Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஆகஸ்ட்-செப்டம்பர் 2005
''பிராமண எதிர்ப்பு இயக்கங்கள்''

பேரா. கா.அ.மணிக்குமார்



புத்த மதத்தின் தோற்றம்

உபனிடதங்களின் தாக்கத்தால் பகுத்தறிவுவாதத்திற்கு பெயர்போன காலமாக கி.மு. ஆறாம் நூற்றாண்டு விளங்கியது. இக்கால மேட்டுக்குடி மக்கள் மேலுலகம் பற்றிய கருத்தை சந்தேகத்துடனும் பிராமண புரோகிதர்களின் ஏமாற்றுதல்களையும், சடங்குகளையும் வெறுத்தும் பேசி வந்தனர். விதேக நட்டு மன்னர் நரத முனிவரைப்பார்த்து கிண்டலாக "இவ்வுலகில் எனக்கு 500 வெள்ளிகள் கொடுத்தால் அடுத்த உலகில் 1000 வெள்ளிகளாக திருப்பித்தருவதாகக் "கூறியதாக ஜடாக்கா (jataka) கதை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கு சமண சகோதரிகள் ஒவ்வொரு நகரமாகச் சென்று தங்களது ஆயிரம் வேறுபட்ட கருத்துக்களை வாதத்தில் மறுக்க யாரேனும் வருவார்களா எனச் சவால் விட்டனர். அக்காலத்தில் வட இந்தியாவில் பொது விவாதம் நடத்துவதற்கு அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் அவை "ஆர்வத்தைத் தூண்டும் அரங்குகள்" (kantuhala- salas) என அழைக்கவும்பட்டன. உருவாகியிருந்த பல அரசுகள் கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கு ஆதரவு கொடுத்த நிலையில் ஒரு வெளிப்படையான மற்றும் முற்போக்கான சமுதாயம் உருவாகியிருந்தது.

மேட்டுக்குடி மக்களில் பலர் தங்கள் செல்வத்தைத் துறந்து காடுகளில் அலைந்து திரிந்தனர். இவர்களுல் பரிவராஜக்காஸ் (Parivrajakas) என அழைக்கப்பட்டவர் குறிப்பிடத்தக்க பிரிவினர் ஆவர். வணிகர்கள் இது போன்றவர்களை ஆதரித்து ஊக்குவித்தனர். சிரவஸ்தியில் வாழ்ந்த அனதத் பின்டிகா என்ற பெரு வணிகர் 500 புத்த துறவிகளுக்கு தனது வீட்டில் தினமும் உணவு வழங்கியதாக ஜடக்கா கதைகள் கூறுகின்றன. மக்களும் அனைத்துப் பிரிவினரையும் வேறுபாடு பாராட்டாது ஒன்றாக பாவித்து சிரமானர்கள் (உண்மையை அறிய விரும்பும் துறவிகள் எனப்பொருள்) என மரியாதையுடன் அழைத்தனர். ஏராளமான சமய உட்பிரிவுகள் உருவாகியிருந்தாலும் சமணமும் பௌத்தமும் மட்டுமே தழைக்க முடிந்தது. கோடலர் தோற்றுவித்த அஜிவிக்கா உட்பட மற்றவை அழிந்தன.

கி.மு. ஆறாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த சீர்திருத்தவாதிகளாக புத்தர், மகாவீரர் மற்றும் கோசலர் விளங்கினர். அஜிவிக்கா பிரிவை தோற்றுவித்தவர் ஒரு மாட்டுக் கொட்டகையில் பிறந்ததால் கோசலர் என அழைக்கப்பட்டார். வீதி நாடகம் நடத்தி பிழைப்பு நடத்தியவர் ஒருவரின் மகன் கோசலர். தனது தந்தைக்கு உதவியாக ஆரம்பத்தில் வீதி நாடகத்தில் பங்கேற்று வந்த கோசலர் பின்னர் மகாவீரருடன் ஆறு ஆண்டுகள் நடைபயணம் மேற்கொண்டு இறுதியில் அவரிடம் இருந்து பிரிந்து அஜிவிகா பிரிவை தோற்றுவித்தார். மகாவீரரின் நெருங்கிய நண்பராக இருந்த கோசலர் பின்னாளில் அவரது எதிரியாக மாறியதை பல சமணத்திருமுறைகள் சுட்டிக் காட்டுகின்றன தற்கால உத்திரபிரதேச மாநிலத்திற்குட்பட்ட இமயமலை அடிவாரத்தை தனது தலைமை இடமாகக் கொண்டு கோசலர் செயல்பட்டு வந்தார்.

