தமிழ்ப்பதிப்பு வரலாறு : திருமுருகாற்றுப்படை
கா.அய்யப்பன்
19ஆம் நூற்றாண்டு தொடங்கிய புத்தகமாக்க வரலாறு என்பது தமிழ்ப் புலமைமரபில் கவனிக்கப்படவேண்டிய சுவாரசியமான ஒன்று. மேல்நிலை சமூகத்தைச் சார்ந்தவர் களுக்கு மட்டுமே உரியதான பதிப்பு முறைமை என்பதை, பதிப்பாளர்களாகவும் அச்சகத்தினராகவும் அச்சிடப்பட்ட நூல்கள் வழியாகவும் கிடைக்கும் தரவுகளின்வழி மதிப்பிட முடியும். அப்படியான வரலாறு சங்க நூல்களுள் ஒன்றான திருமுருகாற்றுப்படை வழி வளர்ந்த முறைமையை அவதானிப்பதாக இக்கட்டுரை அமையும்.
திருமுருகாற்றுப்படை
‘மதுரை கடைச்சங்கத்து மகாவித்துவானாகிய நக்கீரர்’ என திருமுருகாற்றுப்படை நூலாசிரியரை அதன் பதிப்பாசிரி யர்கள் போற்றியிருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக அவ்வாறு நாமும் போற்றுகிறோம். தமிழ்ப் புலவர் மரபில் நக்கீரர் என்னும் பெயர் வழியாக அறியப்படுவர்கள்.
அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, பத்துப் பாட்டில் திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, இறைய னார் களவியல் உரைகாரர், அடிநூல், நாலடி நானூறு மற்றும் பதினொறாம் திருமுறையில் இடம்பெறும் நக்கீரர் பாடலாக அமைவன (திருமுருகாற்றுப்படை, கைலைபாதி காளத்தி பாதி உட்பட பத்து தலைப்புகளில் உள்ள நூல்கள்.) இதில் திருமுருகாற்றுப்படை நக்கீரர் கி.பி.450ஆம் ஆண்டினைச் சேர்ந்தவர் என்பது வையாபுரிப்பிள்ளை கருத்து. பதினோ ராம் திருமுறைத் தொகுக்கப்பட்ட போதும் அதில் சேர்க்கப் பட்டது என்பதோடு பதினோராம் திருமுறையில் இடம் பெறும் திருமுருகாற்றுப்படைத் தவிர்த்த பிறநூல்களை இயற்றிய நக்கீரர் வேறு என்பது அனைவரும் அறிந்ததே.
1.சங்க நக்கீரர்: கி.பி.250 நெடுநல்வாடை, எட்டுத் தொகை யில் சில பாடல்களைப் பாடியவர், 2. முருகாற்றுப்படை- நக்கீரர்:கி.பி.450 சைவ சமயத்தைச் சார்ந்தவர். 3.இறை யனார் களவியலுரை கி.பி.650 (அடிநூல், களவியலுரை, நாலடிநானூறு), 4. நக்கீர தேவநாயனார் கி.பி. 850, 11ஆம் திருமுறைப் பிரபந்தங்கள், சைவசமயத்தைச் சேர்ந்தவர். இவ்வாறு நம் வசதிக்கு ஏற்ப பிரித்து அறிவதோடு ‘நக்கீரர்’ எனும் பெயர் தொன்மை தமிழ் இலக்கிய இலக்கண வரலாற் றில் ஆதிக்கம் செலுத்தியிருப்பது இன்னும் அறியத்தக்கது.
தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் குறிப்பாக சங்க இலக்கியப் பதிப்பு வரலாற்றில் திருமுருகாற்றுப்படைக்கான பதிப்பு முறைமை என்பதனை ஒட்டுமொத்த சங்க இலக்கிய பதிப்பு முயற்சிகளுக்கான வரலாற்றோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டியிருக்கிறது. சங்க இலக்கியங்களில் முதலில் பதிப்பிக்கப்பட்ட நூல் திருமுருகாற்றுப்படை. ‘திருமுரு காற்றுப்படை மூலபாடம், தெய்வத்தன்மை பொருந்திய, மதுரைக் கடைச்சங்கத்து, மகாவித்துவானாகிய, நக்கீரர், அருளிச் செய்தது, நச்சினார்க்கினியருரைப்படியே பரி சோதித்துச் சென்னைப்பட்டணம், விவேகக் கல்விச்சாலை, சரவணப் பெருமாளையரால், கல்வி விளக்கவச்சுக் கூடத் தில், அச்சிற் பதிப்பிக்கப்பட்டது, சய வருடம், ஆவணி மாதம் (1834)' - என்ற தகவலுடன் கூடிய இப்பதிப்பே இன்று கிடைக்கக்கூடிய திருமுருகாற்றுப்படை நூல்களுள் முதலில் பதிப்பித்ததாக இருக்கிறது.
1834 தொடங்கிய திருமுருகாற்றுப்படை பதிப்பு 19ஆம் நூற்றாண்டில் மட்டும் பல்வேறு நபர்களால் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்ன வென்றால் ‘பத்துப்பாட்டு நச்சினார்க்கினியர் உரையை உ.வே.சாமிநாதையர் 1889இல் பதிப்பிக்கிறார். ஆனால் 1834ஆம் வருடப் பதிப்பில் சங்க இலக்கியமான பத்துப் பாட்டில் ஒன்றாக திருமுருகாற்றுப்படை அறியப்பட வில்லை. இன்னும் வேதகிரி முதலியார் பதிப்பினைச் சொல்ல முடியும். ‘திருமுருகாற்றுப்படை, மூலபாடம், தெய்வத்தன்மை பொருந்திய, மதுரைக் கடைச்சங்கத்து மகா வித்துவ சிரோமணியாகிய நக்கீரதேவர், அருளிச்செய்தது, இஃது தமிழ்ப்புலவர், வேதகிரி முதலியாரால் பார்வை யிடப்பட்டு, பா.மதுரை முதலியாரால், திரு. சுப்பராய தேசி கரவர்களது, கல்விப்பிரவாகவச்சுக் கூடத்தில், பதிப்பிக்கப் பட்டது, இவ்வச்சுக் கூடத் தலைவர், பச்சையப்ப பெருமாள் நாயகர், சாதாரண வருடம், ஐப்பசி (1850)’ என்ற தகவலுடனான பதிப்பிலும்,
‘வெற்றிவேலுற்றதுணை, நக்கீரதேவர், அருளிச்செய்த, திருமுருகாற்றுப்படை, இஃது நச்சினார்க்கினியாரியற்றிய வுரையுடன், புதுவை, குவர்ன்மாவச்சுக்கூடத் தமிழத்தலை வராகிய, சுப்பராய முதலியாரால், பார்வையிடப்பட்டு, தமது, பாரதி விலாசவச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது, பரிதாபி வருடம், மாசி மாதம் (1852).
‘திருமுருகாற்றுப்படை, மதுரைக் கடைச்சங்கத்து, மகாவித்துவானாகிய, நக்கீரதேவர், அருளிச் செய்தது, இஃது பெரும்பான்மையும், நச்சினார்க்கினியர் உரைக்கருத்தைத் தழுவி, சிதம்பர, சைவப்பிரகாச வித்தியாசாலைக்கதிபதி யாகிய, யாழ்ப்பாணத்து நல்லூர், ஆறுமுகநாவலர், செய்த உரையுடன், சென்னை, வித்தியானு பாலனயந்திரசாலை, என்னும் அச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது, பிரமாதிச ஐப்பசி (1853) எனும் ஆறுமுகநாவலர் பதிப்பும், ஆகிய பதிப்புகள் வரை திருமுருகாற்றுப்படை சங்க இலக்கியப் பத்துப்பாட்டில் ஒன்று என்ற விபரத்துடனோ, பதினோராம் திருமுறையில் ஒன்று என்ற தகவலோடோ பதிப்பிக்கப்பட வில்லை. இதனைத் தொடர்ந்தே உ.வே.சாமிநாதையர் பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும் என 1889இல் பதிப்பித்தார். 1853க்கும் 1889க்கும் இடையே ஆறுமுக நாவலர் பதிப்பு இரண்டாம், மூன்றாம், நான்காம் பதிப்பு என தொடர்ச்சியாகப் பதிப்பிக்கப்பட்டது. திருமுரு காற்றுப்படை மூலம் தனியாகவும், முருகன் தோத்திரபாடல் தொகுப்பாகவும் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.
