக கொலை செய்யும் உரிமையைக் கூட மறைமுகமாக அது பெற்றிருந்தது. விசாரணைக்கென்று அழைத்துச் செல்லப்பட்ட பலர் காணாமல் போயினர். பலர் மோதல் சாவுகள் என்ற பெயரில் கொல்லப்பட்டனர். அதிரடிப்படைக்கென ஒதுக்கப்பட்ட பல கட்டிடங்கள் வதை முகாம்களாக மாற்றப்பட்டன. குறிப்பாக தமிழகத்தில் பண்ணாரி கோயிலை ஒட்டியிருந்த அதிரடிப்படை முகாம். கர்நாடகத்தின் மாதேஸ்வரன் மலைக்கோயிலுக்கு பின்புறமிருந்த அதிரடிப்படை முகாம் உள்ளிட்ட பல முகாம்களிலிருந்து தொடர்ந்து மரண ஓலமும் வதையால் ஏற்பட்ட அலறலும் வெளிப்பட்டது. பல சமயம் இவ்வலறல்கள் அப்பகுதியில் கடை வைத்திருந்த பலரையும் அச்சமுறச் செய்தது. பின் அதுவே அவர்களுக்கு பழகியும் போனது.

இவ்வதை முகாம்களுக்கு கொண்டுவரப்பட்ட மனிதர்களை சித்ரவதை செய்ய பல்வேறு கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. தலை கீழாக தொங்கவிட ராட்டினம் போன்ற கருவிகள். உடலின் துவாரம் உள்ள மென்பகுதிகளில் மின் அதிர்வு தர நேர்மின் விசையை உற்பத்தி செய்யும் டைனமோ உள்ள மெக்கர் பெட்டி என்ற மின் உற்பத்தி கருவி, நகங்களை பிடுங்கும் கொறடுகள் என நீண்டது அந்த உபகரணங்கள். நிபுணத்துவம் வாய்ந்த பல காவலர்கள் இதற்கென அங்கு இருந்தனர். வீரப்பனுக்கு உதவியவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட மலை கிராம மக்களிடமிருந்து இவ்விதமான வதை முறைகள் மூலம் வீரப்பனைப் பற்றிய உண்மையை அறிய தமிழக கர்நாடக போலீசார் முயன்றனர். அவ்வப்போது பத்திரிகைகளில் வீரப்பன் கூட்டாளி சண்டையில் சுட்டுக் கொலை என்ற செய்தி தொடர்ந்து வரும் சூழலிருந்தது. இந்த சண்டையில் செத்ததாக கூறப்பட்டவர்கள் வதை முகாம்களிலிருந்தோ அல்லது விசாரணைக்கென வீட்டிலிருந்தோ அழைத்து செல்லப்பட்டவர்கள் என்பது செத்தவர்களின் குடும்பத்தாருக்கோ அல்லது அவர்களுடன் இருந்தவர்களுக்கோ மட்டுமே தெரிந்த உண்மையாக இருந்தது.

துப்பாக்கிகள், அதிகாரங்கள், அடக்குமுறை என்று நீண்ட அரசின் வன்முறை பொது சமூகத்தில் உள்ள எல்லா நியாயத்தின் குரல்களையும் கழுத்தைப் பிடித்து நசுக்கியது. வீரப்பனின் தேடுதல் வேட்டை தொடர்பாக தமிழகத்தில் மட்டும் 75 பேர் மீதும் கர்நாடகத்தில் 123 பேர்களின் மீதும் தடா வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் கைது செய்யப்பட்ட பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு போலீசாரால் உள்ளாக்கப்பட்டவர்களாயிருந்தனர். தன் கண்முன்னே கணவனை சுட்டுக் கொன்றதன் மௌன சாட்சியாகவும் நின்று அவர்கள் சிறைகளில் வாடினர். இக்கொடுமைகளுக்கு எதிராக சில மனித உரிமை மற்றும் சனநாயக இயக்கங்கள் குரல் எழுப்பின. தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம், மக்கள் சிவில் உரிமைக்கழகம், மக்கள் கண்காணிப்பகம்,சோக்கோ அறக்கட்டளை-மதுரை, சிக்ரம்- பெங்களூர் ஆகியவைகளுடன் சில சனநாயக ஆர்வலர்களும் இப்பிரச்னையில் மீறப்பட்ட மனித உரிமைகளுக்காக குரல் எழுப்பினர்.

இப்பிரச்சினையில் அதிரடிப்படை காவலர்கள் வீரப்பன் தேடுதல் வேட்டையில் மனித உரிமையை மீறினார்களா என ஆய்வு செய்யவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நோக்கிலும் 1999ம் ஆண்டு இறுதியில் தேசிய மனித உரிமை ஆணையம் கர்நாடக ஓய்வு பெற்ற நீதிபதி சதாசிவா மற்றும் தமிழகத்தை சார்ந்த முன்னாள் மத்திய புலனாய்வுத் துறை இயக்குனர் சி.வி.நரசிம்மன் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது.

இக்குழு 2000 ஜனவரியில் முதல் விசாரணையை தமிழகத்தின் கோபிச்செட்டிப் பாளையத்தில் துவங்கியது. அதன்பின்பு பத்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு பகுதிகளில் இவ்விசாரணை நடத்தப்பட்டது. இவ்விசாரணையை தடுக்க காவல்துறை பல்வேறு யுக்திகளை கையாண்டது. குறிப்பாக, ஓராண்டுக்குள் நடைபெற்ற மனித உரிமை மீறல் குற்றங்களைத்தான் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு சட்ட உரிமை உள்ளது எனக்கூறி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இரண்டுமுறை தடையாணைகளைப் பெற்றது.

கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சமயத்தில்கூட இவ்விசாரணைக் குழுவிற்கு உயர் நீதிமன்றத்தில் இருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இவ்வாறு பல கட்ட சோதனைகளை தாண்டி நீதிபதி சதாசிவா விசாரணைக்குழு அதன் இறுதி அறிக்கையை கடந்த 2-12-2003ல் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இவ்விசாரணை முடிவு குறித்து விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம், பல கடிதங்கள் எழுதியும் இப்பிரச்னையில் காலம் கடத்துவதற்காக தொடர்ந்து கள்ள மௌனம் சாதித்து வந்தன தமிழக கர்நாடக அரசுகள். மற்றொருபுறம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கு வதை தள்ளிப் போடக்கூடாது என தேசிய மனித உரிமை ஆணையத்தை நிர்ப்பந்திக்க மனித உரிமை மற்றும் சனநாயக இயக்கங்கள் பல போராட்டங்களை நடத்தின.

