Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜூன் 2009

செந்தட்டி படுகொலை
பாஸ்கரன்

300 குடும்பங்களே வாழ்ந்து வருகிற - பஸ்வசதி அதிகமற்ற எந்த வரைபடத்திலும் இடம்பிடிக்காத செந்தட்டி கிராமத் தின் பெயர் இப்போது ஊடகங்களின் கவனிப்பில்.

செந்தட்டி போன்று இதற்கு முன்பாக பலரும் அறிந்திராத சில பெயர்கள் ஆங்காங்கே எதிரொலிக்கத்தான் செய்தன. உத்தபுரம், மேலவளவு, பந்தப்புளி. ஏன் தூர தொலைவில் இருக்கும் கயர்லாஞ்சியின் பெயரும் இப்படியாகத்தான் நம்மால் அறிய முடிந்தது. வேறுவேறு திசைகளில் இருக்கும் இந்த கிராமங்களின் பெயரை இந்த தேசம் எதன் மூலமாக - எதன் காரணமாய் அறிய முடிந்தது? மனித உரிமை மீறல் களால், மிகக் கொடூரமான அடக்குமுறைகளால், அநாகரிக நடவடிக்கைகளால், வேர்விட்டு நிலைத்து நிற்கும் சனாதன சாதியக்கொடுமைகளால்தான்.

இரு பிரிவினருக்கான மோதலாக, முன் விரோதம் காரணமாக என பலவாறு உண்மைக் காரணத்தை மறைத்து பொதுப் புத்தியில் வெறும் கலவரச் செய்தியாக பதிவு செய்கிற காரியத்தை நெடுங்காலமாகவே ஊடகங்கள் செய்து வரு கின்றன. அரசும், மக்களின் ‘ஏற்கும் தன்மை’க்கு வசதியாக இப்பிரச்சினைகளை கையாண்டு வருகிறது.

செந்தட்டி படுகொலைக்குப் பின்னால் துருத்திக் கொண்டி ருக்கிற சமூக மற்றும் தீண்டாமைப் பிரச்சனையை மறந்து- மறைத்து விபரங்களை இவர்களால் சொல்லமுடிகிறது. செந்தட்டி படுகொலை வெறும் குற்றச்செயல் மட்டும்தானா?

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலின் தென்மேற்கில் சுமார் 4கி.மீ தூரத்திலிருக்கிறது செந்தட்டி கிராமம். கடந்த மார்ச் 6ந் தேதி இரவு செந்தட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்த தலித்துகள் இருவர் ஆதிக்கசாதிக் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டனர். முதலில் கிருஷ்ணன் தாக்கப்பட்டு காயங்களோடு தப்பியுள்ளார். அதன்பின் பரமசிவன் என்ற இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஈஸ்வரன், சுரேஷ் இருவரையும் மறித்து கொல்ல முற்பட்டபோது சுரேஷ் தப்பி விட, ஈஸ்வரன் தலை அறுத்து மிகக் கொடூரமாக கொல்லப் பட்டுள்ளார். தலையையும், உடலையும் வேறுவேறு திசைகளில் வீசி எறிந்து சென்றிருந்தது இக்கும்பல்.

ஊரையே தட்டி எழுப்பி சம்பவ இடத்திற்கு சுரேஷ் கொண்டு வர, காலதாமதாமாக போலிசும் வந்து சேர்ந்தது. அங்குமிங்கு மாக தேடியலைந்துதான் ஈஸ்வரன் (55) உடலைக் கண்டெ டுத்துள்ளனர். சடலங்களோடு சிலர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட, மீதமிருந்த தலித்துகள் வீட்டில் குழந்தைகளை கட்டிப்பிடித்தவாறு விடியவிடிய தூங்காமல் விழித்திருக்கின்றனர்.

மறுநாள் (7-03-09) பக்கத்திலிருந்த தலித்துகளும் திரண்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட னர். குற்றவாளிகளை உடனே கைது செய்கிறோம், தலித்துக ளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குகிறோம் என்ற காவல்துறை அதிகாரிகளின் வாக்குறுதிக்குப் பின் சவ அடக்கம் நடந்தது.