‘திருமுருகாற்றுப்படை, மூலபாடம், தெய்வத்தன்மை பொருந்திய, மதுரைக்கடைச் சங்கத்து மகாவித்துவ சிரோ மணியாகிய, நக்கீரதேவர், அருளிச்செய்தது. இஃது தி. சண் முக ஐயரவர்களால், பார்வையிடப்பட்டு, 1864இல் திரு. சுப்பராயதேசிகரவர்களது, கல்விப் பிரவாகவச்சுக்கூடத்தில், பதிப்பிக்கப்பட்டது.’ என்ற விபரத்துடன் ஒரு மூலப்பதிப்பு வந்திருக்கிறது. தோத்திர நிலையில் ‘விநாயகரகவல், கந்தர் கலிவெண்பா, திருமுருகாற்றுப்படை, பெருந்தேவபாணி, தோத்திரமஞ்சரி, திருச்சிற்றம்பலம், திருவடித்தாண்டகம், போற்றிக்கலிவெண்பா ஆகியதோத்திரச் சுருக்கம், இவை, சாமிவன«க்ஷத்திரமென்னும்-கோயிலூர், ஸ்ரீ.முத்துராம லிங்க சுவாமிகளின் ஆதினத்திற்குரிய, ஸ்ரீ.சிதம்பர சுவாமி கள், மாணாக்கர்களிலொருவராகிய, அ.இராமசுவாமிகளால், நச்சாந்துபட்டி, பெ.ரி.வெ.பெரியகருப்பம் செட்டியார், வேண்டுகோளின்படி, பரிசோதித்து, சென்னை ஜீவரக்ஷ£ மிர்த அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டன. விய வருடம், ஆனிமாதம் (1886)’ எனும் பதிப்பையும்,
‘திருச்சிற்றம்பலம், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, கந்தரந்தாதி, திருச்செந்தினிரோட்டகயமகவந்தாதி, திருச்செந்தூர்ச் சுப்பிரமணியரகவல், திருச்செந்தூர்க்கந்தர் கலிவெண்பா, திருமுருகாற்றுப்படை, கந்தர்கஷ்டிகவசம் ஆகிய சுப்பிர மணியர் பிரபந்தக் கொத்து, இவை, சாமிவன «க்ஷத்திரமென் னுங் காயினூர் அ.இராமசாமிச் சுவாமியவர்களால், பல பிரதிகளைக் கொண்டு பிழையறப் பரிசோதித்து, ஆத்தங்குடி, ஆ.த.ஆ. ஆதரமழகிசெட்டியார், குமாரராகிய, ஆறுமுகஞ் செட்டியார் வேண்டுகோளின்படி, சென்னை, மிமோரியல் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டன, சர்வதாரி வருடம், வைகாசி மாதம் (1888)’ என்ற தகவலுடனான இப்பதிப்பையும் சொல்லலாம்.
