Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஏப்ரல் - ஜூன் 2007
கொளத்த கண்ட குண்டி எத்தன. குண்டிய கண்ட கொளம் எத்தன?

தஞ்சை சாம்பன்

வாங்கய்யா ராகுகாலம் வர்றதுக்குள்ள ஊரு தெருவுக்கு போய் மண்ணு போடணும். பொங்க இன்னும் ஏழு நாதான் கிடக்கு. ஏழா நா மண்ணு போட்டுடுவோம். சட்டுபுட்டுனு கிளம்பி நாழியைக் கடத்தாம வாங்கடா என்றவாறு தெருவின் மேல் கோடியில் வந்து நின்றார் கீழ ஒட்டு முத்தன். மண்வெட்டி கூடையுடன் வீட்டுக்கொரு ஆளாக மேல்சாதியார் தெரு நோக்கிப் புறப்பட்டார்கள். மொத மண்ணு அம்பலாரு வீட்டுக்குப் போட்டுட்டு அப்பறமா மத்த வீடுகளுக்கு போடுங்க என்றார் தெரு வில் வெயில் காய்ந்து கொண்டிருந்த பெரியவர். எல்லோரும் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா தட்டுக் கூடையில் மண்வெட்டிப் போட்டாலும், அம்பலத்தின் குடிப்பறையன்தான் தேவையான மண்வெட்டிப் போட வேண்டும்.

ஆயா இந்த மண்ணு போதுமா என்று அம்பலத்தின் குடிப்பறை யன் கேட்டான். அம்பலம் மனைவி என்ன இவனே திட்டானி அடுப்பு, திண்ண மொழுகத்தானே போதும் போதும். முட்டாடு ரெண்டு குடம் தண்ணி ஊத்தறேன், மண் நல்லா புளிக்கட்டும் நாள வெள்ளென வந்து நல்லா மசிய குழைச்சுக் கொடுத்துடு. ஏ இவனே மட்டைப் பிடிச்சா ரெண்டு கஞ்சி ஊத்தறேன். குடிச் சுட்டுப் போடா என்றாள். அம்பலம் மனைவி தனது மாமனார் பெயர் முத்துராமு என்பதால் இவரை முத்தன் என்று பெயர் சொல்லி அழைக்கமாட்டாள். இதை அறியாத முத்தன் எங் கள்ளச்சி வாக்கப்பட்ட நா முதலா எம்பேரச் சொல்லி கூப்பிடறதில்லன்னு பெருமையாகக் கூறிக் கொள்வார்.

ஏலே அடி கிழக்கே திரும்பியதும் தான் நல்ல நேரமாம். பொழுது சாயறதுக்குள்ள பொங்க வெச்சி இறக்கிடனு மாம். சடுதியா பொங்கப்பானை வச்சி தீயை போடுங்க என்று முத்தன் தெருவின் மேல்கோடியிலிருந்து கூறிச் சென்றார். அவரவர் வீடுகளில் பொங்கல் பொங்கி வரும் வரை நிசப்தமே நிலவும். வாய்பேசாமல் சைகை மூலமே பேசிக் கொள்வார்கள். பானை பொங்கியவுடன்தான் பொங்கலோ பொங்கல் என்று அகமகிழ்ந்து கூறுவார்கள். எப்போதும் கேலியும் கிண்டலுமாய் பேசும் மழுப்பன் மவன் பொங்கலோ பொங்கல் மூணு கொட்டச்சி ..ம்க்கும்.. பொங்கல் என்றார். பக்கத்திலிருந்தவர்கள் ஏலே எப்பவும் உனக்கு இந்த கிண்டல்தானே வாய மூடுடா என்றார்கள்.

கருமங்களில் அம்பலார் வீட்டிற்கு பொங்கப்பானை கோலி பிடிச்சது பச்சரிசி வெல் லம் வாங்கினது எல்லாம் மூணு மூட்டை நெல்லை வட்டி முழுங்கிடுச்சு. இந்த வவுத்தரிச்சலத் தான் சொல்றான், உங்களுக்குத் தான் கேலியும் கிண்ட லுமா தெரியுது என்றார். பொங்கல் மகிழ்வில் மாமன் முறையுள்ளவர் களை கேலியும் கிண்ட லும் செய்து கொள்வார் கள். முறைப் பெண்களும் என்ன மாமா பால் பொங்கிடுச்சா ஆமாம் என்று பதில் வருவதற்கு முன் உன் காலு வீங்கி னிச்சா என்று கேட்டுக் கொள்வார்கள். கடன் பட்டு பொங்க வச்சியா என்று பொருள்படும்படி தான் இவ்வாறு பேசிக் கொள்வார்கள்.

இரவு ஒவ்வொருவரும் வெள்ளைத்துணி வைத்த பெரிய பெரியகூடைகளை அம்பலக்காரர் வீட்டுவாசலில் வரிசையாக வைத்து, ஆத்தா பொங்க சோறு வாங்க வந்திருக்கிறோம் என்று கூப்பாடு போட்டனர். அம்பலம் வெளியே வந்தார். சாமி இந்தாங்க இது அரசு கோழி, அய்யா இது அம்பலக் கோழி என்று கால்கட்டோடு உள்ள கோழிகளை ஜோடிஜோடியாக தூக்கிப் போட்ட னர். பெற்றுக்கொண்ட அம்பலம் நாலுமுழ காடா வேட்டியும், ஒரு துண்டும், கொஞ்சம் வெற்றிலைப் பாக்கும் வைத்து அனைவருக்கும் வழங்கினார்.

