Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜூன் 2009

அ.ரோஸ்லின் கவிதைகள்

உலகமயமாக்கல்

சரிகைப் பளபளப்பு மேலாடை
அடி செருகும் முந்தானை
நெருப்புச் செந்தூரம்
அணிந்த யுவதி,
உள் புகைச்சல் மறைத்த
முறுவலிப்பில்
சிக்குண்டிருக்கிறது
அவள் ஆதி இழை.
ஜீவன் மீட்கும்
அமிழ்தப் புனைவுகளை
விற்றுக் கனியும்
முயற்சியின் எல்லை
சூடியிருக்கும்
அழுகல் வாசம்
மயான வெளிமீறித் தெறிக்கிறது.

அற்பத்தின் ஒழுங்கு

வலிகளின்
தர்க்கத்தில்
அறுந்து சிவக்கிறது
வெண் தாமரை.
வீணையின்
இசை நயத்தில்
தனை மறந்து
இசைக்கிறாள்
விரல்களில் குருதி படிய
ஏடுகளின்
சட்டத்திற்குள்
வலுவிழந்து கிடக்கின்றன
ஐதீகங்கள்.
பிரம்மனின் பகுதியாய்
அமிழ்ந்து ஒதுக்குகிறாள்
தான் ரசிக்காத
அற்பத்தின் ஒழுங்கை.

இரத்தம்

1 இன்னமும்
ஒளி தீண்டாத இப்பொழுது
உறைந்து கிடக்கும்
ஒரு துளி இரத்தத்திலிருந்து
புலரத் துவங்குகிறது.

2 மலைச்சரிவுகளில்
ஓயாது ஒலித்துக்கொண்டேயிருக்கிறது
முறிக்கப்பட்ட
மரங்களுக்கான
மண் மூடிய
இரத்தத்தின் ஓசை.

3 வேதனைகள்
திளைத்தெழும்பும்
அத்தினங்களில்
உலர்ந்த முட்செடியின்
பலத்துடன்
வெளியெங்கும்
பாய்ந்தோடி
குருதிக்களமாக்குகிறது
யோனிகளிலிருந்து
வெளிப்படும்
பிரயாசையின் இரத்தம்.

தீண்டல்

எதையும் நீ தீண்டாதே
ஒரு பிடி மணல்
ஒரு பிடி விதை நெல்
ஒரு குவளை பால்
மற்றும் சில ஆசுவாசமற்ற
வார்த்தைகள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.