கோசலர் வாழ்க்கை மற்றும் வரலாற்றின் போக்கை மனித முயற்சியால் மாற்ற முடியாது எனக் கருதினார். ''ஊசியின் மீது உட்கார்ந்து தவம் செய்தாலும் எவ்வித பலனையும் மனிதன் பெற முடியாது என்றார் கோசலர். கோசலரின் கருத்துப்படி இவ்வுலகம் உருவாக்கப்படவில்லை, எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. பிரபஞ்சம் எப்போதும் போல்தான் உள்ளது காலச்சக்கரம் சுழலும்போது தான் மாற்றங்கள் ஏற்படுகின்றன,'' என்றார். அஜிவிக்கா அமைப்பில் கடவுள் நம்பிக்கை கிடையாது. மக்களுடைய நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் ஏளனம் செய்து அவர்களது உணர்வுகளை புண்படுத்தியதால் தனது செல்வாக்கை காலப்போக்கில் இழந்தார் கோசலர். இருப்பினும் அஜிவிக்கா பிரிவு 14ம் நூற்றாண்டு வரை நீடித்தது. தமிழகத்தில் இப்பிரிவினர் வைணவ மத இயக்கத்துள் ஒன்றாக கலந்தனர்.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் மாபெரும் ஆதிவாசி மண்டலத்தினுள் (Mahajanapadas) பதினாறு முக்கிய அரசுகள் இருந்தன. அவற்றுள் மகதமும், கோசலமும் மிக முக்கியமானவை. கோசலத்தின் தலைநகர் அயோத்யா. 80,000 குடும்பங்களுடன் வாழ்ந்த சாக்கிய இனத்தினரின் கபிலவஸ்துவிற்கு மேற்கில் அது இருந்தது. ''சாக்கியர்கள் வெள்ளை நிறம் கொண்ட அழகான தோற்றமுடையவர்கள், அவர்களது பெண்கள் தாமரைப் பூவை விட அழகு படைத்தவர்கள்'' என புத்தசரிதத்தின் ஆசிரியர் அஸ்வகோசர் வர்ணிக்கிறார். சாக்கியர்களுக்கு பிராமணர்களிடம் எந்த மரியாதையும் கிடையாது. ஏனெனில் அவர்கள் மலைவாசிகள். ஆரிய சமுதாயத்துடன் ஒருங்கிணையாமல் இருந்தனர். இச்சமுதாயத்தில் சுத்தோதனா மாயாதேவி தம்பதியினருக்கு பிறந்தவர்தான் சாக்கியமுனி என அழைக்கப்பட்ட சித்தார்த்தர்.

சித்தார்த்தர் ஆரம்பத்தில் பிராமண கலாச்சாரத்தைக்கண்டு அதிசயித்த போதிலும், பின்னர் அவற்றை அருவருக்கத்தக்கதாகக் கருதத் தொடங்கினார். 30 வயதான சித்தார்த்தர் ஆடம்பர அரச வாழ்க்கையை உதறிவிட்டு கோசல நாட்டின் காடுகளில் அலைந்து திரிந்தார். உபனிடதங்களை வழங்கிய முனிவர்களின் கருத்துக்களை விரும்பிக் கேட்டார். செல்வ வளம் படைத்த மகத நாட்டு மன்னன் பிம்பிசாரரின் ஆதரவைப் பெற்றார். ஒரு நாள் அரசவையில் அரசன் ஆசையோடு வளர்த்த 50 ஆடுகளை பலி கொடுக்குமாறு பிராமணன் ஒருவன் வற்புறுத்தினான். அரசன் பலி கொடுக்கும் எதுவும் மேலுலகிற்கு நேரடியாகச் செல்லும் என்றான். அந்த பிராமணன். அதைக்கேட்ட புத்தர் குறுக்கிட்டு அப்பிராமணனின் தந்தை உயிரோடு இருந்தால் அவரை பலி கொடுத்து அதன்மூலம் சொர்க்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு கூறினார். புத்தரின் வாதத்தால் அரசன் அன்போடு வளர்த்த ஆடுகள் காப்பாற்றப்பட்டது மட்டுமின்றி, பலிகொடுக்கச் சொன்ன பிராமணன் அரசவையிலிருந்தும் வெளியேற்றப்பட்டான். இதன் மூலம் புத்தர் பிம்பிசாரரை தனது கொள்கையின் பக்கம் வென்றெடுத்ததாக பாலி திருமுறை ஒன்று குறிப்பிடுகிறது.