நெய்யும் முந்திரிப் பருப்பும் முக்கிய இடம்பெறும் அம்ப லார் வீட்டு சர்க்கரைப் பொங்கலை தனியாக வாங்கி வைத்துக்கொள்வார்கள். அனைவரும் வீடுவீடாக சென்று பொங்கல் சோறு வாங்கிக்கொண்டு வரும்போது ஒருவீடு விடுபட்டுப்போனது. அடுத்த வீடு சென்றதை பார்த்த மேல்சாதிக்காரர், ஏய் யாரும் இங்க சோறு வாங்கக்கூடாது என்றார். சமாதானம் பேச முற்பட்டனர். ஏய் யாம் வூட்டுல சோறு வாங்காத நீங்க யாரு வூட்டுல யும் சோறு வாங்கக் கூடாது என்றவாறே தடிக்குச்சியை எடுத்துத் தாக்கினார்.

அடிபட்டவர்கள் அலறல் சத்தத் தோடு சந்து பொந்துகளில் ஓடி ஒளிந்தனர். சத்தம் கேட்டு ஏலே என்னடா என்னடா என்று கேட்டுக்கொண்டே தெருவில் வந்து நின்றார் அம்பலார். மேல்சாதிக்காரரைப் பார்த்து ஏலே என்னடா நல்லநாளும் பெரியநாளுமா என்றார். எல்லா வூட்டுலேயும் சோறு வாங்கினானுவோ. யான் வூட்ட தள்ளிப்புட்டானுவோ. நான் என்ன பத்தாத கள்ளனா? என்றார். சோத்துக்கூடை இருந்த பக்கம் நாய் கள் வரவே ஒளிந்திருந்தவர்கள் துரத்தினர் . அம்பலம் விசாரித்ததில் முறையாக வீடு சென்றபோது யாரும் வீட்டிலில்லை என்பதும் இவர்கள் ஒதுக்கவில்லை என்ப தும் தெரிந்தது. ஏலே போய் எல்லாத்துக்கும் சோறு போடச் சொல்லு என்றபோது, மலுப்பன் மவன் இந்தா பாருங்க சாமி குடிக்கோழி போடுறதற்கு கொண்டாந்த கோழியும் போடாம வச்சிருக்கேன். எங்கள மறுவார்த்த பேசவுடாம துரத்தித் துரத்தி அடிக்கறாரு என்றார்.

அவரவர் வாங்கிய சோறு ஏகமாக கூடைகளில் நிரம்பி இருந்தது. அம்பலம் வீட்டு கரும்பையும் வாழைப்பழத் தையும் கக்கத்தில் இடுக்கியவாறு கூடையை வீட்டுக்கு சுமந்து சென்றார்கள். மலுப்பன் மவன் மனைவியை கூப் பிட்டு கருமங்களியையும் பழத்தையும் கொடுத்து விட்டு, கூடையை இறக்கி வீட்டினுள் கொண்டு வைத்த போது என்னய்யா மேலெல்லாம் தடிச்சு கிடக்கு என்று கேட்டாள். அதாம் புள்ள நம்ம அம்பலாரு அண்ணன் மகன் பக்கத்து வூட்டுல சோறு வாங்கிப்புட்டோம்னு அடிச்சிப்புட்டாரு என்றதும், அவன் கையில் படுவன் புறப்பட... இப்படி அடிச்சிருக்கானே.. இவனுக்குத்தான் குடிக்கோழி போடனும்னு ஒத்தக்கால்ல நின்னியாக்கும் என்றாள். அடிப்போடி போன வருஷம் பூரா ஒழச்சி களம் கடைசியானப்போ களம் விடுங்கன்னு கேட்டப்ப அவரு என்ன சொன்னாரு... நீ குடிகோழிப் போட்டு கிழிச்ச கிழிக்கு இது போதும்னாரு. இந்த வருஷமும் ஆத்துல தண்ணி வந்த நா முதலா ஒழச்ச நமக்கு களம் வுடாம போனா என்ன பண்றது. அதாம் புள்ள கடனவுடன வாங்கி கோழி போட்டேன் என்றார். சரி அது போகட்டும் இந்த சோத்தையெல்லாம் தண்ணி ஊத்தி வைச்சுடு. காலையிலே மறு தண்ணி பாச்சி வை புள்ள. பொங்க காடிய புதுப்பானையில ஊத்திவை. இரண்டு நாள் கழிச்சி குடிச்சா கிறுகிறுப்பாக இருக்கும் என்றார்.

இரண்டாம் நாள் மாடு அவிழ்த்துவிடும் விழா. மாடு அவிழ்க்கும் முறைக்காரர் சேரிப்பெரியவர்களிடம் ஏலே 25 வருஷம் கழிச்சி இப்பதான் என் முறை வருது. ஆட்டம் பாட்டத்தோடு மாடு அவுத்து வரணும். செலவு எக்கு முக்கா செய்யப்போறேன்... எல்லாருக்கும் வேட்டி துண்டு எடுத்திருக்கேன்... வந்திருங்கடா என்றார். ஐயா நாங்க வழமை தவறாம வந்திடுவோம், ஊரு கட்சிப் பட்டுக் கிடக்கு... நாயத்தைப் பேசிக்கிட்டுதான் மாடு அவுக்கணும்னு அம்பலாரு சொல்லியிருக்கார் என்றார் பெரியவர். ஏலே அதான் நாளைக்கு நடக்கிற ஊர்க் கூட்டத்துல பேசி முடிச்சுப்பிடலாம் என்றபோது, நம்ம முனியாண்டவர் புண்ணியத்துல நாளைக்கே எல்லாரும் சந்தனம் பாக்கு எடுத்து கை கலந்துக்கிட்டா நல்லதுதான். எனக்கு நெகா தெரிஞ்ச நா முதலா எத்தன முறை ஊரு கட்சிபட்டு மாடு அவுக்காம இரண்டு மூணு வருஷம் கிடந்துருக்கு. எதுக்கும் செலவு பாத்துக்கிட்டு செய்யுங் கய்யா என்றார். அப்படியெல்லாம் நடக்க ஒண்ணும் கூறு இல்ல. நாளக்கி எல்லாம் தீர்ந்து போயிடும் என்று கூறியவாறு மேல்சாதியார் சென்றார்.

