Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜூன் 2008

உங்களை என் முகத்தைப் பார்க்கும்படி செய்த கதை - 2
அழகிய பெரியவன்

இலையை வெட்டிக்கொண்டே சொன்ன புட்டண்ணன் கதை

சிறுவயதில் என்னுடன் அதிகம் பேசியவர்களில் முதலில் நிற்பவர் அம்மாதான். அவர் என்னுடன் பேசிக் கொண்டேயிருப்பார். நான் கல்யாணம் கட்டிக்கொள்ளும்வரை இது நடந்தது. என்னிடம் சொல்வதற்கு அம்மாவிடம் ஏகப்பட்ட கதைகள் இருந்தன. தன்வீட்டாரைப் பற்றி, தன்னை பெண் பார்க்க வந்தவர்களைப் பற்றி, தன் இளமைக் காலங்களைப் பற்றி, தன் மூதாதையர்களைப்பற்றி, தன் ஊரைப்பற்றி. என்னுடன் மட்டுமல்ல சித்திகளோடும் பக்கத்து அக்கத்து வீட்டுப் பெண்களோடும் கூடத்தான் அவர் இப்படி பேசினார். அம்மா படித்த குடும்பத்திலிருந்து வந்தவர். அவர் வாழ்க்கைப்பட்டு வந்த இடம் போல் அவரின் சொந்த ஊர் ஒன்றும் கிராமம் இல்லை. அது சிறு நகரம். அம்மாவுடன் கூடப்பிறந்தவர்கள் எல்லோரும் நன்றாகப் படித்தவர்கள். ஆனால் அம்மா எட்டாம் வகுப்போடு நின்று விட்டவர். நிற்கவைக்கப்பட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

பாட்டிக்கு ஒன்பது குழந்தைகள். அம்மா அய்ந்தாவது. அவருக்கு அடுத்து பிறந்த மூன்று தம்பிகளையும், ஒரு தங்¨¸யையும் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு தன்மேல் விழுந்துவிட்டதாக என்னிடம் வருத்தத்துடனும், கோபத்துடனும் சொல்வார்.

அதிகம் படிக்கவில்லையானாலும் விசய ஞானத்திற்கு ஒன்றும் குறைவு இருக்காது. வார்த்தைகளை நேர்த்தியாகவும், அழுத்தந்திருத்தமாகவும் பேசுவார். அதனாலேயே அவருடன் பேசுவதற்கு சக பெண்கள் விரும்பியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர் பேசுவதை தாத்தா கிண்டலடிப்பார். கிராமங்களில் பேசுவதைப் போன்ற பொழுதுபோக்கு பெண்களுக்கு வேறு கிடையாது. ஊரிலே இப்போதுபோல தொலைக்காட்சிப் பெட்டிகள் அப்போது யார் வீட்டிலேயும் இருக்காது. சில வீடுகளில் மட்டும் வானொலிப் பெட்டி இருக்கும். அதுவுங்கூட ‘பேட்டரி செல்’ வாங்கிப் போட முடிகிறவர்களால்தான் வானொலியையும் வைத்துக்கொள்ள முடியும். அந்த செல்லையுங்கூட அடிக்கடி மாற்றவேண்டும். இல்லையென்றால் கனிந்த பழம்போல கொழகொழவென்றாகி அதன் ஓரங்களில் வெண்மையாய் ஒருவிதமான பசை போன்ற திரவம் உருகி வழியும். அதை உடனே கழற்றிப் போடவில்லையென்றால் வானொலிப் பெட்டியின் உள்ளே பரவிவிடும்.

அப்பா கடைக்குப் போய் திரும்பும்போதெல்லாம், வானொலிப் பெட்டிக்கு பேட்டரி செல் வாங்கி வருவாரா என்று பார்த்திருப்போம். சாமான் செலவுகளையெல்லாம் எடுத்து வைத்தபிறகு வெள்ளை வெளேர் என்று இரண்டு எவரெடி செல்களை காகிதப் பொட்டலத்திலிருந்து பிரித்தெடுப்பார். அவைகளில் குமிழ்போல இருக்கும் முனையில் சிவப்புத் தொப்பி போட்டது போல பிளாஸ்டிக் மூடி ஒட்டியபடி இருக்கும். அதை சிறுகத்தி¦Â¡ன்றின் உதவியோடு வெட்டி எறிந்துவிட்டு, வானொலிப் பெட்டியின் பின்புற அறையைத் திறந்து உருகிய செல்களை எடுத்துவிட்டு பொருத்துவார். நான்கு செல்களில் இரண்டு புதிதாகவும், இரண்டு கொïசம் பழசாகவும் இருக்கும். இரண்டிரண்டாய் தீரத்தீர இரண்டிரண்டாய் மாற்றப்படும். இந்தச் சுழற்சியை எப்படியோ அப்பா ஏற்படுத்தி வைத்திருந்தார்.