பாதிக்கப்பட்ட மக்கள் 2005 அக்டோபர் மாதம் டெல்லி சென்று தேசிய மனித உரிமை ஆணையத்தின் நீதிபதிகளிடம் இப் பிரச்னையின் கொடூரத்தை விளக்கிய பின்னரே அது தூசு படிந்திருந்த இக்குழுவின் அறிக்கையை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க முன்வந்தது. பிரதமர் மன்மோகன்சிங் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் என பல்வேறு உயர் தலைமைக்கு வீரப்பன் தேடுதல் வேட்டையில் காவல் துறையின் மற்றொரு முகத்தை வெளிப்படுத்தி நிர்பந்திக்கப் பட்டது. தமிழகத்தில் நடந்த இக்கொடூரம் முதன்முதலில் டெல்லியின் காதுகளுக்கு பல ஆண்டுகள் கழித்தே எட்டியது. தமிழகத்தில்கூட பலருக்கு அதன் பின்பே இதுவும் மக்களின் பிரச்னை என்ற எண்ணம் வந்தது.

நீதிபதி சதாசிவா விசாரணைக்குழு அறிக்கை 489 பக்கங்கள் கொண்டதாக உள்ளது. பாதிக்கப்பட்ட 197 சாட்சிகள், குற்றம் சுமத்தப்பட்டதால் விசாரிக்கப்பட்ட 38 காவல் துறையினர் போன்றவர்களும் பல்துறை நிபுணர்களும் இவற்றுடன் விசாரிக்கப் பட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட 197 சாட்சியங்களில் 89 சாட்சிகளைத்தான் விசாரணையில் நம்பகத்தன்மை உடையதாக கருதுகிறது. மற்ற சாட்சிகளின் சாட்சியங்களில் சிறுசிறு முரண்பாடுகள் வருவதால் அதனை ஏற்கவில்லை. ஆனால் மேற்கண்ட 89 சாட்சியங்களின் அடிப்படையில் கீழ்கண்டவாறு தன் முடிவுகளை வெளிப்படுத்தகிறது.

அதிரடிப்படை அத்துமீறல்:

தமிழக கர்நாடக சிறப்பு அதிரடிப்படை என்பது எந்த சட்ட வரையறையும் இல்லாமல் உருவாக்கப்பட்டதாக உள்ளது. இந்த சிறப்பு அதிரடிப்படைக்கென எந்த அறிவிப்பும் அரசிதழில் வெளியிடப்படவில்லை.

Tribes வெறும் ஆயுதப்படை மட்டுமேயான இது ஒரு காவல் நிலையத்திலிருந்து உதவி செய்யலாமே தவிர வேறுவகையான அதிகாரங்கள் இப்படைக்கு கிடையாது. ஆனால் இந்த அதிரடிப்படை எல்லையற்ற அதிகாரத்துடன் செயல் பட்டுள்ளது. சந்தேகிக்கும் ஒருநபரை எங்கு வேண்டுமானாலும் வந்து கைது செய்து கொண்டு சென்றுள்ளது. அவ்வாறு கைது செய்யப்படும்போது அப்பகுதி காவல் நிலையத்தில்கூட அக்கைது குறித்து தெரிவிக்கவில்லை. இதுவே வாடிக்கையாகவும் இருந்துள்ளது. உண்மையில் அதிரடிப்படைக்கு ஒருவரை கைது செய்யவோ அல்லது சோதனையிடவோ எந்த அதிகாரத்தையும் சட்டம் வழங்கவில்லை. ஆனால் தமிழகத்தைச் சார்ந்த காவல் துறை அதிகாரி தேவாரம் தனக்கு எல்லையற்ற அதிகாரம் உள்ளதாக இக்குழுவின் விசாரணையில் கூறியிருந்தார். அவ்வாறு எல்லையற்ற அதிகாரம் எந்த உயர் அதிகாரிக்கும் கிடையாது. அவர் நேரடியாக அதிகாரத்தை செலுத்த முடியாது. அந்தந்த பகுதி காவல் அதிகாரிகளே உரிய பகுதியில் சட்டத்தை பராமரிக்க வேண்டியவர்கள். மேலும் அதிரடிப் படையை வழி நடத்தியதில் பல்வேறு தவறுகளை தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் செய்துள்ளனர். வீரப்பன் தேடுதல் வேட்டையில் பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர் அதிரடிப்படையினர். மின் உற்பத்தி சாதனத்தின் மூலம் மின்சாரத்தை பாய்ச்சி சித்ரவதை செய்வது, கொடூரமாக தாக்கி உடல் உறுப்புக்களை முடமாக்குவது, வதையால் மனநிலை பிறழ்வு ஏற்பட செய்வது, பாலியல் வக்கிரத்தோடு செயல்படுவது போன்ற கற்பனை செய்ய முடியாத கொடூரங்கள் நிகழ்ந்துள்ளன. இவை நியாயப்படுத்த முடியாதவையாகும்.

பெண்கள் மீதான பாலியல் வன்முறை:

விசாரணைக்குழு பெண்கள் மீது நடந்த பாலியல் வன்முறைக்கு எடுத்துக் காட்டாக லட்சுமி என்பவரின் சாட்சியத்தை எடுத்துக் கொள்கிறது. மாதேஸ்வரன் மலையிலிருந்த அதிரடிப்படை வதை முகாமான ஒர்க்ஷாப்பிலும் , அங்கிருந்த ஒரு பங்களாவிலும் மூன்று வருடங்கள் இவர் கர்நாடக அதிரடிப்படையினரால் ஒரு பாலியல் அடிமைபோல அவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு பலமுறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார் என்பதை நம்பும் வகையில் சாட்சியத்தின் நிலை உள்ளதை ஏற்று அதிரடிப் படையின் முகாம்களில் பெண்கள் மீது பாலியல் வன்முறை நிகழ்ந்துள்ளது என்ற முடிவுக்கு விசாரணைக்குழு வருகிறது. பாலியல் வல்லுறவின் சித்திரவதையால் பாதிக்கப்பட்ட பெண் அதன் பின்பு நடை பிணமாகவே தன் வாழ் நாளை கழிக்க வேண்டிய அவலச்சூழல் உள்ளது. எனவே பாலியல் வல்லுறவு என்ற கொடிய சித்திரவதையின் வடிவமான வன்செயல் அதிரடிப்படை காவலர்களால் நிகழ்ந்துள்ளது என்று முடிவு செய்கிறது.