புத்தர் உருவேலாவில் (புத்தகயா) தங்கி 49 நாட்கள் ஓர் மரத்தடியில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். தனது 35 ஆவது வயதில் (கி.மு.528) மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தர் மேலும் ஏழுவாரங்கள் உருவேலாவில் தங்கினார். சாரநாத்தில் இருந்த ஓர் மான் பூங்காவில் தான் புத்தர் தனது முதல் பிரசங்கத்தை வழங்கினார். அப்போது புத்தர் நான்கு மாபெரும் உண்மைகளாகத் தான் கருதியவற்றை விளக்கினார். முதல் உண்மை பிறப்பிலிருந்து இறப்பு வரை நோய் மற்றும் முதுமையில் எங்கும் துயரம், இரண்டாம் உண்மை அறியாமையே துன்பத்திற்கும் துயரத்திற்கும் அடிப்படை. எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் விவேகம் இருந்தால் துன்பத்தைத் தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம், மூன்றாவது உண்மை எந்த ஒரு நோயையும் சரியாக அறிந்தால் அதைக் குணப்படுத்த முடியும், நான்காம் உண்மை சரியான கருத்து, சரியான விழைவுகள் (Aspirations), சரியான பேச்சு, சரியான நடத்தை, சரியான வாழ்க்கை, சரியான முயற்சி, சரியான எண்ணம், சரியான தியானம் போன்ற எட்டு வழிகளைக் கடைப்பிடித்தால் முக்தி அடையலாம்.

புத்தர் சமஸ்கிருத மொழியில் அல்லது மகத நாட்டு மக்கள் பேசிய பிராகிருத மொழியில் பேசினார். புத்தர் தான் கூறிய நான்கு உண்மைகளைப் பரப்புவதற்கு மடாலயத்தை அமைத்தார். அது பின்னர் எண்ணிக்கையில் அதிகரித்தது மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிலும் தோற்றுவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஆண்கள் மட்டுமே மடாலயங்களில் அனுமதிக்கப்பட்டனர். துறவறம், அஹிம்சை, ஏழ்மை ஆகிய மூன்று அடிப்படைக் கோட்பாடுகளை கடைபிடிப்பதாக புத்த துறவிகள் சத்திய பிரமாணம் எடுத்தனர். புத்தமடலாயக் கலாச்சாரம் பன்னாட்டு சமயத்தலைவர்களைக் கவர்ந்தது. சித்தாந்த மாற்று சக்தியாக புத்தமதம் உருவெடுத்தது. புத்தரது கொள்கைகள் இருநூற்றாண்டுகளுக்குப் பிறகு பிராகிருதங்களில் மிக முக்கியமானதான பாலிமொழியில் எழுதப்பட்டன.

புத்தரது முக்கிய கவலை வாழ்க்கையின் இன்னல்களுக்கான காரணம் மற்றும் அதற்கான பரிகாரம் பற்றியதாகவே இருந்தது. சமயத்தைவிட மனித உள இயல்பு பற்றியதாகவே இருந்தது. சமயத்தைவிட மனித உள இயல்பு பற்றிய புரிதலிலேயே புத்தர் அக்கறை காட்டினார். சமயக் கோட்பாடு, பிராமண ஆலய வழிபாடு, பல கடவுள் நம்பிக்கை ஆகியவற்றின் மீது புத்தர் சிறிதும் அக்கறை காட்டவில்லை. ஆன்மா, கடவுள், இறுதி எதார்த்தம் (Ultimate Reality)பற்றியே புத்தர் பேசி வந்தார்.