செல்களிலேயே பல வகையுண்டு. காகித உறையையும், உலோக உறையையும் கொண்டவை என. தீர்ந்துபோன செல்களை உடைத்து கைகளில் கரி படியப் படிய, உள்ளிருக்கும் கிராபைட் தண்டை எடுப்போம் விளையாட. அத்துண்டு ஒரு ஸ்டீல் தொப்பியை போட்டுக் கொண்டு பார்ப்பதற்கு அழகாக இருக்கும். செல்களை உடைப்பதைப் பார்த்தால் திட்டு விழும். அவைகளின் உள்ளிருக்கும் கரிப்பொருள் விஷம் என்று பெரியவர்கள் சப்தம் போடுவார்கள். சக்தி குறைந்து வரும் செல்களை வெயிலில் காயவைத்து காய வைத்துô பயன்படுத்துவார்கள்.

வானொலியில்தான் எத்தனை வகை. தரமானதும், உயர்ந்த வகையானதுமான வானொலிப் பெட்டிகளை வைத்திருப்போருக்கு ஊரிø தனி மதிப்பும், பெருமையும் இருக்கும். எங்கள் வீட்டில் பிலிப்ஸ், டக்காய் போன்ற பெட்டிகளே இருந்தன. சிலரைப் போல அடிக்கடி வானொலிப் பெட்டிகளை அப்பா கைமாற்றுவதில்லை. எனவே இவைகளில் ஏதாவது ஒன்று இருந்தது. ஆனால் அப்பாவிற்கு, விலையுயர்ந்ததும், தரமானதுமான மர்பி வானொலிப்பெட்டி மீது ஆசை இருந்தது. அதை கடைசிவரை அவர் வாங்கவேயில்லை. ஒரு சின்னப் பையன் விரல் சூப்பிப் கொண்டிருப்பது போன்ற அழகான ஓவியம் ஒன்று அந்த வானொலிப் பெட்டியில் இருக்கும். அதற்குள் சூறைக்காற்றினைப் போல தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்துவிட்டன.

இப்படி பேச்சே நொறுக்குத் தீனியாகவும், செவித்தீனியாகவும் இருந்த காலத்தில் அம்மாவைப் போன்ற பேச்சாளர்களுக்கு ஓய்வு ஒழிச்சல்தான் ஏது? ஆனால் அம்மாவிடம் அதிலேயும் ஒரு சிறப்பு இருந்தது. அவர் பேசுவதற்காக வேண்டி எந்தப் பெண்களின் வீடுகளையும் தேடிப் போகமாட்டார். வீடு, அக்கம் பக்கம் பெண்கள், வீடு தேடி வருவோர் அவ்வளவுதான். வீட்டு வேலையும் எங்கு விடும்? பீடி இலை வெட்டும் வேலையென்றால் சும்மாவா? பொழுதன்னைக்கும் அதனுடன் ஓயுமாலப்படவேண்டும். முன்னிரவு தொடங்கும் வரைக்கும் இலையைக் கட்டிக்கொண்டு அழுதால் இன்னும் யார் வீட்டுக்குத்தான் கதைப் பேச போக முடியும்...

முன்னிரவில் நனைத்து வைத்த பீடி இலைக்கட்டுகள் காலையில் நரம்பு சீவ எடுக்கும்போது பதமாக ஊறியிருக்கும். நரம்புக் குச்சிகளைச் சீவி எடுக்க சிறுசிறு கத்திகள் இருக்கும். பீடித்தொழில் செய்வதில் தவிர்க்க முடியாத உபகரணங்கள் அவை. அச்சிறு கத்திகளைக் கொண்டு சர்சர் என இலையின் நரம்புகளைச் சீவுவோம். இலையின் மேல்பாகத்தில் நீளவாக்கில் இருக்கும் ஒற்றை நரம்பை மட்டும்தான் அப்படி சீவி எடுக்க வேண்டும். பதமாக ஊறியிருக்கும் நரம்புக் குச்சிகளை சீவி எடுக்க அவ்வளவு ஆசையாக இருக்கும்.

மாதத்துக்கு ஒரு முறையோ, வாரத்துக்கொருமுறையோ வெள்ளாட்டுத் தாடி வைத்த பாய்கள் சிலர் ஊர்மேல் வருவார்கள். அவர்களிடம் தான் இலை சீவும் சிறுகத்திகளையும், கத்திரிகளையும் சாணை பிடிப்பது. கத்திகளின் வெட்டுப்பாகத்தை சாணைக்கல்லின் மீது வைத்துக்கொண்டு காலால் மிதிக் கட்டையை அழுத்தவார் சாணைக்கார பாய். கருப்புச் சாணைக்கல் சுழன்று, கத்தியில் பொறி பறக்கும். மத்தாப்பிலிருந்து தெறிக்கும் தீப்பொறிப்போல் அது நேர்க்கோட்டில் பீறிட்டு விழும். மிதிப்பதை மெதுவாக்கி இப்படியும் அப்படியுமாக சாணை பிடித்த கத்தியை கல் மீது உரசுவார். இனிமையான இசை போன்ற ஒலி எழும்பியடங்கும்.