தற்போது கொலை நடந்த விபர அறிக்கையும், குற்றவாளி களின் பெயர்ப்பட்டியலும் காவல்துறை அதிகாரிகளின் மேசை மேல் கோப்புகளாக கிடக்கின்றன. மாவட்டம் முழு வதும் ஆங்காங்கேயும் சிலைகளுக்குப் பாதுகாப்பாகவும் நின்று கொண்டிருக்கும் போலிசைத் தவிர காவல்துறை மாவட்ட அதிகாரிகளும் பரபரப்பாக காணப்படுகின்றனர்.

செந்தட்டி முப்பிடாதியம்மன் கோவில் திருவிழா கோப்பு என்னவாயிற்று? திருவிழாவில் தலித்துகள் பங்கெடுக்கக் கூடாது என்ற ஆதிக்கசாதிகளின் உத்தரவு என்னவாயிற்று? தாசில்தார், காவல்துறை அதிகாரிகளின் பேச்சு வார்த்தைக் கோப்புகள், மனுக்கள் என்னவானது என்பதிலி ருந்துதான் கொலைகளின் பின்னணியாக இருக்கிற சமூக பகிஷ்கரிப்பு- தீண்டாமை கொடுமையினை அறிய முடியும்.

1924ம் ஆண்டே சென்னை அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. “ஒடுக்கப்பட்ட மக்கள் அனைத்து பொது இடங்களையும் பயன்படுத்த உரிமை உடையவர்கள்” (நி.ளி 2660/1924 செப்25) ஆயினும் 84 ஆண்டுகள் கழித்தும் பொதுக்கோவிலை பயன்படுத்த தலித்துகள் மறுக்கப் பட்டுள்ளார்கள்.

செந்தட்டியில் 150 குடும்பங்கள் வாணிபச் செட்டியார். யாதவர் 140 குடும்பங்கள். பள்ளர்கள் 45 குடும்பங்கள். சற்றுத்தள்ளி ஐந்தாறு அருந்ததியர் குடும்பங்கள். ஊரில் 40 தலைமுறையாக இருந்து வருகிறது முப்பிடாதியம்மன் கோயில். இது நத்தம் புறம்போக்கில் கட்டப்பட்டுள்ளது. வாணிபச் செட்டியார்கள் தனியாக மாசி மாதத்திலும், யாதவ மற்றும் பள்ளர்கள் புரட்டாசியிலும் திருவிழா நடத்தி வந்த னர். தலித்துகள் திருவிழாவிற்கான வரியை குடும்பவரியாக வசூலித்து மொத்தமாக கொடுத்துள்ளனர். இதேபோன்று கோயில் சுருளும் மொத்தமாகவே தலித்துகளுக்கு வழங்கப் பட்டுள்ளது. கோயிலுக்கான மின் இணைப்பு மற்றும் வரி கொடுத்தோரின் பட்டியல் என்ற இரண்டு ஆவணங்களை யும் தங்களுக்கு சாதகமாகக் கொண்டு தலித்துகளுக்கான வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

2007 புரட்டாசியிலும் யாதவர், தலித்துகள் சேர்ந்தே விழா நடத்தியுள்ளனர். தலித்துகள் குடும்பத்திற்கு 500 வீதம் வசூலித்து கொடுத்துள்ளனர். எனில், தலித்துகளை மறுக்கக் காரணம் என்ன? திருவிழா நடந்து முடிந்து மீதமிருக்கும் பணத்தை தலித்துகளே வட்டிக்கு வாங்கி திருப்பிச் செலுத்தி கோவிலின் ஒவ்வொரு செங்கலிலும் பாத்தியப்பட்டிருக்கும் போது தடுக்கப்பட்டது ஏன்?

ஒவ்வொரு மாசி மாதமும் பள்ளர்கள் தங்களது குலசாமியான- ஊரிலிருந்து சற்று தொலைவிருக்கும் சுடலை மாட சாமியை வணங்கிவிட்டு தெருவில் விளையாட்டு, டான்ஸ் என சில நிகழ்வுகளை நடத்திவந்தனர்.

2008மாசியிலும் இதேபோன்று குலசாமியை கும்பிட்டு மறு தினம் தமது தெருவிலுள்ள பிள்ளையார் கோவில் முன் மின் விளக்கு, ரேடியோ செட் என பாட்டும் விளையாட்டுமாய் இருந்துள்ளனர். இரவு 8 மணிபோல அடையாளம் தெரிந்த பிற சமுதாயத்தவர் 4பேர் மின்கம்பிகள் மீது பெரிய வாழைத் தாரை தூக்கி எறிந்து இணைப்பை துண்டித்துள்ளனர்.