திருமுருகாற்றுப்படை எனும் பத்தி பனுவல் தமிழ் இலக்கிய வரலாற்றில் பல்வேறு இடங்களில் வைத்துப் பார்ப்பதைப் போல அதன் பதிப்பையும் பார்த்திருக்கின்றனர். 1870இல் சுப்பராய செட்டியார் பதிப்பித்த ‘பதினொரந்திருமுறை’ எனும் நூலிலும் நக்கீரர் தோத்திரங்களுள் திருமுருகாற்றுப் படையும் இடம்பெற்றிருக்கிறது. இங்கு எழுகிற வினா என்னவென்றால் திருமுருகாற்றுப்படையை இப்படி பலரும் பல்வேறு சூழல்களில் பதிப்பித்ததன் நோக்கம் என்ன என்பது, மூலமாகவும், நச்சினார்க்கினியர் உரை யுடனும், தோத்திரப் பாடலாகவும், பதினொராம் திருமுறை யில் ஒன்றாகவும் பதிப்பித்திருக்கின்றனர். ஆனால் உ.வே.சா. மட்டும்தான் பத்துப்பாட்டில் ஒன்றாகப் பதிப்பித்திருக்கின்றார். 19ஆம் நூற்றாண்டில் வெகுவாக வளர்ந்த பதிப்பு வரலாற்றில் திருமுருகாற்றுப்படைக்கென தனி வரலாறு உண்டு. ‘சைவ பக்தி பனுவல்’ என்கிற ஒரே ஒரு பின்புலத்தில் பதிப்பிக்கப்பட்ட இந்நூல் ‘சங்கஇலக்கி யம்’ என்கிற புரிதலை இழந்திருக்கிறது. சங்க இலக்கியங்க ளில் திருமுருகாற்றுப்படைக்கு மட்டுமே பலர் உரை யெழுதியிருப்பதாக அறியமுடிகிறது. ‘திருமுருகாற்றுப் படை உரைக்கொத்து, நச்சினார்க்கினியர், உரையாசிரியர், பரிமேலழகர், கவிப்பெருமாள், பரி உரைகள் கூடியது’ என்ற நூலில் திருப்பனந்தாள் காசிமடம் வெளியீடாக 1959இல் வந்திருக்கிறது. 1834 முதல் வெளியான திருமுருகாற்றுப் படை பதிப்புகள் நச்சினார்க்கினியர் உரையை மட்டுமே வெளியிட்டன. 1943இல் திருமுருகாற்றுப்படை உரையாசிரி யருரையுடன் என பதிப்பித்த எஸ்.வையாபுரிப்பிள்ளை, (செந்தமிழ் பிரசுரம், 88) தமது பதிப்புரையில் “தி. சண்முகம் பிள்ளையவர்களால் பார்த்திப வருடம் மேடரவியில், சென்னை ஜீவரக்ஷ£மிர்த அச்சுக்கூடத்தில் ‘பரிமேலழகருரை யென ஓருரை பதிப்பிக்கப்பட்டது’’ என்ற குறிப்பினைத் தரு கிறார். 1885இல் வெளியானதாகக் கருதப்படும் இப்பதிப்பு ஆய்வாளருக்கு கிடைக்கவில்லை. ‘திருமுருகாற்றுப்படை மூலமும், பரிமேலழகர் உரையும், கோ.வடிவேலு ரெட்டி யாரவர்களால் பரிசோதிக்கப்பெற்றது. சாது இரத்தின சற்குரு புத்தகசாலை, சென்னை, 1924’ என்ற பதிப்பு திருமுருகாற் றுப்படைக்கு வந்த பரிமேலழகர் உரைப்பதிப்பாக அறியப் படுகிறது. இன்னும் திருமுருகாற்றுப்படை மூலமாக காஞ்சி -நாகலிங்க முதலியாரால், பரிசோதிக்கப்பட்டு, காணியம் பாக்கம், முருகேச முதலியாரால், சென்னை, இந்து தியாலஜி கல் யந்திரசாலையில் 1891இல் பதிப்பிக்கப்பட்ட பதிப்பும், திருமுருகாற்றுப்படை மூலபாடம், இஃது அஷ்டாவதானம் பூவை. கலியாண சுந்தர முதலியாரால், பரிசோதிக்கப்பட்டு, சென்னை, நிரஞ்சனிவிலாச அச்சுயந்திரசாலையில் 1892இல் பதிப்பிக்கப்பட்ட பதிப்பும் கிடைக்கிறது.