இடுப்புயரத்துக்கு இருக்கும் நாற்காலி போன்றது அவரின் சாணை எந்திரம். அதன் ஒரு பக்கத்தில் தோல்பை¦Â¡ன்றை அடித்திருப்பார் சாணை பாய். அது அவரின் முதுகை உரசிஉரசி கரேலென மாறியிருக்கும். அதன் உள்ளேதான் அவர் வேலைக்கான சாமான்களை போட்டு வைத்திருப்பது. சாணைப் பிடித்த சிறுகத்தியைக் கொண்டு பீடி இலையை சீவினால், இலை பாதியாய்க் கிழிந்து விடுவதுண்டு. நானும் தம்பிகளும் போட்டி போட்டுக்கொண்டு சீவும்போது இலை கிழிந்தால் அம்மாவிடமிருந்தோ அப்பாவிடமிருந்தோ சத்தம் வரும்.

“மெதுவா சீவுங்க. எல ஒடச்சலா கீது. இதுல எலய கிழிச்சிட்டிங்கன்னா, உத்தாரா வராது.” உபரியாய் பிடி உருவாவதைத்தான் எங்களூர்ப் பக்கத்தில் ‘உத்தாரா’ என்பார்கள் தொழிலாளர்கள். பீடி இலைகள் உடைசலாய் இருந்தால் கிழிசல்கள் அதிகமாக இருக்கும். கிழிசல் இல்லாத இலைகளில்தான் தகடு அளவிற்கு இலைகளை வெட்ட முடியும். இல்லையென்றால் பீடிகளின் எண்ணிக்கை குறைந்து நட்டம் தான். அந்தத் தும்மட்டி இலைகளை பெண்கள்தான் வெட்டுவார்கள். இலை வெட்டுவதும், சுற்றிய பீடிகளின் வாய்களில் புகையிலைத் தூள்களை நிரப்பி மூடுவதும் சிறுவர்கள் மற்றும் பெண்களின் வேலை. பீடியினைச் சுற்றுவÐ முதன்மைப் பணி என்பதால் அது ஆண்களுக்கு உரியது. பிறகு மூடிய பீடிகளை இருபது பீடிகளாகக் கட்டி, அவற்றின் முதுகுப் பக்கங்கள் சீராகத் தெரியும்படி திருப்புவதும் ஆண்கள்தான்.

பீடிகளை பெண்கள் சுற்றக்கூடாதென்றில்லை. வீட்டு வேலைகளை செய்துகொண்டு இலை வெட்டுவதையும், புன்னி மூடுவதையும் தான் பெண்களால் செய்யமுடியும். ஆனால் சில பெண்களும்கூட பீடி சுற்றுவார்கள். அவர்களுக்கு மதிப்பு அதிகம். முசுலிம் பெண்களில் அப்படி பீடி சுற்றுகிறவர்கள் அதிகம் உண்டு. ஆண்கள் இந்த வேலையைச் செய்யவில்லை என்றால், எல்லாவற்றையும் பெண்களேதான் பார்க்கவேண்டும்.

எங்கள் ஊரில் பீடி சுற்றும் தொழில் செய்கிற எல்லா வீடுகளிலும் பெண்கள் இலை வெட்டினார்கள். கால் நீட்டியபடியோ, சம்மணமிட்டுக் கொண்டோ, சாய்ந்தாடியபடியோ வெட்டுவார்கள். தகடுக்குப் போக துண்டுகளாக விழும் இலைகள் விதவிதமான அளவுகளில் குவிந்திருக்கும் இலைக்கட்டின் மேலும் கீழும் வைத்துக் கட்டப்படும் சிவப்பிலைகள், வாதம் இலைகளைப்போலச் சிவந்து அப்குப்பையின் இடையினில் கலந்திருக்கும் கத்திரிகள் தகடின் முனையை உரசியபடி வெட்டும்போது எழும் சத்தம் வினோதமாக இருக்கும். கருக் கருக் என அவ்வொலி ஏதோ அத்தொழிலுக்கே உரிய மொழிபோல அவ்வீடுகளில் கேட்கும்.

