Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜூன் 2009

முடிவற்ற வசீகர வெளியில் வலி உணரும் தருணங்கள்
சின்னக்கருப்பன்

நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை, பவாசெல்லதுரையின் சிறுகதைகள், விலை-ரூ.60.

வெளியீடு: வம்சி புக்ஸ், 19,டி.எம்.சாரோன், திருவண்ணாமலை-1

கலை ஒரு வசீகரம், கலை ஒரு வலி மிக்க வேதனை, கலை ஒரு துயர் மிகுந்த பாடல், கலை ஒரு நம்பிக்கைக் கீற்று. கலை ஒரு புலம்பல், கலை வாழ்வின் உயிர்த்துடிப்பு. கலை ஒரு விந்தைவெளி. கலை ஒரு இன்பம். கலை ஒரு மாய ஜாலம். கலை தனக்கான இரத்த பலி களைத் தானே வேட்டையாடிக் கொள் ளும் காட்டுத் தெய்வம். கலை உக்கிரம் மிகந்த அக்னிக் குண்டம். கலைக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தவர்களின் பட்டியலில் இதோ இன்னமொரு புதிய வரவு. ஒரு புதிய கலைத்திறப்பாய் நம் முன் விரிந்து படபடக்கிறது ‘நட்சத்திரங் கள் ஒளிந்து கொள்ளும் கருவறை’ பவா செல்லதுரையின் சிறுகதைத் தொகுப்பு.

புத்தகத்தை விரித்தவுடன் கல்லும் முள் ளும் கீறிப் பிறாண்டி ரத்தம் துளிர்க்கும் திரேகம். எதையும் ஊடுருவி உள்ளளி காணும் தீர்க்கமிக்க கண்கள். தீராத வாழ்க்கையை நடந்தே தீர்க்க முளைத்த உறுதியான கால்கள். எதையும் எதிர் கொள்ள, எதையும் புரட்டிப் போடும் வல்லமை கொண்ட கவிச்சி வாடை வீசும் கைகள். பச்சை மணம் கமழும் முறுக்கேறிய உறுதியான உடலோடு மரணத்தையும் நேர் கொள்ளும் தைரியத் துடன் நாம் சற்றும் எதிர்பாராத தருணத் தில் நம்முன்னே வந்து நிற்கும் ஜப்பான் கிழவன் இல்லை பச்சை இருளன் இல்லை பொட்டு இருளன் இல்லை பவா செல்லதுரை.

அன்றாடத்தின் செயற்கை நீருற்றின் செயற்கையான சுழிப்புகளோடு ஓடிக் கொண்டிருக்கும் நம் வாழ்வின் கணங் கள் திகைத்து நிற்கின்றன. மூச்சுத் திணறு கிறது. உடல் பதறுகிறது. நா நடுங்க எதிர் பாராத இந்தத் தாக்குதலினால் நிலை குலைந்து யார் நீ என்று குழளுகிறது வாய். போலியான இந்த நாகரீக வாழ்க்கையின் அந்தப் பக்கத்திலிருந்து தன் முரட்டுக்கைகளை நீட்டுகி றான். தப்பிக்கவே முடியாத முட்டுச்சந்துக்குள் மாட்டிக் கொண்ட நாம் சந்தேகத்துடனும் பயத்துடனும் தயங்கித் தயங்கி நம் கைகளை நீட்டித் தொடுகிறோம். தொட்ட கணத்திலேயே நம் வாழ்வு மாறிவிடுகிறது. வாழ்க்கை பற்றிய நம்மதிப்பீடுகள் சுக்குநூறாகித் தகர்ந்து விடுகின்றன. ரசவாதம் நிகழ்ந்தது போல காட்டின் நடுவே மலங்க மலங்க விழித்துக் கொண்டிருக்கிறோம். நமக்கு முன்னால் ஜப்பான் கிழவன் போய்க் கொண்டிருக்கிறான் திப்பக்காட்டிற்குள். அவனுடைய வேட்டை யின் தந்திரங்களை காடு முறியடிக்கிறது. தற்காலிகமாய் தோல்வியடைந்த அவன் ஸ்தோத்திரப் பாடல்களுக்குள் அடைக்கலம் புகுவதற்குப் புறப்படு கிறான். ஆனால் இன்னமும் வேட்டையின் கண்ணிகள் அவன் நெஞ்சில் பத்திரமாகவே இருக்கின்றன. திரும்பி வரும் பெரும் நம்பிக்கையோடு.