மறுநாள் ஊர்க்கூட்டம். மணியார் வீட்டு வாசல் விசாலமானது. சுற்றிலும் பூவரசு வேம்பு மர நிழல். இது தான் சேரிக்காரர் இடம். மணியாரின் வீடு சுற்றுக்கட்டு வளைவு சுற்றிலும் திண்ணைகள். நியாயம் பேசுமிடம் தென்னைஓலையால் பந்தல் போடப்பட்டிருந்தது. சபை களை கட்டியது. அம்பலமும் மணியாரும் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தனர். ஏலே தெக்கித்தெரு வடக்குத் தெரு பறையவூட்டு பயலுவோலெல்லாம் வந்திட்டிய லாடா என்றார் அம்பலம். சாமி அல்லாரும் வந்துட்டம்.. என்ன குத்தம் குறை இருந்தாலும் ஏத்துக்கிடனும் சாமி.. என்றவாறே சேரித்தெரு ஆண்கள் அனைவரும் குவிந்த கரத்தோடு கூட்டம் நடக்கும் திசை நோக்கி குப்புற கவிழ்ந்தனர். என்ன மாமா கூட்டத்த ஆரம்பிச்சிடலாம், முக்கரையும் (மூன்றுகரை) வந்தாச்சி என்றார் மணியார். அம்பலம் தலையசைக்க ஊர்க்கூட்டம் ஆரம்பமானது.

10 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 5 மணிக்குதான் முடிந்தது. இருதரப்பாரும் ஏற்றுக்கொள்ளாதபோது 2,3 நாட்கள் கூட்டம் நடக்கும். முடிவு எட்டாத நிலையில் கலைந்துபோகும். இம்மாதிரியான காலங்களில் ஊரில் பொதுத் திருவிழா எதுவும் நடக்காது. ஏலே முக்கரைப் பறையனும் எழுந்திரிங்கடா என்றார் அம்பலம்.எழுந்து நின்றார்கள். முத்தா வடக்கிக்கரைதான் குத்தம் பண்ணி ருக்கின்னு ருசுவாயிருக்கு. அவுகளும் ஒத்துக்கிட்டாங்க. நீங்க என்ன சொல்றீங்க என்றார். சாமி ஒங்க பேச்சி என் தலைக்கு மேலே. குத்தத்தை ஒத்துக்குறோம். தேங்கா உடைச்சி அவராதம் கட்டுறோம் என்றவாறு தேங்காய் உடைத்து பழைய நிலைபோல காலில் விழுந்தனர். சரி சரி எழுந்திரிங்கடா கிண்ணத்தை எடுத்து சந்தனம் வழங் குங்க. சந்தனம் பாக்கு பறையன்களுக்கும் கொடுங்க. நாளைக்கு மாடு அவுக்கிறது கீழவூட்டு முறை. சண்டை சச்சரவு இல்லாம முனியாண்டவர் கோயில் மந்தையில மாடு அவித்துவிடுங்க... அம்பலமும் மணியாரும் இருக்கையை விட்டு எழுந்துவிட்டார்கள்.

எந்த நிபந்தனையுமின்றி நியாயம் ஏற்கப்பட்டதால் வடக்குக்கரை மேல்சாதியாருக்கு கோபம் வரவில்லை. நிபந்தனை இருக்கும்பட்சம் கோபம் தணிக்கும் வடி காலாக தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்படுவர். முக்கரை கள்ளர்கள் யார் தவறு செய்தாலும், தண்டனையும் தடி யடி படுவதும் காலில் விழுந்து மன்னிப்புக் கோருவதும் மூன்றுகரை பறையர்கள்தான். சேரிக்காரருக்கும் சந்த னம் பாக்கு வழங்கப்பட்டது. தகராறின்றி நியாயம் தீர்ந்த சந்தோசத்தில் சென்றனர். மலுப்பன் மவன் வீட்டு வாசலில் நின்று ஏ புள்ள ப்ளே என்று குரல் கொடுக்க இந்தா வரேன் என்றவாறு வெளியே வந்தவள், யேய்யா ஊரு நியாயம் தீர்ந்துச்சா என்றாள். ஆமாடி சந்தனம் வழங்கியாச்சி என்றார். அதானே மாருபூரா சந்தனம் மணக்குது என்றாள். சரி புள்ளே சாமி கும்புட சோறு கொழம்பு காச்சிட்டியா? மேலவூட்டு அக்கா இப்பதான் வட சட்டி கொடுத்திச்சி. படையலுக்கு வட சுட்டுக்கிட்டு ருக்கேன். நீ அக்கினி சட்டியில நெருப்பப் போடு. இங்கயே சராபிடியெல்லாம் சேத்து வச்சிருக்கேன். அது புடிக்கிறத்துக்குள்ளே இந்த ஈடும் எடுத்துறேன் என்றார்.