“நேரா புடிச்சி வெட்டு. உள்ள வாங்கி வெட்டாத” என்பார்கள் ஆண்கள். நான்கைந்து இலைகளை அடுக்கி, பொருத்தமான இடத்தினில், முழு அளவு வரும்படி அளவுத் தகட்டினை வைத்து இலைகளை சோப்புத் துண்டுகளைப்போல வெட்டுவார்கள். வெட்டும் வேகத்தில் கத்தரியை இலேசாகச் சாய்òது வெட்டினால் இலையின் அளவு குறைந்துவிடும். இரண்டு மூன்று துண்டுகள் வரும்படியான இலைகளில் ஒன்றை மட்டுமே வெட்டினாலும் திட்டுதான். இலையின் அளவைப் பார்த்ததுமே எத்தனைத் துண்டுகள் அதில் வெட்ட முடியும் என்று பெண்கள் மனதிலேயே கணக்குப் போடுவார்கள்.

பீடி இலைகள் சொரசொரப்பாய் இலேசான முரட்டுத்தன்மையுடன் இருக்கும். அவைகளிடமிருந்து இலேசானதொரு நெடி வெருட்டும்படி எழும். இலைத் துண்டுகளை குப்பைகளாய் ஒரு இடத்தில் கொட்டி வைப்பார்கள் பெண்கள். எல்லா இலையும் வெட்டியபிறகு துண்டுகளைப் பெருக்கி பெரும் பிரம்புக்கூடையில் சுமந்துக் கொண்டு ஓடைக்கரை குப்பை மேட்டை நோக்கி பெண்கள் நடப்பதை மாலையில் பார்க்கலாம். அப்போது அவர்கள் நாளெல்லாம் உட்கார்ந்திருந்த சடைவு நீங்கியதில் உற்சாகம் கொள்வார்கள். அண்டை அக்கத்துப் பெண்களிடம் பேச்சுக் கொடுப்பார்கள். இப்படிக் காய்ந்தால் எளிய ஜீவன்களான நாங்கள் என்செய்வோம் என சூரியனுடன் பேரம் பேசும் இலைக்கூளங்கள், சருகென காயும். காற்றடிக்காலங்களில் கிராமமெல்லாம் இலைகள் சருகுப் பூச்சிகளாய் அலைந்துத்திரியும். குளிர்க் காலங்களில் அதிகாலமே பெரிசுகள் காய்ந்த குப்பை இலைகளைக் கொளுத்துவார்கள். தீயுடன் முரண்டு பிடித்து தயங்கித் தயங்கி எரியும் பீடி இலைகள். அவைகளிலிருந்து எழும் வினோத நாற்றமும், அடர்ந்த புகையும் அழுக்கைப்போல காய்பவர் மீது படியும். ஆண்டுக்கொருமுறை ஆந்திராவிலிருந்து சுமையுந்தில் வருபவர்கள் விலைபேசி, சாணக் குப்பைகளுடன் சேர்த்து இந்த இலைச்சருகின் குப்பைகளையும் எருவாக ஏற்றிப் போவார்கள்.

காலையில் எழுந்ததுமே எங்களுக்கு வேலை பீடி இலையைச் சீவுவதுதான். இலைக்கட்டுகளை பங்குபோட்டுக் கொள்வதில் போட்டியும், சண்டையும் எழும்போது அம்மாவோ, அப்பாவோ தீர்த்து விடுவார்கள். குடிசையின் நடையில் உட்கார்ந்துக் கொள்ளத்தான் எங்களுக்குப் பிரியம். சூரியன் எங்களுக்குப் பிந்தி எழுந்த தயக்கத்தில் வெட்கத்துடன் குழம்பிச் சிரிப்பான். அவனின் முகத்திலிருந்து எழும் வெட்கப் புன்னகை பொன்னிற ஒளியாய் எங்களின் மேல் விழும். அம்மஞ்சள் ஒளி எமது வாழ்வின் மீது காவிய அழகைப் பூசும். எந்தச் சிந்தனையும் அற்று, ஒருபுறம் நாங்கள் இலைச்சீவ, ஒருபுறம் அம்மா இலைவெட்ட, ஒருபுறம் அப்பா பீடி சுற்ற உருவாகும் பேரமைதியும், ஆனந்தமும், முனைப்பும் அற்புதமானது. இப்போது நினைக்கும்போது இது ஒரு தவமாய், தியானமாய்த் தோன்றுகிறது. உழைப்பின் வழியே கிடைக்கும் ஆனந்தத்தை உலகில் வேறெந்த செயலும் தராது என்பதை இளம் வயதிலேயே எனக்கு உணர்த்திய தருணங்கள் அவை.