மோதல் சாவுகள்:

அதிரடிப்படை வீரப்பன் தேடுதல் வேட்டையில் நிகழ்ந்த கொடுமைகளின் உச்சம் போலி ‘மோதல்’ சாவுகள். விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட வர்கள், வதை முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் எனப் பலரை வனப்பகுதிக்கு கொண்டு சென்று சுட்டுக் கொன்றபின் ‘வீரப்பனின் கூட்டாளிகளுடன் அதிரடிப்படை காவலர்கள் வனப்பகுதியில் நடத்திய சண்டையில் அவனது கூட்டாளிகள் சாவு’ என்ற செய்தி வெளிவருவது வாடிக்கையானது. இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் தங்கள் கண்முன்னேயே சுடப்பட்டதாகவும், தாங்கள் அறிய அவர்கள் வனப்பகுதிகளுக்குள் காவலர்களால் கூட்டிச் செல்லப்பட்டதாகவும் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் அவர்களை அறிந்தவர்களும் விசாரணைக்குழுவில் சாட்சியமளித்திருந்தனர். இச்சாட்சியங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது விசாரணைக்குழு. வீரப்பன் தேடுதல் வேட்டையில் 1990 ஜனவரி முதல் 1998 ஆகஸ்ட் முடிய அரசின் அதிகாரப்பூர்வ கொலைப்பட்டியல்படி கர்நாடகப் பகுதியில் நடந்த ‘சண்டையில்’ 38 சாவுகளும் தமிழகப் பகுதியில் நடந்த சண்டையில் 28 சாவுகளும் 12 வெவ்வேறு மோதல்களில் நிகழ்ந்திருப்பதாக இரண்டு மாநிலத்தில் மலைப்பகுதி காவல் நிலையங்களில் இறந்தவர்களை குற்றவாளிகளாக சித்தரித்து முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேற்கண்ட தகவல் அறிக்கையையும் குண்டுக் காயங்களுடன் இறந்தவர்களின் உடல்களை சடலக் கூறாய்வு செய்த அறிக்கையையும் பரிசீலனைக்கு விசாரணைக்குழு எடுத்துக் கொள்கிறது. பரிசீலனைக்கு உதவியாக பெங்களூர் தடவியல் ஆய்வக உதவி இயக்குனர் திரு.பிரபாகரன் என்பவரின் நிபுணத்துவத்தையும் கேட்டு அறிகிறது.

மோதல் சாவுகளில் இறந்ததாக சொல்லப்பட்டவர்களின் உடல்களில் குண்டு துளைத்த பகுதிகள், குண்டு காயத்தின் தன்மை, துப்பாக்கியிலிருந்து இறந்தவர்களின் உடலில் அது தாக்கிய தொலைவு ஆகியவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறது.
சடலக்கூறாய்வு அறிக்கையில் உள்ள குண்டு துளைத்த காயத்தின் தன்மை, அது சதையை கிழித்துள்ள விதத்தை வைத்து குண்டு வந்த தொலைவு கணக்கிடப்படுகிறது. அதன் படி இரண்டடி தொலைவில் வெகு அருகிலிருந்து சுடப்பட்ட (contact rang) துப்பாக்கிச் சூடு, இரண்டடியிலிருந்து 300 யார்ட்ஸ் (1 யார்ட்ஸ் - 3அடி) தூரம் சுடப்பட்ட மிதமான தூரத்திலான துப்பாக்கி சூடு, (medium rang) மற்றும் 300 யார்ட்ஸ் தூரத்திற்கு மேலிருந்து துப்பாக்கி குண்டு தாக்கிய இலக்கு (long range firing) ஆகியவற்றைக் கொண்டு இறந்த உடல்களின் சடலக் கூறாய்வு அறிக்கையை பரிசீலித்ததில், கர்நாடகத்தில் கொல்லப்பட்ட 38பேரில் 36 பேரின் காயங்களைப் பற்றி அறிய முடிந்தது. அதில் 6 பேர் மிக அருகில் இரண்டடி தூரத்தில் சுடப்பட்டுள்ளனர். அவர்களில் புட்டன் என்பவரது வாயில் துப்பாக்கியை வைத்து சுட்டுள்ளனர். துப்பாக்கி குண்டு அவர் மண்டையோட்டை பிளந்து கொண்டு வெளியேறியுள்ளது. மணி(எ) சௌதாமணி, பாப்பாத்தி ஆகிய இரு பெண்களின் உடலிலும் துப்பாக்கி முனையை வைத்து சுட்டுள்ளனர். மேலும் வெகுஅருகில் வைத்து ஒருவர் சுடப்படும் போது துப்பாக்கியின் குண்டுடன் வெளிப்படும் வெடித்துகள்கள், கரி படிவம், குண்டு காயத்துக்குள் காணப்படும். அவ்வாறு இறந்தவர்களின் உடல்களில் உள்ள காயத்தின் தன்மை அவர்கள் வெகு அருகில் இருந்து சுடப்பட்டதை தெளிவாக்குகிறது. மற்றவர்கள் மிதமான தொலைவிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அதிரடிப்படை காவல்துறை சுட்டுக் கொன்ற கணக்கில் காட்டப்பட்ட 28 சாவுகளில் உரிய ஆவணங்கள் இருந்த 13 சாவுகளின் ஆய்வில் அவை அனைத்தும் நடுத்தரத் தொலைவில் இருந்து சுடப்பட்டவை என விசாரணைக்குழு கருதுகிறது. மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட, கொல்லப்பட்ட 66 பேர்களும் அவர்களின் உடலில் குண்டுகள் பெரும்பாலும் தலை அல்லது தலையை ஒட்டிய பகுதிகளில் துளைக்கப்பட்டுள்ளது. எனவே இயல்பாக உண்மையான சண்டை என்று நடந்திருக்குமேயானால், தொலைவிலிருந்து துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கும் சூழலில் குண்டுகள் வளைந்து தாக்கிய காயங்கள் எதுவும் இறந்தவர்களின் உடல்களில் இல்லை. எனவே மிக திட்டமிட்டு மிக அருகாமையில் அல்லது சற்று தொலைவிலிருந்து உடனடி மரணம் ஏற்படுத்தும் நோக்கில் அவர்களின் உடலின் தலை, மார்பு போன்ற பகுதிகளை குறி வைத்து சுடப்பட்டுள்ளது. எனவே இந்த மரணங்கள் ஒரு உண்மையான சண்டையில் நடந்திருக்க வாய்ப்புகளில்லை. இது சந்தேகத்திற்கிடமான மர்மமான முறையில் நிகழ்த்தப்பட்ட சாவுகள் என விசாரணைக்குழு முடிவு செய்கிறது.