அக்கினி சட்டியிலே நெருப்பப் போடுங்க. நல்ல நேரத் திலே எடுக்கணும் என்று தெரு பெரியவர் குரல் கொடுத் தார். அவரவர் வீடுகளில் அக்கினி சட்டி தயாராகி கிழக்கு மேற்காக எதிரெதிர் நிலையில் ஜுவாலை எரிந்துக் கொண்டிருந்தது. தாரை தப்பட்டைகளோடு வரிசையாக தலைச் சும்மாட்டில் வேப்பிலை வைத்து அக்கினிச் சட்டிகளை சுமந்து தத்த மது குலதெய்வத்தின் பெயரை உச்சரித்த வாறு ஊரின் கீழ்பகுதியில் கொண்டு வந்து வைத்தனர். இந்த ஒற்றுமையான நிகழ்வு இவர்கள் குடி பார்க்கும் மேல்சாதியாரிடம் அனேகமாக இருக்காது. எப்பா அங்கிட்டு இங்கிட்டு போயிடாதிங்கடா ஒவ்வொரு வீடா கை நனச்சிட்டு போங்க என்று கூறிய படி முத்தன் தனது வீட்டில் முதல் படையல், கீழவூட்டு படையல் என்று பொங்கல் சோறு வடையை பூவரசு இலையில் வைத்து அனை வருக்கும் கொடுத்தார். கோழி அடிச்சிருக்கேன் ஒரு கை தின்னுட்டு போங்க என்றபோது ஏ பெரியாளு அல்லா வூட்டு படையலும் கொஞ்சங் கொஞ்சம் திங்கனும்மே போதும் போதும் எய்த்த வூடு போங்க என்றார். அனேகமாக அனைவர் வீட்டிலும் கோழிக்குழம்பும் குழிப்பணியாரமும் வடைகளும் செய்தே படைப்பார்கள்.

மறுநாள் மாடு அவிழ்த்துவிடும் முறைக்காரர் வீடு களை கட்டி இருந்தது. மதியம் அனைவருக்கும் சாப்பாடு- பறையர்களுக்கும். சந்தனம் வெத்தலை பாக்கு கொடுத்து கோடிவரத்தில் சாப்பாடு. யாருக்கு சந்தனம் இருந்ததோ இல்லையோ இவர்களின் உடல் பூராவும் சந்தனம்தான். சேரி ஆண்கள் அனைவருக்கும் வேட்டித் துண்டு போட் டார் முறைக்காரர். ஏலே மலுப்பன் மவனே, மாடு அவுத்து கையிலே புடிச்சி மந்தைக்கு போறவரைக்கும் தப்பாட்டம் ஜொலிச்சிப்புடனும் தெரியுமா? என்றார். அனைவரும் வேட்டித் துண்டு வாங்கிய சந்தோசத்தில், சாமி பாருங்கோ தப்பு கிழிய கிழிய அடிக்க மாட்டோம்? என்றார்கள். மாடுகள் பூராவும் முனியன் கோயில் மந்தையில் வரிசையாக நிறுத்தப்பட்டன.

அய்யா எல்லா மாடும் வந்துருச்சா... சாம்புரானி போடலாமா? என்றார் பூசாரி. நம்மோ பறையவூட்டு மாடு வந்திருச்சா, ஏ முத்தா ஒங்க மாடு வந்திருச்சா ... நம்மோ தெரு மாடு சாடா வந்திரிச்சி, சாம்புரானிய போடச் சொல்லுங்கோ என்றார். சாம்புரானிய போடலாம் என்றதும், பூசாரி மேல் முனி சாமி இறங்கியது. ஒரே சத்தம். பூசாரி கிழக்கும் மேற்கு மாக ஆடிவந்தார். அனைவருக்கும் திருநீர் வழங்கப் பட்டது. இரண்டொருவரை முனிசாமி கையில் வைத்தி ருந்த பிரம்பால் கடுமையாக தாக்கினார். மா விளக்கு போட வந்த சில பெண்கள் திருநீர் வாங்கும்போது அவர் களின் தலைமுடியைப் பிடித்திழுத்து ஆட்டி பிரம்பால் ஒரு இழுப்போடு விட்டுவிட்டார். இப்படி இழுபடும் பெண்கள் பலபேர் இரண்டு மூன்று நாள் கழித்து வலியென்று கூறுவார்கள். பிடித்திருக்கும் பேய் பிசாசு விட்டுடும் என்பதால் இதை இவர்கள் பெரிய விசயமாக எடுத்துக்கொள்வதில்லை. மந்தை கலைந்து அவரவர் வீடுநோக்கிச் சென்றனர்.

பூசாரி மாமா, என்ன பிசாசு அந்த ஆயியை பிடிச்சது... போட்டு இந்த உலுக்கு உலுக்கிறியே என்று கேட்ட போது ஓய் மாப்புள்ளே நான் சொல்றத போயி யாரு கிட்டேயும் சொல்லிப்புடாதே... எந்த பேயி பிசாசு புடிச்சிருந்தது நான் போயி விரட்ட? நம்மள மனுசனா மதிக்கிற தில்லே. யாம் வயசுக்கு அந்த ஆயி எம்பேரச் சொல்லி கூப்பிடறதும், வாடா போடாங்கிறதுமா திமிரு புடிச்ச ஆயி. அதான் சாமி பேராலே தலைமுடிய இழுத்து பெரம்பாலே ரெண்டு போடு போட்டேன். சாதாரணமா அந்த ஆயிய நம்ம தொட முடியுமா? அதான் நம்மோ ஆளுவலே ஏளிசமா நினைக்கிற ஆளுவளே இதே சாக்கா வெச்சி பழி தீர்க்கிறதுதான். எந்த சாமி வந்து இவனுக்கு இந்த பிசாசு, அந்த பிசாசு புடிச்சிருக்குன்னு சொல்றது என்றார்.