45 குடும்பத்தில் முதல் நபராக கல்லூரி வாசலை மிதித்திருக்கும் மாரியப்பன் சொல்கிறார், “பள்ளப்பய தெருவுல இம்புட்டு கூத்து கும்மாளமான்னு பேசிட்டுதா பெறகு போயி வாழத்தார தூக்கி கரண்ட் கம்பியில எறிஞ்சாங்க. அலை ஓசை சினிமாவுல வந்த போராட ஒரு வாளேந்தடா பாட்டு போட்டு புள்ளக்காடு ஆடிக்கிட்டு இருந்திச்சி. இது பொறுக் காம செஞ்சா எப்டி. அம்புட்டு ஏற்பாடு செஞ்சி அநியாயத் துக்கு இப்பிடி செஞ்சிட்டாங்களேன்னு சின்ன கோவிலான் குளம் போலிஸ்ல போயி புகார் கொடுத்தோ, அவங்க மறு நாளே வந்து 4 பேர புடிச்சிட்டு போனாங்க. அதுல ரெண்டு பேரு இந்தக் கொலையில சம்பந்தப்பட்டுருக்காங்க”

சாதியவெறியில், மிகச் சாதாரணமான விழாவை நடத்த விடாமல் தடுத்துவிட, இதைத் தவறு என சொல்ல ஊரில் யாரும் இல்லை. பதிலாக, இந்தப் பயலுகளுக்கு எம்புட்டு கொழுப்பு பாத்திகளா. போலிஸ்வரை போயி கம்ளெய்ண்ட் கொடுத்து 4பேர செயிலுக்கு அனுப்பிட்டாங்க என்று மேலும் பொரும ஆரம்பித்திருக்கிறார்கள்.

மேற்கண்ட சம்பவம் 2008 மார்ச்சில் (மாசி) நடக்க, மேலெ ழுந்த ஆதிக்க உணர்வு, 2008 செப்டம்பரில் (புரட்டாசி) நடக்க இருந்த திருவிழாவில் தலித்துகள் வரக்கூடாது என மறுதலிக்கும் வரை சென்றது. எங்களை ஏன் வேண்டாம்னு சொல்லுதீக என்று தலித்துகள் கேட்க, அது எல்லா இனிமே சரிப்பட்டு வராது என மறுக்க, கடைசியில் தலித்துகள் தடுக்கப்பட்டு செப்டம்பரில் திருவிழாவை தனியாக யாதவ சமுதாயத்தினர் நடத்தியுள்ளனர்.

தங்களது உரிமையினையும், கண்ணியத்தையும் நிலை நாட்டுவதற்கு தலித்துகள் தள்ளப்பட்டனர். இவர்களின் தவிப்பையும், துன்பத்தையும் பிரச்சனையையும் அரசின் கவனத்திற்கு கொண்டுபோவதற்காக மனுக்கள் கொடுப்பதும், பேச்சுவார்த்தைக்கு போவதுமாக செப்டம்பரில் துவங்கி மார்ச்வரையிலும் நடந்தலைந்து திரிந்தனர்.

தாசில்தார் தலைமையில் 8 முறையும், காவல்துறை அதிகாரிகள் தலைமையில் 3 முறையும் பேசியும் பிரச்சனை தீரவில்லை. பேச்சுவார்த்தைக்கு தலித்துகள் வந்து காத்துக் கிடப்பதும் இதரபகுதியினர் வராமல் பேச்சு வார்த்தையை ஒத்திவைப்பதும் அனேகமுறை நிகழ்ந்துள்ளது.