சுடப்பட்டவர்கள் குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டதால் கர்நாடக அதிரடிப்படை பல சாவுகளுக்கு உரிய விசாரணை மேற்கொள்ளாமல் வழக்கை முடித்துக்கொண்டது. ஒருசில வழக்குகளில் கண்துடைப்புக்காக ஆர்.டி.ஓ விசாரணை நடத்தப்பட்டுள்ளது. உதாரணமாக கர்நாடகத்தின் மாதேஸ்வரன் மலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாமதள்ளி கிராஸ் என்ற பகுதியில் வீரப்பன் கூட்டாளிகளுக்கும் போலீசாருக்கும் நடந்ததாக சொல்லப்பட்ட ஒரு சம்பவத்தில் வெங்கடாசலம், தங்கவேல், சண்முகம், கொளந்தை என்ற நான்குபேர் அதிகாலை 2 மணிக்கு குண்டுகாயம் அடைகின்றனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாகவும் ஆனால் வரும் வழியில் காலை 5 மணிக்கு நால்வரும் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் காலை 7 மணிக்கு மைசூரில் இருக்கும் ஆர்.டி.ஓ, சம்பவம் நடந்த பகுதிக்கு வந்து விசாரணையை துவங்கிவிட்டதாக காவல்துறை ஆவணம் தெரிவிக்கிறது. உண்மையில் சம்பவம் நிகழ்ந்ததாக சொல்லும் பகுதி வனப்பகுதி. மாதேஸ்வரன் மலைக்கும் அதற்குமிடையே 25 கிலோமீட்டர் தொலைவு உள்ளது. மாதேஸ்வரன் மலையிலிருந்து மைசூர் 140 கிலோமீட்டர் தொலைவாகும். இந்நிலையில் காலை 5 மணிக்கு இறந்தவர்களைப் பற்றிய தகவல் மைசூருக்கு சென்று அவர் சம்பவ இடத்திற்கு காலை 7 மணிக்கு வந்து விசாரணையை துவக்கியதாக சொல்லும் விதம் நம்பகத்தன்மையோடு இல்லை.

கண் துடைப்புக்காக பின்னிட்டு தயாரிக்கப்பட்டது எனவும் முடிவு செய்யப்படுகிறது. அதேசமயம் தமிழ்நாடு அதிரடிப்படை நடத்திய மோதல் சாவுகளுக்கு ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இறந்தவர்களின் குடும்பத்தாரிடம் வசதியாகவே எவ்விதமான விசாரணையும் செய்யப்படவில்லை. இறந்து போனவர் நிலைபற்றி அவர்கள் குடும்பத்தினர் உண்மைகளை வெளிப்படுத்தக் கூடும் என்பதால் இது தவிர்க்கப்பட்டுள்ளது என விசாரணைக்குழு முடிவு செய்கிறது. எனவே இம்மோதல் சாவுகள் குறித்து நீதித்துறை சார்ந்த பாரபட்சமற்ற விசாரணை மிக அவசியமானது. ஏற்கனவே போலீஸ் கமிஷனின் வழி காட்டுதல்படி சந்தேகப்படும் மரணங்களுக்கு மாவட்ட நீதித்துறை நீதிபதியின்கீழ் உரிய விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவ்விதமான விசாரணைக்கு அனைத்து மோதல் சாவுகளும் உட்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் மோதல் சாவுகள் என்ற பெயரில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் உரிய இழப்பீடு பெற தகுதியுடையவர்கள் என்றும் நீதிபதி சதாசிவா விசாரணைக்குழு கருதுகிறது.

தடா சிறைவாசிகள்:

இவ்வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் தடா சட்டத்தின் கீழ் ஐந்து வெவ்வேறு வழக்குகளில் கர்நாடகத்தின் மைசூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 1994 ஆம் ஆண்டிலிருந்து 29-9-2001 ல் தடா சிறப்பு நீதிமன்றம் வழக்கை விசாரித்து விடுதலை செய்யப்படும் காலம் வரை எட்டாண்டுகள் - 121 பேர் இவ்வழக்கில் இருந்தனர். அவர்களில் 75 பேர் வழக்கின் இடையே பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். மீதியிருந்த 51 பேரும் தொடர்ந்து எட்டாண்டுகள் சிறையிலேயே கழித்தனர். இந்த நெடும் சிறை வாழ்வை விசாரணைக் கைதிகளாக அனுபவித்த 51 பேரில் 14 பேர் ஆயுதம் வைத்திருந்தது முதல் ஆயுள் தண்டனை வரை பல்வேறு வகையில் தண்டனை பெற்றனர். மீதியிருந்த 38 பேரில் 12 பெண்களும் அடங்குவர். இவர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டனர். இவர்களின் மீதான தடா வழக்குகளை ஆராய்ந்த விசாரணைக்குழு, இவர்கள் போலீசாரிடம் கொடுத்ததாக எழுதப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் என்ற ஒன்றைத்தவிர வேறு உரிய ஆவணங்களின்றி எட்டாண்டுகள் சிறையில் கழித்ததைக் கண்டது. மேற்கண்ட ஒப்புதல் வாக்குமூலமும் தடா சட்டத்தின்படி உரிய காவல்துறை கண்காணிப்பாளர் முன் அனுமதி பெறாததால் அது அடிப்படையிலேயே செல்லத்தக்கதுமல்ல. எனவே எட்டாண்டு காலம் அவர்கள் சிறையில் தமது வாழ்வை கழிப்பதற்கு எந்தவிதமான அடிப்படையான ஏற்புடைய காரணமும் இல்லை. ஏற்கனவே ‘தடா’ சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் வழக்கு குறித்து விசாரணை செய்ய மத்திய உள்துறை செயலகம் கர்நாடக அரசுக்கு சுற்றறிக்கை அனுப்பியும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை குறித்து பரிசீலிக்க எவ்வித மறு ஆய்வு குழுவையும் கர்நாடக அரசு அமைக்கவில்லை. வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாக காரணம் கூறியது. 5-11-1994 முதல் 30-9-2001 வரை வெவ்வேறு காலங்களில் எட்டுமுறை தடா மறு ஆய்வுக்குழு கூடியும் வெறுமனே வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்ற காரணத்தை மட்டுமே கூறி கலைந்து சென்றுள்ளது. இந்த காரணம் ஏற்புடையதல்ல. தேவையற்ற சூழலில் பலர் சிறையில் வாடிய நிலைக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். இந்த சிறைவாசம் இவ்வழக்கில் சிறைப்பட்டவர்களின் மனித உரிமையை பறித்த செயலாகும்.

