Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜூன் 2007
பிரளயனின் நாடகமும் பின்நவீனத்துவக் குழந்தைகளும்
பா. வெங்கடேசன்

11.11.2006 அன்று பிரளயன் ஒசூர் டி.வி.எஸ். அகாதமியின் விஸ்தாரமான கிரேக்கப் பாணி அரங்கில் மேடையேற்றிய ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நாடகம் முழுக்க முழுக்க 12 -15 வயது வரையிலான அந்தப் பள்ளிச் சிறார்களைக் கொண்டே நடத்தப்பட்டதென்றாலும் அதைக் குழந்தைகளுக்கான நாடகம் என்று சொல்லிவிட முடியாது. நாடகத்தின் கதைக்கரு முதிர்ந்த பெண்ணிய வாதங்களை (நாணயத்தின் இரு பக்கங்களைப்போல கோவலர்களுக்கு கண்ணகிகளும் மாதவிகளும் என்பதைப்போல) தொடர்ந்து பேசிக்கொண்டே செல்வதால் மட்டுமல்ல, பெண்ணடிமைத்தனத்தைச் சாதிக் கும் ஒரு சமூகத்தைப்போலவே இந்த நாடகமும் பெண் என்கிற இருப்பை, அதன் சுதந்திரத்தை, ஆண் என்கிற இருமை எதிர்வின் வழியாகவே கண்டுபிடிக்க (கபடி விளையாட்டில் பெண்கள் சேர்ந்துகொள்ள விரும்புவது, ஆணாதிக் கத்தின் வெளிப்பாடாகிய உடல் சார்ந்த வன்முறையை தானும் கையிலெடுத்துக்கொள்வது (மாணவனை கன்னத்தில் அறைவது), பெண் சிறந்தவள் என்பதை ஸ்தாபிக்க ஆணை சுயநலவாதியாக, முட்டாளாகக் காட்டுவதொன்றையே வழி யாகத் தேர்ந்தெடுப்பது இன்னபிற) முற்படுவதாலும். இந்த எதிர்வுப் பிரக்ஞை கலாசார விளைவேயன்றி குழந்தைகள் உலகத்தின் இயற்கையில்லையென்பது ஃப்ராய்ட். குழந்தை கள் உலகத்தில் பெண் குழந்தைகளை மட்டுமே உலாவ அனுமதிப்பது இன்னொருவகை கலாசார வன்முறை. ஆணை வெறுக்கச் சொல்லித் தருவது ஒரு தொலைநோக்குப் பார்வையிலமைந்த பெண்ணிய வாதமாக இருக்க முடியுமா? இந்த கிரகிப்புகளும் கேள்வியும் நாடக இயக்குனருக்குள் உறைந்திருக்கும் பெண்ணியச் சிந்தனையாளருக்கானவை.

ஆனால் பிரளயன் என்கிற கலைஞனின் பொருட்படுத்தல்கள், அவரையறியாமலேயே வேறாக இருக்கின்றன. சிறிய கான்க் ரீட் சதுரப்பரப்பில் பெரும் தொழில் நுட்பங்கள் தரும் உணர் வோதங்களைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார். முதிர்ந்துவிடாத குழந்தையுடல்களின் நெகிழ்வும், கண்களில் வெளிப்படும் அறியாமையும் (ஒரு வார்த்தைகூடப் பேசாமல் சில நிமிடங் களே வந்துபோகும் அந்தக் கண்ணகி) மிகத் தேர்ந்த முறை யில் வெளிப்படுத்தப்பட்டிருப்பது நாடகத்தின் பெயதொரு பலம். மிக எளிய ஒப்பனை நுட்பத்தை தன் கற்பனையில் பெய்து பிசைந்து, பெய பின்னணிகள் எதுவும் இல்லா மலேயே பிரளயன் அவர் நிர்மாணிக்க விரும்பும் கால, இடச் சூழலையும் பார்வையாளர்களின் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். அவை உலகமயமாக்கலின் துவந்த யுகத் திற்குள் சிறுவர்கள் பதாபகரமாகப் பறிகொடுத்துக் கொண்டி ருக்கிற கற்பனையற்புதங்களையும், மண் மரபையும் திரும்ப அவர்களிடம் மீட்டுக்கொடுக்கின்றன.

பள்ளிச் சிறுவர்கள் தங்களுடைய பாடத்திட்டத்தின் பொருட் டாக சில காப்பிய, சங்கப் பாத்திரங்களை சந்தித்து உரையாடி கடைசியில் இன்றைய பெண்ணியம்பற்றின புதலுக்கு வருகி றார்கள் என்பதுதான் கதை. திரும்பத் திரும்ப இடம் பெறும் விவாதங்களினூடாயும் நேர்முகங்களினூடாயும் அவை நடை பெறும் தளங்களை உருவாக்கிக் கொடுக்கும் கதைச் சூழல்கள் கொண்டிருக்கும் கற்பனையற்புதத் தன்மையும் அவை அளவோடு கையாளப்பட்டிருக்கும் விதமும் வியப்பை யளிக்கின்றன. உண்மையில் குழந்தைகள் கடந்துபோன காலங்களின் கதாபாத்திரங்களோடு பேசுவது தங்களுடைய புத்தகங்களின் வாயிலாகத்தான். ஆனால் காட்சிப்படுத்தப் பட்டிருப்பதோ அவர்கள் மிதிவண்டியில் ஏறிக் கால வெளியைக் கடப்பதாக. ஆனால் மிதிவண்டிகளை காலயந்திர மென்னும் பருண்மை வடிவாக மாற்றுவதற்கான மெனக் கெடல்கள் எதையும் இயக்குனர் மேற்கொள்ளாதிருப்பது அவற்றை தொடர்ந்து நூல்களாகவே பார்க்கும் மன நிலையை பார்வையாளனிடம் வெற்றிகரமாகச் சாதிக்கின்றன. மேலும் கற்றல் என்பதை உடல்ரீதியான பயணத்தோடு இணைக்கும் கற்பனையும் மாணவர்களுக்குக் கல்வியின் மேல் புதிய பார்வையொன்றை அளிக்கவல்லதாயிருக்கிறது.