செப்டம்பர் 28ம் தேதி சங்கரன்கோவில் டிஎஸ்பி தலைமை யில் பேச்சுவார்த்தை நடந்தது 1) கோனார் மற்றும் பள்ளர் கள் தனித்தனியாக விருப்பப்படும் தேதிகளில் கொடைவிழா நடத்திக் கொள்ளவேண்டும். 2) சென்ற ஆண்டு (2007) இந்து பள்ளர்களுக்கு கொடுத்த பணம் ரூ.10000 + வட்டி சேர்த்து ரூ.12000த்தில் 140 பங்கு அளித்த யாதவர்களுக்கு தலா ரூ.65 வீதம் 9075ம், 45 பங்குகள் அளித்த பள்ளர் களுக்கு ரூ.2925ம் பிரித்து யாதவர்களுக்கு 5-10-2008 அன்று காவல் ஆய்வாளர் மூலம் கொடுத்துவிட வேண்டும் 3) கொடை நடத்துகிறவர்கள் அந்த 2 மாதத்திற்கான மின் சார செலவை ஏற்றுக் கொள்ளவேண்டும். 4) கொடை சம்பந் தமாக எந்தவித சட்டம் ஒழுங்குப்பிரச்னை ஏற்பட்டாலும் இருசாராரும் பொறுப்பு ஏற்கவேண்டும் என ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஆனாலும் தலித்துகள் விழா நடத்த அனுமதிக்கப்படவில்லை.

தாசில்தார் தலைமையிலான பிப்ரவரி 2ல் பேச்சுவார்த்தை யில் கோவிலுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் பாத்தி யதையும் இல்லை என பிற சமுதாயத்தினர் சொல்ல தாசில் தாரும் தலைவணங்கி ஏற்று இது சிவில் பிரச்சனை ஆகவே கோர்ட்டுல போயி பாத்துக்கங்க என தீர்ப்பு வழங்கியுள்ளார்.

கடைசியாக பிப்ரவரி 9ம் தேதி கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர் தலித்துகள். தலித்துகள் தனியாக மார்ச் மாதம் திருவிழா நடத்தலாம் என வாய்மொழியாக கலெக்டர் கூறி யுள்ளார். போலிஸ் பந்தோபஸ்து வேண்டுமென தலித்துகள் கேட்க ஆவன செய்வதாக கூறியுள்ளார்.

கலெக்டர் சொன்னதின்பேரில் மார்ச் 4 அன்று சில போலிஸ்காரர்கள் காவல் நிற்க தலித்துகள் கோவில் கொடைக்கான பந்தக்கால் ஊன்ற சென்றனர். இதனை முன்பே அறிந்து கொண்ட கோனார்கள், திட்டமிட்டு பெண்களைத் திரட்டி பந்தக்கால் ஊன்றும் முயற்சியினை தடுத்தனர். வாக்கு வாதம் நடந்து பிரச்சனை ஏற்பட்டபோதிலும் காவல்துறை வேடிக்கை மட்டுமே பார்த்தது. பந்தக்கால் ஊன்றாமலே தலித்துகள் திரும்பியுள்ளனர். இது குறித்து தலித் பகுதியை சார்ந்த கருப்பாயி (கொல்லப்பட்ட ஈஸ்வரனின் மனைவி) சின்ன கோகிலான்குளம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இதற்குள்ளாக இருதினங்களில் பந்தக் காலுக்கு குழி தோண்டுவதற்கு பதிலாக தலித்துகளுக்கு குழிவெட்டும்படி நிகழ்வுகள் நடந்தன.

தற்போது செந்தட்டியின் 45 தலித் குடும்பங்களும் சங்கரன் கோவில் தலித் பகுதியில் தஞ்சமடைந்துள்ளனர். ஊரில் பாதுகாப்பில்லை என்பதால் எங்களது வீடு, வாசல், காடு கரைகளை அரசே எடுத்துக் கொள்ளட்டும் என்கின்றனர். சங்கரன்கோவில் பகுதியில் ஏதேனும் புறம்போக்கில் குடிசை போட்டு வாழ்ந்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர். அவர்களது ஆடுமாடுகளும் விலைக்குப் போய்விட்டன. 2 மாணவிகள் நர்சிங், டீச்சர் டிரெயினிங் படிக்கின்றனர். மற்ற படி அஞ்சாப்பு, ஆறாப்பு படிக்கும் பிள்ளைகளெல்லாம் சங்கரன்கோவில் காந்தி நகரில் தெருப்புழுதியில் நின்று கொண்டிருக் கின்றனர்.

சங்கரன்கோவிலில் தலித்துகளது மௌன ஊர்வலம் 1000 பெண்கள் உள்ளிட்டு 5000 பேர் பங்கெடுத்த மிக முக்கிய நம்பிக்கை தரும் இயக்கம் நடந்து முடிந்துள்ளது.