எனவே எட்டாண்டுகள் மைசூர் சிறையில் வாடிய 38 பேருக்கும் உரிய இழப்பீடு வழங்க விசாரணைக்குழு பரிந்துரை செய்கிறது என சிறைவாசம் அனுபவித்தவர்களின் நிலைக்கு விசாரணைக் குழு தன் முடிவை வெளிப்படுத்தியது.

கட்டாய நீதி விசாரணை:

வீரப்பன் தேடுதல் வேட்டையில் மலைப்பகுதி மற்றும் அதனை சார்ந்த கிராமங்களில் அதிரடிப்படை காவலர்கள் பொதுமக்களின் மீது பாலியல் வன்முறை, சித்திரவதை, மற்றும் கொலை செய்துவிட்டு மோதலில் மரணம் ஏற்படுத்தியதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இக்குற்றச்சாட்டுக்களை கண்மூடித்தனமாக நிராகரிக்க முடியாது. அதிரடிப்படையின் செயல்பாடுகளினால் அதன் நம்பகத்தன்மை மக்களின் மனதில் கேள்விக்குள்ளாக்கப் பட்டுள்ளது. இவ்விதமான சூழலில், சட்டத்தின் முன் தவறு செய்தவர்கள் நிறுத்தப்பட - ஏற்கனவே காவல்துறையில் தவறு செய்பவர்களை விசாரிக்க தேசிய போலீஸ் கமிஷன் வழிகாட்டியபடி சுதந்திரமான கட்டாய விசாரணை அரசின் கட்டுப்பாட்டிலில்லாத நீதித்துறை சார்ந்த நீதிபதிகளினால் நடத்தப்படவேண்டும் என்று இவ்விசாரணைக்குழு பரிந்துரைக்கிறது.

சிறப்பு புகார் பெறும் பிரிவுகள்:

பாதிப்புக்குள்ளான பகுதியில் தங்கள் மீது மனித உரிமை மீறலை ஏற்படுத்திய காவல்துறையினர் மீது உரிய புகார் கொடுக்கும் சூழலை ஏற்படுத்துவது அரசின் கடமையாகும். இதன் அடிப்படையில் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இந்த பாதிப்புக்களுக்கான புகார்களைப் பெறுவதற்கே தனிப் பிரிவினை ஏற்படுத்த வேண்டும். மாநில காவல்துறை தலைமை அலுவலகத்திலும் இதே போன்ற தனிப்பிரிவு அமைக்கப்பட வேண்டும். பெறப்பட்ட புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம். இதற்காக கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் தகுதியில் உள்ள சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகளை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மாநில காவல்துறை தலைவர் ஆய்வு செய்யவேண்டும். புகார் விபரம் மற்றும் நடவடிக்கையின் நிலை ஆகியவற்றை தொடர்ந்து அரசு மற்றும் மாநில மனித உரிமை ஆணையம் ஆகியவற்றிற்கு அனுப்ப வேண்டும்.

அதிரடிப்படையை வழி நடத்தும் தலைமை:

அதிரடிப்படை செயல்பாடுகளை கண்காணிக்கவும் திட்டமிட்டு வழிநடத்தவும் அதற்கென வழிகாட்டுதல் இருக்க வேண்டியது அவசியம். இந்த அதிரடிப் படையினை மேலிருந்து கட்டுப்படுத்தும் பொறுப்பு மிக்க தலைமை மிக அவசியம். அவ்வாறு இல்லாத சூழலில் கட்டுப்பாடுகளற்று அது செயல்படும் விதம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதில் முடிவடைகிறது. தமிழக அதிரடிப் படையின் தலைமையாக இருந்து வழிநடத்திய வால்டர் தேவாரம் தமிழக அதிரடிப்படைக்கு அவ்விதமான எந்த ஒரு வழிகாட்டுதலையும் கூறவில்லை. கர்நாடகத்தின் அதிரடிப் படை தலைவராக இருந்த சங்கர் பிடரியும் எழுத்துப் பூர்வமான வழிகாட்டுதலை தமது காவலர்களுக்கு கொடுத்ததாக கூறவில்லை. 1995-ல் ஒரு வழிகாட்டுதல் இருப்பதாக கூறினாலும் அது வீரப்பனிடமிருந்து கிராம மக்கள் தங்களை பாதுகாப்பது குறித்ததே தவிர அதிரடிப்படையை நெறிபடுத்தும் வழிகாட்டுதல் இல்லை. எனவே தமிழக கர்நாடக அதிரடிப்படை தலைமையின் செயல்பாடுகள் மிக துரதிஷ்டவசமானது. இந்த நிலையே மனித உரிமை மீறலுக்கு வித்திட்டுள்ளது.

Kariyan எப்போதும் ஆயுதப்படைகள் பொதுசிவில் சமூகத்தின் மக்களுடன் தொடர்புபடுத்தி பணியாற்றும்போது மிக எச்சரிக்கையோடும் கவனத்துடனும் கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். இரண்டாம் உலகப்போரின் போது எண்பதாவது இங்கிலாந்து படையை ஆப்பிரிக்காவில் வழிநடத்திய ஃபீல்ட் மார்சல் மாண்ட்கோமரியின் நினைவுகள் (memories of field marshal montgomery)கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது அவசியம். 1943-ம் ஆண்டு ஆப்பிரிக்காவின் டிரிப்போலியில் நடந்த சண்டையில் அவரின் படை வெற்றிபெற்றது. அது குறித்து அவர் கீழ்கண்டவாறு நினைவு கூறுகிறார்:

“என் ராணுவம் டிரிப்போலி போன்ற நகர் பகுதியின் அருகில் இருக்கும்போது நகரின் அரண்மனையிலோ, பங்களாக்களிலோ தங்க வைக்க நடந்த ஏற்பாடுகளை நான் தடுத்தேன். நான் என் படையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய கூடுதல் பொறுப்புள்ளவனாக உணர்ந்தேன். என் குடியிருப்பை நகருக்கு வெளியே சண்டை நடைபெறும் இடத்தின் அருகில் மாற்றினேன். என் படை நகர்பகுதியில் வீடுகளில் தங்குவதை தடுத்தேன். நாங்கள் பாலைவனங்களிலும் வெட்ட வெளிகளிலும் பலமாதம் தங்கினோம். இது ராணுவத்தின் செயல்பாட்டை கட்டுக்குள் வைத்திருந்தது. நாங்கள் நகர்பகுதிக்கு வந்த இரண்டு மாதத்தில் நகரின் உணவு கையிருப்பு பொதுமக்களுக்கு மிகக்குறைவாகவே உள்ளதை தெரிந்ததும் நான் சில உத்திரவுகளை பிறப்பித்தேன்.

டிரிப்போலியில் உணவு கையிருப்பு பொது மக்களிடம் குறைவாக உள்ளதால் ராணுவத்தினர் பொதுமக்களின் உணவை பகிர்ந்து கொள்ளும் சூழல் எழுமேயானால் பொது மக்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்படும். இந்த நிலை ஏற்படுவதையே ஜெர்மனிய எதிரிகள் விரும்புகின்றனர். எனவே பிரிட்டிஷ் ராணுவம், கடல்படை, விமானப்படை ஆகியவை பொதுமக்களின் உணவை தொடக்கூடாது. ரேசன் தவிர மற்ற உணவு சாப்பிடக்கூடாது. அதேபோல பிரிட்டிஷ் போர்வீரர்கள் எந்த உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் யாருக்கும் உணவு விடுதியிலோ வேறு சாப்பிடும் இடங்களின் உணவு வழங்கக்கூடாது. விதிவிலக்காக தேனீர், பன் போன்றவற்றை விற்கலாம் என்று அறிவித்தேன். மேலும் டிரிப்போலியின் உணவகங்களில் பிரிட்டிஷ் ராணுவத்தினருக்கு உணவு விற்கப்படமாட்டாது என அறிவிப்பு பலகை வைக்கச் சொன்னேன். இதுவே என் போர்வீரர்களின் ஒழுங்கை கட்டமைத்தது.” என்ற வரிகள் ஒரு ஆயுதப்படை எவ்விதம் பொறுப்பாக பொதுமக்கள் மத்தியில் பணியாற்றும்போது வழி நடத்தப்படவேண்டும் என்பதற்கு உதாரணம். ஆயுதப் படைகளை வழிநடத்தும் அதிகாரிகள் எங்கோ உட்கார்ந்து கொண்டு உத்திரவுகளை மட்டுமே பிறப்பித்து கட்டுப்பாடுகளை கண்காணிக்காமல் விடுவது பெருத்த பின்னடைவை ஏற்படுத்தும். இது அதிரடிப்படை வீரப்பன் தேடுதல் வேட்டையில் தமிழக கர்நாடக அதிரடிப்படைகளால் நிகழ்ந்துள்ளது. எனவே உடனடியாக கட்டாயமான வரையறைகள், நடைமுறைகள் பொதுமக்களுடன் பணி புரியும் சூழலில் இந்த படைக்கு தேவை. அது உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

பழங்குடி பகுதியிலிருந்து காவலர்கள் சேர்ப்பு:

பரந்த வனப்பகுதிகள் பலசமயம் சட்டவிரோத செயல் பாடுகளை நடத்துபவர்களின் மறைவிடமாக மாறிவிடுகிறது. வேறு பகுதிகளை சார்ந்தவர்கள் காவல்துறைக்கு பணிபுரிய வரும்போது வனம் பற்றிய புரிதல் குறைவாக உள்ளது. இச்சூழலில் அரசும் வனப்பகுதியில் உள்ள பழங்குடியினர் போன்றவர்களிடையே ஒற்றுமை, நட்பு மனப்பான்மையை உருவாக்கி சமூக விரோத சக்திகள் வனத்திற்குள் ஒளிந்து கொள்வதை தடுக்கும் சமூக நிலையை பழங்குடி மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். இதற்காக பழங்குடி பகுதியிலிருந்து படித்த இளைஞர்களை காவலர்கள் பணிக்கு தேர்வு செய்யலாம். வடகிழக்கு மாநிலங்களில் இவ்விதமாக- குறிப்பாக நாகலாந்து போன்ற மாநிலங்களில் காவலர்களாக தேர்வு செய்யபட்ட பழங்குடி நாகா இளைஞர்கள் பிரிவினைவாதம், சட்டவிரோத செயல்பாடுகளுக்கு எதிராக எல்லைப் பாதுகாப்பு படைகளில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்க நல்ல விளைவினை ஏற்படுத்தியுள்ளது என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது.

அதிரடிப்படைக்கு நவீன கருவிகள்:

அதிரடிப்படை விசாரணை என்று அழைத்துச் சென்று பலரிடம் பல தகவல்களை கேட்டு துன்புறுத்துவது நிகழ்ந்துள்ளது. இவ்விதமான நிலையை தடுக்க நவீன தொழில்நுட்ப கருவிகளின் உதவியையும் அறிவியலின் முன்னேற்றத்தையும் தங்களின் உளவு அறிதலுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, செயற்கைக்கோள்களின் தொடர்புடன் தகவலை மிகத் துல்லியமாக பெறவும், குறிப்பிட்ட இடம் குறித்தறியவும் பெங்களூர் உள்ள பெல் நிறுவனம் (global positioning system, GPS)என்ற கருவியை வடிவமைத்துள்ளது. அதுபோன்ற கருவிகளை பயன்படுத்த வேண்டும். அறிவியல் நிபுணர்களின் வழிகாட்டுதல்களை இதுபோன்ற தேடுதல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு:

கர்நாடக-தமிழக கூட்டு அதிரடிப்படையின் செயல்பாடுகள் வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாலியல் வன்முறை, சித்ரவதை, கொலை என்ற வகையில் மக்களின் மீது மனித உரிமை மீறலை நடத்தியுள்ளது. விசாரணைக்குழு ஒப்புக் கொண்ட சாட்சியம் மற்றும் ஆவணத்தின்படி மேற்கண்டவை கொடுமைகள் என்றாகின்றன. ஆனால் குறிப்பாக தனிப்பட்ட காவலர் மீது குற்றம் சுமத்தும் மற்றும் அடையாளப்படுத்தும் நிலை இவ்விசாரணையில் எழவில்லை. எனவே பாதிக்கப்பட்ட மக்கள் அரசிடம் உரிய இழப்பீடுகளை பெற தகுதியுடையவர்கள். அவர்களில்,

1. அதிரடிப்படையால் பல்வேறு வகையான வன்முறைகளால் வதைக்கப்பட்டவர்கள்.