மலுப்பன் மவன் தன் வீட்டு வாசலில் வந்து அமர்ந்தார். யோவ் நாளைக்கு கதிரு அறுக்கணுமாம். ஆளு கூட்டிப் போயி ஓட வய அறுவடைன்னு நடுவூட்டுக்காரு சொன் னாரு. நானும் பத்து ஆளு தெவிச்சிருக்கேன். நீயும் தெக்குத்தெரு அம்பலாரு தெரு பக்கம்போயி இன்னும் பத்து ஆளு தெவச்சிட்டு வந்துருய்யா. நாலஞ்சு நாளுல கதிரு அறுவடைய முடிச்சுவுடலாம் என்றாள் மனைவி. அறுவடை முடிந்தது. இன்னிக்கு கடைசி களம். வேலை தலையிலே நிக்கிற ஆளுவளுக்கு கொழம்பு சோறு போடணும்னு நடுவூட்டுக்காரர்கிட்டே சொல்லிட்டு வந்துடுய்யா என்றாள்.

அறுவடை முடிந்து கடைசிநாளன்று சாமி கும்பிட தட்டு முட்டுச் சாமான்களை ஒவ்வொரு குடிப்பறையரும் தான் வாங்கி வரவேண்டும்.

தலையடி நெல் மூட்டைகளாகக் கட்டப்பட்டிருந்தது. சாமி கும்பிட ஒரு சிறியகூடையில் வைத்திருந்த சுமார் ஐந்து மரக்கால் நெல்லை மூட்டை களுக்கெதிரில் கொட்டினர். நடுவூட்டார் சாமி கும்பிட்ட வுடன் அனைவரும் சூட தீபத்தை கையெடுத்துக் கும்பிட் டனர். மலுப்பன் மவனும் மனைவியும், இந்த வருசம் மாதிரியே எல்லா வருசமும் வௌயனுஞ் சாமி என்று தெய்வத்தை வேண்டி நின்றனர். ஏலே சாமி கும்பிட்ட நெல்ல எடுத்துக்கடா என்றவாறே வேல செய்த ஆட் களுக்கு தலா ஒரு மரக்கால் அளந்து போட்டார். இது இவர்களுக்கு கடைசிக் களம்கிறதால உங்க செலவுக்கு... ஏலே எல்லோரும் சந்தோசமா சாராயம் குடிச்சிட்டுப் போங்கடா என்றார். அய்யா எனக்குக் களம் உடுங்கோ என்றார் மலுப்பன் மவன். ஏலே ரெண்டுமூட்டே ஒனக்கு ஒதுக்கிருக் கேன். இதான் பொலியடிக்கு, சாட்டு வாவுலே ஒதுக்கிருக்கு,

அப்புறமென்னடா களம்வுடனும் என்றார். சாமி புருசன் பொண் டாட்டி சேந்து களம் செதுக்கின துலே இருந்து பத்துநாளா வேல பாத்துருக்கோம். யாம் வூட்டுக்காரர் கருத அறுத்த நாள் முதலா களத்துமேட்டுல ராவுன்னும் பாக் காமா பவன்னும் பாக்காமா காவ காத்துக் கிடந்துச்சி, போன வருசம் தான் கோழி போடலே பறப்பய லுக்கு அவ்வளவு திமிரான்னீங்க... இந்த வருசம் குடிக்கோழி போட் டும் மோசம் பண்றீயளே, இது நாயமா சாமி... என்றாள் மலுப்பன் மருமகள். ஏய் நிறுத்தடி, கடைசி களம்னு பாக்கிறேன். இல்ல பிரி கட்டிப்புடுவேன்... என்னடி ரெண்டு ரூவாய்க்கூட பொறாத குஞ்ச புடிச்சி போட்டுட்டு கோழி போட்டாளாம் கோழி. இதோட முடிஞ்சிப் போச்சா... போரடி கிடக்கு பாத்துக்கலாம் என்றார். அப்பவும் இப்படியேதான் சொல்லுவியோ என்றாள். பக்கத்தில் நின்ற அவள் புருசன், ஏட்டி நிறுத்தடி போதும் என்று அதட்டினார். ஏலே கடைசி களம் கறையாமே போங்கோடா, எல்லாம் போரடி இருக்கு பாத்துக்கலாம் என்று நடுவூட்டார் கூறினார்.

மூன்று வண்டிகளில் ஏற்றினது போக பாக்கி இருந்த மூட்டைகளை அடுத்தநடையில் ஏற்றிவிடச் சொல்லி புறப்பட்டார் நடுவூட்டார். ஏலே நான் போறேன் சண்டை சச்சரவு போட்டுக்காதீங்க என்றார். அய்யா, நான் குடிப்பறையன். ஊரே ஒன்னாருவ கூலி வாங்குது. நான் அரை ரூவாதான் ஒங்ககிட்ட வாங்கறேன். நாத்து வுட்டதி லேயிருந்து கதிரறுப்பு வரையிலும் ஒங்க வேலைதான் பாக்குறேன். ஆறுரூவாக்கு சாமி கும்பிட சாமான் வாங் கின வகையில பாலத்துக்கடைக்கு ஆறு மரக்கா நெல்லு போடணும். பத்துவிரலால பாடுபட்டு அஞ்சு விரலால அள்ளித் திங்கனும்பாங்க. நாங்க ஆங்கமா ஒரு மாசங்கூட சாப்பிட முடியாது. இந்த கோவத்துலதான் அவள அடிச்சிப்போட்டேன்... என்றார் மலுப்பன் மவன். சரி போங்க, வண்டிய வெள்ளென வரச்சொல்லுங்க என்றார்.