கண் மூடித்திறப்பதற்குள் காசிரிக்கா நாரினால் கட்டப்பட்ட திருட்டு இரு ளன், விசித்திரங்களால் அடுக்கப்பட்ட பஞ்சத்தினால் மரணத்தை நோக்கி நகர்ந்து கொண்டேயிருக்கும் அந்த ஊரின் பாறை வீட்டில் மரணத் தின் கடி வாயில் கிடக்கிறான். அனுக்குமலை காட்டின் பச்சிலைச் சாற்றினால் உடல் ஊதிச் செத்துப் போகக் காத்திருக்கிறான். பஞ்சத்தினால் வன்மமும், குரோதமும் கொலைவெறியும் ஏறிய மனிதர்கள் ஓரிரவு மழையினால் கருணை நிரம்பி வழிகிறார்கள். மழை கருணையைப் பொழிகிறது. பவா செல்லதுரையின் கலை நம் உயிர்வரைப் பாய்கிறது நமக்குள் தூர்ந்துபோன ஊற்றுக்கண்ணைப் பொத்துக் கொண்டு கருணை பொங்குகிறது.

கூண்டுக்குள் அடைப்பட்ட பச்சை இருளன். நரியின் பற்களையே ரம்பமாக்கி கூண்டை உடைத்து ஜமீன் மாளிகையிலிருந்த மரகதப்பச்சை ஒளி பின்தொடர பாய்ந்து செல்கி றான். கோட்டங்கல் குன்றை நோக்கி அதிகாரங்களுக்கு எதிரான கலகக் குரல் எழுப்புகிறான்.

எல்லோரிடமும் மனசின் ஒரு நிலவறையில் கருமியின் கைக்காசு போல பத்திரப்படுத்திய ஈரமும் கதகதப்பும் நிரம்பிய ஒரு ராஜாம்பாளின் நினைவுகள் இருக்கும். மனசு துயருரும் போதெல்லாம் அந்த நினைவு களை எடுத்துப் போர்த்தி மீண்டும் வாழ்வை எதிர்கொள்ளும் வலிமை பெறவைக்கும். ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாளின் நினைவுகள், ரயில் வண்டி விளையாட்டில் பின்னால் கொத்தாய் சேர்த்துப் பிடித்த உணர்வில் ததும்பிக் கொண்டிருக்கிறது. அங்கே ராஜாம்பாள் இல்லை. ஆனால் அவள் சேர்த்துப் பிடித்து கசக்கிய சட்டையின் கசங்கல் இன்னும் இருக்கிறது. ராஜாம்பாளும் தோழர்களும் நதியின் அக்கரையிலுள்ள காட்டின் முகப்பிலி ருந்து அழைத்துக் கொண்டேயிருக் கிறார்கள்.

ஏரோதின் வாளின் கூர்மை மேரியின் எத்தனை குழந்தைகளைப் பலி கொண்டு விடுகிறது. கன்னிமரியாளின் பிரசவவலி யினூடாக தன் குழந்தையையும் காப் பாற்றி ஆசீர்வதிக்க ரட்சகர்களைத் தேடு கிறாள். வழிகாட்டும் நட்சத்திரமும் வழி மறந்து மறைந்துவிடும் போது துயருற்ற மேரி கன்னிமரியாளுக்குச் சுகப்பிரசவம் என்ற சேதிகேட்டபோதுதான் நம்பிக்கை கொள்கிறாள். பரிதவித்து வலியும் வேதனையும் இறைஞ்சுதலுமான மேரி நம்மையும் ஆட்கொண்டு விடுகிறாள்.

எத்தனையோ தலைமுறைகளாய் யாரும் காணாத மர்மமான சிங்காரக்குளம் ஒரு குறியீடாகிறது.குளத்தில்விழுந்து இறந்துபோன மல்லிகா தன் மரணத்தின் மூலம் ஒரு புதிய துவக்கத்தை ஏற்படுத்து கிறாள். அந்த ஆத்திரம், கோபம், பயம், இயலாமை சிங்காரக்குளத்தை வெவ் வேறு தளங்களில் வாசிக்கத் தூண்டுகிறது.

