ஜே.ஷாஜஹான் கவிதைகள்
எதிரெதிர் அமர்ந்து
சூதாடினோம்
நானும் கடவுளும்
உருண்ட பகடைகளின்
அதிரகசிய வாய்களில்
விழுங்கப்பட்டது ஒவ்வொன்றாய்
பால்யம், இளமை, கனவு. இலட்சியம் என
கையிருப்பை எல்லாம்
தோற்று எழுந்த என்னை
தடுத்து அமர்த்தினார் கடவுள்
“உன்னுள்ளே இருக்கும்
அந்த ஒற்றைக் கவிதையை
பணயம் வை” என்றார்
எழுதும் நாள் எதுவெனத் தெரியாது
பரம் பொருளையே கேட்டேன்
“உன் கவிதை வரும் நாள்
கவிதைக்கே வெளிச்சம்” என்றார்.
ஆட்டம் முடிந்தபாடில்லை.
2.
வீட்டை விற்று
நாலு தெரு தாண்டி குடிவந்தும் கூட
ஏதேனும் சாக்குச் சொல்லி
பழைய தெரு வழியே போகும் அம்மா.
அக்கா மட்டும்
‘வேண்டாம்டா’ என்று கையை
இறுகப் பற்றி சுற்றிப்போகும்.
நாம வச்ச முருங்கை என்று
பாட்டி பறித்து வந்து காட்டுகையில்
முகர்ந்து பார்க்கும் அம்மாவுக்கு
வேறு முகம் வந்து ஒட்டிக் கொள்ளும்.
தங்கை வளர்த்த பூனைமட்டும்
வரவேயில்லை அங்கிருந்து
பனைமரக் காட்டைவிட்டு
ஆழ்கடல் தாண்டிவரும்
மரகதத்தீவு அகதிகள்
கனவில் வருமோ
அவர்வீடும் மரமும்?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|