பீடி சுற்றும்போது எழும் மெல்லிய ஓசை, புகையிலைத்தூள் நொறுங்கி அடங்கும் சிணுங்கல் சப்தம், இலைகளைச் சீவும் ஒலி, கத்திரிகள் வாய் பற்களால் இலைகளை நறுக்கும் தெறிப்பு இவைகளைத் தவிரவும் அங்கு எதுவும் இருக்காது. ஒருவர் வேலையை ஒருவர் முந்திக்கொள்ள கண்கள் மட்டுமே பார்த்துக் கொள்ளும். உடல் இன்னும் முடுக்கியது போல் வேகங்கூட்டி இயங்கும். மௌனத்தை உடைப்பது போல் அம்மாவும் அப்பாவும் நடுநடுவே பேசிக்கொள்வார்கள். அம்மா எப்போதாவது மெல்லியக் குரலில் அழகாகப் பாடுவார். அவருக்கு கருப்பு வெள்ளைப் படக்காலப் பாடல்கள் அத்துப்படி. அதிலும் சி.எஸ்.ஜெயராமன், திருச்சி லோகநாதன், பி.பி. சிறீனிவாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடல்கள் என்றால் உயிர். சில நேரங்களில் அண்மையில் பார்த்த திரைப்படத்தின் கதை ஓடும்.

நாள் முழுக்க இப்படி கிடைக்கும் பெரும்பாறை போன்ற நேரத்தை ஆண்களும், பெண்களும் பாடியும், பேசியும், கேட்டும் கரைப்பார்கள்.

நாங்கள் பள்ளியில்லாத காலங்களில் வீட்டில் இருந்தால் இன்னும் கூத்து தான். அயற்சியின் தளுக்கு, காசு கேட்டுச் சிணுங்கிக் கொஞ்சும் குட்டிப் பெண்போல எங்களைத் தழுவும் போது இமைகள் ஒட்டிக் கொள்ள உறக்கம் பிடிக்கும். அம்மா உடனே எழும்பிச் சென்று கையரிசி எடுத்து வெல்லத்தண்ணியில் போட்டு கொதிக்க வைத்திறக்குவார். ஆளுக்கொரு குவளை. வெல்லத்தில் ஊறிய அரிசியைத் தின்பதில் எனக்கும் தம்பிகளுக்கும் சண்டை நடப்பதுண்டு. சண்டை முடியும் முன் சிலநேரங்களில் ‘காபித்தண்ணி’ ஆறியிருக்கும். இப்படியானதொரு தருணங்களில் தான் அம்மா தன் பாட்டன்களான புட்டண்ணன், பெரியராசன் ஆகியோர்களின் கதைகளை எனக்குச் சொன்னார். அவர்கள் இருவரும் அம்மாவினுடைய பெற்றோரின் தந்தையர்கள். அம்மா தன் பாட்டிகளைப் பற்றி சொற்பமாகத்தான் சொல்லியிருக்கிறார். இவர்களைப் பற்றி எத்தனை முறை சொல்லியிருப்பார் என்று கணக்கில்லை.

புட்டண்ணன் அம்மாவின் தாத்தா. அவரின் அப்பாவைப் பெற்ற தாத்தா. பிறக்கும்போதே கர்ணனைப் போல கையில் கம்புடன் பிறந்துவிட்டானோ என்று ஒங்கரிப்பார்களாம் மக்கள். அந்தளவிற்கு புட்டண்ணன் சிலம்பத்தில் சூரன். நீண்ட சடைமுடி. முறுக்கிய மீசை, சிவந்த கட்டையான உருவம். ஒரே பையன் என்பதால் கட்டற்ற செல்லத்துடனும், சுதந்தரத்துடனும் வளர்ந்தாராம் புட்டண்ணன்.

புட்டண்ணனின் ஊர் பாலாற்றின் கரையிலிருக்கும் ஆம்பூர். பாலாற்றின் மேற்குக்கரையில் தேவலாபுரம், மான்குப்பம், துத்திப்பட்டு என அழகழகான குட்டிக்கிராமங்கள் பல உண்டு. சோழ மன்னன் ஒருவனின் நல்கையில் கட்டப்பட்ட திருமால்கோயில் ஒன்று இருக்கிறது. அதன் மேற்குத் திசையில் தான் பாலாறு அப்போது ஓடிக்கொண்டிருந்ததாம். பக்தர்களின் மெய்யுருகும் விண்ணப்பத்திற்கிணங்க ஆறு கோவிலின் கிழக்குத் திசைக்கு மாறியதாம். திருமாலின் பாதங்களைத் தொட்டபடி ஓடுவதுதான் ஆறுகளுக்கு அழகென பக்தர்கள் விரும்பியிருக்கிறார்கள்.