பதிப்பும் வாசிப்பும்
தமிழ் நூல்களை அதன் பதிப்பு வரலாற்றோடு இணைத்து வாசித்தல் என்பது நல்ல விடயம். அதே சமயம் அதில் எழும் பிரச்சனைப் பாடுகள் என்பது முக்கியமானதாகும். ‘திருமுருகாற்றுப்படை’ எனும் பனுவலை அதன் பதிப்பு நிலைமையோடு வைத்து புரிந்து கொள்ளும் பொழுது எழும் சிக்கல் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
‘திருமுருகாற்றுப்படை’ எனும் பனுவல் அதன் ஆசிரியர் நக்கீரரோடு வைத்து புரிந்துகொள்ள வேண்டியது. நக்கீரர் எனும் பெயர் சிவபெருமானோடு நெருங்கிய தொடர்பு டையதாக ஆக்கப்பட்ட முறைமை இறையனார் களவியல் உரையிலிருந்து வெளிப்படையாகத் தெரிகிறது. இன்னும் சங்க இலக்கியம் தொடங்கி பக்தி இலக்கிய தொகுப்புவரை நக்கீரர் எனும் பெயர் மிகப்பெரிய ஆளுமையாக பார்க்கப் பட்ட அல்லது ஆக்கப்பட்ட வரலாறு என்பது பலவாறு விவாதிக்கப்படவேண்டிய ஒன்று. திரும்பத்திரும்ப அதாவது ‘திருவள்ளுவர்’ எனும் ஆளுமைக்கு இணையாக அல்லது அதனைத் தாண்டியதொரு ஆளுமையாளர் நக்கீரர் என்பதான கருத்தாக்கத்தினை உண்டுபண்ண ஆதிக்க சக்திகள் தொடர்ச்சியாக முயன்றதன் விளைவே என்று கூட விவாதிக்க இடமுண்டு. திருமுருகாற்றுப்படைக்குக் கிடைக்கும் பல்வேறு உரைகளையும் இப்புலத்தில் வைத்து பார்க்கவேண்டும். எனவேதான் நக்கீரர் எனும் ஆளுமையை கி.பி.250 தொடங்கி கி.பி.800 வரை நீட்டித்தோ அல்லது திட்டமிட்டோ உருவாக்கியிருக்கின்றனர். இவை பாட்டும் தொகையும் தொடங்கி பன்னிரு திருமுறை வரையிலான பதிப்பு வரலாற்றோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டிய தோடு 19ஆம் நூற்றாண்டில் இயங்கிய சைவ, குறிப்பாக முருகன் எனும் கடவுள் மீதான தோத்திர திரட்டுவினூ டாகவும் புரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
திருமுருகாற்றுப்படை எனும் பனுவல் எழுதப்பட்டது முதல் பதிப்பிக்கபடுதற்கு முன்வரை பல்வேறு வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் உரைகளாக கிடைக்கும் நூலைக் கொண்டும் தொல் இலக்கிய, இலக்கண உரையா சிரியர்களால் ஆளப்படும் உரைமேற்கோள் வழியும் அதனை உறுதிபடுத்தமுடியும். அதேபோல் 1834 தொடங்கிய அதன் பதிப்பு 1892 வரையிலான அனைத்து நிலைப் பதிப்புகளை யும் (பத்துப்பாட்டு, திருமுருகாற்றுப்படை மூலம், பன்னிரு திருமுறை, முருகன் தோத்திரம் உரை) தொகுத்துப் பார்க்கின் 19 ஆம் நூற்றாண்டில் அச்சு ஊடகத்தின் வழியாக அவை வாசிக்கப்பட்ட அல்லது முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட முறைமை அறியவரும். திருமுருகாற்றுப்படைக்கு நச்சி னார்க்கினியர் (கி.பி.14), உரையாசிரியர் (கி.பி.15), பரி மேலழகர் (கி.பி.13) கவிப்பெருமாள், பரிதி யார் (கி.பி.15) ஆகியோரின் உரைகள் 20ஆம் நூற்றாண்டில் பதிப்பாக நச்சி னார்க்கினியர் உரைமட்டும் 19ஆம் நூற்றாண்டில் பல முறை பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. இச்செயல்பாடு தமிழ்ப் பதிப்பு வரலாற்றின் போக்கினை அவதானிக்க துணை செய்யும்.
19ஆம் நூற்றாண்டில் வேகமாகச் செயல்பட்ட தமிழ்ப் பதிப்பு வரலாறு என்பதோடு ஒவ்வொரு நூலினையும் வாசிப்புக்கு உட்படுத்தும் பொழுது அப்பனுவலின் வேறொரு முகம் அறியவரும்.அப்படி திருமுருகாற்றுப்படை எனும் பனுவலை நக்கீரர் எனும் புலமையாளரோடு இணைத்து பார்க்கிறபொழுது நிறைய தகவல்களைப் பெறமுடிகிறது.