அவர் சென்றவுடன் மலுப்பன் மவன் ஏ புள்ளே என்று இருமுறை கூப்பிட்டும் மௌனமாக அவள் வேலை செய்து கொண்டிருந்தாள். இதா நான் கூப்பிடுறது கேக்கலயா? என்றார். என்ன சொல்லு? இப்பதான் அதிசயமா கூப்பிடுவ, நாலு மனுசாளு நிக்கிறதுகூட தெரியாமா கூட்டிக்கிட்டிருந்த அலம்பக் கட்டையால அடிக்கிறியே ஒன்னமாரிதான் நானும் ஒழைச்சிக்கிட்டி ருக்கேன் என்றாள். இந்தாடி, நான் அடிச்சதுக்கு கோவிச்சிக்கிறீயே அந்த அய்யா என்ன சொன்னாரு, ஒம் ஒடம்புத் தோல பிரி கட்டிப்புடுவேன்னு பேசுறாரு. நீ எய்த்து எய்த்து பேசற. அவன் அடிச்சாலும் அடிச்சுப்புடுவான்னு தான் பொய் தட்டா தட்டினேன் என்று மனைவியை சமாதானம் செய்தார். நான் சொன்னா நீ என்னத்த கேட்ட... மூனுமூட்ட நெல்லு வட்டிக்குக் கடன் வாங்கி, குடிகோழி போடனும்னு ஒத்தக் கால்ல நின்னே.

ரெண்டுபேருக்கும் கூலியா ரெண்டு மூட்ட களம் கொடுத் திருக்கேன்னு பெரிசா சொல்லிட்டாரு. நான் வாங்குன கடன் கொடுப்பேனா? சொச்ச காலத்த கழிப்பேனா? நாம என்ன அந்த குண்டு வயலே அறுத்தாயா கடனகொடுக்க? ஏய்யா சுத்த கூறுகெட்ட மனுசனா இருக்க, இந்த ஆளுகிட்ட குடிவேல பாத்து வருசம்பூரா ஒழைச்சும் அரங்கையும் பொறங்கையுமா நக்கிக்கிட்டு தான் இருக் கோம்...என்றாள். என்ன புள்ள பண்றது. போனவருசம் குடிகோழி போடலீன்னு கோவிச்சிக்கிட்டாரு. வருசம் பூரா வேல பாத்தும் என்ன பிரயோசனம்? வாங்குன கடன் கொடுக்க எங்கே போவேன்... தலையைப் பிடித்தவாறு கீழே அமர்ந்தார். இங்கருய்யா கொட்டி கொட்டி அளந் தாலும், குருணி பதக்காவாது. பேசி என்ன பிரயோசனம்? நாளையிலே இருந்து வெளியாளா நின்னு வேல பாத்தாத்தான் நாம வாங்குன கடன கொடுக்கலாம்.

இனி இவுகள நம்புறதுல எந்த பிரயோசனமும் இல்ல. எய்த்தவூட்டு மாமென் கதிரறுக்க கூப்பிட்டாக, நானும் என்வூட்டாளும் வர்றோம்னு சொல்லிட்டேன். காலமே வெள்ளென கதிரறுக்க போயிறலாம் என்றாள். எப்படிப் புள்ளே இந்த வேலையை போட்டுட்டு அடுத்தவூட்டு வேலைக்குப் போனம்னா நடுவூட்டய்யா அடியனுக்கு வருவாரே என்ன பன்றது? ஆமா நீ என்ன வெல்லக் கட்டியா? போட்டு வெடுக்குன்னு முழுங்கிப்புட என்றாள். சரி புள்ள ஏதுக்கும் நாலு கள்ளங்கிட்ட சொல்லி வய்ப்போம் என்றார்.

அம்பலத்தைப் பார்த்து விவரங்களைக் கூறிய மலுப்பன் மவன், சாமி நான் ரெண்டு புள்ள குட்டிய வெச்சிக்கிட்டி ருக்கேன். இவரை நம்பி எந்த பிரயோசனமுமில்ல. இனி இவருக்கு குடிவேல பாக்கமுடியாது. காலம்பூரா ஒழச்ச எனக்கு குடிப்பறையன்னு அரைரூவா கூலி கொடுத்தாரு. இதுலயுமே கடைசி களத்தன்னிக்கு எங்கள ஐயோன்னு கைய தட்டிவுட்டுட்டுப் போயிட றாரு. நான் குடி பாக்குற குடிய நம்பிதான் கடன ஒடன வாங்கி பொங்க கும்பிட்டேன். போன வருசம் மாதிரி இந்த வருசமும் மோசம் பண்ணிட்டாருங்க. நான் வெளியாளா நின்னு வேல பாத்தா தான் வாங்குன கடன அடைக்க முடியும். அவருக்கு வேல பாக்காம அடுத்த கள்ள னுக்கு வேல பாத்தா நீங்களே ஏண்டா எங்கிட்ட ஒருவார்த்த சொல்லலம்பீங்க, அதான்யா ஒங்ககிட்ட சொல்றேன் என்றார். சரி சரி போடா, நான் பேசிக்கிறேன் என்றார் அம்பலம்.

மறுநாள் வேலைக்குச் சென்று திரும்பியவளிடம் நடு வூட்டார், ஏய் மலுப்பன் மருமவளே எங்கடி ஒன் வூட்டுக் காரன்? நெல்லு மூட்டைய குதுருல பாச்சனும். காலமே வெள்ளென அவன வரச்சொல்லு என்றார். நானும் அது வுந்தாங்க கதுரறுக்கப் போனோம். அறுத்துப் போட்டத அடிக்கனும். போவலன்னா, இன்னிய கூலியும் கெடைக் காது. நாளை காலையிலயே வரச்சொல்லுறேன் என்றாள். ஏய் என்னாடி, பதிலா சொல்லுற... நெல்லு மூட்டை யெல்லாம் வெளியே கெடக்கு, என்வூட்டு வேலை யெல்லாம் முடிச்சுப்புட்டானா? நாளைக்கு வரட்டும் பேசிக்கிறேன் என்று கூறிச்சென்றார்.