திருமாலின் கண்பார்வைக்குக் கீழே இன்று பாலாற்றில் தோல் பதனிடும் தொழிற்சாலையின் கழிவுகளும், மனிதர்கள் பதப்படுத்திக்கொள்வதால் பெருகும் சாக்கடை நீரும் ஓடுகின்றன. ஆற்றை அடித்துப் புரட்டவோ, அதன் தடத்தை மாற்றவோ திருமாலுக்கும் அவனின் பக்தர்களுக்கும் திராணியில்லாமல் போய்விட்டது இப்போது. துத்திப்பட்டின் பிந்துமாதவர் கோவில் நைந்து கசங்கிய கோவணத் துண்டு போல வெகுதூரத்தில் ஓடுகிறது. இரட்டையர்கள் எனும் புலவர்கள் கோவிலின் படிகளில் நெடுநாள் பழியாய்க் கிடந்ததாகச் சொல்வார்கள். பாலாற்றின் கரைகளில் நெல்லும், கரும்பும், தென்னையும் செழிக்கும் நிலங்கள் பல இருக்கின்றன. மான்குப்பத்தில் இருந்த ஒரு நிலத்தில்தான் புட்டண்ணன் விவசாயம் செய்தார். அந்த நிலம் அவரின் சொந்த நிலமில்லை. ஆம்பூரின் பொருளாதாரத்தை கையில் வைத்திருந்த முசுலிம்களில் ஒருவரின் நிலம். அப்படி பல முசுலிம்களுடைய நிலத்தை பறையர்கள்தான் குத்தகைக்கு விவசாயம் செய்து கொண்டிருந்தார்கள்.

புட்டண்ணனின் நிலத்தில் பெரிய கிணறு ஒன்றுண்டு. காலையில் எழுந்ததிலிருந்து பொழுது அமரும் வரைக்கும் அவருக்கு வேலை ஒழியாது. கமலை ஓட்டி நீர் இறைக்கவேண்டும். சேடை ஓட்ட வேண்டும். மாடுகளை தீனிக்குப் பத்தவேண்டும். இப்படியும் அப்படியும் திரும்ப முடியாதபடி இடுப்பொடிக்கும் வேலை. தன் இரண்டு தங்கைகளுடன் வயதான பெற்றோர்களையும் வைத்துக் கொண்டு அவர் வாழ்க்கை கழிந்தது.

புட்டண்ணனுக்கு கோபம் மூக்குக்கு மேல் வரும். சீண்டிவிடப்பட்டால் முதலில் அடிதான். பக்கத்து ஊர்களான தேவலாபுரம் வன்னியர்க்கும், துத்திப்பட்டு முதலியார்கள், நாயுடுக்கள், பார்ப்பனர்க்கும் அவரிடம் அச்சம். நிலத்துக்கார முசுலிம்கூட யோசனை செய்துதான் பேசுவார். சண்டையென்று வந்துவிட்டால் அவரின் கோலுக்கு பதில் சொல்ல முடியாது.

‘இதுக்கு சொல்றா பதிலு. இதுக்குச் சொல்லுடா பதிலை’ வேட்டியை தார் பாய்ச்சிக்கட்டி, சடைமுடியை கொண்டை முடிந்தபடி கம்பைச் சுற்றிக்கொண்டு புட்டண்ணன் சுழன்றால் அவரைச் சுற்றிலும் விர் விர் என ஒலி கேட்கும். அவரின் சிலம்பக் கம்பு மூர்க்கமுடன் காற்றில் உரசம் ஒலி. நெஞ்சில் இறங்கும் கத்தியைப்போல பீதியைக் கிளப்பும் ஒலி.

வாரத்துக்கொரு முறையோ, மாதத்துக்கொரு முறையோ நிலத்துக்கார முசுலிம் புட்டண்ணனிடம் பேசி விட்டுப் போக வந்து போவதுண்டு. ஒருநாள் அப்படி வந்தபோது புட்டண்ணன் கிணற்று மேட்டுப் பக்கத்தில் எங்குமே தம்பிடவில்லை.

“ஓய் புட்டா, எங்கே போயிட்ட?” புட்டண்ணனைஅழைத்துக் கொண்டே அவர், நிலத்தின் ஓரத்தில் இருந்த குடிசைக்கு அருகில் போனார்.

“ஏம்மா, புட்டன் இல்லியா, எங்க ஆளக் காணும்”

“தெரியில பாயி. மாட்டப் பத்தினு போனாரே அப்பிடி பார்க்கலியா?”

குடிசைக்குள்ளிருந்த புட்டண்ணனின் தங்கையிடமிருந்து குரல் வந்தது. மீண்டும் கிணற்று மேட்டுக்கு திரும்பியபோது எதிர்கொண்ட புட்டண்ணனிடம் வெள்ளாமை விவரங்களை விசாரித்தார் நிலத்துக்காரர். அவர் போகும் வரை புட்டண்ணன் தலையை ஆட்டி பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

நிலத்துக்காரரின் தலைமறைந்ததும், புட்டண்ணன் கோபத்துடன் தன் குடிசையை நோக்கிப் போனார். குடிசைக்குள்ளிருந்து அலறல் எழுந்தது. தங்கையை அடித்து உதைத்தார் புட்டண்ணன்.