ஆசையே பிறப்பிற்கும் மறுபிறப்பிற்கும் இட்டுச் செல்கிறது என்ற புத்தரது கருத்து பிராமண மதக் கருத்தை ஒட்டி இருந்தாலும், வன்முறைக்கு எதிரான அவரது அஹிம்சைக் கோட்பாடு இரக்க குணத்தை மானிடரிடத்தில் வலியுறுத்துவதாக அமைந்தது. ஆத்மன், பிரமன் ஒருமித்த தன்மையை உணர்வதன் மூலம் மோட்சம் அடைய முடியும் என உபனிடதங்கள் கூறின. ஆனால் புத்தருக்கோ ஓர் பரிசுத்தமான மனம் இரக்க உணர்வு கொண்ட இதயம் மனிதனை துன்பத்தில் இருந்து மீட்க உதவும். உலகச் சிற்றின்பங்களிலிருந்து விடுபட்ட பற்றற்ற மனதை வெளிப்படுத்துவதாக ஒருவரது நடத்தை இருக்க வேண்டும் என்றார் புத்தர்.

பரம்பரை அடிப்படையில் சமய குருமார்கள் நியமிக்கப்படுவதை புத்தர் எதிர்த்தார். ''ஒருவன் புனிதமாகப் பிறப்பதில்லை. தனது ஒழுக்க நடவடிக்கைகளின் மூலமே புனிதமாகிறான்'' என்றார் புத்தர். புத்தரது கொள்கை பிராமண சடங்குகள் மட்டுமின்றி சடங்குகளையே எதிர்ப்பதாக இருந்தது. பலியிடுதல் என்பது ஆதிவாசி சமுதாயத்தின் முக்கிய கலாச்சாரக் கூறாகும். ஆதிவாசிகளின் ஒற்றுமையைக் கொண்டாடும் வெளிப்பாடாக அதை சமூகவியல் அறிஞர்கள் கருதுவர். ஆனால் நிரந்தர விவசாயம் மேற்கொள்ளப்பட்டு, புதிய சமூகம் உருவாகி கால்நடைகள் பொதுச் சொத்தாகக் கருதப்பட்ட நிலையிலிருந்து, தனி நபர் சொத்தாக மாறிய போது பலிகொடுப்பது விரயமாகக் கருதப்பட்டது. எனவே யாகங்களுக்கும், தேவையற்ற சடங்குகளுக்கும் எதிர்ப்பு உருவாக ஆரம்பித்தது.

புத்தமதம் குலம், சாதி, மற்றும் குறுகிய மனப்பான்மைக்கு எதிராக மகத சமுதாயத்தின் அன்றைய தேவைகளுக்கு பயன்பட்டது. நகர்ப்புறங்களில் வாழ்ந்த பணம் படைந்த வணிகர்கள் மற்றும் படித்தவர்களை சமய மூட நம்பிக்கைகளிலிருந்து மீட்டது. இச்சூழலைப் பயன்படுத்தி நடுத்தர வர்க்க ஒற்றுமை உருவாகியிருந்தால் நவீன ஐரோப்பாவில் அரச அதிகாரத்தைக் கட்டுப்படுத்தியது போல் இந்தியாவில் மன்னரது அதிகாரத்தையும் அப்போதே கட்டுப்படுத்தியிருக்கலாம். ஆனால் வேரூன்றி வந்த சாதிய வேறுபாடுகள் அத்தகையதோர் ஒற்றுமை ஏற்படுவதற்கு தடையாயிருந்தன. கைவினைஞர்கள் கூட வணிகர்களாக மாறமுடியாத அளவிற்கு சாதியக் கட்டுப்பாடு இருந்தது.

தொடரும்...

கா. அ. மணிக்குமார் [email protected],
பேராசிரியர், வரலாற்றுத்துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com