கலையின் உயிர் எது என்றறிந்த கலைஞ னான கோணலூர் ஏழுமலை நவீன வாழ்க்கையின் கோரநகங்களில் சிக்கிச் சிதறுண்டு போகிறான். வாழ்க்கை அவனை பெங்களூர் மார்க்கெட்டில் மூட்டை சுமக்கச் சொல்லுகிறது. அவனை அவமானப்படுத்துகிறது. அவ னுடைய கலையை இழிவுபடுத்துகிறது. கோணலூர் ஏழுமலை மீண்டும் கிராமத் திற்கு அழைக்கிறது. இரத்தபலி கேட்கும் வாழ்க்கைக்கு எதிராக போராடத் தயாராகிறான் கோணலூர் எழுமலை.

‘மண்டித்தெரு பரோட்டா சால்னா’வில் தன் வாழ்வை கடைத்தேற்றும் ஈஸ்வர் தாயின் அரவணைப்பறியாமல் தந்தையின் லட்சியச் சுமையை தன்மீது ஏற்றிக் கொண்டு நிராதரவான நிலைமையில் அலையும் ஈஸ்வரன் வாழ்வின் விசித்திர மான இன்னொரு பக்கம்.

தன் உடலை அர்ப்பணித்து, எந்த ஜாமத்திலும் யாருடனும் சைக்கிளின் பின் னால் ஏறிச் சுற்றும் சுதந்திரத்தை விஜயாவின் சத்தமான சிரிப்பின் பின்னா லுள்ள வாழ்வின் துயரம். உறவுகளின் போலிமையை முகங்களிலும், வாழ்வின் அவலத்தை வேறு வேறு மனிதர்களிலும் எதிர்கொண்டு திகைத்து நிற்கிறோம். பொங்கிவரும் கண்ணீரை அடக்க முயற்சிக்கிறோம்.

கூர்ந்த வாசிப்பைக் கோரும் பவாசெல்லதுரையின் கதைகள் தமிழிலக்கியத் தின் பரப்பை இன்னும் விரிவாக்கி இருக்கின்றன. முதல்தொகுப்பு என்று யாராலும் சொல்லமுடியாதபடிக்கு கதைகளை தேர்ந்த சிற்பியைப்போல செதுக்கியிருக்கிறார். மௌனமான பல இடங்களில் கலை ஆட்சி செய்கி றது. புனைவின் உச்சத்தையும், ஒரு புதிய யதார்த்தவாதத்தையும் இவருடைய கதைகள் கட்டமைக்கின்றன.

அனுபவங்களின் சாரம் ஏறிய முதிர்ந்த மொழிநடை, அடர்த்தியான இந்த வாழ்வைச் சொல்ல அடர்த்தியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பல ஒற்றைவரிகளில் வாழ்வின் தரிசனமும் கவித்துவமும் பொங்கி வழி கின்றன. வாசிக்கும்போது தான் அதை உணர்ந்து அனுபவிக்க முடியும்.

தமிழ்ச் சிறுகதைப்பரப்பில் இது ஒரு முக்கியப் பதிவு. ஒரு புதிய கொடை. உலகத்தின் எந்த மொழியிலும் இந்தத் தொகுப்பிலிருந்து குறைந்தது நான்கு கதைகளையாவது மொழிபெயர்க்க முடியும். அதற்கான வலிமையும் கலை உச்சமும் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. பவா செல்லதுரை என்ற கலைஞனுக்கு கலை கைவரப்பெற்றுள்ளது. எனவேதான் தொகுப்பை வாசிக்கும்போது நம்முடனே இருக்கிறார் பவாசெல்லதுரை அழுகையும் கோபமும் கண்ணீரும் ஆனந்தமும் நம்மை ஒரு பைத்தியக்காரனைப் போல மாற்றிவிடுகிறது. வாசித்து முடிக்கும் போது பித்துப்பிடித்த நிலை யில் நீண்ட பெருமூச்சுகள் விடுகிறோம். நாம் விடும் ஒவ்வொரு பெரு மூச்சும் பவாசெல்லதுரை என்ற ஜப்பான் கிழவன் என்ற பச்சை இருளன் மீது படும்போது அவர்கள் சிரிக்கிறார்கள். அது பைத்தியக்கார னின்வசீகரமான சிரிப்பு. கலையும் மர்மமாய் நம்மை நோக்கிச் சிரிக்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com