செந்தட்டிக்கு பக்கத்திலிருக்கும் பந்தப்புள்ளியில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்தவுடன் நூற்றுக்கணக்கான போலிசைக் குவித்த அரசாங்கம் மார்ச் 4 அன்று எங்கே போயிருந்தது? உத்தபுரத் திற்கு வடமாநிலத்திருந்து தலைவர்கள் வருகிறார்கள் என அங்கலாய்த்தவர்கள் ஓராண்டு காலமாக நீடித்த இப்பிரச்சனையை ஏன் முடிவுக்கு கொண்டு வரவில்லை?

தீண்டாமை ஒழிப்பு குறித்த சட்டங்கள் இருந்தபோதிலும், சட்டம் ஏன் தூங்கிக் கொண்டிருந்தது? அம்பேத்கர் சொல் கிறார், ‘சிலசமயங்களில் சட்டம், மக்கள் கருத்துக்களைவிட வலிமை பெற்று முன்னுக்கு சென்று அதைத் தடுத்து தனக்கு சரி என்று தோன்றும் வழியில் அதை நடத்திச் செல்கிறது. சிலசமயம் சட்டத்தைவிட மக்கள் கருத்து வலிமை பெற்றி ருக்கிறது. சட்டத்தின் கடுமையை குறைப்பதுடன் அதை வலுவிழக்கச் செய்கிறது. சிலசமயங்களில் சட்டமும் பொது மக்கள் கருத்தும் பலம்பெற்று சட்ட வழிமுறைகளை ஒதுக்கித் தள்ளி அவற்றை செயலற்றவையாகவும்ஆக்கிவிடுகிறது” (அம்பேத்கர் தொகுதி நூல் 25, எது மிகவும் கொடுமை யானது - தீண்டாமையா? அடிமைத்தனமா?)- அம்பேத்கர் குறிப்பிடுகிற பொதுமக்கள் என்பது தலித்துகள் அல்லாத, ஆதிக்கசாதியினரால் கட்டமைக்கப்பட்ட பொதுப்புத்தியைத் தான் அவ்வாறு குறிப்பிடுகிறார் என கொள்ளலாம்.

செந்தட்டி போன்று பலநூறு கிராமங்களிலுள்ள தீண் டாமைக் கொடுமைகளை தடுக்கவேண்டிய சட்டம் செய லற்று நிற்கிறது. குறிப்பிட்ட சில பிரச்சனைகளில் ஜனநாயக அமைப்புகள் ஒன்றிணைந்து பொதுக்கருத்தை உருவாக்க முயற்சி செய்தபோதிலும், சமூகம் கடைப்பிடிக்கிற சாதியப் பாகுபாடு பொதுப்புத்தியில் வலுவாய் நிற்கவே செய்கிறது. சட்டம், சமத்துவம், அரசு, அனைவரும் சமம் என கதைப்போரே இது தானய்யா நமது நாடு.

ஒவ்வொரு நாளும் ஒரு தலித் கொல்லப்படுகிறார், 3 தலித் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள், தலித்துகள் மீது 60 வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2000த்தில் மட்டும் 486 கொலை வழக்குகள், 1034 கற்பழிப்புகள், 260 கொள்ளைகள், 22000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1981 முதல் 2000 வரை பதிவு செய்யப் பட்ட தீண்டாமை வழக்குகள் 3,57,945. பதிவு செய்யப்படாத வழக்குகள் இதைவிட 20 மடங்குக்கு மேல் இருக்கும்.

1929ம் ஆண்டிலேயே திருநெல்வேலியிலிருந்து வெளிவந்த தொண்டன் ஏட்டில் வருணாசிரம தர்மத்தை கண்டித்து இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: “வாழ்வை அழிக்க வந்த மோசடிப் பேய் நீ, கொடும் இதயம் படைத்த பார்ப்பனர்களின் வாழ்க்கைக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் இருக்கும் கொடுமைகளை நிலைநிறுத்தப் பார்க்கிறாய், அந்தோ நீ உனது இருப்பை இழந்து கொண்டிருக்கிறாய். விரைவில் விரட்டியடிக்கப்படுவாய்”

(பி.எஸ்.சந்திரபாபு - தமிழகத்தில் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சி)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com