“பாயிகிட்ட என்னா பேசின? அவங்க கூடவெல்லாம் பேசவேணாம்னு சொல்லியிருக்கேனில்ல?”

குத்தகைக்கு இருக்கும் பறையர் வீட்டுப் பெண்கள் சிலரை நிலத்துக்காரர்கள் பாழ்படுத்திவிடும் கதைகளைப் பற்றி புட்டண்ணனுக்கு நிறையவே தெரியும். ஆண்கள் இல்லாத நேரம் பார்த்து வீட்டுக்குள் நுழையும் முசுலீம்களையும், மேல்சாதி ஆண்களையும் எலும்பு உடையும்படி அடித்து துரத்துவதில் புட்டண்ணன் பெயர் பெற்றவர். நிலத்துக்கார முசுலிம்தன் தங்கையிடம் இப்போது பேசி விட்டுப் போனதை யாராவது பார்த்திருந்தால் என்ன சொல்வார்கள். ஆத்திரம் கொப்பளித்தது புட்டண்ணனிடம்.

“அந்தப் புள்ளையப் போட்டு ஏண்டா இப்பிடி அடிக்கிற?”

“நீயி சும்மாரு”

கிழவியின் வாய் மூடிக்கொண்டது. மகன் கோபப்படும்போது கிழவி பதில் பேசமாட்டாள். நடுங்கினாள். தங்கையை இழுத்துக்கொண்டு கிணற்று மேட்டுக்குப் போனார் புட்டண்ணன். அவள் கெஞ்சி அழுது கொண்டே போனாள்.

“என்னை உட்டுடுடா அண்ணா. நீயி எங்கன்னு கேட்டான். அதுக்குத் தாண்டா பதிலு சொன்னேன்” புட்டண்ணன் தங்கையில் பேச்சை காதில் போட்டுக் கொள்ளவில்லை. கமலையில் நீர் இறைக்கும் சால் கிணற்றுமேட்டில், தொளைக்கல்லுக்கு அருகில் கிடந்தது. நீர் வற்றியிருந்த அது ஒரு ராட்சனின் வாயைப் போல அப்பெண்ணை பார்த்தது. அவளை அதிலே தள்ளி கதறக் கதற கயிறுகளால் பிணைத்தார் புட்டண்ணன். வடக்கயிறை இருகைகளாலும் இறுகப் பிடித்துக்கொண்டு சாலை மூர்க்கமுடன் உதைத்தார்.

“செத்தண்டா எண்ணா. அய்யோ சாமீ”

அப்பெண்ணின் கதறல் கிணற்றில் சரேலெனக் கீழிறங்கியது. வடக் கயிற்றை ராட்டினக்காலுடன் பிணைத்துக் கட்டிவிட்டு தலையைப் பிரித்தடித்து கொண்டை முடிந்தார் புட்டண்ணன்.

“இனிமே ஓஞ்சென்மத்துக்கும் அவங்கூட பேசக்கூடாது. அப்பிடியே கெடந்து சாவு” நெடுநேரத்துக்கு கிணற்றில் தவித்த அவளை அக்கம்பக்கத்தார் வந்து மீட்க வேண்டியிருந்தது.

அம்மா இந்தச் சம்பவத்தைச் சொல்லும்போது உடம்பை சிலிர்த்தபடி “பயங்கரமான ஆளா இருந்திருக்கான்டா எப்பா அந்தக் கெழவன்”. என்பார். இதைப்போன்றே இன்னொரு கதையும்கூட உண்டு. ஆம்பூரிலே புகழ்பெற்ற ஒரு மருத்துவமனை இருக்கிறது. பெதஸ்தா மருத்துவமனை. வெள்ளை இறைப்பணியாளர்கள் இங்கு வந்தபோது தொடங்கப்பட்ட அது ஒருகாலத்தில் வேலூர் சி.எம்.சிக்கு நிகராக மதிக்கப்பட்டது. ஆனால் அந்த நிலை இப்போது இல்லை.