2. தடா கைதிகளாக 2001 செப்டம்பர் வரை மைசூர் சிறையில் வாடியவர்கள். உரிய காலத்தில் மறுபரிசீலனை கமிட்டி அமைத்து அரசு செயல்படுத்தாததால் எட்டாண்டு சிறை வாழ்க்கை அனுபவித்தவர்கள்.

3. ‘மோதல் சாவுகள்’ என்ற பெயரில் அதிரடிப்படையால் மர்மமாக சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர்.

-ஆகியோர் இழப்பீடு பெற தகுதியுடையவர்கள் என நீதிபதி சதாசிவா, நரசிம்மன் விசாரணைக்குழு முடிவை வெளிப்படுத்தியுள்ளது.

இம்முடிவின் மீது கருத்து கூறுமாறு தேசிய மனித உரிமை ஆணையம் பலமுறை கேட்டபின்பு இறுதியாக 2005 மே மாதம் 2-ம் தேதி கர்நாடக அரசும் மே 5-ம் தேதி தமிழக அரசும் தங்களின் எதிர்வினையை மறுப்பாக வெளிப்படுத்தின. அதிரடிப்படையால் பாலியல் வன்முறை உள்ளாக்கப்பட்ட தற்கு உரிய மருத்துவ ஆதாரங்கள் இல்லாததாலும், பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண் அது குறித்து அந்த சூழலில் உரிய புகார் தெரிவிக்காததாலும் அவ்விதம் பாலியல் வன் முறையை அதிரடிப்படை நிகழ்த்த வில்லை என கர்நாடக அரசு மறுத்தது.

அதிரடிப்படை முகாம்களில் பல்வேறு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்று உள்ளவர்களின் நிலைபற்றி கூறும் போது, ‘அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள். அவர்கள் மனித உரிமை மற்றும் அரசு சாரா அமைப்புகளின் தூண்டுதலில் ஆதாயம் அடைய அதிரடிப் படை துன்புறுத்துவதாக கூறுகின்றனர்’ என்றது. மேலும் மனித உரிமை மற்றும் தன்னார்வ அமைப்புகள் தங்களது தனிப்பட்ட ஆதாயத்திற்காக இந்த மக்களை அதிரடிப்படைக்கு எதிராக தவறாக தூண்டிவிட்டுள்ளளதாக கூறியது. மேலும் ‘சித்திரவதைக்கு உள்ளானவர்கள் உரிய மருத்துவ ஆவணத்தை தரவில்லை எனவே அவர்களின் சாட்சியம் நிராகரிக்கபபட வேண்டும்’ என்றது. அதிரடிப்படை விசாரணைக்கென்று அழைத்து சென்று பின் அவர்கள் மர்மமாக காணாமல் போய்விட்டதை பற்றி விசாரணைக்குழு எழுப்பிய கேள்விக்கு காணாமல் போனவர்கள் வீரப்பன் கூட்டத்தோடு சேர்ந்திருப்பார்கள் என அலட்சியம் செய்தது.

‘மோதல் சாவுகளில்’ சுடப்பட்டவர்களின் மரணம் குறித்து கூறும்போது: வெறும் சடலக்கூறாய்வு அறிக்கை மட்டுமே ஒரு மரணம் உண்மையான சண்டையில் நடந்ததா அல்லது போலி மோதலில் பக்கத்திலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டதா என முடிவு செய்ய இயலாது. சடலக்கூறாய்வு செய்த மருத்துவரையும் விசாரித்திருக்க வேண்டும். மேலும் இது அவ்வாறு விசாரணைக்குழு முடிவுக்கு வர போதுமானதால்ல. எனவே போலி மோதலில் யாரும் கொல்லப்படவில்லை என மறுத்தது. கொல்லப்பட்டவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு தருவது தவறானதும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும் முடியும் என்றும் இழப்பீடு தர முடியாது. கர்நாடக அதிரடிப்படை எந்தவிதமான மனித உரிமை மீறலிலும் ஈடுபடவில்லை. வீரப்பன் கூட்டாளிகளே கைது செய்யப்பட்டனர். எனவே பாதிக்கப்பட்டதாக கூறப்படும் யாருக்கும் நிவாரணம் வழங்க இயலாது என மறுத்துள்ளது. மேலும் மனித உரிமை மீறல் நடந்த ஓராண்டுக்குள் மட்டுமே மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்கமுடியும். எனவே 1993 லிருந்து நடந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை 2000 க்கு பின் விசாரிப்பது

சட்டப்படியானதல்ல என நீதிபதி சதாசிவா குழுவின் பரிந்துரைகளை முற்றிலுமாக நிராகரித்து மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இதே பிரச்னையை காரணம் காட்டி கர்நாடக காவல் துறை அதிகாரிகள் 2000ல் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இக்குழுவின் விசாரணைக்கு தடையாணை பெற்றனர். இறுதி விசாரணைக்குப் பின் கர்நாடக உயர் நீதிமன்றம் 20-11-2001 தேதி வழங்கிய தீர்ப்பில் கர்நாடக காவல்துறை அதிகாரிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதுகுறித்து முடிவு செய்யும் அதிகாரத்தை தேசிய மனித உரிமை ஆணையத்திடம் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. அதனைப் போன்றே தமிழ்நாடு அரசும் ஓராண்டுக்குள் நடந்த மனித உரிமை மீறலை விசாரிக்க மட்டுமே தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் தங்களின் அதிரடிப்படை எவ்விதமான மீறலிலும் ஈடுபடவில்லை என்றும் தவறு செய்த காவலர்கள் பற்றி குறிப்பான அடையாளம் சொல்லப்படாதபோது இழப்பீடு மட்டும் எப்படி தர முடியும் என்றும் மேலும் அதுபற்றி விரிவாக எதிர்காலத்தில் மறுப்பு தருவதாகவும் கூறி தன் பங்குக்கு இக்குழுவின் அறிக்கையை நிராகரித்துள்ளது.

