Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜூன் 2009

கவிப்பித்தனுக்கு கறிப்பித்தன் எழுதறது...(நூல் விமர்சனும்னுகூட வச்சிக்கலாம்)
கம்பீரன்

இடுக்கி -கவிப்பித்தனின் சிறுகதைத் தொகுப்பு, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
41, கல்யாணசந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11

யேம்பா கவி, வணக்கம். உன்னோட ‘இடுக்கி’ படிச்சேன். நல்லாகீது. அதலையும் அந்த சாமிப்பன்னிக் கதைய ரெண்டுவாட்டிப் படிச்சேன். யேன்னா, அதல கறித்திண்றதப்பத்தி வாய்க்கு ருசியா எழுதிகீற. அப்புறம் அது புடிக்காமப் போகுமா?

சைவப் சாப்பாடும், கவுச்சி திண்ணாத சாமிங்களுந்தான் ஒசத்தின்னு ஆயிருச்சி. மூக்கச் சிந்த எந்த சாமியக் கும்புடுனும், மூஞ்சியக் கழுவ எந்த சாமியக் கும்புடுனும்னு விதவிதமா பத்திரிக்கைங்க வேற. தாய் தகப்பனுக்கு கறிக்கொழம்பு ஆக்கி படைச்சதெல்லாம் இப்ப ஐயரவச்சி திதி குடுக்குதுங்க. இதல நீ கோழிமுட்டைக் கண்ணோட பன்னிய காவுக்கேட்டு நீட்டிப் படுத்துனகீறதுதான் எங்க ‘பெரியாண்டவர்’னு கொடிய நாட்டிப்புட்ட.

நீ எழுதிவுட்ட சாமிப்பன்னி ரெண்டு மூனுநாளா உர்உர்...னு எம் பிள்ளையே சுத்தினிருந்திச்சி. என்னோட ரெண்டு சக்கர மோட்டார் வண்டி கூட உர் உர்..னு பன்னியாட்டமே உருமுச்சி. எங்க ஊரு மாரியாத்தாளுக்கு நேர்ந்தவுடற எருமக்கெடாவும் வ்வொய்ங்...வ்வொய்ங்...னு பன்னியோட சேர்ந்துக்கிச்சி... பெரியாண்டவர்கூட ஒருநா எங்கானாவுல வந்து “என்னா கறிப்பித்தா நல்லா கீறியா?” ன்னு கேட்டார். ரொம்ப சந்தோஷமா இருந்திச்சி.

நாட்டார் வழிபாடுன்னு சொல்றாங்களே அதுக்கு இது ஒரு நல்ல ஆவணம்னு நெனைக்கிறேன். கட்டுரையா படிக்கறதவிட இப்டி கதையா படிச்சா நல்லாகீது.

யேம்பா, அந்த வாய்க்கரிசி கதையிருக்கே அப்டியே தூக்கிப் போட்ருச்சிப்பா.

நொய்யரிசி கொதிக்கு ஒதவாதுன்னு சொல்லுவாங்க. வெவசாயமும் இப்ப அப்டிதான் ஆயிருச்சி. உலகமயமாக்கல், தாராளமயமாக்கல்னு ஆளுறவங்க நெறைய ஆக்கினுகீறாங்க. ஆனா அது எந்த எழ எளியதுங்க வயித்த ரொப்புச்சின்னு தெரியல. எத்தனவாட்டி கழுவுனாலும் நாத்தம் போகாத ரேஷன் அரிசியும், கறிக்கும் கருவாட்டுக்கும் ஏங்கற கந்தலான பொழப்பும் அப்படியே கண்ணுமுன்ன நிக்கிது. துள்ளத் துடிக்க செத்துப்போன அந்த சின்னஞ் சிறுசோட சாவு மனச பதறவச்சிடுச்சி.

காளைய காயடிக்கற ‘இடுக்கி’ய கதைன்னு சொல்றதவிட, வதைன்னு சொல்லலாம். சின்னவயசில காயடிக்கறத நின்னு வேடிக்க பார்த்துகீறேன். கட்டிப் போட்ட காள கண்ணுல தண்ணிவுட்டு அழும். பார்க்க பாவமாயிருக்கும். இப்ப அத படிக்கறப்ப என்ன என்னையும் அறியாம தொடைய கெட்டியா இறுக்கிக்கினேன்.

அந்தக் காளைய குறியீடாக்கிப் பார்த்தா, கொம்பில்லாத எத்தனையோ மனுஷங்க மொகம் தெரியும். அப்டி பறக்கறது கூட வாயில்லாத ஜீவனோட வேதனைய மனுஷங்க வேதனையா பாக்கறதாயிடுமோன்னும் நெனைக்கத்தோனுது.

பழஞ்சோறும் தம்புள்ஸ் ராஜேந்திரனும் கதையில பாதி எங்கதையாகீது. மீதி உங்கதையோ என்னவோ சிரிப்பு அள்ளிக்கினு வருது.

பினங்கொத்தியின் போலிஸ் முகம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். ஆனா டிரான்ஸ்போர்ட் உலக ரத்தக்காட்டேறிசார் எனக்கு புது ஒலகமாகீது. அதுல மரத்தடி வெயிலு சூரியக் குஞ்சாக்கி ஒரு கவிதையும் எழுதிகீற, ரொம்ப நல்லாகீது, ஒருசில இடங்கள்ல நீ மூக்க நொழைச்மாதிரிகீது, பரவாயில்ல.

மொத்தத்தில உன்ன சுத்தி குமிஞ்சிகீற ஜனங்களோட தவிப்பு, காணாறு நடையில விடுவிடுன்னு சொல்லிட்டுப்போற. மொத தொகுப்புலயே தனிச்சி நிக்கிற. ரொம்ப சந்தோசம்.

இப்படிக்கு,

தோழமையுள்ள

கறிப்பித்தன் கம்பீரன்