பதிப்பாளர்: சரவணப் பெருமாளையர், வேதகிரி முதலியார், ஆறுமுகநாவலர், சுப்பராய முதலியார், சண்முகஐயர், அ. இராமசாமி, சுப்பராயசெட்டியார், முருகேச முதலியார், கலியாண சுந்தரமுதலியார்.
பதிப்பகத்தார்: சுப்பராயதேசிகரின் கல்விப்பிரவாக அச்சுக் கூடம், கல்வி விளக்க அச்சுக்கூடம், சுப்பராய முதலியாரின் பாரதிவிலாச அச்சுக்கூடம், வித்தியாணுபாலன யந்திர சாலை, ஜீவரக்ஷமிர்த அச்சுக்கூடம், மிமோரியல் அச்சுக் கூடம், நிரஞ்சனி விலாச அச்சுக்கூடம், இந்து தியாலஜிகல் யந்திரசாலை- என இப்படியான பதிப்பாளர், பதிப்பகத் தோடு இணைத்துப் பார்க்கின் தொடக்கக் கால பதிப்பாளர், பதிப்பகத்தார் பற்றிய புரிதல் அறியவரும். சங்கப் பனுவலாக இன்னும் செம்மொழி அறிவிப்பு நூலாக இருக்கும் திரு முருகாற்றுப்படை எனும் ஒரு நூலுக்குமட்டும் இப்படியான பல பதிப்புகள் வந்திருக்கிறது. தமிழ் அறிவுமரபில் ஒரு பனுவல் மீது தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டுவரும் வாசிப்பு என்பது உரையாசிரியர் மரபுவழி அறிய முடியும். இப் பின்புலத்தில் திருமுருகாற்றுப்படை பனுவலின் வாசிப்பு என்பது இடைக்காலத்தில் பரவலாக இருந்திருக்கிறது. அறம்பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயன் என்பதற் கிணங்க உரையாசிரியர்கள் நூலை தேர்வு செய்திருக்கின் றனர். வீடுபேறு அடைதற்கு திருமுருகாற்றுப்படையின் வாசிப்பு அமையும் என நம்பினர், அதாவது அறம்பொருள் இன்பம் பயில திருக்குறளும், வீடுபெற திருமுருகாற்றுப் படையும் துணை செய்யும் என்பதே.
‘திருமுருகாற்றுப்படை என்பதற்குச் சிந்தனையும் மொழி யும் செல்லா நிலைமைத்தாய அந்தமில் இன்பத்து அறிவில் வீடு பெறுவான் அமைந்தான் ஓர் இரவலனை அவ்வாறு வீடுபெற்றான் ஒருவன் முருகனுழை ஆற்றுப்படுத்தல் எனப் பொருள் விவரிக்க’ என பரிமேலழகர் குறிப்பிடுகிறார். இதே வீடு பேற்றிற்காகவே திருமுருகாற்றுப்படை பதிப்பாசிரியர் களும் பதிப்பகத்தார்களும் முயன்றிருக்கின்றனர். திருக் குறளினையும் தாண்டிய ஒரு கருத்தாக்கத்தினை உரையாசிரி யர்கள் திருமுருகாற்றுப்படைக்கு உருவாக்கியிருப்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும். ஒரு பனுவலின் வாசிப்பு மரபு என்பதினூடாக செயல்படும் வைதீகச் செயல்பாடு கவனிக்கத்தக்கதாகிறது.
துணைநூற்கள்
1.திருமுருகாற்றுப்படை உரைக்கொத்து, ஸ்ரீகாசிமடம், திருப்பனந்தாள், 1992, (மூன்றாம் பதிப்பு)
2.உரையாசிரியர்கள், மு.வை. அரவிந்தன், மணிவாசகர் பதிப்பகம், 1995 (மூன்றாம் பதிப்பு)
3.சங்க இலக்கிய உரைகள், அ. சதீஷ், சென்னைப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வேடு, 2007.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|