மனைவி சொன்ன விவரங்களைக் கேட்டதும் மலுப்பன் மவன் மனதில் உள்ளூர பயம் ஏற்பட்டது. ஏ புள்ளே இந்தாளு வந்து தகராறு செஞ்சாலும் செய்வான். நான் நாளைக்கு வெள்ளென எந்திருச்சி ஒரு அடிபோய் ஒன் ஆத்தால பாத்துட்டு அந்த ஆயி கேட்ட பலவாரத்த வாங்கி கொடுத்துப்புட்டு வந்துடறேன் என்றார். ஏய்யா உன்னமாரி பயந்தாங்கொள்ளி ஆம்பள இந்த ஊர்லயே இல்லய்யா. உழுவாயில ஊரு பயணமும், அறுக்கயில ஆளு பயணமும் போனா நாமோ நல்லா வாழ்ந்துப் புடலாம், நீ இப்ப ஒன்னும் போவ வேணாம். இந்த ஊரு அறுப்பு சொடுங்கிப்போச்சு. இன்னும் ஒரு வாரமோ, பத்து நாளோ முடிஞ்சிரும். நானும் வர்றேன், எங்க ஆயி வடதான் ஆசையா திங்கும். வூட்டுல சுட்டோம்னா புள்ளகுட்டிக்கும் ஆங்கமா நாலு வடய கொடுக்கலாம். பேசாம நீ வேலைக்குப் போ, கஞ்சி ஊத்தி எடுத்துக்கிட்டு நானும் வந்துடறேன் என்றாள். நடுவூட்டாரு எங்கடி ஒம்புருசன்னு கேட்டுட்டு என்னமா அதட்டி அதட்டி பேசுறாரு. இன்னிக்கு வேலைக்குப் போவலேனா கூலி கெடைக்காதுங்கறேன். அந்த கூலிய நான் தர்றேன் ரெண்டுபேரும் வாங்கன்னு சொல்றத்துக்குக்கு கூட மனசு வரல அவருக்கு. நீ வேலைக்குப் போயிடு அவரு வந்தா நான் சொல்லிட்டு வர்றேன் என்றாள்.

காலையில் அனைவரும் பாலத்தில் ஒன்றாகக் கூடி பிறகே வேலைக்குப் பிரிந்து செல்வார்கள். பிரிந்து போன மலுப்பன் மருமவளை நடுவூட்டார் ஏய், எங்கடி அவன்... அவன வரச்சொன்னியா என்றார். அது முன்னாடியே போயிடுச்சிங்க. நாளைக்கு வெள்ளன கூட்டிக்கிட்டு நானும் வர்றேன் என்றாள். ஏய் நீ சொல்றத கேக்க நான் என்ன ஆளா? எங்கடி அவன் என்றார். நிலவரம் புரிந்த வளாக நீங்க போங்க உரமத் துக்குள்ள வரச்சொல்றேன் என்றாள். ஏய் என்னடி நீயே மட அடச்சே பேசுறீயே? என்றவாறு மரக்கொம்பை உடைத்து அடித்தார்.

ஒரு கையால் தலையில் வைத்தி ருந்த கஞ்சிக் கலயத்தைப் பிடித்தவாறு மறுகையால் அடியைத் தேக்கினாள். வலி பொறுக்கவியலாத நிலை யில், இந்த எளவெடுத்த செம்மத்துல வாழ்றத விட நாண்டுகிட்டு சாவலாம் என்றவாறு தலையில் வைத்தி ருந்த கஞ்சிக் கலயத்தை ஆவேசத்தோடு நடுரோட்டில் போட்டு உடைத்தாள். கலயம் சுக்குநூறாக சிதறியது. இவளது ஆவேசத்தைப் பார்த்த நடுவூட்டார் திகைத்து நின்றார். தன்காலத்தில் இப்படியொரு பெண் ஆவேசப் பட்டதை அவர் பார்த்ததே இல்லை என்பதால் பதட்ட மாகி, திருப்பியடிக்க முடியாத ஆற்றாமையில் தான் கலயத்தை ரோட்டில் போட்டு உடைத்தாளா? என்ற யோசனையோடு வந்த வழியே விறுவிறுவென்று நடக்கலானார்.

வேலை முடிந்து கணவனும் மனைவியும் வீடு வந்தனர். மறுநாள் காலையில் இருவரும் அம்பலத்தைப் பார்த்து நடந்த விசயங்களைத் தெரிவித்தனர். விசயத்தை முதல் நாளே அறிந்திருந்த அம்பலம், ஏலே எனக்கு எல்லாம் தெரியும், ஏதோ கோபதாபத்துல பொம்மனாட்டிய அடிச்சுப்புட்டான். மூக்கு இருக்கும் வரைக்கும் சளி இருக்கத்தான் செய்யும். நான் அவன கண்டிச்சுப்புடுறேன் போடா என்றார். சாமி நாங்க புருசன் பொண்டாட்டி சேர்ந்து காலையிலேயே வந்து தெருகூட்டி, சாணி அள்ளிப்போட்டு, எந்த வேலையும் கொற வைக்காம தான் செஞ்சிருக்கோம். நான் குடிவேலை பாத்ததுக்கு அவுக கொடுத்த குடிகூலிய மொகஞ்சுளிக்காமதான் வாங்குனோம். குடிகோழியும் போட்டோம்.