கதைசொல்லலின் போக்கில் வெளிப்படும் இன்னொரு எதிர்பாராத உத்தி அது தன்போக்கில் சுருள்சுருளான வடிவங்களை எடுத்தபடியே இறுதியில் விக்கிரமாதித்யனுக்கு வேதாளம் கொடுத்ததை யொத்த புதிர்க்கேள்விகளை எழுப்பிவிடுகிறது. உடையொப் பனைகள் நாடகத்தின் இன்னொரு சிறப்பு. அவை காட்சிகள் நடைபெறும் காலச்சூழலை மட்டுமன்றி கதாபாத்திரங்களின் குணவியல்பையும் சேர்த்தே குறியீடு செய்வதாக இருக்கின் றன. பள்ளிக்குழந்தைகளிலேயே நகர்ப்புறத்திலிருந்து வரும் பெண் குழந்தைகளின் உடைகளுக்கும், கிராமப்புறத்திலி ருந்து வரும் குழந்தைகளின் உடைகளுக்கும் கூர்ந்த வித்தி யாசமிருப்பது ஆச்சயமில்லை. ஆனால் மரபான விதிகளை மாறாமல் ஏற்றுக்கொள்ளும் சித்ராவைப் போன்ற காப்பியப் பெண்ணின் பகட்டான உடையணிகளிலிருந்து, கண்ணகிக்கு அடைக்கலமளித்து காவலர்களின் விசாரணைக்கும் இம்சிப் பிற்கும் உட்படுத்தப்படும் மாதயின் உடையலங்காரம் வேறு படுவதும், அவளையொத்த போர்க்குணமுடைய செல்வி யினுடைய பாட்டியின் உடையணிகள் அதையொத்ததாகவே இருப்பதும் நுண்ணிய சொல்லலின்பாற்பட்டதாயிருக்கிறது.

காப்பியப் பெண்ணான மாத காவலர்களின் விசாரணையை எதிர்கொள்ளும் காட்சி பார்வையாளனைச் சட்டென்று பின்னோக்கி நகரச்செய்து பின்நவீனத்துவப் பெண்ணான அனாமிகா சகமாணவனை அடித்ததற்காக பள்ளி நிர்வாகத்தின் விசாரணையை எதிர்கொள்ளும் காட்சியையும் தன் தரப்பு நியாயங்களை எடுத்துக்கூற முடியாத அவளுடைய பலவீனத்தையும் காணச் செய்கிறது. இதேபோல ஒவ்வொரு காலக்கட்டத்திற்குமான கலாசார அடையாளங்கள் நாடகம் முழுவதிலும் ஆங்காங்கே ஒப்பிடலைச் சாத்தியப்படுத்தும் நோக்கோடு விரவி வருகின்றன. முக்கியமாக ஒவ்வொரு காலக்கட்டத்திற்குமான நடனங்கள். கதை இந்தக் கலாசார வெளிப்பாடுகளினூடே வாதங்களை நிறுவ முயலாமல் வெறும் வார்த்தையாடல்களின்வாயிலாகவே வாதங்களைப் பின்னிக்கொண்டு செல்லும்போது இந்த வெளிப்பாடுகள் ஒரு திரைப்பட உத்தியைப்போன்ற வடிவத்தைப் பெற்று பிரதான கதைசொல்லலிருந்து துண்டிக்கப்பட்டுவிடுகின்றன என்பது ஒரு குறைதான். ஆனால் அந்தவிதமான கதைப்போக்கு இதை மாணவர்களின் பங்கேற்பிலிருந்து துண்டித்துவிடுமள விற்கு அறிவுஜீவித்தனத்தைப் பெற்றுவிடுமென்பதும் ஒத்துக் கொள்ளவேண்டிய விசயம்.

பிரளயன் தன் நாடகத்தின்மூலமாக மாணவர்களிடம் சம காலப் பிரச்னையொன்றின்மேல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென நினைத்திருக்கலாம். ஆனால் வெளிப்பட்டிருக் கிறதென்னவோ, அதிர்ஷ்டவசமாக, நவீன நாடக அரங்கைப் பற்றின சயான புதலை மாணவர்களுக்குச் சாத்தியமாக்கலும், மரபின்மீதான தெளிவற்ற வழிபாட்டுக் குணத்தை உடைத்தலும், மெய்யான நாடகப் பனுவலொன்றின் மூல மாகக் கிடைக்கும் களங்கமற்ற கேளிக்கையுணர்வும். ஊடகங்களின் அபாயகரமான ஆளுமையிலிருந்து விடுபட்ட வருடாந்திர கலை நிகழ்வுகளை உள்ளரங்கில் தொடர்ந்து நிகழ்த்த முயலும் டி.வி.எஸ் அகாதமி இந்த நிகழ்வுக்கான வாய்ப்பைத் தந்திருக்கிறது. விவாதங்களுக்குள் குழந்தைகள் சிக்கிச் சுழலும் காலங்கள் இருக்கவே இருக்கின்றன. இப் போது அவற்றுக்கான கற்பனையற்புத உலகைப் படைத்துக் காட்டுவதே படைப்பாளிகளின் தேவையாக இருக்கிறது இல்லையா...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com