Tribes இருமாநில அதிரடிப்படையின் கொடுமைகளை தங்களின் தொடர் செயல்பாட்டின் மூலம் அம்பலப்படுத்திய அமைப்புகளான தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம், மக்கள் சிவில் உரிமைக் கழகம், மக்கள் கண்காணிப்பகம், சோக்கோ அறக்கட்டளை மதுரை, மற்றும் சிக்ரம்-பெங்களூர் ஆகிய அமைப்புகளின் மீது தமது தீராத காழ்ப்புணர்வை - இவ்வமைப்புகள் தங்கள் சுய ஆதாயத்திற்காக இம்மக்களை திசை திருப்பியதாக கூறி கொட்டித் தீர்த்துள்ளன இரு மாநில அரசுகளும். இப்பிரச்னையில் மக்களின் சனநாயக கோரிக்கையும் மனித உரிமைகளின் நியாயங்களும் வழக்கம்போல் கிடப்பில் போடப்படும் அல்லது நிராகரிக்கப்படும் என்பது வெளிப்படை. வழக்கம்போல அதிகாரப் போட்டிக்கு தயாராகும் ஆளும் கட்சிகள் எதிர்க்கட்சிகள் காவல் துறையை எப்பாடுபட்டேனும் காப்பாற்றுவதை தங்களின் லட்சியமாக கொண்டுள்ளன. பொதுவாக மனித உரிமைக்கான குரல்களில் அரசியல் இயக்கங்கள் போதுமான கவனம் செலுத்தத் தயாராக இல்லை. பல சமயம் நிர்ப்பந்தம் காரணமாக ஒரு சிறு அறிக்கையோடு அப்பிரச்னையை மூட்டைகட்டி வைத்து விடுகின்றன. அதையும் கூட வெளியிடாத ‘பண்பாடு’மிக்க அரசியல் தலைவர்களும் உண்டு.

நீதிபதி சதாசிவா விசாரணைக்குழு முன் சாட்சியமளித்த 197 பேரில் 192 பேர் பாதிப்புக்குள்ளானவர்கள். இவர்களின் சாட்சியங்களை ஆய்வு செய்த விசாரணைக்குழு 89 சாட்சியங்களை மட்டுமே ஏற்புடையதென ஏற்றுக்கொண்டது. மற்றவற்றில் உள்ள சிறுசிறு முரண்பாடுகள், சம்பவம் நடந்தபோது உரிய புகார் தெரிவிக்கவில்லை என்பது போன்ற காரணங்களைக் கூறி அச்சாட்சியங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிரடிப்படையின் வதை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பெரும்பாலான பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர். இவர்கள் எவ்விதத்தில் தங்களின் மீதான பாலியல் வன்முறையை நம்பும் வகையில் நிருபிக்க முடியும்? என்ன சாட்சியங்களை அவர்கள் விசாரணைக்குழு முன் நிறுத்த முடியும்? மேலும் இச்சாட்சி சொல்ல வந்தவர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் சனநாயக இயங்கங்களால் கூட்டி வரப்பட்டவர்கள்.

விசாரணைக்குழு விசாரணை செய்த காலத்தில் அதிரடிப்படை காவலர்கள் சீருடை அணியாமல் வந்து பாதிக்கப்பட்டவர்களை கண்காணித்தும் மிரட்டியும் பல இடர்களை ஏற்படுத்தினர். இவ்விதமான அச்சம் தரும் சூழலிலேயே இவ்விசாரணை நடைபெற்றது. அதிரடிப்படை கட்டுப்பாடற்ற அதிகாரத்துடன் மனித உரிமையை மீறிய காலத்தில் அதன் கைகளிலேயே தடா போன்ற கொடிய சட்டம் இருந்தது. யார் வேண்டுமானாலும் சிறைப்படுத்தப்படும் அச்சம் தரும் நிலை அக்காலத்தில் நிலவியது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் யாரிடம் சென்று தங்கள் பாதிப்புக்காக உடனே முறையிட முடியும்? அவ்வாறு முறையிட்டிருந்தாலும் கூட என்ன எதிர்வினை நிகழ்ந்திருக்கும் என்பது கணக்கில் கொள்ளப்படவில்லை என்பது மனித உரிமை செயல்பாட்டாளர்களுக்கு வேதனை தருவதாக உள்ளது.

எனவே அச்சம் தரும் சூழலில் இவ்விசாரணைக்குழு முன் சாட்சியமளிக்க வந்தவர்கள் எண்ணிக்கையில் குறைவே. பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த கொடுமையை நினைவு கூர்ந்து சொல்லும்போது படிப்பறிவற்ற பழங்குடி மக்களின் சாட்சியத்தில் சிறு முரண்பாடு வருவது இயல்பே. அதுவே அச்சாட்சியின் நம்பகத்தன்மையை நிராகரிக்க போதுமானதல்ல என்பதை தேசிய மனித உரிமை ஆணையத்திடம் வலியுறுத்த வேண்டியது நம் கடமை. இன்னமும் பாதிக்கப்பட்ட பலர் சாட்சியமளிக்க வராமல் உள்ளனர். எனவே இழப்பீடு அவர்களுக்கும் வழங்க வழிவகை செய்யப்பட வேண்டும். சுதந்திரமான விசாரணை நடத்தியும் புலனாய்வு செய்தும் குற்றம் புரிந்த காவலர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

சில விமர்சனங்கள் இருந்தபோதும் நீதிபதி சதாசிவா குழு அறிக்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமான ஒன்றாகும். அதன் எல்லை பரந்து இருக்க வேண்டியது அவசியம். இவைகள் எல்லாவற்றிற்கும் இச்சமூகத்தின் பொதுமக்களின் மனசாட்சியை நாம் தட்டி எழுப்ப வேண்டியுள்ளது. எதிர்கால சமூகத்தில் இவ்விதமான மரண ஓலங்களும், வதை முகாமிலிருந்து வெளிப்படும் அச்சம்தரும் அலறல்களும் கேட்காமல் இருக்க இம்மக்களுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். நம் எதிர்வினையும் செயல்பாடுமே எதிர்காலத் தலைமுறைக்கு ஒரு பாதுகாப்பையும், நாகரிகமான சிவில் சமூகத்தின் இருப்பையும் உறுதி செய்வதாக இருக்கும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com