விவிலியத்திலே ஒரு கதை உண்டு. பெதஸ்தா என்று ஒரு குளம். அதைச் சுற்றிலும் இருக்கும் பிரகாரங்களில் தொழுநோயாளிகளும், நோயாளிகளும் காத்திருப்பார்கள். எப்போதாவது ஒருமுறை வானத்திலிருந்து தேவதூதன் ஒருவன் இறங்கி அக்குளத்தைக் கலக்குவான். அந்த சமயத்தில் உடனே யார் இறங்குகிறானோ அவனுக்கு சுகம் கிடைத்துவிடும். நகர முடியாத நோயாளிகள் அப்பிடியே காத்திருக்க வேண்டியதுதான். அவர்களுக்கு இயேசு ஒருமுறை வந்து உதவுகிறார். அந்த குணமாக்கும் குளமான பெதஸ்தாவின் பெயரைத்தான் லுத்தரன் இறைப்பணியாளர்கள் அம்மருத்துவமனைக்கு வைத்திருந்தனர்.

1800களின் இறுதியில் கட்டப்பட்ட அம்மருத்துவமனையின் அடித்தளம் பறையர்களால் போடப்பட்டது. அத்தொழிலாளர்களில் ஒருவனாக புட்டண்ணனும், அவனின் இன்னொரு தங்கையும் இருந்திருக்கிறார்கள். குத்தகைக்கு இருந்த நிலம் கைமாறிப்போய்விட்டது. விவசாயத் தொழில் இல்லை. தேங்காய் ஏற்றுமதி அதிகரித்து, ஆண்கள் தேங்காய் உரிக்கப் போகிறார்கள். புட்டண்ணனும் ஏதாவது வேறு வேலைப் பார்க்க வேண்டியதுதான். அந்தச்சூழலில்தான் மருத்துவமனைக்கு கடைக்கால் போடும் வேலைக்கு தன் தங்கையுடன் போயிருக்கிறார் அவர்.

போன இடத்தில் ஒரு சிக்கல். படர்ந்த முகமும், சிவந்த நிறமும் கொண்ட தங்கையை ஒரு ஒப்பந்தக்காரன் பார்த்துக்கொண்டே இருக்கறான். அவன் மேல்சாதிக்காரன். சொன்னால் கேட்டுக்கொள்வான் என்று நினைத்தார் புட்டண்ணன். அவனால் கேட்கவும், பேசவும் முடியவில்லை. பேச்சுத் திறன் அற்றவனாய் இருந்தான் அவன். புட்டண்ணனின் சைகை மொழிகள் எதுவும் அவனுக்குப் பிடிபடவில்லை. முயற்சிகள் மௌனத்தில் விழுந்தன. வேலை முடித்துக்கொண்டு திரும்பிய ஒருநாள் அவன் தங்கள் இருவரையும் பின்தொடர்ந்து வருவதைப் பார்த்தார் புட்டண்ணன்.

“ஏம்மா நீயி திரும்பிப் பார்க்காம வேகமா ஊரு போயி சேரு. நானு இதோ வந்துடறேன்” தங்கையை அனுப்பிவிட்டு, அவளின் தலை மறையும் வரைக்கும் நின்ற இடத்திலேயே இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தார். ஒப்பந்தக்காரன் தூரத்தில் ஒரு மரத்தடியில் நின்று இவர்களை நோட்டம் விட்டபடியிருந்தான். புட்டண்ணன் அவனை நோக்கிப் போனார். புட்டண்ணனின் முறைப்புக்கு அவனிடமிருந்து ஒரு அலட்சியமான சிரிப்பே விடையாக வந்தது. மூர்க்கம் கொண்ட புட்டண்ணனிடம் இருந்து சரமாரியான உதைகள் விழுந்தன. அவன் மயக்கமாகி சுருண்டதும் சாலையோரப் புளியமரத்தின் வேரருகில் இழுத்துக் கிடத்திவிட்டார். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு நேரே வீடு வந்து சேர்ந்துவிட்டார் புட்டண்ணன்.

இந்தக் கதையைக்கேட்டபிறகு நான் சொன்னேன். “என்னம்மா இவ்ளோ முரடரா இருந்திருக்காரு உங்கத் தாத்தா?” அம்மாவுக்கு சுருக்கென்று கோபம் வந்தது.

“சும்மா இருடா. அது எவ்ளோ மவுடீகக் காலம் தெரியுமா? அப்ப நம்ம சனங்க அப்படி இல்லாம இருந்திருந்தா பொழச்சியிருக்க முடியாது” அம்மா மேலும் சொன்னார். “எங்க தாத்தா, நம்ம பொண்ணுங்கள கெடுத்து உட்டுட்டுப்போகப் பாத்த பத்து கவுண்டனுங்களப் புடுச்சி பஞ்சாயித்துல நிறுத்தி, கல்யாணம் செஞ்சி வெச்சிருக்காரு தெரியுமா? அது எவ்வளவு புரட்சி”

அம்மா சொன்னதை நான் ஒப்புக் கொண்டேன். அந்த கல்யாணங்களைப் பற்றி சொல்லத் தொடங்கினால் அது பெரிய கதையாகும்.

-வளரும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com