கடைசி களத்துல எங்க ரெண்டுபேரு கூலியத்தான் கொடுத்தாரு. கேட்டா, போரடி இருக்குங்கிறாரு. அப்பவும் இப்படி தான் சொல்லுவாரு, எம் பொண்டாட்டி கடேசி களத் தன்னிக்கு பேசுனத மனசுல வெச்சிக்கிட்டு அவள மாட்டப்போட்டு அடிக்கிறமாரி அடிக்கிறாரு. அவரு களமும் வேணாம், அவரு குடியும் வேணாம், நான் இனிமே அவருக்கு வேலை பார்க்கமாட்டேன், பசியும் பட்டினியுமா கெடந்து வேலை பார்த்து என்ன பிர யோசனம்? என்று முறையிட்டுச் சென்றார்கள். வழியில் பார்த்த நடுவூட்டார், ஏலே அம்பலத்துக்கிட்ட மறவுட் டுட்டுப் போறிகளா? அம்பலம் என்னத்த செஞ்சிப்புடு வாரு, நெல்லு மூட்ட வெளிய கெடக்குது. அத பங்குடுப் படுத்தனும்னு ஒம்பொண்டாட்டிக்கிட்ட எத்தனை தடவ சொல்லிருக்கேன். அவ மறுத்து மறுத்து பதில் சொல்றா. அந்த கோவத்துலதான் ரெண்டு தட்டு தட்டுனே. அதப் பெரிசா சொல்றதுக்கு வந்துட்டியா என்றார்.

ஐயா ரெண்டுமூனு நாளைக்குத்தான் கருதறுப்பு தக்க மொய்க்கவா இருக்கும். நாங்க ரெண்டுபேரும் சேந்து ஒரு மூட்டைக்காவது அறுத்துப்புடுவோம். பொறவு ஒங்க வேலதான் வந்துர்றோம் என்றார். ஏண்டா, என்வூட்டு வேல எப்படி போனாலும் போவட்டுன்னு நீ சம்பாதிக்க நெனக்கிறியா? என்றவாறு பக்கத்திலிருந்த காட்டா மணக்கு மரக்கிளையை உடைத்து கணவன் மனைவி இருவரையும் தாக்கினார். அடிபட்ட மலுப்பன் மவன் யோவ் நிறுத்தய்யா, ஒனக்குதான் அடிக்கத் தெரியும்னு அடிக்கிறியா? ஏன் ஆயி அப்பன் என்ன ஒன்னுக்கிட்ட பண்ணைக்கா வெச்சிட்டு செத்தாக, இல்லே முச்சலிக்க போட்டுக் கொடுத்தாகளா? ஒன்கிட்ட ஆயிரம், ஐநூறு வாங்கிட்டு பண்ணையாளா இருக்கிறவனுக்கிட்ட இதெல்லாம் வச்சுக்கோ, ஏதோ எம்பாட்டன், முப்பாட்டன் வழமயாச்சேன்னு பாத்தா ரொம்பதான் ஓட்டுர்யோ, 50 மூட்ட நெல்லடிச்ச மிராசு ஒரு 5 மூட்ட நெல்லு களம் கொடுத்தியாயா நீ? நாங்க என்ன மண்ணள்ளி தின்னுப்புட்டா ஒனக்கு வந்து மாரடிக்கிறது? குடி பறையன வெச்சி கோலேச்ச தெரியாத உனக்கு குடி பறையன் ஒரு கேடா? போயா... மலுப்பன் மவனும் அவன் மனைவியும் நிற்கும் கோலத்தைப் பார்த்தால் நெருங்கினால் என்ன நடக்கும் என நினைத்துப் பார்க்க அந்த கணநொடி நடுவூட்டாருக்கு மோசமாகவே இருந் தது.

காலைப் பொழுது... வண்டி சோடு இருபக்கமும் கிளுவை வேலியான அடைப்பு... புருசன் பொண்டாட்டி சேந்து தாக்கினா சத்தங்கூட போட முடியாது. பறையன் அடிச்சிப்புட்டான்னு வெளியேயும் சொல்ல முடியாத நிலை. ஏலே எதுத்தா பேசுற? நீ இந்த ஊருல குடி யிருக்கிறத நான் பாத்துப்புடுறேண்டா? என்றார். யாரும் நடமாட்டம் இல்லாதது மலுப்பன் மவனுக்கு ரொம்ப தோதாப்போச்சு. போயா ஒன் அண்ட மண்டயில குடி வெச்சுக்காத. நீ அளக்குற படிய இன்னோட நிறுத்திப் புடு, கொளத்த கண்ட குண்டி எத்தன. குண்டிய கண்ட கொளம் எத்தன? போயா என்றார். இதை சற்றும் எதிர் பாராத நடுவூட்டார் மௌனமாக நின்றார். அப்படி யொரு ஜென்மம் அங்கிருப்பதையே பொருட்படுத்தாத வர்களாக புருசனும் மனைவியும் தங்கள் வழியில் கிளம்பினர்.

யோவ் ஒனக்கு இம்புட்டு கோவமிருக்கும்னு நான் நெனச்சுக்கூட பாக்கலய்யா. அந்தாளு அவுக பெரியப்பன் கிட்ட சொல்லி ஊரு கூட்டத்த கூட்டி நம்மல நிறுத்தி கேட்டா என்னா சொல்றது என்று புருசனைக் கேட்டாள். அடி போடி ஐயோ சாமி இவருதான் எங்கள வெரட்டி வெரட்டி அடிச்சாரு. நாங்க ஒரு குத்தமும் செய்யலியே சாமின்னு காலிலே விழ வேண்டியதுதான். இனி இவன் கிட்ட குடிவேலையும் வேணாம். அவன் வேட்டி துண் டும் வேணாம். கை கால் இருக்கு எங்க வேணும்னாலும் போயி பொழச்சிக்கலாம் என்றார் மலுப்பன் மகன். தன் பிடியிலிருந்து திமிறிப்போகும் குடிப்பறையனை தடுக்கும் பலத்தை இழந்து விட்டவராக அங்கேயே நின்றிருந்தார் நடுவீட்டார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com